MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.41 திருப்பாம்புரம்
    பண் - தக்கராகம்

    437 சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
    திரிபுர மெரிசெய்த செல்வர்
    வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
    மான்மறி யேந்திய மைந்தர்
    காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
    கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
    பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
    பாம்புர நன்னக ராரே. 1.41.1
    438 கொக்கிற கோடு கூவிள மத்தங்
    கொன்றையொ டெருக்கணி சடையர்
    அக்கினொ டாமை பூண்டழ காக
    அனலது ஆடுமெம் மடிகள்
    மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
    விண்ணவர் விரைமலர் தூவப்
    பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
    பாம்புர நன்னக ராரே. 1.41.2
    439 துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
    சூறைநல் லரவது சுற்றிப்
    பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
    பித்தராய்த் திரியுமெம் பெருமான்
    மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
    மாமலை யாட்டியுந் தாமும்
    பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
    பாம்புர நன்னக ராரே. 1.41.3
    440 துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
    சுடர்விடு சோதியெம் பெருமான்
    நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
    நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
    மஞ்சுதோய் சோலை மாமயி லாட
    மாடமா ளிகைதன்மே லேறி
    பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
    பாம்புர நன்னக ராரே. 1.41.4
    441 நதியத னயலே நகுதலை மாலை
    நாண்மதி சடைமிசை யணிந்து
    கதியது வாகக் காளிமுன் காணக்
    கானிடை நடஞ்செய்த கருத்தர்
    விதியது வழுவா வேதியர் வேள்வி
    செய்தவர் ஓத்தொலி ஓவாப்
    பதியது வாகப் பாவையுந் தாமும்
    பாம்புர நன்னக ராரே. 1.41.5
    442 ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
    ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
    மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
    மான்மறி யேந்திய மைந்தர்
    ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
    அலைகடல் கடையவன் றெழுந்த
    பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
    பாம்புர நன்னக ராரே. 1.41.6
    443 மாலினுக் கன்று சக்கர மீந்து
    மலரவற் கொருமுக மொழித்து
    ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
    அனலது ஆடுமெம் மடிகள்
    காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்
    காமனைப் பொடிபட நோக்கிப்
    பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்
    பாம்புர நன்னக ராரே. 1.41.7
    444 விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
    மெல்லிய திருவிர லூன்றி
    அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
    அனலது ஆடுமெம் மண்ணல்
    மடக்கொடி யவர்கள் வருபுன லாட
    வந்திழி அரிசிலின் கரைமேற்
    படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
    பாம்புர நன்னக ராரே. 1.41.8
    445 கடிபடு கமலத் தயனொடு மாலுங்
    காதலோ டடிமுடி தேடச்
    செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
    தீவணர் எம்முடைச் செல்வர்
    முடியுடையமரர் முனிகணத் தவர்கள்
    முறைமுறை யடிபணிந் தேத்தப்
    படியது வாகப் பாவையுந் தாமும்
    பாம்புர நன்னக ராரே. 1.41.9
    446 குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
    குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
    கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
    கையர்தாம் உள்ளவா றறியார்
    வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
    வாரணம் உரிசெய்து போர்த்தார்
    பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
    பாம்புர நன்னக ராரே. 1.41.10
    447 பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
    பாம்புர நன்னக ராரைக்
    கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
    கழுமல முதுபதிக் கவுணி
    நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான
    சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
    சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
    சிவனடி நண்ணுவர் தாமே. 1.41.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,
    பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,
    வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.

    திருச்சிற்றம்பலம்