MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்
    பண் - நட்டபாடை

    217 புவம்வளி கனல்புனல் புவி()கலை
    யுரைமறை திரிகுணம் அமர்நெறி
    திவமலி தருசுரர் முதலியர்
    திகழ்தரும் உயிரவை யவைதம
    பவமலி தொழிலது நினைவொடு
    பதுமநன் மலரது மருவிய
    சிவனது சிவபுரம் நினைபவர்
    செழுநில னினில்நிலை பெறுவரே. 01
    () கலைபுரை என்றும் பாடம். 1.21.1
    218 மலைபல வளர்தரு புவியிடை
    மறைதரு வழிமலி மனிதர்கள்
    நிலைமலி சுரர்முதல் உலகுகள்
    நிலைபெறு வகைநினை வொடுமிகும்
    அலைகடல் நடுவறி துயிலமர்
    அரியுரு வியல்பர னுறைபதி
    சிலைமலி மதிள்சிவ புரம்நினை
    பவர்திரு மகளொடு திகழ்வரே. 1.21.2
    219 பழுதில கடல்புடை தழுவிய
    படிமுத லியவுல குகள்மலி
    குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
    குலம்மலி தருமுயி ரவையவை
    முழுவதும் அழிவகை நினைவொடு
    முதலுரு வியல்பர னுறைபதி
    செழுமணி யணிசிவ புரநகர்
    தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
    () முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம். 1.21.3
    220 நறைமலி தருமள றொடுமுகை
    நகுமலர் புகைமிகு வளரொளி
    நிறைபுனல் கொடுதனை நினைவொடு
    நியதமும் வழிபடும் அடியவர்
    குறைவில பதமணை தரஅருள்
    குணமுடை யிறையுறை வனபதி
    சிறைபுன லமர்சிவ புரமது
    நினைபவர் செயமகள் தலைவரே. 1.21.4
    221 சினமலி யறுபகை மிகுபொறி
    சிதைதரு வகைவளி நிறுவிய
    மனனுணர் வொடுமலர் மிசையெழு
    தருபொருள் நியதமும் உணர்பவர்
    தனதெழி லுருவது கொடுஅடை
    தகுபர னுறைவது நகர்மதில்
    கனமரு வியசிவ புரம்நினை
    பவர்கலை மகள்தர நிகழ்வரே. 1.21.5
    222 சுருதிகள் பலநல முதல்கலை
    துகளறு வகைபயில் வொடுமிகு
    உருவிய லுலகவை புகழ்தர
    வழியொழு குமெயுறு பொறியொழி
    அருதவ முயல்பவர் தனதடி
    யடைவகை நினையர னுறைபதி
    திருவளர் சிவபுரம் நினைபவர்
    திகழ்குலன் நிலனிடை நிகழுமே. 1.21.6
    223 கதமிகு கருவுரு வொடுவுகி
    ரிடைவட வரைகண கணவென
    மதமிகு நெடுமுக னமர்வளை
    மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
    இதமமர் புவியது நிறுவிய
    எழிலரி வழிபட அருள்செய்த
    பதமுடை யவனமர் சிவபுரம்
    நினைபவர் நிலவுவர் படியிலே.
    () உகிரிடவட என்றும் படம். 1.21.7
    224 அசைவுறு தவமுயல் வினிலயன்
    அருளினில் வருவலி கொடுசிவன்
    இசைகயி லையையெழு தருவகை
    இருபது கரமவை நிறுவிய
    நிசிசரன் முடியுடை தரவொரு
    விரல்பணி கொளுமவ னுறைபதி
    திசைமலி சிவபுரம் நினைபவர்
    செழுநில னினில்நிகழ் வுடையரே. 1.21.8
    225 அடல்மலி படையரி அயனொடும்
    அறிவரி யதொரழல் மலிதரு
    சுடருரு வொடுநிகழ் தரவவர்
    வெருவொடு துதியது செயவெதிர்
    விடமலி களநுத லமர்கண
    துடையுரு வெளிபடு மவன்நகர்
    திடமலி பொழிலெழில் சிவபுரம்
    நினைபவர் வழிபுவி திகழுமே. 1.21.9
    226 குணமறி வுகள்நிலை யிலபொரு
    ளுரைமரு வியபொருள் களுமில
    திணமெனு மவரொடு செதுமதி
    மிகுசம ணருமலி தமதுகை
    உணலுடை யவருணர் வருபர
    னுறைதரு பதியுல கினில்நல
    கணமரு வியசிவ புரம்நினை
    பவரெழி லுருவுடை யவர்களே. 1.21.10
    227 திகழ்சிவ புரநகர் மருவிய
    சிவனடி யிணைபணி சிரபுர
    நகரிறை தமிழ்விர கனதுரை
    நலமலி யொருபதும் நவில்பவர்
    நிகழ்குல நிலநிறை திருவுரு
    நிகரில கொடைமிகு சயமகள்
    புகழ்புவி வளர்வழி யடிமையின்
    மிகைபுணர் தரநலம் மிகுவரே. 1.21.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்