MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    Kamba Ramayanam yuththa kandam Part 2
    கம்பராமாயணம் யுத்த காண்டம்
    11. இராவணன் வானரத் தானை காண் படலம்
    12. மகுட பங்கப் படலம்
    13. அணி வகுப்புப் படலம்
    14. அங்கதன் தூதுப் படலம்
    15. முதற் போர் புரி படலம்
    16. கும்பகருணன் வதைப் படலம்
    17. மாய ா சனகப் படலம்
    யுத்த காண்டம்

    11. இராவணன் வானரத் தானை காண் படலம்


    கோபுரத்தின் மேல் இராவணன் நின்ற நிலை

  1. கவடு உகப் பொருத காய் களிறு அன்னான்,
    அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும்
    சுவடுடைப் பொரு இல் தோள்கொடு, அனேகம்
    குவடுடைத் தனி ஒர் குன்று என, நின்றான். 1

  2. பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும்,
    நலிந்த நங்கை எழிலால் வலி நாளும்
    மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும்
    வலிந்து செல்ல, மிசை செல்லும் மனத்தான். 2

  3. செம் பொன் மௌலி சிகரங்கள் தயங்க,
    அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக,
    வெம்பு காலினை விழுங்கிட, மேல்நாள்,
    உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான். 3

  4. தக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு
    ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும்,
    பக்கமும், நிழல் பரப்பி, வியப்பால்
    மிக்கு நின்ற குடை மீது விளங்க, 4

  5. கைத் தரும் கவரி வீசிய காலால்,
    நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில்
    தத்தி வீழ் அருவியின் திரள் சால,
    உத்தரீகம் நெடு மார்பின் உலாவ, 5

  6. வானகத்து உறும் உருப்பசி, வாசத்
    தேன் அகத் திரு திலோத்தமை, செவ் வாய்
    மேனகைக் குல அரம்பையர், மேல் ஆம்
    சானகிக்கு அழகு தந்து, அயல் சார, 6

  7. வீழியின் கனி இதழ், பணை மென் தோள்,
    ஆழி வந்த அர மங்கையர், ஐஞ்ஞூற்று -
    ஏழ் இரண்டினின் இரட்டி பயின்றோர்,
    சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற, 7

  8. முழை படிந்த பிறை முள் எயிறு, ஒள் வாள்
    இழை படிந்த இள வெண் நிலவு ஈன,
    குழை படிந்தது ஒரு குன்றில், முழங்கா
    மழை படிந்தனைய தொங்கல் வயங்க, 8

  9. ஓத நூல்கள் செவியின்வழி, உள்ளம்
    சீதை சீதை என ஆர் உயிர் தேய,
    நாத வீணை இசை நாரதனார் தம்
    வேத கீத அமுது அள்ளி விழுங்க, 9

  10. வெங் கரத்தர், அயில் வாளினர், வில்லோர்,
    சங்கரற்கும் வலி சாய்வு இல் வலத்தோர்,
    அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர்,
    பொங்கு அரத்த விழியோர் புடை சூழ, 10

  11. கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர்,
    நல் இலங்கை முதலோர், நவை இல்லோர்,
    சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர்,
    வில் இலங்கு படையோர், புடை விம்ம, 11

  12. பார் இயங்குநர், விசும்பு படர்ந்தோர்,
    வார் இயங்கு மழையின் குரல் மானும்
    பேரி, அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும்
    தூரியம், கடலின் நின்று துவைப்ப, 12

  13. நஞ்சும் அஞ்சும் விழி நாரியர், நாகர்
    வஞ்சி அஞ்சும் இடை மங்கையர், வானத்து
    அம் சொல் இன் சுவை அரம்பையர், ஆடி,
    பஞ்சமம் சிவணும் இன் இசை பாட, 13

  14. நஞ்சு கக்கி எரி கண்ணினர், நாமக்
    கஞ்சுகத்தர், கதை பற்றிய கையர்,
    மஞ்சு உகக் குமுறு சொல்லினர், வல் வாய்க்
    கிஞ்சுகத்த கிரி ஒத்தனர், கிட்ட. 14

  15. கூய் உரைப்ப குல மால் வரையேனும்,
    சாய் உரைப்ப அரியவாய தடந் தோள் -
    வாய் உரைத்த கலவைக் களி வாசம்,
    வேய் உரைப்பது என, வந்து விளம்ப, 15

  16. வேத்திரத்தர், எரி வீசி விழிக்கும்
    நேத்திரத்தர், இறை நின்றுழி நில்லாக்
    காத்திரத்தர், மனை காவல் விரும்பும்
    சூத்திரத்தர், பதினாயிரர் சுற்ற, 16

  17. இராவணன் இராமனைக் காணலும், துன்னிமித்தம் தோன்றுதலும்

  18. தோரணத்த மணி வாயில்மிசை, சூல்
    நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான்,
    ஆரணத்தை அரியை, மறை தேடும்
    காரணத்தை, நிமிர் கண் எதிர் கண்டான். 17

  19. மடித்த வாயினன்; வயங்கு எரி வந்து
    பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின்,
    இடித்த வன் திசை; எரிந்தது நெஞ்சம்;
    துடித்த, கண்ணினொடு இடத் திரள் தோள்கள். 18

  20. ஆக, ராகவனை அவ்வழி கண்டான்;
    மாக ராக நிறை வாள் ஒளியோனை
    ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும்
    வேக ராகு என, வெம்பி வெகுண்டான். 19

  21. இராவணன் வினாவும், சாரனது விடையும்

  22. ஏனையோன் இவன் இராமன் எனத் தன்
    மேனியே உரைசெய்கின்றது; வேறு இச்
    சேனை வீரர் படையைத் தெரி என்னத்
    தான் வினாவ, எதிர், சாரன் விளம்பும்: 20

  23. இங்கு இவன், படை இலங்கையர் மன்னன்
    தங்கை என்றலும், முதிர்ந்த சலத்தால்,
    அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும்
    கொங்கை, நாசி, செவி, கொய்து குறைத்தான். 21

  24. அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி,
    நிறக் கருங் கடலுள் நேமியின் நின்று,
    துறக்கம் எய்தியவரும் துறவாத
    உறக்கம் என்பதனை ஓட முனிந்தான். 22

  25. கை அவன் தொட அமைந்த கரத்தான்,
    ஐய! வாலியொடு இவ் அண்டம் நடுங்கச்
    செய்த வன் செருவினின் திகழ்கின்றான்
    வெய்யவன் புதல்வன்; யாரினும் வெய்யான். 23

  26. தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர்
    அந்தரத்தர் அமுது ஆர்கலி காண,
    மந்தரத்தினொடும் வாசுகியோடும்,
    சுந்தரப் பெரிய தோள்கள் திரித்தான். 24

  27. நடந்து நின்றவன், நகும் கதிர் முன்பு
    தொடர்ந்தவன்; உலகு, சுற்றும் எயிற்றின்
    இடந்து எழுந்தவனை ஒத்தவன்; வேலை
    கடந்தவன் சரிதை கண்டனை அன்றே? 25

  28. நீலன், நின்றவன்; நெருப்பின் மகன்; திண்
    சூலமும் கயிறும் இன்மை துணிந்தும்,
    ஆலம் உண்டவன் அடுந் திறல் மிக்கான்;
    காலன் என்பர், இவனைக் கருதாதார். 26

  29. வேறாக நின்றான், நளன் என்னும் விலங்கல் அன்னான்;
    ஏறா, வருணன் வழி தந்திலன் என்று இராமன்
    சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த, செந் தீ
    ஆறாதமுன்னம், அகன் வேலையை ஆறு செய்தான். 27

  30. முக் காலமும் மொய்ம் மதியால் முறையின் உணர்வான்,
    புக்கு ஆலம் எழப் புணரிப் புலவோர் கலக்கும்
    அக் காலம் உள்ளான், கரடிக்கு அரசு ஆகி நின்றான், -
    இக் காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான். 28

  31. சேனாபதிதன் அயலே, இருள் செய்த குன்றின்
    ஆனா மருங்கே, இரண்டு ஆடகக் குன்றின் நின்றார்,
    ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்;
    வானோர் தம் மருத்துவர் மைந்தர்; வலிக்கண் மிக்கார். 29

  32. உவன்காண் குமுதன்; குமுதாக்கனும் ஊங்கு அவன்காண்;
    இவன்காண் கவயன்; கவயாக்கனும் ஈங்கு இவன்காண்;
    சிவன்காண் அயன்காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன்
    அவன்காண், நெடுங் கேசரி என்பவன், ஆற்றல் மிக்கான். 30

  33. முரபன், நகு தோளவன், மூரி மடங்கல் என்னக்
    கர பல் நகம் அன்னவை மின் உகக் காந்துகின்றான்;
    வர பல் நகம்தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும்
    சரபன் அவன்; இவன் சதவலி ஆய தக்கோன். 31

  34. மூன்று கண் இலன் ஆயினும், மூன்று எயில் எரித்தோன்
    போன்று நின்றவன் பனசன்; இப் போர்க்கு எலாம் தானே
    ஏன்று நின்றவன் இடபன்; மற்று இவன் தனக்கு எதிரே
    தோன்றுகின்றவன் சுடேணன், மூதறிவொடு தொடர்ந்தோன். 32

  35. வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி, மேதினியை
    முதுகு நொய்து எனச் செய்தவன், கனலையும் முனிவோன்,
    கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை,
    ததிமுகன்; அவன், சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம். 33

  36. அண்ணல்! கேள்: இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ?
    விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையுள் மீனை
    எண்ணி நோக்கினும், இக் கடல் மணலினை எல்லாம்
    கண்ணி நோக்கினும், கணக்கு இலை என்றனன், காட்டி. 34

  37. இராவணன் வானரப் படையை இகழ்ந்து சிறு நகை செய்தல்

  38. சினம் கொள் திண் திறல் அரக்கனும், சிறு நகை செய்தான்,
    புனம் கொள் புன் தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்;
    வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின்
    இனங்களும் பல என் செயும், அரியினை? என்றான். 35

  39. மிகைப் பாடல்கள்

  40. ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற, எண்கினாலே
    நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலுபாலும்
    சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே
    கூறிட்ட வயிரத் திண் தோள் கொடுந் தொழில் மடங்கல் போல்வான். 27-1

  41. மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி, வானவர்களே வந்து
    உற்றனர் எனினும், பற்றி உயிர் உகப் பிசைந்திட்டு ஊத,
    கொற்றவன் அருளும் கொண்டோ ன்; குடாவடிக்கு இறைவன்; கூற்றம்
    பெற்றவன்; அடைந்தோர்தம்மை உயிர் எனப் பேணும் நீரான். 27-2

  42. ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடகக் குன்றம் ஒன்றை
    வாங்கு நீர் மகரவேலை வந்து உடன் வளைந்ததென்ன,
    ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான், வெற்றி
    ஓங்கிய குவவுத் திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன். 27-3

  43. அன்னவன் தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்
    தன்னை வந்து இடையில் சுற்ற, தட வரை என்ன நிற்பான்,
    கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும்,
    வென்னிடக் குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன். 27-4

  44. பிளக்கும் மன்பதையும், நாகர் பிலனையும்; கிளக்கும் வேரோடு
    இளக்கும் இக் குடுமிக் குன்றத்து இனம் எலாம் பிடுங்கி, ஏந்தி,
    அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு, ஆர்க்கும்
    துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார். 27-5

  45. குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சேனை
    ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற,
    மின் தொகுத்து அமைந்த போல விளக்கு எயிறு இலங்க, மேருச்
    சென்றென வந்து நிற்பான், திறல் கெழு தீர்க்கபாதன். 27-6

  46. நூற்றிரண்டாய கோடி நோன் கவித் தாளை சுற்ற,
    காற்றின் மா மகற்குக் கீழ்பால் கன வரை என்ன நிற்பான்,
    கூற்றின் மா மைந்தன்; கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்தச்
    சீற்றமே சிந்தும் செங் கண் தெதிமுகன் என்னும் சீயம். 27-7

  47. நாடில், இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ-எழுவர்
    ஆடல் வெம் படைத் தலைவர்கள் ஆறுபத்து ஏழு
    கோடி வீரர்கள், குன்று எனக் குவவிய தோளாய்!
    கூடு சேனையும் எழுபது வெள்ளமாய்க் குறிப்பார். 33-1

  48. அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர்
    ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர்
    துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர்
    எளிய புன் குரங்கு என் செயும்? என்றனன், இகலோன். 35-1

  49. யுத்த காண்டம்

    12. மகுட பங்கப் படலம்


    இராமன் வீடணனிடம் அரக்கர்களை அறிவிக்கக் கேட்டல்

  50. என்னும் வேலையின், இராவணற்கு இளவலை, இராமன்
    கன்னி மா மதில் நகர்நின்று நம் பலம் காண்பான்
    முன்னி, வானினும் மூடி நின்றார்களை, முறையால்,
    இன்ன நாமத்தர், இனையர், என்று இயம்புதி என்றான். 1

  51. வீடணன் இராவணனை முதலில் சுட்டிக் காட்டுதல்

  52. நாறு தன் குலக் கிளை எலாம் நரகத்து நடுவான்
    சேறு செய்தவன், உருப்பசி, திலோத்தமை, முதலாக்
    கூறும் மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து
    ஏறி நின்றவன், புன் தொழில் இராவணன் என்றான். 2

  53. சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்தல்

  54. கருதி மற்றொன்று கழறுதல்முனம், விழிக் கனல்கள்
    பொருது புக்கன முந்துற, சூரியன் புதல்வன், -
    சுருதி அன்ன தாய், சிவந்த நல் கனி என்று சொல்ல,
    பருதிமேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என, -பாய்ந்தான். 3

  55. சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து,
    சிதையத் திண் திறல் இராவணக் குன்றிடைச் சென்றான்,
    ததையச் செங் கரம் பரப்பிய தன் பெருந் தாதை
    உதையக் குன்றின்நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான். 4

  56. பள்ளம் போய்ப் புகும் புனல் எனப் படியிடைப் படிந்து
    தள்ளும் பொற் கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான்,
    வெள்ளம் போல் கண்ணி அழுதலும், இராவணன்மேல் தன்
    உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான். 5

  57. கரிய கொண்டலை, கருணை அம் கடலினை, காணப்
    பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர், பிறரும்,
    உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும், உலைவுற்று
    இரியல்போயின மயிற் பெருங் குலம் என இரிந்தார். 6

  58. சுக்கிரீவன், இராவணன் வினாவுக்குப் பதில் உரையாது,
    தன் கைகளால் அவன் மார்பில் குத்துதல்

  59. கால இருள் சிந்து கதிரோன் - மதலை கண்ணுற்று,
    ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி,
    நீல மலை முன் கயிலை நின்றது என, நின்றான்;
    ஆலவிடம் அன்று வர, நின்ற சிவன் அன்னான். 7

  60. இத் திசையின் வந்த பொருள் என்? என, இயம்பான்,
    தத்தி எதிர் சென்று, திசை வென்று உயர் தடந் தோள்
    பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப,
    குத்தினன் உரத்தில், நிமிர் கைத் துணை குளிப்ப. 8

  61. இருவரும் கைகலத்தல்

  62. திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான்,
    ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப,
    தரு வனம் எனப் புடை தழைத்து உயர் தடக் கை
    இருபதும் எடுத்து, உரும் இடித்தென அடித்தான். 9

  63. அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்
    பொடித்து எழ, உறுக்கி எதிர் புக்கு, உடல் பொருத்தி,
    கடுத்த விசையின் கடிது எழுந்து, கதிர் வேலான்
    முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான். 10

  64. உதைத்தவன் அடித் துணை பிடித்து, ஒரு கணத்தில்,
    பதைத்து உலைவுறப் பல திறத்து இகல் பரப்பி,
    மதக் கரியை உற்று அரி நெரித்தென மயக்கி,
    சுதைத் தலனிடை, கடிது அடிக்கொடு துகைத்தான். 11

  65. துகைத்தவன் உடற் பொறை சுறுக்கொள இறுக்கி,
    தகைப் பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி,
    வகைப் பிறை நிறத்து எயிறுடைப் பொறி வழக்கின்
    குகைப் பொழி புதுக் குருதி கைக்கொடு குடித்தான். 12

  66. கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை,
    பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி,
    மைக் கொடு நிறத்தவன் மறத்தொடு, புறத்தில்
    திக்கொடு, பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான். 13

  67. அகழியில் போர்

  68. திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி,
    பெருத்து உயர் தடக் கைகொடு அடுத்து இடை பிடித்து,
    கருத்து அழிவுற, -திரி திறத்து எயில், கணத்து அன்று
    எரித்தவனை ஒத்தவன், -எடுத்து அகழி இட்டான். 14

  69. இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான்,
    தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான்;
    ஒட்ட உடனே அவனும் வந்து, இவனை உற்றான்;
    விட்டிலர் புரண்டு இருவர், ஓர் அகழின் வீழ்ந்தார். 15

  70. விழுந்தனர், சுழன்றனர்; வெகுண்டனர், திரிந்தார்;
    அழுந்தினர், அழுந்திலர்; அகன்றிலர், அகன்றார்;
    எழுந்தனர், எழுந்திலர்; எதிர்ந்தனர் முதிர்ந்தார்;
    ஒழிந்தனர், ஒழிந்திலர்; உணர்ந்திலர்கள், ஒன்றும். 16

  71. அந்தர அருக்கன் மகன், - ஆழி அகழ் ஆக,
    சுந்தரமுடைக் கரம் வலிக் கயிறுஅது ஒப்ப,
    எந்திரம் எனத் திரி இரக்கம் இல் அரக்கன்
    மந்தரம் என, - கடையும் வாலியையும் ஒத்தான். 17

  72. ஊறு படு செம்புனல், உடைத்த கரை உற்ற
    ஆறு படர்கின்றன எனப் படர, அன்னார்,
    பாறு, பொருகின்றன பருந்து, இவை எனப்போய்,
    ஏறினர் விசும்பிடை; இரிந்த, உலகு எல்லாம். 18

  73. தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்,
    காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன்
    தாருடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்,
    ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான். 19

  74. பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில்,
    செங் கதிரவன் சிறுவனை, திரள் புயத்தால்,
    மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன்,
    வெங் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான். 20

  75. கோபுரத்தில் குதித்து, இருவரும் பொருதல்

  76. நூபுர மடந்தையர் கிடந்த அலற, நோனார்
    மா புரம் அடங்கலும் இரிந்து அயர, வன் தாள்
    மீ புர மடங்கல் என, வெங் கதிரவன் சேய்,
    கோபுரம் அடங்க இடிய, தனி குதித்தான். 21

  77. ஒன்றுற விழுந்த உருமைத் தொடர ஓடா,
    மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன,
    தின்றிடுவென் என்று எழு சினத் திறல் அரக்கன்
    பின் தொடர வந்து, இரு கரத் துணை பிடித்தான். 22

  78. வந்தவனை நின்றவன் வலிந்து, எதிர் மலைந்தான்,
    அந்தகனும் அஞ்சிட, நிலத்திடை அரைத்தான்;
    எந்திரம் எனக் கடிது எடுத்து, அவன் எறிந்தான்;
    கந்துகம் எனக் கடிது எழுந்து, எதிர் கலந்தான். 23

  79. படிந்தனர், பரந்தனர், பரந்தது ஓர் நெருப்பின்
    கொடுஞ் சினம் முதிர்ந்தனர், உரத்தின்மிசை குத்த,
    நெடுஞ் சுவர் பிளந்தன; நெரிந்த நிமிர் குன்றம்;
    இடிந்தன, தகர்ந்தன, இலங்கை மதில் எங்கும். 24

  80. செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார்,
    பிறிந்தனர் பொருந்தினர் எனத் தெரிதல் பேணார்,
    எறிந்தனர்கள், எய்தினர்கள், இன்னர் என, முன் நின்று
    அறிந்திலர், அரக்கரும்; அமர்த் தொழில் அயர்ந்தார். 25

  81. சுக்கிரீவனைக் காணாது, இராமன் இரங்கி உரைத்தல்

  82. இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின், எழிலி வண்ணன்,
    மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்,
    உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா,
    தன் உணர்வு அழிந்து, சிந்தை அலமந்து, தளர்ந்து, சாய்ந்தான். 26

  83. ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த் துணைவ! நின்னை
    இன்றியான் உளனாய் நின்று, ஒன்று இயற்றுவது இயைவது அன்றால்;
    அன்றியும், துயரத்து இட்டாய், அமரரை; அரக்கர்க்கு எல்லாம்
    வென்றியும் கொடுத்தாய்; என்னைக் கெடுத்தது உன் வெகுளி என்றான். 27

  84. தெய்வ வெம் படையும், தீரா மாயமும், வல்ல தீயோன்
    கையிடைப் புக்காய்; நீ வேறு எவ்வணம் கடத்தி, காவல்?
    வையம் ஓர் ஏழும் பெற்றால், வாழ்வெனே? வாராய் ஆகில்,
    உய்வெனே? - தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே! 28

  85. ஒன்றாக நினைய, ஒன்றாய் விளைந்தது, என் கருமம்; அந்தோ!
    என்றானும், யானோ வாழேன்; நீ இலை எனவும் கேளேன்;
    இன்று ஆய பழியும் நிற்க, நெடுஞ் செருக் களத்தின் என்னைக்
    கொன்றாயும் நீயே - உன்னைக் கொல்லுமேல், குணங்கள் தீயோன். 29

  86. இறந்தனை என்ற போதும் இருந்து, யான் அரக்கர் என்பார்
    திறம்தனை உலகின் நீக்கி, பின் உயிர் தீர்வென் என்றால்,
    புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை
    மறந்தனன்; வலியன் என்பார்; ஆதலால், அதுவும் மாட்டேன். 30

  87. அழிவது செய்தாய், ஐய! அன்பினால்; அளியத்தேனுக்கு
    ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன்;
    எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி,
    செழு நகர் அடைந்த போழ்தும், இத் துயர் தீர்வது உண்டோ ? 31

  88. சுக்கிரீவன் இராவணனது மகுட மணிகளைப் பறித்துக்கொண்டு வருதல்

  89. என்று அவன் இரங்கும் காலத்து, இருவரும் ஒருவர்தம்மின்
    வென்றிலர் தோற்றிலாராய், வெஞ் சமம் விளைக்கும் வேலை,
    வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி,
    பொன்றினென் ஆகின், நன்று என்று அவன் வெள்க, இவனும் போந்தான். 32

  90. கொழு மணி முடிகள்தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம்
    அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமரச் சூட்டி,
    தொழுது, அயல் நாணி நின்றான்; தூயவர் இருவரோடும்
    எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே. 33

  91. இராமன் சுக்கிரீவனைத் தழுவி, கண்ணீர் சொரிந்து,
    தன் அன்பை வெளியிட்டுப் பேசுதல்

  92. என்பு உறக் கிழிந்த புண்ணின் இழி பெருங் குருதியோடும்
    புன் புலத்து அரக்கன் தன்னைத் தீண்டிய புன்மை போக,
    அன்பனை அமரப் புல்லி, மஞ்சனம் ஆட்டி விட்டான்,
    தன் பெரு நயனம் என்னும் தாமரைத் தடத்து நீரால். 34

  93. ஈர்கின்றது அன்றே, என்றன் உள்ளத்தை; இங்கும் அங்கும்
    பேர்கின்றது ஆவி; யாக்கை பெயர்கின்றது இல்லை; பின்னை,
    தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை? என்று, தெண் நீர்
    சோர்கின்ற அருவிக் கண்ணான் துணைவனை நோக்கிச் சொல்லும்: 35

  94. கல்லினும் வலிய தோளாய்! நின்னை அக் கருணை இல்லோன்
    கொல்லுதல் செய்தான் ஆகின், கொடுமையால் கொற்றம் பேணி,
    பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி,
    வெல்லினும், தோற்றேன் யானே அல்லெனோ, விளிந்திலாதேன்? 36

  95. பெருமையும் வண்மைதானும், பேர் எழில் ஆண்மைதானும்,
    ஒருமையின் உணர நோக்கின், பொறையினது ஊற்றம் அன்றே!
    அருமையும், அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும்!
    இருமையும் கெடுக்கலுற்றாய்; என் நினைந்து, என் செய்தாய் நீ! 37

  96. இந் நிலை விரைவின் எய்தாது, இத் துணை தாழ்த்தி ஆயின்,
    நல் நுதல் சீதையால் என்? ஞாலத்தால் பயன் என்? நம்பீ!
    உன்னை யான் தொடர்வல்; என்னைத் தொடரும் இவ் உலகம்; என்றால்,
    பின்னை என், இதனைக் கொண்டு? விளையாடி, பிழைப்ப செய்தாய்! 38

  97. சுக்கிரீவனது மறு மொழி

  98. காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன்;
    நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்;
    கேட்டிலேன் அல்லேன்; இன்று கண்டும், அக் கிளி அனாளை
    மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங் கை வந்தேன். 39

  99. வன் பகை நிற்க, எங்கள் வானரத் தொழிலுக்கு ஏற்ற
    புன் பகை காட்டும் யானோ புகழ்ப் பகைக்கு ஒருவன் போலாம்?
    என் பகை தீர்த்து, என் ஆவி அரசொடும் எனக்குத் தந்த
    உன் பகை உனக்கே தந்தேன்; உயிர் சுமந்து உழலா நின்றேன். 40

  100. செம்புக்கும் சிவந்த செங் கண் திசை நிலைக் களிற்றின் சீற்றக்
    கொம்புக்கும் குறைந்தது உண்டே, என்னுடைக் குரக்குப் புன் தோள்?
    அம்புக்கு முன்னம் சென்று, உன் அரும் பகை முடிப்பல் என்று
    வெம்புற்ற மனமும், யானும், தீது இன்றி, மீள வந்தேன். 41

  101. நூல் வலி காட்டும் சிந்தை நும் பெருந் தூதன், வெம் போர்
    வேல் வலி காட்டினார்க்கும், வில் வலி காட்டினார்க்கும்,
    வால் வலி காட்டிப் போந்த வள நகர் புக்கு, மற்று என்
    கால் வலி காட்டிப் போந்தேன்; கை வலிக்கு அவதி உண்டோ ? 42

  102. வீடணன் சுக்கிரீவனது வீரத்தைப் பாராட்டுதல்

  103. இன்னன பலவும் பன்னி, இறைஞ்சிய முடியன் நாணி,
    மன்னவர்மன்னன் முன்னர், வானர மன்னன் நிற்ப,
    அன்னவன் தன்னை நோக்கி, ஆழியான் அறிவதாக,
    மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் விளம்பலுற்றான்; 43

  104. வாங்கிய மணிகள், அன்னான் தலைமிசை மௌலி மேலே
    ஓங்கிய அல்லவோ? மற்று, இனி அப்பால் உயர்ந்தது உண்டோ?
    தீங்கினன் சிரத்தின் மேலும், உயிரினும், சீரிது அம்மா!
    வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய்! 44

  105. பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின்,
    வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா,
    தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த
    வீரதை விடைவலோற்கும் முடியுமோ? வெறும் உண்டோ? 45

  106. கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள்,
    பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி, பறித்திட்டாலும், -
    தரு மணி இமைக்கும் தோளாய்! - தசமுகன் முடியில் தைத்த
    திரு மணி பறித்துத் தந்த வென்றியே சீரிது அன்றோ? 46

  107. தொடி மணி இமைக்கும் தோளாய்! - சொல் இதின் வேறும் உண்டோ?
    வடி மணி வயிர வெவ் வாள் சிவன்வயின் வாங்கிக் கொண்டான்
    முடி மணி பறித்திட்டாயோ? இவன் இனி முடிக்கும் வென்றிக்கு
    அடி மணி இட்டாய் அன்றே? - அரிக் குலத்து அரச! என்றான். 47

  108. இராமனும் சுக்கிரீவனது வெற்றியைப் போற்றுதல்

  109. வென்றி அன்று என்றும், வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க
    நன்றி அன்று என்றும், அன்று; நானிலம் எயிற்றில் கொண்ட
    பன்றி அன்று ஆகின், ஈது ஆர் இயற்றுவார் பரிவின்? என்னா,
    இன்று இது வென்றி என்று என்று, இராமனும் இரங்கிச் சொன்னான். 48

  110. சூரியனின் மறைவு

  111. தன் தனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில் தைத்த
    மின் தளிர்த்தனைய பல் மா மணியினை வெளியில் கண்டான்;
    ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று, அவ் அரக்கனுக்கு ஒளிப்பான் போல,
    வன் தனிக் குன்றுக்கு அப்பால், இரவியும் மறையப் போனான். 49

  112. இராமனும் இராவணனும் தத்தம் இருக்கை சேர்தல்

  113. கங்குல் வந்து இறுத்த காலை, கை விளக்கு எடுப்ப, காவல்
    வெங் கழல் அரக்கன் மௌலிமிசை மணி விளக்கம் செய்ய,
    செங் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறையத் தேக்கிப்
    பொங்கிய தோளினானும், இழிந்து போய், இருக்கை புக்கான். 50

  114. என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன்,
    நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள,
    அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக,
    பொன்றாது பொன்றினான், தன் புகழ் என இழிந்து, போனான். 51

  115. மிகைப் பாடல்கள்

  116. பிடித்தவன் விழித் துணை பிதுங்கிட நெருக்கி,
    இடித்து அலம்வரக் கதறி எய்த்திட, இரங்காது
    அடிக் கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால்
    எடுத்து உக, இராவணன் எறிந்து, இகலின் ஆர்த்தான். 22-1

  117. எறிந்திட விழுந்து, இரவி சேய் அறிவு சோர்வுற்று,
    அறிந்ததொர் இமைப்பளவில் ஆகமது தேறி,
    பிறிந்திலன் எனத் தொனி பிறந்திட, மருங்கில்
    செறிந்து, அமர் அரக்கனொடு செய்வென்! என வந்தான். 22-2

  118. என இவை அமலன் கூற, இரு கையும் எடுத்துக் கூப்பி,
    மனம் மிக நாணி, ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான்,
    பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும் பணிந்து நின்றே,
    அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான். 38-1

  119. என்றனன்; என்றலோடும், இணை அடி இறைஞ்சி, ஆங்கு,
    குன்று உறழ் குவவுத் திண் தோள் கொற்ற வல் வீரற் காண,
    தன் தனி உள்ள நாணால் தழல் விழிக் கொலை வெஞ் சீயம்
    நின்றென, எருத்தம் கோட்டி, நிலனுற நோக்கிக் கூறும். 38-2

  120. ஏர் அணி மாட கூடம் இலங்கிய இலங்கை வேந்தை
    காரணம் ஆக வாலால் கட்டிய வாலி, அன்றிப்
    போரணம் ஆளும் அம்பால் புடைத்த மால் பாதம் போற்றி
    காரணச் சுடரோன் மைந்தன் தலைவனை வணங்கிச் சொல்லும். 38-3

  121. இரவி போய் மறையும் முன்பு, அங்கு இராமனும், இலங்கை நின்ற
    வரை இழிந்து, அனைவரோடும் வந்து, தன் இருக்கை எய்தி,
    நிருதர்தம் குலத்தை எல்லாம் நீறு எழப் புரியுமாறே
    பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்துக் கொண்டாம். 49-1

  122. தெய்வத் தாமரையோன் ஆகி யாவையும் தெரியக் காட்டி,
    மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பிக் காத்து,
    சைவத்தன் ஆகி, யாவும் தடிந்திடும் செயலின் மேவும்
    கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே, யாம். 49-2

  123. பூசலைக் குறித்து இராமன், பொரும் கவிச் சேனை வெள்ளம்
    மாசு அற வகுத்து, நாலு திக்கினும் வளையச் செய்து,
    பாசமுற்றுடைய நண்பின் படைத் துணையவர்களோடும்
    பாசறை இருந்தான்; அந்தப் பதகனும் இழிந்து போனான். 49-3

  124. யுத்த காண்டம்

    13. அணி வகுப்புப் படலம்


    இராவணன் மானத்தால் வருந்தி படுக்கையில் சயனித்திருத்தல்

  125. மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான், வதனம் எல்லாம்
    கூனல் தாமரையின் தோன்ற, வான் தொடும் கோயில் புக்கான்,
    பானத்தான் அல்லன்; தெய்வப் பாடலான் அல்லன்; ஆடல்
    தானத்தான் அல்லன்; மெல்லென் சயனத்தான்; உரையும் தாரான். 1

  126. வை எயிற்றாலும், நேரா மணி இழந்து இரங்கலாலும்,
    பையுயிர்த்து அயரும் பேழ் வாய்ப் பல் தலைப் பரப்பினாலும்,
    மெய்யனை, திரையின் வேலை மென் மலர்ப் பள்ளி ஆன
    ஐயனை, பிரிந்து வைகும் அனந்தனே - அரக்கர் வேந்தன். 2

  127. சார்த்தூலன் என்ற ஒற்றனின் வரவை வாயில் காவலர் இராவணனுக்கு உரைத்தல்

  128. தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
    மாய வல் உருவத்தான் முன் வருதலும், வாயில் காப்பான்,
    சேயவர் சேனை நண்ணி, செய் திறம் தெரித்தி நீ என்று
    ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சிச் சொன்னான். 3

  129. இராவணனது வினாவும், சார்த்தூலன் மறுமொழியும்

  130. அழை என, எய்தி, பாதம் வணங்கிய அறிஞன் தன்னை,
    பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச,
    முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி,
    குழையுறு மெய்யன், பைய, வரன்முறை கூறலுற்றான்: 4

  131. வீரிய! விரைவின் எய்தி, பதினெழு வெள்ளத்தோடும்,
    மாருதி, மேலை வாயில் உழிஞைமேல் வருவதானான்;
    ஆரியன், அமைந்த வெள்ளம் அத்தனையோடும், வெற்றிச்
    சூரியன் மகனைத் தன்னைப் பிரியலன் நிற்கச் சொன்னான். 5

  132. அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன் மைந்தன்,
    தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்;
    ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும்
    நின்றனன், நீலன் என்பான், குண திசை வாயில் நெற்றி. 6

  133. இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு, இரண்டு வெள்ளம்
    வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்;
    உம்பியை, வாயில்தோறும் நிலை தெரிந்து உணர்த்தச் சொன்னான்:
    தம்பியும் தானும் நிற்பதாயினான்; சமைவு ஈது என்றான். 7

  134. இராவணன் மந்திரிமாருடன் ஆலோசனை செய்தல்

  135. சார்த்தூலன் இதனைச் சொல்ல, தழல் சொரி தறுகணானும்,
    பார்த்து, ஊழி வடவை பொங்க, படுவது படுமா பார்த்தி;
    போர்த் தூளி துடைப்பென் நாளை, அவர் உடற் பொறையின் நின்றும்
    தேர்த்து ஊறும் குருதிதன்னால் என்றனன், எயிறு தின்னா. 8

  136. மா அணை நீலக் குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன,
    தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த தோளான்,
    ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற
    பூ அணை மாற்றி, வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான். 9

  137. செய்வன முறையின் எண்ணி, திறத்திறம் உணர்வினை தேர,
    மை அறு மரபின் வந்த அமைச்சரை, வருக! என்றான் -
    பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தைச் சுற்றி,
    ஐ - இரண்டு ஆய கோடிப் பேய்க் கணம் காப்பது ஆக்கி. 10

  138. இராவணனது வினா

  139. அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி,
    வளைந்தது குரங்கின் சேனை, வாயில்கள் தோறும் வந்து;
    விளைந்தது பெரும் போர் என்று விட்டது; விடாது, நம்மை;
    உளைந்தனம்; என்ன எண்ணி, என் செயற்கு உரிய? என்றான். 11

  140. நிகும்பன் எதிரியை இகழ்ந்து கூறுதல்

  141. எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்
    தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்;
    அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே?
    உழிஞையைத் துடைக்க, நொச்சி உச்சியில் கொண்டது, உன் ஊர். 12

  142. எழு, மழு, தண்டு, வேல், வாள், இலை நெடுஞ் சூலம், என்று இம்
    முழு முதற் படைகள் ஏந்தி, இராக்கதர் முனைந்த போது,
    தொழுது தம் படைகள் கைவிட்டு, ஓடுவார் சுரர்கள் என்றால்,
    விழுமிது, குரங்கு வந்து வெறுங் கையால் கொள்ளும் வென்றி! 13

  143. மாதுலத் தலைவனான மாலி கூறுதல்

  144. ஈது இவண் நிகழ்ச்சி என்னா, எரி விழித்து, இடியின் நக்கு,
    பூதலத்து அடித்த கையன், நிகும்பன், என்று ஒருவன் பொங்க,
    வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா,
    மாதுலத் தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான்: 14

  145. புக்கு எரி மடுத்து, இவ் ஊரைப் பொடி செய்து போயினாற்குச்
    சக்கரம் உண்டோ? கையில் தனு உண்டோ? வாளி உண்டோ?
    இக் கிரி பத்தின் மௌலி இன மணி அடங்கக் கொண்ட
    சுக்கிரீவற்கும் உண்டோ , சூலமும் வேலும் வாளும்? 15

  146. தொடைக் கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர், தோன்றா
    இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள் தன்னை ஈந்து,
    படைக்கலம் உடைய நாம், அப் படை இலாப் படையை, ஈண்ட
    அடைக்கலம் புகுவது அல்லால், இனிப் புகும் அரணும் உண்டோ? 16

  147. இராவணன் மாலியைக் கடிந்து கூற, அவன் பேசாதிருத்தல்

  148. என்புழி மாலிதன்னை எரி எழ நோக்கி, என்பால்
    வன் பழி தருதி போலாம்; வரன்முறை அறியா வார்த்தை,
    அன்பு அழி சிந்தைதன்னால், அடாதன அறையல் என்றான்,
    பின் பழி எய்த நின்றான்; அவன் பின்னைப் பேச்சு விட்டான். 17

  149. சேனையை அணிவகுக்குமாறு இராவணன் ஆணையிடல்

  150. காட்டிய காலகேயர் கொழு நிணக் கற்றை காலத்
    தீட்டிய படைக் கை வீரச் சேனையின் தலைவ! தெள்ளி
    ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு,
    கீட்டிசை வாயில் நிற்றி, நின் பெருங் கிளைகளோடும். 18

  151. காலன்தன் களிப்புத் தீர்த்த மகோதர! காலையே போய்,
    மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும்
    கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி - வெள்ளம் ஆன
    நால் - ஐம்பதோடும் சென்று, நமன் திசை வாயில் நண்ணி. 19

  152. ஏற்றம் என், சொல்லின் என்பால்? இந்திரன்பகைஞ! - அந் நாள்
    காற்றினுக்கு அரசன் மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ?
    நூற்று - இரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற,
    மேல் திசை வாயில் சேர்தி, விடிவதின் முன்னம் - வீர! 20

  153. இந் நெடுங் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய்;
    புன் நெடுங் குரங்கின் சேரல் புல்லிது; புகழும் அன்றால்;
    அந் நெடு மூலத்தானை அதனொடும், அமைச்சரோடும்,
    தொல் நெடு நகரி காக்க - விரூபாக்க! என்னச் சொன்னான். 21

  154. கட கரி புரவி ஆள் தேர், கமலத்தோன் உலகுக்கு இப்பால்
    புடை உள பொருது, கொண்டு, போர் பெறாப் பொங்குகின்ற
    இடை இடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு,
    வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான். 22

  155. சூரியன் தோன்றுதல்

  156. கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் - காணும்
    நலம் கிளர் தேவர்க்கேயோ, நான் மறை முனிவர்க்கேயோ,
    பொலம் கெழு சீதைக்கேயோ, பொரு வலி இராமற்கேயோ,
    இலங்கையர் வேந்தற்கேயோ, - எல்லார்க்கும் செய்தது இன்பம். 23

  157. அளித் தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி,
    வெளிப்படல் அரிது என்று உன்னி, வேதனை உழக்கும் வேலை,
    களித்தவற் களிப்பு நீக்கி, காப்பவர் தம்மைக் கண்ணுற்று,
    ஒளித்தவர் வெளிப்பட்டென்ன, - கதிரவன் உதயம் செய்தான். 24

  158. வானர சேனை இலங்கை மதிலை முற்றும் வளைத்தல்

  159. உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்கத் தூர்ப்ப,
    அளப்ப அருந் தூளிச் சுண்ணம் ஆசைகள் அலைக்க, பூசல்
    இளைப்ப அருந் தலைவர், முன்னம் ஏவலின், எயிலை முற்றும்
    வளைத்தனர், விடிய, தத்தம் வாயில்கள்தோறும் வந்து. 25

  160. தந்திரம் இலங்கை மூதூர் மதிலினைத் தழுவித் தாவி,
    அந்தரக் குல மீன் சிந்த, அண்டமும் கிழிய ஆர்ப்ப,
    செந் தனிச் சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல,
    இந்திரன் தொழுது வாழ்த்த, இராமனும் எழுந்து சென்றான். 26

  161. அரக்கர் சேனையை வளைத்தல்

  162. நூற் கடல் புலவராலும் நுனிப்ப அரும் வலத்தது ஆய
    வேற் கடல் - தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும்,
    கார்க் கடல் புறத்தது ஆக, கவிக் கடல் வளைந்த காட்சி,
    பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது, அப் பதகன் மூதூர். 27

  163. அலகு இலா அரக்கன் சேனை அகப்பட, அரியின் தானை,
    வலைகொலாம் என்ன, சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின்,
    கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து
    உலகு எலாம் ஒருங்கு கூடி, ஒதுங்கினவேயும் ஒக்கும். 28

  164. மிகைப் பாடல்கள்

  165. இறைவன் மற்று இதனைக் கூற, எறுழ் வலி அமைச்சர் பொங்கி,
    பிறை முடிப் பரமனோடும் பெரு வரை எடுத்த மேலோய்!
    உறு சமர்க்கு எம்மைக் கூவி, ஏவிடாதொழிந்தாய்; யாமும்
    சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும் தாழ்த்தது என்றார். 11-1

  166. அமைச்சர் மற்று இதனைக் கூறி, அரச! நீ விடைதந்தீமோ?
    இமைப்பிடைச் சென்று, வந்த குரங்குஇனப் படையை எல்லாம்
    கமைப்பு அறக் கடிது கொன்றே களைகுவம் என்ற போதில்,
    சுமைத் தட வரைத் தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான்: 12-1

  167. எரி நெருப்பு என்னப் பொங்கி, இராவணன் என்னும் மேலோன்
    உரை செறி அமைச்சரோடும், உறு படைத் தலைவரோடும்,
    கரி, பரி, இரதம், காலாள், கணக்கு அறும் வெள்ளச் சேனை
    மருவுற, திசை நான்கு உம்பர் வகுத்து, அமர் புரியச் சொன்னான். 17-1

  168. இம் முறை அரக்கர் கோமான் அணி வகுத்து, இலங்கை மூதூர்,
    மும் மதில் நின்ற தானை நிற்க, மூதமைச்சரோடும்
    விம்முறு சேனை வெள்ளத் தலைவர்க்கு விடையும் நல்கி,
    கம்மெனக் கமழும் வாச மலர் அணை கருகச் சேர்ந்தான். 22-1

  169. யுத்த காண்டம்

    14. அங்கதன் தூதுப் படலம்


    இராவணனது வருகையைக் காணாது, இராமன் தூது போக்குதல் குறித்து,
    வீடணனுக்கு உரைத்தல்

  170. வள்ளலும் விரைவின் எய்தி, வட திசை வாயில் முற்றி,
    வெள்ளம் ஓர் ஏழு - பத்துக் கணித்த வெஞ் சேனையோடும்,
    கள்ளனை வரவு நோக்கி, நின்றனன், காண்கிலாதான்,
    ஒள்ளியது உணர்ந்தேன் என்ன, வீடணற்கு உரைப்பதானான்: 1

  171. தூதுவன் ஒருவன்தன்னை இவ் வழி விரைவில் தூண்டி
    மாதினை விடுதியோ? என்று உணர்த்தவே, மறுக்கும் ஆகின்,
    காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும் அஃதே;
    நீதியும் அஃதே என்றான் - கருணையின் நிலயம் அன்னான். 2

  172. வீடணன் முதலியோர் இராமன் கருத்தை வரவேற்க, இலக்குவன் மறுத்தல்

  173. அரக்கர் கோன் அதனைக் கேட்டான், அழகிற்றே ஆகும் என்றான்;
    குரக்கினத்து இறைவன் நின்றான், கொற்றவர்க்கு உற்றது என்றான்;
    இரக்கமது இழுக்கம் என்றான், இளையவன்; இனி, நாம் அம்பு
    துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ ? என்னச் சொன்னான். 3

  174. தேசருக்கு இடுக்கண் செய்தான்; தேவியைச் சிறையில் வைத்தான்;
    பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்; மன்னுயிர் புடைத்துத் தின்றான்;
    ஆசையின் அளவும், எல்லா உலகமும் தானே ஆள்வான்,
    வாசவன் திருவும் கொண்டான்; வழி அலா வழிமேல் செல்வான். 4

  175. வாழியாய்! நின்னை அன்று வரம்பு அறு துயரின் வைக,
    சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து, உன் துணைவியைப் பிரிவு செய்தான்;
    ஏழையாள் இடுக்கண் நோக்கி, ஒரு தனி இகல்மேல் சென்ற,
    ஊழி காண்கிற்கும் வாழ்நாள், உந்தையை உயிர் பண்டு உண்டான். 5

  176. அன்னவன் தனக்கு, மாதை விடில், உயிர் அருளுவாயேல்,
    என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர்
    மன்னவன் நீயே என்று, வந்து அடைந்தவற்கு வாயால்
    சொன்ன சொல் என் ஆம்? முன்னம் சூளுறவு என் ஆம்? - தோன்றால்! 6

  177. அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால், அவற்றை முற்றும்
    மறந்தனை எனினும், மற்று இவ் இலங்கையின் வளமை நோக்கி,
    இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும், எண்ணின்,
    சிறந்தது போரே? என்றான்; சேவகன் முறுவல் செய்தான். 7

  178. தூது அனுப்புவது நீதி நூல் முறை என இராமன் உரைத்தல்

  179. அயர்த்திலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
    நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
    புயத் துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
    சயத் துறை; அறனும் அஃதே என்று இவை சமையச் சொன்னான். 8

  180. அங்கதனைத் தூது செல்ல இராமன் பணித்தல்

  181. மாருதி இன்னம் சொல்லின், மற்று இவன் அன்றி வந்து
    சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே;
    ஆர், இனி ஏகத் தக்கார்? அங்கதன் அமையும்; ஒன்னார்
    வீரமே விளைப்பரேனும், தீது இன்றி மீள வல்லான். 9

  182. நன்று என, அவனைக் கூவி, நம்பி! நீ நண்ணலார்பால்
    சென்று, உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான்;
    அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்
    குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமோ? 10

  183. என் அவற்கு உரைப்பது? என்ன, ஏந்திழையாளை விட்டுத்
    தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்று எனின், தலைகள் பத்தும்
    சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல் நன்றோ?
    சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக! எனச் சொல்லிடு என்றான். 11

  184. அறத் துறை அன்று, வீரர்க்கு அழகும் அன்று, ஆண்மை அன்று,
    மறத் துறை அன்று, சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்;
    நிறத்து உற வாளி கோத்து, நேர் வந்து நிற்கும் ஆகின்,
    புறத்து உற எதிரே வந்து போர் தரப் புகல்தி என்றான். 12

  185. அங்கதன் விண்வழிச் சென்று, இராவணன் இருக்கை புகுதல்

  186. பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வது என்ன,
    வீரன் வெஞ் சிலையில் கோத்த அம்பு என, விசையின் போனான்,
    மாருதி அல்லன் ஆகின், நீ எனும் மாற்றம் பெற்றேன்;
    யார் இனி என்னோடு ஒப்பார்? என்பதோர் இன்பம் உற்றான். 13

  187. அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரைக் கடக்க, ஆழித்
    துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன்,
    வெயில் கடந்திலாத காவல், மேருவின் மேலும் நீண்ட,
    எயில் கடந்து, இலங்கை எய்தி, அரக்கனது இருக்கை புக்கான். 14

  188. இராவணன் ஆற்றலை அங்கதன் வியத்தல்

  189. அழுகின்ற கண்ணர் ஆகி, அனுமன் கொல்? என்ன அஞ்சித்
    தொழுகின்ற சுற்றம் சுற்ற, சொல்லிய துறைகள் தோறும்
    மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்தொறும் செவியின் மூழ்க,
    எழுகின்ற சேனை நோக்கி, இயைந்து இருந்தானைக் கண்டான். 15

  190. கல் உண்டு; மரம் உண்டு; ஏழைக்கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
    சொல் உண்டே; இவனை வெல்லத் தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ?
    எல்லுண்ட படை கைக் கொண்டால் எதிர் உண்டே? இராமன் கையில்
    வில் உண்டேல், உண்டு என்று எண்ணி, ஆற்றலை வியந்து நின்றான். 16

  191. இன்று இவன் தன்மை எய்த நோக்கினால், எதிர்ந்த போரில்
    வென்ற என் தாதை மார்பில் வில்லின்மேல் கணை ஒன்று ஏவிக்
    கொன்றவன் தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால்,
    ஒன்று இவன் தன்னைச் செய்ய வல்லரோ, உயிர்க்கு நல்லார்? 17

  192. அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்மேல் வைத்த காதல்
    பிணி பறித்து, இவனை யாவர் முடிப்பவர், படிக்கண்? பேழ் வாய்ப்
    பணி பறித்து எழுந்த மானக் கலுழனின், இவனைப் பற்றி,
    மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான். 18

  193. அங்கதன் இராவணனை அடுத்து நிற்றல்

  194. நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணி,
    கடுங் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி,
    விடும் சுடர் மகுடம் மின்ன, விரி கடல் இருந்தது அன்ன
    கொடுந் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று, குறுகி நின்றான். 19

  195. இராவணன்-அங்கதன் உரையாடல்

  196. நின்றவன் தன்னை, அன்னான் நெருப்பு எழ நிமிரப் பார்த்து, இங்கு,
    இன்று, இவண் வந்த நீ யார்? எய்திய கருமம் என்னை?
    கொன்று இவர் தின்னாமுன்னம் கூறுதி, தெரிய என்றான்;
    வன் திறல் வாலி சேயும், வாள் எயிறு இலங்க நக்கான். 20

  197. அங்கதன் தன்னை யாரென அறிவித்தல்

  198. பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், இப் பூமேல்
    சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
    வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், தான் விட்ட
    தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான். 21

  199. இராவணன் இகழ்ந்துரைத்தல்

  200. அரன்கொலாம்? அரிகொலாம்? மற்று அயன்கொலாம்? என்பார் அன்றி,
    குரங்கு எலாம் கூட்டி, வேலைக் குட்டத்தைச் சேது கட்டி,
    இரங்குவான் ஆகில், இன்னம் அறிதி என்று உன்னை ஏவும்
    நரன்கொலாம், உலக நாதன் என்று கொண்டு, அரக்கன் நக்கான். 22

  201. கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து நேமி
    சங்கமும் தரித்த மால், மற்று இந் நகர் தன்னைச் சாரார்;
    அங்கு அவர் நிலைமை நிற்க, மனிசனுக்காக, அஞ்சாது,
    இங்கு வந்து இதனைச் சொன்ன தூதன் நீ யாவன்? என்றான். 23

  202. அங்கதனின் பதில் உரை

  203. இந்திரன் செம்மல், பண்டு, ஓர் இராவணன் என்பான் தன்னைச்
    சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி,
    சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் உண்ண
    மந்தரப் பொருப்பால் வேலை கலக்கினான், மைந்தன் என்றான். 24

  204. உந்தை என் துணைவன் அன்றே? ஓங்கு அறச் சான்றும் உண்டால்;
    நிந்தனை இதன்மேல் உண்டோ , நீ அவன் தூதன் ஆதல்?
    தந்தனென் நினக்கு யானே வானரத் தலைமை; தாழா
    வந்தனை; நன்று செய்தாய், என்னுடை மைந்த! என்றான். 25

  205. தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இரு கை நாற்றி,
    பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்;
    சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்;
    ஏது எனக்கு அரியது? என்றான் - இறுதியின் எல்லை கண்டான். 26

  206. அந் நரர் இன்று, நாளை, அழிவதற்கு ஐயம் இல்லை;
    உன் அரசு உனக்குத் தந்தேன்; ஆளுதி, ஊழிக் காலம்;
    பொன் அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி செய்ய,
    மன்னவன் ஆக, யானே சூட்டுவென், மகுடம் என்றான். 27

  207. அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கை தாக்கி,
    துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க, நக்கான்;
    இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி,
    உங்கள்பால் நின்றும் எம்பால் போந்தனன், உம்பி என்றான். 28

  208. வாய் தரத்தக்க சொல்லி, என்னை உன் வசஞ்செய்வாயேல்,
    ஆய்தரத் தக்கது அன்றோ, தூது வந்து அரசது ஆள்கை?
    நீ தரக் கொள்வென் யானே? இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்,
    நாய் தரக் கொள்ளும் சீயம், நல் அரசு! என்று நக்கான். 29

  209. அடுவெனே என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன், அந்தோ!
    தொடுவெனே, குரங்கைச் சீறிச் சுடர்ப் படை? என்று, தோன்றா
    நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்குத் தூத!
    படுவதே துணிந்தாய் ஆகில், வந்தது பகர்தி என்றான். 30

  210. கூவி இன்று என்னை, நீ போய், தன் குலம் முழுதும் கொல்லும்
    பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்குப் பதுங்கினானை,
    தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து எதிர்ந்து, தன்கண்
    ஆவியை விடுக! என்றான், அருள் இனம் விடுகிலா தான். 31

  211. பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள், படைஞரோடும்
    மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள், வனத்துள் வைகி
    இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி
    அரிந்த நாள், வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை உண்டோ? 32

  212. கிளையொடும் படைஞரோடும், கேடு இலா உயிர்கட்கு எல்லாம்
    களை என, தம்பிமாரை வேரொடும் களையக் கண்டும்,
    இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை வெளவும்
    வளை எயிற்று அரக்கன், வெம் போர்க்கு, இனி எதிர் வருவது உண்டோ? 33

  213. ஏந்திழை தன்னைக் கண்ணுற்று, எதிர்ந்தவர் தம்மை எற்றி,
    சாந்து எனப் புதல்வன் தன்னைத் தரையிடைத் தேய்த்து, தன் ஊர்
    காந்து எரி மடுத்து, தானும் காணவே, கடலைத் தாவிப்
    போந்த பின், வந்திலாதான் இனிப் பொரும் போரும் உண்டோ? 34

  214. உடைக் குலத்து ஒற்றர்தம்பால் உயிர் கொடுத்து உள்ளக் கள்ளம்
    துடைத்துழி, வருணன் வந்து தொழுதுழி, தொழாத கொற்றக்
    குடைத் தொழில் உம்பி கொள்ளக் கொடுத்துழி, வேலை கோலி
    அடைத்துழி, வந்திலாதான் இனிச் செயும் ஆண்மை உண்டோ? 35

  215. மறிப்புண்ட தேவர் காண, மணி வரைத் தோளின் வைகும்
    நெறிப் புண்டரீகம் அன்ன முகத்தியர்முன்னே, நென்னல்,
    பொறிப் புண்டரீகம் போலும் ஒருவனால், புனைந்த மௌலி
    பறிப்புண்டும், வந்திலாதான் இனிப் பொரும் பான்மை உண்டோ? 36

  216. என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை; எண்ணி
    ஒன்று உனக்கு உறுவது உன்னித் துணிந்து உரை; உறுதி பார்க்கின்,
    துன்று இருங் குழலை விட்டு, தொழுது வாழ்; சுற்றத்தொடும்
    பொன்றுதி ஆயின், என் பின், வாயிலில் புறப்படு என்றான். 37

  217. நீரிலே பட்ட, சூழ்ந்த நெருப்பிலே பட்ட, நீண்ட
    பாரிலே பட்ட, வானப் பரப்பிலே பட்ட, எல்லாம்
    போரிலே பட்டு வீழப் பொருத நீ, ஒளித்துப் புக்கு, உன்
    ஊரிலே பட்டாய் என்றால், பழி என, உளையச் சொன்னான். 38

  218. இராவணன் சினந்து, அங்கதனைப் பிடித்து எற்றுதற்கு நால்வரை ஏவுதல்

  219. சொற்ற வார்த்தையைக் கேட்டலும், தொல் உயிர்
    முற்றும் உண்பது போலும் முனிவினான்,
    பற்றுமின், கடிதின்; நெடும் பாரிடை
    எற்றுமின் என, நால்வரை ஏவினான். 39

  220. நால்வர் தலையையும் துணித்து அங்கதன் விடுத்த எச்சரிக்கை

  221. ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத்
    தாவினான், அவர்தம் தலைபோய் அறக்
    கூவினான், அவன், கோபுர வாயிலில்
    தூவினான், துகைத்தான், இவை சொல்லினான்: 40

  222. ஏமம் சார, எளியவர் யாவரும்,
    தூமம் கால்வன, வீரன் சுடு சரம்,
    வேம் மின் போல்வன, வீழ்வதன் முன்னமே,
    போமின் போமின், புறத்து என்று போயினான். 41

  223. இராமன் அடி பணிந்து, அங்கதன் இராவணனின் உள்ளக் கருத்தை உரைத்தல்

  224. அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான், அவர்
    சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான்,
    இந்து விண் நின்று இழிந்துளதாம் என,
    வந்து, வீரன் அடியில் வணங்கினான். 42

  225. உற்ற போது, அவன் உள்ளக் கருத்து எலாம்,
    கொற்ற வீரன், உணர்த்து என்று கூறலும்,
    முற்ற ஓதி என்? மூர்க்கன், முடித் தலை
    அற்றபோது அன்றி, ஆசை அறான் என்றான். 43

  226. மிகைப் பாடல்கள்

  227. சூளுறும் வஞ்சனாகத் தோன்றிய இலங்கை வேந்தன்
    கோளுறும் சிறையை நீக்கி, குரை கழல் வணங்கும் ஆகில்,
    வீழுறும் இலங்கைச் செல்வம் வீடணற்கு அளித்தே, கானில்
    ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான். 7-1

  228. தப்பு இல வீடணற்கு இலங்கை, தானமாச்
    செப்பிய வாய்மைதான் சிதையலாகுமோ?
    இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்,
    அப்பொழுது, அயோத்தி நாடு அளிப்பென் ஆணையே. 7-2

  229. அரி முதல் தேவர் ஆதி அமரிடைக் கலந்த போதும்,
    வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால்,
    புரம் ஒரு மூன்றும் தீயப் பொடி செய்தோன் தன்னொடு, அந் நாள்,
    அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ ? 17-1

  230. வந்தது என், குரங்கு? ஒன்று இல்லை, அடைத்தது என், கடல் வாய்? மந்தி
    சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ? தெரியாது ஆகில்,
    இந்த எம் பதியைக் காக்கும் இறைவனோ? அறிதும்; எங்கள்
    விந்தை எம் பெருமான்! வாழி! வீடணன் என்னும் வேந்தன். 19-1

  231. முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால் வீக்கும்
    அந்த ஆயிரத் தோளானை அரக்கிய மழுவலாளன்
    வந்து எதிர் கொள்ள, வீரச் சிலையும் வெவ் வலியும் வாங்கும்
    சுந்தரத் தோளன் விட்ட தூதன் நான் என்னச் சொன்னான். 20-1

  232. பசை அறு சிந்தையானைத் தமரொடும் படுத்த போதும்,
    இசை எனக்கு இல்லை அன்றே என்பது ஓர் இகழ்வு கொண்டான்;
    வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான்,
    திசையினை வென்ற வென்றி வரவரச் சீர்த்தது! என்றான். 36-1

  233. ஆதி அம் பரன், அங்கதன் ஓதல் கேட்டு,
    ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா,
    சோதியான் மகன் ஆதித் துணைவருக்கு
    ஓதினான், அங்கு அமரர்கள் உய்யவே. 43-1

  234. யுத்த காண்டம்

    15. முதற் போர் புரி படலம்


    வானர சேனைக்கு இராமன் ஆணையிடல்

  235. பூசலே; பிறிது இல்லை என, புறத்து
    ஆசைதோறும் முரசம் அறைந்து, என
    பாசறைப் படையின்னிடம் பற்றிய
    வாசல்தோறும் முறையின் வகுத்திரால். 1

  236. மற்றும் நின்ற மலையும் மரங்களும்
    பற்றி,-வீரர்!-பரவையின் மும் முறை
    கற்ற கைகளினால், கடி மா நகர்
    சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால். 2

  237. இடுமின் பல் மரம்; எங்கும் இயக்கு அறத்
    தடுமின்; போர்க்கு வருக! எனச் சாற்றுமின்;
    கடுமின், இப்பொழுதே கதிர் மீச்செலாக்
    கொடி மதில் குடுமித் தலைக்கொள்க! என்றான். 3

  238. வானரப்படை அகழியைத் தூர்த்தல்

  239. தடங் கொள் குன்றும், மரங்களும் தாங்கியே,
    மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை,
    இடங்கர் மா இரிய, புனல் ஏறிட,
    தொடங்கி, வேலை அகழியைத் தூர்த்ததால். 4

  240. ஏய வெள்ளம் எழுபதும், எண் கடல்
    ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும்,
    தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
    வாயிலூடு புக்கு, ஊரை வளைந்ததே. 5

  241. விளையும் வென்றி இராவணன் மெய்ப் புகழ்
    முளையினோடும் களைந்து முடிப்பபோல்,
    தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை
    வளையம், வன் கையில், வாங்கின-வானரம். 6

  242. இகழும் தன்மையன் ஆய இராவணன்
    புகழும் மேன்மையும் போயினவாம் என,
    நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்,
    அகழிதானும் அழுவது போன்றதே. 7

  243. தண்டு இருந்த பைந் தாமரை தாள் அற,
    பண் திரிந்து சிதைய, படர் சிறை
    வண்டு இரிந்தன; வாய்தொறும் முட்டையைக்
    கொண்டு இரிந்தன, அன்னக் குழாம் எலாம். 8

  244. ஈளி தாரம் இயம்பிய வண்டுகள்
    பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய;
    தாள தாமரை அன்னங்கள் தாவிட,
    வாளை தாவின, வானரம் தாவவே. 9

  245. தூறு மா மரமும், மலையும் தொடர்
    நீறு, நீர்மிசைச் சென்று நெருக்கலான்,
    ஏறு பேர் அகழ்நின்றும் எனைப் பல
    ஆறு சென்றன, ஆர்கலிமீது அரோ. 10

  246. இழுகு மாக் கல் இடும்தொறு இடும்தொறும்,
    சுழிகள்தோறும் சுரித்து இடை தோன்று தேன்
    ஒழுகு தாமரை ஒத்தன, ஓங்கு நீர்
    முழுகி மீது எழு மாதர் முகத்தையே. 11

  247. தன்மைக்குத் தலையாய தசமுகன்
    தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்;
    இன்மைக்கும், ஒன்று உடைமைக்கும், யாவர்க்கும்
    வன்மைக்கும், ஒர் வரம்பும் உண்டாம்கொலோ? 12

  248. தூர்த்த வானரம், சுள்ளி பறித்து இடை,
    சீர்த்த பேர் அணைதன்னையும் சிந்தின;
    வார்த்தது அன்ன மதிலின் வரம்புகொண்டு
    ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே. 13

  249. வட்டமேரு இது என, வான் முகடு
    எட்ட நீண்ட மதில்மிசை ஏறி, விண்
    தொட்ட வானரம் தோன்றின-மீத் தொக
    விட்ட வெண் கொடி வீங்கின என்னவே. 14

  250. இறுக்க வேண்டுவது இல்லை; எண் தீர் மணி
    வெறுக்கை ஓங்கிய மேரு விழுக் கலால்
    நிறுக்க, நேர்வரும் வீரர் நெருக்கலால்,
    பொறுக்கலாது, மதிள் தரை புக்கதால். 15

  251. அரக்கர் சேனையின் எழுச்சி

  252. அறைந்த மா முரசு; ஆனைப் பதாகையால்
    மறைந்தவால், நெடு வானகம்; மாதிரம்
    குறைந்த, தூளி குழுமி; விண்ணூடு புக்கு
    உறைந்தது, ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே. 16

  253. கோடு அலம்பின; கோதை அலம்பின;
    ஆடல் அம் பரித் தாரும் அலம்பின;
    மாடு அலம்பின, மா மணித் தேர்; மணி
    பாடு அலம்பின, பாய் மத யானையே. 17

  254. இரு சேனையும் பொருதல்

  255. அரக்கர் தொல் குலம் வேர் அற, அல்லவர்
    வருக்கம் யாவையும் வாழ்வுற, வந்தது ஓர்
    கருக் கொள் காலம் விதிகொடு காட்டிட,
    தருக்கி உற்று, எதிர் தாக்கின-தானையே. 18

  256. பல் கொடும், நெடும் பாதவம் பற்றியும்,
    கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல்,
    வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள
    எல் கொடும், படையும் கொண்டது-இக் கடல். 19

  257. அம்பு கற்களை அள்ளின; அம்பு எலாம்
    கொம்புடைப் பணை கூறு உற நூறின;
    வம்புடைத் தட மா மரம் மாண்டன,
    செம் புகர்ச் சுடர் வேல்-கணம் செல்லவே. 20

  258. மாக் கை வானர வீரர் மலைந்த கல்
    தாக்கி, வஞ்சர் தலைகள் தகர்த்தலால்,
    நாக்கினூடும், செவியினும், நாகம் வாழ்
    மூக்கினூடும், சொரிந்தன, மூளையே. 21

  259. அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம்
    விற்கள் ஓடு சரம் பட, வெம் புணீர்
    பற்களோடும் சொரிதர, பற்றிய
    கற்களோடும் உருண்ட, கவிகளே. 22

  260. நின்று மேரு நெடு மதில் நெற்றியின்
    வென்றி வானர வீரர் விசைத்த கல்
    சென்று, தீயவர் ஆர் உயிர் சிந்தின,
    குன்றின் வீழும் உருமின் குழுவினே. 23

  261. எதிர்த்த வானரம் மாக் கையொடு இற்றன;
    மதில் புறங் கண்டு, மண்ணில் மறைந்தன;-
    கதிர்க் கொடுங் கண் அர்க்கர் கரங்களால்
    விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே. 24

  262. கடித்த, குத்தின, கையின் கழுத்து அறப்
    பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின,
    இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை
    முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின. 25

  263. எறிந்தும், எய்தும், எழு முளைத் தண்டு கொண்டு
    அறைந்தும், வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்,
    நிறைந்த வெங் கண் அரக்கர் நெருக்கலால்,
    குறைந்த-வானர வீரர் குழுக்களே. 26

  264. செப்பின் செம் புனல் தோய்ந்த செம் பொன் மதில்,
    துப்பின் செய்தது, போன்றது, சூழ் வரை;
    குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்துகொண்டு
    உப்பின் சென்றது, உதிரத்து ஒழுக்கமே. 27

  265. வந்து இரைத்த பறவை மயங்கின,
    அந்தரத்தில் நெருங்கலின், அங்கு ஒரு
    பந்தர் பெற்றது போன்றது-பற்றுதல்
    இந்திரற்கும் அரிய இலங்கையே. 28

  266. தங்கு வெங் கனல் ஒத்துத் தயங்கிய
    பொங்கு வெங் குருதிப் புனற் செக்கர் முன்,
    கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து,
    அங்கும் இங்கும் நின்று, ஆடினவாம் அரோ. 29

  267. கொன் நிறக் குருதிக் குடை புட்களின்
    தொல் நிறச் சிறையில் துளி தூவலால்,
    பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம்
    செந் நிறத்தனவாய், நிறம் தீர்ந்தவே. 30

  268. வானரங்கள் மதிலிலிருந்து இறங்குதல்

  269. பொழிந்து சோரிப் புதுப் புனல் பொங்கி மீ
    வழிந்த மா மதில் கைவிட்டு, வானரம்,
    ஒழிந்த, மேருவின் உம்பர் விட்டு இம்பரின்
    இழிந்த மாக் கடல் என்ன, இழிந்ததே. 31

  270. பதனமும், மதிலும், படை நாஞ்சிலும்,
    கதன வாயிலும், கட்டும் அட்டாலையும்,
    முதல யாவையும் புக்குற்று முற்றின-
    விதன வெங் கண் இராக்கதர் வெள்ளமே. 32

  271. பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல
    நீந்தி ஏகும் நெருக்கிடைச் செல்வன;
    சாய்ந்து சாய்ந்து, சரம் படத் தள்ளலுற்று
    ஓய்ந்து வீழ்ந்த; சில சில ஓடின. 33

  272. அரக்கர் சேனையின் ஆரவாரம்

  273. தழிய வானர மாக் கடல் சாய்தலும்,
    பொழியும் வெம் படைப் போர்க் கடல் ஆர்த்தவால்-
    ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
    அழியும் மாக் கடல் ஆர்ப்பு எடுத்தென்னவே. 34

  274. முரசும், மா முருடும், முரல் சங்கமும்,
    உரை செய் காளமும், ஆகுளி ஓசையும்,
    விரைசும் பல் இயம், வில் அரவத்தொடும்,
    திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே. 35

  275. இராவணனது படை வெளி வருதல்

  276. ஆய காலை, அனைத்து உலகும் தரும்
    நாயகன் முகம் நாலும் நடந்தென,
    மேய சேனை விரி கடல், விண் குலாம்
    வாயிலூடு புறப்பட்டு வந்ததே. 36

  277. நெடிய காவதம் எட்டும் நிரம்பிய,
    படிய வாயில் பருப்பதம் பாய்ந்தென,
    கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு
    ஒடிய ஊன்றின, மும் மத ஓங்கலே. 37

  278. சூழி யானை மதம் படு தொய்யலின்,
    ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ,
    பாழி ஆள் வயிரப் படி பல் முறை
    பூழி ஆக்கின, பொன் நெடுந் தேர்களே. 38

  279. பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால்
    இடித்த மா மதில் ஆடை இலங்கையாள்,
    மடுத்த மாக் கடல் வாவும் திரை எலாம்
    குடித்துக் கால்வன போன்ற, குதிரையே. 39

  280. கேள் இல் ஞாலம், கிளத்திய தொல் முறை
    நாளும் நாளும் நடந்தன நள் இரா,
    நீளம் எய்தி, ஒரு சிறை நின்றன,
    மீளும் மாலையும் போன்றனர்-வீரரே. 40

  281. பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட,
    முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற,
    பித்தி பிற்பட, வன் திசை பேர்வுற,
    தொத்தி, மீண்டிலவால்-நெடுந் தூளியே. 41

  282. வானரச் சேனை நிலைகுலைய, சுக்கிரீவன் சினத்துடன் போரிடல்

  283. நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்,
    குரக்கு இனப் பெருந் தானை குலைந்து போய்,
    அருக்கன் மா மகன், ஆர் அமர் ஆசையால்
    செருக்கி நின்றவன், நின்றுழிச் சென்றவால். 42

  284. சாய்ந்த தானைத் தளர்வும், சலத்து எதிர்
    பாய்ந்த தானைப் பெருமையும், பார்த்து, உறக்
    காய்ந்த நெஞ்சன், கனல் சொரி கண்ணினன்,
    ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான். 43

  285. வாரணத்து எதிர், வாசியின் நேர், வயத்
    தேர் முகத்தினில், சேவகர்மேல், செறுத்து,
    ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று, உயர்
    தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். 44

  286. களிறும், மாவும், நிருதரும், கால் அற,
    ஒளிறு மா மணித் தேரும் உருட்டி, வெங்
    குளிறு சோரி ஒழுக, கொதித்து, இடை
    வெளிறு இலா மரமே கொண்டு, வீசினான். 45

  287. அன்ன காலை, அரிக் குல வீரரும்
    மன்னன் முன் புக, வன் கண் அரக்கரும்
    முன் உழந்த முழங்கு பெருஞ் செருத்
    தன்னில் வந்து, தலைமயக்குற்றனர். 46

  288. கல் துரந்த களம் பட, வஞ்சகர்
    இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்;
    வில் துரந்தன வெங் கணையால் உடல்
    அற்று உலந்த குரங்கும் அனந்தமே. 47

  289. கற்கள் தந்து, நிமிர்ந்து, கடுஞ் செரு
    மற்கடங்கள் வலிந்து மலைந்திட,
    தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர்
    தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால். 48

  290. பாடுகின்றன, பேய்க் கணம்; பல் விதத்து
    ஆடுகின்ற, அறு குறை; ஆழ் கடற்கு
    ஓடுகின்ற, உதிரம்; புகுந்து, உடல்
    நாடுகின்றனர், கற்புடை நங்கைமார். 49

  291. யானை பட்ட அழி புனல் யாறு எலாம்
    பானல் பட்ட; பல கணை மாரியின்
    சோனை பட்டது; சொல்ல அரும் வானரச்
    சேனை பட்டது; பட்டது, செம் புண்ணீர். 50

  292. அரக்கர் சேனையின் அழிவு கண்ட வச்சிரமுட்டி வந்து போரிடல்

  293. காய்ந்த வானர வீரர் கரத்தினால்
    தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர்
    பாய்ந்த தானைப் படு களம் பாழ்படச்
    சாய்ந்ததால், நிருதக் கடல்-தானையே. 51

  294. தங்கள் மாப் படை சாய்தலும், தீ எழ
    வெங் கண் வாள் அரக்கன், விரை தேரினை,
    கங்க சாலம் தொடரக் கடற் செலூஉம்
    வங்கம் ஆம் என வந்து, எதிர் தாக்கினான். 52

  295. வந்து தாக்கி, வடிக் கணை மா மழை
    சிந்தி, வானரச் சேனை சிதைத்தலும்,
    இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்;
    நொந்து, சூரியன் கான்முனை நோக்கினான். 53

  296. சுக்கிரீவன் வச்சிரமுட்டியை அழித்தல்

  297. நோக்கி, வஞ்சன் நொறில் வய மாப் பரி
    வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள்
    தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன்
    யாக்கையும் சிதைத்துவிட்டு, எழுந்து ஏகினான். 54

  298. மலை குலைந்தென, வச்சிரமுட்டி தன்
    நிலை குலைந்து விழுதலின், நின்றுளார்
    குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்;
    அலை கிளர்ந்தென, வானரம் ஆர்த்தவே. 55

  299. கீழை வாசலில் நிகழ்ந்த போர்

  300. வீழி வெங் கண் இராக்கதர் வெம் படை,
    ஊழி ஆழி கிளர்ந்தென ஓங்கின,
    கீழை வாயிலில் கிட்டலும், முட்டினர்,
    சூழும் வானர வீரர் துவன்றியே. 56

  301. சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம்,
    வாலம், வாளி, மழையின் வழங்கியே,
    ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்,
    காலும் வாலும் துமிந்த, கவிக் குலம். 57

  302. வென்றி வானர வீரர் விசைத்து எறி
    குன்றும் மா மரமும், கொடுங் காலனின்
    சென்று வீழ, நிருதர்கள் சிந்தினார்;
    பொன்றி வீழ்ந்த, புரவியும் பூட்கையும். 58

  303. தண்டு, வாள், அயில், சக்கரம் சாயகம்,
    கொண்டு, சீறி, நிருதர் கொதித்து எழ,
    புண் திறந்து குருதி பொழிந்து உக,
    மண்டி ஓடினர், வானர வீரரே. 59

  304. நீலன் நிகழ்த்திய போர்

  305. எரியின் மைந்தன், இரு நிலம் கீழுற,
    விரிய நின்ற மராமரம் வேரொடும்
    திரிய வாங்கி, நிருதர் வெஞ் சேனை போய்
    நெரிய, ஊழி நெருப்பு என வீசினான். 60

  306. தேரும், பாகரும், வாசியும், செம் முகக்
    காரும், யாளியும், சீயமும், காண் தகு
    பாரின் வீழப் புடைப்ப, பசும் புணின்
    நீரும் வாரி அதனை நிறைத்ததே. 61

  307. அரக்கர் சேனை அடு களம் பாழ்பட
    வெருக்கொண்டு ஓடிட, வெம் படக் காவலர்
    நெருக்க, நேர்ந்து, கும்பானு நெடுஞ் சரம்
    துரக்க, வானரச் சேனை துணிந்தவே. 62

  308. கண்டு நின்ற கரடியின் காவலன்,
    எண் திசாமுகம் எண்ணும் இடும்பன், ஓர்
    சண்டமாருதம் என்ன, தட வரை
    கொண்டு சீறி, அவன் எதிர் குப்புறா, 63

  309. தடுத்த வாளிகள் வீழும் முன், சூழ்ந்து எதிர்
    எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்,
    ஒடித்த வில்லும் இரதமும், ஒல்லெனப்
    படுத்த, வாசியும் பதாகையும் பாழ்பட. 64

  310. தேர் அழிந்து, சிலையும் அழிந்து உக,
    கார் இழிந்த உரும் எனக் காய்ந்து, எதிர்
    பார் கிழிந்து உகப் பாய்ந்தனன்-வானவர்
    போர் கிழிந்து புறம் தர, போர் செய்தான். 65

  311. தத்தி, மார்பின் வயிரத் தடக் கையால்
    குத்தி நின்ற கும்பானுவை, தான் எதிர்
    மொத்தி நின்று, முடித் தலை கீழ் உற,
    பத்தி வன் தடந் தோள் உறப் பற்றுவான். 66

  312. கடித்தலத்து இரு கால் உற, கைகளால்
    பிடித்துத் தோளை, பிறங்கலின் கோடு நேர்
    முடித்தலத்தினைக் கவ்வுற மூளைகள்
    வெடித்து வீழ்தர, வீழ்த்தினனாம் அரோ. 67

  313. பிரகத்தன் போர்

  314. தன் படைத்தலைவன் படத் தன் எதிர்,
    துன்பு அடைத்த மனத்தன், சுமாலி சேய்,
    முன் படைத்த முகில் அன்ன காட்சியன்,
    வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான். 68

  315. வாங்கி வார் சிலை, வானர மாப் படை
    ஏங்க நாண் எறிந்திட்டு, இடையீடு இன்றி,
    தூங்கு மாரி என, சுடர் வாளிகள்,
    வீங்கு தோளினன், விட்டனனாம் அரோ. 69

  316. நூறும் ஆயிரமும் கணை நொய்தினின்
    வேறு வேறு படுதலின், வெம்பியே,
    ஈறு இல் வானர மாப் படை எங்கணும்
    பாற, நீலன் வெகுண்டு, எதிர் பார்ப்புறா, 70

  317. குன்றம் நின்றது எடுத்து, எதிர் கூற்று எனச்
    சென்று எறிந்து, அவன் சேனை சிதைத்தலும்,
    வென்றி வில்லின் விடு கணை மாரியால்,
    ஒன்று நூறு உதிர்வுற்றது, அக் குன்றமே. 71

  318. மீட்டும், அங்கு ஓர் மராமரம் வேரொடும்
    ஈட்டி, வானத்து இடி என எற்றலும்,
    கோட்டும் வில்லும், கொடியும், வயப் பரி
    பூட்டும் தேரும், பொடித் துகள் ஆயவே. 72

  319. தேர் இழந்து, சிலையும் இழந்திட,
    கார் இழிந்த உரும் எனக் காந்துவான்,
    பார் இழிந்து, பரு வலித் தண்டொடும்,
    ஊர் இழந்த கதிர் என, ஓடினான். 73

  320. வாய் மடித்து அழல் கண்தொறும் வந்து உக,
    போய் அடித்தலும், நீலன் புகைந்து, எதிர்
    தாய் அடுத்து, அவன் தன் கையின் தண்டொடும்
    மீ எடுத்து விசும்பு உற வீசினான். 74

  321. அம்பரத்து எறிந்து, ஆர்ப்ப, அரக்கனும்,
    இம்பர் உற்று, எரியின் திரு மைந்தன்மேல்,
    செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான்,
    உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே. 75

  322. அடித்தலோடும், அதற்கு இளையாதவன்,
    எடுத்த தண்டைப் பறித்து எறியா, இகல்
    முடித்தும் என்று, ஒரு கைக்கொடு மோதினான்,
    குடித்து உமிழ்ந்தெனக் கக்கக் குருதியே. 76

  323. குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன்,
    நிருதன், நீலன் நெடு வரை மார்பினில்
    கருதலாத முன் குத்தலும், கைத்து, அவர்
    பொருத பூசல் புகல ஒண்ணாததே. 77

  324. மற்று, நீலன், அரக்கனை மாடு உறச்
    சுற்றி வால்கொடு, தோளினும், மார்பினும்,
    நெற்றி மேலும், நெடுங் கரத்து எற்றலும்,
    இற்று, மால் வரை என்ன, விழுந்தனன். 78

  325. இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று
    அறிந்து, வானவர் ஆவலம் கொட்டினார்;
    வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
    முறிந்து, தம்தம் முது நகர் நோக்கினார். 79

  326. தெற்கு வாயிலில் அங்கதன் நிகழ்த்திய போர்

  327. தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர்
    மல் குலாவு வயப் புயத்து அங்கதன்
    நிற்கவே, எதிர் நின்றிலர் ஓடினார்,
    பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே. 80

  328. மேலை வாயிலில் அனுமன் நிகழ்த்திய போர்

  329. நூற்று-இரண்டு எனும் வெள்ளமும், நோன் கழல்
    ஆற்றல் சால் துன்முகனும், அங்கு ஆர்த்து எழ,
    மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்,-
    காற்றின் மா மகன் கை எனும் காலனால். 81

  330. நால்திசைப் போர் பற்றித் தூதுவர் இராவணனுக்குச் சொல்லுதல்

  331. அன்ன காலை, அயிந்திர வாய் முதல்
    துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்,
    மன்ன! கேள் என, வந்து வணங்கினார்;
    சென்னி தாழ்க்க, செவியிடைச் செப்பினார்; 82

  332. வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும்,
    குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்,
    அடக்க அரும் வலத்து ஐம்பது வெள்ளமும்,
    படச் சிதைந்தது, நம் படை என்றனர். 83

  333. வென்றி வேற் கை நிருதர் வெகுண்டு எழ,
    தென் திசைப் பெரு வாயிலில் சேர்ந்துழி,
    பொன்றினான், அச் சுபாரிசன்; போயினார்
    இன்று போன இடம் அறியோம் என்றார். 84

  334. கீழை வாயில், கிளர் நிருதப் படை,
    ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
    ஆழி அன்ன அனீகத் தலைமகன்
    பூழியான்; உயிர் புக்கது விண் என்றார். 85

  335. இராவணன் பெருஞ்சினம் கொள்ளல்

  336. என்ற வார்த்தை, எரி புகு நெய் எனச்
    சென்று, சிந்தை புகுதலும், சீற்றத் தீ
    கன்று கண்ணின்வழிச் சுடர் கான்றிட,
    நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ. 86

  337. மறித்தும், ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்?
    இறுத்துக் கூறும் என்றான்; இசை எங்கணும்
    நிறுத்தும் நீலன், நெடும் பெருஞ் சேனையை
    ஒறுத்து, மற்று அவனோடும் வந்து உற்றனன்; 87

  338. உற்ற போதின் இருவரும், ஒன்று அல,
    கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்,
    நெற்றிமேல், மற்று அந் நீலன் நெடுங் கையால்
    எற்ற, வீந்தனன் என்ன இயம்பினார். 88

  339. அன்னவன்னொடும் போன அரக்கரில்
    நல் நகர்க்கு வந்தோம், ஐய! நாங்களே
    என்ன என்ன, எயிற்று, இகல் வாய்களைத்
    தின்னத் தின்ன, எரிந்தன திக்கு எலாம். 89

  340. இராவணன் போருக்குப் புறப்படுதல்

  341. மாடு நின்ற நிருதரை, வன்கணான்
    ஓட நோக்கி, உயர் படையான் மற்று அக்
    கோடு கொண்டு பொருத குரங்கினால்
    வீடினான்! என்று, மீட்டும் விளம்பினான்: 90

  342. கட்டது, இந்திரன் வாழ்வை; கடைமுறை
    பட்டது, இங்கு ஒர் குரங்கு படுக்க என்று
    இட்ட வெஞ் சொல் எரியினில், என் செவி
    சுட்டது; என்னுடை நெஞ்சையும் சுட்டதால்; 91

  343. கருப்பைபோல் குரங்கு எற்ற, கதிர் சுழல்
    பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்;
    அருப்பம் என்று பகையையும், ஆர் அழல்
    நெருப்பையும், இகழ்ந்தால், அது நீதியோ? 92

  344. நிற்க அன்னது, நீர் நிறை கண்ணினான்,
    வற்கம் ஆயின மாப் படையோடும் சென்று,
    ஒற்கம் வந்து உதவாமல் உறுக! என,
    விற் கொள் வெம் படை வீரரை ஏவியே, 93

  345. மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம்
    கண்டு நின்று, கயிலை இடந்தவன்,
    புண் திறந்தன கண்ணினன், பொங்கினான்,
    திண் திறல் நெடுந் தேர் தெரிந்து ஏறினான்- 94

  346. ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல்
    மா இருங் கடல் போன்றது; வானவர்
    தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
    சாய, இந்திரனே பண்டு தந்தது. 95

  347. ஏற்றி, எண்ணி இறைஞ்சி, இடக் கையால்
    ஆற்றினான், தன் அடு சிலை; அன்னதின்
    மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்,
    கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே. 96

  348. மற்றும், வான் படை, வானவர் மார்பிடை
    இற்றிலாதன, எண்ணும் இலாதன,
    பற்றினான்; கவசம் படர் மார்பிடைச்
    சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். 97

  349. பேரும் கற்றைக் கவரிப் பெருங் கடல்
    நீரும் நீர் நுரையும் என நின்றவன்,
    ஊரும் வெண்மை உவா மதிக் கீழ் உயர்
    காரும் ஒத்தனன், முத்தின் கவிகையான். 98

  350. போர்த்த சங்கப் படகம் புடைத்திட,
    சீர்த்த சங்கக் கடல் உக, தேவர்கள்
    வேர்த்து அசங்கிட, அண்டம் வெடித்திட,
    ஆர்த்த சங்கம், அறைந்த, முரசமே. 99

  351. தேரும் மாவும் படைஞரும் தெற்றிட,
    மூரி வல் நெடுந் தானையில் முற்றினான்;
    நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்,
    மேரு மால் வரை என்ன, விளங்கினான், 100

  352. ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்,
    சூழ் இருந் திசைகளைத் தொடரும் தொல் கொடி,
    வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
    ஊழியின் அந்தகன் நாவின், ஓங்கவே; 101

  353. வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர்
    தோணி பெற்றனர் எனக் கடக்கும் தொல் செருக்
    காணிய வந்தவர், கலக்கம் கைம்மிக,
    சேண் உயர் விசும்பிடை அமரர், சிந்தவே; 102

  354. கண் உறு கடும் புகை கதுவ, கார் நிறத்து
    அண்ணல் வாள் அரக்கர்தம் அரத்தப் பங்கிகள்
    வெண் நிறம் கோடலின், உருவின் வேற்றுமை,
    நண்ணினர் நோக்கவும், அயிர்ப்பு நல்கவே; 103

  355. கால் நெடுந் தேர் உயர் கதலியும், கரத்து
    ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும்,
    ஆனையின் கொடிகளும், அளவித் தோய்தலால்,
    வான யாறொடு மழை ஒற்றி வற்றவே; 104

  356. ஆயிரம் கோடி பேய், அங்கை ஆயுதம்
    தூயன சுமந்து, பின் தொடர, சுற்று ஒளிர்
    சேயிரு மணி நெடுஞ் சேமத் தேர் தெரிந்து,
    ஏயின ஆயிரத்து இரட்டி எய்தவே; 105

  357. ஊன்றிய பெரும் படை உலைய, உற்று உடன்
    ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ,
    தோன்றினன்-உலகு எனத் தொடர்ந்து நின்றன
    மூன்றையும் கடந்து, ஒரு வெற்றி முற்றினான். 106

  358. இராவணன் வருகையை ஒற்றர் இராமனுக்கு அறிவித்தல்

  359. ஓதுறு கருங் கடற்கு ஒத்த தானையான்,
    தீது உறு சிறு தொழில் அரக்கன், சீற்றத்தால்,
    போது உறு பெருங் களம் புகுந்துளான் எனத்
    தூதுவர் நாயகற்கு அறியச் சொல்லினார். 107

  360. இராமன் மகிழ்ந்து போர்க்கோலம் பூணுதல்

  361. ஆங்கு, அவன் அமர்த் தொழிற்கு அணுகினான் என,
    வாங்கினென், சீதையை என்னும் வன்மையால்,
    தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
    வீங்கின, இராகவன் வீரத் தோள்களே. 108

  362. தொடையுறு வற்கலை ஆடை சுற்றி, மேல்
    புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்-
    இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்,
    கடை உறு நோக்கினின், காணும் காட்சியான். 109

  363. ஒத்து இரு சிறு குறட் பாதம் உய்த்த நாள்,
    வித்தக அரு மறை உலகை மிக்கு, மேல்
    பத்து உள விரல் புடை பரந்த பண்பு என,
    சித்திரச் சேவடிக் கழலும் சேர்த்தினான். 110

  364. பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர்
    மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன்-
    தேவியைத் திரு மறு மார்பின் தீர்ந்தனன்;
    நோ இலள் என்பது நோக்கினான்கொலோ? 111

  365. நல் புறக் கோதை, தன் நளினச் செங்கையின்
    நிற்புறச் சுற்றிய காட்சி, நேமியான்-
    கற்பகக் கொம்பினைக் கரிய மாசுணம்
    பொற்புறத் தழுவிய தன்மை போன்றதால். 112

  366. புதை இருட் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
    சிதைவு அரு நாள் வரச் சிவந்த தாமரை
    இதழ்தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என,
    ததைவுறு நிரை விரற் புட்டில் தாங்கினான். 113

  367. பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து,
    எல்லை இல் நூற் கடல் ஏற நோக்கிய,
    நல் இயல், நவை அறு, கவிஞர் நா வரும்
    சொல் எனத் தொலைவு இலாத் தூணி தூக்கினான். 114

  368. கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என
    அளவு அறு செஞ் சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
    இள வரிக் கவட்டிலை ஆரொடு ஏர் பெறத்
    துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். 115

  369. ஓங்கிய உலகமும், உயிரும், உட்புறம்
    தாங்கிய பொருள்களும், தானும், தான் என
    நீங்கியது யாவது? நினைக்கிலோம்; அவன்
    வாங்கிய வரி சிலை மற்றொன்றேகொலாம்? 116

  370. நாற் கடல் உலகமும், விசும்பும், நாள்மலர்
    தூர்க்க, வெஞ் சேனையும் தானும் தோன்றினான்-
    மால் கடல் வண்ணன், தான் வளரும் மால் இரும்
    பாற்கடலோடும் வந்து, எதிரும் பான்மைபோல். 117

  371. இராமன் இலக்குவனைச் சார்தல்

  372. ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு, தான்,
    ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என,
    வாழிய வரி சிலைத் தம்பி, மாப் படைக்
    கூழையின் நெற்றி நின்றானை, கூடினான். 118

  373. அரக்கரும் வானரரும் கைகலத்தல்

  374. என்புழி, நிருதராம் எழு வேலையும்,
    மின் பொழி எயிறுடைக் கவியின் வெள்ளமும்,
    தென் புலக் கிழவனும் செய்கை கீழ்ப்பட,
    புன் புலக் களத்திடைப் பொருத போலுமால். 119

  375. துமிந்தன தலை; குடர் சொரிந்த; தேர்க் குலம்
    அவிந்தன; புரவியும் ஆளும் அற்றன;
    குவிந்தன, பிணக் குவை; சுமந்து கோள் நிலம்
    நிமிர்ந்தது; பரந்தது, குருதி நீத்தமே. 120

  376. கடுங் குரங்கு இரு கையால் எற்ற, கால் வயக்
    கொடுங் குரம் துணிந்தன, புரவி; குத்தினால்
    ஒடுங்கு உரம் துணிந்தனர், நிருதர்; ஓடின,
    நெடுங் குரம்பு என நிறை குருதி நீத்தமே. 121

  377. தெற்கு இது; வடக்கு இது என்னத் தேர்கிலார்,
    பற் குவை பரந்தன; குரக்குப் பல் பிணம்
    பொற் குவை நிகர்த்தன; நிருதர் போர்ச் சவம்
    கற் குவை நிகர்த்தன; மழையும் காட்டின. 122

  378. இராவணன் வில் நாண் ஒலியால் வானரம் இரிதல்

  379. அவ்வழி, இராவணன் அமரர் அஞ்ச, தன்
    வெவ் விழி நெருப்பு உக, வில்லின் நாணினைச்
    செவ் வழிக் கோதையின் தெறிக்க, சிந்தின,
    எவ்வழி மருங்கினும் இரிந்த, வானரம். 123

  380. உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து
    இரியலுற்றன, சில; இறந்தவால், சில;
    வெருவலுற்றன, சில; விம்மலுற்றன;
    பொரு களத்து உயிரொடும் புரண்டு போம் சில. 124

  381. பொர, கரு நிற நெடு விசும்பு போழ்பட,
    இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்,
    குரக்கினம் உற்றது என், கூறின்? தன் குலத்து
    அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார். 125

  382. வீடணன் ஒருவனும், இளைய வீரனும்,
    கோடு அணை குரங்கினுக்கு அரசும், கொள்கையால்
    நாடினர் நின்றனர்; நாலு திக்கினும்
    ஓடினர், அல்லவர்; ஒளித்தது, உம்பரே. 126

  383. எடுக்கின், நானிலத்தை ஏந்தும் இராவணன், எறிந்த நாணால்
    நடுக்கினான், உலகை என்பார்; நல்கினான் என்னற்பாற்றோ?
    மிடுக்கினால் மிக்க வானோர், மேக்கு உயர் வெள்ளம், மேல்நாள்,
    கெடுக்கும் நாள், உருமின் ஆர்ப்புக் கேட்டனர் என்னக் கேட்டார். 127

  384. சுக்கிரீவன் இராவணன் போர்

  385. ஏந்திய சிகரம் ஒன்று, அங்கு இந்திரன் குலிசம் என்ன,
    காந்திய உருமின் விட்டான், கவிக் குலத்து அரசன், அக் கல்
    நீந்த அரு நெருப்புச் சிந்தி நிமிர்தலும், நிருதர்க்கும் எல்லாம்
    வேந்தனும், பகழி ஒன்றால், வெறுந் துகள் ஆக்கி, வீழ்த்தான். 128

  386. அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து, சிந்தி,
    திண் நெடுஞ் சிகரம், நீறாய்த் திசை திசை சிந்தலோடும்,
    கண் நெடுங் கடுந் தீக் கால, கவிக் குலத்து அரசன், கையால்,
    மண்மகள் வயிறு கீற, மரம் ஒன்று வாங்கிக் கொண்டான். 129

  387. கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால், காட்டத் தக்க
    கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என, கண்டம் கண்டான்;
    விண்ட வாள் அரக்கன் மீது, விசும்பு எரி பறக்க, விட்டான்,
    பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி, பரிதி மைந்தன். 130

  388. அக் கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி,
    திக்கு இரிதரப் போர் வென்ற சிலையினை வளைய வாங்கி,
    சுக்கிரீவன் தன் மார்பில் புங்கமும் தோன்றாவண்ணம்
    உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க, எய்தான். 131

  389. சுக்கிரீவன் தளர்ந்த நிலையில் அனுமன் வருதல்

  390. சுடு கணை படுதலோடும் துளங்கினான்; துளங்காமுன்னம்,
    குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை
    உடன் உறைந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்காமுன்னர்,
    வட திசை வாயில் வந்து, மன்னவன் முன்னர் ஆனான். 132

  391. பரிதி சேய் தேறாமுன்னம், பரு வலி அரக்க! பல் போர்
    புரிதியோ என்னோடு? என்னா, புகை எழ விழித்துப் பொங்கி,
    வருதியேல், வா வா! என்பான்மேல் மலை ஒன்று வாங்கி,
    சுருதியே அனைய தோளால் வீசினான், காலின் தோன்றல். 133

  392. மீ எழு மேகம் எல்லாம் வெந்து, வெங் கரியின் சிந்தித்
    தீ எழ, விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி,
    காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புறத் தொடுத்துக் கண்டித்து,
    ஆயிரம் கூறு செய்தான், அமரரை அலக்கண் செய்தான். 134

  393. மீட்டு ஒரு சிகரம் வாங்கி, வீங்கு தோள் விசையின் வீசி,
    ஓட்டினான்; ஓட்ட, வானத்து உருமினும் கடுக ஓடி,
    கோட்டு வெஞ் சிலையின் வாளி முன் சென்று, கொற்றப் பொன் தோள்
    பூட்டிய வலயத்தோடும், பூழியாய்ப் போயிற்று அன்றே. 135

  394. மெய் எரிந்து அழன்று பொங்கி, வெங் கணான் விம்மி, மீட்டு ஓர்
    மை வரை வாங்குவானை, வரி சிலை வளைய வாங்கி,
    கையினும் தோளின்மேலும் மார்பினும் கரக்க, வாளி
    ஐ-இரண்டு அழுந்த எய்தான்; அவன் அவை ஆற்றி நின்றான். 136

  395. யார் இது செய்யகிற்பார்? என்று கொண்டு இமையோர் ஏத்த,
    மாருதி, பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி,
    வேரொடும் சுழற்றி விட்டான்; விடுதலும், இலங்கை வேந்தன்
    சாரதி தலையைத் தள்ளிச் சென்றது, நிருதர் சாய. 137

  396. மாறி ஓர் பாகன் ஏற, மறி திரைப் பரவை பின்னும்
    சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன், தெய்வ
    நூறுகோல் நொய்தின் எய்தான்; அவை உடல் நுழைதலோடும்,
    ஆறு போல் சோரி சோர, அனுமனும் அலக்கணுற்றான். 138

  397. இராவணன் வீரவுரை

  398. கல் கொண்டும், மரங்கள் கொண்டும், கைக் கொண்டும், களித்து, நும் வாய்ச்
    சொல் கொண்டும், மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி, வெள்ளிப்
    பல் கொண்டும், மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது; யான் ஓர்
    வில் கொண்டு நின்ற போது, விறல் கொண்டு மீள்திர் போலாம். 139

  399. என்று உரைத்து, எயிற்றுப் பேழ் வாய் எரி உக நகை செய்து, யாணர்ப்
    பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமுப் போல,
    ஒன்றின் ஒன்று அதிகம் ஆக, ஆயிர கோடி உய்த்தான்;
    சென்றது குரக்குச் சேனை, கால் எறி கடலின் சிந்தி. 140

  400. இலக்குவன், இராவணனுடன் போரிட வந்து நாண் ஒலி செய்தல்

  401. கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும், கவிகள் உற்ற
    அலக்கணும், தலைவர் செய்த தன்மையும், அமையக் கண்டான்,
    இலக்குவன், என் கை வாளிக்கு இலக்கு இவன்; இவனை இன்று
    விலக்குவென் என்ன வந்தான், வில்லுடை மேரு என்ன. 141

  402. தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான்; தீய
    மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை? முடிவின் மாரி
    ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின, உலகம்; யானை
    சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர், செறுநர் எல்லாம். 142

  403. ஆற்றல் சால் அரக்கந்தானும், அயல் நின்ற வயவர் நெஞ்சம்
    வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும், வீரன் தம்பி
    கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடுங் குரலும் கேளா,
    ஏற்றினன் மகுடம், என்னே! இவன் ஒரு மனிசன் என்னா. 143

  404. இலக்குவன்-இராவணன் போர்

  405. கட்டு அமை தேரின்மேலும், களி நெடுங் களிற்றின்மேலும்,
    விட்டு எழு புரவிமேலும், வெள் எயிற்று அரக்கர் மேலும்,
    முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமாபோல்
    பட்டன பகழி; எங்கும் பரந்தது, குருதிப் பவ்வம். 144

  406. நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும்
    முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி, மொய்ம்பர்
    அகங்களைக் கழன்று, தேரின் அச்சினை உருவி, அப்பால்
    உகங்களின் கடை சென்றாலும், ஓய்வு இல ஓடலுற்ற. 145

  407. நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,-
    ஆக்கிய அரக்கர் தானை, ஐ-இரு கோடி, கையொத்து
    ஊக்கிய படைகள் வீசி உடற்றிய-உலகம் செய்த
    பாக்கியம் அனைய வீரன் தம்பியைச் சுற்றும் பற்றி. 146

  408. உறு பகை மனிதன், இன்று, எம் இறைவனை உறுகிற்பானேல்,
    வெறுவிது, நம்தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற,
    எறி படை அரக்கர் ஏற்றார்-ஏற்ற கைம் மாற்றான் என்னா,
    வறியவர், ஒருவன், வண்மை பூண்டவன்மேல் சென்றென்ன. 147

  409. அறுத்தனன், அரக்கர் எய்த எறிந்தன; அறுத்து, அறாத
    பொறுத்தனன்; பகழி மாரி பொழிந்தனன்; உயிரின் போகம்
    வெறுத்தனன், நமனும்; வேலை உதிரத்தின் வெள்ளம் மீள
    மறித்தன; மறிந்த எங்கும், பிணங்கள் மா மலைகள் மான. 148

  410. தலை எலாம் அற்ற; முற்றும் தாள் எலாம் அற்ற; தோளாம்
    மலை எலாம் அற்ற; பொன்-தார் மார்பு எலாம் அற்ற; சூலத்து
    இலை எலாம் அற்ற; வீரர் எயிறு எலாம் அற்ற; கொற்றச்
    சிலை எலாம் அற்ற; கற்ற செரு எலாம் அற்ற, சிந்தி. 149

  411. தேர் எலாம் துமிந்த; மாவின் திறம் எலாம் துமிந்த; செங் கண்
    கார் எலாம் துமிந்த; வீரர் கழல் எலாம் துமிந்த; கண்டத்
    தார் எலாம் துமிந்த; நின்ற தனு எலாம் துமிந்த; தம்தம்
    போர் எலாம் துமிந்த; கொண்ட புகழ் எலாம் துமிந்து போய. 150

  412. அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ, ஆள்மேல் வீழ்ந்த
    புரவிமேல் பூட்கை வீழ்ந்த; பூட்கைமேல் பொலன் தேர் வீழ்ந்த,
    நிரவிய தேரின் மேன்மேல் நெடுந் தலை கிடந்த; நெய்த்தோர்
    விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது, வீழ. 151

  413. கடுப்பின்கண், அமரரேயும், கார்முகத்து அம்பு கையால்
    தொடுக்கின்றான், துரக்கின்றான் என்று உணர்ந்திலர்; துரந்த வாளி
    இடுக்கு ஒன்றும் காணார்; காண்பது, எய்த கோல் நொய்தின் எய்திப்
    படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே; பல் கால். 152

  414. கொற்ற வாள், கொலை வேல், சூலம், கொடுஞ் சிலை முதல ஆய
    வெற்றி வெம் படைகள் யாவும் வெந் தொழில் அரக்கர் மேற்கொண்டு,
    உற்றன, கூற்றும் அஞ்ச ஒளிர்வன, ஒன்று நூறு ஆய்
    அற்றன அன்றி, ஒன்றும் அறாதன இல்லை அன்றே. 153

  415. குன்று அன யானை, மானக் குரகதம், கொடித்தேர், கோப
    வன் திறல் ஆளி, சீயம் மற்றைய பிறவும், முற்றும்
    சென்றன எல்லை இல்லை; திரிந்தில; சிறிது போதும்
    நின்றன இல்லை; எல்லாம் கிடந்தன, நெளிந்து, பார்மேல். 154

  416. சாய்ந்தது நிருதர் தானை; தமர் தலை இடறித் தள்ளுற்று
    ஓய்ந்தது; ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக, அன்றே
    வேய்ந்தது வாகை, வீரற்கு இளையவன் வரி வில்; வெம்பிக்
    காய்ந்தது, அவ் இலங்கை வேந்தன் மனம் எனும் காலச் செந் தீ. 155

  417. காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி, கண்ணுற்று
    ஏற்றனன், இலங்கை வேந்தன்; எரி விழித்து, இராமன் தம்பி,
    கூற்று மால் கொண்டது என்னக் கொல்கின்றான், குறுகச் சென்றான்;
    சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சிறிதும் பாதம். 156

  418. காக்கின்ற என் நெடுங் காவலின் வலி நீக்கிய கள்வா!
    போக்கு இன்று உனக்கு அரிதுஆல் எனப் புகன்றான்; புகை உயிர்ப்பான்,
    கோக்கின்றன, தொடுக்கின்றன, கொலை அம்புகள், தலையோடு
    ஈர்க்கின்றன, கனல் ஒப்பன, எய்தான்; இகல் செய்தான். 157

  419. எய்தான் சரம் எய்தாவகை இற்றீக என, இடையே,
    வைதாலென ஐதாயின வடி வாளியின் அறுத்தான்;
    ஐது ஆதலின் அறுத்தாய்; இனி, அறுப்பாய்! என, அழி கார்
    பெய்தாலெனச் சர மாரிகள் சொரிந்தான், துயில் பிரிந்தான். 158

  420. ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம்
    வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா,
    தூங்குஞ் சர நெடும் புட்டிலின், சுடர் வேலவற்கு இளையான்,
    வாங்குஞ் சரம் வாங்காவகை அறுத்தான், அறம் மறுத்தான். 159

  421. அயர்வு நீங்கிய அனுமனின் வீரவுரை

  422. அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான், அழல் விழியா,
    பொய்ப் போர் சில புரியேல், இனி என வந்து, இடை புகுந்தான்,
    கைப் போதகம் என, முந்து, அவன் கடுந் தேர் எதிர் நடந்தான்,
    இப் போர் ஒழி; பின் போர் உள; இவை கேள் என இசைத்தான்: 160

  423. வென்றாய் உலகு ஒரு மூன்றையும், மெலியா நெடு வலியால்;
    தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை; திசை திரித்தாய்;
    என்றாலும், இன்று அழிவு உன்வயின் எய்தும் என இசையா,
    நின்றான் அவன் எதிரே, உலகு அளந்தான் என நிமிர்ந்தான். 161

  424. எடுத்தான் வலத் தடக் கையினை; இது போய், உலகு எல்லாம்
    அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான்,
    மடுத்து ஆங்கு உற வளர்ந்தாலென வளர்க்கின்றவன் உருவம்
    கடுத்தான் என, கொடியாற்கு எதிர், காண்பாய் எனக் காட்டா. 162

  425. வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு
    எல்லாம் இடை பயின்றாய்; புயம் நால்-ஐந்தினொடு இயைந்தாய்;
    வல்லாய்; செரு வலியாய்; திறல் மறவோய்! இதன் எதிரே
    நில்லாய் என நிகழ்த்தா, நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான். 163

  426. நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய்; இஃது ஒன்றோ?
    வாள் ஆண்மையும், உலகு ஏழினொடு உடனே உடை வலியும்,
    தாளாண்மையும், நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும், இனி நின்
    தோளாண்மையும், இசையோடு உடன் துடைப்பேன், ஒரு புடைப்பால்; 164

  427. பரக்கப் பல உரைத்து என்? படர் கயிலைப் பெரு வரைக்கும்,
    அரக்குற்று எரி பொறிக் கண் திசைக் கரிக்கும், சிறிது அனுங்கா
    உரக் குப்பையின் உயர் தோள் பல உடையாய்! உரன் உடையாய்!
    குரக்குத் தனிக் கரத்தின் புடைப் பொறை ஆற்றுவை கொல்லாம்? 165

  428. என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும், இறவா-
    நின்றாய் எனின், நீ பின் எனை, நின் கைத் தல நிரையால்,-
    குன்றே புரை தோளாய்!-மிடல்கொடு குத்துதி; குத்தப்
    பொன்றேன் எனின், நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான். 166

  429. இராவணன் விடை மொழிதல்

  430. காரின் கரியவன், மாருதி கழற, கடிது உகவா,
    வீரற்கு உரியது சொற்றனை;-விறலோய்!-ஒரு தனியேன்
    நேர் நிற்பவர் உளரோ, பிறர் நீ அல்லவர்? இனி நின்
    பேருக்கு உலகு அளவே; இனி உளவோ பிற? என்றான். 167

  431. ஒன்று ஆயுதம் உடையாய் அலை; ஒரு நீ எனது உறவும்
    கொன்றாய்; உயர் தேர்மேல் நிமிர் கொடு வெஞ் சிலை கோலி,
    வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து, நின் வலியால்
    நின்றாயொடு நின்றார் இனி நிகரோ? உரை, நெடியோய்! 168

  432. முத் தேவர்கள் முதலாயினர்; முழு மூன்று உலகிடையே
    எத் தேவர்கள், எத் தானவர், எதிர்வார் இகல், என் நேர்,
    பித்து ஏறினர் அல்லால்? இடை பேராது, எதிர், மார்பில்
    குத்தே என நின்றாய்; இது கூறும் தரம் அன்றால். 169

  433. பொரு கைத்தலம் இருபத்துள; புகழும் பெரிது உளதால்;
    வரு கைத்தல மத வெங் கரி வலி கெட்டென வருவாய்!
    இரு கைத்தலம் உடையாய்; எதிர் இவை சொற்றனை; இனிமேல்,
    தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என்? அமர் தக்கதும் அன்றால். 170

  434. திசை அத்தனையையும் வென்றது சிதைய, புகழ் தெறும் அவ்
    வசை மற்று இனி உளதே? எனது உயிர்போல் வரும் மகனை
    அசையத் தரை அரைவித்தனை; அழி செம் புனல் அதுவோ
    பசையற்றிலது; ஒரு நீ, எனது எதிர் நின்று, இவை பகர்வாய். 171

  435. பூணித்து இவை உரைசெய்தனை; அதனால், உரை பொதுவே;
    பாணித்தது; பிறிது என் சில பகர்கின்றது? பழியால்
    நாணித் தலை இடுகின்றிலென்; நனி வந்து, உலகு எவையும்
    காண, கடிது எதிர் குத்துதி என்றான், வினை கடியான். 172

  436. அனுமன் இராவணனைக் குத்துதலும் அதன் விளைவும்

  437. வீரத் திறம் இது நன்று! என வியவா, மிக விளியா,
    தேரின் கடிது இவரா, முழு விழியின், பொறி சிதறா,
    ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக, அவன் மா
    மார்பில் கடிது எதிர் குத்தினன், வயிரக் கரம் அதனால். 173

  438. அயிர் உக்கன, நெடு மால் வரை; அனல் உக்கன, விழிகள்;
    தயிர் உக்கன, முழு மூளைகள்; தலை உக்கன; தரியா
    உயிர் உக்கன, நிருதக் குலம்; உயர் வானரம் எவையும்,
    மயிர் உக்கன, எயிறு உக்கன; மழை உக்கன, வானம். 174

  439. வில் சிந்தின நெடு நாண்; நிமிர் கரை சிந்தின, விரி நீர்;
    கல் சிந்தின, குல மால் வரை; கதிர் சிந்தின, சுடரும்;
    பல் சிந்தின, மத யானைகள்; படை சிந்தினர், எவரும்;
    எல் சிந்திய எரி சிந்தின, இகலோன் மணி அகலம். 175

  440. கைக் குத்து அது படலும், கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
    மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தடமார்பில்
    திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில்
    புக்கு இற்றன, போகாதன, புறம் உக்கன, புகழின். 176

  441. அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன, திசை போய்
    விள்ளா நெடு முழு மீன் என; விழி வெம் பொறி எழ நின்று,
    உள் ஆடிய நெடுங் கால் பொர ஒடுங்கா, உலகு உலைய,
    தள்ளாடிய வட மேருவின் சலித்தான், அறம் வலித்தான். 177

  442. ஆர்த்தார், விசும்பு உறைவோர்; நெடிது அனுமான்மிசை அதிகம்
    தூர்த்தார், நறு முழு மென் மலர்; இசை ஆசிகள் சொன்னார்;
    வேர்த்தார் நிருதர்கள்; வானரர் வியந்தார், இவன் விசயம்
    தீர்த்தான் என உவந்து ஆடினர், முழு மெய்ம்மயிர் சிலிர்த்தார். 178

  443. இராவணன்-அனுமன் உரையாடல்

  444. கற்று, அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர், கதியால்
    மற்று அங்கு ஒரு வடிவு உற்று, அது மாறாடுறு காலை,
    பற்று அங்கு அருமையின், அன்னது பயில்கின்றது ஒர் செயலால்,
    உற்று அங்கு அது புறம் போய், உடல் புகுந்தால் என உணர்ந்தான். 179

  445. உணரா, நெடிது உயிரா, உரை உதவா, எரி உமிழா,
    இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா, வலி செய்தாய்!
    அணையாய்; இனி, எனது ஊழ் என அடரா, எதிர் படரா,
    பணை ஆர் புயம் உடையானிடை, சில இம் மொழி பகர்வான்: 180

  446. வலி என்பதும் உளதே? அது நின் பாலது; மறவோய்!
    அலி என்பவர், புறம் நின்றவர்; உலகு ஏழினும் அடைத்தாய்;
    சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால், இறை சலியேன்;
    மெலிவு என்பதும் உணர்ந்தேன்; எனை வென்றாய், இனி, விறலோய்! 181

  447. ஒன்று உண்டு இனி உரை நேர்குவது; உன் மார்பின், என் ஒரு கை,
    குன்றின்மிசை கடை நாள் விழும் உரும் ஏறு எனக் குத்த,
    நின்று, உன் நிலை தருவாய் எனின், நின் நேர் பிறர் உளரோ?
    இன்றும் உளை; என்றும் உளை; இலை, ஓர் பகை என்றான். 182

  448. இராவணனைப் புகழ்ந்து அனுமன் தன் மார்பு காட்டுதல்

  449. என்றான் எதிர் சென்றான், இகல் அடு மாருதி; எனை நீ
    வென்றாய் அலையோ? உன் உயிர் வீடாது, உரை செய்தாய்;
    நன்றாக நின் நிலை நன்று என நல்கா, எதிர் நடவா,
    குன்று ஆகிய திரள் தோளவன், கடன் கொள்க எனக் கொடுத்தான். 183

  450. இராவணன் குத்த அனுமன் சலித்தல்

  451. உறுக்கி, தனி எதிர் நின்றவன் உரத்தில், தனது ஒளிர் பல்
    இறுக்கி, பல நெடு வாய் மடித்து, எரி கண்தொறும் இழிய
    முறுக்கிப் பொதி நிமிர் பல் விரல் நெரிய, திசை முரியக்
    குறுக்கிக் கரம், நெடுந் தோள் புறம் நிமிரக் கொடு குத்த, 184

  452. பள்ளக் கடல் கொள்ளப் படர் படி பேரினும் பதையா
    வள்ளல், பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்,
    கள்ளக் கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால்
    தள்ள, தளர் வெள்ளிப் பெருங் கிரி ஆம் எனச் சலித்தான். 185

  453. சலித்த காலையின், இமையவர் உலகு எலாம்சலித்த;
    சலித்ததால் அறம்; சலித்தது, மெய்ம் மொழி; தகவும்
    சலித்தது; அன்றியும், புகழொடு சுருதியும் சலித்த;
    சலித்த நீதியும்; சலித்தன கருணையும் தவமும். 186

  454. வானரத் தலைவர் இராவணனுடன் மோதல்

  455. அனைய காலையின், அரிக் குலத் தலைவர், அவ் வழியோர்
    எனையர் அன்னவர் யாவரும், ஒரு குவடு ஏந்தி,
    நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க,
    வினை இது என்று அறிந்து, இராவணன்மேல் செல விட்டார். 187

  456. ஒத்த கையினர், ஊழியின் இறுதியின் உலகை
    மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய,
    பத்து நூறு கோடிக்கு மேல் பனி படு சிகரம்,
    எத்த, மேல் செல எறிந்தனர்; பிறிந்தனர், இமையோர். 188

  457. தருக்கி வீசிட, விசும்பு இடம் இன்மையின், தம்மின்
    நெருக்குகின்றன, நின்றன, சென்றில, நிறைந்த;
    அருக்கனும் மறைந்தான்; இருள் விழுங்கியது, அண்டம்;
    சுருக்கம் உற்றனர், அரக்கர் என்று, இமையவர் சூழ்ந்தார். 189

  458. ஒன்றின் ஒன்று பட்டு உடைவன, இடித்து உரும் அதிரச்
    சென்ற வன் பொறி மின் பல செறிந்திட, தெய்வ
    வென்றி வில் என விழு நிழல் விரிந்திட, மேன்மேல்
    கன்றி ஓடிட, கல்-மழை நிகர்த்தன-கற்கள். 190

  459. இரிந்து நீங்கியது இராக்கதப் பெரும் படை; எங்கும்
    விரிந்து சிந்தின, வானத்து மீனொடு விமானம்;
    சொரிந்த வெம் பொறி பட, கடல் சுவறின; தோற்றம்
    கரிந்த கண்டகர் கண்-மணி; என் பல கழறி? 191

  460. இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த,
    கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்;
    ஒறுத்து, வானவர் புகழுண்ட பார வில், உளைய
    அறுத்து நீக்கினன், ஆயிர கோடி மேல் அம்பால். 192

  461. காம்பு எலாம் கடுந் துகள் பட, களிறு எலாம் துணிய,
    பாம்பு எலாம் பட, யாளியும் உழுவையும் பாற,
    கூம்பல் மா மரம் எரிந்து உக, குறுந் துகள் நுறுங்க,
    சாம்பர் ஆயின, தட வரை-சுடு கணை தடிய. 193

  462. உற்றவாறு! என்றும், ஒன்று நூறு ஆயிரம் உருவா
    இற்றவாறு! என்றும், இடிப்புண்டு பொடிப் பொடி ஆகி
    அற்றவாறு! என்றும், அரக்கனை, அடு சிலை கொடியோன்
    கற்றவாறு! என்றும்-வானவர் கைத்தலம் குலைந்தார். 194

  463. அடல் துடைத்தும் என்று அரிக் குல வீரர் அன்று எறிந்த
    திடல் துடைத்தன, தசமுகன் சரம்; அவை திசை சூழ்
    கடல் துடைத்தன; களத்தின் நின்று உயர்தரும் பூழி
    உடல் துடைத்தன; உதிரமும் துடைத்தது, ஒண் புடவி. 195

  464. வானரர் நிலைகுலைதல்

  465. கொல்வென், இக் கணமே மற்று இவ் வானரக் குழுவை;
    வெல்வென், மானிடர் இருவரை எனச் சினம் வீங்க,
    வல் வன் வார் சிலை பத்து உடன் இடக் கையின் வாங்கி,
    தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான். 196

  466. அய்-இரண்டு கார்முகத்தினும், ஆயிரம் பகழி,
    கய்கள் ஈர்-ஐந்தினாலும், வெங் கடுப்பினில் தொடுத்துற்று
    எய்ய, எஞ்சின, வானமும் இரு நில வரைப்பும்;
    மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த. 197

  467. அந்தி வானகம் ஒத்தது, அவ் அமர்க் களம்; உதிரம்
    சிந்தி, வேலையும் திசைகளும் நிறைந்தன; சரத்தால்
    பந்தி பந்தியாய் மடிந்தது, வானரப் பகுதி;
    வந்து மேகங்கள் படிந்தன, பிணப் பெரு மலைமேல். 198

  468. நீலன் அம்பொடு சென்றிலன்; நின்றிலன், அனிலன்;
    காலனார் வயத்து அடைந்திலன், ஏவுண்ட கவயன்;
    ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;
    சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன், சாம்பன். 199

  469. வானரர் நிலைகண்டு இலக்குவன் வெகுண்டு போர் புரிதல்

  470. மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப,
    கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்;
    சுற்றும் வானரப் பெருங் கடல் தொலைந்தது; தொலையாது
    உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான். 200

  471. நூறு கோடிய, நூறு நூறாயிர கோடி,
    வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி,
    ஏறு சேவகன் தம்பி, அவ் இராவணன் எடுத்த
    ஆறு நாலு வெஞ் சிலையையும் கணைகளால் அறுத்தான். 201

  472. ஆர்த்து, வானவர் ஆவலம் கொட்டினர்; அரக்கர்
    வேர்த்து, நெஞ்சமும் வெதும்பினார்; வினை அறு முனிவர்
    தூர்த்து, நாள்மலர் சொரிந்தனர்; இராவணன், தோளைப்
    பார்த்து உவந்தனன்; குனித்தது, வானரம் படியில். 202

  473. இலக்குவனைப் புகழ்ந்து இராவணன் வேல் எறிதல்

  474. நன்று, போர் வலி; நன்று போர் ஆள் வலி; வீரம்
    நன்று; நோக்கமும் நன்று; கைக் கடுமையும் நன்று;
    நன்று, கல்வியும்; நன்று, நின் திண்மையும் நலனும்
    என்று கைம் மறித்து, இராவணன், ஒருவன் நீ என்றான். 203

  475. கானின் அன்று இகல் கரன் படை படுத்த அக் கரியோன்-
    தானும், இந்திரன் தன்னை ஓர் தனு வலம் தன்னால்
    வானில் வென்ற என் மதலையும், வரி சிலை பிடித்த
    யானும், அல்லவர் யார் உனக்கு எதிர்? என்றும் இசைத்தான். 204

  476. வில்லினால் இவன் வெலப்படான் எனச் சினம் வீங்க,
    கொல்லும் நாளும் இன்று இது எனச் சிந்தையில் கொண்டான்,
    பல்லினால் இதழ் அதுக்கினன்; பரு வலிக் கரத்தால்
    எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான். 205

  477. இலக்குவன் அயர, இராவணன் அவனை எடுக்க முயலுதல்

  478. எறிந்த கால வேல், எய்த அம்பு யாவையும் எரித்துப்
    பொறிந்து போய் உக, தீ உக, விசையினின் பொங்கி,
    செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது; சிந்தை
    அறிந்த மைந்தனும், அமர் நெடுங் களத்திடை அயர்ந்தான். 206

  479. இரியலுற்றது வானரப் பெரும் படை; இமையோர்
    பரியலுற்றனர், உலைந்தனர்; முனிவரும் பதைத்தார்;
    விரி திரைக் கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர், விரவார்;
    திரிகை ஒத்தது மண்தலம்; கதிர் ஒளி தீர்ந்த. 207

  480. அஞ்சினான் அலன்; அயன் தந்த வேலினும் ஆவி
    துஞ்சினான் அலன்; துளங்கினான் என்பது துணியா,
    எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி,
    நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார்மிசை நடந்தான். 208

  481. உள்ளி, வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி,
    அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி, பண்டு அரன் மா
    வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன,
    என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என், எடுத்தான். 209

  482. இலக்குவனை இராவணன் எடுக்க இயலாதவனாய் நிற்றல்

  483. அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன், அம்பரம் செம் பொன்
    உடுத்த நாயகன் தான் என உணர்தலின்; ஒருங்கே
    தொடுத்த எண் வகை மூர்த்தியைத் துளக்கி, வெண் பொருப்பை
    எடுத்த தோள்களுக்கு எழுந்திலன்-இராமனுக்கு இளையான். 210

  484. தலைகள் பத்தொடும் தழுவிய தசமுகத் தலைவன்
    நிலை கொள் மாக் கடல் ஒத்தனன்; கரம் புடை நிமிரும்
    அலைகள் ஒத்தன; அதில் எழும் இரவியை ஒத்தான்,
    இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான். 211

  485. இலக்குவனை அனுமன் எடுத்துச் செல்லுதல்

  486. எடுக்கல் உற்று, அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற
    மிடுக்கு இலாமையின், இராவணன் வெய்துயிர்ப்பு உற்றான்;
    இடுக்கில் நின்ற அம் மாருதி புகுந்து எடுத்து ஏந்தி,
    தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து, அயல் சார்ந்தான். 212

  487. தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்,
    தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனித் துணை அதனால்,
    அகவு காதலால், ஆண் தகை ஆயினும், அனுமன்
    மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான். 213

  488. மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும்
    செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற;
    கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய
    பொய் இலாதவன் நின்ற இடத்து, அனுமனும் போனான். 214

  489. இராமன் போர்க்கு புகல்

  490. போன காலையில், புக்கனன் புங்கவன், போர் வேட்டு
    யானைமேல் செலும் கோள் அரிஏறு இவன் என்ன;
    வானுளோர் கணம் ஆர்த்தனர்; தூர்த்தனர் மலர், மேல்;
    தூ நவின்ற வேல் அரக்கனும், தேரினைத் துரந்தான். 215

  491. இராமன் அனுமன் தோள் மேல் ஏறிச் செல்லுதல்

  492. தேரில் போர் அரக்கன் செல, சேவகன் தனியே
    பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன், பரிந்தான்,
    சீரில் செல்கின்றது இல்லை இச் செரு எனும் திறத்தால்,
    வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான். 216

  493. நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல் நுன்முன்
    மாறு இல் பேர் அரக்கன் பொர, நிலத்து நீ மலைதல்
    வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்,
    ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின்மேல் என்றான். 217

  494. நன்று, நன்று! எனா, நாயகன் ஏறினன், நாமக்
    குன்றின்மேல் இவர் கோள் அரிஏறு என; கூடி,
    அன்று வானவர் ஆசிகள் இயம்பினர்; ஈன்ற
    கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான். 218

  495. மாணியாய் உலகு அளந்த நாள், அவனுடை வடிவை
    ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
    காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
    நாணினான்; மற்றை அனந்தனும், தலை நடுக்குற்றான். 219

  496. ஓதம் ஒத்தனன் மாருதி; அதன் அகத்து உறையும்
    நாதன் ஒத்தனன் என்னினோ, துயில்கிலன் நம்பன்;
    வேதம் ஒத்தனன் மாருதி; வேதத்தின் சிரத்தின்
    போதம் ஒத்தனன் இராமன்; வேறு இதின் இலை பொருவே. 220

  497. தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
    மிகுதியை வேறு நோக்கின், எவ் வண்ணம் விளம்பும் தன்மை?
    புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுறப் புலத்து நோக்கும்
    பகுதியை ஒத்தான்; வீரன், மேலைத் தன் பதமே ஒத்தான். 221

  498. மேருவின் சிகரம் போன்றது என்னினும், வெளிறு உண்டாமால்-
    மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட
    ஆரியற்கு, அனேக மார்க்கத்தால், இடம் வலமது ஆகச்
    சாரிகை திரியல் ஆன மாருதி தாமப் பொன்-தோள். 222

  499. ஆசி சொல்லினர் அருந்தவர்; அறம் எனும் தெய்வம்
    காசு இல் நல் நெடுங் கரம் எடுத்து ஆடிட, கயிலை
    ஈசன், நான்முகன் என்று இவர் முதலிய இமையோர்
    பூசல் காணிய வந்தனர், அந்தரம் புகுந்தார். 223

  500. இராம இராவணப் போர்

  501. அண்ணல், அஞ்சன வண்ணனும், அமர் குறித்து அமைந்தான்;
    எண்ண அரும் பெருந் தனி வலிச் சிலையை நாண் எறிந்தான்;
    மண்ணும் வானமும், மற்றைய பிறவும், தன் வாய்ப் பெய்து,
    உண்ணும் காலத்து, அவ் உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை. 224

  502. ஆவி சென்றிலர்; நின்றிலர், அரக்கரோடு இயக்கர்;
    நா உலர்ந்தனர்; கலங்கினர், விலங்கினர்; நடுங்கி;
    கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன; குலையாத்
    தேவதேவனும், விரிஞ்சனும், சிரதலம் குலைந்தார். 225

  503. ஊழி வெங் கனல் ஒப்பன, துப்பு அன உருவ,
    ஆழி நீரையும் குடிப்பன, திசைகளை அளப்ப,
    வீழின் மீச்செலின், மண்ணையும் விண்ணையும் தொளைப்ப,
    ஏழு வெஞ் சரம், உடன் தொடுத்து, இராவணன் எய்தான். 226

  504. எய்த வாளியை, ஏழினால், ஏழினோடு ஏழு
    செய்து, வெஞ் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி,
    வெய்து கால வெங் கனல்களும் வெள்குற, பொறிகள்
    பெய்து போம் வகை, இராகவன் சிலை நின்று பெயர்ந்தான். 227

  505. வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி,
    ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும், ஐ-இரண்டு அம்பு
    தோளில் நாண் உற வாங்கினன், துரந்தனன்; சுருதி
    ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான். 228

  506. அறுத்து, மற்று அவன் அயல் நின்ற அளப்ப அரும் அரக்கர்
    செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி,
    இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி,
    ஒறுத்து, மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான். 229

  507. மீனுடைக் கருங் கடல் புரை இராக்கதர் விட்ட
    ஊனுடைப் படை, இராவணன் அம்பொடும் ஓடி,
    வானரக் கடல் படா வகை, வாளியால் மாற்றி,
    தானுடைச் சரத்தால் அவர் தலைமலை தடிந்தான். 230

  508. இம்பரான் எனில், விசும்பினன் ஆகும், ஓர் இமைப்பில்;
    தும்பை சூடிய இராவணன் முகம்தொறும் தோன்றும்;
    வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும்;-மேல் நின்றான்
    அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும், அனுமன். 231

  509. போர்க்களக் காட்சிகள்

  510. ஆடுகின்றன, கவந்தமும்; அவற்றொடும் ஆடிப்
    பாடுகின்றன, அலகையும்; நீங்கிய பனைக் கைக்
    கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு
    ஓடுகின்றன, உலப்பு இல, உதிர ஆறு உவரி. 232

  511. அற்ற ஆழிய, அறுப்புண்ட அச்சின, அம்போடு
    இற்ற கொய் உளைப் புரவிய, தேர்க் குலம் எல்லாம்;
    ஒற்றை வாளியோடு உருண்டன, கருங் களிற்று ஓங்கல்;
    சுற்றும் வாசியும் துமிந்தன, அமர்க்களம் தொடர்ந்த. 233

  512. தேர் இழந்து, வெஞ் சிலைகளும் இழந்து, செந் தறுகண்
    கார் இழந்து, வெங் கலின மாக் கால்களும் இழந்து,
    சூர் இழந்து, வன் கவசமும் இழந்து, துப்பு இழந்து,
    தார் இழந்து, பின் இழந்தனர் நிருதர், தம் தலைகள். 234

  513. அரவ நுண் இடை அரக்கியர்; கணவர்தம் அற்ற,
    சிரமும் அன்னவை ஆதலின், வேற்றுமை தெரியா,
    புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி,
    கரவு இல் இன் உயிர் துறந்தனர், கவவுறத் தழுவி. 235

  514. ஆர்ப்பு அடங்கின, வாய் எலாம்; அழற் கொழுந்து ஒழுகும்
    பார்ப்பு அடங்கின, கண் எலாம்; பல வகைப் படைகள்
    தூர்ப்பு அடங்கின, கை எலாம்; தூளியின் படலைப்
    போர்ப்பு அடங்கின உலகு எலாம்; முரசு எலாம் போன. 236

  515. இராவணன் தனித்து நின்று போரிடல்

  516. ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடுந் தலை உருட்டி,
    சென்று தீர்வு இல, எனைப் பல கோடியும் சிந்தி,
    நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க,
    கொன்று வீழ்த்தினது-இராகவன் சரம் எனும் கூற்றம். 237

  517. தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி,
    பேரும் ஓர் இடம் இன்று எனத் திசைதொறும் பிறங்கி,
    காரும் வானமும் தொடுவன பிணக் குவை கண்டான்,-
    மூரி வெஞ் சிலை இராவணன்-அரா என முனிந்தான். 238

  518. முரண் தொகுஞ் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி,
    புரண்டு தோள் உறப் பொலன் கொள் நாண் வலம்படப் போக்கி,
    திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து
    இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட, எய்தான். 239

  519. முறுவல் எய்திய முகத்தினன், முளரி அம் கண்ணன்,
    மறு இலாதது ஓர் வடிக் கணை தொடுத்து, உற வாங்கி,
    இறுதி எய்தும் நாள், கால் பொர, மந்தரம் இடையிட்டு
    அறுவது ஆம் என, இராவணன் சிலையினை அறுத்தான். 240

  520. மாற்று வெஞ் சிலை வாங்கினன், வடிம்புடை நெடு நாண்
    ஏற்றுறா முனம், இடை அறக் கணைகளால் எய்தான்;
    காற்றினும் கடிது ஆவன, கதிர் மணி நெடுந் தேர்
    ஆற்று, கொய் உளைப் புரவியின் சிரங்களும் அறுத்தான். 241

  521. மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறாமுன்னம்,
    இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான்;
    கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபடக் குறைந்தான்;
    கற்றை அம் சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான். 242

  522. மாற்றுத் தேர் அவண் வந்தன வந்தன வாரா,
    வீற்று வீற்று உக, வெயில் உமிழ் கடுங் கணை விட்டான்;
    சேற்றுச் செம் புனல் படு களப் பரப்பிடைச் செங் கண்
    கூற்றும் கை எடுத்து ஆடிட, இராவணன் கொதித்தான். 243

  523. மின்னிம் பல் மணி மவுலிமேல் ஒரு கணை விட்டான்;
    அன்ன காய் கதிர் இரவிமேல் பாய்ந்த போர் அனுமன்
    என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று, அவன் தலையில்
    பொன்னின் மா மணி மகுடத்தைப் புணரியில் வீழ்த்த, 244

  524. செறிந்த பல் மணிப் பெருவனம் திசை பரந்து எரிய,
    பொறிந்தவாய், வயக் கடுஞ் சுடர்க் கணை படும் பொழுதின்,
    எறிந்த கால் பொர, மேருவின் கொடு முடி இடிந்து,
    மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது, அவ் அரக்கன் தன் மகுடம். 245

  525. அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு
    கொண்டு போகப் போய்க் குரை கடல் குளித்த அக் கொள்கை,
    மண்டலம் தொடர் வயங்கு வெங் கதிரவன், தன்னை
    உண்ட கோளொடும், ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும். 246

  526. இராவணன் மகுடம் இழந்து நாணி நிற்றல்

  527. சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான்;
    எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த
    அல்லும் ஒத்தனன்; பகலும் ஒத்தனன்; அமர் பொருமேல்,
    வெல்லும் அத்தனை அல்லது, தோற்றிலா விறலோன். 247

  528. மாற்ற அருந் தட மணி முடி இழந்த வாள் அரக்கன்,-
    ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்,
    ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப,
    போற்ற அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும்-போன்றான். 248

  529. அறம் கடந்தவர் செயல் இது என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
    நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்-
    இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன,
    வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன். 249

  530. இராமன் அறிவுரை கூறி, இன்று போய், நாளை வா எனல்

  531. நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக்
    கொன்றல் உன்னிலன், வெறுங் கை நின்றான் எனக் கொள்ளா;
    இன்று அவிந்தது போலும், உன் தீமை என்று, இசையோடு
    ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான்: 250

  532. அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
    மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
    பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
    இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி. 251

  533. உடைப் பெருங் குலத்தினரொடும், உறவொடும், உதவும்
    படைக்கலங்களும், மற்றும் நீ தேடிய பலவும்,
    அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின்,
    கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்; சிறு தொழில் கீழோய்! 252

  534. சிறையில் வைத்தவள் தன்னை விட்டு, உலகினில் தேவர்
    முறையில் வைத்து, நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்
    இறையில் வைத்து, அவற்கு ஏவல் செய்து இருத்தியேல், இன்னும்,
    தறையில் வைக்கிலென், நின் தலை வாளியின் தடிந்து. 253

  535. அல்லையாம் எனின், ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
    வல்லையாம் எனின், உனக்கு உள வலி எலாம் கொண்டு,
    நில், ஐயா! என நேர் நின்று பொன்றுதி எனினும்,
    நல்லை ஆகுதி; பிழைப்பு இனி உண்டு என நயவேல். 254

  536. ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
    பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
    நாளை வா என நல்கினன் -நாகு இளங் கமுகின்
    வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். 255

  537. மிகைப் பாடல்கள்

  538. ஆதி நாயகன் அங்கு அது கூறு முன்;
    பாத மீது பணிந்து, அருள் பற்றியே,
    காது வெம் படைக் காவலர் ஆதியோர்
    மோது போரை முயலுதல் மேயினார். 3-1

  539. அந்த வேலை, அரக்கர் அழன்று கண்,
    சிந்து தீயில் திசை எரி சேர்த்தவன்
    முந்து உரைத்த முறைமையின் முந்துற
    வந்து எதிர்த்தனர், வாயில்கள் தோறுமே. 15-1

  540. அன்ன போது அங்கு அரக்கர் பிரான் படை
    உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா,
    கன்னி மா மதிலின் புறம் காத்து, உடன்
    முன்னி வெஞ் சமர் மூண்டு எழுந்துற்றதே. 15-2

  541. ஆனை பட்ட; அடு பரி பட்டன;
    தானை பட்ட, தார் இரதம்; கணை
    சோனைபட்டது; துன் அரும் வானரச்
    சேனை பட்டது; பட்டது செங்களம். 50-1

  542. ஆர்த்த போதில், அருந் திறல் சிங்கனும்,
    சூர்த்த நோக்குடைச் சூரனும், துற்கனும்,
    கூர்த்த வெங் கதிர்க் கோபனொடு ஆதியாய்,
    வேர்த்து, அரக்கர் வியன் படை வீசினார். 55-1

  543. போர் செய் காலை, இடும்பனும் பொங்கி, அக்
    கார் செய் மேனி அரக்கனைக் கைகளால்
    மேரு மீது இடி வீழ்ந்தெனத் தாக்கலும்;
    சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான். 65-1

  544. வரு சுமாலி மகன் பிரகத்தன் அங்கு
    இரதம் ஒன்றதின் ஏறினன்; பின்னரும்
    வரி நெடுஞ் சிலை வேறு ஒன்று வாங்கியே,
    சொரியும் மா மழைபோல், சரம் தூவினான். 72-1

  545. வால் அறுந்து, வயிறு துணிந்து, இரு
    கால் அறுந்து, கழுத்து அறுந்து, அங்கம் ஆம்
    மேல் அறுந்து விளிந்தன-வெஞ் சமர்
    ஆலும் வானரச் சேனை அனேகமே. 72-2

  546. நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடுஞ் சரம்
    ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்,
    சால நொந்தனன்; நொந்து, தருக்கு அறா,
    கால வெங் கனல்போல் கனன்றான் அரோ. 72-3

  547. கனலும் வெங் கண் அரக்கன், கடுஞ் சிலை
    புனையும் தேர் பரி பாகொடு போய் அற,
    நினைவதற்குமுன் நீலன் அங்கு ஓர் நெடுந்
    தனி மராமரம் தான் கொண்டு, தாக்கினான். 72-4

  548. நிருதர் தானை உடைந்தது; நேர்கிலாத்
    தரும கோபன், சதமகன், சண்டியோடு
    எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
    செருவின், வெற்றி திகழ, வந்து எய்தினார். 79-1

  549. ஏவி, மற்று அயல் நின்ற அரக்கரை,
    தா இல் என் ஒரு தேரினைத் தம் எனக்
    கூவ, மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்,
    தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென. 93-1

  550. ஆய்வு அருஞ் சத கோடி அடல் பரி
    மாய்வு அருந் திரைபோல் வரப் பூண்டது;
    தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
    சாய, இந்திரனே பண்டு தந்தது. 93-2

  551. ஏறினான் இடத் தோள் துடித்தே; அறக்
    கூறினான், குரங்கொடு மனிதரை
    நீறது ஆக்குவென் என்று, நெருப்பு எழச்
    சீறினான், சிவன் போல அத் தேரின் மேல். 94-1

  552. அண்ட கோடி அகிலமும் இன்றொடே
    விண்டு நீங்குறும் என்று உயர் விண்ணவர்
    கொண்ட ஆகுலத்தால், மனம் கூசியே,
    புண்டரீகன் பதியிடைப் போயினார். 99-1

  553. வெள்ளம் ஆங்கு அளப்பில; வெள்ளம், வாம் பரி;
    கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்?
    உள்ளம் ஆய்ந்து ஓது இரு நூறு வெள்ளம் ஆம்
    கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே. 105-1

  554. நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
    பொருதனர், அயில் முதல் படைகள் போக்கியே;
    மரமொடு மலைகளைப் பிடுங்கி, வானரர்
    செருவிடைத் தீயவர் சிதறத் தாக்கினார். 119-1

  555. அண்ட கோளகை வெடித்து, அவனி கீண்டுற,
    எண் திசாமுகங்களும் இடிய, ஈசனைக்
    கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
    விண்டு நீங்கியதுஎனில், விளம்ப வேண்டுமோ? 123-1

  556. வச்சிர வரைப் புயத்து அரக்கன் வாங்கிய
    கைச் சிலை நாண் ஒலி கலந்த காலையில்,
    அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள்,
    உச்சிகள் பொதிர் எறிந்து, உரம் மடங்கினார். 123-2

  557. இப் புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட, அரக்கர் கோமான்
    கைப் படு சிலையை வாங்கி, கால மா மழையும் எஞ்ச,
    முப் புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன, மூளும்
    அப்பு மா மாரி சிந்தி, அண்டமும் பிளக்க ஆர்த்தான். 127-1

  558. ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து, அரிச் சேனை எல்லாம்
    தீர்த்து, ஒரு கணத்தில் போக்க, செங் கதிர்ச் சிறுவன் தானும்
    பார்த்து, உளம் அழன்று பொங்கி, பரு வலி அரக்கனோடும்
    போர்த் தொழிற்கு ஒருவன் போலப் பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்திப் புக்கான். 127-2

  559. அலக்கணுற்று அனுமன் சோர, அங்கதன் முதலாம் வீரர்
    மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு, அரக்கன், வாளி
    சிலைக்கிடை தொடுத்து, அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு, அன்னோர்
    கலக்கமுற்று இரிய, ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான். 138-1

  560. நகைத்து, இது புரிந்தான்கொல்லோ? என்பதன் முன்பு, நாண்வாய்த்
    துகைத்து ஒலி ஒடுங்காமுன்னம், சோனை அம் புயலும் எஞ்ச,
    மிகைப் படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன் மேவும்
    பகைப் புலத்து அரக்கன் சேனைப் பரவை மேல் பொழிவதானான். 143-1

  561. எரி முகப் பகழி மாரி இலக்குவன் சிலையின் கோலிச்
    சொரிதர, களிறு, பொன் தேர், துரங்கமோடு இசைந்த காலாள்
    நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படைத் தலைவர், வல்லே
    பொரு களமீதில் சிந்திப் பொன்றினர் என்ப மன்னோ. 153-1

  562. எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி,
    மதியிலி! மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம்!
    இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான்; வீரன்
    முதிர்தரு கோபம் மூள, மொழிந்து அமர் முடுக்கலுற்றான். 156-1

  563. அரக்கன் மனம் கொதித்து, ஆண்தகை அமலன் தனக்கு இளையோன்
    துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன்; அது கண்டு,
    அருக்கன் குல மருமான், அழி காலத்திடை எழு கார்
    நெருக்கும்படி, சர தாரையின் நெடு மா மழை சொரிந்தான். 158-1

  564. மாயத்து உரு எடுத்து, என் எதிர் மதியாது, இது பெரிது என்றே
    இத் தரை நின்றாய்; எனது அடல் வாரி சிலையிடையே
    தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன்;
    ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ. 171-1

  565. கல் தங்கிய முழுமார்பிடைக் கவியின் கரம் அதனால்
    உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான்,
    பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான், ஒரு படியால்
    மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தாலென உய்ந்தான். 179-1

  566. கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடுங் கரம் ஒன்றதின் வலியால்
    மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர, மேல்
    புதைத்து ஆங்குறும் இடிஏறு எனப் பொறி சிந்திய புவனம்;
    விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி விட்டான். 184-1

  567. உருத்து, வெஞ் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப,
    வரைத் தடம் புய மாருதி மயங்கியது அறிந்து, ஆங்கு
    இரைத்த திண் பரித் தேர்நின்றும் இரு நிலத்து இழியச்
    சரித்து, வானரம் மடிந்திட, சர மழை பொழிந்தான். 186-1

  568. உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றிக்
    கரத்தின் வெஞ் சிலை வளைக்குமுன், கடுஞ் சினத்து அரக்கன்
    சிரித்து, வெம் பொறி கதுவிட, திசைமுகம் அடையப்
    பொருத்தி, வெஞ் சரம் பொழிந்து, இவை விலக்கு எனப் புகன்றான். 200-1

  569. பண்டை நாள் தரு பனித் திரைப் புனல் சடை ஏற்றுக்
    கொண்ட தூயவன், கொடுந் தொழில் நிருதர்கள் குழுமி
    மண்டு வாள் அமர்க் களத்தில், அம் மலர்க் கழல் சேறல்
    கண்டு, கூசலன் நிற்கும் என்றால், அது கடனே? 216-1

  570. அனைய கண்டு, இகல் அரக்கருக்கு, இறைவன், அப் பொழுதில்,
    மனம் நெருப்பு எழக் கொதித்து, ஒரு மனிதன் என் வலியை
    நினையகிற்றிலன்; நெடுஞ் சமர் என்னொடும் துணிந்த
    வினையம் இன்றொடும் போக்குவென் என விழி சிவந்தான். 225-1

  571. அடுக்கி நின்றிடு பகிரண்டப் பரப்பு எலாம் அதிர,
    துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற, கூற்றும்
    நடுக்கம் உற்றிட, நல் அறம் ஏங்கிட, கயிலை
    எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான். 225-2

  572. எறிந்து அடல் சிலை வளைத்து, ஒரு கணத்திடை, எரியின்
    நிறம் தகும் பல நெடுஞ் சுடர்ப் பகழிகள், நெறியின்
    அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி
    செறிந்திட, திசை வானகம் வெளி இன்றிச் செறித்தான். 225-3

  573. ஐயன் நோக்கினன், நன்று! என நகைத்து, அவன் சிலைவாய்
    எய்த வெஞ் சரம் பொடிபட, யாவையும் முருக்கி,
    வெய்தின் அங்கு அவன்மேற் செல, எழு கணை விடுத்தான்;
    கைதவன், கணை ஏழு கொண்டு, அக் கணை கடிந்தான். 225-4

  574. எய்து வெள்ளம் நூற்று-இரண்டு எனத் திரண்ட கால் வயவர்,
    மொய் கொள் சேனை அம் தலைவர்கள், முரண் கரி, பரி, தேர்,
    வெய்ய வீரர்கள், அளப்பிலர் கோடியர், விறல் சேர்
    ஐயன் வெஞ் சரம் அறுத்திட, அனைவரும் அவிந்தார். 236-1

  575. அறுத்த வில் இழந்து அழியுமுன், ஐ-இரு கரத்தும்
    பொறுத்து வெஞ் சிலை, நாண் ஒலி புடைத்து, அடற் பகழி
    நிறுத்தி வீசினன்-நெடுந் திசை விசும்பொடு நிமிரக்
    கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின். 240-1

  576. நிரைக்கும் ஐ-இரு சிலையிடைச் சர மழை நிருதன்
    துரக்க, மாருதி, உடல் உறு குருதிகள் சொரிந்த;
    குரக்கு வான் படை குறைந்தன; கூசி வானவர்கள்
    இரக்கமுற்று உலைந்து ஓடினார்; இருண்டது எவ் உலகும். 240-2

  577. எறுழ் வலிப் புயத்து இராகவன் இள நகை எழும்ப,
    முறுவலித்து, அவன் பகழிகள் யாவையும் முருக்கி,
    பிறை முகச் சரம் ஐ-இரண்டு ஒரு தொடை பிடித்து, ஆங்கு
    உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான். 240-3

  578. வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
    கிளைத்த யானையும் சேனையும் கெட்டது; இங்கு
    இளைத்து நின்றனை; இன்று போய் நாளை வா,
    விளைக்கும் வெஞ் சமர் செய் விருப்பு உள்ளதேல். 255-1

  579. என்று இராமன் இயம்ப, இராவணன்
    ஒன்றும் ஓதலன்; உள்ளத்தின், என் வலி
    நின்ற நேர்மை நினைத்திலன், மானிடன்;
    நன்று சொன்னது! என நகைத்து ஏகினான். 255-2


  580. யுத்த காண்டம்

    16. கும்பகருணன் வதைப் படலம்


    இராவணன் இலங்கை மீளுதல்

  581. வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
    நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
    தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
    வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான். 1

  582. கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை எல்லாம்
    கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்,
    தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய கரங்களோடும்,
    நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான். 2

  583. மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
    காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,
    தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்
    பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான். 3

  584. நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம்
    வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;-
    கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்
    தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை. 4

  585. மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும்,
    தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும்,
    எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர்
    சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான். 5

  586. தூதரை அழைத்து வர கஞ்சுகியை இராவணன் ஏவுதல்

  587. ஆண்டு ஒரு செம் பொன் பீடத்து இருந்து, தன் வருத்தம் ஆறி,
    நீண்டு உயர் நினைப்பன் ஆகி, கஞ்சுகி அயல் நின்றானை,
    ஈண்டு, நம் தூதர் தம்மை இவ்வழித் தருதி என்றான்,
    பூண்டது ஓர் பணியன், வல்லை, நால்வரைக் கொண்டு புக்கான். 6

  588. எண்திசைச் சேனைகளையும் கொணர தூதர்களை இராவணன் பணித்தல்

  589. மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்று இவ்
    வினை அறி தொழிலர் முன்னா, ஆயிரர் விரவினாரை,
    நினைவதன் முன்னம், நீர் போய் நெடுந் திசை எட்டும் நீந்தி,
    கனை கழல் அரக்கர் தானை கொணருதிர், கடிதின் என்றான். 7

  590. ஏழ் பெருங் கடலும், சூழ்ந்த ஏழ் பெருந் தீவும், எண் இல்
    பாழி அம் பொருப்பும், கீழ்பால் அடுத்த பாதாளத்துள்ளும்,
    ஆழி அம் கிரியின் மேலும், அரக்கர் ஆனவரை எல்லாம்,
    தாழ்வு இலிர் கொணர்திர் என்றான்; அவர் அது தலைமேல் கொண்டார். 8

  591. இராவணன் வருந்தி இருத்தல்

  592. மூவகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார்,
    பாவகம் இன்னது என்று தெரிகிலர், பதைத்து விம்ம,
    தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக் கை யானை
    சேவகம் அமைந்தது என்ன, செறி மலர் அமளி சேர்ந்தான். 9

  593. பண் நிறை பவளச் செவ் வாய், பைந் தொடி, சீதை என்னும்
    பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்,
    கண் இறை கோடல் செய்யான், கையறு கவலை சுற்ற,
    உள் நிறை மானம் தன்னை உமிழ்ந்து, எரி உயிர்ப்பதானான். 10

  594. வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்;-நெடு வயிரத் தோளான்-
    நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்;
    வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல், மிதிலை வந்த,
    சானகி நகுவள்-என்றே நாணத்தால் சாம்புகின்றான். 11

  595. இராவணனிடம் மாலியவான் வினவுதல்

  596. ஆங்கு, அவன்தன் மூதாதை ஆகிய, மூப்பின் யாக்கை
    வாங்கிய வரி வில் அன்ன, மாலியவான் என்று ஓதும்
    பூங் கழல் அரக்கன் வந்து, பொலங் கழல் இலங்கை வேந்தைத்
    தாங்கிய அமளிமாட்டு, ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான். 12

  597. இருந்தவன், இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி,
    பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா,
    வருந்தினை, மனமும்; தோளும் வாடினை;-நாளும் வாடாப்
    பெருந் தவம் உடைய ஐயா!-என், உற்ற பெற்றி? என்றான். 13

  598. இராவணன் நிகழ்ந்தவை கூறல்

  599. கவை உறு நெஞ்சன், காந்திக் கனல்கின்ற கண்ணன், பத்துச்
    சிவையின் வாய் என்னச் செந் தீ உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன்,
    நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
    சுவை அறப் புலர்ந்த நாவான், இனையன சொல்லலுற்றான்: 14

  600. சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்தம்மோடு எம்மோடு
    அங்கம் வந்து உற்றது ஆக, அமரர் வந்து உற்றார் அன்றே;
    கங்கம் வந்து உற்ற செய்ய களத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்
    பங்கம் வந்துற்றது அன்றி, பழியும் வந்துற்றது அன்றே? 15

  601. முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக,
    கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும்,
    வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின்,
    இளையவன் தனக்கும் ஆற்றாது, என் பெருஞ் சேனை-நம்ப! 16

  602. எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
    பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
    பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
    தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை. 17

  603. மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை
    நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்று-இரண்டு எனினும், நேரே
    குலை உறக் குளித்த வாளி, குதிரையைக் களிற்றை ஆளைத்
    தலை உறப் பட்டது அல்லால், உடல்களில் தங்கிற்று உண்டோ ? 18

  604. போய பின், அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்,
    ஓயும் என்று உரைக்கலாமோ, ஊழி சென்றாலும்? ஊழித்
    தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்; சொல்லும்,
    வாயையும் தீய்க்கும்; முன்னின், மனத்தையும் தீய்க்கும் மன்னோ. 19

  605. மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால்,
    பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால்,
    ஆருமே அவற்றின் ஆற்றல்; ஆற்றுமேல், அனந்தகோடி,
    மேருவும், விண்ணும், மண்ணும், கடல்களும் வேண்டும் அன்றே? 20

  606. வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும்
    தெரிகிலர், அமரரேயும்; ஆர் அவன் செய்கை தேர்வார்?
    பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று
    கருதவே, உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே. 21

  607. நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச்
    சொல் என, செய்யுள் கொண்ட தொடை என, தொடையை நீக்கி
    எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத
    பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ. 22

  608. இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும்
    மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்;
    அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
    நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்? 23

  609. பேய் இருங் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
    ஏயவன் தோள்கள் எட்டும், இந்திரன் இரண்டு தோளும்,
    மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
    ஆயிரம் தோளும், அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா. 24

  610. சீர்த்த வீரியராய் உள்ளார், செங் கண் மால் எனினும், யான் அக்
    கார்த்தவீரியனை நேர்வார் உளர் எனக் கருதல் ஆற்றேன்;
    பார்த்த போது, அவனும், மற்று அத் தாபதன் தம்பி பாதத்து
    ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார்? 25

  611. முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ் சிலையும், வீரன்
    அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக் கொளலும் ஆகா;
    ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை; வேதம்
    தப்பின போதும், அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா. 26

  612. உற்பத்தி அயனே ஒக்கும்; ஓடும்போது அரியே ஒக்கும்;
    கற்பத்தின் அரனே ஒக்கும், பகைஞரைக் கலந்த காலை;
    சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ? என்னைத் தீராத்
    தற்பத்தைத் துடைத்த என்றால்; பிறிது ஒரு சான்றும் உண்டோ ? 27

  613. குடக்கதோ? குணக்கதேயோ? கோணத்தின் பாலதேயோ?
    தடத்த பேர் உலகத்தேயோ? விசும்பதோ? எங்கும்தானோ?
    வடக்கதோ? தெற்கதோ? என்று உணர்ந்திலன்;-மனிதன் வல்வில்-
    இடத்ததோ? வலத்ததோ? என்று உணர்ந்திலேன், யானும் இன்னும். 28

  614. ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே?
    ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே, அமரின் ஆற்றல்!-
    காற்றையே மேற்கொண்டானோ? கனலையே கடாவினானோ?
    கூற்றையே ஊர்கின்றானோ?-குரங்கின்மேல் கொண்டு நின்றான். 29

  615. போய் இனித் தெரிவது என்னே? பொறையினால் உலகம் போலும்
    வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி,
    தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்,
    நாய் எனத் தகுதும் அன்றே, காமனும் நாமும் எல்லாம். 30

  616. வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழு வாள் அங்கை
    ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி,
    நாசம் வந்து உற்ற போதும், நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;-
    பூசல் வண்டு உறையும் தாராய்!-இது இங்குப் புகுந்தது என்றான். 31

  617. மாலியவான் உரை

  618. முன் உரைத்தேனை வாளா முனிந்தனை; முனியா உம்பி
    இன் உரைப் பொருளும் கேளாய்; ஏது உண்டு எனினும், ஓராய்;
    நின் உரைக்கு உரை வேறு உண்டோ ?-நெருப்பு உரைத்தாலும், நீண்ட
    மின் உரைத்தாலும், ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய்! 32

  619. உளைவன எனினும், மெய்ம்மை உற்றவர், முற்றும் ஓர்ந்தார்,
    விளைவன சொன்னபோதும், கொள்கிலை; விடுதி கண்டாய்;
    கிளைதரு சுற்றம், வெற்றி, கேண்மை, நம் கல்வி, செல்வம்,
    களைவு அருந் தானையோடும் கழிவது காண்டி என்றான். 33

  620. மகோதரன் உரை

  621. ஆயவன் உரைத்தலோடும், அப் புறத்து இருந்தான், ஆன்ற
    மாயைகள் பலவும் வல்ல, மகோதரன் கடிதின் வந்து,
    தீ எழ நோக்கி, என் இச் சிறுமை நீ செப்பிற்று? என்னா,
    ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான்: 34

  622. நன்றி ஈது என்று கொண்டால், நயத்தினை நய்ந்து, வேறு
    வென்றியே ஆக, மற்றுத் தோற்று உயிர் விடுதல் ஆக,
    ஒன்றிலே நிற்றல் போலாம், உத்தமர்க்கு உரியது; ஒல்கிப்
    பின்றுமேல், அவனுக்கு அன்றோ, பழியொடு நரகம் பின்னை? 35

  623. திரிபுரம் எரிய, ஆங்கு ஓர் தனிச் சரம் துரந்த செல்வன்,
    ஒருவன் இப் புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்,
    பொருது, உனக்கு உடைந்து போனார்; மானிடர் பொருத போர்க்கு
    வெருவுதி போலும்; மன்ன! கயிலையை வெருவல் கண்டாய்! 36

  624. வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
    நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே
    என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
    புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ?-புகழ்க்கு மேலோய்! 37

  625. தேவியை விடுதிஆயின், திறல் அது தீரும் அன்றே;
    ஆவியை விடுதல் அன்றி, அல்லது ஒன்று ஆவது உண்டோ?
    தா அரும் பெருமை அம்மா நீ இனித் தாழ்த்தது என்னே?
    காவல! விடுதி, இன்று இக் கையறு கவலை; நொய்தின். 38

  626. இனி இறை தாழ்த்தி ஆயின், இலங்கையும் யாமும் எல்லாம்
    கனியுடை மரங்கள் ஆக, கவிக் குலம் கடக்கும் காண்டி;
    பனியுடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத்
    துனி உழந்து அயர்வது என்னே? துறத்தியால் துன்பம் என்றான். 39

  627. முன், உனக்கு, இறைவர் ஆன மூவரும் தோற்றார்; தேவர்
    பின், உனக்கு ஏவல் செய்ய, உலகு ஒரு மூன்றும் பெற்றாய்;
    புல் நுனைப் பனி நீர் அன்ன மனிசரைப் பொருள் என்று உன்னி,
    என், உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது?-எந்தாய்! 40

  628. ஆங்கு அவன் தன்னைக் கூவி, ஏவுதிஎன்னின், ஐய!
    ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே;
    தாங்குவர் செரு முன் என்னின், தாபதர் உயிரைத் தானே
    வாங்கும் என்று இனைய சொன்னான்; அவன் அது மனத்துக் கொண்டான். 41

  629. இராவணன் மகோதரனைப் புகழ்தல்

  630. பெறுதியே, எவையும் சொல்லி;-பேர் அறிவாள்!-சீரிற்று
    அறிதியே; என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ?
    உறுதியே சொன்னாய் என்னா, உள்ளமும் வேறுபட்டான்;-
    இறுதியே இயைவது ஆனால், இடை, ஒன்றால் தடை உண்டாமோ? 42

  631. வீரர்கள் கும்பகருணனைத் துயில் எழுப்புதல்

  632. நன்று இது கருமம் என்னா, நம்பியை நணுக ஓடிச்
    சென்று இவண் தருதிர் என்றான்; என்றலும், நால்வர் சென்றார்;
    தென் திசைக் கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன,
    குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார். 43

  633. கிங்கரர் நால்வர் சென்று, அக் கிரி அனான் கிடந்த கோயில்
    மங்குல் தோய் வாயில் சார்ந்து, மன்ன! நீ உணர்தி என்ன,
    தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க, பின்னும்
    வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார்: 44

  634. கிங்கரர் கூற்றும் இராவணன் செயலும்

  635. உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
    இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
    கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
    உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! 45

  636. கும்பகருணனை துயிலெழுப்பல்

  637. என்று சொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய்,
    மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்
    அன்று, கொள்கை கேண்மின் என்று மாவொடு ஆளி ஏவினான்,
    ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர். 46

  638. அனைய தானை அன்று செல்ல, ஆண்டு நின்று பேர்ந்திலன்;
    இனைய சேனை மீண்டது என்று இராவணற்கு இயம்பலும்
    வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்மின் என்று,
    இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான். 47

  639. சென்றனர் பத்து நூற்றுச் சீரிய வீரர் ஓடி
    மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற
    இன்றுஇவன் முடிக்கும் என்னா, எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
    குன்று என உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில் புக்கார். 48

  640. திண் திறல் வீரன் வாயில் திறத்தலும், சுவாத வாதம்
    மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக,
    கொண்டுறு தடக் கை பற்றி, குலமுடை வலியினாலே
    கண் துயில் எழுப்ப எண்ணி, கடிது ஒரு வாயில் புக்கார். 49

  641. ஓதநீர் விரிந்ததென்ன உறங்குவான் நாசிக் காற்றால்
    கோது இலா மலைகள் கூடி, வருவது போவதாக,
    ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர், துணுக்கமுற்றார்;
    போதுவான் அருகு செல்லப் பயந்தனர், பொறி கொள் கண்ணார். 50

  642. இங்கு இவன் தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது? என்று,
    துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு, மெய் துணுக்கமுற்றார்;
    அங்கைகள் தீண்ட அஞ்சி, ஆழ் செவிஅதனினூடு,
    சங்கொடு தாரை, சின்னம், சமைவுறச் சாற்றலுற்றார். 51

  643. கோடு, இகல் தண்டு, கூடம், குந்தம், வல்லோர்கள் கூடி,
    தாடைகள், சந்து, மார்பு, தலை எனும் இவற்றில் தாக்கி,
    வாடிய கையர் ஆகி, மன்னவற்கு உரைப்ப, பின்னும்
    நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும், விரைவின் என்றான். 52

  644. கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
    மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை, மாலை மான
    விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
    தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான். 53

  645. கொய்ம் மலர்த் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி, ஐய!
    உய்யலாம் வகைகள் என்று, அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்;
    கய் எலாம் வலியும் ஓய்ந்த; கவன மா காலும் ஓய்ந்த;
    செய்யலாம் வகை வேறு உண்டோ ? செப்புதி, தெரிய என்றார். 54

  646. இடை பேரா இளையானை, இணை ஆழி மணி நெடுந் தேர்
    படை பேரா வரும்போதும், பதையாத உடம்பானை,
    மடை பேராச் சூலத்தால், மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
    தொடை பேராத் துயிலானை, துயில் எழுப்பிக் கொணர்க! என்றான். 55

  647. என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,
    வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி,
    நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,
    பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 56

  648. மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை
    தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க,
    பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய
    யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 57

  649. விண்ணினை இடறும் மோலி; விசும்பினை நிறைக்கும் மேனி;
    கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்;
    எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன்,
    மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான். 58

  650. கும்பகருணன் உணவு அருந்தல்

  651. உறக்கம் அவ் வழி நீங்கி, உணத் தகும்
    வறைக்கு அமைந்தன ஊனொடு, வாக்கிய
    நறைக் குடங்கள் பெறான், கடை நக்குவான்,
    இறக்க நின்ற முகத்தினை எய்துவான்; 59

  652. ஆறு நூறு சகடத்து அடிசிலும்,
    நூறு நூறு குடம் களும், நுங்கினான்;
    ஏறுகின்ற பசியை எழுப்பினான்-
    சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 60

  653. எருமை ஏற்றை ஓர் ஈர்-அறுநூற்றையும்
    அருமை இன்றியே தின்று, இறை ஆறினான்,
    பெருமை ஏற்றது கோடும் என்றே-பிறங்கு
    உருமைஏற்றைப் பிசைந்து, எரி ஊதுவான். 61

  654. கும்பகருணன் தோற்றம்

  655. இருந்த போதும், இராவணன் நின்றெனத்
    தெரிந்த மேனியன், திண் கடலின் திரை
    நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்,
    சொரிந்த சோரி தன் வாய் வர, தூங்குவான்; 62

  656. உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
    உதிர, வாரி நுகர்வது ஒர் ஊணினான்;
    கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
    கதிர வாள் வயிரக் கழற் காலினான்; 63

  657. இரும் பசிக்கு மருந்து என, எஃகினோடு
    இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்;
    வரும் களிற்றினைத் தின்றனன்; மால் அறா
    அருங் களில் திரிகின்றது ஓர் ஆசையான்; 64

  658. சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
    சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
    காலன்மேல் நிமிர் மத்தன்; கழல் பொரு
    காலன்; மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்; 65

  659. எயில் தலைத் தகர, தலத்து இந்திரன்
    எயிறு அலைத்த கரதலத்து, எற்றினான்;
    அயில் தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
    அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான். 66

  660. உடல் கிடந்துழி, உம்பர்க்கும் உற்று, உயிர்,
    குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
    கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ்
    வட கடுங் கனல்போல் மயிர்ப் பங்கியான்; 67

  661. திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட,
    மிக்கு அடங்கிய வெங் கதிர் அங்கிகள்
    புக்கு அடங்கிய மேருப் புழை என,
    தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்; 68

  662. காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
    தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து, உடல்
    ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான்;
    பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்; 69

  663. இராவணன் கும்பகருணன் சந்திப்பு

  664. கூயினன் நும் முன் என்று அவர் கூறலும்,
    போயினன், நகர் பொம்மென்று இரைத்து எழ;
    வாயில் வல்லை நுழைந்து, மதி தொடும்
    கோயில் எய்தினன், குன்று அன கொள்கையான். 70

  665. நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து
    அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
    கொலை கிடந்த வேல் கும்பகருணன், ஓர்
    மலை கிடந்தது போல, வணங்கினான். 71

  666. இராவணன் கும்பகருணனைத் தழுவி, உணவு அளித்துப் போர்க்கோலம் செய்தல்

  667. வன் துணைப் பெருந் தம்பி வணங்கலும்,
    தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்-
    நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்
    சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான். 72

  668. உடன் இருத்தி, உதிரத்தொடு ஒள் நறைக்
    குடன் நிரைத்தவை ஊட்டி, தசைக் கொளீஇ
    கடல் நுரைத் துகில் சுற்றி, கதிர்க் குழாம்
    புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான். 73

  669. பேர விட்ட பெரு வலி இந்திரன்
    ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்,
    சோர விட்ட சுடர் மணி ஓடையை
    வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 74

  670. மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட,
    தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
    கையின் நாகம் என, கடல் மேனியில்,
    தெய்வம் நாறு செஞ் சாந்தமும் சேர்த்தினான். 75

  671. விடம் எழுந்ததுபோல், நெடு விண்ணினைத்
    தொட உயர்ந்தவன் மார்பிடைச் சுற்றினான்,
    இடபம் உந்தும், எழில் இரு-நான்கு தோள்,
    கடவுள் ஈந்த கவசமும் கட்டினான். 76

  672. கும்பகருணன்-இராவணன் உரையாடல்

  673. அன்ன காலையின், ஆயத்தம் யாவையும்
    என்ன காரணத்தால்? என்று இயம்பினான்-
    மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத்
    துன்னு தோளும், இடம் துடியாநின்றான். 77

  674. வானரப் பெருந் தானையர், மானிடர்,
    கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
    ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
    போனகத் தொழில் முற்றுதி, போய் என்றான். 78

  675. கும்பகருணனின் அறிவுரை

  676. ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச்
    சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
    வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ்
    போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே? 79

  677. கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
    சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
    திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
    விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80

  678. கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
    சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை
    வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
    புல்லலாம் என்பது போலுமால்-ஐயா! 81

  679. புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
    குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
    வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
    நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். 82

  680. கொடுத்தனை, இந்திரற்கு உலகும் கொற்றமும்;
    கெடுத்தனை, நின் பெருங் கிளையும்; நின்னையும்
    படுத்தனை; பல வகை அமரர்தங்களை
    விடுத்தனை; வேரு இனி வீடும் இல்லையால். 83

  681. அறம் உனக்கு அஞ்சி, இன்று ஒளித்ததால்; அதன்
    திறம் முனம் உழத்தலின், வலியும் செல்வமும்
    நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி, நீ
    இற, முன் அங்கு, யார் உனை எடுத்து நாட்டுவார்? 84

  682. தஞ்சமும் தருமமும் தகவுமே, அவர்
    நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு
    வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
    உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ? 85

  683. காலினின் கருங் கடல் கடந்த காற்றது
    போல்வன குரங்கு உள; சீதை போகிலன்;
    வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
    கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ? 86

  684. என்று கொண்டு இனையன இயம்பி, யான் உனக்கு
    ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,
    நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்,
    பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்! 87

  685. தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின்
    ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
    உய் திறம்; அன்று எனின், உளது, வேறும் ஓர்
    செய் திறம்; அன்னது தெரியக் கேட்டியால்: 88

  686. பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
    சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
    மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
    உந்துதல் கருமம் என்று உணரக் கூறினான். 89

  687. இராவணன் சினந்து உரைத்தல்

  688. உறுவது தெரிய அன்று, உன்னைக் கூயது;
    சிறு தொழில் மனிதரைக் கோறி, சென்று; எனக்கு
    அறிவுடை அமைச்சன் நீ அல்லை, அஞ்சினை;
    வெறுவிது, உன் வீரம் என்று இவை விளம்பினான்; 90

  689. மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
    பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
    இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் எல்லியும்
    உறங்குதி, போய் என, உளையக் கூறினான். 91

  690. மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்
    கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
    ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
    யான் அது புரிகிலேன்; எழுக போக! என்றான். 92

  691. தருக, என் தேர், படை; சாற்று, என் கூற்றையும்;
    வருக, முன் வானமும் மண்ணும் மற்றவும்;
    இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
    பொருக, வெம் போர் எனப் போதல் மேயினான். 93

  692. கும்பகருணன் போருக்கு எழுதல்

  693. அன்னது கண்டு, அவன் தம்பியானவன்
    பொன் அடி வணங்கி, நீ பொறுத்தியால் என,
    வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்,
    இன்னம் ஒன்று உரை உளது என்னக் கூறினான்: 94

  694. வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி
    நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
    பொன்றுவென்; பொன்றினால், பொலன் கொள் தோளியை,
    நன்று என, நாயக விடுதி; நன்றுஅரோ. 95

  695. இந்திரன் பகைஞனும், இராமன் தம்பி கை
    மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
    தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
    அந்தரம் உணர்ந்து, உனக்கு உறுவது ஆற்றுவாய். 96

  696. என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
    உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்,
    பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை-
    தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே. 97

  697. இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன
    குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ!
    அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!
    பெற்றனென் விடை என, பெயர்ந்து போயினான். 98

  698. படைகளை கும்பகருணனுடன் செல்ல இராவணன் பணித்தல்

  699. அவ் வழி இராவணன் அனைத்து நாட்டமும்
    செவ் வழி நீரொடும் குருதி தேக்கினான்;
    எவ் வழியோர்களும் இரங்கி ஏங்கினார்;
    இவ் வழி அவனும் போய், வாயில் எய்தினான். 99

  700. இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக!
    பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால்,
    வரும் படை வந்தது, வானுளோர்கள் தம்
    சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே. 100

  701. படைப் பெருக்கம்

  702. தேர்க் கொடி, யானையின் பதாகை, சேண் உறு
    தார்க் கொடி என்று இவை தகைந்து வீங்குவ-
    போர்க் கொடுந் தூளி போய்த் துறக்கம் பண்புற,
    ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ. 101

  703. எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட
    நண்ணுறு பொறிகளும், படைக்கு நாயகர்
    கண்ணுறு பொறிகளும், கதுவ, கண் அகல்
    விண்ணுறு மழை எலாம் கரிந்து, வீழ்ந்தவால். 102

  704. தேர் செல, கரி செல, நெருக்கிச் செம் முகக்
    கார் செல, தேர் செல, புரவிக் கால் செல,
    தார் செல, கடை செல, சென்ற தானையும்,
    பார் செலற்கு அரிது என, விசும்பில் பாய்ந்ததால். 103

  705. கும்பகருணன் புறப்பாடு

  706. ஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம்,
    ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம்,
    மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது
    ஏய் இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான். 104

  707. தோமரம், சக்கரம், சூலம், கோல், மழு,
    நாம வேல், உலக்கை, வாள், நாஞ்சில், தண்டு, எழு,
    வாம வில், வல்லையம், கணையம், மற்று உள
    சேம வெம் படை எலாம் சுமந்து, சென்றவால். 105

  708. நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
    குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு,
    பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர்,
    முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார். 106

  709. ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
    பின்ற அரும் பிலனிடைப் பெய்யுமாறு போல்,
    வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே,
    சென்றனன், யாவரும் திடுக்கம் எய்தவே. 107

  710. கணம் தரு குரங்கொடு கழிவது அன்று, இது;
    நிணம் தரு நெடுந் தடிக்கு உலகு நேருமோ?
    பிணம் தலைப்பட்டது; பெயர்வது, எங்கு இனி;
    உணர்ந்தது கூற்றம் என்று, உம்பர் ஓடினார். 108

  711. கும்பகருணனைப் பற்றி இராமன் வீடணனிடம் வினவல்

  712. பாந்தளின் நெடுந் தலை வழுவி, பாரொடும்
    வேந்து என விளங்கிய மேரு மால் வரை
    போந்ததுபோல் பொலந் தேரில் பொங்கிய
    ஏந்தலை, ஏந்து எழில் இராமன் நோக்கினான். 109

  713. வீணை என்று உணரின், அஃது அன்று; விண் தொடும்
    சேண் உயர் கொடியது, வய வெஞ் சீயமால்;
    காணினும், காலின் மேல் அரிய காட்சியன்;
    பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்? 110

  714. தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
    நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
    தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
    ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்? 111

  715. எழும் கதிரவன் ஒளி மறைய, எங்கணும்
    விழுங்கியது இருள், இவன் மெய்யினால்; வெரீஇ,
    புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது;
    அழுங்கல் இல் சிந்தையாய்! ஆர் கொலாம் இவன்? 112

  716. அரக்கன் அவ் உரு ஒழித்து, அரியின் சேனையை
    வெருக் கொளத் தோன்றுவான், கொண்ட வேடமோ?
    தெரிக்கிலேன் இவ் உரு; தெரியும் வண்ணம், நீ
    பொருக்கென, வீடண! புகறியால் என்றான். 113

  717. வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல்

  718. ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய!
    பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்;
    கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
    கூரிய சூலத்தான் என்று, அவன் நிலை கூறலுற்றான்; 114

  719. தவன் நுணங்கியரும் வேதத் தலைவரும் உணரும் தன்மைச்
    சிவன் உணர்ந்து, அலரின் மேலைத் திசைமுகன் உணரும் தேவன் -
    அவன் உணர்ந்து எழுந்த காலத்து, அசுரர்கள் படுவது எல்லாம்,
    இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர், எந்தாய்! 115

  720. ஆழியாய்! இவன் ஆகுவான்,
    ஏழை வாழ்வுடை எம்முனோன்
    தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
    ஊழி நாளும் உறங்குவான், 116

  721. காலனார் உயிர்க் காலனால்;
    காலின் மேல் நிமிர் காலினான்;
    மாலினார் கெட, வாகையே,
    சூலமே கொடு, சூடினான்; 117

  722. தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
    ஓங்கல் ஒன்றினை, உம்பர்கோன்
    வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
    தூங்க, நின்று சுழற்றினான்; 118

  723. கழிந்த தீயொடு காலையும்
    பிழிந்து சாறு கொள் பெற்றியான்;
    அழிந்து மீன் உக, ஆழி நீர்
    இழிந்து, காலினின் எற்றுவான்; 119

  724. ஊன் உயர்ந்த உரத்தினான்,
    மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
    தான் உயர்ந்த தவத்தினான்,
    வான் உயர்ந்த வரத்தினான்; 120

  725. திறம் கொள் சாரி திரிந்த நாள்,
    கறங்கு அலாது கணக்கு இலான்;
    இறங்கு தாரவன் இன்று காறு
    உறங்கலால், உலகு உய்ந்ததால்; 121

  726. சூலம் உண்டு; அது சூர் உளோர்
    காலம் உண்டது; கைக் கொள்வான்;
    ஆலம் உண்டவன் ஆழிவாய்,
    ஞாலம் உண்டவ! நல்கினான்; 122

  727. மின்னின் ஒன்றிய விண்ணுளோர்,
    முன் நில் என்று, அமர் முற்றினார்-
    என்னின், என்றும் அவ் எண்ணிலார்
    வென்னில் அன்றி, விழித்திலான்; 123

  728. தருமம் அன்று இதுதான்; இதால்
    வரும், நமக்கு உயிர் மாய்வு எனா,
    உருமின் வெய்யவனுக்கு உரை
    இருமை மேலும் இயம்பினான். 124

  729. மறுத்த தம்முனை, வாய்மையால்
    ஒறுத்தும், ஆவது உணர்த்தினான்;
    வெறுத்தும், மாள்வது மெய் எனா
    இறுத்து, நின் எதிர் எய்தினான். 125

  730. நன்று இது அன்று நமக்கு எனா,
    ஒன்று நீதி உணர்த்தினான்;
    இன்று காலன் முன் எய்தினான்
    என்று சொல்லி, இறைஞ்சினான். 126

  731. சுக்கிரீவன், கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல்

  732. என்று அவன் உரைத்தலோடும், இரவி சேய், இவனை இன்று
    கொன்று ஒரு பயனும் இல்லை; கூடுமேல், கூட்டிக்கொண்டு
    நின்றது புரிதும்; மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்;
    நன்று என நினைந்தேன் என்றான்; நாதனும், நயன் இது என்றான். 127

  733. கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல்

  734. ஏகுதற்கு உரியார் யாரே? என்றலும், இலங்கை வேந்தன்,
    ஆகின், மற்று அடியனே சென்று, அறிவினால், அவனை உள்ளம்
    சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல், சேர்ப்பென் என்றான்;
    மேகம் ஒப்பானும், நன்று, போக! என்று விடையும் ஈந்தான். 128

  735. தந்திரக் கடலை நீந்தி, தன் பெரும் படையைச் சார்ந்தான்;
    வெந் திறலவனுக்கு, ஐய! வீடணன் விரைவில் உன்பால்
    வந்தனன் என்னச் சொன்னார்; வரம்பு இலா உவகை கூர்ந்து,
    சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்ந்தான். 129

  736. கும்பகருணன் வீடணனிடம் நீ வந்தது தகுதி அன்று எனல்

  737. முந்தி வந்து இறைஞ்சினானை, முகந்து உயிர் மூழ்கப் புல்லி,
    உய்ந்தனை, ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன் தன்
    சிந்தனை முழுதும் சிந்த, தெளிவு இலார் போல மீள
    வந்தது என், தனியே? என்றான், மழையின் நீர் வழங்கு கண்ணான். 130

  738. அவயம் நீ பெற்றவாறும், அமரரும் பெறுதல் ஆற்றா,
    உவய லோகத்தினுள்ள சிறப்பும், கேட்டு உவந்தேன், உள்ளம்;
    கவிஞரின் அறிவு மிக்கோய்! காலன் வாய்க் களிக்கின்றேம்பால்
    நவை உற வந்தது என், நீ? அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? 131

  739. குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று உன்னைக் கொண்டே
    புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று என்னா,
    வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை
    உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம், அந்தோ! 132

  740. அறப் பெருந் துணைவர், தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத்
    துறப்பது துணியார், தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்;
    இறப்பு எனும் பதத்தை விட்டாய்; இராமன் என்பளவும் மற்று இப்
    பிறப்பு எனும் புன்மை இல்லை; நினைந்து, என்கொல் பெயர்ந்த வண்ணம்? 133

  741. அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று, அவன் தனாலே
    மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி, மற்றும்,
    திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ!
    பிறர் மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்? 134

  742. நீதியும், தருமம் நிறை நிலைமையும், புலமைதானும்,
    ஆதி அம் கடவுளாலே அருந் தவம் ஆற்றிப் பெற்றாய்;
    வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்;
    சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்,-தக்கோய்! 135

  743. ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்;
    மாற்ற அருந் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்;
    கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற;
    தோற்ற எம் பக்கல், ஐய! வெவ் வலி தொலைய வந்தாய். 136

  744. ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே
    உய்கிலைஎன்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
    எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,
    கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய். 137

  745. வருவதும், இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை;
    திருவுறை மார்பனோடும் புகுந்து, பின் என்றும் தீராப்
    பொருவ அருஞ் செல்வம் துய்க்கப் போதுதி, விரைவின் என்றான்,
    கருமம் உண்டு உரைப்பது என்றான்; உரை என, கழறலுற்றான்; 138

  746. இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல்

  747. இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
    அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி,
    மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
    உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139

  748. எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
    நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்;
    உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன்
    மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி! 140

  749. போதலோ அரிது; போனால், புகலிடம் இல்லை; வல்லே,
    சாதலோ சரதம்; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
    ஆதலால், உளதாம் ஆவி அநாயமே உகுத்து என்? ஐய!
    வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும். 141

  750. தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,
    தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?
    நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ?
    தூயவை துணிந்த போது, பழி வந்து தொடர்வது உண்டோ ? 142

  751. மக்களை, குரவர்தம்மை, மாதரை மற்றுளோரை,
    ஒக்கும் இன் உயிர் அன்னாரை, உதவி செய்தாரோடு ஒன்ற,
    துக்கம், இத் தொடர்ச்சி என்று, துறப்பரால், துணிவு பூண்டோர்;
    மிக்கது நலனே ஆக, வீடுபேறு அளிக்கும் அன்றே! 143

  752. தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர்
    வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மைதானோ?
    ஆய் வினை உடையை அன்றே? அறத்தினை நோக்கி, ஈன்ற
    தாய் வினை செய்ய அன்றோ, கொன்றனன், தவத்தின் மிக்கான்? 144

  753. கண்ணுதல், தீமை செய்ய, கமலத்து முளைத்த தாதை
    அண்ணல்தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே?
    புண் உறு புலவு வேலோய்! பழியொடும் பொருந்தி, பின்னை,
    எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ? 145

  754. உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
    சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால், துயரம் தீர்வர்;
    கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்
    மடலுடை அலங்கல் மார்ப! மதி உடையவர்க்கு மன்னோ! 146

  755. காக்கலாம் நும் முன் தன்னை எனின், அது கண்டது இல்லை;
    ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும், ஆவது இல்லை;
    தீக் கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம்; செருவில் ஆவி
    போக்கலாம்; புகலாம், பின்னை நரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ ? 147

  756. மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை; மண்ணின் மேலா
    இறங்கினை; இன்றுகாறும் இளமையும் வறிதே ஏக,
    உறங்கினை என்பது அல்லால், உற்றது ஒன்று உளதோ? என், நீ
    அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது?-ஐயா! 148

  757. திரு மறு மார்பன் நல்க, அனந்தரும் தீர்ந்து, செல்வப்
    பெருமையும் எய்தி, வாழ்தி; ஈறு இலா நாளும் பெற்றாய்;
    ஒருமையே அரசு செய்வாய்; உரிமையே உனதே; ஒன்றும்
    அருமையும் இவற்றின் இல்லை; காலமும் அடுத்தது, ஐயா! 149

  758. தேவர்க்கும் தேவன் நல்க, இலங்கையில் செல்வம் பெற்றால்,
    ஏவர்க்கும் சிறியை அல்லை; யார், உனை நலியும் ஈட்டார்?-
    மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார், அறத்தை முற்றும்
    காவற்குப் புகுந்து நின்றார், காகுத்த வேடம் காட்டி! 150

  759. உன் மக்கள் ஆகி உள்ளார், உன்னொடும் ஒருங்கு தோன்றும்
    என் மக்கள் ஆகி உள்ளார், இக் குடிக்கு இறுதி சூழ்ந்தான்-
    தன் மக்கள் ஆகி உள்ளார், தலையொடும் திரிவர் அன்றே-
    புன் மக்கள் தருமம் பூணாப் புல மக்கள் தருமம் பூண்டால்? 151

  760. முனிவரும் கருணை வைப்பர்; மூன்று உலகத்தும் தோன்றி
    இனி வரும் பகையும் இல்லை; ஈறு உண்டு என்று இரங்க வேண்டா;
    துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்;-
    கனி வரும் காலத்து, ஐய! பூக் கொய்யக் கருதலாமோ? 152

  761. வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி, விட்டான்;
    காதலால், என்மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே;
    ஆதலால், அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய!
    போதுவாய் நீயே என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான். 153

  762. கும்பகருணனின் மறுப்புரை

  763. தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய,
    பம்பு பொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
    தம்பியை எடுத்து, மார்பில் தழுவி, தன் தறுகணூடு
    வெம் புணீர் சொரிய நின்றான், இனையன விளம்பலுற்றான்; 154

  764. நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
    போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
    தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
    கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி, 155

  765. மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால், நீ
    உலைவு இலாத் தருமம் பூண்டாய்; உலகு உளதனையும் உள்ளாய்;
    தலைவன் நீ, உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்;
    புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால். 156

  766. கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத்
    திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்,
    பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி,
    ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா. 157

  767. தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும்
    வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும்,
    உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,
    தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்? 158

  768. அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக,
    பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெருங் கிரி நெருங்கப் பேர்த்த
    பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப, கூசி,
    துணை இன்றிச் சேரல் நன்றோ, தோற்றுள கூற்றின் சூழல்? 159

  769. செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,
    வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,
    அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!
    கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்! 160

  770. அனுமனை, வாலி சேயை, அருக்கன் சேய்தன்னை, அம் பொன்
    தனு உடையவரை, வேறு ஓர் நீலனை, சாம்பன் தன்னை,
    கனி தொடர் குரங்கின் சேனைக் கடலையும், கடந்து மூடும்
    பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; பார்த்தி! 161

  771. ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட,
    சூலம் கொண்டு ஓடி, வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற,
    நீலம் கொள் கடலும் ஓட, நெருப்பொடு காலும் ஓட,
    காலம் கொள் உலகும் ஓட, கறங்கு எனத் திரிவென்; காண்டி! 162

  772. செருவிடை அஞ்சார் வந்து, என் கண் எதிர் சேர்வர் ஆகின்,
    கரு வரை, கனகக் குன்றம், என்னல் ஆம் காட்சி தந்த
    இருவரும் நிற்க, மற்று அங்கு யார் உளர், அவரை எல்லாம்,
    ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில் என்றான். 163

  773. தாழ்க்கிற்பாய் அல்லை; என் சொல் தலைக்கொளத் தக்கது என்று
    கேட்கிற்பாய் ஆகின், எய்தி, அவரொடும் கெழீஇய நட்பை
    வேட்கிற்பாய்; இனி, ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று,
    சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும் தொழ நிற்பாய்! என்னச் சொன்னான். 164

  774. போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
    வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை
    ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி,
    மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165

  775. ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்
    போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;
    சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,
    ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்! 166

  776. வீடணன் விடை பெறுதல்

  777. என்று, அவன் தன்னை மீட்டும் எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
    நின்று நின்று, இரங்கி ஏங்கி, நிறை கணால் நெடிது நோக்கி,
    இன்றொடும் தவிர்ந்தது அன்றே, உடன்பிறப்பு என்று விட்டான்;
    வென்றி வெந் திறலினானும், அவன் அடித்தலத்து வீழ்ந்தான். 167

  778. வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும்
    உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; உரைசெய்து இன்னும்
    பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான்.
    குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப. 168

  779. வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல்

  780. கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டு, காலும் விட்டான்;
    பிள்ளைமை துறந்தான் என்னாப் பேதுறும் நிலையன் ஆகி,
    வெள்ள நீர் வேலைதன்னில் வீழ்ந்த நீர் வீழ, வெங் கண்
    உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான். 169

  781. வீடணன் உரையைக் கேட்ட இராமன் கூற்று

  782. எய்திய நிருதர் கோனும், இராமனை இறைஞ்சி, எந்தாய்!
    உய் திறம் உடையார்க்கு அன்றோ, அறன் வழி ஒழுகும் உள்ளம்?
    பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயருந் தன்மை
    செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன், சிறிதும் என்றான். 170

  783. கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
    நொய்தினில் துளக்கி, ஐய! நுன் எதிர், நும்முனோனை
    எய்து இறத் துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன்;
    செய் திறன் இனி வேறு உண்டோ ? விதியை யார் தீர்க்ககிற்பார்? 171

  784. அரக்கர் சேனை வானர சேனையைச் சுற்றி வளைத்தல்

  785. என இனிது உரைக்கும் வேலை, இராக்கதர் சேனை என்னும்
    கனை கடல், கவியின் தானைக் கடலினை வளைந்து கட்டி,
    முனை தொழில் முயன்றதாக, மூவகை உலகும் முற்றத்
    தனி நெடுந் தூளி ஆர்த்தது; ஆர்த்தில, பரவை தள்ளி, 172

  786. ஓடின புரவி; வேழம் ஓடின; உருளைத் திண் தேர்
    ஓடின; மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு;
    ஓடின கவந்த பந்தம்; ஆடின அலகை; மேல்மேல்
    ஓடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா! 173

  787. மூளையும், தசையும், என்பும், குருதியும், நிணமும், மூரி
    வாளொடும் குழம்பு பட்டார், வாள் எயிற்று அரக்கர்; மற்றுஅவ்
    ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள்;-அம்பொன்
    தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க. 174

  788. எய்தனர், நிருதர்; கல்லால் எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
    பெய்தனர், அரக்கர்; பற்றிப் பிசைந்தனர் அரிகள்; பின்றா
    வைதனர், யாதுதானர்; வலித்தனர்; வானரேசர்;
    செய்தனர், பிறவும் வெம் போர்; திகைத்தனர், தேவர் எல்லாம். 175

  789. கும்பகருணன் போர்

  790. நீரினை ஓட்டும் காற்றும், காற்று எதிர் நிற்கும் நீரும்,
    போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி,
    தேரினை ஓட்டி வந்தான் - திருவினைத் தேவர் தங்கள்
    ஊரினை நோக்காவண்ணம், உதிர வேல் நோக்கியுள்ளான். 176

  791. ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப,
    பூழியில் பட்டு, செந்நீர்ப் புணரியில் பட்டு, பொங்கும்
    சூழியில் பட்ட நெற்றிக் களிற்றொடும், துரந்த தேரின்
    ஆழியில் பட்ட அன்றே-அவனியில் பட்ட எல்லாம். 177

  792. குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
    ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
    தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
    மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும். 178

  793. வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
    நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை நிமிர வீசும்;
    தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்;
    தூரிடை மரத்து மோதும்; மலைகளில் புடைக்கும், சுற்றி. 179

  794. பறைந்தனர், அமரர் அஞ்சி; பல் பெரும் பிணத்தின் பம்மல்
    நிறைந்தன, பறவை எல்லாம்; நெடுந் திசை நான்கும் நான்கும்
    மறைந்தன; பெருமை தீர்ந்த, மலைக் குலம்; வற்றி வற்றிக்
    குறைந்தன, குரக்கு வெள்ளம்; கொன்றனன், கூற்றும் கூச. 180

  795. மற்று இனி ஒருவர்மேல் ஓர் மரனொடும் கற்கள் வீசப்
    பெற்றிலம் ஆதும் அன்றே; இன்றொடும் பெறுவது ஆமே;
    அற்றன, தீங்கும் என்னா, அரிக் குலத் தலைவர் பற்றி,
    எற்றின, எறிந்த, எல்லாம் இணை நெடுந் தோளின் ஏற்றான். 181

  796. கல்லொடு மரனும், வேரும், கட்டையும், காலில் தீண்டும்
    புல்லொடு பிறவும், எல்லாம், பொடிப் பொடி ஆகிப் போன;
    இல்லை, மற்று எறியத் தக்க, எற்றுவ, சுற்றும் என்ன,
    பல்லொடு பல்லு மென்று பட்டன, குரங்கும் உட்கி. 182

  797. குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் குழாம் கொடு குதித்துக் கூடி,
    சென்று மேல் எழுந்து பற்றி, கைத் தலம் தேயக் குத்தி,
    வன் திறல் எயிற்றால் கவ்வி, வள் உகிர் மடியக் கீளா,
    ஒன்றும் ஆகின்றது இல்லை என்று, இரிந்து ஓடிப் போன. 183

  798. நீலன் பொருது தோற்றல்

  799. மூலமே மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
    காலம் மேல் எழுந்த கால் போல், கையினால் கடிதின் வாங்கி,
    நீலன், மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு எனத் திரிந்து விட்டான்;
    சூலமே கொண்டு நூறி, முறுவலும் தோன்ற நின்றான். 184

  800. பெயர்ந்து ஒரு சிகரம் தேடின், அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா,
    புயங்களே படைகள் ஆகத் தேர் எதிர் ஓடிப் புக்கான்,
    இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய, யாரும்
    பயம் கொள, கரங்கள் ஓச்சிக் குத்தினான், உதைத்தான், பல் கால். 185

  801. கைத்தலம் சலித்து, காலும் குலைந்து, தன் கருத்து முற்றான்.
    நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை,
    எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான், இடது கையால்;
    மெய்த்தலை, சூலம் ஓச்சான், வெறுங் கையான் என்று வெள்கி. 186

  802. நீலன் தளர்ந்தது கண்டு, அங்கதன் வந்து பொருதல்

  803. ஆண்டு, அது நோக்கி நின்ற அங்கதன், ஆண்டுச் சால
    நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி,
    மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்தத்
    தூண்டினன்; அதனை அன்னான் ஒரு தனித் தோளின் ஏற்றான். 187

  804. ஏற்ற போது, அனைய குன்றம் எண்ண அருந் துகளது ஆகி,
    வீற்று வீற்று ஆகி, ஓடி விழுதலும், கவியின் வெள்ளம்,
    ஊற்றம் ஏது, எமக்கு! என்று எண்ணி, உடைந்தது; குமரன் உற்ற
    சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சென்று பாதம். 188

  805. இடக் கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிரத் தண்டு,
    தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது, தருக்கின் வாங்கி,
    மடக்குவாய் உயிரை என்னா, வீசினன்; அதனை மைந்தன்
    தடக் கையால் பிடித்துக் கொண்டான், வானவர் தன்னை வாழ்த்த. 189

  806. பிடித்தது சுழற்றி, மற்று அப் பெரு வலி அரக்கன் தன்னை,
    இடித்து, உரும் ஏறு, குன்றத்து எரி மடுத்து, இயங்குமா போல்,
    அடித்து, உயிர் குடிப்பென் என்னா, அனல் விழித்து, ஆர்த்து, மண்டி,
    கொடித் தடந் தேரின் முன்னர்க் குதித்து, எதிர் குறுகி, நின்றான். 190

  807. கும்பகருணன் அங்கதன் உரையாடல்

  808. நின்றவன் தன்னை அன்னான் நெருப்பு எழ நிமர நோக்கி,
    பொன்ற வந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ?
    அன்று, அவன் மகனோ? எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்தம்மை
    வென்றவன் தானோ? யாரோ? விளம்புதி, விரைவின் என்றான். 191

  809. நும்முனை வாலின் சுற்றி, நோன் திசை நான்கும் தாவி,
    மும் முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த
    வெம் முனை வீரன் மைந்தன்; நின்னை என் வாலின் வீக்கி,
    தெம் முனை இராமன் பாதம் வணங்கிட, செல்வென் என்றான். 192

  810. உந்தையை, மறைந்து, ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப்
    பந்தனைப் பகையைச் செற்றுக காட்டலை என்னின், பாரோர்
    நிந்தனை நின்னைச் செய்வர்; நல்லது நினைந்தாய்; நேரே
    வந்தனை புரிவர் அன்றே, வீரராய் வசையின் தீர்ந்தார்? 193

  811. இத்தலை வந்தது, என்னை இராமன்பால், வாலின் ஈர்த்து
    வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த
    முத் தலை அயிலின் உச்சி முதுகு உற, மூரி வால்போல்
    கைத்தலம் காலும் தூங்க, கிடத்தலைக் கருதி என்றான். 194

  812. அங்கதன் எறிந்த தண்டு பல துண்டமாதல்

  813. அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து, அசனி குன்றத்து
    உற்றது போலும் என்னும் ஒலிபட, உலகம் உட்க,
    பொன் தடந் தோளின் வீசிப் புடைத்தனன்; பொறியின் சிந்தி,
    இற்றது நூறு கூறாய், எழு முனை வயிரத் தண்டு. 195

  814. அனுமன் போரிடுதல்

  815. தண்டு இற, தடக் கை ஓச்சி, தழுவி அத் தறுகணானைக்
    கொண்டு இறப்புறுவென் என்னா, தலையுறக் குனிக்குங் காலை,
    புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த,
    மண் திறப்பு எய்த வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான். 196

  816. மறித்து அவன் அவனைத் தன் கை வயிர வான் சூலம் மார்பில்
    குறித்துற எறியலுற்ற காலையில், குன்றம் ஒன்று
    பறித்து, அவன் நெற்றி முற்றப் பரப்பிடை, பாகம் உள்ளே
    செறித்தெனச் சுரிக்க வீசி, தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான். 197

  817. தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றதன்ன
    மலையினைக் கையின் வாங்கி, மாருதி வயிர மார்பின்,
    உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப,
    குலை உறு பொறிகள் சிந்த, வீசி, தோள் கொட்டி ஆர்த்தான். 198

  818. அவ்வழி வாலி சேயை அரிகுல வீரர் அஞ்சார்
    வவ்வினர் கொண்டு போனார்; மாருதி வானை முற்றும்
    கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி,
    எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 199

  819. எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல்
    மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை
    அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்;
    பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி என்றான். 200

  820. மாற்றம் அஃது உரைப்பக் கேளா, மலை முழை திறந்தது என்னக்
    கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து, நீ கொணர்ந்த குன்றை
    ஏற்றனென்; ஏற்ற காலத்து, இறை அதற்கு ஒற்கம் எய்தின்,
    தோற்றனென், உனக்கு; என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான். 201

  821. மாருதி, வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின்,
    பேருதி, உயிர்கொண்டு என்று, பெருங் கையால் நெருங்க விட்ட
    கார் உதிர் வயிரக் குன்றைக் காத்திலன், தோள் மேல் ஏற்றான்;
    ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க. 202

  822. இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, இவனது ஆற்றல்
    அளக்குறற்பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா;
    துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி
    பிளக்குமேல், பிளக்கும் என்னா, மாருதி பெயர்ந்து போனான். 203

  823. குரக்குச் சேனையின் அழிவு

  824. எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய, யாரும்
    முழுவதும் மாள்வர், இன்றே இவன் வலத்து அமைந்த முச் சூழ்
    கழுவினில் என்று வானோர் கலங்கினார், நடுங்கினாரால்-
    பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி. 204

  825. தாக்கினார்; தாக்கினார்தம் கைத்தலம் சலித்தது அன்றி,
    நூக்கினார் இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை-
    ஆக்கினான்; களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றிப்
    போக்கினான்; ஆண்மையாலே புதுக்கினான், புகழை அம்மா! 205

  826. சங்கத்து ஆர் குரங்கு சாய, தாபதர் என்னத் தக்கார்
    இங்கு உற்றார் அல்லரோதான்? வேறும் ஓர் இலங்கை உண்டோ?
    எங்குற்றார் எங்குற்றார்? என்று எடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,
    துங்கத் தோள் கொட்டி, ஆர்த்தான்-கூற்றையும் துணுக்கம் கொண்டான். 206

  827. பறந்தலை அதனின் வந்த பல் பெருங் கவியின் பண்ணை
    இறந்தது கிடக்க, நின்ற இரிதலின், யாரும் இன்றி
    வறந்தது; சோரி பாய வளர்ந்தது, மகர வேலை-
    குறைந்துளது, உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன. 207

  828. இலக்குவன்-கும்பகருணன் போர்

  829. குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன; குரங்கின்
    வென்றி அம் பெருஞ் சேனை ஓர் பாதியின் மேலும்
    அன்று தேய்ந்தது என்று உரைத்தலும், அமரர் கண்டு உவப்பச்
    சென்று தாக்கினன், ஒரு தனிச் சுமித்திரை சிங்கம். 208

  830. நாண் எறிந்தனன், சிலையினை; அரக்கியர் நகு பொன்
    பூண் எறிந்தனர்; படியிடை இடி பொடித்தென்னச்
    சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன; அலகை,
    தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை. 209

  831. இலக்குவன் கடிது ஏவின, இரை பெறாது இரைப்ப,
    சிலைக் கடுங் கணை நெடுங் கணம் சிறையுடன் செல்வ,
    உலைக் கொடுங் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி,
    குலக் கயங்களில் குளித்தன; குடித்தன, குருதி. 210

  832. அலை புடைத்த வாள் அரக்கரைச் சில கழுத்து அரிவ;
    சில, சிரத்தினைத் துணித்து, அவை திசைகொண்டு செல்வ;
    கொலை படைத்த வெங் களத்திடை விழா, கொடு போவ;
    தலை படைத்தன போன்றனவால், நெடுஞ் சரங்கள். 211

  833. உருப் பதங்கனை ஒப்பன சில கணை, ஓடைப்
    பொருப்பதங்களை உருவி, மற்று அப்புறம் போவ,
    செருப் பதம் பெறா அரக்கர்தம் தலை பல சிந்தி,
    பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன, முழை புகு பாம்பின். 212

  834. மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ
    பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடிங் கணை போவ,
    முன்பு நின்றவர் முகத்திற்கும், கடைக் குழை முதுகின்
    பின்பு நின்றவர் பிடர்க்கும், இவ் விசை ஒக்கும், பிறழா. 213

  835. போர்த்த பேரியின் கண்ணன, காளத்தின் பொகுட்ட,
    ஆர்த்த வாயன, கையன, ஆனையின் கழுத்த,
    ஈர்த்த தேரன, இவுளியின் தலையன, எவர்க்கும்
    பார்த்த நோக்கன, கலந்தன-இலக்குவன் பகழி. 214

  836. மருப்பு இழந்தன;-களிறு எலாம்-வால் செவி இழந்த,
    நெருப்பு உகும் கண்கள் இழந்தன; நெடுங் கரம் இழந்த;
    செருப் புகும் கடுங் காத்திரம் இழந்தன; சிகரம்
    பொருப்பு உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட. 215

  837. நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின், திசை எங்கும் நிறைந்த
    சரம் தலைத்தலை படப் பட, மயங்கின சாய்ந்த;
    உரம் தலத்துற உழைத்தவால்; பிழைத்தது ஒன்று இல்லை-
    குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலாக் குதிரை. 216

  838. பல்லவக் கணை பட, படு புரவிய, பல் கால்
    வில்லுடைத் தலையாளொடு சூதரை வீழ்த்த,
    எல்லை அற்ற செங் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்,
    செல்லகிற்றில, நின்றில-கொடி நெடுந் தேர்கள். 217

  839. பேழை ஒத்து அகல் வாயன பேய்க் கணம் முகக்கும்
    மூழை ஒத்தன-கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
    ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன, உதிரத்
    தாழி ஒத்த வெங் குருதியில் மிதப்பன, தலைகள். 218

  840. ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள்
    அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன-அழிந்து
    நட்டவாம் என வீழ்ந்தன, துடிகளின் நவை தீர்
    வட்ட வான்கணில், வதிந்தன வருண சாமரைகள். 219

  841. எரிந்த வெங் கணை நெற்றியில் படுதொறும், யானை,
    அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால்,
    திரிந்த வேகத்த, பாகர்கள் தீர்ந்தன, செருவில்
    புரிந்த வானரத் தானையில் புக்கன, புயலின். 220

  842. வேனிலான் அன்ன இலக்குவன் கடுங் கணை விலக்க,
    மான வெள் எயிற்று அரக்கர் தம் படைக்கல வாரி
    போன போன வன் திசைதொறும் பொறிக் குலம் பொடிப்ப,
    மீன் எலாம் உடன் விசும்பின்நின்று உதிர்ந்தென வீழ்ந்த. 221

  843. கரம் குடைந்தன, தொடர்ந்து போய்க் கொய் உளைக் கடு மாக்
    குரம் குடைந்தன, வெரிநுறக் கொடி நெடுங் கொற்றத்
    தரம் குடைந்தன, அணி நெடுந் தேர்க் குலம் குடைந்த,-
    அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா! 222

  844. துரக்கம், மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின்
    கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம்;
    இரக்கம் நீங்கினர், அறத்தொடும் திறம்பினர் எனினும்,
    அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர், விரும்பி, 223

  845. மறக் கொடுந் தொழில் அரக்கர்கள், மறுக்கிலா மழைபோல்
    நிறக் கொடுங் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர,
    இறக்கம் எய்தினர் யாவரும், எய்தினர் எனின், அத்
    துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம். 224

  846. ஒருவரைக் கரம், ஒருவரைச் சிரம், மற்று அங்கு ஒருவர்
    குரை கழல் துணை, தோள் இணை, பிற மற்றும் கொளலால்,
    விரவலர்ப் பெறா வெறுமைய ஆயின; வெவ்வேறு
    இரவு கற்றன போன்றன-இலக்குவன் பகழி. 225

  847. சிலவரைக் கரம், சிலவரைச் செவி, சிலர் நாசி,
    சிலவரைக் கழல், சிலவரைக் கண், கொளும் செயலால்,
    நிலவரைத் தரு பொருள்வழித் தண் தமிழ் நிரப்பும்
    புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன-சரங்கள். 226

  848. அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட, அரக்கர்,
    இறத்தும், இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி,
    திறத்திறம் படத் திசைதொறும் திசைதொறும் சிந்திப்
    புறத்தின் ஓடினர், ஓடின குருதியே போல. 227

  849. இலக்குவன் வில்லாண்மையைக் கும்பகருணன் வியத்தல்

  850. செருவில் மாண்டவர் பெருமையும், இலக்குவன் செய்த
    வரி வில் ஆண்மையும், நோக்கிய புலத்தியன் மருமான்,
    திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின்
    ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான். 228

  851. படர் நெடுந் தடத் தட்டிடைத் திசைதொறும் பாகர்
    கடவுகின்றது, காற்றினும் மனத்தினும் கடியது,
    அடல் வயங் கொள் வெஞ் சீயம் நின்று ஆர்க்கின்றது, அம் பொன்
    வட பெருங் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான். 229

  852. அனுமன் தோள் மீது இலக்குவன் ஏறிச் சென்று பொருதல்

  853. தொளை கொள் வான் நுகச் சுடர் நெடுந் தேர் மிசைத் தோன்றி,
    வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெஞ் செருத் தொழில் மலைய,
    கிளை கொளாது, இகல் என்று எண்ணி, மாருதி கிடைத்தான்,
    இளைய வள்ளலே! ஏறுதி தோள்மிசை என்றான். 230

  854. ஏறினான், இளங் கோளரி; இமையவர் ஆசி
    கூறினார்; எடுத்து ஆர்த்தது, வானரக் குழுவும்;
    நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
    ஆறு தேரினும் அகன்றது, அவ் அனுமன் தன் தடந் தோள் 231

  855. தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள்மேல்,
    துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்,
    பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசைப் பொலிந்தது
    என்னுமாறு அன்றி, பிறிது எடுத்து இயம்புவது யாதோ? 232

  856. ஆங்கு, வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன்,
    தாங்கு பல் கணைப் புட்டிலும் தகை பெறக் கட்டி,
    வீங்கு தோள் வலிக்கு ஏயது, விசும்பில் வில் வெள்க,
    வாங்கினான், நெடு வடவரை புரைவது ஓர் வரி வில். 233

  857. கும்பகருணனின் வீரவார்த்தையும், இலக்குவனின் மறுமொழியும்

  858. இராமன் தம்பி நீ; இராவணன் தம்பி நான்; இருவேம்
    பொரா நின்றேம்; இது காணிய வந்தனர், புலவோர்;
    பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து,
    விராவு நல் அமர் விளைக்குதும், யாம் என விளம்பா, 234

  859. பெய் தவத்தினோர் பெண்கொடி, எம்முடன் பிறந்தாள்,
    செய்த குற்றம் ஒன்று இல்லவள், நாசி வெஞ் சினத்தால்
    கொய்த கொற்றவ! மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
    கை தலத்திடைக் கிடத்துவென்; காக்குதி என்றான். 235

  860. அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர,
    மல்லினால் செய்த புயத்தவன், மாற்றங்கள் நும்பால்
    வில்லினால் சொல்லின் அல்லது, வெந் திறல் வெள்கச்
    சொல்லினால் சொலக் கற்றிலம், யாம் எனச் சொன்னான். 236

  861. இருவரும் செய்த பெரும்போர்

  862. விண் இரண்டு கூறு ஆயது; பிளந்தது வெற்பு;
    மண் இரண்டு உறக் கிழிந்தது என்று இமையவர் மறுக,
    கண் இரண்டினும் தீ உக, கதிர் முகப் பகழி
    எண்-இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான். 237

  863. கொம்பு நாலுடைக் குலக் கரிக் கும்பத்தில் குளித்த,
    உம்பர் ஆற்றலை ஒதுக்கிய, உரும் எனச் செல்வ,
    வெம்பு வெஞ் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட
    அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான். 238

  864. அறுத்த காலையின், அரக்கனும் அமரரை நெடு நாள்
    ஒறுத்தது, ஆயிரம் உருவது, திசைமுகன் உதவப்
    பொறுத்தது, ஆங்கு ஒரு புகர் முகக் கடுங் கணைப் புத்தேள்,
    இறுத்து மாற்று, இது வல்லையேல் என்று, கோத்து, எய்தான். 239

  865. புரிந்து நோக்கிய திசைதொறும், பகழியின் புயலால்,
    எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்,
    தெரிந்து, மற்ற அதுதன்னை ஓர் தெய்வ வெங் கணையால்
    அரிந்து வீழ்த்தலும், ஆயிரம் உருச் சரம் அற்ற. 240

  866. ஆறு-இரண்டு வெங் கடுங் கணை அனுமன்மேல் அழுத்தி,
    ஏறு வெஞ் சரம் இரண்டு இளங் குமரன்மேல் ஏற்றி,
    நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து, ஒரு நொடியில்,
    கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன், கொடியோன். 241

  867. மறைத்த வாளிகள் எவற்றையும், அவற்றினால் மாற்றி,
    துறைத் தலம்தொறும் தலம்தொறும் நின்று தேர் சுமக்கும்
    பொறைக்கு அமைந்த வெங் கரி, பரி, யாளி, மாப் பூதம்,
    திறத் திறம் படத் துணித்து, அவன் தேரையும் சிதைத்தான். 242

  868. தேர் அழிந்தது, செங் கதிர்ச் செல்வனைச் சூழ்ந்த
    ஊர் அழிந்ததுபோல்; துரந்து ஊர்பவர் உலந்தார்;
    நீர் அழிந்திடா நெடு மழைக் குழாத்திடை நிமிர்ந்த
    பார வெஞ் சிலை அழிந்தெனத் துமிந்தது, அப் பரு வில் 243

  869. செய்த போரினை நோக்கி, இத் தேரிடைச் சேர்ந்த
    கொய் உளைக் கடுங் கோள் அரி முதலிய குழுவை
    எய்து கொன்றனனோ? நெடு மந்திரம் இயம்பி,
    வைது கொன்றனனோ? என, வானவர் மயர்ந்தார். 244

  870. இருவரும் தரையில் நின்று பொருதல்

  871. ஊன்று தேரொடு சிலை இலன், கடல் கிளர்ந்து ஒப்பான்,
    ஏன்று, மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று, உலகம்
    மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன முச் சிகைத்தாய்த்
    தோன்றும் வெஞ் சுடர்ச் சூல வெங் கூற்றினைத் தொட்டான். 245

  872. இழியப் பாய்ந்தனன், இரு நிலம் பிளந்து இரு கூறா,-
    கிழியப் பாய் புனல் கிளர்ந்தெனக் கிளர் சினத்து அரக்கன்;
    பழி அப்பால்; இவன் பதாதி என்று, அனுமன் தன் படர் தோள்
    ஒழியப் பார்மிசை இழிந்து சென்று, இளவலும் உற்றான். 246

  873. உற்ற காலையின், இராவணன், தம்பி மாடு உதவ,
    இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ,
    முற்றி அன்னது, முழங்கு முந்நீர் என முடுகிச்
    சுற்றி ஆர்த்தது, சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து. 247

  874. இரிந்து வானவர் இரியலின், மயங்கினர் எவரும்;
    சொரிந்த வெம் படை துணிந்திட, தடுப்ப அருந் தொழிலால்
    பரிந்த அண்ணலும், பரிவிலன் ஒரு புடை படர,
    புரிந்த அந் நெடுஞ் சேனை அம் கருங் கடல் புக்கான். 248

  875. முருக்கின் நாள்மலர் முகை விரிந்தாலன முரண் கண்
    அரக்கர் செம் மயிர்க் கருந் தலை அடுக்கலின் அணைகள்
    பெருக்கினான் பெருங் கனலிடைப் பெய்து பெய்து, எருவை
    உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட. 249

  876. கரியின் கைகளும், புரவியின் கால்களும், காலின்
    திரியும் தேர்களின் சில்லியும், அரக்கர்தம் சிரமும்,
    சொரியும் சோரியின் துறைதொறும் துறைதொறும் கழிப்ப,
    நெரியும் பல் பிணப் பெருங் கரை கடந்தில, நீத்தம். 250

  877. கொற்ற வாள், எழு, தண்டு, வேல், கோல், மழு, குலிசம்,
    மற்றும் வேறு உள படைக்கலம், இலக்குவன் வாளி
    சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட, தொகையாய்
    அற்ற துண்டங்கள் படப் பட, துணிந்தன அனந்தம். 251

  878. குண்டலங்களும், மவுலியும், ஆரமும், கோவை,
    தண்டை, தோள்வளை, கடகம் என்று இனையன, தறுகண்
    கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன, கதிர் சூழ்
    மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன, வானில். 252

  879. பரந்த வெண்குடை, சாமரை, நெடுங் கொடி, பதாகை,
    சரம் தரும் சிலை, கேடகம், பிச்சம், மொய் சரங்கள்
    துரந்து செல்வன, குருதி நீர் ஆறுகள் தோறும்
    நிரந்த பேய்க்கணம் கரைதொறும் குவித்தன, நீந்தி. 253

  880. கும்பகருணன்-சுக்கிரீவன் போர்

  881. ஈண்டு வெஞ் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்,
    நீண்ட வெள் எயிற்று அரக்கன், மற்றொரு திசை நின்றான்,
    பூண்ட வெஞ் செரு இரவி கான்முளையொடு பொருதான்;
    காண்தகும் என, இமையவர் குழுக்கொண்டு, கண்டார். 254

  882. பொறிந்து எழு கண்ணினன், புகையும் வாயினன்,-
    செறிந்து எழு கதிரவன் சிறுவன்-சீறினான்,
    முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என,
    எறிந்தனன், விசும்பில், மா மலை ஒன்று ஏந்தியே. 255

  883. அம் மலை நின்று வந்து அவனி எய்திய
    செம் மலை அனைய வெங் களிறும், சேனையின்
    வெம் மலை வேழமும், பொருத; வேறு இனி
    எம் மலை உள, அவற்கு எடுக்க ஒணாதன? 256

  884. இவ்வகை நெடு மலை இழிந்த மாசுணம்
    கவ்விய, நிருதர்தம் களிறும் கட்டு அற;
    அவ் வகை மலையினை ஏற்று, ஓர் அங்கையால்
    வவ்வினன், அரக்கன், வாள் அவுணர் வாழ்த்தினார். 257

  885. ஏற்று ஒரு கையினால், இதுகொல், நீ அடா!
    ஆற்றிய குன்றம்? என்று, அளவு இல் ஆற்றலான்,
    நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து, நீங்கு எனா,
    தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார். 258

  886. சுக்கிரீவன் மேல் கும்பகருணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்தல்

  887. செல்வெனோ, நெடுங் கிரி இன்னும் தேர்ந்து? எனா,
    எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில்,
    கொல்! என எறிந்தனன், குறைவு இல் நோன்பினோர்
    சொல் எனப் பிழைப்பு இலாச் சூலம், சோர்வு இலான். 259

  888. பட்டனன் பட்டனன் என்று, பார்த்தவர்
    விட்டு உலம்பிட, நெடு விசும்பில் சேறலும்,
    எட்டினன் அது பிடித்து, இறுத்து நீக்கினான்;
    ஒட்டுமோ, மாருதி, அறத்தை ஓம்புவான்? 260

  889. சித்திர வன முலைச் சீதை செவ்வியால்
    முத்தனார், மிதிலை ஊர், அறிவு முற்றிய
    பித்தன் வெஞ் சிலையினை இறுத்த பேர் ஒலி
    ஒத்தது, சூலம் அன்று இற்ற ஓசையே. 261

  890. கும்பகருணன் அனுமனைப் போருக்கு அறைகூவ, அவன் மறுத்தல்

  891. நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே,
    கருதவும் இயம்பவும் அரிது, உன் கை வலி;
    அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
    ஒரு தனி உளை; இதற்கு உவமை யாது? என்றான். 262

  892. என்னொடு பொருதியேல், இன்னும், யான் அமர்
    சொன்னன புரிவல் என்று, அரக்கன் சொல்லலும்,
    முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய
    பின், இகல் பழுது என, பெயர்ந்து போயினான். 263

  893. மீண்டும் சுக்கிரீவன் கும்பகருணன் போர்

  894. அற்றது காலையில், அரக்கன், ஆயுதம்
    பெற்றிலன், பெயர்ந்திலன்; அனைய பெற்றியில்,
    பற்றினன், பாய்ந்து எதிர், பருதி கான்முளை
    எற்றினன், குத்தினன், எறுழ் வெங் கைகளால். 264

  895. அரக்கனும்,-நன்று, நின் ஆண்மை; ஆயினும்,
    தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா,
    நெருக்கினன், பற்றினன், நீங்கொணாவகை,-
    உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான். 265

  896. திரிந்தனர் சாரிகை; தேவர் கண்டிலர்;
    புரிந்தனர், நெடுஞ் செரு; புகையும் போர்த்து எழ
    எரிந்தன, உரும் எலாம்; இருவர் வாய்களும்
    சொரிந்தன, குருதி; தாம் இறையும் சோர்ந்திலார். 266

  897. உறுக்கினர், ஒருவரை ஒருவர்; உற்று இகல்
    முறுக்கினர், முறை முறை; அரக்கன் மொய்ம்பினால்
    பொறுக்கிலாவகை நெடும் புயங்களால் பிணித்து
    இறுக்கினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான். 267

  898. உணர்வு இழந்த சுக்கிரீவனைக் கும்பகருணன் எடுத்துச் செல்லுதல்

  899. மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்
    தண்டல் இல் பெரும் படை சிந்தும்; தக்கது ஓர்
    எண் தரு கருமம் மற்று இதனின் இல் என,
    கொண்டனன் போயினன், நிருதர்கோ நகர். 268

  900. உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ,
    சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட,
    விரல் துறு கைத்தலத்து அடித்து, வெய்துயிர்த்து,
    அரற்றின, கவிக் குலம்; அரக்கர் ஆர்த்தனர், 269

  901. நடுங்கினர் அமரரும்; நா உலர்ந்து வேர்த்து
    ஒடுங்கினர், வானரத் தலைவர்-உள் முகிழ்த்து,
    இடுங்கின கண்ணினர், எரிந்த நெஞ்சினர்,
    மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார். 270

  902. புழுங்கிய வெஞ் சினத்து அரக்கன் போகுவான்,
    அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்;
    எழும் கதிர் இரவிதன் புதல்வன், எண்ணுற
    விழுங்கிய மதி என, மெலிந்து தோன்றினான். 271

  903. திக்கு உற விளக்குவான் சிறுவன், தீயவன்
    மைக் கரு நிறத்திடை மறைந்த தன் உரு
    மிக்கதும் குறைந்ததும் ஆக, மேகத்துப்
    புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன். 272

  904. அனுமன் செய்வதறியாது கும்பகருணன் பின்போதல்

  905. ஒருங்கு அமர் புரிகிலேன், உன்னொடு யான் என,
    நெருங்கிய உரையினை நினைந்து, நேர்கிலன்,
    கருங் கடல் கடந்த அக் காலன், காலன் வாழ்
    பெருங் கரம் பிசைந்து, அவன் பின்பு சென்றனன். 273

  906. ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்,
    நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்?
    காய் கதிர்ப் புதல்வனைப் பிணித்த கையினன்,
    போயினன், அரக்கன் என்று இசைத்த பூசலார். 274

  907. இராமன் கும்பகருணன் செல்லும் வாயிலை அடைத்தல்

  908. தீயினும் முதிர்வுரச் சிவந்த கண்ணினான்,
    காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான்,
    ஏ எனும் அளவினில், இலங்கை மா நகர்
    வாயில் சென்று எய்தினான்-மழையின் மேனியான். 275

  909. உடைப் பெருந் துணைவனை உயிரின் கொண்டு போய்,
    கிடைப்ப அருங் கொடி நகர் அடையின், கேடு என,
    தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து, உற
    அடைப்பென் என்று, அடைத்தனன், விசும்பின் ஆறு எலாம். 276

  910. மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்
    சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின;
    யாதும் விண் படர்கில; இயங்கு கார் மழை
    மீது நின்று அகன்றன-விசும்பு தூர்த்தலால். 277

  911. கும்பகருணன் இராமனைக் காணுதல்

  912. மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான்,
    இனக் கொடும் பகழியின் மதிலை எய்தினான்;
    நினைந்து அவை நீக்குதல் அருமை, இன்று என,
    சினக் கொடுந் திறலவன் திரிந்து நோக்கினான். 278

  913. கண்டனன்-வதனம், வாய், கண், கை, கால் எனப்
    புண்டரீகத் தடம் பூத்து, பொன் சிலை
    மண்டலம் தொடர்ந்து, மண் வயங்க வந்தது ஓர்
    கொண்டலின் பொலிதரு கோலத்தான் தனை. 279

  914. கும்பகருணன் இராமனை இடித்துரைத்தல்

  915. மடித்த வாய் கொழும் புகை வழங்க, மாறு இதழ்
    துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட,
    பொடித்த தீ, நயனங்கள்; பொறுக்கலாமையால்,
    இடித்த வான் தெழிப்பினால், இடிந்த, குன்று எலாம். 280

  916. மாக் கவந்தனும், வலி தொலைந்த வாலி ஆம்
    பூக் கவர்ந்து உண்ணியும், போலும் என்று, எனைத்
    தாக்க வந்தனை; இவன் தன்னை இன் உயிர்
    காக்க வந்தனை; இது காணத் தக்கதால். 281

  917. உம்பியை முனிந்திலேன், அவனுக்கு ஊர்தியாம்
    தும்பியை முனிந்திலேன், தொடர்ந்த வாலிதன்
    தம்பியை முனிந்திலேன், சமரம் தன்னில் யான்-
    அம்பு இயல் சிலையினாய்!-புகழ் அன்று ஆதலால். 282

  918. தேடினென் திரிந்தனென் நின்னை; திக்கு இறந்து
    ஓடியது உன் படை; உம்பி ஓய்ந்து, ஒரு
    பாடு உற நடந்தனன்; அனுமன் பாறினன்;
    ஈடுறும் இவனைக் கொண்டு, எளிதின் எய்தினேன். 283

  919. காக்கிய வந்தனை என்னின், கண்ட என்
    பாக்கியம் தந்தது, நின்னை; பல் முறை
    ஆக்கிய செரு எலாம் ஆக்கி, எம்முனைப்
    போக்குவென், மனத்துறு காதல் புன்கண் நோய். 284

  920. ஏதி வெந் திறலினோய்! இமைப்பிலோர் எதிர்,
    பேது உறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி,
    கோதை வெஞ் சிலையினால், கோடி வீடு எனின்,
    சீதையும் பெயர்ந்தனள், சிறை நின்றாம் என்றான். 285

  921. இராமனின் வஞ்சினம்

  922. என்றலும், முறுவலித்து, இராமன், யானுடை
    இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்,
    குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்,
    பின்றினென் உனக்கு; வில் பிடிக்கிலேன் என்றான். 286

  923. மீட்டு அவன், சரங்களால் விலங்கலானையே
    மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்,
    வாள் தலை பிடர்த்தலை வயங்க, வாளிகள்,
    சேட்டு அகல் நெற்றியின், இரண்டு சேர்த்தினான். 287

  924. கும்பகருணன் குருதியால் சுக்கிரீவன் மயக்கம் தெளிதல்

  925. சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ,
    நெற்றியின் நெடுங் கணை ஒளிர நின்றவன்,
    முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து,
    உற்று எழும் அருணனது உதயம் போன்றனன். 288

  926. குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
    புன் தலைக் குருதி நீர் முகத்தைப் போர்த்தலும்,
    இன் துயில் உணர்ந்தென, உணர்ச்சி, எய்தினான்;
    வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான். 289

  927. சுக்கிரீவன், கும்பகருணன் மூக்கையும் காதையும் கடித்துச் செல்லுதல்

  928. நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
    கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான்;
    சுற்றுற நோக்கினன், தொழுது வாழ்த்தினான்-
    முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான் தனை. 290

  929. கண்டனன் நாயகன் தன்னை, கண்ணுறா,
    தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான்,
    விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
    கொண்டனன், எழுந்து போய்த் தமரைக் கூடினான். 291

  930. சுக்கிரீவனைக் கண்டு யாவரும் மகிழ்தல்

  931. வானரம் ஆர்த்தன; மறையும் ஆர்த்தன;
    தான் அர மகளிரும் தமரும் ஆர்த்தனர்;
    மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
    வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே. 292

  932. காந்து இகல் அரக்கன் வெங் கரத்துள் நீங்கிய
    ஏந்தலை அகம் மகிழ்ந்து, எய்த நோக்கிய
    வேந்தனும், சானகி இலங்கை வெஞ் சிறைப்
    போந்தனளாம் என, பொருமல் நீங்கினான். 293

  933. மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ,
    வித்தகன் சரம் தொட, மெலிவு தோன்றிய
    சித்திரம் பெறுதலின், செவியும் மூக்கும் கொண்டு
    அத் திசைப் போயினன் அல்லது, ஒண்ணுமோ? 294

  934. உணர்வு பெற்ற கும்பகருணன் வாட் போர் புரிதல்

  935. அக் கணத்து அறிவு வந்து அணுக, அங்கைநின்று
    உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்,
    மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
    புக்கதும், உணர்ந்தனன்-உதிரப் போர்வையான். 295

  936. தாது ராகத் தடங் குன்றம், தாரை சால்
    கூதிர் கால் நெடு மழை சொரிய, கோத்து இழி
    ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்-
    மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான். 296

  937. எண்ணுடைத் தன்மையன், இனைய எண் இலாப்
    பெண்ணுடைத் தன்மையன் ஆய பீடையால்,
    புண்ணுடைச் செவியொடு மூக்கும் பொன்றலால்,
    கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன. 297

  938. ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும்; தன்
    நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
    வாசியைப் பார்க்கும்; இம் மண்ணைப் பார்க்குமால்-
    சீ சீ உற்றது! எனத் தீயும் நெஞ்சினான். 298

  939. என்முகம் காண்பதன் முன்னம், யான் அவன்-
    தன் முகம் காண்பது சரதம் தான் என,
    பொன் முகம் காண்பது ஓர் தோலும், போரிடை
    வல் முகம் காண்பது ஓர் வாளும், வாங்கினான். 299

  940. விதிர்த்தனன்; வீசினன், விசும்பின் மீன் எலாம்
    உதிர்த்தனன்; உலகினை அனந்தன் உச்சியோடு
    அதிர்த்தனன்; ஆர்த்தனன்-ஆயிரம் பெருங்
    கதிர்த் தலம் சூழ் வடவரையின் காட்சியான். 300

  941. வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்,
    கூசின குரக்கு வெங் குழுவைக் கொண்டு எழுந்து,
    ஆசைகள் தோறும் விட்டு எறிய, ஆர்த்து எழும்
    ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால். 301

  942. தோல் இடைத் துரக்கவும், துகைக்கவும் சுடர்
    வேலுடைக் கூற்றினால் துணிய வீசவும்,
    காலிடைக் கடல் எனச் சிந்தி, கை கெட,
    வாலுடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால். 302

  943. ஏறுபட்டதும், இடை எதிர்ந்துளோர் எலாம்
    கூறுபட்டதும், கொழுங் குருதி கோத்து இழிந்து
    ஆறுபட்டதும், நிலம் அனந்தன் உச்சியும்
    சேறுபட்டதும், ஒரு கணத்தில் தீர்ந்தவால். 303

  944. இராமன்-கும்பகருணன் போர்

  945. இடுக்கு இலை; எதிர் இனி இவனை இவ் வழித்
    தடுக்கிலையாம் எனின், குரங்கின் தானையை
    ஒடுக்கினை, அரக்கரை உயர்த்தினாய் எனா
    முடுக்கினன், இராமனைச் சாம்பன் முன்னியே. 304

  946. அண்ணலும் தானையின் அழிவும், ஆங்கு அவன்
    திண் நெடுங் கொற்றமும், வலியும், சிந்தியா,
    நண்ணினன்-நடந்து எதிர், நமனை இன்று இவன்
    கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான். 305

  947. ஆறினோடு ஏழு கோல், அசனி ஏறு என,
    ஈறு இலா விசையன இராமன் எய்தனன்;
    பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
    நூறினான் வாளினால், நுணங்கு கல்வியான். 306

  948. ஆடவர்க்கு அரசனும், தொடர, அவ் வழி,
    கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங் கணை
    ஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உக,
    கேடகப் புறத்தினால் கிழிய வீசினான். 307

  949. சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய, செங் கணான்,
    மறித்து ஒரு வடிக் கணை தொடுக்க, மற்று அவன்
    ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
    அறுத்தது கலுழனின், அமரர் ஆர்க்கவே. 308

  950. அற்றது தடக் கை வாள் அற்றது இல் என,
    மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்,
    முற்றினென் முற்றினென் என்று, முன்பு வந்து,
    உற்றனன்-ஊழித் தீ அவிய ஊதுவான். 309

  951. அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகை,
    பொன் நெடுங் கேடகம் புரட்டி, போர்த்தது ஓர்
    நல் நெடுங் கவசத்து, நாம வெங் கணை
    மின்னொடு நிகர்ப்பன, பலவும் வீசினான். 310

  952. இராவணன் அனுப்பிய பெரும் படை உதவிக்கு வருதல்

  953. அந்தரம் அன்னது நிகழும் அவ் வழி,
    இந்திரன் தமரொடும் இரியல் எய்திட,
    சிந்துவும் தன் நிலை குலைய, சேண் உற
    வந்தது, தசமுகன் விடுத்த மாப் படை. 311

  954. வில் வினை ஒருவனும், இவனை வீட்டுதற்கு
    ஒல் வினை இது எனக் கருதி, ஊன்றினான்;
    பல் வினை தீயன பரந்த போது ஒரு
    நல்வினை ஒத்தது, நடந்த தானையே. 312

  955. வந்த சேனையை இராமன் எதிர்த்தல்

  956. கோத்தது புடைதொறும் குதிரை தேரொடு ஆள்
    பூத்து இழி மதமலை மிடைந்த போர்ப் படை
    காத்தது கருணனை; கண்டு, மாய மாக்
    கூத்தனும், வருக! எனக் கடிது கூவினான். 313

  957. சூழி வெங் கட கரி, புரவி தூண்டு தேர்,
    ஆழி வெம் பெரும் படை, மிடைந்த ஆர்கலி
    ஏழ்-இரு கோடி வந்து எய்திற்று என்பரால்;
    ஊழியின் ஒருவனும், எதிர் சென்று, ஊன்றினான். 314

  958. காலமும், காலனும், கணக்கு இல் தீமையும்,
    மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய,
    ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்,
    சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான். 315

  959. அரங்கு இடந்தன, அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும்,
    மரம் கிடந்தன, மலைக் குவை கிடந்தன வாம் என மாறாடி,
    கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன, கறை படும்படி கவ்விச்
    சிரம் கிடந்தன, கண்டனர்; கண்டிலர், உயிர்கொடு திரிவாரை. 316

  960. இற்ற அல்லவும், ஈர்ப்புண்ட அல்லவும், இடை இடை முறிந்து எங்கும்
    துற்ற அல்லவும், துணிபட்ட அல்லவும், சுடு பொறித் தொகை தூவி
    வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும், வேறு ஒன்று நூறு ஆகி
    அற்ற அல்லவும், கண்டிலர் படைக்கலம்-அடு களம் திடர் ஆக. 317

  961. படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள் பாகரைப் பறிந்து ஓடி,
    குடைந்து, வையகம் புக்குறத் தேக்கிய குருதியால் குடர் சோரத்
    தொடர்ந்து, நோயொடும் துணை மருப்பு இழந்து, தம் காத்திரம் துணி ஆகிக்
    கிடந்த அல்லது, நடந்தன கண்டிலர்-கிளர் மதகிரி எங்கும். 318

  962. வீழ்ந்த வாளன, விளிவுற்ற பதாகைய, வெயில் உமிழ் அயில் அம்பு
    போழ்ந்த பல் நெடும் புரவிய, முறை முறை அச்சொடும் பொறி அற்று,
    தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெங் குழம்பிடைத் தலைத்தலை மாறாடி,
    ஆழ்ந்த அல்லது, பெயர்ந்தன கண்டிலர்-அதிர் குரல் மணித் தேர்கள். 319

  963. ஆடல் தீர்ந்தன, வளை கழுத்து அற்றன, அதிர் பெருங் குரல் நீத்த,
    தாள் துணிந்தன, தறுகண் வெங் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல்
    கோடு அமைந்த வெங் குருதி நீர் ஆறுகள் சுழிதொறும் கொணர்ந்து உந்தி,
    ஓடல் அன்றி, நின்று உகள்வன கண்டிலர்-உரு கெழு பரி எல்லாம். 320

  964. வேதநாயகன் வெங் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு
    ஓதுகின்றது என்? உம்பரும், அரக்கர் வெங் களத்து வந்து உற்றாரைக்
    காதல் விண்ணிடைக் கண்டனர்; அல்லது, கணவர்தம் உடல் நாடும்
    மாதர் வெள்ளமே கண்டனர்; கண்டிலர், மலையினும் பெரியாரை. 321

  965. பனிப் பட்டாலெனக் கதிர் வரப் படுவது பட்டது, அப் படை; பற்றார்
    துனிப்பட்டார் எனத் துளங்கினர் இமையவர்; யாவர்க்கும் தோலாதான்
    இனிப் பட்டான் என, வீங்கின அரக்கரும் ஏங்கினர்; இவன், அந்தோ,
    தனிப் பட்டான்! என, அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன், தனி நாதன்: 322

  966. இராமன் கும்பகருணன் உரையாடல்

  967. ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை; எதிர் ஒரு தனி நின்றாய்;
    நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவென்;
    போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின், போர் புரிந்து இப்போதே
    சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து, அம்மா! 323

  968. இழைத்த தீவினை இற்றிலது ஆகலின், யான் உனை இளையோனால்
    அழைத்த போதினும் வந்திலை, அந்தகன் ஆணையின் வழி நின்றாய்;
    பிழைத்ததால் உனக்கு அருந் திரு, நாளொடு; பெருந் துயில் நெடுங் காலம்
    உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்கு உறுவது ஒன்று? உரை என்றான். 324

  969. மற்று எலாம் நிற்க; வாசியும், மானமும் மறத்துறை வழுவாத
    கொற்ற நீதியும், குலமுதல் தருமமும் என்று இவை குடியாகப்
    பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து, தன் பெருஞ் செவி மூக்கோடும்
    அற்ற எங்கைபோல், என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா! 325

  970. நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்; அவ் வகை நிலை நோக்கி,
    தாக்கு அணங்கு அனையவள், பிறர் மனை எனத் தடுத்தனென்; தக்கோர் முன்
    வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
    மூக்கு இழந்தபின் மீளல் என்றால், அது முடியுமோ?-முடியாதாய்! 326

  971. உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து, உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்த
    நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான், வானவர் நகை செய்ய,
    செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி,
    எங்கைபோல் எடுத்து அழைத்து, நான் வீழ்வெனோ, இராவணன் எதிர் அம்மா? 327

  972. ஒருத்தன், நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும், பழி ஓரும்
    கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ? சேவகர் கடன் ஓராய்?
    செருத் திண் வாளினால் திறத் திறன் உங்களை அமர்த் துறைச் சிரம் கொய்து
    பொருத்தினால், அது பொருந்துமோ? தக்கது புகன்றிலைபோல் என்றான். 328

  973. கும்பகருணன்-இராமன் பெரும்போர்

  974. என்று, தன் நெடுஞ் சூலத்தை இடக்கையின் மாற்றினன்; வலக் கையால்
    குன்று நின்றது பேர்த்து எடுத்து, இரு நிலக் குடர் கவர்ந்தெனக் கொண்டான்,
    சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல, சேவகன் செனி நேரே,
    வென்று தீர்க! என விட்டனன்; அது வந்து பட்டது மேல் என்ன, 329

  975. அனைய குன்று எனும் அசனியை, யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி
    புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று
    நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை,
    தினையும் மாத்திரை துணிபட, முறை முறை சிந்தினன், சரம் சிந்தி. 330

  976. அண்ணல் வில் கொடுங் கால் விசைத்து உகைத்தன, அலை கடல் வறளாக
    உண்ணகிற்பன, உருமையும் சுடுவன, மேருவை உருவிப் போய்
    விண்ணகத்தையும் கடப்பன, பிழைப்பு இலா மெய்யன, மேல் சேர்ந்த
    கண்ணுதல் பெருங் கடவுள்தன் கவசத்தைக் கடந்தில கதிர் வாளி. 331

  977. தாக்குகின்றன நுழைகில; தலையது, தாமரைத் தடங் கண்ணான்
    நோக்கி, இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி,
    ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன்; அது சிந்தி
    வீக்கு இழந்தது வீழ்ந்தது, வரை சுழல் விரி சுடர் வீழ்ந்தென்ன. 332

  978. காந்து வெஞ் சுடர்க் கவசம் அற்று உகுதலும், கண்தொறும் கனல் சிந்தி,
    ஏந்து வல் நெடுந் தோள் புடைத்து ஆர்த்து, அங்கு ஓர் எழு முனை வயிரப் போர்
    வாய்ந்த வல் நெடுந் தண்டு கைப்பற்றினன்; வானரப் படை முற்றும்
    சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன், தரையொடும். 333

  979. பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம், பகட்டு எழில் அகல் மார்பம்
    திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம், சென்று புக்கு உருவாது
    மறைப்ப ஆயிரம், வருவன ஆயிரம், வடிக் கணை என்றாலும்,
    பிறப்ப ஆயிடைத் தெழித்துறத் திரிந்தனன், கறங்கு எனப் பெருஞ் சாரி. 334

  980. தண்டு கைத்தலத்து உளது எனின், உளதன்று தானை என்று, அது சாயக்
    கொண்டல் ஒத்தவன், கொடுங் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்;
    கண்டம் உற்றது மற்று அது; கருங் கழல் அரக்கனும், கனன்று, ஆங்கு ஓர்
    மண்டலச் சுடராம் எனக் கேடகம் வாங்கினன், வாளோடும். 335

  981. வாள் எடுத்தலும், வானர வீரர்கள் மறுகினர், வழிதோறும்
    தாள் எடுத்தனர், சமழ்த்தனர்; வானவர் தலை எடுத்திலர், தாழ்ந்தார்;
    கோள் எடுத்தது, மீள என்று உரைத்தலும், கொற்றவன், குன்று ஒத்த
    தோள் எடுத்தது துணித்தி என்று, ஒரு சரம் துரந்தனன், சுரர் வாழ்த்த. 336

  982. கும்பகருணன் கை அறுபடல்

  983. அலக்கணுற்றது தீ வினை; நல்வினை ஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
    கலக்கமுற்றனர், இராக்கதர்-கால வெங் கருங் கடல் திரை போலும்
    வலக் கை அற்றது, வாளொடும்; கோளுடை வான மா மதி போலும்;
    இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி. 337

  984. மற்றும், வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ, மறத்தொழில் இவன் மாடு
    பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது-பேர் எழில் தோளோடும்
    அற்று வீழ்ந்த கை அறாத வெங் கையினால் எடுத்து, அவன் ஆர்த்து ஓடி
    எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்து ஓடின வானரக் குலம் எல்லாம்? 338

  985. வள்ளல் காத்து உடன் நிற்கவும், வானரத் தானையை மறக் கூற்றம்
    கொள்ளை கொண்டிட, பண்டையின் மும்மடி குமைகின்ற படி நோக்கி,
    வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப,
    உள்ள கையினும் அற்ற வெங் கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம். 339

  986. மாறு வானரப் பெருங் கடல் ஓட, தன் தோள் நின்று வார் சோரி
    ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட், மேல் அமரரும் இரிந்து ஓட,
    கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட,
    ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன், மழைக் குலம் இரிந்து ஓட. 340

  987. ஈற்றுக் கையையும் இக் கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த,
    தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும், தோன்றாத
    கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட, நெடுங் கொற்றவன் கொலை அம்பால்
    வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன், வேறும் ஓர் அணை மான். 341

  988. சந்திரப் பெருந் தூணொடுஞ் சார்த்தியது, அதில் ஒன்றும் தவறு ஆகாது,
    அந்தரத்தவர் அலை கடல் அமுது எழக் கடைவுறும் அந் நாளில்,
    சுந்தரத் தடந் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட,
    மந்தரத்தையும் கடுத்தது,-மற்று அவன் மணி அணி வயிரத் தோள். 342

  989. சிவண வண்ண வான் கருங் கடல் கொடு வந்த செயலினும், செறி தாரை
    சுவண வண்ண வெஞ் சிறையுடைக் கடு விசை முடுகிய தொழிலானும்,
    அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும், அயில் வாளி
    உவண அண்ணலை ஒத்தது; மந்தரம் ஒத்தது, அவ் உயர் பொன் தோள். 343

  990. கும்பகருணன் கால்களை இழத்தல்

  991. பழக்க நாள் வரும் மேருவை உள்ளுறத் தொளைத்து, ஒரு பணை ஆக்கி,
    வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி,
    முழக்கினாலென, முழங்கு பேர் ஆர்ப்பினான், வானர முந்நீரை
    உழக்கினான், தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக. 344

  992. நிலத்த கால், கனல், புனல், விசும்பு, இவை முற்றும் நிருதனது உரு ஆகி,
    கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென உயிர்களைக் குடிப்பானை,
    சலத்த காலனை, தறுகணர்க்கு அரசனை, தருக்கினின் பெரியானை,
    வலத்த காலையும், வடித்த வெங் கணையினால் தடிந்தனன்-தனு வல்லான். 345

  993. பந்தி பந்தியின் பற் குலம் மீன் குலம் பாகுபாடு உற, பாகத்து
    இந்து வெள் எயிறு இமைத்திட, குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர்
    அந்தி வந்தென, அகல் நெடு வாய் விரித்து, அடி ஒன்று கடிது ஓட்டி,
    குந்தி வந்தனன், நெடு நிலம் குழி பட, குரை கடல் கோத்து ஏற. 346

  994. மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து, மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
    சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து, மேல் தொடர்கின்ற தொழிலானை,
    ஏறு சேவகன், எரி முகப் பகழியால், இரு நிலம் பொறை நீங்க,
    வேறு காலையும் துணித்தனன், அறத்தொடு வேதங்கள் கூத்தாட. 347

  995. கை இரண்டொடு கால்களும் துணிந்தன; கரு வரை பொருவும் தன்
    மெய் இரண்டு நூறாயிரம் பகழியால் வெரிந் உறத் தொளை போய;
    செய்ய கண் பொழி தீச் சிகை இரு மடி சிறந்தன; தெழிப்போடும்,
    வய்யம் வானிடை மழையினும் பெருத்தது, வளர்ந்தது, பெருஞ் சீற்றம். 348

  996. கும்பகருணன் மலைகளைக் கவ்வி வானரங்களை அழித்தல்

  997. பாதம் கைகளோடு இழந்தனன், படியிடை இருந்து, தன் பகு வாயால்,
    காதம் நீளிய மலைகளைக் கடித்து இறுத்து எடுத்து, வெங் கனல் பொங்கி,
    மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசைகொடு திசை செல்ல
    ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம், உருமின் வீழ் உயிர் என்ன, 349

  998. தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் சிகையினால் திசை தீய
    வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி,
    பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, பிலம் திறந்தது போலும்
    வாயினால் செல, வீசினன்; வள்ளலும் மலர்க் கரம் விதிர்ப்புற்றான். 350

  999. உள் உணர்வு தோன்றிய கும்பகருணன் உரை

  1000. அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்
    கையும் கால்களும் இழந்தனென்; வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்;
    மையல் நோய்கொடு முடிந்தவன் நாள் என்று, வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
    உய்யுமாறு அரிது என்று, தன் உள்ளத்தின் உணர்ந்து, ஒரு துயருற்றான். 351

  1001. சிந்துரச் செம் பசுங் குருதி திசைகள் தொறும் திரை ஆறா,
    எந்திரத் தேர், கரி, பரி, ஆள், ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
    சுந்தரப் பொன்-கிரி ஆண்மைக் களிறு அனையான், கண் நின்ற
    சுந்தரப் பொன்-தோளானை முகம் நோக்கி, இவை சொன்னான்: 352

  1002. புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
    மைக் கடங் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்!
    இக் கடன்கள் உடையீர்! நீர் எம் வினை தீர்த்து, உம்முடைய
    கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர், என் கடைக்கூட்டால். 353

  1003. நீதியால் வந்தது ஒரு நெடுந் தரும நெறி அல்லால்,
    சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
    ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
    வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். 354

  1004. வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன், வேரோடும்
    கல்லுமா முயல்கின்றான், இவன் என்னும் கறுவுடையான்;
    ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
    கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, கோடாதாய்! 355

  1005. தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான், அத் தகவு இல்லான்;
    நம்பி! இவன் தனைக் காணின் கொல்லும்; இறை நல்கானால்;
    உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான், ஒரு பொழுதும்
    எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன். 356

  1006. தலையைக் கடலில் இடுமாறு வேண்ட, இராமனும் உடன்படல்

  1007. மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
    நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
    நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் கருங் கடலுள்
    போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான். 357

  1008. வரம் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று என்று, ஒரு வாளி
    உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா,
    சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால்,
    அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள் அழுத்தினான். 358

  1009. கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்

  1010. மாக் கூடு படர் வேலை மறி மகரத் திரை வாங்கி,
    மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு திக்கூடு,
    போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
    மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் முகக் குன்றம். 359

  1011. ஆடினார் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை
    பாடினார்; மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்;
    கூடினார் படைத்தலைவர், கொற்றவனை; குடர் கலங்கி
    ஓடினார், அடல் அரக்கர், இராவணனுக்கு உணர்த்துவான். 360

  1012. மிகைப் பாடல்கள்

  1013. என்று எடுத்து உரைத்தோன், பின்னும் உளம் கனன்று, இனைய சொல்வான்:
    வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும்,
    பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு எளிதோ? காலம்
    ஒன்று அல; உகங்கள் கோடி உடற்றினும், ஒழிவது உண்டோ ? 31-1

  1014. மானிடன் என்றே நாணி, கடவுள் மாப் படைகள் யாதும்
    யான் எடுத்து ஏகல் விட்டேன்; இன்றை வெஞ் சமரம் போக,
    தான் அமர் அழிந்தேன் என்னத் தக்கதோ? என்றான், அந்த
    மானம் இல் அரக்கன்; பின்னர், மாலியவானும் சொல்வான்: 31-2

  1015. முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்தாமும்,
    தப்பு அற உணர்தற்கு எட்டாத் தருமமே, கை வில் ஏந்தி,
    இப் பிறப்பு இராமன் என்றே, எம்மனோர் கிளையை எல்லாம்
    துப்பு அற, முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ ? 31-3

  1016. ஆதலின் இறைவ! கேட்டி; அவன் பெருந் தேவி ஆன
    மாதினை விடுத்து, வானோர் முனிவரர் வருந்தச் செய்யும்
    தீதினை வெறுத்து, தேவர் தேவனாம் சிலை இராமன்
    பாதமே பணியின், நம்பால் பகை விடுத்து, அவன் போம் என்றான். 33-1

  1017. என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம்
    சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்;
    இன்று இறத்தல் திண்ணமாக, இன்னும் உன் உறக்கமே?
    அன்று அலைத்த செங் கையால் அலைத்து அலைத்து, உணர்த்தினார். 45-1

  1018. சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார,
    ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு
    ஏற்றதுஒத்து, அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க, மல்லர்,
    கூற்றமும் குலைய, நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார். 51-1

  1019. அன்னவர் உரைப்பக் கேளா, அரசன் மோதரனை நோக்கி,
    மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி! என்ன,
    இன்னதே செய்வென் என்னா, எழுந்து அடி வணங்கிப் போவான்,
    பொன் என விளங்குவான் போய்த் தன் பெருங் கோயில் புக்கான். 54-1

  1020. இனைய கும்பகருணன், இராக்கதர்
    தனை முனிந்து இடிஏறு எனச் சாற்றினான்;
    எனை நெடுந் துயில் போக்கியது என்? என,
    மனம் நடுங்கினர், வாய் புதைத்து ஓதினார். 69-1

  1021. வட்ட விண்ணையும் மாதிரம் எட்டையும்
    கட்டி, வீரம் கணிப்பு அரும் காவலான்
    தொட்ட பல் கலனும் சுடர் மௌலியும்
    தெட்ட சோதி திளைப்ப நின்றான் அரோ. 76-1

  1022. என்ற போதில் எறுழ் வலிச் செம் மணிக்
    குன்றம் ஐ-இரண்டு ஏந்திக் குல வரை
    சென்றது என்னத் திரிந்து உலகு யாவையும்
    வென்ற வீரன் இனைய விளம்பினான். 77-1

  1023. அக் கணத்து அரக்கர் கோன், அளப்பு இல் யானை, தேர்
    மிக்க வான் புரவி, கால் வயவர் வெள்ளமோடு,
    ஒக்க வான் படைப் பெருந் தலைவர் ஒன்று அறப்
    புக்குமின், இளவலைப் புறத்துச் சூழ்ந்து என்றான். 99-1

  1024. வெள்ளம் நூறு இரதம்; மற்று இரட்டி வெங் கரி;
    துள்ளு வான் பரி அதற்கு இரட்டி; தொக்குறும்
    வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி; மேம்படும்
    கொள்ளை வான் படைப் பெருந் தலைவர் கோடியால். 102-1

  1025. அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
    மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்,
    துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே,
    தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான். 103-1

  1026. தொண்டகம், துடி, கன பேரி, துந்துமி,
    திண்டிமம், படகம், மா முரசு, திண் மணிக்
    கண்டைகள், கடையுகத்து இடிக்கும் ஓதையின்
    எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால். 106-1

  1027. எழு கருங் கடல் கரை எறிந்திட்டு, ஊழி நாள்,
    முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
    தழுவியது என, தசமுகன் தன் ஆணையால்,
    கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப் போந்ததால், 106-2

  1028. இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்,
    நெருக்கமும், நெடுங் கொடித் தொகையின் தேர்க் குலப்
    பெருக்கமும், புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
    அரக்கர்தம் பெருக்கமும், ஆயது எங்குமே. 106-3

  1029. நாற்படை வகை தொகை நடக்க, தூளிகள்
    மேற்பட, விசும்பகம் மறைந்த; வெண் திரைப்
    பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
    காற் படு கதியினின் கரந்தது, ஓடியே. 108-1

  1030. குரக்கினப் பெரும் படை குலை குலைந்து போய்
    வெருக் கொள, விசும்பிடை வெய்ய மாயையின்
    அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம்? நினது
    உருக் கொடே கரிய குன்று உற்றவேகொலாம்? 111-1

  1031. ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான்;
    சூழி வெங் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான்;
    தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே
    வீழ் பெருந் துயிலும் பெற்றான்-வெங் கடுங் கூற்றின் வெய்யோன். 114-1

  1032. சிலை பொழி பகழி, வேல், வாள், செறி சுடர்க் குலிசம், ஈட்டி,
    பல வகைப் படைகள் வாங்கி, நிருதர்கள் பல் போர் செய்தார்;
    மலையொடு மரங்கள் ஓச்சி, வயிரத் தோள் கொண்டு, மாறாக்
    கொலை அமர் எடுத்து, வாகை குரங்குகள் மலைந்த அம்மா. 172-1

  1033. பற்றினன் வசந்தன் தன்னை, பனைத் தடங் கைகளாலே;
    எற்றினன், இவனை மீள விடவொண்ணாது என்று சொல்லி,
    கொற்றமும் உடையன் என்னா, குழம்பு எழப் பிசைந்து கொண்டு
    நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான். 177-1

  1034. அளப்பு இல் வெங் கரிகள், பூதம், ஆளி, வெம் பரிகள் பூண்டு, ஆங்கு
    இழுப்ப வந்து உடைய தேர் விட்டு, இரு நிலத்து இழிந்து, வெம் போர்க்
    களப் படக் கவியின் சேனைக் கடல் வறந்து உலைய, கையால்
    குளப் படுக என்று வெய்யோன் குறித்து, உளம் கனன்று புக்கான். 177-2

  1035. நிகர் அறு கவியின் சேனை நிலை கெட, சிலவர் தம்மைத்
    துகள் எழக் கயக்கி ஊதும்; சிலவரைத் துகைக்கும், காலின்;
    தகர் படச் சிலவர் தம்மைத் தாக்கிடும், தடக் கைதன்னால்;
    புகவிடும் சிலவர்தம்மை, விசும்பிடைப் போக, வெய்யோன். 177-3

  1036. வலிதினின், சிலவர் தம்மை வன் கையால் பற்றிப் பற்றி,
    தலையொடு தலையைத் தாக்கும்; சிலவரைத் தனது தாளால்
    நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும்; சிலவர் நெஞ்சைக்
    கொலை நகப் படையின் கீறி, குருதி வாய்மடுத்துக் கொள்ளும். 177-4

  1037. கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும்; கண்ணைப்
    பிடுங்குறும் சிலவர்தம்மை; சிலவரைப் பிடித்து, வெய்தின்
    கொடுங் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து வீசும்;
    நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி நீக்கும். 177-5

  1038. பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்;
    குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக் குமைக்கும்; கூவித்
    திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை;
    நெரிதரச் சிலவர்தம்மைக் கொடுங் கையின் நெருக்கும் அன்றே. 177-6

  1039. ஆயிர கோடி மேலும் அடல் குரங்கு அதனை வாரி,
    வாயிடைப் பெய்து மூட, வயிற்றிடைப் புகுந்து, வல்லே
    கூய் உளம் திகைத்து, பின்னும் கொடியவன் செவியினூடே,
    போயது வெளியில் மீண்டும், புற்றிடைப் பறவை என்றே. 179-1

  1040. அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான்
    தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான்;
    எவ் வழி? பெயர்ந்து போவது எங்கு? என இரு குன்று ஏந்தி,
    வெவ் வழி இசை அக் கும்பகருணன்மேல் செல்ல விட்டான். 180-1

  1041. விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல் செல்ல,
    இசைந்திடு தோளின் ஏற்றான், இற்று நீறு ஆகிப் போக;
    வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால்
    பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்து கொண்டான். 180-2

  1042. நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத் தள்ளி,
    சூலம் அங்கு ஒரு கை சுற்றி, தொடர்ந்திடும் பகைஞர் ஆவி
    காலன் ஊர்தன்னில் ஏற்றி, கடிதில் என் தமையன் நெஞ்சில்
    கோலிய துயரும் தீர்ப்பென் எனக் கொதித்து, அமரின் ஏற்றான். 186-1

  1043. செய்துறு பகையை வெல்வார், நின்னைப் போல் அம்மை செய்து,
    வைதுறு வந்து போது, வலுமுகம் காட்டி, யாங்கள்
    கைதுறு வினையை வென்று கடன் கொள்வார் மார்க்கமுள்ளார்;
    எய்துறும் இதற்கு என் போல் உன் தகை சிலை உதவி என்றான். 193-1

  1044. மாருதி போதலோடும், வயப் படைத் தலைவர், மற்று ஓர்
    மாருதம் என்னப் பொங்கி, வரையொடு மரங்கள் வாரி,
    போர் எதிர் புகக் கண்டு, அன்னோர் அனைவரும் புரண்டு போரில்
    சோர் தர படைகள் வாரிச் சொரிந்து, அடல் அரக்கன் ஆர்த்தான். 203-1

  1045. மழுவொடு கணிச்சி, சூலம், வாள், மணிக் குலிசம், ஈட்டி,
    எழு, அயில், எஃகம் என்று இப் படை முதல் எவையும் வாரி,
    மழை எனப் பொழிந்து, நூறு யோசனை வரைப்பில் மேவும்
    அளவு அறு கவியின் சேனை அறுத்து, ஒரு கணத்தில் வந்தான். 203-2

  1046. இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
    கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களைக் கடிந்தே,
    முலைக்குவட்டு, அவர் கன்னியர், முன்றிலின் எறிய,
    விலக்க அரும் விறலாளி கண்டு, அவர் உயிர் விளிந்தார். 226-1

  1047. வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
    அடல் அரக்கரும் சிலர் உளர்; அவர் தலை அறுத்து, ஆங்கு
    உடன் எடுத்து, அவர் மனையினுக்கு உரிய கன்னியர்பால்
    இட, உவப்பொடும் புழுக்கினர், ஊன் இவை அறியார். 226-2

  1048. குஞ்சரத் தொகை, தேர்த் தொகை, குதிரையின் தொகை, மேல்
    விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும் வெள்ளம்
    பஞ்சினில் படும் எரி என, இலக்குவன் பகழி
    அஞ்செனப் படு கணத்து, அவை அனைத்தையும் அழித்த. 227-1

  1049. வந்து அம் மாப் படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய,
    அந்தி வான் எனச் சிவந்தது, அங்கு அடு களம்; அமரில்
    சிந்தி ஓடிய அரக்கரில் சிலர், தசமுகனுக்கு
    இந்த அற்புதம் உரைத்தும் என்று ஓடினர், இப்பால். 227-2

  1050. உரைத்து, நெஞ்சு அழன்று, ஒரு கணத்து இவன் உயிர் குடித்து, என்
    கருத்து முற்றுவென் எனச் சினம் கதுவிட, கடுந் தேர்
    பரித்த திண் திறல் பாகரை, பகைவனுக்கு எதிரே
    பொருத்தும் என்று அடல் கும்பகன் பொருக்கெனப் புகன்றான். 228-1

  1051. நாண் தெறித்தனன், பகிரண்டப் பரப்பொடு நவை போய்
    மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட, வயப் போர்
    பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய,
    தூண்டி, மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான்: 233-1

  1052. அது கண்டார் அடல் வானவர், ஆசிகள் கூறித்
    துதி கொண்டார்; அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு,
    இது கண்டேன்; இனிக் கழிந்தது, உன் உயிர் எனக் கனன்றே
    கொதி கொண்டான், அடல் சிலையினைக் குழைவுற வளைத்தான். 240-1

  1053. புக்க போதில், அங்கு இலக்குவன் பொருக்கெனத் துயர் தீர்ந்து,
    அக் கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய,
    மிக்க வார் சிலை வளைத்து, உரும் ஏறொடு விசும்பும்
    உட்க, நாண் எறிந்து, உக முடிவு என, சரம் பொழிந்தான். 248-1

  1054. காய் கதிர்ச் சிறுவனைப் பிணித்த கையினன்,
    போயினன் அரக்கன் என்று உரைத்த போழ்தின் வாய்,
    நாயகன் பொருக்கென எழுந்து, நஞ்சு உமிழ்
    தீ அன வெகுளியன், இனைய செய்தனன். 272-1

  1055. ஆயிரம் பேய் சுமந்து அளித்தது, ஆங்கு ஒரு
    மா இருங் கேடகம் இடத்து வாங்கினான்;
    பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர்
    காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான். 299-1

  1056. வீசினன் கேடகம்; விசும்பின் மீன் எலாம்
    கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
    காய் சின அரக்கனும் கனன்ற போது, அவன்
    நாசியும் செவியும் வெங் குருதி நான்றவே. 299-2

  1057. கும்பகன் கொடுமையும், குலைகுலைந்து போம்
    வெம்பு வெஞ் சேனையின் மெலிவும், நோக்கிய
    நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும்
    செம் பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான். 301-1

  1058. ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுறப்
    போயின கேடகம் புரிந்து நோக்கினான்;
    பேய் இரண்டாயிரம் சுமக்கப் பெற்றுடை
    மா இருங் கேடகம் கடிதின் வாங்கினான். 301-2

  1059. போயின கேடகம் போக நோக்கினன்,
    ஆயிரம் பெயரவன், அறியும் முன்பு; அவன்
    பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
    ஏ எனும் அளவினில் எய்தச் சென்றதால். 301-3

  1060. ஆலம் உண்டவன் முதல் அளித்தது, அன்னவன்
    சூலம் உண்டு; அளப்பு இல கோடி பேய் சுமந்து,
    ஓலம் இட்டு அமரர்கள் ஓட, ஊழியில்
    காலன் ஒத்தவன் கரத்து அளித்தது, அக் கணம். 310-1

  1061. பிடித்தனன் வலக் கையில் சூலம், பெட்பொடு;
    முடித்தனன், பூசனை மனத்தின் முன்னியே;
    விடுத்தனன், பகைவனை வென்று மீள்க எனா;
    தடுப்ப அரிது எனத் தளர்ந்து, அமரர் ஓடினார். 315-1

  1062. சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே,
    ஞால நாயகன், அரிக் கடவுள் ஏந்திய
    கால் வெங் கனல் படை கடிதின் ஏவி, அச்
    சூலம் அற்று இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான். 315-2

  1063. அழிந்தது சூலம்; அங்கு அமரர் யாவரும்
    தொழும் தகை அமலனைப் புகழ்ந்து துள்ளியே,
    கழிந்தது, எம் மனத் துயர் என்று கண்ணன்மேல்
    பொழிந்தனர், அவன் பெயர் புகன்று, பூமழை. 315-3

  1064. வந்த வெஞ் சேனைகள் வளைந்த எல்லையில்
    இந்திரன் முதலினர் ஏத்த, வள்ளலும்
    சுந்தர நெடுங் கணை மாரி தூவினான்;
    சிந்தியது, அப் பெருஞ் சேனை வெள்ளமே. 315-4

  1065. இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு முடிவு எய்திப்
    புரண்டு தத்துறப் பொழிந்தனர், இருவர் தம் பொரு சிலைக் கணை மாரி;
    இருண்டது எத்திசை மருங்கினும், பறவையின் இனம் பல படி மூடி;
    திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன், கும்பகன் சினம் மூள. 321-1

  1066. என்ற போதில், அரக்கனும் நோக்கினன், எம்பிரான் நுவல் மாற்றம்
    நன்று, நன்று! எனா, சிரம் துளக்கினன், நகைத்து, இவை இவை நவில்கின்றான்:
    வென்றி தந்து, தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில்
    பொன்றுமாறு இளைத்து, இன்று போய் வருவேனேல், புகழுடைத்தது போலாம். 324-1

  1067. இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி இதயத்தில் பெரு ஞான
    நினைவு எழுந்தது; இங்கு இவன் பெருங் கடவுள்; மற்று இவன் பத நிழல் காண
    வினை அறுந்தது; வேறு இனிப் பிறப்பு இலை என்று, தன் மன வேகம்-
    தனை மறந்தனன்; மறந்து அவன் தன்மையை நினைந்தனன், கருத்தோடும். 350-1
    யுத்த காண்டம்

  1068. 17. மாயா சனகப் படலம்


    மகோதரனிடம் சீதையை அடையும் வழி குறித்து இராவணன் வினவுதல்

  1069. அவ்வழி, கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்
    செல்வழி உணர்வு தோன்றச் செப்பினம்; சிறுமை தீரா
    வெவ் வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி, வேட்கை,
    இவ்வழி இலங்கை, வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்: 1

  1070. மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த
    மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
    சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
    யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன் உயிர் ஈதி என்றான். 2

  1071. மருத்தனைச் சனகனாக உருமாற்றிக் காட்டுமாறு மகோதரன் கூறுதல்

  1072. உணர்த்துவென், இன்று நன்று; ஓர் உபாயத்தின் உறுதி மாயை
    புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி;
    கணத்து, வன் சனகன் தன்னைக் கட்டினென் கொணர்ந்து காட்டின்-
    மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை உருவம் மாற்றி? 3

  1073. என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி,
    அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி, அன்ப! என்னா,
    புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து போனான்,
    வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான். 4

  1074. மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
    துன் இருள் இரிந்து தோற்ப, சுடர் மணித் தோளில் தோன்றும்
    பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
    நல் நெடுங் களி மால் யானை நாணுற, நடந்து வந்தான். 5

  1075. விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,
    இளைப்புறும் மருங்குல் நோவ, முலை சுமந்து இயங்கும் என்ன
    முளைப்பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும் பின்னும்,
    வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான். 6

  1076. இராவணன் சீதையை நோக்கிப் பேசுதல்

  1077. பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
    பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட,
    எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து இயற்றினாளை,
    கண்களால் அரக்கன் கண்டான், அவனை ஓர் கலக்கம் காண்பான். 7

  1078. இட்டதோர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும்,
    கட்ட தோள்-கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் தோன்ற,
    வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச,
    தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன், இனைய சொன்னான். 8

  1079. என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான்,
    என்றுதான், இரவியோடும் வேற்றுமை தெரிவது என்பால்?
    என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது?
    என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான். 9

  1080. வஞ்சனேன் எனக்கு நானே, மாதரார் வடிவு கொண்ட,
    நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன்; நாளும் தேய்ந்த
    நெஞ்சு நேரானது; உம்மை நினைப்பு விட்டு, ஆவி நீக்க
    அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம், அமுதின் வந்தீர்! 10

  1081. தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
    வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை
    ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்
    தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா! 11

  1082. பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
    கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
    அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
    புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர். 12

  1083. ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
    கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
    பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த
    ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசுணாதோ? 13

  1084. நோயினை நுகரவேயும், நுணங்கி நின்று உணங்கும் ஆவி
    நாய் உயிர் ஆகும் அன்றே, நாள் பல கழித்த காலை?
    பாயிரம் உணர்ந்த நூலோர், காமத்துப் பகுத்த பத்தி-
    ஆயிரம் அல்ல போன-ஐ-இரண்டு என்பர் பொய்யே. 14

  1085. அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்! என்னைப்
    பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,
    மறந்தன பெரிய; போன வரும் எனும் மருந்து தன்னால்,
    இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும் ஈட்டார்? 15

  1086. அந்தரம் உணரின், மேல்நாள், அகலிகை என்பாள், காதல்
    இந்திரன் உணர்ந்த, நல்கி எய்தினாள், இழுக்குற்றாளோ?
    மந்திரம் இல்லை; வேறு ஓர் மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
    சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்;-அமுதச் சொல்லீர்! 16

  1087. சீதையின் முன் இராவணன் விழுந்து வணங்குதல்

  1088. என்று உரைத்து, எழுந்து சென்று, அங்கு இருபது என்று உரைக்கும் நீலக்
    குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள் நிலத்தைக் கூட,
    மின் திரைத்து, அருக்கன் தன்னை விரித்து, முன் தொகுத்த போலும்
    நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான். 17

  1089. சீதை இராவணனுக்குத் தன் கருத்தை உரைத்தல்

  1090. வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று,
    மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள், விம்முகின்றாள்,
    கொல்லிய வரினும், உள்ளம் கூறுவென், தெரிய என்னா,
    புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன், புகல்வதானாள்: 18

  1091. பழி இது; பாவம் என்று பார்க்கிலை; பகரத் தக்க
    மொழி இவை அல்ல என்பது உணர்கிலை; முறைமை நோக்காய்;
    கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும் இன்று காறும்
    அழிகிலை என்றபோது, என் கற்பு என் ஆம்? அறம்தான் என் ஆம்? 19

  1092. வான் உள அறத்தின் தோன்றும் சொல்வழி வாழு மண்ணின்
    ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள; உணர்வும் உண்டால்;
    தான் உள; பத்துப் பேழ் வாய், தகாதன உரைக்கத் தக்க,
    யான் உளென் கேட்க என்றால், என் சொலாய்? யாது செய்யாய்? 20

  1093. வாசவன், மலரின் மேலான், மழுவலான் மைந்தன், மற்று அக்
    கேசவன் சிறுவர் என்ற இந்தத் தன்மையோர்தம்மைக் கேளாய்;
    பூசலின் எதிர்ந்தேன் என்றாய்; போர்க்களம் புக்க போது, என்
    ஆசையின் கனியைக் கண்ணின் கண்டிலை போலும், அஞ்சி, 21

  1094. ஊண் இலா யாக்கை பேணி, உயர் புகழ் சூடாது, உன்முன்
    நாண் இலாது இருந்தேன் அல்லேன்; நவை அறு குணங்கள் என்னும்
    பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணியமூர்த்தி தன்னைக்
    காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய். 22

  1095. சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால்-செருவில், செம்பொன்
    குன்று நின்றனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப
    கொன்று, நின் தலைகள் சிந்தி, அரக்கர்தம் குலத்தை முற்றும்
    வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை. 23

  1096. எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல்,-இரக்கம் அல்லால்
    தனக்கு உயிர் வேறு இன்றாகி, தாமரைக் கண்ணது ஆகி,
    கனக் கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி, ஆர்க்கும்
    மனக்கு இனிது ஆகி, நிற்கும் அஃது அன்றி-வரம்பு இலாதாய். 24

  1097. அயோத்திக்கும் மிதிலைக்கு வீரர்கள் சென்றுள்ளதாக இராவணன் கூறுதல்

  1098. என்றனள்; என்றலோடும், எரி உகு கண்ணன், தன்னைக்
    கொன்றன மானம் தோன்ற, கூற்று எனச் சீற்றம் கொண்டான்,
    வென்று எனை, இராமன் உன்னை மீட்டபின், அவனோடு ஆவி,
    ஒன்று என வாழ்திபோல் என்று, இடி உரும் ஒக்க நக்கான். 25

  1099. இனத்துளார் உலகத்து உள்ளார், இமையவர் முதலினார், என்
    சினத்துளார் யாவர் தீர்ந்தார்? தயரதன் சிறுவன் தன்னை,
    புனத் துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன்
    மனத்துளான் எனினும், கொல்வென்; வாழுதி, பின்னை மன்னோ! 26

  1100. வளைத்தன மதிலை, வேலை வகுத்தன வரம்பு, வாயால்
    உளைத்தன குரங்கு பல்கால் என்று அகம் உவந்தது உண்டேல்
    இளைத்த நுண் மருங்குல் நங்காய்! என் எதிர் எய்திற்று எல்லாம்,
    விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய; வியக்க வேண்டா. 27

  1101. கொற்றவாள் அரக்கர்தம்மை, அயோத்தியர் குலத்தை முற்றும்
    பற்றி நீர் தருதிர்; அன்றேல், பசுந் தலை கொணர்திர்; பாரித்து
    உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன்; உந்தை மேலும்,
    வெற்றியர் தம்மைச் செல்லச் சொல்லினென், விரைவின் என்றான். 28

  1102. மகோதரன் மாயாசனகனை அங்குக் கொணர்தல்

  1103. என்று அவன் உரைத்தகாலை, என்னை இம் மாயம் செய்தாற்கு
    ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த,
    நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள், நெருப்பை மீளத்
    தின்று தின்று உமிழ்கின்றாரின், துயருக்கே சேக்கை ஆனாள். 29

  1104. இத் தலை இன்ன செய்த விதியினார், என்னை, இன்னும்
    அத் தலை அன்ன செய்யச் சிறியரோ? வலியர் அம்மா!
    பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னாக்
    கைத்தனள் உள்ளம், வெள்ளக் கண்ணின் நீர்க் கரை இலாதாள். 30

  1105. ஆயது ஓர் காலத்து, ஆங்கண், மருத்தனைச் சனகன் ஆக்கி,
    வாய் திறந்து அரற்றப் பற்றி, மகோதரன் கடிதின் வந்து,
    காய் எரி அனையான் முன்னர்க் காட்டினன்; வணங்கக் கண்டாள்,
    தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிலாதாள். 31

  1106. மாயாசனகனைக் கண்ட சீதை வாய்விட்டு அரற்றுதல்

  1107. கைகளை நெரித்தாள்; கண்ணில் மோதினாள்; கமலக் கால்கள்
    நெய் எரி மிதித்தாலென்ன, நிலத்திடைப் பதைத்தாள்; நெஞ்சம்
    மெய் என எரிந்தாள்; ஏங்கி விம்மினாள்; நடுங்கி வீழ்ந்தாள்;
    பொய் என உணராள், அன்பால் புரண்டனள், பூசலிட்டாள். 32

  1108. தெய்வமோ? என்னும்; மெய்ம்மை சிதைந்ததோ? என்னும்; தீய
    வைவலோ, உவகை? என்னும்; வஞ்சமோ, வலியது? என்னும்;
    உய்வலோ, இன்னம்? என்னும்; ஒன்று அல துயரம் உற்றாள்;
    தையலோ? தருமமேயோ? யார், அவள் தன்மை தேர்வார்? 33

  1109. எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக் கோள்
    வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ! மண்ணோர்
    தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே! என்னும்;
    வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள். 34

  1110. இட்டு, உண்டாய்; அறங்கள் செய்தாய்; எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
    கட்டுண்டாய்; உயர்ந்த வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய்;
    மட்டு உண்டார், மனிசர்த் தின்ற வஞ்சரால் வயிரத் திண் தோள்
    கட்டுண்டாய்; என்னே, யானும் காண்கின்றேன் போலும் கண்ணால். 35

  1111. என்று, இன பலவும் பன்னி, எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்,
    பொன்றினள் போலும் என்னா, பொறை அழிந்து, உயிர்ப்புப் போவாள்,
    மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள்,
    அன்றில் அம் பேடை போல, வாய் திறந்து அரற்றலுற்றாள்: 36

  1112. பிறையுடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இற் கடன்கள் செய்ய,
    இறையுடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்;
    சிறையுடைக் காண, நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே-
    மறையுடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே? 37

  1113. வன் சிறைப் பறவை ஊரும் வானவன், வரம்பு இல் மாயப்
    புன் சிறைப் பிறவி தீர்ப்பான் உளன் எனப் புலவர் நின்றார்
    என் சிறை தீர்க்குவாரைக் காண்கிலேன்: என்னின் வந்த
    உன் சிறை விடுக்கற்பாலார் யார் உளர், உலகத்து உள்ளார்? 38

  1114. பண் பெற்றாரோடு கூடாப் பகை பெற்றாய்; பகழி பாய
    விண் பெற்றாய் எனினும், நன்றால், வேந்தராய் உயர்ந்த மேலோர்
    எண் பெற்றாய்; பழியும் பெற்றாய்; இது நின்னால் பெற்றது அன்றால்;
    பெண் பெற்றாய்; அதனால், பெற்றாய்; யார் இன்ன பேறு பெற்றார்? 39

  1115. சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு, ஆற்ற
    எற்றுண்டும், அளற்று நீங்கா, விழு சிறு குண்டை என்ன,
    பற்றுண்ட நாளே மாளாப் பாவியேன், உம்மை எல்லாம்
    விற்று உண்டேன்; எனக்கு மீளும் விதி உண்டோ , நரகில் வீழ்ந்தால்? 40

  1116. இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு, அளவு இல் இன்பம்
    பொருந்தினேன் அல்லேன்; எம்கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்;
    வருந்தினேன், நெடு நாள்; உம்மை வழியொடு முடித்தேன்; வாயால்
    அருந்தினேன், அயோத்தி வந்த அரசர்தம் புகழை அம்மா! 41

  1117. கொல் எனக் கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன்; எந்தை
    கல் எனத் திரண்ட தோளைப் பாசத்தால் கட்டக் கண்டேன்;
    இல் எனச் சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்-
    அல்லெனோ? எளியெனோ, யான்? அளியத்தேன், இறக்கலாதேன்! 42

  1118. இணை அறு வேள்வி மேல்நாள் இயற்றி, ஈன்று எடுத்த எந்தை
    புணை உறு திரள் தோள் ஆர்த்து, பூழியில் புரளக் கண்டேன்;
    மணவினை முடித்து, என் கையை மந்திர மரபின் தொட்ட
    கணவனை இனைய கண்டால் அல்லது, கழிகின்றேனோ? 43

  1119. அன்னைமீர்! ஐயன்மீர்! என் ஆர் உயிர்த் தங்கைமீரே!
    என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று
    முன்னம் நீர் உணர்ந்திலீரோ? உமக்கு வேறு உற்றது உண்டோ?
    துன்ன அரு நெறியின் வந்து, தொடர்ந்திலீர்; துஞ்சினீரோ? 44

  1120. மேருவின் உம்பர்ச் சேர்ந்து, விண்ணினை மீக்கொண்டாலும்,
    நீருடைக் காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்;
    போரிடைக் கொண்டாரேனும், வஞ்சனை புணர்ந்தாரேனும்,
    ஆர் உமக்கு அறையற்பாலார்? அனுமனும் உளனோ, நும் பால்? 45

  1121. சரதம்; மற்று இவனைத் தந்தார், தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த
    பரதனைக் கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை; பல் நாள்
    வரதனும் வாழ்வான் அல்லன்; தம்பியும் அனையன வாழான்;
    விரதம் உற்று, அறத்தில் நின்றார்க்கு, இவைகொலாம் விளைவ மேன்மேல்? 46

  1122. அடைத்தது கடலை; மேல் வந்து அடைந்தது, மதிலை; ஆவி
    துடைத்தது பகையை, சேனை எனச் சிலர் சொல்லச் சொல்ல,
    படைத்தது ஓர் உவகைதன்னை, வேறு ஒரு வினயம் பண்ணி,
    உடைத்தது விதியே என்று என்று, உளைந்தனள், உணர்வு தீர்வாள். 47

  1123. சீதையை இணங்குமாறு மீண்டும் இராவணன் வேண்டுதல்

  1124. ஏங்குவாள் இனைய பன்ன, இமையவர் ஏற்றம் எல்லாம்
    வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
    தாங்குவாள் அல்லள் துன்பம்; இவளையும் தாங்கி, தானும்
    ஓங்குவான் என்ன உன்னி, இனையன உரைக்கலுற்றான்; 48

  1125. காரிகை! நின்னை எய்தும் காதலால், கருதலாகாப்
    பேர் இடர் இயற்றலுற்றேன்; பிழை இது பொறுத்தி; இன்னும்,
    வேர் அற மிதிலையோரை விளிகிலேன்; விளிந்த போதும்,
    ஆர் உயிர் இவனை உண்ணேன்; அஞ்சலை, அன்னம் அன்னாய்! 49

  1126. இமையவர் உலகமேதான், இவ் உலகு ஏழுமேதான்,
    அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான்,
    சமைவுறத் தருவென், மற்று இத் தாரணி மன்னற்கு; இன்னல்
    சுமையுடைக் காம வெந் நோய் துடைத்தியேல், தொழுது வாழ்வேன். 50

  1127. இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து, வேறு இடத்து இருந்து வாழ்வேன்;
    நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென்; நாமத் தெய்வப்
    பொலம் கிளர் மானம்தானே பொது அறக் கொடுப்பென்; புத்தேள்
    வலம் கிளர் வாளும் வேண்டில், வழங்குவென்; யாதும் மாற்றேன். 51

  1128. இந்திரன் கவித்த மௌலி, இமையவர் இறைஞ்சி ஏத்த,
    மந்திர மரபின் சூட்டி, வானவர் மகளிர் யாரும்
    பந்தரின் உரிமை செய்ய, யான் இவன் பணியில் நிற்பேன்-
    சுந்தரப் பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின். 52

  1129. எந்தைதன் தந்தை தாதை, இவ் உலகு ஈன்ற முன்னோன்,
    வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும்; மற்றை
    அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால்; அமிழ்தின் வந்த
    செந்திரு நீர் அல்லீரேல், அவளும் வந்து, ஏவல் செய்யும். 53

  1130. தேவரே முதலா, மற்றைத் திண்திறல் நாகர், மண்ணோர்,
    யாவரும் வந்து, நுந்தை அடி தொழுது, ஏவல் செய்வார்;
    பாவை! நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால்;
    மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்து, அது முடித்தி என்றான். 54

  1131. சீதை சினந்து உரைத்தல்

  1132. இத் திருப் பெறுகிற்பானும், இந்திரன்; இலங்கை நுங்கள்
    பொய்த் திருப் பெறுகிற்பானும், வீடணன்; புலவர் கோமான்
    கைத் திருச்சரங்கள் உன் தன் மார்பிடைக் கலக்கற்பால;
    மைத் திரு நிறத்தான் தாள் என் தலைமிசை வைக்கற்பால. 55

  1133. நகுவன நின்னோடு, ஐயன் நாயகன் நாம வாளி,
    புகுவன போழ்ந்து, உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம்
    தகுவன இனிய சொல்லத் தக்கன; சாப நாணின்,
    உகுவன மலைகள் எஞ்ச, பிறப்பன ஒலிகள் அம்மா! 56

  1134. சொல்லுவ மதுர மாற்றம், துண்டத்தால் உண்டு, உன் கண்ணைக்
    கல்லுவ, காகம்; வந்து கலப்பன, கமலக் கண்ணன்
    வில் உமிழ் பகழி; பின்னர், விலங்கு எழில் அலங்கல் மார்பம்
    புல்லுவ, களிப்புக் கூர்ந்து, புலவு நாறு அலகை எல்லாம். 57

  1135. விரும்பி நான் கேட்பது உண்டால், நின்னுழை வார்த்தை; வீரன்
    இரும்பு இயல் வயிர வாளி இடறிட, எயிற்றுப் பேழ் வாய்ப்
    பெரும் பியல் தலைகள் சிந்திப் பிழைப்பிலை முடிந்தாய் என்ன,
    அரும்பு இயல் துளவப் பைந்தார் அனுமன் வந்து அளித்த அந்நாள். 58

  1136. புன் மகன்! கேட்டி, கேட்டற்கு உரியது; புகுந்த போரின்,
    உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
    நன் மகன் வாளி நக்க, நாய் அவன் உடலை நக்க,
    என் மகன் இறந்தான் என்ன, நீ எடுத்து அரற்றல் என்றாள். 59

  1137. இராவணன் சீதையைக் கொல்ல முயல மகோதரன் தடுத்து உரைத்தல்

  1138. வெய்யவன் அனைய கேளா, வெயில் உக விழித்து, வீரக்
    கை பல பிசைந்து, பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி,
    தையல்மேல் ஓடலோடும், மகோதரன் தடுத்தான்; ஈன்ற
    மொய் கழல் தாதை வேண்ட, இசையும்; நீ முனியல் என்றான். 60

  1139. மாயாசனகன் இராவணன் கருத்துக்கு இணங்குமாறு சீதையைக் கூறுதல்

  1140. அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க, ஆவி
    பொன்றினன் ஆகும் என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்,
    இன்று இது நேராய் என்னின், என்னை என் குலத்தினோடும்
    கொன்றனை ஆதி என்னா, இனையன கூறலுற்றான்: 61

  1141. பூவின்மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள்
    பாவி! யான் பயந்த நங்கை! நின் பொருட்டாகப் பட்டேன்;
    ஆவி போய் அழிதல் நன்றோ? அமரர்க்கும் அரசன் ஆவான்
    தேவியாய் இருத்தல் தீதோ? சிறையிடைத் தேம்புகின்றாய்! 62

  1142. என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி, ஈண்டு
    நல் நெடுஞ் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி, நாளும்
    உன்னை வெஞ் சிறையின் நீக்கி, இன்பத்துள் உய்ப்பாய் என்னா,
    பொன் அடி மருங்கு வீழ்ந்தான், உயிர் உகப் பொருமுகின்றான். 63

  1143. சீதை மாயாசனகனைக் கடிந்துரைத்தல்

  1144. அவ் உரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி,
    வெவ் உயிர்த்து, ஆவி தள்ளி, வீங்கினள், வெகுளி பொங்க,
    இவ் உரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி;
    செவ்வுரை அன்று இது என்னாச் சீறினள், உளையச் செப்பும்: 64

  1145. அறம் கெட, வழக்கு நீங்க, அரசர்தம் மரபிற்கு ஆன்ற
    மறம் கெட, மெய்ம்மை தேய, வசை வர, மறைகள் ஓதும்
    திறம் கெட, ஒழுக்கம் குன்ற, தேவரும் பேணத் தக்க
    நிறம் கெட, இனைய சொன்னாய்; சனகன்கொல், நினையின்? ஐயா! 65

  1146. வழி கெட வரினும், தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும், மார்பம்
    கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும், ஆன்றோர் கூறும்
    மொழிகொடு வாழ்வது அல்லால், முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும்
    பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ? பாவம்! 66

  1147. நீயும், நின் கிளையும், மற்று இந் நெடு நில வரைப்பும், நேரே
    மாயினும், முறைமை குன்ற வாழ்வெனோ?-வயிரத் திண் தோள்
    ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்-
    நாயினை நோக்குவேனோ, நாண் துறந்து, ஆவி நச்சி? 67

  1148. வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
    எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
    அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
    நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! 68

  1149. அல்லையே எந்தை; ஆனாய் ஆகதான்; அலங்கல் வீரன்
    வில்லையே வாழ்த்தி, மீட்கின் மீளுதி; மீட்சி என்பது
    இல்லையேல், இறந்து தீர்தி; இது அலால், இயம்பல் ஆகாச்
    சொல்லையே உரைத்தாய்; என்றும் பழி கொண்டாய் என்னச் சொன்னாள். 69

  1150. இராவணன் மாயாசனகனைக் கொல்ல வாள் உருவுதல்

  1151. வன் திறல் அரக்கன், அன்ன வாசகம் மனத்துக் கொள்ளா,
    நின்றது நிற்க; மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க; நின்முன்
    நின்றவன் அல்லன் போலாம் சனகன்; இக் கணத்தினின் முன்
    கொன்று உயிர்குடிப்பென் என்னா, சுரிகைவாள் உருவிக் கொண்டான். 70

  1152. சீதையின் பதில் உரை

  1153. என்னையும் கொல்லாய்; இன்னே இவனையும் கொல்லாய்; இன்னும்
    உன்னையும் கொல்லாய்; மற்று, இவ் உலகையும் கொல்லாய்; யானோ
    இன் உயிர் நீங்கி, என்றும் கெடாப் புகழ் எய்துகின்றேன்;
    பின்னையும், எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள். 71

  1154. மாயாசனகனைக் கொல்லச் சென்ற இராவணனை மகோதரன் தடுத்தல்

  1155. இரந்தனன் வேண்டிற்று அல்லால், இவன் பிழை இழைத்தது உண்டோ?
    புரந்தரன் செல்வத்து ஐய! கொல்கை ஓர் பொருளிற்றோதான்;
    பரந்த வெம் பகையை வென்றால், நின்வழிப் படரும் நங்கை;
    அரந்தையன் ஆகும் அன்றே, தந்தையை நலிவதாயின்? 72

  1156. கும்பகருணன் இறந்தமையை இராவணன் அறிதல்

  1157. என்று அவன் விலக்க, மீண்டு, ஆண்டு இருந்தது ஓர் இறுதியின் கண்,
    குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல,
    வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை,
    சென்றன செவியினூடு, தேவர்கள் ஆர்ப்பும் செல்ல, 73

  1158. உகும் திறல் அமரர் நாடும், வானர யூகத்தோரும்,
    மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும், விஞ்ச,
    தகும் திறன் நினைந்தேன்; எம்பிக்கு அமரிடைத் தனிமைப்பாடு
    புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின். 74

  1159. புறந்தரு சேனை முந்நீர் அருஞ் சிறை போக்கி, போதப்
    பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி, பைய,
    திறம் திறம் ஆக நின்ற கவிப் பெருங் கடலைச் சிந்தி,
    இறந்தனன், நும்பி; அம்பின் கொன்றனன், இராமன் என்றார். 75

  1160. இராவணன் அழுது அரற்றுதல்

  1161. ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன, ஒண் பொன்
    தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த, தள்ளி,
    பாரொடும் பொருந்தி நின்ற மராமரம், பணைகளோடும்
    வேரொடும் பறிந்து, மண்மேல் வீழ்வதே போல, வீழ்ந்தான். 76

  1162. பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
    உறுவது ஒன்று இன்றி, ஆவி ஒன்றென நினைந்து நின்றான்,
    எறி வரும் செருவில் தம்பி தன்பொருட்டு இறந்தான் என்ன
    அறிவு அழிந்து, அவசன் ஆகி, அரற்றினன், அண்டம் முற்ற. 77

  1163. தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
    தும்பியோ! நான்முகத்தோன் சேய்மதலை தோன்றாலோ!
    நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த
    எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ! 78

  1164. மின் இலைய வேலோனே! யான் உன் விழி காணேன்,
    நின் நிலை யாது என்னேன், உயிர் பேணி நிற்கின்றேன்;
    உன் நிலைமை ஈது ஆயின், ஓடைக் களிறு உந்திப்
    பொன்னுலகம் மீளப் புகாரோ, புரந்தரனார்? 79

  1165. வல் நெஞ்சின் என்னை நீ நீத்துப் போய், வான் அடைந்தால்,
    இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்?
    மின் அஞ்சும் வேலோய்! விழி அஞ்ச வாழ்கின்றார்,
    தம் நெஞ்சம் தாமே தடவாரோ, தானவர்கள்? 80

  1166. கல் அன்றோ, நீராடும் காலத்து, உன் கால் தேய்க்கும்-
    மல் ஒன்று தோளாய்!-வட மேரு? மானுடவன்
    வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
    சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது, தோன்றால்! 81

  1167. மாண்டனவாம், சூலமும், சக்கரமும், வச்சிரமும்;
    தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம்; தெறித்து,
    மீண்டனவாம்; மானிடவன் மெல் அம்பு மெய் உருவ,
    நீண்டனவாம்; தாம் இன்னம் நின்றாராம், தோள் நோக்கி! 82

  1168. நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும், இந் நொய்து இலங்கை
    போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும், என் பின் பிறந்தாள்
    மூக்கு அறவும், வாழ்ந்தேன் - ஒருத்தி முலைக் கிடந்த
    ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்? 83

  1169. தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான்,
    மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான்,
    பின்னைக் கரடிக்கு இறையைத்தான், பேர் மாய்த்தாய்
    என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே! 84

  1170. ஏழை மகளிர் அடி வருட, ஈர்ந் தென்றல்
    வாழும் மணி அரங்கில், பூம் பள்ளி வைகுவாய்!
    சூழும் அலகை துணங்கைப் பறை துவைப்ப,
    பூழி அணைமேல் துயின்றனையோ, போர்க்களத்தே? 85

  1171. செந் தேன் பருகித் திசை திசையும் நீ வாழ,
    உய்ந்தேன்; இனி, இன்று நானும் உனக்கு ஆவி
    தந்தேன், பிரியேன், தனி போகத் தாழ்க்கிலேன்,
    வந்தேன் தொடர; மதக் களிறே! வந்தேனால். 86

  1172. இராவணன் கதறச் சீதை மகிழ்தல்

  1173. அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து,
    பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்;
    தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர் பொடிப்ப,
    கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள். 87

  1174. வீங்கினாள் கொங்கை; மெலிந்த மெலிவு அகல
    ஓங்கினாள்; உள்ளம் உவந்தாள்; உயிர் புகுந்தாள்;
    தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை சேடி ஆம்
    பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்? 88

  1175. கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை;
    கொண்டாள், ஒரு துணுக்கம்; அன்னவனைக் கொற்றவனார்
    தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
    உண்டாள் உடல் தடித்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்றாள். 89

  1176. இராவணன் சீறி அகல்தல்

  1177. தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்
    யாவரையும் கொன்று அருக்கி, என்றும் இறவாத
    மூவரையும், மேலை நாள் மூவா மருந்து உண்ட
    தேவரையும், வைப்பேன் சிறை என்னச் சீறினான். 90

  1178. அக் கணத்து, மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி,
    இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால்
    முக் கைப் புனல் உகுப்பென், எம்பிக்கு என முனியா,
    திக்கு அனைத்தும் போர் கடந்தான், போயினான், தீ விழியான். 91

  1179. மகோதரன் போதல்

  1180. கூறோம், இனி நாம்; அக் கும்பகருணனார்
    பாறு ஆடு வெங் களத்துப் பட்டார் எனப் பதையா,
    வேறு ஓர் சிறை இவனை வைம்மின் விரைந்து என்ன,
    மாறு ஓர் திசை நோக்கிப் போனார், மகோதரனார். 92

  1181. சீதையைத் திரிசடை தேற்றுதல்

  1182. வரி சடை நறு மலர் வண்டு பாடு இலாத்
    துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய
    ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்,
    திரிசடை தெருட்டுவாள், இனைய செப்புவாள்: 93

  1183. உந்தை என்று, உனக்கு எதிர் உருவம் மாற்றியே,
    வந்தவன், மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்;
    அந்தம் இல் கொடுந் தொழில் அரக்கன் ஆம் எனா,
    சிந்தையன் உணர்த்தினள், அமுதின் செம்மையாள். 94

  1184. நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள்,
    சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்;
    இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
    அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் அரோ. 95

  1185. மிகைப் பாடல்கள்

  1186. இம் மொழி அரக்கன் கூற, ஏந்திழை இரு காதூடும்
    வெம்மை சேர் அழலின் வந்த வே........................
    .........ல் வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள்; மீட்டும்
    விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு, இவை விளம்ப லுற்றான்: 54-1

  1187. மங்கையை, குலத்துளாளை, தவத்தியை முனிந்து, வாளால்
    சங்கை ஒன்று இன்றிக் கொன்றான், குலத்துக்கே தக்கான் என்று
    கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும்
    செங்கைகள் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறுமை என்னா. 72-1

  1188. அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற,
    நொந்து, ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய்,
    சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின்
    உந்தா, உளம் கொதித்து, ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான். 89-1