MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    Kamba Ramayanam kitkintha kandam Part 2
    கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம்
    12. தானை காண் படலம்
    13. நாட விட்ட படலம்
    14. பிலம் புக்கு நீங்கு படலம்
    15. ஆறு செல் படலம்
    16. சம்பாதிப் படலம்
    17. மயேந்திரப் படலம்

  1. கிட்கிந்தா காண்டம்

    12. தானை காண் படலம்



  2. சேனைத் தலைவர் தம் பெருஞ் சேனையுடன் வந்து சேர்தல்

  3. அன்று அவண் இறுத்தனர்; அலரி கீழ்ட்டிசைப்
    பொன் திணி நெடு வரை பொலிவுறாதமுன்,
    வன் திறல் தூதுவர் கொணர, வானரக்
    குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம்; 1

  4. ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த
    வானராதிபர் ஆயிரர் உடன் வர, வகுத்த
    கூனல் மாக் குரங்கு ஐ - இரண்டு ஆயிர கோடித்
    தானையோடும், - அச் சதவலி என்பவன் - சார்ந்தான். 2

  5. ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
    தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை,
    ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
    தோன்றினான், வந்து - சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல். 3

  6. ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
    சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை
    ஆறு - எண் ஆயிர கோடி அது உடன் வர, - அமிழ்தம்
    மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் - வந்தான். 4

  7. ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த,
    மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப, -
    இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
    நம்பனைத் தந்த கேசரி - கடல் என நடந்தான். 5

  8. மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின, வயிரத்
    திண் கொள் மால் வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
    கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
    எண்கின் ஈட்டம் கொண்டு, - எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான். 6

  9. முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்,
    தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும்,
    இனிய மாக் குரங்கு ஈர் - இரண்டு ஆயிர கோடி
    அனிகம் முன் வர, -ஆன் பெயர்க் கண்ணன் - வந்து அடைந்தான். 7

  10. தனி வரும் தடங் கிரி எனப் பெரியவன், சலத்தால்
    நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்குறும் நிலையன்,
    பனசன் என்பவன் - பன்னிரண்டு ஆயிர கோடிப்
    புனித வெஞ் சின வானரப் படை கொடு - புகுந்தான். 8

  11. இடியும், மாக் கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்
    முடிவு இல் பேர் உறுக்கு உடையன, விசையன, முரண்,
    கொடிய கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி
    நெடிய வானரப் படை கொண்டு புகுந்தனன் - நீலன். 9

  12. மா கரத்தன, உரத்தன, வலியன, நிலைய,
    வேகரத்து, வெங் கண் உமிழ் வெயிலன, மலையின்
    ஆகரத்தினும் பெரியன, ஆறு - ஐந்து கோடி
    சாகரத்தொடும் - தரீமுகன் என்பவன் - சார்ந்தான். 10

  13. இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க,
    முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்,
    விளைத்த வெஞ் சினத்து, அரி இனம் வெருவுற விரிந்த
    அளக்கரோடும், -அக் கயன் என்பவனும்-வந்து அடைந்தான். 11

  14. ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த
    பாயிரப் பெரும் படை கொண்டு, பரவையின் திரையின்
    தாய், உருத்து உடனே வர - தட நெடு வரையை
    ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும்,-வந்து இறுத்தான். 12

  15. வகுத்த தாமரை மலர் அயன், நிசிசரர் வாழ்நாள்
    உகுத்த தீவினை பொருவரும் பெரு வலி உடையான்,
    பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி
    தொகுத்த கோடி வெம் படை கொண்டு,-துன்முகன்-தொடர்ந்தான். 13

  16. இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி
    உயர்ந்த வெஞ் சின வானரப் படையொடும், ஒருங்கே,-
    சயம் தனக்கு ஒரு வடிவு எனத் திறல் கொடு தழைத்த
    மயிந்தன் - மல் கசகோமுகன் தன்னொடும், வந்தான். 14

  17. கோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த
    நீடு வெஞ் சினத்து அரி இனம் இரு புடை நெருங்க,
    மூடும், உம்பரும், இம்பரும், பூழியில் மூழ்க,-
    தோடு இவர்ந்த தார்க் கிரி புரை துமிந்தனும்-தொடர்ந்தான். 15

  18. கறங்கு போல்வன, காற்றினும் கூற்றினும் கடிய,
    பிறங்கு தெண் திரைக் கடல் புடைபெயர்ந்தெனப் பெயர்வ,
    மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த,
    திறம்கொள், வெஞ் சினப் படைகொடு,-குமுதனும்-சேர்ந்தான். 16

  19. ஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த
    பாழி நல் நெடுந் தோள் கிளர் படை கொண்டு, பரவை
    ஊழி பேரினும் உலைவில, உலகினில் உயர்ந்த
    பூழி விண் புக,-பதுமுகன் என்பவன்-புகுந்தான். 17

  20. ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்
    தாழும் காலத்தும், தாழ்வு இலாத் தட வரைக் குலங்கள்
    சூழும் தோற்றத்த, வலி கொள் தொள்ளாயிரகோடிப்
    பாழி வெம் புயத்து அரியொடும்,-இடபனும்-படர்ந்தான். 18

  21. தீர்க்கபாதனும், வினதனும், சரபனும், - திரைக்கும்
    மால் கருங் கடற்கு உயர்ந்துள மைம் முகத்து அனிகம்
    ஆர்க்கும் எண்ண அருங் கோடி கொண்டு, அண்டமும் புறமும்,
    போர்க்கும் பூழியில் மறைதர, - முறையினின் புகுந்தார். 19

  22. கை நஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும்
    மெய் அஞ்சாதவன், மாதிரம் சிறிது என விரிந்த
    வையம் சாய்வரத் திரிதரு வானரச் சேனை
    ஐ - அஞ்சு ஆயிர கோடி கொண்டு, அனுமன் வந்து அடைந்தான். 20

  23. நொய்தின் கூடிய சேனை, நூறாயிரகோடி
    எய்த, தேவரும், என்கொலோ முடிவு? என்பது எண்ண,
    மையல் சிந்தையால் அந்தகன் மறுக்குற்று மயங்க,-
    தெய்வத் தச்சன் மெய்த் திரு நெடுங் காதலன்-சேர்ந்தான். 21

  24. கும்பனும், குலச் சங்கனும், முதலினர், குரங்கின்
    தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை,
    இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது, இராகவன் ஆவத்து
    அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்பு அரிது அளவே. 22

  25. வானர சேனைகளின் ஆற்றலும், சிறப்பும்

  26. தோயின், ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;
    சாயின், அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;
    ஏயின், மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்;
    காயின், வெங் கனல்-கடவுளும் இரவியும் கரியும். 23

  27. எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
    உண்ணின், அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா;
    கண்ணின் நோக்குறின், கண்ணுதலானுக்கும் கதுவா, -
    மண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே! 24

  28. ஒடிக்குமேல், வட மேருவை வேரொடும் ஒடிக்கும்;
    இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;
    பிடிக்குமேல், பெருங் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;
    குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். 25

  29. ஆறு பத்து எழு கோடியாம், வானரர்க்கு அதிபர்,
    கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்,
    மாறு இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர், -
    ஊறும் இப் பெருஞ் சேனை கொண்டு-எளிதின் வந்துற்றார். 26

  30. வானரத் தலைவர்கள் வந்து சுக்கிரீவனை வணங்குதல்

  31. ஏழு மாக் கடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச்
    சூழும் வானரப் படையொடு, அத் தலைவரும் துவன்றி,
    ஆழி மாப் பரித் தேரவன் காதலன் அடிகள்
    வாழி! வாழி! என்று உரைத்து, அலர் தூவினர், வணங்கி. 27

  32. இராமனை சேனையைக் காணுமாறு சுக்கிரீவன் வேண்டுதல்

  33. அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும், அருக்கன்
    தனையன், நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்;
    நினையும் முன்னம் வந்து அடைந்தது, நின் பெருஞ் சேனை;
    வினையின் கூற்றுவ, கண்டருள், நீ என விளம்ப, 28

  34. சேனை காண இராமன் ஓர் மலைச்சிகரத்தில் ஏறுதல்

  35. ஐயனும் உவந்து, அகம் என முகம் மலர்ந்தருளி,
    தையலாள் வரக் கண்டனன் ஆம் எனத் தளிர்ப்பான்,
    எய்தினான், அங்கு ஓர் நெடு வரைச் சிகரத்தின் இருக்கை;
    வெய்யவன் மகன், பெயர்த்தும், அச் சேனையின் மீண்டான். 29

  36. சேனையை ஒழுங்காகச் செல்ல உத்தரவிட்டு, சேனைத் தலைவர்களுடன் சுக்கிரீவன் இராமனை அடைதல்

  37. அஞ்சொடு ஐ-இரண்டு யோசனை அகலத்தது ஆகி,
    செஞ்செவே வட திசைநின்று தென் திசைச் செல்ல,
    எஞ்சல் இல் பெருஞ் சேனையை, எழுக என ஏவி,
    வெஞ் சினப் படை வீரரை உடன் கொண்டு மீண்டான். 30

  38. சுக்கிரீவன் வந்த படைகளை இராமனுக்கு வரன்முறை காட்டுதல்

  39. மீண்டு, இராமனை அடைந்து, இகல் வீரருள் வீர!
    காண்டி, நீ என, வரன்முறை தெரிவுறக் காட்டி,
    ஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே,
    ஈண்டு சேனை, பால் எறி கடல் நெறி படர்ந்தென்ன. 31

  40. வானரப் படையின் பெருக்கம்

  41. எட்டுத் திக்கையும், இரு நிலப் பரப்பையும், இமையோர்
    வட்ட விண்ணையும், மறி கடல் அனைத்தையும், மறையத்
    தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி,
    அட்டிச் செம்மிய நிறை குடம் ஒத்தது, இவ் அண்டம். 32

  42. அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்;
    வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ?
    பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்,
    எத் திறத்தினும் நடுவு கண்டிலர், முடிவு எவனோ? 33

  43. படையைப் பெருக்கம் குறித்து இராம இலக்குவர் உரையாடல்

  44. விண்ணின், தீம்புனல் உலகத்தின், நாகரின், வெற்றி
    எண்ணின், தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன்,
    கண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின், கருதி,
    அண்ணல்-தம்பியை நோக்கினன், உரைசெய்வதானான்: 34

  45. அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு, நாமும் நம் அறிவால்
    உடல் கண்டோ ம்; இனி முடிவு உள காணுமாறு உளதோ? -
    மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! - மண்ணிடை மாக்கள்,
    கடல் கண்டோ ம் என்பர்; யாவரே முடிவு உறக் கண்டார்? 35

  46. ஈசன் மேனியை, ஈர் - ஐந்து திசைகளை, ஈண்டு இவ்
    ஆசு இல் சேனையை, ஐம் பெரும் பூதத்தை, அறிவை,
    பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, -
    வாச மாலையாய்! - யாவரே முடிவு எண்ண வல்லார்? 36

  47. இன்ன சேனையை, முடிவுற இருந்து இவண் நோக்கி,
    பின்னை காரியம் புரிதுமேல், நாள் பல பெயரும்;
    உன்னி, செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி
    என்ன - வீரனைக் கைதொழுது, இளையவன் இயம்பும்: 37

  48. யாவது எவ் உலகத்தினின், இங்கு, இவர்க்கு இயற்றல் -
    ஆவது ஆகுவது; அரியது ஒன்று உளது எனல் ஆமே? -
    தேவ! - தேவியைத் தேடுவது என்பது சிறிதால்;
    பாவம் தோற்றது, தருமமே வென்றது, இப் படையால். 38

  49. தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த
    வரம் கொள் பேர் உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள்,
    உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
    குரங்கின் மாப் படைக்கு, உறையிடப் படைத்தனன் கொல்லாம்? 39

  50. ஈண்டு, தாழ்க்கின்றது என், இனி - எண் திசை மருங்கும்,
    தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்?
    நீண்ட நூல்வலாய்! என்றனன், இளையவன்; நெடியோன்,
    பூண்ட தேரவன் காதலற்கு, ஒரு மொழி புகலும்: 40

  51. மிகைப் பாடல்கள்

  52. அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
    வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
    குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
    வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே. 1-1

  53. இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க, முன் போகச்
    சொன்ன ஆயிர கோடியில் தூதர்தம் திறத்தால்,
    பன்ன ஆறு - இரு வெள்ளம் ஆம் கவிப் படை பயில,-
    பொன்னின் வார் கழல் இடபன் - அக் கிட்கிந்தை புகுந்தான். 1-2

  54. தாமரைப் பெருந் தவிசு உறை சதுமுகக் கடவுள்
    ஓம அங்கியில் உதித்தன, உலப்பு இல கோடி
    ஆம் எனப் புகல் வானரத் தானை அங்கு அணித்தா,-
    மா வயப் புயத்து எறுழ் வலி மயிந்தன்-வந்து அடைந்தான். 1-3

  55. கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய முன் வாலி
    பொங்கும் ஆணையின் எண் திசைப் பொருப்பினும் பொலியத்
    தங்கி வாழ் கலித் தானை அங்கு ஆறு-ஐந்து கோடி
    வங்க வேலையின் பரந்திட,-வசந்தன்-வந்து அடைந்தான். 1-4

  56. வட்ட விண்ணையும் மண்ணையும் எடுக்குறும் வலிய,
    நெட்டு அராவினைச் சினத்தொடு பிடுங்குவ நிமிர்வ,
    அட்ட திக்கையும் மறைப்பன, ஆயிரம் கோடி
    துட்ட எண்கு வெம் படையொடு தூமிரன் வந்தான். 19-1

  57. ஓங்கு மேருவை வேருடன் பறித்து, ஒரு கையால்
    வாங்கும் எண் அருங் கோடி மேல் மந்தியின் சேனை
    பாங்கு சூழ்தர, பரவை அது ஆம் எனப் படியில்
    ஆங்கு உயர்ந்திடு கபாடனும் அக் கணத்து உற்றான். 19-2

  58. வீரை ஏழையும் கலக்குறு மிடுக்கினர், விரிந்த
    பாரை வேரொடும் பறித்திட வேண்டினும் பறிப்பர்,
    ஈர்-ஐஞ்ஞூற்று எழு கோடி வானரப் படை ஈண்ட,
    தாரையைத் தந்த ததிமுகன் நொடியினில் சார்ந்தான். 19-3

  59. கிட்கிந்தா காண்டம்

    13. நாட விட்ட படலம்



  60. சுக்கிரீவனிடம் வானர சேனையின் அளவு பற்றி இராமன் உசாவுதல்

  61. வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும்
    பகையும் இன்றி, நிரைந்து, பரந்து எழும்
    தகைவு இல் சேனைக்கு, அலகு சமைந்தது ஓர்
    தொகையும் உண்டு கொலோ? எனச் சொல்லினான். 1

  62. சுக்கிரீவனது மறுமொழி

  63. ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று
    ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
    மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றது ஓர்
    தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? 2

  64. ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
    ஏறு கொற்றத் தலைவர், இவர்க்கு முன்
    கூறு சேனைப் பதி, கொடுங் கூற்றையும்
    நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான். 3

  65. இராமன் இனி செய்தற்குரியன குறித்துச் சிந்தனைசெய்க எனல்

  66. என்று உரைத்த எரிகதிர் மைந்தனை,
    வென்றி விற் கை இராமன் விருப்பினால்,
    நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி
    சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான். 4

  67. சுக்கிரீவன் அனுமனை அங்கதன் முதலியவர்களுடன் தென் திசைக்கு அனுப்புதல்

  68. அவனும்-அண்ணல் அனுமனை, ஐய! நீ,
    புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
    தவன வேகத்தை ஓர்கிலை; தாழ்த்தனை;
    கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ? 5

  69. ஏகி, ஏந்திழைதன்னை, இருந்துழி,
    நாகம் நாடுக; நானிலம் நாடுக;
    போக பூமி புகுந்திட வல்ல நின்
    வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். 6

  70. தென் திசைக்கண், இராவணன் சேண் நகர்
    என்று இசைக்கின்றது, என் அறிவு, இன்னணம்;
    வன் திசைக்கு, இனி, மாருதி நீ அலால்,
    வென்று, இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ? 7

  71. வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
    கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது,
    தெள்ளியோய்! அது தென் திசை என்பது ஓர்
    உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய். 8

  72. தாரை மைந்தனும், சாம்பனும், தாம் முதல்
    வீரர் யாவரும், மேம்படும் மேன்மையால்
    சேர்க நின்னொடும்; திண் திறல் சேனையும்,
    பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால். 9

  73. பிற திசைக்கு சுடேணன் முதலியோரைப் படைகளுடன் அனுப்புதல்

  74. குட திசைக்கண், சுடேணன்; குபேரன் வாழ்
    வட திசைக்கண், சதவலி; வாசவன்
    மிடல் திசைக்கண், வினதன்; விறல் தரு
    படையொடு உற்றுப் படர்க எனப் பன்னினான். 10

  75. ஒரு மாதத்திற்குள் தேடித் திரும்புமாறு சுக்கிரீவன் ஆணையிடல்

  76. வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
    சுற்றி ஓடித் துருவி, ஒரு மதி
    முற்றுறாதமுன், முற்றுதிர், இவ் இடை;
    கொற்ற வாகையினீர்! எனக் கூறினான். 11

  77. தென் திசைச் செல்லும் வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுதல்

  78. ஈண்டுநின்று இறந்து, ஈர்-ஐந்து நூறு எழில்
    தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால்,
    நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ
    வேண்டும் விந்தமலையினை மேவுவீர். 12

  79. தேடி, அவ் வரை தீர்ந்த பின், தேவரும்
    ஆடுகின்றது, அறுபதம் ஐந்திணை
    பாடுகின்றது, பல் மணியால் இருள்
    ஓடுகின்ற நருமதை உன்னுவீர். 13

  80. வாம மேகலை வானவர் மங்கையர்,
    காம ஊசல் கனி இசைக் கள்ளினால்,
    தூம மேனி அசுணம் துயில்வுறும்
    ஏமகூடம் எனும் மலை எய்துவீர் 14

  81. நொய்தின், அம் மலை நீங்கி, நுமரொடும்,
    பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
    செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில
    வைகல் தேடி, கடிது வழிக் கொள்வீர். 15

  82. தாங்கும் ஆர் அகில், தண் நறுஞ் சந்தனம்,
    வீங்கு வேலி விதர்ப்பமும், மெல்லென
    நீங்கி, நாடு நெடியன பிற்பட,
    தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால். 16

  83. பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
    தண்டகத்தது, தாபதர் தம்மை உள்
    கண்டு, அகத் துயர் தீர்வது காண்டிரால்,
    முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில். 17

  84. ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள்
    போல நின்று பொலிவது, பூம் பொழில்;
    சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
    காலம் இன்றிக் கனிவது காண்டிரால். 18

  85. நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி;
    அயனம் இல்லை அருக்கனுக்கு அவ் வழி;
    சயன மாதர் கலவித்தலைத் தரும்
    பயனும், இன்பமும், நீரும், பயக்குமால். 19

  86. ஆண்டு இறந்தபின், அந்தரத்து இந்துவைத்
    தீண்டுகின்றது, செங் கதிர்ச் செல்வனும்
    ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது -
    பாண்டுவின் மலை என்னும் பருப்பதம். 20

  87. முத்து ஈர்த்து, பொன் திரட்டி, மணி உருட்டி, முது நீத்தம் முன்றில் ஆயர்
    மத்து ஈர்த்து, மரன் ஈர்த்து, மலை ஈர்த்து, மான் ஈர்த்து, வருவது; யார்க்கும்
    புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு உதவுவது; புனிதம் ஆன
    அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்; அம் மலையின் அருகிற்று அம்மா! 21

  88. அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே எனத் தெளிந்த அருளின் ஆறும்,
    வெவ் ஆறு அம் எனக் குளிர்ந்து, வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூஞ் சோலை,
    எவ் ஆறும் உறத் துவன்றி, இருள் ஓட மணி இமைப்பது, இமையோர் வேண்ட,
    தெவ் ஆறு முகத்து ஒருவன், தனிக் கிடந்த சுவணத்தைச் சேர்திர் மாதோ! 22

  89. சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந்தகம் என்னத் தோன்றி, மாதர்
    கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும், சந்திரகாந்தமும், காண்பீர்;
    அவண் அவை நீத்து ஏகிய பின், அகல் நாடு பல கடந்தால், அனந்தன் என்பான்
    உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும், குலிந்தமும், சென்று உறுதிர் மாதோ.23

  90. அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
    பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல், புகல் அரிய பண்பிற்று ஆமால்;
    சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச் சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
    வரன் அதிகம் தரும் தகைய,அருந்ததி ஆம் நெடுமலையை வணங்கி,அப்பால்.24

  91. அஞ்சு வரும் வெஞ் சுரனும், ஆறும், அகன் பெருஞ் சுனையும், அகில் ஓங்கு ஆரம்
    மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வள நாடும், பிற்படப் போய் வழிமேல் சென்றால்,
    நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு, அமிர்து நனி கொடுத்து, ஆயைக் கலுழன் நல்கும்
    எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி, அதன் புறம் சார ஏகி மாதோ, 25

  92. வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி, நான் மறையும், மற்றை நூலும்,
    இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய், நல் அறிவுக்கு ஈறு ஆய், வேறு
    புடை சுற்றும் துணை இன்றி, புகழ் பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்ற
    அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ; 26

  93. இருவினையும், இடைவிடா எவ் வினையும், இயற்றாதே, இமையோர் ஏத்தும்
    திருவினையும், இடு பதம் தேர் சிறுமையையும், முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
    கரு வினையது இப் பிறவிக்கு என்று உணர்ந்து, அங்கு அது களையும், கடை இல் ஞானத்து,
    அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்; ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார்.27

  94. சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும், சுருதித் தொல் நூல்
    மாதவத்தோர் உறை இடமும், மழை உறங்கும் மணித் தடமும், வான மாதர்
    கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடுதொறும் கிளக்கும் ஓதை
    போதகத்தின் மழக்கன்றும் புலிப்பறழும் உறங்கு இடனும்,பொருந்திற்று அம்மா! 28

  95. கோடு உறு மால் வரை அதனைக் குறுகுதிரேல், உம் நெடிய கொடுமை நீங்கி,
    வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப் புறத்து, நீர் மேவு தொண்டை -
    நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர்; அதன்பின்னை, நளி நீர்ப் பொன்னிச்
    சேடு உறு நண் புனல் தெய்வத் திரு நதியின் இரு கரையும் தெரிதிர் மாதோ. 29

  96. துறக்கம் உற்றார் மனம் என்ன,துறைகெழு நீர்ச்சோணாடு கடந்தால்,தொல்லை
    மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்; அவ் வழி நீர் வல்லை ஏகி,
    உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல்
    பிறக்கம் உற்ற மலை நாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ. 30

  97. தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
    என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி,
    பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக்
    கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர். 31

  98. ஆண்டு கடந்து, அப் புறத்தும், இப் புறத்தும், ஒரு திங்கள் அவதி ஆக,
    தேண்டி, இவண் வந்து அடைதிர்; விடை கோடிர், கடிது என்னச் செப்பும் வேலை,
    நீண்டவனும், மாருதியை நிறை அருளால் உற நோக்கி, நீதி வல்லோய்!
    காண்டி எனின், குறி கேட்டி! என, வேறு கொண்டு இருந்து, கழறலுற்றான்: 32

  99. இராமன் அனுமனிடம் தனியே சீதையின் அங்க அடையாளங்களைக் கூறுதல்

  100. பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை, பஞ்சி ஊட்டி,
    மேற்பட மதியம் சூட்டி, விளங்குற நிரைத்த நொய்ய
    கால் தகை விரல்கள் - ஐய! - கமலமும் பிறவும் கண்டால்
    எற்பில என்பது அன்றி, இணை அடிக்கு உவமை என்னோ? 33

  101. நீர்மையால் உணர்தி - ஐய! - நிரை வளை மகளிர்க்கு எல்லாம்
    வாய்மையால் உவமை ஆக, மதி அறி புலவர் வைத்த
    ஆமை ஆம் என்ற போது, அல்லன சொல்லினாலும்,
    யாம யாழ் மழலையாள்தன் புறவடிக்கு இழுக்கம் மன்னோ. 34

  102. வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக் கால் மெய்யே
    நினைவரால் அரிய நன்னீர் நேர்பட, புலவர் போற்றும்
    சினை வரால், பகழி ஆவம், நெற் சினை, என்னும் செப்பம்
    எனைவரால் பகரும் ஈட்டம்; யான் உரைத்து இன்பம் என்னோ? 35

  103. அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
    வரம்பையும் கடந்தபோது, மற்று உரை வகுக்கல் ஆமோ?
    நரம்பையும், அமிழ்த நாறும் நறவையும், நல் நீர்ப் பண்ணைக்
    கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு இது கருது கண்டாய். 36

  104. வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள்தன்
    தார் ஆழிக் கலை சார் அல்குல் தடங் கடற்கு உவமை-தக்கோய்!-
    பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும், பனி வென்று ஓங்கும்
    ஓர் ஆழித் தேரும் ஒவ்வார், உனக்கு நான் உரைப்பது என்னோ? 37

  105. சட்டகம் தன்னை நோக்கி, யாரையும் சமைக்கத் தக்காள்
    இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்திஎன்னின்,
    கட்டுரைத்து உவமை காட்ட, கண்பொறி கதுவா; கையில்
    தொட்ட எற்கு உணரலாம்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை. 38

  106. ஆல் இலை, படிவம் தீட்டும் ஐய நுண் பலகை, நொய்ய
    பால் நிறத் தட்டம், வட்டக் கண்ணடி, பலவும் இன்ன,
    போலும் என்று உரைத்த போதும், புனைந்துரை; பொதுமை பார்க்கின்,
    ஏலும் என்று இசைக்கின், ஏலா; இது, வயிற்று இயற்கை; இன்னும், 39

  107. சிங்கல் இல் சிறு கூதாளி, நந்தியின் திரட் பூ, சேர்ந்த
    பொங்கு பொன்-துளை, என்றாலும் புல்லிது; பொறுமைத்து ஆமால்;
    அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி எனக் கணித்தது உண்டால்;
    கங்கையை நோக்கிச் சேறி - கடலினும் நெடிது கற்றாய்! 40

  108. மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என்,
    உயிர் ஒழுங்கு; அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்கவேண்டின்,
    செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர,
    குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு, என்று உணர்ந்து கோடி. 41

  109. அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி, அரவிந்தம் துறந்தாட்கு, அம் பொன்
    வல்லி மூன்று உளவால், கோல வயிற்றில்; மற்று அவையும், மார-
    வில்லி, மூன்று உலகின் வாழும் மாதரும், தோற்ற மெய்ம்மை
    சொல்லி ஊன்றிய ஆம், வெற்றி வரை எனத் தோன்றும் அன்றே! 42

  110. செப்பு என்பென்; கலசம் என்பென்; செவ் இளநீரும் தேர்வென்;
    துப்பு ஒன்று திரள் சூது என்பென்; சொல்லுவென் தும்பிக் கொம்பை;
    தப்பு இன்றிப் பகலின் வந்த சக்கரவாகம் என்பென்;
    ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்; பல நினைந்து உலைவென், இன்னும். 43

  111. கரும்பு கண்டாலும், மாலைக் காம்பு கண்டாலும், ஆலி
    அரும்பு கண், தாரை சோர அழுங்குவேன்; அறிவது உண்டோ?
    சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து, உவமை சொல்ல,
    இரும்பு கண்டனைய நெஞ்சம், எனக்கு இல்லை; இசைப்பது என்னோ? 44

  112. முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு, மூன்று உலகத்துள்ளும்
    என் கையே இழுக்கம் அன்றே? இயம்பினும், காந்தள் என்றல்,
    வன் கை; யாழ் மணிக் கை என்றல், மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி,
    நன் கையாள் தடக் கைக்கு ஆமோ? நலத்தின் மேல் நலம் உண்டாமோ? 45

  113. ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளந் தளிர் கிடக்க; யாணர்க்
    கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங் கமல மென் பூ,
    நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
    காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்பு வைக்கலாமோ? 46

  114. வெள்ளிய - முறுவல், செவ் வாய், விளங்கு இழை, இளம் பொற் கொம்பின்
    வள் உகிர்க்கு, உவமை நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ?
    எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு, இவறி, என்றும்,
    கிள்ளைகள் முருக்கின் பூவைக் கிழிக்குமேல், உரைக்கலாமோ? 47

  115. அங்கையும் அடியும் கண்டால், அரவிந்தம் நினையுமாபோல்
    செங் களி சிதறி, நீலம் செருக்கிய தெய்வ வாட் கண்
    மங்கைதன் கழுத்தை நோக்கின், வளர் இளங் கழுகும், வாரிச்
    சங்கமும், நினைதி ஆயின், அவை என்று துணிதி; தக்கோய்! 48

  116. பவளமும், கிடையும், கொவ்வைப் பழனும், பைங் குமுதப் போதும்,
    துவள்வு இல் இலவம், கோபம், முருக்கு, என்று இத் தொடக்கம், சாலத்
    தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து, தேன் ததும்பும் ஆயின்,
    குவளை உண் கண்ணி வண்ண வாய் அது; குறியும் அஃதே. 49

  117. சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை; தேன் இல்லை; உள என்றாலும்,
    கவர்ந்த போது அன்றி, உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா;
    பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
    உவந்தபோது, உவந்த வண்ணம் உரைத்தபோது, உரைத்தது ஆமோ? 50

  118. முல்லையும், முருந்தும், முத்தும், முறுவல் என்று உரைத்தபோது,
    சொல்லையும், அமிழ்தும், பாலும், தேனும், என்று உரைக்கத் தோன்றும்;
    அல்லது ஒன்று ஆவது இல்லை; அமிர்திற்கும் உவமை உண்டோ?
    வல்லையேல், அறிந்து கோடி, மாறு இலா ஆறு-சான்றோய்! 51

  119. ஓதியும், எள்ளும், தொள்ளைக் குமிழும், மூக்கு ஒக்கும் என்றால்,
    சோதி செம் பொன்னும், மின்னும், மணியும்போல், துளங்கித் தோன்றா;
    ஏதுவும் இல்லை; வல்லார் எழுதுவார்க்கு எழுத ஒண்ணா
    நீதியை நோக்கி, நீயே நினைதியால், - நெடிது காண்பாய்! 52

  120. வள்ளை, கத்தரிகை, வாம மயிர் வினைக் கருவி, என்ன,
    பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;
    வெள்ளி வெண் தோடு செய்த விழுத் தவம் விளைந்தது என்றே
    உள்ளுதி; உலகுக்கு எல்லாம் உவமைக்கும், உவமை உண்டோ ? 53

  121. பெரிய ஆய், பரவை ஒவ்வா; பிறிது ஒன்று நினைந்து பேச
    உரிய ஆய், ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல; உண்மை
    தெரிய, ஆயிரக் கால் நோக்கின், தேவர்க்கும் தேவன் என்னக்
    கரிய ஆய், வெளிய ஆகும், வாள் தடங் கண்கள் அம்மா! 54

  122. கேள் ஒக்கும் அன்றி, ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;
    கோள் ஒக்கும் என்னின் அல்லால், குறி ஒக்கக் கூறலாமே?
    வாள் ஒக்கும் வடிக் கணாள்தன் புருவத்துக்கு உவமை வைக்கின்,
    தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அனங்கன் சாபம். 55

  123. நல் நாளும் நளினம் நாணும் தளிரடி நுதலை நாணி,
    பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பதாகி,
    முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி,
    எந் நாளும் வளராது என்னின், இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே. 56

  124. வனைபவர் இல்லை அன்றே, வனத்துள் நாம் வந்த பின்னர்?
    அனையன எனினும், தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;
    வினை செயக் குழன்ற அல்ல; விதி செய விளைந்த; நீலம்
    புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம்; உவமை பூணா. 57

  125. கொண்டலின் குழவி, ஆம்பல், குனி சிலை, வள்ளை, கொற்றக்
    கெண்டை, ஒண் தரளம், என்று இக் கேண்மையின் கிடந்த திங்கள்-
    மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ, அப்
    புண்டரிகத்தை உற்ற பொழுது, அது பொருந்தித் தேர்வாய். 58

  126. காரினைக் கழித்துக் கட்டி, கள்ளினோடு ஆவி காட்டி,
    பேர் இருட் பிழம்பு தோய்த்து, நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்
    சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா! -
    நேர்மையைப் பருமை செய்த நிறை நறுங் கூந்தல் நீத்தம்! 59

  127. புல்லிதழ் கமலத் தெய்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின்
    எல்லை சூழ் மதிக்கும் உண்டாம், களங்கம் என்று உரைக்கும் ஏதம்;
    அல்லவும் சிறிது குற்றம் அகன்றில; அன்னம் அன்ன
    நல் இயலாளுக்கு, எல்லாம் நலன் அன்றி, பிறிது உண்டாமோ? 60

  128. மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம், வண்ண வாசப்
    பங்கயத்தவட்கும், - ஐயா! - நிரம்பல; பற்றி நோக்கின்,
    செங் கயல் கருங் கண் செவ் வாய்த் தேவரும் வணங்கும் தெய்வக்
    கொங்கை அக் குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை; குறியும் அஃதே. 61

  129. குழல் படைத்து, யாழைச் செய்து, குயிலொடு கிளியும் கூட்டி,
    மழலையும் பிறவும் தந்து, வடித்ததை, மலரின் மேலான்,
    இழைபொரும் இடையினாள்தன் இன் சொற்கள் இயையச் செய்தான்;
    பிழை இலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்? 62

  130. வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும்,
    நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை;
    மீன் நின்ற கண்ணினாள்தன் மென் மொழிக்கு உவமை வேண்டின்,
    தேன் ஒன்றோ? அமிழ்தம் ஒன்றோ? அவை செவிக்கு இன்பம் செய்யா. 63

  131. பூ வரும் மழலை அன்னம், புனை மடப் பிடி, என்று இன்ன,
    தேவரும் மருளத் தக்க செலவின எனினும் தேறேன்;
    பா வரும் கிழமைத் தொன்மைப் பருணிதர் தொடுத்த, பத்தி
    நா அருங் கிளவிச் செவ்வி நடை வரும் நடையள் - நல்லோய்! 64

  132. எந் நிறம் உரைக்கேன்? - மாவின் இள நிறம் முதிரும்; மற்றைப்
    பொன் நிறம் கருகும்; என்றால், மணி நிறம் உவமை போதா;
    மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும்; வேண்டின்,
    தன் நிறம் தானே ஒக்கும்; மலர் நிறம் சமழ்க்கும் அன்றே! 65

  133. மங்கையர் இவளை ஒப்பார், மற்று உளார் இல்லை என்னும்
    சங்கை இல் உள்ளம் தானே சான்று எனக் கொண்டு,-சான்றோய்!-
    அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து, அருகு சார்ந்து,
    திங்கள் வாள் முகத்தினாட்கு, செப்பு எனப் பின்னும் செப்பும்: 66

  134. இராமன் உரைத்த அடையாளச் செய்திகள்

  135. முன்னை நாள், முனியொடு, முதிய நீர் மிதிலைவாய்,
    சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல,
    அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை, அக்
    கன்னிமாடத்திடைக் கண்டதும், கழறுவாய், 67

  136. வரை செய் தாள் வில் இறுத்தவன், அ(ம்) மா முனியொடும்
    விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர் எனா,
    கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
    உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய். 68

  137. சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக்
    கேழ் இலா வன முலைக் கிரி சுமந்து இடைவது ஓர்
    வாழி வான் மின் இளங் கொடியின் வந்தாளை, அன்று,
    ஆழியான் அரசவைக் கண்டதும் அறைகுவாய். 69

  138. முன்பு நான் அறிகிலா முளி நெடுங் கானிலே,
    என் பினே போதுவான் நினைதியோ, ஏழை நீ?
    இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு இனியை ஆயினை, இனித்
    துன்பம் ஆய் முடிதியோ? என்றதும், சொல்லுவாய். 70

  139. ஆன பேர் அரசு இழந்து, அடவி சேர்வாய்; உனக்கு
    யான் அலாதன எலாம் இனியவோ? இனி எனா,
    மீன் உலாம் நெடு மலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து,
    ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும், உரைசெய்வாய். 71

  140. மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
    கல்லின் மா மதிள் மணிக் கடை கடந்திடுதல்முன்,
    எல்லை தீர்வு அரிய வெங் கானம் யாதோ? எனச்
    சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய். 72

  141. இராமன் கணையாழி அளித்து, விடைகொடுக்க, அனுமன் முதலியோர் செல்லுதல்

  142. இனைய ஆறு உரைசெயா, இனிதின் ஏகுதி எனா,
    வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து, அறிஞ! நின்
    வினை எலாம் முடிக! எனா, விடை கொடுத்து உதவலும்,
    புனையும் வார் கழலினான் அருளொடும், போயினான். 73

  143. அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவர் ஆம்
    வெங் கதத் தலைவரும், விரி கடற் படையொடும்,
    பொங்கு வில்-தலைவரைத் தொழுது, முன் போயினார்-
    செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறும் சென்னியார். 74

  144. மிகைப் பாடல்கள்

  145. சாரும் வீரர் சதவலிதம்மொடும்
    கூரும் வீரர்கள் யாவரும் கூடியே
    நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
    பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால். 9-1

  146. குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
    வட திசைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
    இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
    தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால். 10-1

  147. குடதிசைக்கண் இடபன், குணதிசைக்
    கடலின் மிக்க பனசன், சதவலி
    வடதிசைக்கண் அன்று ஏவினன் - மான மாப்
    படையின் வெள்ளத்துடன் செலப் பான்மையால். 10-2

  148. என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும்
    நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார்
    அன்று மாருதி ஆம் முதல் வீரர்க்குத்
    துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்: 10-3

  149. கிட்கிந்தா காண்டம்

    14. பிலம் புக்கு நீங்கு படலம்



  150. அனைவரும் நான்கு திசையிலும் செல்லுதல்

  151. போயினார்; போன பின், புற நெடுந் திசைகள்தோறு,
    ஏயினான், இரவி காதலனும்; ஏயின பொருட்கு
    ஆயினார், அவரும்; அங்கு அன்ன நாள் அவதியில்
    தாயினார் உலகினை, தகை நெடுந் தானையார். 1

  152. தென் திசைச் சென்றவர்களின் வரலாறு

  153. குன்று இசைத்தன எனக் குலவு தோள் வலியினார்,
    மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய்,
    வன் திசைப் படரும் ஆறு ஒழிய, வண் தமிழுடைத்
    தென் திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரைசெய்வாம். 2

  154. விந்தமலையின் பக்கங்களில் தேடுதல்

  155. சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து,
    அந்தி வானத்தின் நின்று அவிர்தலான், அரவினோடு
    இந்து வான் ஓடலான், இறைவன் மா மௌலிபோல்
    விந்த நாகத்தின் மாடு எய்தினார், வெய்தினால். 3

  156. அந் நெடுங் குன்றமோடு, அவிர் மணிச் சிகரமும்,
    பொன் நெடுங் கொடு முடிப் புரைகளும், புடைகளும்,
    நல் நெடுந் தாழ்வரை நாடினார், - நவை இலார் -
    பல் நெடுங் காலம் ஆம் என்ன, ஓர் பகலிடை. 4

  157. மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறாவகையின், அச்
    சில் அல் ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார்,
    புல்லினார் உலகினை, பொது இலா வகையினால்,
    எல்லை மா கடல்களே ஆகுமாறு, எய்தினார். 5

  158. விண்டு போய் இழிவர்; மேல் நிமிர்வர்; விண் படர்வர்; வேர்
    உண்ட மா மரனின், அம் மலையின்வாய், உறையும் நீர்
    மண்டு பார் அதனின், வாழ் உயிர்கள் அம் மதியினார்
    கண்டிலாதன, அயன் கண்டிலாதனகொலாம். 6

  159. நருமதை நதிக் கரையில் வானரர்

  160. ஏகினார், யோசனை ஏழொடு ஏழு; பார்
    சேகு அறத் தென் திசைக் கடிது செல்கின்றார்,
    மேக மாலையினொடும் விரவி, மேதியின்
    நாகு சேர் நருமதை யாறு நண்ணினார். 7

  161. அன்னம் ஆடு இடங்களும், அமரர் நாடியர்
    துன்னி ஆடு இடங்களும், துறக்கம் மேயவர்
    முன்னி ஆடு இடங்களும், கரும்பு மூசு தேன்
    பன்னி ஆடு இடங்களும், பரந்து சுற்றினார். 8

  162. பெறல் அருந் தெரிவையை நாடும் பெற்றியார்,
    அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ்
    நிறை நறுந் தாமரை முகமும், நித்தில
    முறுவலும், காண்பரால், முழுதும் காண்கிலார். 9

  163. செரு மத யாக்கையர், திருக்கு இல் சிந்தையர்,
    தரும தயா இவை தழுவும் தன்மையர்,
    பொரு மத யானையும் பிடியும் புக்கு, உழல்
    நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார். 10

  164. வானர வீரர்கள் ஏமகூட மலையை அடைதல்

  165. தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம் ஆம்,
    நாம கூடு அப் பெருந் திசையை நல்கிய,
    வாம கூடச் சுடர் மணி வயங்குறும், -
    ஏமகூடத் தடங் கிரியை எய்தினார். 11

  166. மாடு உறு கிரிகளும், மரனும், மற்றவும்,
    சூடு உறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப்
    பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது;
    வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது; 12

  167. பரவிய கனக நுண் பராகம் பாடு உற
    எரி சுடர்ச் செம் மணி ஈட்டத் தோடு இழி
    அருவிஅம் திரள்களும் அலங்கு தீயிடை
    உருகு பொன் பாய்வ போன்று, ஒழுகுகின்றது; 13

  168. விஞ்சையர் பாடலும், விசும்பின் வெள் வளைப்
    பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும்,
    குஞ்சர முழக்கமும், குமுறு பேரியின்
    மஞ்சுஇனம் உரற்றலும், மயங்கும் மாண்பது; 14

  169. அதனை இராவணன் மலை என எண்ணி, சினம் கொள்ளுதல்

  170. அனையது நோக்கினார், அமிர்த மா மயில்
    இனைய, வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும்
    நினைவினர், உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர்,
    சினம் மிகக் கனல் பொறி சிந்தும் செங் கணார். 15

  171. இம் மலை காணுதும், ஏழை மானை; அச்
    செம்மலை நீக்குதும், சிந்தைத் தீது என
    விம்மலுற்று, உவகையின் விளங்கும் உள்ளத்தார்,
    அம் மலை ஏறினார், அச்சம் நீங்கினார். 16

  172. ஏமகூடத்தில் சீதையைக் காணாது இறங்கி வருதல்

  173. ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று,
    உம்பரைத் தொடுவது ஒத்து, உயர்வின் ஓங்கிய,
    செம் பொன் நல் கிரியை ஓர் பகலில் தேடினார்;
    கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார். 17

  174. பல பகுதியாகப் பிரிந்து தேடி, பின் மயேந்திரத்தில் கூடுவோம் என அங்கதன் கூறல்

  175. வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை,
    தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி, நீர்
    எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று
    உள்ளினார், உயர் நெடும் ஓங்கல் நீங்கினார். 18

  176. மாருதி முதலியோர் ஒரு சுரத்தை அடைதல்

  177. மாருதி முதலிய வயிரத் தோள் வயப்
    போர் கெழு வீரரே குழுமிப் போகின்றார்;
    நீர் எனும் பெயரும் அந் நெறியின் நீங்கலால்,
    சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார். 19

  178. பாலைவனத்தின் வெம்மை

  179. புள் அடையா; விலங்கு அரிய; புல்லொடும்
    கள் அடை மரன் இல; கல்லும் தீந்து உகும்;
    உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய;
    வெள்ளிடை அல்லது ஒன்று அரிது; - அவ் வெஞ் சுரம். 20

  180. நன் புலன் நடுக்குற, உணர்வு நைந்து அற,
    பொன் பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார்,
    தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய
    என்பு இல் பல் உயிர் என, வெம்மை எய்தினார். 21

  181. நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறு
    ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்;
    காட்டினும் காய்ந்து, தம் காயம் தீதலால்,
    சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார். 22

  182. வருந்திய வானரர் பில வழியில் புகுதல்

  183. ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது, உயிர்
    பிதுங்கல் ஆம் உடலினர், முடிவு இல் பீழையர்,
    பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார், பல
    விதங்களால், நெடும் பில வழியில் மேவினார். 23

  184. மீச் செல அரிது இனி, விளியின் அல்லது;
    தீச் செல ஒழியவும் தடுக்கும்; திண் பில-
    வாய்ச் செலல் நன்று என, மனத்தின் எண்ணினார்;
    போய்ச் சில அறிதும் என்று, அதனில் போயினார். 24

  185. பிலத்துள் இருட் குகையை அடைந்து வானரங்கள் திகைத்தல்

  186. அக் கணத்து, அப் பிலத்து அகணி எய்தினார்,
    திக்கினொடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள்,
    எக்கிய கதிரவற்கு அஞ்சி, ஏமுறப்
    புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார். 25

  187. எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்;
    வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்;
    இழுகிய நெய் எனும் இருட் பிழம்பினுள்,
    முழுகிய மெய்யர் ஆய், உயிர்ப்பு முட்டினார். 26

  188. வானரர்கள் அனுமனை காக்க வேண்ட, அவன் அவர்களைக் கொண்டு செல்லுதல்

  189. நின்றனர், செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர்,
    பொன்றினம் யாம் எனப் பொருமும் புந்தியர்,
    வன் திறல் மாருதி! வல்லையோ எமை
    இன்று இது காக்க? என்று, இரந்து கூறினார். 27

  190. உய்வுறுத்துவென்; மனம் உலையலீர்; ஊழின் வால்
    மெய்யுறப் பற்றுதிர்; விடுகிலீர் என,
    ஐயன், அக் கணத்தினில், அகலும் நீள் நெறி
    கையினில் தடவி, வெங் காலின் ஏகினான். 28

  191. பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன்,
    மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட,
    துன் இருள் தொலைந்திட, துருவி ஏகினான் -
    பொன் நெடுங் கிரி எனப் பொலிந்த தோளினான். 29

  192. வானரர் ஓர் அழகிய நகரைக் கண்டு, இராவணன் ஊர் என எண்ணி புகுந்து தேடுதல்

  193. கண்டனர், கடி நகர்; கமலத்து ஒண் கதிர் -
    மண்டலம் மறைந்து உறைந்தனைய மாண்பது;
    விண்தலம் நாணுற விளங்குகின்றது;
    புண்டரிகத்தவள் வதனம் போன்றது; 30

  194. கற்பகக் கானது; கமலக் காடது;
    பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது;
    அற்புதம் அமரரும் எய்தலாவது;
    சிற்பமும், மயன் மனம் வருந்திச் செய்தது; 31

  195. இந்திரன் நகரமும் இணை இலாதது;
    மந்திர மணியினின், பொன்னின், மண்ணினில்,
    அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும்,
    உந்த அரும் இருள் துரந்து, ஒளிர நிற்பது; 32

  196. புவி புகழ் சென்னி, பேர் அமலன், தோள் புகழ்
    கவிகள் தம் மனை என, கனக ராசியும்,
    சவியுடைத் தூசும், மென் சாந்தும், மாலையும்,
    அவிர் இழைக் குப்பையும், அளவு இலாதது; 33

  197. பயில் குரல் கிண்கிணிப் பதத்த பாவையர்,
    இயல்புடை மைந்தர், என்று இவர் இலாமையால்,
    துயில்வுறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா,
    உயிர் இலா, ஓவியம் என்ன ஒப்பது; 34

  198. அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்,
    தமிழ் நிகர் நறவமும், தனித் தண் தேறலும்,
    இமிழ் கனிப் பிறக்கமும், பிறவும், இன்னன
    கமழ்வுறத் துவன்றிய கணக்கு இல் கொட்பது; 35

  199. கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார்;
    இந் நகரம் ஆம், இகல் இராவணனது ஊர் என்று,
    உன்னி உரையாடினர்; உவந்தனர்; வியந்தார்;
    பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார். 36

  200. புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார்;
    மக்கள் கடை, தேவர் தலை, வான் உலகின், வையத்து,
    ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால், மற்று
    எக் குறியின் உள்ளவும், எதிர்ந்திலர், திரிந்தார். 37

  201. மனிதர்களைக் காணாது வானரர் திகைத்தல்

  202. வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும்
    காவும் உள; காவி விழியார் மொழிகள் என்னக்
    கூவும் இள மென் குயில்கள், பூவை, கிளி, கோலத்
    தூவி மட அன்னம், உள; தோகையர்கள் இல்லை. 38

  203. ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்;
    மாயைகொல்? எனக் கருதி, மற்றும் நினைகின்றார்,
    தீய முன் உடற் பிறவி சென்ற அது அன்றோ,
    தூயது துறக்கம்? என நெஞ்சு துணிவுற்றார். 39

  204. இறந்திலம்; இதற்கு உரியது எண்ணுகிலம்; ஏதும்
    மறந்திலம்; மறப்பினொடு இமைப்பு உள; மயக்கம்
    பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ?
    திறம் தெரிவது என்? என இசைத்தனர், திசைத்தார். 40

  205. சாம்பனின் கலங்கம்

  206. சாம்பன் அவன் ஒன்று உரைசெய்வான், எழு சலத்தால்,
    காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன்,
    நாம் புக அமைத்த பொறி நன்று; முடிவு இன்றால்;
    ஏம்பல் இனி மேலை விதியால் முடியும் என்றான். 41

  207. அஞ்சவேண்டாம் என மாருதி சாம்பனைத் தேற்றுதல்

  208. இன்று, பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின், பார்
    தின்று, சகரர்க்கு அதிகம் ஆகி, நனி சேறும்;
    அன்று அது எனின், வஞ்சனை அரக்கரை அடங்கக்
    கொன்று எழுதும்; அஞ்சல் என மாருதி கொதித்தான். 42

  209. அந் நகர் நடுவில் சுயம்பிரபையைக் காணுதல்

  210. மற்றவரும் மற்று அது மனக் கொள வலித்தார்;
    உற்றனர், புரத்தின் இடை; ஒண் சுடரினுள் ஓர்
    நல் தவம் அனைத்தும் உரு நண்ணி, ஒளி பெற்ற
    கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார். 43

  211. சுயம்பிரபையின் தோற்றம்

  212. மருங்கு அலச வற்கலை வரிந்து, வரி வாளம்
    பொரும், கலசம் ஒக்கும், முலை மாசு புடை பூசி,
    பெருங் கலை மதித் திரு முகத்த பிறழ் செங் கேழ்க்
    கருங் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண, 44

  213. தேர் அனைய அல்குல், செறி திண் கதலி செப்பும்
    ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி, உற ஒல்கும்
    நேர் இடை சலிப்பு அற நிறுத்தி, நிமிர் கொங்கைப்
    பாரம் உள் ஒடுக்குற, உயிர்ப்பு இடை பரப்ப, 45

  214. தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர்க் கை,
    பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த,
    காமம் முதல் உற்ற பகை கால் தளர, ஆசை
    நாமம் அழிய, புலனும் நல் அறிவு புல்ல, 46

  215. நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
    செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல,
    பறிந்து வினை பற்று அற, மனப் பெரிய பாசம்
    பிறிந்து பெயர, கருணை கண்வழி பிறங்க, 47

  216. சீதையோ இவள் என்ற வானவர்க்கு அனுமனின் மறுமொழி

  217. இருந்தனள் - இருந்தவளை எய்தினர் இறைஞ்சா,
    அருந்ததி எனத் தகைய சீதை அவளாகப்
    பரிந்தனர்; பதைத்தனர்; பணித்த குறி, பண்பின்
    தெரிந்து உணர்தி; மற்று இவள்கொல், தேவி? எனலோடும் 48

  218. எக் குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்?
    இக் குறியுடைக் கொடி இராமன் மனையாளோ?
    அக்கு வடம், முத்தமணி ஆரம் அதன் நேர் நின்று
    ஒக்கும் எனின், ஒக்கும் என, மாருதி உரைத்தான். 49

  219. சுயம்பிரபை நீவிர் யார்? வந்தது என்? என வினாவுதல்

  220. அன்ன பொழுதின்கண் அ(வ்) அணங்கும், அறிவுற்றாள்;
    முன், அனையர் சேறல் முறை அன்று, என முனிந்தாள்;
    துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர்;
    என்ன வரவு? யாவர்? உரைசெய்க! என இசைத்தாள். 50

  221. வானரரின் மறுமொழி

  222. வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்;
    சீதையை ஒளித்தனர்; மறைத்த புரை தேர்வுற்று
    ஏதம் இல் அறத் துறை நிறுத்திய இராமன்
    தூதர்; உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார். 51

  223. என்றலும், இருந்தவள் எழுந்தனல், இரங்கி,
    குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்;
    நன்று வரவு ஆக! நடனம் புரிவல் என்னா,
    நின்றனள்; நெடுங் கண் இணை நீர் கலுழி கொள்ள, 52

  224. சுயம்பிரபை இராமனைப் பற்றி வினாவ, அனுமன் விடையுறுத்தல்

  225. எவ் உழை இருந்தனன் இராமன்? என, யாணர்ச்
    செவ் உழை நெடுங் கண் அவள் செப்பிடுதலோடும்,
    அவ் உழை, நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம்,
    வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான். 53

  226. சுயம்பிரபை விருந்து அளித்து, தன் வரலாறு கூறல்

  227. கேட்டு, அவளும், என்னுடைய கேடு இல் தவம் இன்னே
    காட்டியது வீடு! என விரும்பி, நனி சால் நீர்
    ஆட்டி, அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு
    ஊட்டி, மனன் உள் குளிர, இன் உரை உரைத்தாள். 54

  228. மாருதியும், மற்று அவள் மலர்ச்சரண் வணங்கி,
    யார் இ(ந்) நகருக்கு இறைவர்? யாது நின் இயற் பேர்?
    பார் புகழ் தவத்தினை! பணித்தருளுக! என்றான்;
    சோர்குழலும், மற்று அவனொடு, உற்றபடி சொன்னாள்: 55

  229. நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர, நொய்தா
    மேல் முகம் நிமிர்ந்து, வெயில் காலொடு விழுங்கா,
    மான் முக நலத்தவன், மயன், செய்த தவத்தால்,
    நான்முகன் அளித்துளது, இ(ம்) மா நகரம் - நல்லோய்! 56

  230. அன்னது இது; தானவன் அரம்பையருள், ஆங்கு ஓர்,
    நல் நுதலினாள் முலை நயந்தனன்; அ(ந்) நல்லாள்
    என் உயிர் அனாள்; அவளை யான், அவன் இரப்ப,
    பொன்னுலகின் நின்று, ஒளிர் பிலத்திடை புணர்த்தேன். 57

  231. புணர்ந்து, அவளும் அன்னவனும், அன்றில் விழை போகத்து
    உணர்ந்திலர், நெடும் பகல் இ(ம்) மா நகர் உறைந்தார்;
    கணங் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று,
    இணங்கி வரு பாசமுடையேன் இவண் இருந்தேன். 58

  232. இருந்து, பல நாள் கழியும் எல்லையினில், நல்லோய்!
    திருந்திழையை நாடி வரு தேவர் இறை சீறி,
    பெருந் திறலினானை உயிர் உண்டு, பிழை என்று, அம்
    முருந்து நிகர் மூரல் நகையாளையும், முனிந்தான். 59

  233. முனிந்து, அவளை, உற்ற செயல் முற்றும் மொழிக என்ன,
    கனிந்த துவர் வாயவளும், என்னை, இவள்கண் ஆய்,
    வனைந்து முடிவுற்றது என, மன்னனும், இது எல்லாம்
    நினைந்து, இவண் இருத்தி; நகர் காவல் நினது என்றான். 60

  234. என்றலும்; வணங்கி, இருள் ஏகும் நெறி எந் நாள்?
    ஒன்று உரை, எனக்கு முடிவு என்று உரைசெயாமுன்,
    வன் திறல் அவ் வானரம், இராமன் அருள் வந்தால்,
    அன்று முடிவு ஆகும், இடர் என்று, அவன் அகன்றான். 61

  235. உண்ண உள; பூச உள; சூட உள; ஒன்றோ?
    வண்ண மணி ஆடை உள; மற்றும் உள; பெற்று என்?
    அண்ணல்! அவை முற்றும் அற விட்டு, வினை வெல்வான்,
    எண்ண அரிய பல் பகல் இருந் தவம் இழைத்தேன். 62

  236. ஐ - இருபது ஓசனை அமைந்த பிலம், ஐயா!
    மெய் உளது; மேல் உலகம் ஏறும் நெறி காணேன்;
    உய்யும் நெறி உண்டு, உதவுவீர் எனின்; உபாயம்
    செய்யும்வகை சிந்தையில் நினைத்தீர், சிறிது என்றாள். 63

  237. சுயம்பிரபைக்கு அனுமனின் மறுமொழி

  238. அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும்
    மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள்
    சென்னியின் வணங்கி, நனி வானவர்கள் சேரும்
    பொன்னுலகம் ஈகுவல், நினக்கு எனல் புகன்றான். 64

  239. இருளிலிருந்து மீள வழி செய்யுமாறு, அனுமனை வானரர் வேண்டுதல்

  240. முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப்
    பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே!
    இழைத்தி, செயல் ஆய வினை என்றனர் இரந்தார்;
    வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான், 65

  241. அனுமன் வானுற ஓங்கி, பிலத்தைப் பிளந்து நிற்றல்

  242. நடுங்கல்மின் எனும் சொலை நவின்று, நகை நாற
    மடங்கலின் எழுந்து, மழை ஏற அரிய வானத்து
    ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற,
    நெடுங் கைகள் சுமந்து, நெடு வான் உற நிமிர்ந்தான். 66

  243. எருத்து உயர் சுடர்ப் புயம் இரண்டும் எயிறு என்ன,
    மருத்து மகன் இப் படி இடந்து, உற வளர்ந்தான்;
    கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க,
    உருத்து, உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான். 67

  244. மா வடிவுடைக் கமல நான்முகன் வகுக்கும்
    தூ வடிவுடைச் சுடர் கொள் விண் தலை துளைக்கும்
    மூஅடி குறித்து முறை ஈர் - அடி முடித்தான்
    பூ வடிவுடைப் பொரு இல் சேவடி புரைத்தான். 68

  245. பிலத்தினைப் பிளந்து மேலைக்கடலில் எறிந்து, அனுமன் ஆரவாரித்தல்

  246. ஏழ்-இருபது ஓசனை இடந்து, படியின்மேல்
    ஊழுற எழுந்து, அதனை, உம்பரும் ஒடுங்க,
    பாழி நெடு வன் பிலனுள் நின்று, படர் மேல்பால்
    ஆழியின் எறிந்து, அனுமன் ஆழி என ஆர்த்தான். 69

  247. சுயம்பிரபை பொன்னுலகம் செல்லுதல்

  248. என்றும் உள மேல் கடல் இயக்கு இல் பில தீவா
    நின்று, நிலைபெற்றுளது; நீள் நுதலியோடும்,
    குன்று புரை தோளவர், எழுந்து நெறி கொண்டார்;
    பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள். 70

  249. வானரர் ஒரு பொய்கைக் கரையை அடைதலும், சூரியன் மறைதலும்

  250. மாருதி வலித் தகைமை பேசி, மறவோரும்,
    பாரிடை நடந்து, பகல் எல்லை படரப் போய்,
    நீருடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார்;
    தேருடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான். 71

  251. மிகைப் பாடல்கள்

  252. இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ? என
    அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது;
    தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
    பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது; 12-1

  253. பறவையும், பல் வகை விலங்கும், பாடு அமைந்து
    உறைவன, கனக நுண் தூளி ஒற்றலான்,
    நிறை நெடு மேருவைச் சேர்ந்த நீர ஆய்,
    பொறை நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது; 12-2

  254. இரிந்தன, கரிகளும், யாளி ஈட்டமும்;
    விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின;
    திரிந்தனர் எங்கணும்; திருவைக் காண்கிலார்
    பிரிந்தனர்; பிறிது எனப் பெயரும் பெற்றியார். 16-1

  255. வச்சிரமுடைக் குரிசில் வாள் அமரின் மேல் நாள்,
    மெச்சு அவுணர் யாவரும் விளிந்தனர்களாக,
    அச்சம் உறு தானவர்கள் கம்மியனும் அஞ்சி,
    வைச்ச பிலமூடிதன் மறைந்து அயல் இருந்தான். 55-1

  256. மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர்; வாசப்
    போது உறை நறைக் குழல் ஒருத்தி; - புகழ் மேலோய்! -
    ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார்;
    சீதள முலைச் சிறுமி தாதையொடு சென்றாள். 59-1

  257. மத்த நெடு மா களிறு வைத்த குலிசி வன் தாள்
    சித்தமொடு மான் முகன் வணங்கி, அயல் சென்றான்;
    வித்தகனும், ஆயிர விலோசனனும், மேன்மேல்,
    முத்த நகையாளை நனி நோக்கினன், முனிந்தான். 59-2

  258. மேரு சவ்வருணி எனும் மென்சொலினள், விஞ்சும்
    ஏர் உறு மடந்தை, யுகம் எண்ண அரு தவத்தாள்,
    சீர் உறு சுயம்பிரபை, ஏமை செறிவு எய்தும்
    தாரு வளர் பொற்றலமிசைக் கடிது சார்ந்தாள். 70-1

  259. மேரு வரை மா முலையள், மென்சொலினள், - விஞ்சு
    மாருதியினைப் பல உவந்து, மகிழ்வுற்றே,-
    ஏர் உறு சுயம்பிரபை, ஏமை நெறி எய்த,
    தாரு வளர் பொன்-தலனிடைக் கடிது சார்ந்தாள். 70-2

  260. கிட்கிந்தா காண்டம்

    15. ஆறு செல் படலம்


    பொய்கைக் கரையில் வானரர் துயில துமிரன் வருதல்

  261. கண்டார், பொய்கைக் கண் அகல் நல் நீர்க் கரை தாம் உற்று,
    உண்டார், தேனும் ஒண் கனி காயும்; ஒரு சூழல்,
    கொண்டார் அன்றோ, இன் துயில்; கொண்ட குறி உன்னி,
    தண்டா வென்றித் தானவன் வந்தான், தகவு இல்லான். 1

  262. மலையே போல்வான்; மால் கடல் ஒப்பான்; மறம் முற்ற,
    கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
    நிலையே போல்வான்; நீர்மை இலாதான்; நிமிர் திங்கட்
    கலையே போலும் கால எயிற்றான்; கனல் கண்ணான்; 2

  263. கருவி மா மழை கைகள் தாவி மீது
    உருவி, மேனி சென்று உலவி ஒற்றலால்,
    பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்,
    அருவி பாய்தரும் குன்றமே அனான்; 3

  264. வானவர்க்கும், மற்று அவர் வலிக்கு நேர்
    தானவர்க்குமே அரிய தன்மையான்;
    ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட, வேறு
    ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ? 4

  265. பிறங்கு பங்கியான்; பெயரும் பெட்பினில்
    கறங்கு போன்றுளான்; பிசையும் கையினான்;
    அறம் கொள் சிந்தையார், நெறி செல் ஆய்வினால்
    உறங்குவாரை வந்து, ஒல்லை எய்தினான். 5

  266. அங்கதன் மார்பில் அசுரன் அறைதல்

  267. பொய்கை என்னது என்று உணர்ந்தும், புல்லியோர்
    எய்தினார்கள் யார்? இது எனா? எனா,
    ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்,
    கையின் மோதினான்;- காலனே ஆனான். 6

  268. அங்கதன் எற்ற, அசுரன் அலறி இறந்து வீழ்தல்

  269. மற்று அ(ம்) மைந்தனும் உறக்கம் மாறினான்;
    இற்று இவன் கொலாம் இலங்கை வேந்து எனா,
    எற்றினானை, நேர் எற்றினான்; அவன்
    முற்றினான், உயிர் உலந்து மூர்ச்சியா. 7

  270. இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து,
    அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும்,
    தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார், -
    பிடியுண்டார் எனத் துயிலும் பெற்றியார். 8

  271. அசுரனைப் பற்றி அனுமன் வினாவ, அங்கதன் யான் அறியேன் எனல்

  272. யார் கொலாம் இவன்? இழைத்தது என்? எனா,
    தாரை சேயினைத் தனி வினாவினான்,
    மாருதேயன்; மற்று அவனும், வாய்மை சால்
    ஆரியா! தெரிந்து அறிகிலேன் என்றான். 9

  273. சாம்பன் துமிரன் வரலாறு கூறல்

  274. யான் இவன் தனைத் தெரிய எண்ணினேன்;
    தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே-
    ரான், இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
    வானவன் என்று சாம்பன் சாற்றினான். 10

  275. மறுநாள் பெண்ணையாற்றை அடைந்து தேடுதல்

  276. வேறும் எய்துவார் உளர் கொலாம் எனா,
    தேறி, இன் துயில் செய்தல் தீர்ந்துளார்,
    வீறு செஞ் சுடர்க் கடவுள் வேலைவாய்
    நாற, நாள் மலர்ப் பெண்ணை நாடுவார். 11

  277. புள் தை வெம் முலைப் புளினம், ஏய் தடத்து
    உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்,
    வண்ண வெண் நகைத் தரள் வாள் முகப்
    பெண்ணை நண்ணினார் - பெண்ணை நாடுவார். 12

  278. துறையும், தோகை நின்று ஆடு சூழலும்,
    குறையும், சோலையும், குளிர்ந்த சாரல் நீர்ச்
    சிறையும், தெள்ளு பூந் தடமும், தெண் பளிக்கு
    அறையும், தேடினார்-அறிவின் கேள்வியார். 13

  279. அணி கொழித்து வந்து, எவரும் ஆடுவார்
    பிணி கொழித்து, வெம் பிறவி வேரின் வன்
    துணி கொழித்து, அருஞ் சுழிகள் தோறும், நல்
    மணி கொழித்திடும் துறையின் வைகினார். 14

  280. பெண்ணையாற்றைக் கடந்து, தசநவ நாடு அடைதல்

  281. ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்;
    காடு நண்ணினார்; மலை கடந்துளார்;
    வீடு நண்ணினார் என்ன, வீசும் நீர் -
    நாடு நண்ணினார் - நாடு நண்ணினார். 15

  282. தசநவப் பெயர்ச் சரள சண்பகத்து,
    அசந அப் புலத்து அகணி நாடு ஒரீஇ,
    உசநவப் பெயர்க் கவி உதித்த பேர்
    இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார். 16

  283. தவத்தோர் வடிவில், விதர்ப்ப நாட்டில் தேடுதல்

  284. வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு,
    எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்;
    மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார்,
    செய் தவத்துளார் வடிவின், தேடினார். 17

  285. முண்டகத் துறையை அடைதல்

  286. அன்ன தன்மையால், அறிஞர் நாடி, அச்
    செந் நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ,
    தன்னை எண்ணும் அத் தகை புகுந்துளார்
    துன்னு தண்டகம், கடிது துன்னினார். 18

  287. உண்டு, அகத்துளார், உறையும் ஐம் பொறிக்
    கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார்,
    தண்டகத்தையும் தடவி ஏகினார்;
    முண்டகத்துறை கடிது முற்றினார். 19

  288. அள்ளல் நீர் எலாம், அமரர் மாதரார்,
    கொள்ளை மா முலைக் கலவை, கோதையின்
    கள்ளு, நாறலின், கமல வேலி வாழ்
    புள்ளும், மீன் உணா, புலவு தீர்தலால். 20

  289. குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் -
    விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார்,
    நஞ்சு, வீணையின் நடத்து பாடலான்,
    அஞ்சுவார், கணீர் அருவி ஆறுஅரோ! 21

  290. கமுக வார் நெடுங் கனக ஊசலில்,
    குமுத வாயினார், குயிலை ஏசுவார்;
    சமுக வாளியும், தனுவும் வாழ் முகத்து
    அமுத பாடலார், அருவி ஆடுவார். 22

  291. இனைய ஆய ஒண் துறையை எய்தினார்;
    நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்;
    வினைய வார் குழல் திருவை மேவலார்;
    புனையும் நோயினார், கடிது போயினார். 23

  292. பாண்டு மலைச் சிகரத்தை வானரர் அடைதல்

  293. நீண்ட மேனியான், நெடிய தாளின்நின்று
    ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்,
    பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத்
    தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார். 24

  294. இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா,
    மருள் உறுத்து, வண் சுடர் வழங்கலால்,
    அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல்
    உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால். 25

  295. விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி,
    கண்ணுற நோக்கலுற்றார், களி உறக் கனிந்த காமர்
    பண் உறு கிளவிச் செவ் வாய், படை உறும் நோக்கினாளை,
    எண்ணுறு திறத்துக் காணார்; இடர் உறும் மனத்தர் எய்த்தார். 26

  296. வானரர் கோதாவரியை அடைதல்

  297. ஊதைபோல் விசையின், வெங் கண் உழுவை போல் வயவர், ஓங்கல்
    ஆதியை அகன்று செல்வார்; அரக்கனால் வஞ்சிப் புண்ட
    சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து, புவனம் சேர்ந்த
    கோதைபோல் கிடந்த கோதாவரியினைக் குறுகிச் சென்றார். 27

  298. எழுகின்ற திரையிற்று ஆகி, இழிகின்ற மணி நீர் யாறு, -
    தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய, சுருதிச் சொல்லால்
    உழுகின்ற பொழுதின், ஈன்ற ஒரு மகட்கு இரங்கி, ஞாலம்
    அழுகின்ற கலுழி மாரி ஆம் என - பொலிந்தது அன்றே. 28

  299. ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி,
    காசொடு கனகம் தூவி, கவின் உறக் கிடந்த கான் யாறு, -
    கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து, எருவை வேந்தன்
    வீசிய வடக மீக் கோள் ஈது என - விளங்கிற்று அன்றே. 29

  300. வானரர் கவணகத் துறை புகுந்து, குலிந்த தேசத்தைக் கடத்தல்

  301. அந் நதி முழுதும் நாடி, ஆய் வளை மயிலை, யாண்டும்
    சந்நிதி உற்றிலாதார், நெடிது பின் தவிரச் சென்றார்;
    இன்ன தீதுஇலாத, தீது என்று யாவையும் எண்ணும் கோளார்,
    சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார். 30

  302. சுரும்பொடு தேனும், வண்டும், அன்னமும், துவன்றி; புள்ளும்,
    கரும்பொடு செந் நெல் காடும், கமல வாவிகளும், மல்கி;
    பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்கச் சென்றார்;
    குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும், புறத்துக் கொண்டார். 31

  303. அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து, வேங்கட மலை சேர்தல்

  304. கொங்கணம் ஏழும் நீங்கி, குட கடல் தரளக் குப்பைச்
    சங்கு அணி பானல் நெய்தல்-தண் புனல் தவிர ஏகி,
    திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத், தேவர்
    அங்கைகள் கூப்ப, நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார். 32

  305. அருந்ததிக்கு அருகு சென்று, ஆண்டு, அழகினுக்கு அழகு செய்தாள்
    இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார்; இடையர் மாதர்
    பெருந் ததிக்கு அருந் தேன் மாறும் மரகதப் பெருங் குன்று எய்தி,
    இருந்து, அதின் தீர்ந்து சென்றார், வேங்கடத்து இறுத்த எல்லை - 33

  306. திருவேங்கட மலைச் சிறப்பு

  307. முனைவரும், மறை வலோரும், முந்தைநாள் சிந்தை மூண்ட
    வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும், விண்ணோர்
    எனைவரும், அமரர் மாதர் யாவரும், சித்தர் என்போர்
    அனைவரும், அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார். 34

  308. பெய்த ஐம் பொறியும், பெருங் காமமும்,
    வைத வெஞ் சொலின், மங்கையர் வாட் கணின்,
    எய்த ஐம் பெரு வாளியும், ஏன்று இற,
    செய் தவம் பல செய்குநர் தேவரால். 35

  309. வலம் கொள் நேமி மழை நிற வானவன்
    அலங்கு தாள் இணை தாங்கிய அம் மலை
    விலங்கும் வீடு உறுகின்றன; மெய்ந் நெறி
    புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ? 36

  310. ஆய குன்றினை எய்தி, அருந் தவம்
    மேய செல்வரை மேவினர், மெய்ந் நெறி
    நாயகன் தனை நாளும் வணங்கிய
    தூய நல் தவர் பாதங்கள் சூடினார். 37

  311. வானரர் அந்தணர் வடிவுடன் தொண்டை நாட்டை அடைதல்

  312. சூடி, ஆண்டு அச் சுரி குழல் தோகையைத்
    தேடி, வார் புனல் தெண் திரைத் தொண்டை நல்
    நாடு நண்ணுகின்றார், மறை நாவலர்
    வேடம் மேயினார், வேண்டு உரு மேவுவார். 38

  313. தொண்டை நாட்டு வளப்பம்

  314. குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர்
    முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய் புனல்
    சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண் திரை
    மன்று சூழ்ந்த பரப்பும் - மருங்கு எலாம். 39

  315. சூல் அடிப் பலவின் சுளை தூங்கு தேன்,
    கோல் அடிப்ப வெரீஇ, குல மள்ளர் ஏர்ச்
    சால் அடித் தரும் சாலியின் வெண் முளை,
    தோல் அடிக் கிளை அன்னம், துவைப்பன. 40

  316. செருகுறும் கணின் தேம் குவளைக் குலம்
    அருகு உறங்கும் வயல் மருங்கு, ஆய்ச்சியர்
    இரு குறங்கின் பிறங்கிய வாழையில்
    குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால். 41

  317. தெருவின் ஆர்ப்புறும் பல் இயம் தேர் மயில்
    கருவி மா மழை என்று களிப்புறா;
    பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா; -
    மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்கொலோ? 42

  318. தேரை வன் தலைத் தெங்கு இளம் பாளையை,
    நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ;
    தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
    சேரை என்று, புலம்புவ, தேரையே. 43

  319. நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்,
    வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி,
    புள்ளி நாரைச் சினை பொரியாத என்று
    உள்ளி, ஆமை முதுகின் உடைப்பரால். 44

  320. சேட்டு இளங் கடுவன் சிறு புன் கையில்
    கோட்ட தேம் பலவின் கனிக் கூன் சுளை,
    தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன்
    சட்டம் என்னச் சென்று, ஈஇனம் மொய்ப்பன. 45

  321. வானரர் சோழ நாடு அடைதல்

  322. அன்ன தொண்டை நல் நாடு கடந்து, அகன்
    பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்;
    செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து,
    இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார். 46

  323. கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரை வாழ்
    தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
    மிடறு தாங்கும் விருப்புடைத் தீம் கனி
    இடறுவார்; நறுந் தேனின் இழுக்குவார். 47

  324. சோழ நாட்டு வளம்

  325. குழுவும் மீன் வளர் குட்டம் எனக் கொளா,
    எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து
    ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ் முறை
    முழுகி, நீர்க் கருங் காக்கை முளைக்குமே. 48

  326. பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
    தேன் ஒருங்கு சொரிதலின், தேர்வு இல,
    மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ, பல
    வானரங்கள் மரங்களின் வைகுமால். 49

  327. மலை நாடு கடந்து பாண்டி நாடு அடைதல்

  328. அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ,
    மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம்
    வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்;
    இனிய தென் தமிழ் நாடு சென்று எய்தினார். 50

  329. தென் தமிழ் நாட்டின் பெருமை

  330. அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
    ஒத்திருக்கும் என்றால், உரை ஒக்குமோ -
    எத் திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
    முத்தும் முத் தமிழும் தந்து, முற்றலால்? 51

  331. தென் தமிழ் நாடெங்கும் தேடிய வானர வீரர்கள் மயேந்திரமலையில் சென்று கூடுதல்

  332. என்ற தென் தமிழ் நாட்டினை எங்கணும்
    சென்று நாடித் திரிந்து, வருந்தினார்,
    பொன்றுவாரின் பொருந்தினர் போயினார் -
    துன்று அல் ஓதியைக் கண்டிலர், துன்பினார். 52

  333. வன் திசைக் களிறு அன்ன மயேந்திரக்
    குன்று இசைத்தது வல்லையில் கூடினார் -
    தென் திசைக் கடற் சீகர மாருதம்
    நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார். 53

  334. மிகைப் பாடல்கள்

  335. இருவரும் கதம் எய்தி அங்கையில்
    செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
    நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
    பரு மராமரம் பறித்து வீசினான். 7-1

  336. வீசு மா மரம் சிந்த, வென்றி சேர்
    ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து,
    ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்;
    கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான். 7-2

  337. குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன்
    நின்ற அங்கதன், நெடு மராமரம்
    ஒன்று வாங்கி, மற்றவன் ஒடிந்திடச்
    சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே. 7-3

  338. ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
    ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
    சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
    சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார். 45-1

  339. இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்;
    அனைய நாட்டின் அருந் தவர் யாவரும்
    நனி விரும்பி நயந்தனர், நான்மறைப்
    புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார். 45-2

  340. செல்வர் என்றும், வடகலை, தென் தமிழ்ச்
    சொல், வரம்பினர் என்றும், சுமடரைக்
    கொல்வர் என்றும், கொடுப்பவர் என்றும், -அவ்
    இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே? 45-1

  341. தாறு நாறுவ, வாழைகள்; தாழையின்
    சோறு நாறுவ தூம்புகள்; மாங்கனி
    நாறு நாறுவ; நாறு வளர்க்குறும்
    சேறு நாறுவ, செங்கழுநீர் அரோ. 49-1

  342. கிட்கிந்தா காண்டம்

    16. சம்பாதிப் படலம்


    வானரர் தென் கடலை காணுதல்

  343. மழைத்த விண்ணகம் என முழங்கி, வான் உற
    இழைத்த வெண் திரைக் கரம் எடுத்து, இலங்கையாள்,
    உழைத் தடங் கண்ணி என்று உரைத்திட்டு, ஊழின் வந்து
    அழைப்பதே கடுக்கும் அவ் ஆழி நோக்கினார். 1

  344. யாவரும் மயேந்திரத்தில் ஒன்று கூடுதல்

  345. விரிந்து, நீர், எண் திசை மேவி, நாடினீர்,
    பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய
    அருந் துணைக் கவிகள் ஆம் அளவு இல் சேனையும்
    பெருந் திரைக் கடல் எனப் பெரிது கூடிற்றே. 2

  346. வானரர் சீதையைக் காணாமை பற்றி வருந்தி உரைத்தல்

  347. யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்;
    பூ வரு புரி குழல், பொரு இல் கற்புடைத்
    தேவியைக் காண்கிலார், செய்வது ஓர்கிலார்,
    நா உறக் குழறிட நவில்கின்றார் அரோ? 3

  348. அற்றது நாள் வரை அவதி; காட்சியும்
    உற்றிலம்; இராகவன் உயிரும் பொன்றுமால்;
    கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்;
    இற்றது நம் செயல், இனி என்று எண்ணினார்; 4

  349. அருந் தவம் புரிதுமோ? அன்னது அன்றுஎனின்,
    மருந்து அரு நெடுங் கடு உண்டு மாய்துமோ?
    திருந்தியது யாது? அது செய்து தீர்தும் என்று
    இருந்தனர் - தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார். 5

  350. அங்கதன் உரை

  351. கரை பொரு கடல் அயல், கனக மால் வரை
    நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு,
    உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் -
    அரசு இளங் கோள் அரி, அயரும் சிந்தையான்; 6

  352. நாடி நாம் கொணருதும், நளினத்தாளை, வான்
    மூடிய உலகினை முற்றும் முட்டி என்று,
    ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப்
    பாடவம் விளம்பினம்; பழியில் மூழ்கிவாம். 7

  353. செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்;
    நொய்து சென்று, உற்றது நுவலகிற்றிலம்;
    எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம்;
    உய்தும் என்றால், இது ஓர் உரிமைத்து ஆகுமோ? 8

  354. எந்தையும் முனியும்; எம் இறை இராமனும்
    சிந்தனை வருந்தும்; அச் செய்கை காண்குறேன்;
    நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்!
    புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான். 9

  355. சாம்பனது உரை

  356. விழுமியது உரைத்தனை; - விசயம் வீற்றிருந்து,
    எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய்! -
    அழுதுமோ, இருந்து? நம் அன்பு பாழ்படத்
    தொழுதுமோ, சென்று? எனச் சாம்பன் சொல்லினான்: 10

  357. மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்?
    மாண்டுறுவது நலம் என வலித்தனம்; -
    ஆண் தகை அரசு இளங் குமர! - அன்னது
    வேண்டலின், நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால். 11

  358. அங்கதன் மறுமொழி

  359. என்று அவன் உரைத்தலும், இருந்த வாலி சேய்,
    குன்று உறழ்ந்தென வளர் குவவுத் தோளினீர்!
    பொன்றி நீர் மடிய, யான் போவெனேல், அது
    நன்றதோ? உலகமும் நயக்கற்பாலதோ? 12

  360. சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர்
    போன்றவர் மடிதர, போந்துளான் என
    ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம், யான்
    வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான்: 13

  361. எல்லை நம் இறுதி, யாய்க்கும் எந்தைக்கும், யாவரேனும்
    சொல்லவும் கூடும்; கேட்டால், துஞ்சவும் அடுக்கும்; கண்ட
    வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம்; அச் சொல்
    மல்லல் நீர் அயோத்தி புக்கால், வாழ்வரோ பரதன் மற்றோர்? 14

  362. பரதனும், பின்னுளோனும், பயந்தெடுத்தவரும், ஊரும்,
    சரதமே முடிவர்; கெட்டேன்! சனகி என்று உலகம் சாற்றும்
    விரத மா தவத்தின் மிக்க விளக்கினால், உலகத்து யார்க்கும்,
    கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா! எனக் கலுழ்ந்தான். 15

  363. பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான்
    தரிப்பு இலாது உரைத்த மாற்றம், தடுப்ப அருந் தகைத்தது ஆய
    நெருப்பையே விளைத்த போல, நெஞ்சமும் மறுகக் கேட்டு,
    விருப்பினால் அவனை நோக்கி, விளம்பினன் எண்கின் வேந்தன்: 16

  364. அங்கதன் இறத்தல் கூடாது என்பது குறித்துச் சாம்பன் தடுத்து மொழிதல்

  365. நீயும் நின் தாதையும் நீங்க, நின் குலத்
    தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்;
    ஆயது கருதினம்; அன்னது அன்று எனின்,
    நாயகர் இறுதியும் நவிலற்பாலதோ? 17

  366. ஏகு நீ; அவ் வழி எய்தி, இவ் வழித்
    தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி, எம்
    சாகையும் உணர்த்துதி; தவிர்த்தி சோகம்; - போர்
    வாகையாய்! என்றனன் - வரம்புஇல் ஆற்றலான். 18

  367. அனுமன் உரை

  368. அவன் அவை உரைத்தபின், அனுமன் சொல்லுவான்:
    புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்;
    கவனம் மாண்டவர் என, கருத்திலார் என,
    தவன வேகத்தினீர்! சலித்திரோ? என்றான். 19

  369. பின்னரும் கூறுவான்: பிலத்தில், வானத்தில்,
    பொன் வரைக் குடுமியில், புறத்துள் அண்டத்தில்,
    நல் நுதல் தேவியைக் காண்டும் நாம் எனின்,
    சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே. 20

  370. நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத்
    தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர்
    வீடிய சடாயுவைப் போல வீடுதல்
    பாடவம்; அல்லது பழியிற்று ஆம் என்றான். 21

  371. சடாயு மாண்டான் என்ற சொற் கேட்டு, சம்பாதி அங்கு வருதல்

  372. என்றலும், கேட்டனன், எருவை வேந்தன் - தன்
    பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான்
    பொன்றினன் என்ற சொல்; புலம்பும் நெஞ்சினன்;
    குன்று என நடந்து, அவர்க் குறுகல் மேயினான். 22

  373. முறையுடை எம்பியார் முடிந்தவா எனாப்
    பறையீடு நெஞ்சினன்; பதைக்கும் மேனியன்;
    இறையுடைக் குலிசவேல் எறிதலால், முனம்
    சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்; 23

  374. மிடலுடை எம்பியை வீட்டும் வெஞ் சினப்
    படையுளர் ஆயினார் பாரில் யார்? எனா,
    உடலினை வழிந்து போய், உவரி நீர் உக,
    கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்; 24

  375. உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான்;
    மழுங்கிய நெடுங் கணின் வழங்கும் மாரியான்;
    புழுங்குவான், அழுங்கினான்; புடவிமீதினில்,
    முழங்கி, வந்து, இழிவது ஓர் முகிலும் போல்கின்றான்; 25

  376. வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற,
    தெள்ளு நுண் பொடிபட, கடிது செல்கின்றான்;
    தள்ளு வன் கால் பொர, தரணியில் தவழ்
    வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான்; 26

  377. சம்பாதியைக் கண்டு வானரர் அஞ்சி ஓட, அனுமன் சினத்துடன் எதிர் நிற்றல்

  378. எய்தினன் - இருந்தவர் இரியல் போயினார்;
    ஐயன், அம் மாருதி, அழலும் கண்ணினான்,
    கைதவ நிசிசர! கள்ள வேடத்தை!
    உய்திகொல் இனி? எனா உருத்து, முன் நின்றான். 27

  379. சம்பாதியின் முகக் குறிப்பினால் குற்றமற்றவன் என அனுமன் உணர்தல்

  380. வெங் கதம் வீசிய மனத்தன், விம்மலன்,
    பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்,
    சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை,
    இங்கித வகையினால், எய்த நோக்கினான். 28

  381. சம்பாதி, சடாயுவைக் கொன்றவர் யார்? என வினாவுதல்

  382. நோக்கினன், நின்றனன், நுணங்கு கேள்வியான்,
    வாக்கினால் ஒரு மொழி வழங்குறாதமுன்,
    தாக்க அருஞ் சடாயுவைத் தருக்கினால் உயிர்
    நீக்கினர் யார்? அது நிரப்புவீர்! என்றான். 29

  383. சம்பாதி தன் வரலாற்றை உரைத்தல்

  384. உன்னை நீ உள்ளவாறு உரைப்பின், உற்றதைப்
    பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால்
    என்னும் மாருதி எதிர், எருவை வேந்தனும்,
    தன்னை ஆம் தன்மையைச் சாற்றல் மேவினான்: 30

  385. மின் பிறந்தாலென விளங்கு எயிற்றினாய்!
    என், பிறந்தார்க்கு இடை எய்தலாத? என்
    பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
    முன் பிறந்தேன் என முடியக் கூறினான். 31

  386. இராவணன் வாளினால் சடாயு மாண்டமை பற்றி அனுமன் உரைத்தல்

  387. கூறிய வாசகம் கேட்ட, கோது இலான்
    ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா
    ஏறினன், உணர்த்தினன், இகல் இராவணன்
    வீறிய வாளிடை விளிந்தது ஆம் என்றான். 32

  388. சம்பாதியின் புலம்பல்

  389. அவ் உரை கேட்டலும், அசனி ஏற்றினால்
    தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்;
    வெவ் உயிரா, உயிர் பதைப்ப, விம்மினான்;
    இவ் உரை, இவ் உரை, எடுத்து இயம்பினான்: 33

  390. விளையா நீள் சிறகு இன்றி வெந்து உகத்
    தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால்;
    வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு
    இளையானே! இது என்ன மாயமோ? 34

  391. மலரோன் நின்றுளன்; மண்ணும் விண்ணும் உண்டு;
    உலையா நீடு அறம் இன்னும் உண்டுஅரோ;
    நிலை ஆர் கற்பமும் நின்றது; இன்று நீ
    இலையானாய்; இது என்ன தன்மையோ? 35

  392. உடனே, அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து -
    இடு அ(ந்) நாள் வந்து இருவேமும் எய்தி, யான்;
    விட நீயே தனிச் சென்ற வீரமும்
    கடனே; - வெங் கலுழற்கும் மேன்மையாய்! 36

  393. ஒன்றா மூன்று உலகத்துளோரையும்
    வென்றான் என்னினும், வீர! நிற்கு நேர்
    நின்றானே, அவ் அரக்கன்! நின்னையும்
    கொன்றானே! இது என்ன கொள்கையோ? 37

  394. சம்பாதியை அனுமன் தேற்றுதல்

  395. என்று என்று ஏங்கி, இரங்கி, இன்னலால்
    பொன்றும் தன்மை புகுந்தபோது, அவற்கு
    ஒன்றும் சொற் கொடு உணர்ச்சி நல்கினான் -
    வன் திண் தோள் வரை அன்ன மாருதி. 38

  396. இராவணனோடு சடாயு மோதிய காரணத்தை சம்பாதி வினவ, அனுமன் விடை பகர்தல்

  397. தேற்றத் தேறி இருந்த செங்கணான்,
    கூற்று ஒப்பான், கொலை வாள் அரக்கனோடு
    ஏற்று, போர் செய்தது என் நிமித்து? என,
    காற்றின் சேய் இது கட்டுரைக்குமால்: 39

  398. எம் கோலான், அவ் இராமன், இல் உளாள்,
    செங்கோலான் மகள், சீதை செவ்வியாள்,
    வெங் கோல் வஞ்சன் விளைத்த மாயையால்,
    தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள்; 40

  399. கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக்
    கண்டான் நும்பி; அறம் கடக்கிலான்,
    வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா,
    திண் தேரான் எதிர் சென்று சீறினான். 41

  400. சீறி, தீயவன் ஏறு தேரையும்
    கீறி, தோள்கள் கிழித்து அழித்தபின்,
    தேறி, தேவர்கள் தேவன் தெய்வ வாள்
    வீற, பொன்றினன் மெய்ம்மையோன் என்றான். 42

  401. காரணம் அறிந்த சம்பாதி மகிழ்ந்து சடாயுவைப் பாராட்டுதல்

  402. விளித்தான் அன்னது கேட்டு, மெய்ம்மையோய்!
    தெளித்து ஆடத் தகு தீர்த்தன்மாட்டு, உயிர்
    அளித்தானே! அது நன்று! நன்று! எனாக்
    களித்தான் - வாரி கலுழ்ந்த கண்ணினான். 43

  403. பைந் தார் எங்கள் இராமன் பத்தினி,
    செந் தாள் வஞ்சி, திறத்து இறந்தவன்,
    மைந்தா! எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
    உய்ந்தான் அல்லது, உலந்தது உண்மையோ? 44

  404. அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
    உறவு உன்னா, உயிர் ஒன்ற ஓவினான்;
    பெற ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு
    இறவு என் ஆம்? இதின் இன்பம் யாவதோ? 45

  405. நீர்க்கடன் முடித்தபின், சம்பாதி வானரரை நோக்கி மொழிதல்

  406. என்று என்று ஏங்கி, இரங்கி, இன் புனல்
    சென்று, அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின்,
    வன் திண் தோள் வலி மாறு இலாதவன்
    துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான். 46

  407. வாழ்வித்தீர் எனை; - மைந்தர்! - வந்து, நீர்
    ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய்;
    கேள்வித் தீவினை கீறினீர்; இருள்
    போழ்வித்தீர்; உரை பொய்யின் நீங்கினீர். 47

  408. தனக்கு சிறை முளைக்க இராம நாமத்தைச் சொல்லுமாறு சம்பாதி வானரரை வேண்டுதல்

  409. எல்லீரும் அவ் இராம நாமமே
    சொல்லீர்; என் சிறை தோன்றும்; - சோர்வு இலா
    நல்லீர்! அப் பயன் நண்ணும் நல்ல சொல்
    வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்! 48

  410. இராம நாமத்தால் சம்பாதியின் சிறை முளைத்து விளங்குதல்

  411. என்றான், அன்னது காண்டும் யாம் எனா,
    நின்றார் நின்றுழி, நீல மேனியான்
    நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார்,
    வன் தோளான் சிறை வானம் தாயவே. 49

  412. சிறை பெற்றான், திகழ்கின்ற மேனியான்,
    முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் -
    நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
    உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான். 50

  413. வானரர் சம்பாதியின் முன்னைய வரலாற்றை வினவுதல்

  414. தெருண்டான் மெய்ப் பெயர் செப்பலோடும், வந்து
    உருண்டான் உற்ற பயத்தை உன்னினார்;
    மருண்டார்; வானவர் கோனை வாழ்த்தினார்;
    வெருண்டார்; சிந்தை வியந்து விம்முவார். 51

  415. அன்னானைக் கடிது அஞ்சலித்து, நீ
    முன் நாள் உற்றது முற்றும் ஓது எனச்
    சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வுற,
    தன்னால் உற்றது தான் விளம்புவான்: 52

  416. சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

  417. தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
    சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
    பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
    ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

  418. ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள,
    மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
    காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
    தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

  419. முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
    எந்தை! நீ காத்தி என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
    வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
    வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

  420. மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
    கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், சனகன் காதல்
    பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
    எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி என்றான். 56

  421. சம்பாதி இராவணன் இலங்கையில் சீதையைச் சிறைவைத்துள்ளதை தெரிவித்தல்

  422. என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, எந்தாய்!
    புன் தொழில் அரக்கன் மற்று அத் தேவியைக் கொண்டு போந்தான்,
    தென் திசை என்ன உன்னித் தேடியே வந்தும் என்றார்;
    நன்று நீர் வருந்தல் வேண்டா; நான் இது நவில்வென் என்றான். 57

  423. பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன் பற்றிப்
    போகின்ற பொழுது கண்டேன்; புக்கனன் இலங்கை; புக்கு,
    வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறையகத்து வைத்தான்;
    ஏகுமின் காண்டிர்; ஆங்கே இருந்தனள் இறைவி, இன்னும். 58

  424. ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி கடல் இலங்கை; அவ் ஊர்,
    பாச வெங் கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்;
    நீசன் அவ் அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள்
    ஏச அருங் குணத்தீர்! சேறல் எப் பரிசு இயைவது? என்றான். 59

  425. நான்முகத்து ஒருவன், மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல்,
    பால் முகப் பரவைப் பள்ளிப் பரம்பரன், பணி என்றாலும்,
    காலனுக்கேயும், சேறல் அரிது; இது காவல் தன்மை;
    மேல் உமக்கு உறுவது எண்ணிச் செல்லுமின்; - விளிவு இல் நாளீர்! 60

  426. எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று, அவ் இலங்கை மூதூர்;
    வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து அவண் ஒழுகி, வாய்மை
    சொல்லீரே துயரை நீக்கித் தோகையைத் தெருட்டி, மீள்திர்;
    அல்லீரேல், என் சொல் தேறி, உணர்த்துமின் அழகற்கு அம்மா! 61

  427. சம்பாதி விடைபெற்று செல்லுதல்

  428. காக்குநர் இன்மையால், அக் கழுகுஇனம் முழுதும் கன்றி,
    சேக்கை விட்டு, இரியல்போகித் திரிதரும்; அதனைத் தீர்ப்பான்
    போக்கு எனக்கு அடுத்த, நண்பீர்! நல்லது புரிமின் என்னா,
    மேக்கு உற விசையின் சென்றான், சிறையினால் விசும்பு போர்ப்பான். 62

  429. மிகைப் பாடல்கள்

  430. யாவரும் அவ் வயின்நின்றும், மன் இயல்
    பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
    தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
    மேவினம் என்பது விளம்பினார் அரோ. 3-1

  431. அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ,
    தென் மலைநாட்டினைத் தேடிச் சென்று, உடன்
    இன் இசைத் தலைவரோடு இரண்டு வெள்ளமும்
    மன்னு மா மயேந்திரத் தலத்து வந்ததால். 3-2

  432. தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல்
    வீழ்ந்தனென்; சிறைகள் தீய, வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும்
    போழ்ந்தன துன்பம் ஊன்ற, உயிர்ப்பொறை போற்றகில்லாது,
    ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந் தவன் எதிர்ந்து தேற்றி, 56-1

  433. கற்றிலார் போல உள்ளக் களிப்பினால் அமரர் காப்பூடு
    உற்றிடக் கருதி, மீப் போய், ஆதபத்து உனது மேனி
    முற்று அழல் முருங்க, மண்ணை முயங்கினை; இனி என்? சில் நாள்
    மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால். 56-2

  434. களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக் கபடன் வவ்வி, அன்று
    ஒளித்த வாய் துருவி உற்ற வானரர், இராம நாமம்
    விளித்திட, சிறை வந்து ஓங்கும்; வெவ்வுயிர்த்து அயரல் என்று,
    அளித்தனன்; அதனால் ஆவி ஆற்றினேன் - ஆற்றல் மொய்ம்பீர்! 56-3

  435. அன்றியும், அலருள் வைகும் அயனைநேர் முனிவன், வாய்மை
    நன்றிகொள் ஈசற் காண்பான் நணுகலும், வினையேன் உற்றது
    ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது யோகத்தின் உணர்ச்சி பேணி,
    பொன்றுதல் ஒழிமின்; யானே புகல்வது கேண்மின் என்றான். 56-4

  436. தசரத ராமன் தேவர் தவத்தினால், தாய் சொல் தாங்கி,
    கச ரத துரகம் இன்றிக் கானிடை இறுத்த காலை,
    வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடித்
    திசை திரி கவிகள் உற்றால், சிறகு பெற்று எழுதி என்ன, 56-5

  437. எம்பியும் இடரின் வீழ்வான், ஏயது மறுக்க அஞ்சி,
    அம்பரத்து இயங்கும் ஆணைக் கழுகினுக்கு அரசன் ஆனான்;
    நம்பிமீர்! ஈது என் தன்மை? நீர் இவண் நடந்தவாற்றை,
    உம்பரும் உவக்கத் தக்கீர்! உணர்த்துமின், உணர! என்றான். 56-6

  438. எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர்
    சினக் கொலை அரக்கன் மூதூர் வட திசைநின்று செல்வான்,
    நினைக்குமுன் திருவோடு அந்த நீசனை நோக்கி, எந்தை-
    தனக்கு இரை எய்திற்று என்னா, சிறகினால் தகைந்து கொண்டான். 57- 1

  439. காமத்தால் நலியப்பட்டு, கணங்குழைதன்னைக் கொண்டு
    போம் மத்தா! போகல்; எந்தை புன் பசிக்கு அமைந்தாய் என்று,
    தாமத் தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க, நீசன்
    நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி மீண்டு, எனக்குச் சொன்னான். 57-2

  440. முன்னர் அந் நிசாகர முனி மொழிந்ததும்,
    பின்னர் அச் சுபார்சுபன் பெலத்து இராவணன்-
    தன்னொடும் அமர் பொரச் சமைந்து நின்றதும்,
    கொன் இயல் சனகியைக் கொண்டு போனதும், 57-3

  441. நினைந்து சம்பாதியும், நீதி யாவையும்
    இனைந்தனன், வானரர் எவரும் கேட்கவே;
    நினைந்து, கண்ணீர் விழ, நெடிது உயிர்த்தனர்;
    வினைந்தனர், புரண்டனர்; விதியை நொந்தனர். 57-4

  442. கிட்கிந்தா காண்டம்

    17. மயேந்திரப் படலம்


    வானரர், கடலைக் கடப்போர் யார்? எனத் தமக்குள் பேசிக் கொள்ளுதல்

  443. பொய் உரைசெய்யான், புள் அரசு என்றே புகலுற்றார்,
    கை உறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரை கண்டாம்;
    உய் உரை பெற்றாம்; நல்லவை எல்லாம் உற எண்ணிச்
    செய்யுமின் ஒன்றோ, செய் வகை நொய்தின் செய வல்லீர்! 1

  444. சூரியன் வெற்றிக் காதலனோடும் சுடர் விற் கை
    ஆரியனைச் சென்றே தொழுது, உற்றது அறைகிற்பின்,
    சீர்நிலை முற்றும்; தேறுதல் கொற்றச் செயல் அம்மா;
    வாரி கடப்போர் யாவர்? என, தம் வலி சொல்வார்: 2

  445. கடல் கடக்க இயலாமை பற்றி, நீலன், அங்கதன், சாம்பன் முதலியோர் மொழிதல்

  446. மாள வலித்தேம், என்றும் இம் மாளா வசையோடும்
    மீளவும் உற்றேம்; அன்னவை தீரும் வெளி பெற்றேம்;
    காள நிறத்தோடு ஒப்புறும் இந் நேர் கடல் தாவுற்று,
    ஆளும் நலத்தீர் ஆளுமின், எம் ஆர் உயிர் அம்மா! 3

  447. நீலன் முதல் பேர், போர் கெழு கொற்ற நெடு வீரர்,
    சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை;
    வேலை கடப்பென்; மீள மிடுக்கு இன்று என விட்டான்,
    வாலி அளிக்கும் வீர வயப் போர் வசை இல்லான். 4

  448. வேதம் அனைத்தும் தேர்தர, எட்டா ஒரு மெய்யன்
    பூதலம் முற்றும் ஈர் - அடி வைத்துப் பொலி போழ்து, யான்
    மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர, மேரு
    மோத இளைத்தே தாள் உலைவுற்றேன் - விறல் மொய்ம்பீர்! 5

  449. ஆதலின், இப் பேர் ஆர்கலி குப்புற்று, அகழ் இஞ்சி
    மீது கடந்து, அத் தீயவர் உட்கும் வினையோடும்,
    சீதைதனைத் தேர்ந்து, இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று
    ஓதி இறுத்தான் - நாலுமுகத்தான் உதவுற்றான். 6

  450. அனுமனே கடல் கடத்தற்கு உரியான் எனச் சாம்பன் அங்கதனுக்கு உரைத்தல்

  451. யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து, இங்கு, இனி யாரைப்
    போம் என வைப்போம் என்பது புன்மை; புகழ் அன்றே;
    கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்றக் குமரா! நம்
    நாமம் நிறுத்திப் பேர் இசை வைக்கும் நவை இல்லோன். 7

  452. ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனாலும்,
    காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனாலும்,
    மாருதி ஒப்பார் வேறு இலை என்னா, அயன் மைந்தன்
    சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான், இவை செப்பும்: 8

  453. சாம்பன் அனுமனின் ஆண்மையைப் புகழ்ந்து பேசுதல்

  454. மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகை நாளீர்;
    நூலை நயந்து, நுண்ணிது உணர்ந்தீர்; நுவல் தக்கீர்;
    காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர்; கடன் நின்றீர்;
    ஆலம் நுகர்ந்தான் என்ன வயப் போர் அடர்கிற்பீர்; 9

  455. வெப்புறு செந் தீ, நீர், வளியாலும் விளியாதீர்;
    செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்;
    ஒப்பு உறின், ஒப்பார் நும் அலது இல்லீர்; ஒருகாலே
    குப்புறின், அண்டத்து அப் புறமேயும் குதிகொள்வீர்; 10

  456. நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி, நவை தீரச்
    சொல்லவும் வல்லீர்; காரியம் நீரே துணிவுற்றீர்;
    வெல்லவும் வல்லீர்; மீளவும் வல்லீர்; மிடல் உண்டே;
    கொல்லவும் வல்லீர்; தோள் வலி என்றும் குறையாதீர்; 11

  457. மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்;
    மாரி துளிக்கும் தாரை இடுக்கும், வர வல்லீர்;
    பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர்; பழி அற்றீர்;
    சூரியனைச் சென்று, ஒண் கையகத்தும் தொட வல்லீர்; 12

  458. அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை
    மறிந்து உருள, போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்;
    பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க
    எறிந்துழி, மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர்; 13

  459. போர்முன் எதிர்ந்தால் மூஉலகேனும் பொருள் ஆகா;
    ஓர்வு இல் வலம் கொண்டு, ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்;
    பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்,
    தேர் முன் நடந்தே, ஆரிய நூலும் தெரிவுற்றீர்; 14

  460. நீதியில் நின்றீர்; வாய்மை அமைந்தீர்; நினைவாலும்
    மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம்
    ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும்
    ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர்; 15

  461. அண்ணல் அ(ம்)மைந்தர்க்கு அன்பு சிறந்தீர்; அதனாலே
    கண்ணி உணர்ந்தீர் கருமம்; நுமக்கே கடன் என்னத்
    திண்ணிது அமைந்தீர்; செய்து முடிப்பீர்; சிதைவு இன்றால்;
    புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்; 16

  462. அடங்கவும் வல்லீர்; காலம் அது அன்றேல்; அமர் வந்தால்,
    மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர்; மதி நாடித்
    தொடங்கியது ஒன்றோ? முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்,
    இடம் கெட, வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர்; 17

  463. ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும்
    பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்
    பாண்டிதர் நீரே; பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்;
    வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர். 18

  464. ஏகுமின்; ஏகி, எம் உயிர் நல்கி, இசை கொள்ளீர்;
    ஓகை கொணர்ந்து உம் மன்னையும், இன்னல் குறைவு இல்லாச்
    சாகரம் முற்றும் தாவிடும் நீர், இக் கடல் தாவும்
    வேகம் அமைந்தீர்! என்று விரிஞ்சன் மகன் விட்டான். 19

  465. இலங்கை செல்ல அனுமன் ஒருப்பட்டுப் பேசுதல்

  466. சாம்பன் இயம்ப, தாழ் வதனத் தாமரை நாப்பண்
    ஆம்பல் விரிந்தாலன்ன சிரிப்பன், அறிவாளன்,
    கூம்பலொடும் சேர் கைக் கமலத்தன், குலம் எல்லாம்
    ஏம்பல் வர, தன் சிந்தை தெரிப்பான், இவை சொன்னான்: 20

  467. இலங்கையை இடந்து வேரொடு இவ் வயின் தருக என்றாலும்,
    விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி,
    பொலங் குழை மயிலைக் கொண்டு போது எனப் புகன்றிட்டாலும்,
    கலங்கலீர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது; காண்டிர்! 21

  468. ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக,
    ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப, இருங் கடல் இனிது தாவி,
    வாசவன் முதலோர் வந்து மலையினும், இலங்கை வாழும்
    நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல்; பின்னும், 22

  469. நீயீரே நினைவின் முன்னம், நெடுந் திரைப் பரவை ஏழும்
    தாய், உலகு அனைத்தும் வென்று, தையலைத் தருதற்கு ஒத்தீர்;
    போய், இது புரிதி! என்று, புலமை தீர் புன்மை காண்டற்கு
    ஏயினீர் என்னின், என்னின் பிறந்தவர் யாவர்? இன்னும். 23

  470. முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான், முழங்கி முந்நீர்,
    உற்றதேஎனினும், அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும்,
    இற்றை நும் அருளும், எம் கோன் ஏவலும், இரண்டு பாலும்
    கற்றை வார் சிறைகள் ஆக, கலுழனின் கடப்பல் காண்டீர்! 24

  471. அனுமன் அனைவரிடமும் விடைகொண்டு, மயேந்திர மலையின் உச்சிக்குச் செல்லுதல்

  472. ஈண்டு இனிது உறைமின், யானே எறி கடல் இலங்கை எய்தி,
    மீண்டு இவண் வருதல்காறும்; விடை தம்மின், விரைவின், என்னா,
    ஆண்டு, அவர் உவந்து வாழ்த்த, அலர் மழை அமரர் தூவ,
    சேண் தொடர் சிமயத் தெய்வ மயேந்திரத்து உம்பர்ச் சென்றான். 25

  473. கடல் தாவ அனுமன் பெரு வடிவு கொண்டு, மயேந்திரத்து நிற்றல்

  474. பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய
    பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்த்த தாள்போல்
    உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும்
    திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான். 26

  475. பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர்ப் பரிதி மைந்தன்
    போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு,
    தார் நிழல் பரப்பும் தோளான், தடங் கடல் தாவா முன்னம்,
    நீர் நிழல் உவரி தாவி இலங்கைமேல் செல்ல, நின்றான். 27

  476. பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க,
    உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி, ஊழின்
    நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்;
    மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான். 28

  477. மின் நெடுங் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப,
    தன் நெடுந் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ,
    வல் நெடுஞ் சிகர கோடி மயேந்திரம், அண்டம் தாங்கும்
    பொன் நெடுந் தூணின் பாத சிலை என, பொலிந்து நின்றான். 29

  478. மிகைப் பாடல்கள்

  479. புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி விண் போந்த பின்னர்,
    தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு அது சாம்பன் சிந்தித்து,
    உள்ளவர் தன்னில் வல்லார் யார் என உன்னி, யாண்டும்
    தள்ளரும் புகழோன் வாயுத் தனையனை நோக்கிச் செப்பும்: 29-1

  480. ஆயவன் அங்குப் போகிய பின்னர், அகமீதே
    நோய் உறு தன்மைத்து ஆகிய வீரர்தமை நோக்கி,
    தூய மனத்தன் ஆகிய வாலி தரு தொன்மைச்
    சேயும் அவர்க்கே செப்பினன், நாடும் செயல் ஓர்வான்.
    [இவ்விரு பாடல்களும் இப் படலத்தின் முதற்பாடலாக தனித்தனியே வெவ்வேறு ஏட்டில் காணப்படுகின்றன] 29-2

  481. ஆரியன் மின்னின் பேர் எழில் கூறும் அமைவாலும்,
    காரியம் உன்னால் முற்றும் எனச் சொல் கடனாலும்,
    மாருதி ஒப்பார் வேறு இலை என்னா, மனம் எண்ணி,
    சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும், என்றே 8-1

  482. நாலு மறைக்கும் வேலியும் ஆகி, நடு நிற்கும்
    சீலம் மிகுந்தீர்! திங்கள் மிலைச்சித் திகழ் வேணி,
    ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்! அது போதில்
    காலின் நிறைக்கோ காலனும் ஆகக் கடிது உற்றீர். 18-1

  483. ஆதியர் இப் புத்தேள் அடிப்பாரித்து அணவு ஆதற்கு
    ஓது கருத்தில் சால நினைத்திட்டு, ஒழிவு இல்லாப்
    போது தளத்தில் புக்கிய செய்கைத் திறனாலே
    சாதல் கெடுத்துத் தான் அழியாதீர் அதனாலே. 18-2