1.36 திரு ஐயாறு
பண் - தக்கராகம்
382 கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. 1.36.1
383 மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. 1.36.2
384 கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகுந்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே. 1.36.3
385 சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே. 1.36.4
386 உமையா ளொருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே. 1.36.5
387 தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே. 1.36.6
388 வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே. 1.36.7
389 வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. 1.36.8
390 ()சங்கக் கயனும் மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.
() சங்கத்தயனும் என்றும் பாடம். 1.36.9
391 துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே. 1.36.10
392 கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே. 1.36.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்