1.35 திருவீழிமிழலை
பண் - தக்கராகம்
371 அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே. 1.35.1
372 புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. 1.35.2
373 அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெந் தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே. 1.35.3
374 உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரையார்த் தஅழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியார் அடியாரே. 1.35.4
375 கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே. 1.35.5
376 சடையார் பிறையான் சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே. 1.35.6
377 செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே. 1.35.7
378 உளையா வலியொல் கஅரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே. 1.35.8
379 மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 1.35.9
380 துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே. 1.35.10
381 நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. 1.35.11
திருச்சிற்றம்பலம்