MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.25 திருச்செம்பொன்பள்ளி
    பண் - தக்கராகம்

    261 மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
    திருவார் செம்பொன் பள்ளி மேவிய
    கருவார் கண்டத் தீசன் கழல்களை
    மருவா தவர்மேல் மன்னும் பாவமே. 1.25.1
    262 வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
    சீரார் செம்பொன் பள்ளி மேவிய
    ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
    சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 1.25.2
    263 வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
    திரையார் செம்பொன் பள்ளி மேவிய
    நரையார் விடையொன் றூரும் நம்பனை
    உரையா தவர்மே லொழியா வூனமே. 1.25.3
    264 மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
    செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
    எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
    தொழுவார் தம்மேல் துயர மில்லையே. 1.25.4
    265 மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
    சிலையார் செம்பொன் பள்ளி யானையே
    இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
    நிலையா வணங்க நில்லா வினைகளே. 1.25.5
    266 அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
    சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
    கறையார் கண்டத் தீசன் கழல்களை
    நிறையால் வணங்க நில்லா வினைகளே. 1.25.6
    267 பையார் அரவே ரல்கு லாளொடுஞ்
    செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
    கையார் சூல மேந்து கடவுளை
    மெய்யால் வணங்க மேவா வினைகளே. 1.25.7
    268 வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
    தேனார் செம்பொன் பள்ளி மேவிய
    ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
    ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. 1.25.8
    269 காரார் வண்ணன் கனகம் அனையானுந்
    தேரார் செம்பொன் பள்ளி மேவிய
    நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
    ஓரா தவர்மே லொழியா வூனமே. 1.25.9
    270 மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
    பேசா வண்ணம் பேசித் திரியவே
    தேசார் செம்பொன் பள்ளி மேவிய
    ஈசா என்ன நில்லா இடர்களே. 1.25.10
    271 நறவார் புகலி ஞான சம்பந்தன்
    செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
    பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
    உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 1.25.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்