MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.39 திருவேட்களம்
    பண் - தக்கராகம்

    415 அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
    ஆரழ லங்கை அமர்ந்திலங்க
    மந்த முழவம் இயம்ப
    மலைமகள் காண நின்றாடிச்
    சந்த மிலங்கு நகுதலை கங்கை
    தண்மதியம் மயலே ததும்ப
    வெந்தவெண் ணீறு மெய்பூசும்
    வேட்கள நன்னக ராரே. 1.39.1
    415 சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்
    சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்
    புடைதனிற் பாரிடஞ் சூழப்
    போதரு மாறிவர் போல்வார்
    உடைதனில் நால்விரற் கோவண ஆடை
    உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
    விடைதனை ஊர்தி நயந்தார்
    வேட்கள நன்னக ராரே. 1.39.2
    416 பூதமும் பல்கண மும்புடை சூழப்
    பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
    சீதமும் வெம்மையு மாகிச்
    சீரொடு நின்றவெஞ் செல்வர்
    ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
    உள்ளங் கலந்திசை யாலெழுந்த
    வேதமும் வேள்வியும் ஓவா
    வேட்கள நன்னக ராரே. 1.39.3
    418 அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
    அமையவெண் கோவணத் தோடசைத்து
    வரைபுல்கு மார்பி லோராமை
    வாங்கி யணிந் தவர்தாந்
    திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
    தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
    விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
    வேட்கள நன்னக ராரே. 1.39.4
    419 பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
    பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
    பெண்ணுறு மார்பினர் பேணார்
    மும்மதில் எய்த பெருமான்
    கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்
    கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
    வெண்ணிற மால்விடை அண்ணல்
    வேட்கள நன்னக ராரே. 1.39.5
    420 கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
    கண்கவ ரைங்கணை யோனுடலம்
    பொறிவளர் ஆரழ லுண்ணப்
    பொங்கிய பூத புராணர்
    மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
    மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
    வெறிவளர் கொன்றையந் தாரார்
    வேட்கள நன்னக ராரே. 1.39.6
    421 மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை
    மாமலை வேந்தன் மகள்மகிழ
    நுண்பொடிச் சேர நின்றாடி
    நொய்யன செய்யல் உகந்தார்
    கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
    காலனைக் காலாற் கடிந்துகந்தார்
    வெண்பொடிச் சேர்திரு மார்பர்
    வேட்கள நன்னக ராரே. 1.39.7
    422 ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
    அமுத மமரர்க் கருளி
    சூழ்தரு பாம்பரை யார்த்துச்
    சூலமோ டொண்மழு வேந்தித்
    தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
    தண்மதி யம்மய லேததும்ப
    வீழ்தரு கங்கை கரந்தார்
    வேட்கள நன்னக ராரே. 1.39.8
    423 திருவொளி காணிய பேதுறு கின்ற
    திசைமுக னுந்திசை மேலளந்த
    கருவரை யேந்திய மாலுங்
    கைதொழ நின்றது மல்லால்
    அருவரை யொல்க எடுத்த வரக்கன்
    ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
    வெருவுற வூன்றிய பெம்மான்
    வேட்கள நன்னக ராரே. 1.39.9
    424 அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்
    யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
    பொய்த்தவம் பேசுவ தல்லால்
    புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
    முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
    மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
    வித்தகர் வேத முதல்வர்
    வேட்கள நன்னக ராரே. 1.39.10
    425 விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
    வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
    நண்ணிய சீர்வளர் காழி
    நற்றமிழ் ஞானசம் பந்தன்
    பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
    பேணிய வேட்கள மேல்மொழிந்த
    பண்ணியல் பாடல் வல்லார்கள்
    பழியொடு பாவமி லாரே. 1.39.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்