MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    Kamba Ramayanam yuththa kandam Part 3
    கம்பராமாயணம் யுத்த காண்டம்
    18. அதிகாயன் வதைப் படலம்
    19. நாகபாசப் படலம்
    20. படைத் தலைவர் வதைப் படலம்
    21. மகரக்கண்ணன் வதைப் படலம்
    22. பிரமாத்திரப் படலம்
    யுத்த காண்டம்

    18. அதிகாயன் வதைப் படலம்


    இராவணன் அமைச்சரைக் கடிதல்

  1. கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற,
    எழுந்து எரி வெகுளியான், இரு மருங்கினும்
    தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா,
    மொழிந்தனன், இடியொடு முகிலும் சிந்தவே: 1

  2. ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை
    யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச்
    சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர்
    வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால். 2

  3. எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும்
    படுத்து, இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர்!
    தடுத்தலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்;
    கொடுத்தலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர். 3

  4. உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என்
    வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால்
    இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச்
    செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால். 4

  5. ஆற்றலம் என்றிரேல் என்மின்; யான், அவர்
    தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங்
    கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என்
    வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால். 5

  6. அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: ஆர் அமர்
    வெல்லுதும் என்றிரேல், மேல் செல்வீர்; இனி,
    வல்லது மடிதலே என்னின், மாறுதிர்,
    சொல்லும், நும் கருத்து என முனிந்து சொல்லினான். 6

  7. அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறுதல்

  8. நதி காய் நெடு மானமும் நாணும் உறா,
    மதி காய் குடை மன்னனை வைது உரையா,
    விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
    அதிகாயன் எனும் பெயரான் அறைவான்: 7

  9. வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா-
    லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக, மேல்
    நான் அஞ்சினேன் என்று, உனை நாணுக; போர்
    யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ? 8

  10. வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
    தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
    உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
    கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ? 9

  11. காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத்
    தேய்ப்புண்டவனும், சில சில் கணையால்
    ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால்
    ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ? 10

  12. அதிகாயன் வஞ்சினம் கூறி போருக்குப் போதல்

  13. உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
    தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்
    கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
    நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்? 11

  14. கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம்
    மட்டித்து, உயர் வானரர் வன் தலையை
    வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக்
    கட்டித் தருவென்; இது காணுதியால். 12

  15. சேனைக் கடலோடு இடை செல்க எனினும்,
    யான் இப்பொழுதே, தனி ஏகு எனினும்
    தான் ஒத்தது சொல்லுதி; தா விடை என்-
    றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான். 13

  16. சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ
    அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான்,
    பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்-
    தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால். 14

  17. போவாய் இது போது-பொலங் கழலோய்!-
    மூவாயிர கோடியரோடு, முரண்
    கா ஆர் கரி, தேர், பரி காவலின் என்று,
    ஏவாதன யாவையும் ஏவினனால். 15

  18. கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு
    அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,-உன்
    செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
    உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர். 16

  19. ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
    வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன்
    போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண்
    தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்! 17

  20. ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர்
    சேமத்தன பின் புடை செல்ல, அடும்
    கோ மத்த நெடுங் கரி கொடியாடும்,
    போம், அத்தனை வெம் புரவிக் கடலே. 18

  21. என்றே விடை நல்க, இறைஞ்சி எழா
    வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள்
    பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின்
    நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால். 19

  22. பல்வேறு படைக்கலம், வெம் பகலோன்
    எல் வேறு தெரிப்ப, கொடு ஏகினனால்,
    சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற,-மா-
    வில் வேறு தெரிப்புறும் மேனியினான். 20

  23. அதிகாயனோடு சென்ற படைகள்

  24. இழை, அஞ்சன, மால் களிறு, எண் இல் அரி
    முழை அஞ்ச முழங்கின; மும் முறை நீர்
    குழை அஞ்ச முழங்கின, நாண் ஒலி; கோள்
    மழை அஞ்ச முழங்கின, மா முரசே. 21

  25. ஆர்த்தார், நெடு வானம் நடுங்க; அடிப்
    பேர்த்தார், நிலமாமகள் பேர்வள் என;
    தூர்த்தார் நெடு வேலைகள், தூளியினால்;
    வேர்த்தார், அது கண்டு விசும்பு உறைவோர். 22

  26. அடியோடு மதக் களி யானைகளின்
    பிடியோடு நிகர்த்தன, பின் புறம், முன்-
    தடியோடு துடங்கிய தாரைய, வெண்
    கொடியோடு துடங்கிய, கொண்மு எலாம். 23

  27. தாறு ஆடின மால் கரியின்புடை தாழ்
    மாறாடின மா மதம் மண்டுதலால்,
    ஆறு ஆடின, பாய் பரி, யானைகளும்;
    சேறு ஆடின, சேண் நெறி சென்ற எலாம், 24

  28. தேர் சென்றன, செங் கதிரோனொடு சேர்
    ஊர் சென்றனபோல்; ஒளி ஓடைகளின்
    கார் சென்றன, கார் நிரை சென்றனபோல்;
    பார் சென்றில, சென்றன பாய் பரியே. 25

  29. கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் கொதித்தல்

  30. மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து, நெடும்
    பாரில் செலுமாறு படப் படரும்
    தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண்
    போர் முற்று களத்திடைப் புக்கனனால். 26

  31. கண்டான், அவ் இராமன் எனும் களி மா
    உண்டாடிய வெங் களன் ஊடுருவ;
    புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
    திண்டாடினன், வந்த சினத் திறலோன். 27

  32. மலை கண்டனபோல் வரு தோளோடு தாள்
    கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம்,
    நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந்
    தலை கண்டிலன், நின்று சலித்தனனால். 28

  33. மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
    திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண்
    கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான்
    உடல் என்று, உயிரோடும் உருத்தனனால். 29

  34. எல்லே! இவை காணிய எய்தினனோ!
    வல்லே உளராயின மானுடரைக்
    கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில்
    செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ? 30

  35. அதிகாயன், இலக்குவன் பால் தூது அனுப்புதல்

  36. என்னா, முனியா, இது இழைத்துளவன்
    பின்னானையும் இப்படிச் செய்து பெயர்த்து,
    அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென் என்று
    உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்: 31

  37. வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில்
    போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்;
    நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்;
    மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய். 32

  38. அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
    தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
    உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
    வந்தான் என, முன் சொல் வழங்குதியால்; 33

  39. கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான்,
    நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன்
    தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்,
    குளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்; 34

  40. தீது என்று அது சிந்தனை செய்திலெனால்;
    ஈது என்று அறம் மன் நெறி ஆம் என, நீ
    தூது என்று இகழாது, உன சொல் வலியால்,
    போது என்று, உடனே கொடு, போதுதியால். 35

  41. செரு ஆசையினார், புகழ் தேடுறுவார்,
    இருவோரையும், நீ வலி உற்று, எதிரே
    பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்;
    வருவோரை எலாம் வருக! என்னுதியால். 36

  42. சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்,
    வந்தான் என என் எதிரே, மதியோய்!
    தந்தாய் எனின், யான் அலது, யார் தருவார்,
    உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்? 37

  43. வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு
    ஏறே வருமேல், இமையோர் எதிரே,
    கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும்
    மாறே, ஒரு மன் என வைக்குவெனால். 38

  44. விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார்
    பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும்
    உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
    எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால். 39

  45. உறைதந்தன செங் கதிரோன் உருவின்
    பொறை தந்தன, காசு ஒளிர் பூண், இமையோர்
    திறை தந்தன, தெய்வ நிதிக் கிழவன்
    முறை தந்தன, தந்து முடிக்குவெனால், 40

  46. மாறா மத வாரிய, வண்டினொடும்
    பாறு ஆடு முகத்தன, பல் பகலும்
    தேறாதன, செங் கண வெங் களி மா
    நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால், 41

  47. செம் பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
    உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழாப்
    பம்பும் மணி தார் அணி பாய் பரிமா,
    இம்பர் நடவாதன, ஈகுவெனால். 42

  48. நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்,
    பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்,
    மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்,
    அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால். 43

  49. மற்றும், ஒரு தீது இல் மணிப் பணி தந்து,
    உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால்;
    பொன் திண் கழலாய்! நனி போ எனலோடு,
    எற்றும் திரள் தோளவன் ஏகினனால். 44

  50. மயிடனை வானரர் பற்றுதல்

  51. ஏகி, தனி சென்று, எதிர் எய்தலுறும்
    காகுத்தனை எய்திய காலையின்வாய்,
    வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்,
    ஓகைப் பொருள் உண்டு என, ஓதினனால். 45

  52. இராமன் மயிடனை வினவல்

  53. போதம் முதல், வாய்மொழியே புகல்வான்;
    ஏதும் அறியான்; வறிது ஏகினனால்;
    தூதன்; இவனைச் சுளியன்மின் எனா,
    வேதம் முதல் நாதன் விலக்கினனால். 46

  54. என், வந்த குறிப்பு? அது இயம்பு எனலும்,
    மின் வந்த எயிற்றவன், வில் வல! உன்
    பின் வந்தவனே அறி பெற்றியதால்,
    மன் வந்த கருத்து என, மன்னர்பிரான்! 47

  55. இலக்குவன் வினவ, தூதன் செய்தி உரைத்தல்

  56. சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு எனா,
    வில்லாளன் இளங்கிளையோன் வினவ,
    பல் ஆயிர கோடி படைக் கடல் முன்
    நில்லாய் என, நின்று நிகழ்த்தினனால்: 48

  57. உன்மேல் அதிகாயன் உருத்துளனாய்
    நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்-
    தன் மேல் எதிரும் வலி தக்குளையேல்,
    பொன் மேனிய! என்னொடு போதுதியால். 49

  58. சையப் படிவத்து ஒரு தந்தையை முன்
    மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து,
    ஐயப்படல், அப்படி இப் படியில்
    செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால். 50

  59. கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா
    நின்றானொடு நின்றது என், நேடி? எனின்,
    தன் தாதை படும் துயர், தந்தையை முன்
    வென்றானை இயற்றுறும் வேட்கையினால். 51

  60. வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று
    ஏனோர்களும், இவ் உரை கேண்மின்; இவன்-
    தானே பொருவான்; அயலே தமர் வந்து
    ஆனோரும் உடன் பொருவான், அமைவான். 52

  61. இராமன் இலக்குவனை அனுப்பல்

  62. எழுவாய், இனி என்னுடன் என்று, எரியும்
    மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும்,
    தழுவா, உடன் ஏகுதி; தாழல்! எனத்
    தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும், 53

  63. வீடணன் அதிகாயனது திறம் குறித்தல்

  64. எல்லாம் உடன் எய்திய பின், இவனே
    வில்லானொடு போர் செய வேண்டும் எனா,
    நல்லாறுடை வீடணன், நாரணன் முன்
    சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால்; 54

  65. வார் ஏறு கழற் சின வாள் அரி எம்
    போர் ஏறொடு போர் புரிவான் அமையா,
    தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண்
    கார் ஏறு என வந்த கதத் தொழிலோன். 55

  66. ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்,
    தேவாசுரர் ஆதியர் செய் செருவில்,
    சாவான் இறையும், சலியா வலியான்,
    மூவா முதல் நான்முகனார் மொழியால்; 56

  67. கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு
    இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை,
    திடமே உலகில் பல தேவரொடும்,
    வட மேரு எடுக்க, வளர்த்தனனால்; 57

  68. மாலாரொடு மந்தரம் மாசுணமும்
    மேலாகிய தேவரும் வேண்டும் எனா,
    ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய,
    காலால் நெடு வேலை கலக்கிடுமால்; 58

  69. ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப்
    பாழித் திசை நின்று சுமந்த, பணைச்
    சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ?
    ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்; 59

  70. காலங்கள் கணக்கு இற, கண் இமையா
    ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய்
    வேல் அங்கு எறிய, கொடு, விட்டது நீள்
    சூலம் கொல்? எனப் பகர் சொல் உடையான்; 60

  71. பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
    புகை ஆடிய நாள், புனை வாகையினான்,
    மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெந்
    தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்; 61

  72. உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம்,
    செயிர் ஒப்புறும் இந்திரர், சிந்திய நாள்,
    அயிர் ஒப்பன நுண் துகள்செய்து, அவர்தம்
    வயிரப் படை தள்ளிய வாளியினான்; 62

  73. கற்றான், மறை நூலொடு கண்ணுதல்பால்;
    முற்றாதன தேவர் முரண் படைதாம்,
    மற்று ஆரும் வழங்க வலார் இலவும்,
    பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்; 63

  74. அறன் அல்லது நல்லது மாறு அறியான்;
    மறன் அல்லது பல் பணி மாறுஅணியான்;
    திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்;
    உறல் நல்லது, பேர் இசை என்று உணர்வான்; 64

  75. காயத்து உயிரே விடு காலையினும்
    மாயத்தவர் கூடி மலைந்திடினும்
    தேயத்தவர் செய்குதல் செய்திடினும்,
    மாயத் தொழில் செய்ய மதித்திலனால். 65

  76. அதிகாயன் வரலாறு

  77. மது கைடவர் என்பவர், வானவர்தம்
    பதி கைகொடு கட்டவர், பண்டு ஒரு நாள்
    அதி கைதவர், ஆழி அனந்தனையும்,
    விதி கைம்மிக, முட்டிய வெம்மையினார். 66

  78. நீர் ஆழி இழிந்து, நெடுந்தகையை,
    தாராய் அமர் என்றனர், தாம் ஒரு நாள்;
    ஆர் அழிய அண்ணலும், அஃது இசையா,
    வாரா, அமர் செய்க! என வந்தனனால், 67

  79. வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்,
    நல்லார் முறை வீசி, நகும் திறலார்
    மல்லால் இளகாது, மலைந்தனன் மால்;
    அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால். 68

  80. தன் போல்பவர் தானும் இலாத தனிப்
    பொன்போல் ஒளிர் மேனியனை, புகழோய்!
    என் போல்பவர் சொல்லுவது, எண் உடையார்
    உன் போல்பவர் யார் உளர்? என்று உரையா, 69

  81. ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்;
    இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
    பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்!
    தருவோம் நின் மனத்தது தந்தனமால்; 70

  82. ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச்
    சொல்லும்படி என்று, அவர் சொல்லுதலும்,
    வெல்லும்படி நும்மை விளம்பும் எனக்
    கொல்லும்படியால் அரி கூறுதலும். 71

  83. இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின்
    தொடையில் படுகிற்றும் எனத் துணியா,
    அடையச் செயகிற்றி; அது ஆணை எனா,
    நடையில் படு நீதியா நல்குதலும், 72

  84. விட்டான், உலகு யாவையும், மேலொடு கீழ்,
    எட்டா ஒருவன் தன் இடத் தொடையை;
    ஒட்டாதவர் ஒன்றினர், ஊழ்வலியால்
    பட்டார்; இது பட்டது பண்டு ஒருநாள். 73

  85. தனி நாயகன், வன் கதை தன் கை கொளா,
    நனி சாட, விழுந்தனர், நாள் உலவா;
    பனியா மது மேதை படப் படர் மே-
    தினி ஆனது, பூவுலகு எங்கணுமே. 74

  86. விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால்
    மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்;
    கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல்
    அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால். 75

  87. இராமன் இலக்குவன் வலிமை கூறல்

  88. என்றான், அவ் இராவணனுக்கு இளையான்;
    நன்று ஆகுக! என்று, ஒரு நாயகனும்,
    மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா-
    நின்றான், இது கூறி நிகழ்த்தினனால்: 76

  89. எண்ணாயிர கோடி இராவணரும்
    விண் நாடரும், வேறு உலகத்து எவரும்
    நண்ணா ஒரு மூவரும், நண்ணிடினும்,
    கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்: 77

  90. வான் என்பது என்? வையகம் என்பது என்? மால்-
    தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர்,
    யான் என்பது என்? ஈசன் என் இமையோர்
    கோன் என்பது என்?-எம்பி கொதித்திடுமேல்! 78

  91. தெய்வப் படையும், சினமும், திறலும்
    மய் அற்று ஒழி மா தவம், மற்றும் எலாம்,
    எய்தற்கு உளவோ-இவன் இச் சிலையில்
    கய் வைப்பு அளவே? இறல் காணுதியால். 79

  92. என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
    அன்றே முடிவான்; இவன், அன்னவள் சொல்
    குன்றேன் என ஏகிய கொள்கையினால்
    நின்றான் உளன் ஆகி;-நெடுந் தகையாய்! 80

  93. உடன் சென்று போரைக் காணுமாறு வீடணனை இராமன் ஏவல்

  94. ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம்
    மாகாயன் நெடுந் தலை வாளியொடும்
    ஆகாயம் அளந்து விழுந்தனைக்
    காகாதிகள் நுங்குதல் காணுதியால். 81

  95. நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே?
    தீரக் கொடியாரொடு தேவர் பொரும்
    போரைக் கொடு வந்து புகுந்தது நாம்
    ஆரைக் கொடு வந்தது? அயர்த்தனையோ? 82

  96. சிவன்; அல்லன் எனில், திருவின் பெருமான்;
    அவன் அல்லன் எனில், புவி தந்தருளும்
    தவன்; அல்லன் எனில், தனியே வலியோன்
    இவன்; அல்லன் எனில், பிறர் யார் உளரோ? 83

  97. ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
    வன் தானையர் வந்து வளைந்த எலாம்
    கொன்றான் இவன் அல்லது, கொண்டு உடனே
    நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ? 84

  98. கொல்வானும் இவன்; கொடியோரை எலாம்
    வெல்வானும் இவன்; அடல் விண்டு என
    ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ
    செல்வாய் என ஏவுதல் செய்தனனால். 85

  99. இலக்குவன் வீடணன் தொடரப் போர்க்களம் புகுதல்

  100. அக் காலை இலக்குவன் ஆரியனை
    முக் காலும் வலம் கொடு, மூதுணர்வின்
    மிக்கான், அடல் வீடணன் மெய் தொடரப்
    புக்கான், அவன் வந்து புகுந்த களம். 86

  101. சேனைகள் நெருங்கிப் பொருதல்

  102. சேனைக் கடல் சென்றது, தென் கடல்மேல்
    ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா;
    ஆனைக் கடல், தேர், பரி, ஆள், மிடையும்
    தானைக் கடலோடு தலைப்படலும். 87

  103. பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு,
    அசும்பு உற உருகிய, உலகம் ஆர்த்து எழ,
    குசும்பையின் நறு மலர்ச் சுண்ணக் குப்பையின்
    விசும்பையும் கடந்தது, விரிந்த தூளியே. 88

  104. தாம் இடித்து எழும் பணை முழக்கும், சங்கு இனம்
    ஆம் இடிக் குமுறலும், ஆர்ப்பின் ஓதையும்,
    ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும், அஞ்சி, தம்
    வாய் மடித்து ஒடுங்கின-மகர வேலையே. 89

  105. உலைதொறும் குருதி நீர் அருவி ஒத்து உக,
    இலை துறு மரம் எனக் கொடிகள் இற்று உக,
    மலைதொறும் பாய்ந்தென, மான யானையின்
    தலைதொறும் பாய்ந்தன, குரங்கு தாவியே. 90

  106. கிட்டின கிளை நெடுங் கோட்ட, கீழ் உகு
    மட்டின அருவியின் மதத்த, வானரம்
    விட்டன நெடு வரை, வேழம் வேழத்தை
    முட்டின ஒத்தன, முகத்தின் வீழ்வன. 91

  107. இடித்தன; உறுக்கின; இறுக்கி ஏய்ந்தன;
    தடித்தன; எயிற்றினால் தலைகள் சந்து அறக்
    கடித்தன;-கவிக் குலம், கால்கள் மேற்படத்
    துடித்தன குருதியில், துரக ராசியே. 92

  108. அடைந்தன கவிக் குலம் எற்ற, அற்றன,
    குடைந்து எறி கால் பொர, பூட்கைக் குப்பைகள்;
    இடைந்தன முகிற் குலம் இரிந்து சாய்ந்தென
    உடைந்தன; குல மருப்பு உகுத்த, முத்தமே. 93

  109. தோல் படத் துதைந்து எழு வயிரத் தூண் நிகர்
    கால் பட, கை பட, கால பாசம் போல்
    வால் பட, புரண்டனர் நிருதர்; மற்று அவர்
    வேல் படப் புரண்டனர், கவியின் வீரரே. 94

  110. மரவமும், சிலையொடு மலையும், வாள் எயிற்று
    அரவமும், கரிகளும், பரியும், அல்லவும்,
    விரவின கவிக் குலம் வீச, விம்மலால்,
    உர வரும் கான் எனப் பொலிந்தது, உம்பரே. 95

  111. தட வரை, கவிக் குலத் தலைவர், தாங்கின,
    அடல் வலி நிருதர்தம் அனிக ராசிமேல்
    விடவிட, விசும்பிடை மிடைந்து விழ்வன
    படர் கடல் இன மழை படிவ போன்றவே. 96

  112. இழுக்கினர் அடிகளின், இங்கும் அங்குமா,
    மழுக்களும், அயில்களும், வாளும், தோள்களும்
    முழுக்கினர், உழக்கினர் மூரி யாக்கையை
    ஒழுக்கினர் நிருதரை, உதிர ஆற்றினே. 97

  113. மிடலுடைக் கவிக் குலம், குருதி வெள்ள நீர்
    இடை இடை நீந்தின, இயைந்த யானையின்
    திடரிடைச் சென்று, அவை ஒழுக்கச் சேர்ந்தன,
    கடலிடைப் புக்கன, கரையும் காண்கில. 98

  114. கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக் கண்ண, கண்
    சேல் பிடித்து எழு திரை ஆற்றில், திண் நெடுங்
    கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்போல்,
    வால் பிடித்து ஒழுகின-கவியின் மாலையே. 99

  115. பாய்ந்தது நிருதர் தம் பரவை; பல் முறை
    காய்ந்தது, கடும் படை கலக்கி; கைதொறும்
    தேய்ந்தது, சிதைந்தது, சிந்திச் சேண் உறச்
    சாய்ந்தது-தகைப் பெருங் கவியின் தானையே. 100

  116. இலக்குவன் வானரரைத் தேற்றிப் போரிடல்

  117. அத் துணை, இலக்குவன், அஞ்சல் அஞ்சல்! என்று,
    எத் துணை மொழிகளும் இயம்பி, ஏற்றினன்,
    கைத்துணை வில்லினை, காலன் வாழ்வினை,
    மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான். 101

  118. நூல் மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள்
    மேல் மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும்,
    கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின், கண் அகல்
    நான் மறை ஆர்ப்பென நடந்தது, அவ் ஒலி. 102

  119. துரந்தன சுடு சரம்; துரந்த, தோன்றல
    கரந்தன, நிருதர் தம் கரை இல் யாக்கையின்;
    நிரந்தன நெடும் பிணம், விசும்பின் நெஞ்சு உற;
    பரந்தன குருதி, அப் பள்ள வெள்ளத்தின். 103

  120. யானையின் கரம் துரந்த, இரத வீரர்தம்
    வான் உயர் முடித் தலை தடிந்து வாசியின்
    கால் நிரை அறுத்து, வெங் கறைக்கண் மொய்ம்பரை
    ஊனுடை உடல் பிளந்து, ஓடும்-அம்புகள்; 104

  121. வில் இடை அறுத்து, வேல் துணித்து, வீரர்தம்
    எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து, எறி
    கல் இடை அறுத்து, மாக் கடிந்து, தேர் அழீஇ,
    கொல் இயல் யானையைக் கொல்லும், கூற்றினே. 105

  122. இலக்குவன் அம்பினால் அழிந்துபட்ட படுகளத்தின் நிலை

  123. வெற்றி வெங் கரிகளின் வளைந்த வெண் மருப்பு,
    அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின,
    முற்று அரு முப் பகல் திங்கள் வெண் முளை
    உற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன. 106

  124. கண்டகர் நெடுந் தலை, கனலும் கண்ணன,-
    துண்ட வெண் பிறைத் துணை கவ்வி, தூக்கிய
    குண்டல மீன் குலம் தழுவி, கோள் மதி
    மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே. 107

  125. கூர் மருப்பு இணையன, குறைந்த கையன,
    கார் மதக் கன வரை கவிழ்ந்து வீழ்வன-
    போர்முகக் குருதியின் புணரி புக்கன,
    பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன. 108

  126. புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற,
    கண் அகன் தேர்க் குலம், மறிந்த காட்சிய-
    எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட
    மண் உற, விண்ணின் வீழ் மானம் போன்றன. 109

  127. அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன-
    விடற்கு அரும் வினை அறச் சிந்தி, மெய் உயிர்
    கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் என,
    உடற் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன. 110

  128. ஆடுவ கவந்தம் ஒன்று, ஆறு எண்ணாயிரம்
    வீடிய பொழுது எனும் பனுவல் மெய்யதேல்,
    கோடியின் மேல் உள, குனித்த; கொற்றவன்
    பாடு இனி ஒருவரால் பகரற்பாலதோ? 111

  129. ஆனையின் குருதியும், அரக்கர் சோரியும்,
    ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும்,
    கானினும் மலையினும் பரந்த கால் புனல்
    வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே. 112

  130. தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
    ஆக்கைய, புரசையோடு அணைந்த தாளன,
    மேக்கு உயர் அங்குசக் கைய, வெங் கரி,
    நூக்குவ, கணிப்பு இல-அரக்கர் நோன் பிணம். 113

  131. கோளுடைக் கணை பட, புரவி கூத்தன,
    தோளுடை நெடுந் தலை துமிந்தனும், தீர்கில
    ஆளுடைக் குறைத்தலை அதிர ஆடுவ-
    வாளுடைத் தடக் கைய, வாசி மேலன. 114

  132. வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள்
    கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம்,
    கய் வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா
    எய்வன எனைப் பல, இரத மேலன. 115

  133. தாதையை, தம்முனை, தம்பியை, தனிக்
    காதலை, பேரனை, மருகனை, களத்து
    ஊதையின் ஒரு கணை உருவ, மாண்டனர்-
    சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார். 116

  134. தூண்டு அருங் கணை படத் துமிந்து, துள்ளிய
    தீண்ட அரு நெடுந் தலை தழுவிச் சேர்ந்தன,
    பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன
    ஆண்டலை நிகர்த்தன, எருவை ஆடுவ. 117

  135. ஆயிர ஆயிர கோடியாய் வரும்
    தீ உமிழ் நெடுங் கணை மனத்தின் செல்வன,
    பாய்வன, புகுவன; நிருதர் பல் உயிர்
    ஓய்வன, நமன் தமர் கால்கள் ஓயவே. 118

  136. விளக்கு வான் கணைகளால் விளிந்து, மேருவைத்
    துளக்குவார் உடற் பொறை துணிந்து, துள்ளுவார்;
    இளக்குவார், அமரர் தம் சிரத்தை; ஏன்? முதுகு
    உளுக்குவாள் நிலமகள், பிணத்தின் ஓங்கலால். 119

  137. தாருகன் இலக்குவனுடன் பொருது இறத்தல்

  138. தாருகன் என்று உளன் ஒருவன்-தான் நெடு
    மேருவின் பெருமையான், எரியின் வெம்மையான்,
    போர் உவந்து உழக்குவான், புகுந்து தாங்கினான்-
    தேரினன், சிலையினன், உமிழும் தீயினன். 120

  139. துரந்தனன் நெடுஞ் சரம், நெருப்பின் தோற்றத்த;
    பரந்தன, விசும்பிடை ஒடுங்க; பண்டுடை
    வரம்தனின் வளர்வன அவற்றை, வள்ளலும்,
    கரந்தனன் கணைகளால், முனிவு காந்துவான். 121

  140. அண்ணல் தன் வடிக் கணை துணிப்ப, அற்று அவன்
    கண் அகல் நெடுந் தலை, விசையின் கார் என,
    விண்ணிடை ஆர்த்தது, விரைவில் மெய் உயிர்
    உண்ணிய வந்த வெங் கூற்றும் உட்கவே. 122

  141. இலக்குவன் காலன் முதலிய ஐவரைக் கொல்லுதல்

  142. காலனும், குலிசனும், காலசங்கனும்,
    மாலியும், மருத்தனும் மருவும் ஐவரும்
    சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார்;
    பாலமும், பாசமும், அயிலும் பற்றுவார். 123

  143. அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
    துன்ன அரும் படைக்கலம் துணித்து, தூவினன்,
    நல் நெடுந் தலைகளைத் துணித்து; நால் வகைப்
    பல் நெடுந் தானையைப் பாற நூறினான். 124

  144. இலக்குவன்-அதிகாயன் படை போர்

  145. ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர்
    ஈண்டின மதகிரி ஏழ்-எண்ணாயிரம்
    தூண்டினர், மருங்கு உறச் சுற்றினார், தொகை
    வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார். 125

  146. போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார்,
    தாக்கினார் திசைதொறும், தடக் கை மால் வரை;
    நூக்கினார் படைகளால் நுறுக்கினார்; குழம்பு
    ஆக்கினார், கவிகள் தம் குழுவை; ஆர்ப்பினார். 126

  147. எறிந்தன, எய்தன, எய்தி, ஒன்றொடு ஒன்று
    அறைந்தன, அசனியின் விசையின் ஆசைகள்
    நிறைந்தன, மழை என நெருக்கி நிற்றலால்,
    மறைந்தன, உலகொடு திசையும் வானமும். 127

  148. அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து, அவர்
    துப்புடைத் தடக் கைகள் துணித்து, சுற்றிய
    முப் புடை மதமலைக் குலத்தை முட்டினான்-
    எப் புடை மருங்கினும் எரியும் வாளியான். 128

  149. குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற,
    வன் தலை துமிதர, மஞ்சு என மறிவன
    ஒன்று அல; ஒருபதும் ஒன்பதும்,-ஒரு கணை
    சென்று அரிதர,-மழை சிந்துவ மதமலை. 129

  150. ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட,
    இரு தொடை புரசையொடு இறுபவர், எறி படை
    விருதுடை நிருதர்கள், மலை என விழுவர்கள்;
    பொருது உடைவன, மத மழையன புகர் மலை. 130

  151. பருமமும், முதுகு இடு படிகையும், வலி படர்
    மருமமும், அழிபட, நுழைவன வடி கணை,
    உருமினும் வலியன, உருள்வன திசை திசை,
    கரு மலை நிகர்வன;-கதமலை கனல்வன. 131

  152. இறுவன கொடியவை, எரிவன இடை இடை
    துறுவன சுடு கணை, துணிவன மதகரி;
    அறுவன, அவை அவை கடவினர் தடி தலை;
    வெறுமைகள் கெடுவன, விழி குழி கழுதுகள். 132

  153. மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
    படலொடும், உரும் எறி பரு வரை நிலையன,
    உடலொடும் உருள் கரி உதிரமது, உரு கெழு
    கடலொடு பொருதது, கரியொடு கரி என. 133

  154. மேலவர் படுதலின், விடும் முறை இல, மிடல்
    ஆலமும் அசனியும் அனையன, அடு கரி
    மால் உறு களியன, மறுகின, மதம் மழை
    போல்வன, தம தம எதிர் எதிர் பொருவன. 134

  155. கால் சில துணிவன; கரம் அறுவன; கதழ்
    வால் சில துணிவன; வயிறுகள் வெளி பட,
    நால் சில குடர் அன; நகழ்வன சில-வரு
    தோல் சில, கணை பல சொரிவன மழை என. 135

  156. முட்டின முட்டு அற, முரண் உறு திசை நிலை
    எட்டினும் எட்ட அரு நிலையன எவை? அவன்
    விட்டன விட்டன விடு கணை படுதொறும்
    பட்டன பட்டன, படர் பணை குவிவன. 136

  157. அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம்
    இறுதிய மத கரி இறுதலும், எரி உமிழ்
    தறுகணர், தகை அறு நிலையினர், சலம் உறு
    கறுவினர், அவன் எதிர் கடவினர், கடல் என. 137

  158. எல்லை இல் மத கரி, இரவினது இனம் நிகர்
    செல்வன, முடிவு இல, தெறு தொழில் மறவனை,
    வில்லியை, இனிது உற விடு கணை மழையினர்,
    கொல்லுதி என, எதிர் கடவினர்-கொடியவர். 138

  159. வந்தன மத கரி வளைதலின், மழை பொதி
    செந் தனி ஒரு சுடர் என மறை திறலவன்,
    இந்திரதனு என, எழு சிலை குனிவுழி,
    தந்தியின் நெடு மழை சிதறின, தரையின. 139

  160. மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன, மலையின்
    மெய் பெற்றன, கடல் ஒப்பன, வெயில் உக்கன விழியின்,-
    மொய் பெற்று உயர் முதுகு இற்றன, முகம் உக்கன, முரண் வெங்
    கை அற்றன; மதம் முற்றிய கணிதத்து இயல்,-கத மா. 140

  161. உள் நின்று அலை கடல் நீர் உக, இறுதிக் கடை உறு கால்
    எண்ணிந்தலை நிமிர்கின்றன, இகல் வெங் கணை, இரணம்
    பண்ணின் படர் தலையில் பட, மடிகின்றன பல ஆம்,
    மண்ணின் தலை உருள்கின்றன-மழை ஒத்தன மதமா. 141

  162. பிறை பற்றிய எனும் நெற்றிய, பிழை அற்றன பிறழ,
    பறை அற்றம் இல் விசை பெற்றன, பரியக் கிரி, அமரர்க்கு,
    இறை, அற்றைய முனிவில் படை எறியப் புடை எழு பொன்
    சிறை அற்றன என, இற்றன-சினம் முற்றிய மதமா. 142

  163. கதிர் ஒப்பன கணை பட்டுள, கதம் அற்றில, கதழ் கார்
    அதிரத் தனி அதிர்கைக் கரி அளவு அற்றன உளவா,
    எதிர்பட்டு அனல் பொழிய, கிரி இடறி, திசை எழு கார்
    உதிரத்தொடும் ஒழுகி, கடல் நடு உற்றவும் உளவால். 143

  164. கண்ணின் தலை அயில் வெங் கணை பட நின்றன, காணா,
    எண்ணின் தலை நிமிர் வெங் கதம் முதிர்கின்றன, இனமா
    மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன, மலைபோல்
    உள் நின்று அலை நிருதக் கடல் உலறிட்டன உளவால். 144

  165. ஓர் ஆயிரம் அயில் வெங் கணை, ஒரு கால் விடு தொடையின்,
    கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன, கதுவுற்று,
    ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன; இனி மேல்
    ஆராய்வது என்? அவன் வில் தொழில் அமரேசரும் அறியார்! 145

  166. தேரும், தெறு கரியும், பொரு சின மள்ளரும், வய வெம்
    போரின் தலை உகள்கின்றன புரவிக் குலம் எவையும்,
    பேரும் திசை பெறுகின்றில-பணையின் பிணை மத வெங்
    காரின் தரு குருதிப் பொரு கடல் நின்றன கடவா. 146

  167. இராவணன் அனுப்பிய யானைப் படையை இலக்குவன் அழித்தல்

  168. நூறாயிரம் மத வெங் கரி, ஒரு நாழிகை நுவல,
    கூறு ஆயின; பயமுற்று ஒரு குலைவு ஆயின; உலகம்
    தேறாதன, மலை நின்றன, தெரியாதன, சின மா
    வேறு ஆயின, அவை யாவையும் உடனே வர விட்டான். 147

  169. ஒரு கோடிய மத மால் கரி, உள வந்தன உடன் முன்
    பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய, பொழி மத யாறு
    அருகு ஓடுவ, வர உந்தினர்-அசனிப் படி கணை கால்
    இரு கோடுடை மத வெஞ் சிலை இள வாள் அரி எதிரே. 148

  170. உலகத்து உள மலை எத்தனை, அவை அத்தனை உடனே
    கொல நிற்பன, பொருகிற்பன, புடை சுற்றின, குழுவாய்
    அலகு அற்றன, சினம் முற்றிய, அனல் ஒப்பன, அவையும்
    தலை அற்றன, கரம் அற்றன, தனி வில் தொழில் அதனால். 149

  171. நாலாயின, நவ யோசனை நனி வன் திசை எவையும்,
    மால் ஆயின மத வெங் கரி திரிகின்றன வரலும்,
    தோல் ஆயின, உலகு எங்கணும் என அஞ்சினர்; துகளே-
    போல் ஆயின, வய வானமும்; ஆறானது, புவியே. 150

  172. கடை கண்டில, தலை கண்டில, கழுதின் திரள், பிணமா
    இடை கண்டன, மலை கொண்டென எழுகின்றன; திரையால்
    புடை கொண்டு எறி குருதிக் கடல் புணர்கின்றன, பொறி வெம்
    படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால். 151

  173. ஒற்றைச் சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக, ஒளிர் வாய்
    வெற்றிக் கணை, உரும் ஒப்பன, வெயில் ஒப்பன, அயில்போல்
    வற்றக் கடல் சுடுகிற்பன, மழை ஒப்பன பொழியும்
    கொற்றக் கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான். 152

  174. மலை அஞ்சின; மழை அஞ்சின; வனம் அஞ்சின; பிறவும்
    நிலை அஞ்சின, திசை வெங் கரி; நிமிர்கின்றன கடலில்
    அலை அஞ்சின; பிறிது என், சில? தனி ஐங் கர கரியும்,
    கொலை அஞ்சுதல் புரிகின்றது-கரியின் படி கொளலால். 153

  175. கால் ஏறின சிலை நாண் ஒலி, கடல் ஏறுகள் பட, வான்-
    மேல் ஏறின, மிசையாளர்கள் தலை மெய்தொறும் உருவ,
    கோல் ஏறின-உரும் ஏறுகள் குடியேறின எனலாய்,
    மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய. 154

  176. அனுமன் யானைப் படையை அழித்தல்

  177. இவ் வேலையின், அனுமான்,-முதல் எழு வேலையும் அனையார்,
    வெவ் வேலவர், செல ஏவிய கொலை யானையின் மிகையைச்
    செவ்வே உற நினையா, ஒரு செயல் செய்குவென் என்பான்,
    தவ்வேலென வந்தான்,-அவன் தனி வேல் எனத் தகையான். 155

  178. ஆர்த்து அங்கு அனல் விழியா, முதிர் மத யானையை அனையான்,
    தீர்த்தன் கழல் பரவா, முதல் அரிபோல் வரு திறலான்,
    வார்த் தங்கிய கழலான்,-ஒரு மரன், நின்றது, நமனார்
    போர்த் தண்டினும் வலிது ஆயது, கொண்டான் -புகழ் கொண்டான். 156

  179. கருங் கார் புரை நெடுங் கையன களி யானைகள் அவை சென்று
    ஒருங்கு ஆயின, உயிர் மாய்ந்தன; பிறிது என், பல உரையால்?-
    வரும் காலனும், பெரும் பூதமும், மழை மேகமும், உடனாப்
    பொரும் காலையில் மலைமேல் விழும் உரும் ஏறு எனப் புடைத்தான். 157

  180. மிதியால் பல, விசையால் பல, மிடலால் பல, இடறும்
    கதியால் பல, தெழியால் பல, காலால் பல, வாலின்
    நுதியால் பல, நுதலால் பல, நொடியால் பல, பயிலும்
    குதியால் பல, குமையால் பல, கொன்றான்-அறம் நின்றான். 158

  181. பறித்தான் சில, பகிர்ந்தான் சில, வகிர்ந்தான் சில, பணை போன்று
    இறுத்தான் சில, இடந்தான் சில, பிளந்தான் சில, எயிற்றால்
    கறித்தான் சில, கவர்ந்தான் சில, கரத்தால் சில பிடித்தான்,
    முறித்தான் சில, திறத்து ஆனையின் நெடுங் கோடுகள்-முனிந்தான். 159

  182. வாரிக் குரை கடலில் புக விலகும்; நெடு மரத்தால்
    சாரித்து அலைத்து உருட்டும்; நெடுந் தலத்தில் படுத்து அரைக்கும்;
    பாரில் பிடித்து அடிக்கும்; குடர் பறிக்கும்; படர் விசும்பின்
    ஊரில் செல, எறியும்; மிதித்து உழக்கும்; முகத்து உதைக்கும்; 160

  183. வாலால் வர வளைக்கும், நெடு மலைப் பாம்பு என வளையா,
    மேல் ஆளொடு பிசையும்; முழு மலைமேல் செல, விலக்கும்;
    ஆலாலம் உண்டவனே என, அகல் வாயின் இட்டு அதுக்கும்;
    தோல் ஆயிரம் இமைப்போதினின் அரிஏறு எனத் தொலைக்கும்; 161

  184. சய்யத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா,
    நொய்தின் கடிது எதிர் உற்றன, நூறாயிரம், மாறா
    மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய,
    தொய்யல் படர் அழுவக் கொழுஞ் சேறாய் உகத் துகைப்பான். 162

  185. வேறாயின மத வெங் கரி ஒரு கோடியின், விறலோன்,
    நூறாயிரம் படுத்தான்; இது நுவல்காலையின், இளையோன்;
    கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான்;
    தேறாதது ஓர் பயத்தால் நெடுந் திசை காவலர் இரிந்தார். 163

  186. இரிந்தார், திசை திசை எங்கணும் யானைப் பிணம் எற்ற,
    நெரிந்தார்களும்; நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால்
    எரிந்தார்; நெடுந் தடந் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல,
    திரிந்தான் ஒரு தனியே, நெடுந் தேவாந்தகன், சினத்தான். 164

  187. உதிரக் கடல், பிண மால் வரை, ஒன்று அல்லன பலவாய்
    எதிர, கடு நெடும் போர்க் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான்,
    கதிர் ஒப்பன சில வெங் கணை அனுமான் உடல் கரந்தான்,
    அதிரக் கடல்-நெடுந் தேரினன்-மழைஏறு என ஆர்த்தான். 165

  188. தேவராந்தகனை அழித்தல்

  189. அப்போதினின், அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான்,
    இப்போது இவன் உயிர் போம் என, உரும் ஏறு என எறிந்தான்;
    வெப்போ என வெயில் கால்வன அயில் வெங் கணை , விசையால்
    துப்போ? என, துணிஆம் வகை, தேவாந்தகன் துரந்தான். 166

  190. மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன், வய வானரக் குலத்தோர்க்கு
    ஏறு, ஆங்கு அதும் எறியாதமுன், முறியாய் உக எய்தான்;
    கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான்,
    பாறு ஆங்கு எனப் புகப் பாய்ந்து, அவன் நெடு வில்லினைப் பறித்தான். 167

  191. பறித்தான் நெடும் படை, வானவர் பலர் ஆர்த்திட, பலவா
    முறித்தான்; அவன் வலி கண்டு, உயர் தேவாந்தகன் முனிந்தான்,
    மறித்து ஆங்கு ஓர் சுடர்த் தோமரம் வாங்கா, மிசை ஓங்கா;
    செறித்தான், அவன் இடத் தோள் மிசை; இமையோர்களும் திகைத்தார். 168

  192. சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும், கனல் ஆம் எனச் சுளித்தான்,
    அடல் தோமரம் பறித்தான், திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான்,
    புடைத்தான்; அவன் தடந்தேரொடு நெடுஞ் சாரதி புரண்டான்;-
    மடல் தோகையர் வலி வென்றவன்-வானோர் முகம் மலர்ந்தார். 169

  193. சூலப் படை தொடுவான் தனை இமையாத முன் தொடர்ந்தான்;
    ஆலத்தினும் வலியானும் வந்து, எதிரே புகுந்து அடர்த்தான்;
    காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின்
    மூலத்திடைப் புடைத்தான், உயிர் முடித்தான், சிரம் மடித்தான். 170

  194. அதிகாயன் - அனுமன் வீர உரை

  195. கண்டான் எதிர் அதிகாயனும், கனல் ஆம் எனக் கனன்றான்,
    புண்தான் எனப் புனலோடு இழி உதிரம் விழி பொழிவான்,
    உண்டேன் இவன் உயிர் இப்பொழுது; ஒழியேன் என உரையா,
    திண் தேரினைக் கடிது ஏவு என, சென்றான்; அவன் நின்றான். 171

  196. அன்னான் வரும் அளவின் தலை, நிலைநின்றன அனிகம்;
    பின் ஆனதும் முன் ஆனது; பிறிந்தார்களும் செறிந்தார்;
    பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான்,
    சொன்னான் இவை, அதிகாயனும், வடமேருவைத் துணிப்பன். 172

  197. தேய்த்தாய், ஒரு தனி எம்பியைத் தலத்தோடு ஒரு திறத்தால்;
    போய்த் தாவினை நெடு மா கடல், பிழைத்தாய்; கடல் புகுந்தாய்,
    வாய்த்தானையும் மடித்தாய்; அது கண்டேன், எதிர் வந்தேன்.
    ஆய்த்து ஆயது முடிவு, இன்று உனக்கு; அணித்தாக வந்து, அடுத்தாய். 173

  198. இன்று அல்லது, நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன்;
    ஒன்று அல்லது செய்தாய் எமை; இளையோனையும் உனையும்
    வென்று அல்லது மீளாத என் மிடல் வெங் கணை மழையால்
    கொன்று அல்லது செல்லேன்; இது கொள் என்றனன், கொடியோன். 174

  199. அனுமன் திரிசிரனை அழை எனக் கூறல்

  200. பிழையாது; இது பிழையாது என, பெருங் கைத்தலம் பிசையா,
    மழை ஆம் எனச் சிரித்தான்-வட மலை ஆம் எனும் நிலையான்-
    முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய்;
    அழையாய் திரிசிரத்தோனையும், நிலத்தோடும் இட்டு அரைப்பான். 175

  201. திரிசிரனை அழித்தல்

  202. ஆம் ஆம்! என, தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து, அடர்ந்தான்;
    கோமான் தனிப் பெருந் தூதனும், எதிரே செருக் கொடுத்தான்,
    காமாண்டவர், கல்லாதவர், வல்லீர்! எனக் கழறா,
    நா மாண்டு அற, அயல் நின்று உற நடுவே புக நடந்தான். 176

  203. தேர்மேல் செலக் குதித்தான், திரிசிரத்தானை ஓர் திறத்தால்,
    கார் மேல் துயில் மலை போலியைக் கரத்தால் பிடித்து எடுத்தான்,
    பார்மேல் படுத்து அரைத்தான், அவன் பழி மேற்படப் படுத்தான்.
    போர்மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என, போனான். 177

  204. அதிகாயன், இலக்குவனுடன் பொர வருதல்

  205. இமையிடையாகச் சென்றான்; இகல் அதிகாயன் நின்றான்,
    அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான், அருவியோடு அழல்கால் கண்ணான்,
    உமையொருபாகனேயும், இவன் முனிந்து உருத்த போது,
    கமையிலன் ஆற்றல் என்னா, கதத்தொடும் குலைக்கும் கையான், 178

  206. பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான், புறத்து நின்று,
    பாணித்தல் வீரம் அன்றால்; பரு வலி படைத்தோர்க்கு எல்லாம்
    ஆணிப்பொன் ஆனான் தன்னைப் பின்னும் கண்டு அறிவென் என்னா,
    தூணிப் பொன் புறத்தான், திண் தேர் இளவல்மேல் தூண்டச் சொன்னான். 179

  207. தேர் ஒலி கடலைச் சீற, சிலை ஒலி மழையைச் சீற,
    போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போக,
    தார் ஒலி கழற் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான்;
    வீரனும் எதிரே நின்றான், விண்ணவர் விசையம் வேண்ட. 180

  208. அங்கதன் தோள் மேலேறி இலக்குவன் போரிடல்

  209. வல்லையின் அணுக வந்து வணங்கினன், வாலி மைந்தன்;
    சில்லி அம் தேரின் மேலான், அவன் அமர் செவ்விது அன்றால்,
    வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்கப்
    புல்லியன் எனினும், என் தோள் ஏறுதி, புனித! என்றான். 181

  210. ஆம் என, அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள் மேல்
    தாமரைச் சரணம் வைத்தான்; கலுழனின் தாங்கி நின்ற
    கோமகன் ஆற்றல் நோக்கி, குளிர்கின்ற மனத்தர் ஆகி,
    பூ மழை பொழிந்து வாழ்த்திப் புகழ்ந்தனர், புலவர் எல்லாம். 182

  211. ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண் தேர்
    போயின திசைகள் எங்கும், கறங்கு எனச் சாரி போமால்;
    மீ எழின் உயரும்; தாழின் தாழும்; விண் செல்லின் செல்லும்;-
    தீ எழ உவரி நீரைக் கலக்கினான் சிறுவன் அம்மா! 183

  212. அத் தொழில் நோக்கி, ஆங்கு வானரத் தலைவர் ஆர்த்தார்;
    இத் தொழில் கலுழற்கேயும் அரிது என, இமையோர் எல்லாம்
    கைத்தலம் குலைத்தார் ஆக, களிற்றினும் புரவிமேலும்
    தைத்தன, இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி. 184

  213. முழங்கின முரசம்; வேழம் முழங்கின; மூரித் திண் தேர்
    முழங்கின; முகரப் பாய்மா முழங்கின; முழு வெண் சங்கம்
    முழங்கின; தனுவின் ஓதை முழங்கின; கழலும் தாரும்
    முழங்கின; தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின, முகிலின் மும்மை. 185

  214. கரி பட, காலாள் வெள்ளம் களம் பட, கலினக் காலப்
    பரி பட, கண்ட கூற்றும் பயம் பட, பைம் பொன் திண் தேர்
    எரிபட, பொருத பூமி இடம் பட, எதிர்ந்த எல்லாம்
    முரிபட, பட்ட, வீரன் முரண் கணை மூரி மாரி. 186

  215. இலக்குவன் - அதிகாயன் உரையாடல்

  216. மன்னவன் தம்பி, மற்று அவ் இராவணன் மகனை நோக்கி,
    என் உனக்கு இச்சை? நின்ற எறி படைச் சேனை எல்லாம்
    சின்னபின்னங்கள் பட்டால், பொருதியோ? திரிந்து நீயே
    நல் நெடுஞ் செருச் செய்வாயோ? சொல்லுதி, நயந்தது என்றான். 187

  217. யாவரும் பொருவர் அல்லர், எதிர்ந்துள யானும் நீயும்,
    தேவரும் பிறரும் காண, செருவது செய்வ எல்லாம்;
    காவல் வந்து உன்னைக் காப்பார் காக்கவும் அமையும்;
    கூவியது அதனுக்கு அன்றோ? என்றனன்-கூற்றின் வெய்யோன். 188

  218. உமையனே காக்க; மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க;
    இமையவர் எல்லாம் காக்க; உலகம் ஓர் ஏழும் காக்க;
    சமையும் உன் வாழ்க்கை, இன்றோடு என்று, தன் சங்கம் ஊதி,
    அமை உருக் கொண்ட கூற்றை நாண் எறிந்து, உருமின் ஆர்த்தான். 189

  219. இலக்குவன் அதிகாயனுடன் பொருதல்

  220. அன்னது கேட்ட மைந்தன், அரும்பு இயல் முறுவல் தோன்ற,
    சொன்னவர் வாரார்; யானே தோற்கினும், தோற்கத் தக்கேன்;
    என்னை நீ பொருது வெல்லின், அவரையும் வென்றி என்னா,
    மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெஞ் சரம் கோத்து விட்டான். 190

  221. விட்ட வெம் பகழிதன்னை, வெற்பினை வெதுப்பும் தோளான்,
    சுட்டது ஓர் பகழிதன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி,
    எட்டினோடு எட்டு வாளி, இலக்குவ! விலக்காய் என்னா,
    திட்டியின் விடத்து நாகம் அனையன, சிந்தி, ஆர்த்தான். 191

  222. ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி,
    வேர்த்து, ஒலி வயிர வெங் கோல், மேருவைப் பிளக்கற்பால,
    தூர்த்தனன், இராமன் தம்பி; அவை எலாம் துணித்துச் சிந்தி,
    கூர்த்தன பகழி கோத்தான், குபேரனை ஆடல் கொண்டான். 192

  223. எய்தனன் எய்த எல்லாம் எரி முகப் பகழியாலே,
    கொய்தனன் அகற்றி, ஆர்க்கும் அரக்கனைக் குரிசில் கோபம்
    செய்தனன், துரந்தான் தெய்வச் செயல் அன்ன கணையை; வெங்கோல்
    நொய்து அவன் கவசம் கீறி நுழைவன, பிழைப்பு இலாத. 193

  224. நூறு கோல் கவசம் கீறி நுழைதலும், குழைவு தோன்றத்
    தேறல் ஆம் துணையும், தெய்வச் சிலை நெடுந் தேரின் ஊன்றி,
    ஆறினான்; அதுகாலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம்
    கூறுகூறாக்கி அம்பால், கோடியின் மேலும் கொன்றான். 194

  225. புடை நின்றார் புரண்டவாறும், போகின்ற புங்க வாளி
    கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான்;
    இடை நின்ற மயக்கம் தீர்ந்தான்; ஏந்திய சிலையன் காந்தி,
    தொடை நின்ற பகழி மாரி, மாரியின் மும்மை தூர்த்தான். 195

  226. வான் எலாம் பகழி, வானின் வரம்பு எலாம் பகழி, மண்ணும்
    தான் எலாம் பகழி, குன்றின் தலை எலாம் பகழி, சார்ந்தோர்
    ஊன் எலாம் பகழி, நின்றோர் உயிர் எலாம் பகழி, வேலை
    மீன் எலாம் பகழி, ஆக வித்தினன்-வெகுளி மிக்கோன். 196

  227. மறைந்தன திசைகள் எல்லாம்; வானவர் மனமே போலக்
    குறைந்தன, சுடரின் மும்மைக் கொழுங் கதிர்; குவிந்து, ஒன்று ஒன்றை
    அறைந்தன, பகழி; வையம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே;
    நிறைந்தன, பொறியின் குப்பை; நிமிர்ந்தன, நெருப்பின் கற்றை. 197

  228. முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை?
    மற்று இவன் தன்னை வெல்ல வல்லனோ, வள்ளல் தம்பி?
    கற்றது காலனோடோ , கொலை இவன்? ஒருவன் கற்ற
    வில் தொழில் என்னே! என்னா, தேவரும் வெருவலுற்றார். 198

  229. அங்கதன் நெற்றிமேலும், தோளினும், ஆகத்துள்ளும்,
    புங்கமும் தோன்றாவண்ணம், பொரு சரம் பலவும் போக்கி,
    வெங் கணை இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி, மேகச்
    சங்கமும் ஊதி, விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான். 199

  230. வாலி சேய் மேனிமேலும், மழை பொரு குருதி வாரி,
    கால் உயர் வரையின் செங் கேழ் அருவிபோல் ஒழுகக் கண்டான்;
    கோல் ஒரு பத்து-நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து,
    மேலவன் சிரத்தைச் சிந்தி, வில்லையும் துணித்தான்-வீரன். 200

  231. மாற்று ஒரு தடந் தேர் ஏறி, மாறு ஒரு சிலையும் வாங்கி,
    ஏற்ற வல் அரக்கன் தன்மேல், எரி முகக் கடவுள் என்பான்,
    ஆற்றல் சால் படையை விட்டான், ஆரியன்; அரக்கன் அம்மா,
    வேற்றுள, தாங்க! என்னா, வெய்யவன் படையை விட்டான். 201

  232. பொரு படை இரண்டும் தம்மில் பொருதன; பொருதலோடும்,
    எரி கணை, உருமின் வெய்ய, இலக்குவன் துரந்த, மார்பை
    உருவின, உலப்பு இலாத; உளைகிலன், ஆற்றல் ஓயான்,
    சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன், தெழிக்கும் சொல்லான். 202

  233. பின் நின்றார் முன் நின்றாரைக் காணலாம் பெற்றித்து ஆக,
    மின் நின்ற வயிர வாளி திறந்தன, மேனி முற்றும்;
    அந் நின்ற நிலையின், ஆற்றல் குறைந்திலன், ஆவி நீங்கான்,
    பொன் நின்ற வடிம்பின் வாளி மழை எனப் பொழியும் வில்லான். 203

  234. இலக்குவன் நான்முகன் படையைச் செலுத்தி அதிகாயனைக் கொல்லுதல்

  235. கோல் முகந்து, அள்ளி அள்ளி, கொடுஞ் சிலை நாணில் கோத்து,
    கால்முகம் குழைய வாங்கி, சொரிகின்ற காளை வீரன்-
    பால் முகம் தோன்ற நின்று, காற்றினுக்கு அரசன், பண்டை
    நான்முகன் படையால் அன்றிச் சாகிலன், நம்ப! என்றான். 204

  236. நன்று என உவந்த, வீரன், நான்முகன் படையை வாங்கி
    மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான்
    குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு, அவ் வாளி
    சென்றது, விசும்பினூடு; தேவரும் தெரியக் கண்டார். 205

  237. பூ மழை பொழிந்து, வானோர், போயது, எம் பொருமல் என்றார்;
    தாம் அழைத்து அலறி, எங்கும் இரிந்தனர், அரக்கர் தள்ளி;
    தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது, குரக்குச் சேனை;
    கோமகன் தோளின்நின்றும் குதித்தனன், கொற்ற வில்லான். 206

  238. வீடணன் இந்திரசித்து இறத்தல் உறுதி எனல்

  239. வெந் திறல் சித்தி கண்ட வீடணன், வியந்த நெஞ்சன்,
    அந்தரச் சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான்; ஐயன்
    மந்திரசித்தி அன்ன சிலைத் தொழில் வலி இது ஆயின்,
    இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான். 207

  240. நராந்தகன் அங்கதனுடன் போரிட்டு அழிதல்

  241. ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று, நீ நின்
    சாந்து அகல் மார்பு, திண் தோள், நோக்கி, நின் தனுவை நோக்கி,
    போம் தகைக்கு உரியது அன்றால்; போகலை; போகல்! என்னா,
    நாந்தகம் மின்ன, தேரை நராந்தகன் நடத்தி வந்தான். 208

  242. தேரிடை நின்று, கண்கள் தீ உக, சீற்றம் பொங்க,
    பாரிடைக் கிழியப் பாய்ந்து, பகலிடைப் பரிதி என்பான்,
    ஊரிடை நின்றான் என்ன, கேடகம் ஒரு கை தோன்ற,
    நீருடை முகிலின் மின்போல், வாளொடு நிமிர வந்தான். 209

  243. வீசின மரமும் கல்லும் விலங்கலும், வீற்று வீற்றா,
    ஆசைகள் தோறும் சிந்த, வாளினால் அறுத்து மாற்றி,
    தூசியும், இரண்டு கையும், நெற்றியும், சுருண்டு, நீர்மேல்
    பாசியின் ஒதுங்க, வந்தான்; அங்கதன் அதனைப் பார்த்தான். 210

  244. மரம் ஒன்று விரைவின் வாங்கி, வாய் மடித்து உருத்து, வள்ளல்
    சரம் ஒன்றின் கடிது சென்று, தாக்கினான்; தாக்கினான் தன்
    கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனைத் தன் கை
    அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான். 211

  245. அவ் இடை வெறுங் கை நின்ற அங்கதன், ஆண்மை அன்றால்
    இவ் இடை பெயர்தல் என்னா, இமையிடை ஒதுங்கா முன்னர்,
    வெவ் விடம் என்னப் பொங்கி, அவனிடை எறிந்த வீச்சுத்
    தவ்விட, உருமின் புக்கு, வாளொடும் தழுவிக் கொண்டான். 212

  246. அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார்;
    இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது என்பார்;
    குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக் கை கொண்டான்,
    ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான். 213

  247. போர் மத்தன் நீலனுடன் போரிட்டு மடிதல்

  248. கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட
    நீர் மத்தின் நிமிர்ந்த தோளான், நிறை மத்த மதுவைத் தேக்கி
    ஊர் மத்தம் உண்டாலன்ன மயக்கத்தான், உருமைத் திண்பான்,
    போர்மத்தன் என்பான், வந்தான்-புகர் மத்தப் பூட்கை மேலான். 214

  249. காற்று அன்றேல், கடுமை என் ஆம்? கடல் அன்றேல், முழக்கம் என் ஆம்?
    கூற்று அன்றேல், கொலை மற்று என் ஆம்? உரும் அன்றேல், கொடுமை என் ஆம்?
    சீற்றம் தான் அன்றேல், சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே?
    மாற்று அன்றே மலை; மற்று என்னே?-மத்தன் தன் மத்த யானை. 215

  250. வேகமாக் கவிகள் வீசும் வெற்பினம் விழுவ, மேன்மேல்,
    பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா;
    மாக மா மரங்கள் எல்லாம், கடாத்திடை வண்டு சோப்பி
    ஆகினும் ஆம்; அது அன்றேல், கரும்பு என்றே அறையலாமால். 216

  251. காலிடைப்பட்டும், மானக் கையிடைப்பட்டும், கால
    வாலிடைப் பட்டும், வெய்ய மருப்பிடைப்பட்டும், மாண்டு,
    நாலிடைப்பட்ட சேனை, நாயகன் தம்பி எய்த
    கோலிடைப் பட்டது எல்லாம் பட்டது-குரக்குச் சேனை. 217

  252. தன் படை உற்ற தன்மை நோக்கினான், தெரிக்கிலாமை,
    அன்பு அடை உள்ளத்து அண்ணல் அனலின் தன் புதல்வன், ஆழி
    வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் -
    பின் படை செல்ல, நள்ளார் பெரும் படை இரிந்து பேர. 218

  253. சேறலும் களிற்றின் மேலான், திண் திறல் அரக்கன், செவ்வே,
    ஆறு இரண்டு அம்பினால் அந் நெடு மரம் அறுத்து வீழ்த்தான்;
    வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான்; அதனை விண்ணில்,
    நூறு வெம் பகழி தன்னால், நுறுக்கினான், களிறு நூக்கி. 219

  254. பின், நெடுங் குன்றம் தேடிப் பெயர்குவான் பெயராவண்ணம்
    பொன் நெடுங் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல,
    அந் நெடுங் கோப யானை, அமரரும் வெயர்ப்ப, அங்கி-
    தன் நெடு மகனைப் பற்றிப் பிடித்தது, தடக் கை நீட்டி. 220

  255. ஒடுங்கினன், உரமும், ஆற்றல் ஊற்றமும், உயிரும் என்ன,
    கொடும் படை வயிரக் கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை,
    நெடுங் கையும் தலையும், பிய்யா, நொய்தினின் நிமிர்ந்து போனான்;
    நடுங்கினர், அரக்கர்; விண்ணோர், நன்று, நன்று! என்ன நக்கார். 221

  256. தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில்,
    நிறைத் தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடுங் குன்று என்னக்
    குறைத் தலை வேழம் வீழ, விசும்பின்மேல் கொண்டு நின்றான்,
    பிறைத் தலை வயிர வாளி மழை எனப் பெய்யும் கையான். 222

  257. வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி,
    வீங்கிய விசையின் நீலன் அரக்கன் மேல் செல்ல விட்டான்;
    ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து, ஓர் அம்பால்,
    ஓங்கல்போல் புயத்தினான் தன் உரத்திடை ஒளிக்க, எய்தான். 223

  258. எய்த அது காலமாக, விளிந்திலது யானை என்ன,
    கையுடை மலை ஒன்று ஏறி, காற்று எனக் கடாவி வந்தான்;
    வெய்யவன், அவனைத்தானும் மேற்கொளா, வில்லினோடு
    மொய் பெருங் களத்தின் இட்டான், மும் மதக் களிற்றின் முன்னர். 224

  259. இட்டவன் அவனிநின்றும் எழுவதன் முன்னம், யானை
    கட்டு அமை வயிரக் கோட்டால் களம் பட வீழ்த்தி, காலால்
    எட்டி, வன் தடக் கைதன்னால் எடுத்து, எங்கும் விரைவின் வீச,
    பட்டிலன், தானே தன் போர்க் கரியினைப் படுத்து வீழ்த்தான். 225

  260. தன் கரி தானே கொன்று, தடக் கையால் படுத்து வீழ்த்தும்
    மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி,
    பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக, நீலன் புக்கான்,
    வன் கரம் முறுக்கி, மார்பில் குத்தினன்; மத்தன் மாண்டான். 226

  261. வயமத்தன் - இடபன் போர்

  262. மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற
    வன்மத்தைக் கண்டும், மாண்ட மத மத்தமலையைப் பார்த்தும்,
    சன்மத்தின் தன்மையானும், தருமத்தைத் தள்ளி வாழ்ந்த
    கன்மத்தின் கடைக்கூட்டானும், வயமத்தன் கடிதின் வந்தான். 227

  263. பொய்யினும் பெரிய மெய்யான்; பொருப்பினைப் பழித்த தோளான்;
    வெய்யன் என்று உரைக்கச் சாலத் திண்ணியான்; வில்லின் செல்வன்
    பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ, பிறங்கு பல் பேய்
    ஐ-இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான்; 228

  264. ஆர்க்கின்றான், உலகை எல்லாம் அதிர்க்கின்றான், உருமும் அஞ்சப்
    பார்க்கின்றான், பொன்றினாரைப் பழிக்கின்றான், பகழி மாரி
    தூர்க்கின்றான், குரங்குச் சேனை துரக்கின்றான், துணிபை நோக்கி,
    ஏற்கின்றார் இல்லை என்னா, இடபன் வந்து, அவனோடு ஏற்றான். 229

  265. சென்றவன் தன்னை நோக்கி, சிரித்து, நீ சிறியை; உன்னை
    வென்று அவம்; உம்மை எல்லாம் விளிப்பெனோ? விரிஞ்சன் தானே
    என்றவன் எதிர்ந்த போதும், இராவணன் மகனை இன்று
    கொன்றவன் தன்னைக் கொன்றே குரங்கின்மேல் கொதிப்பென் என்றான். 230

  266. வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு, பலி உண் வாழ்க்கைப்
    பேய் கொண்டு, வெல்ல வந்த பித்தனே! மிடுக்கைப் பேணி
    நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ! நின் நோன்மை எல்லாம்
    ஓய்கின்றாய் காண்டி! என்னா, உரைத்தனன், இடபன் ஒல்கான். 231

  267. ஓடுதி என்ன, ஓடாது உரைத்தியேல், உன்னோடு இன்னே
    ஆடுவென் விளையாட்டு என்னா, அயில் எயிற்று அரக்கன், அம் பொன்
    கோடு உறு வயிரப் போர் வில் காலொடு புருவம் கோட்டி,
    ஈடு உற, இடபன் மார்பத்து ஈர்-ஐந்து பகழி எய்தான். 232

  268. அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான், வேகத்தால் அத்
    தசும்புடைக் கொடுந் தேர்தன்னைத் தடக் கையால் எடுத்து வீச,
    பசுங் கழல் கண்ண பேயும் பறந்தன, பரவை நோக்கி;
    விசும்பிடைச் செல்லும் காரின் தாரைபோல் நான்ற மெய்யான். 233

  269. தேரொடும் கடலின் வீழ்ந்து, சிலையும் தன் தலையும் எல்லாம்
    நீரிடை அழுந்தி, பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
    பாரிடைக் குதியாமுன்னம், இடபனும், பதக! நீ போய்
    ஆரிடைப் புகுதி! என்னா, அந்தரத்து ஆர்த்துச் சென்றான். 234

  270. அல்லினைத் தழுவி நின்ற பகல் என, அரக்கன் தன்னை,
    கல்லினும் வலிய தோளால், கட்டியிட்டு இறுக்கும் காலை,
    பல்லுடைப் பில வாயூடு பசும் பெருங் குருதி பாய,
    வில்லுடை மேகம் என்ன, விழுந்தனன், உயிர் விண் செல்ல. 235

  271. சுக்கிரீவன் - கும்பன் போர்

  272. குரங்கினுக்கு அரசும், வென்றிக் கும்பனும், குறித்த வெம் போர்
    அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார்,
    மரம் கொடும், தண்டு கொண்டும், மலை என மலையாநின்றார்;
    சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர். 236

  273. கிடைத்தார், உடலில் கிழி சோரியை வாரித்
    துடைத்தார், விழியில் தழல் மாரி சொரிந்தார்,
    உடைத் தாரொடு பைங் கழல் ஆர்ப்ப உலாவிப்
    புடைத்தார், பொருகின்றனர்-கோள் அரி போல்வார். 237

  274. தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன்,
    அண்டங்கள் வெடிப்பன என்ன, அடித்தான்;
    கண்டு, அங்கு, அது மா மரமே கொடு காத்தான்;
    விண்டு அங்கு அது தீர்ந்தது; மன்னன் வெகுண்டான். 238

  275. பொன்றப் பொருவேன், இனி என்று, பொறாதான்,
    ஒன்றப் புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான்,
    நின்று அப் பெரியோன் நினையாதமுன், நீலன்
    குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான். 239

  276. அத் தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான்,
    ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்,
    பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்;
    சித்தங்கள் நடுங்கி, அரக்கர் திகைத்தார். 240

  277. அடியுண்ட அரக்கன், அருங் கனல் மின்னா
    இடியுண்டது ஓர் மால் வரை என்ன, விழுந்தான்;
    முடியும் இவன் என்பது ஓர் முன்னம், வெகுண்டான்,
    ஒடியும் உன தோள் என, மோதி உடன்றான். 241

  278. தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்,
    தாளில் தடுமாறல் தவிர்ந்து, தகைந்தான்,
    வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டு,
    ஆளித் தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான். 242

  279. அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்;
    முடிவு ஆனவன் யார்? என, வானவர் மொய்த்தார்;
    இடியோடு இடி கிட்டியது என்ன, இரண்டும்
    பொடியாயின தண்டு; பொருந்தினர் புக்கார். 243

  280. மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்;
    பத்துத் திசையும் செவிடு எய்தின; பல் கால்
    தத்தித் தழுவி, திரள் தோள்கொடு தள்ளி,
    குத்தி, தனிக் குத்து என, மார்பு கொடுத்தார். 244

  281. நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க,
    கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
    உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க,
    மலையின் பிளவுற்றது, தீயவன் மார்பம். 245

  282. செய்வாய் இகல்? என்று அவன் நின்று சிரித்தான்;
    ஐ வாய் அரவம் முழை புக்கென, ஐயன்
    கை வாய் வழி சென்று, அவன் ஆர் உயிர் கக்க,
    பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான். 246

  283. கும்பன் இறக்க, நிகும்பனை அங்கதன் எதிர்த்தல்

  284. அக்காலை, நிகும்பன், அனல் சொரி கண்ணன்,
    புக்கான், இனி, எங்கு அட போகுவது? என்னா,
    மிக்கான் எதிர், அங்கதன் உற்று வெகுண்டான்;
    எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார். 247

  285. சூலப் படையானிடை வந்து தொடர்ந்தான்,
    ஆலத்தினும் வெய்யவன் அங்கதன், அங்கு ஓர்
    தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான்,
    நீலக் கிரிமேல் நிமிர் பொற்கிரி நேர்வான். 248

  286. நிகும்பன் சூலத்தை தடுத்து அனுமன் அவனை அழித்தல்

  287. எறிவான் உயர் சூலம் எடுத்தலும், இன்னே
    முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே,
    அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்,
    பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான். 249

  288. தடை ஏதும் இல் குலம் முனிந்து, சலத்தால்,
    விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை,
    இடையே தடைகொண்டு, தன் ஏடு அவிழ் அம் கைப்
    புடையே கொடு கொன்று, அடல் மாருதி போனான். 250

  289. தலைவர்களை இழந்த அரக்கர் சேனையின் நிலை

  290. நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்,
    பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்;
    வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
    கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார். 251

  291. ஓடிப் புகு வாயில் நெருக்கின் உலந்தார்,
    கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்; குத்தால்
    பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்,
    பாடித்தலை உற்றவர், எண் இலர் பட்டார், 252

  292. தண்ணீர் தருக என்றனர் தாவுற ஓடி,
    உண் நீர் அற, ஆவி உலந்தனர், உக்கார்;
    கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர்; காலால்
    மண் ஈரம் உற, கடிது ஊர் புக வந்தார். 253

  293. விண்மேல் நெடிது ஓடினர், ஆர் உயிர் விட்டார்
    மண்மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்;
    எண் மேலும் நிமிர்ந்துளர், ஈருள் தயங்கப்
    புண் மேலுடை மேனியினார், திசை போனார். 254

  294. அறியும்மவர்தங்களை, ஐய! இவ் அம்பைப்
    பறியும் என வந்து, பறித்தலும் ஆவி
    பிறியும் அவர் எண் இலர்; தம் மனை பெற்றார்,
    குறியும் அறிகின்றிலர், சிந்தை குறைந்தார். 255

  295. பரி பட்டு விழ, சிலர் நின்று பதைத்தார்;
    கரி பட்டு உருள, சிலர் கால்கொடு சென்றார்;
    நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார்,
    எரி பட்ட மலைக்கண் இருந்தவர் என்ன, 256

  296. மண்ணின் தலை வானர மேனியர் வந்தார்,
    புண் நின்ற உடற் பொறையோர் சிலர் புக்கார்,
    கண் நின்ற குரங்கு கலந்தன என்னா,
    உள் நின்ற அரக்கர் மலைக்க, உலந்தார். 257

  297. இரு கணும் திறந்து நோக்கி, அயல் இருந்து இரங்குகின்ற
    உருகு தம் காதலோரை, உண்ணும் நீர் உதவும் என்றார்,
    வருவதன் முன்னம் மாண்டார் சிலர்; சிலர் வந்த தண்ணீர்
    பருகுவார் இடையே பட்டார்; சிலர் சிலர் பருகிப்பட்டார். 258

  298. மக்களைச் சுமந்து செல்லும் தாதையர், வழியின் ஆவி
    உக்கனர் என்ன வீசி, தம்மைக் கொண்டு ஓடிப் போனார்;
    கக்கினர் குருதி வாயால், கண்மணி சிதற, காலால்
    திக்கொடு நெறியும் காணார், திரிந்து சென்று, உயிரும் தீர்ந்தார். 259

  299. அதிகாயன் முதலானோர் இறந்ததை இராவனனுக்குக் கூறல்

  300. இன்னது ஓர் தன்மை எய்தி, இராக்கதர் இரிந்து சிந்தி,
    பொன் நகர் புக்கார்; இப்பால், பூசல் கண்டு ஓடிப் போன,
    துன்ன அருந் தூதர் சென்றார், தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம்
    மன்னவன் அடியில் வீழ்ந்தார், மழையின் நீர் வழங்கு கண்ணார். 260

  301. நோக்கிய இலங்கை வேந்தன், உற்றது நுவல்மின் என்றான்;
    போக்கிய சேனைதன்னில் புகுந்துள இறையும் போதா;
    ஆக்கிய போரின், ஐய! அதிகாயன் முதல்வர் ஆய
    கோக் குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர், ஆவி என்றார். 261

  302. இராவணன் நிலையும் செயலும்

  303. ஏங்கிய விம்மல் மானம், இரங்கிய இரக்கம் வீரம்,
    ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று
    தாங்கிய தரங்கம் ஆகக் கரையினைத் தள்ளித் தள்ளி,
    வாங்கிய கடல்போல் நின்றான்-அருவி நீர் வழங்கு கண்ணான். 262

  304. திசையினை நோக்கும்; நின்ற தேவரை நோக்கும்; வந்த
    வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப்
    பிசையுறும் கையை; மீசை சுறுக்கொள உயிர்க்கும்; பேதை
    நசையிடைக் கண்டான் என்ன, நகும், அழும், முனியும், நாணும். 263

  305. மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்;
    எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்;
    பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும்; எண்ணி,
    புண்ணிடை எரி புக்கென்ன, மானத்தால் புழுங்கி நையும். 264

  306. இராவணன் அடி வீழ்ந்து தானியமாலி அரற்றல்

  307. ஒருவரும் உரையார் வாயால், உயிர்த்திலர், உள்ளம் ஓய்வார்,
    வெருவரும் தகையர் ஆகி, விம்மினர் இருந்த வேலை,
    தரு வனம் அனைய தோளான் தன் எதிர் தானிமாலி
    இரியலிட்டு அலறி, ஓயாப் பூசலிட்டு, ஏங்கி வந்தாள்; 265

  308. மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன, வளைகளோடு ஆரம் ஏங்க,
    முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன வாயாள்;
    தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி,
    உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்; 266

  309. வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல், மென்மைத் தோள் நிலத்தை மேவ;
    போழ்ந்தனள், பெரும்பாம்பு என்னப் புரண்டனள்; பொருமிப் பொங்கி,
    சூழ்ந்தனை, கொடியாய்! என்னா, துடித்து, அருந் துயர வெள்ளத்து
    ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள், அழக் கண்டும் அறிந்திலாதாள்; 267

  310. மாட்டாயோ, இக் காலம் வல்லோர் வலி தீர்க்க?
    மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோள் ஆற்றல்?
    கேட்டாய் உணர்ந்திலையோ? என் உரையும் கேளாயோ?
    காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ? 268

  311. இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று,
    அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
    மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன் தன்
    உந்து சிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே! 269

  312. அக்கன் உலந்தான்; அதிகாயன் தான் பட்டான்;
    மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்;
    மக்கள் இனி நின்று உளான், மண்டோ தரி மகனே;
    திக்குவிசயம், இனி ஒருகால் செய்யாயோ? 270

  313. ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண் இறந்த
    கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ?
    பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ?
    சீதையால் இன்னம் வருவ சிலவேயோ? 271

  314. உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்;
    நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்;
    கும்பகருணனையும் கொல்வித்து, என் கோமகனை
    அம்புக்கு இரை ஆக்கி, ஆண்டாய் அரசு ஐய! 272

  315. தானியமாலி அரண்மனை சேறல்

  316. என்று, பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து,
    கன்று படப் பதைத்த தாய்போல் கவல்வாளை,
    நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து,
    குன்று புரையும் நெடுங் கோயில் கொண்டு அணைந்தார். 273

  317. இலங்கை மக்களின் வருத்தம்

  318. தானை நகரத்துத் தளரத் தலைமயங்கி,
    போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்;-
    ஏனை மகளிர் நிலை என் ஆகும்?-போய் இரங்கி,
    வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார். 274

  319. தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி
    பேர உலகு உற்றது உற்றதால், பேர் இலங்கை;
    ஊர் அகலம் எல்லாம், அரந்தை, உவா உற்ற
    ஆர்கலியே ஒத்தது, அழுத குரல் ஓசை. 275

  320. மிகைப் பாடல்கள்

  321. முதிர் போர் உறு மொய்ம்பன், முனைத்தலையில்
    சதிர் ஏறிய தானை தழைத்திட, அங்கு
    எதிர் தேரிடை ஏறினன்; மற்று ஒரு வெங்
    கதிரோன் இகல் கண்டிட ஏகினனால். 20-1

  322. தேர் வெள்ளம் அளப்பு இல; திண் புரவித்
    தார் வெள்ளம் அளப்பு இல; தந்தி இனக்
    கார் வெள்ளம் அளப்பு இல; கண்டகராம்
    பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால். 20-2

  323. மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து
    எல் ஏறிய வாள், எழு, வல் முசலம்,
    வில்லோடு அயில், வெங் கதை, வேல் முதலாம்
    பல் ஆயுத பத்தி பரித்து உடையார். 25-1

  324. என, வந்த நிசாசரன், இவ் உரையைத்
    தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்,
    சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம்
    அனகன் அது கேட்டு, இது அறைந்திடுவான். 50-1

  325. என்றே உலகு ஏழினொடு ஏழினையும்
    தன் தாமரைபோல் இரு தாள் அளவா-
    நின்றான் உரை செய்ய, நிசாசரனும்
    பின்றா உரை ஒன்று பிதற்றினனால். 52-1

  326. வெங் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
    துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்;
    வெங் கணை இலக்குவன் வெகுண்டு, உகாந்தத்தில்
    பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான். 103-1

  327. முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின்
    விடு கணை மழை நெடுந் தாரை, வெம் மதக்
    கட களிறு அடங்கலும் கழிய, கால், கரம்,
    குடல், தலை, குறைந்தமை கூறல் ஆவதோ? 103-2

  328. அறுந்தன, தலை, கழுத்து; அறுந்த, தாள், கரம்;
    அறுந்தன, செவி, முகம்; அறுந்த, வால், மருப்பு;
    அறுந்தன, குடல், உடல்; அறுந்த, வாய், விழி;
    அறுந்தன, கட களிறு ஆய நாமமே. 103-3

  329. அறுத்தன, சில கணை; அறுத்த கூறுகள்
    செறுத்தன, சில கணை; சின்னபின்னமாய்
    ஒறுத்தன, சில கணை; உம்பர் ஊர் புகத்
    தெறித்தன, சில கணை; செப்பல் ஆவதோ? 103-4

  330. மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற,
    முதிர் சினத்து இலக்குவன், கடிகை மூன்றினில்,
    கொதி கொள் வெஞ் சர மழை கொழிப்பக் கண்டு, தாள்
    அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார். 103-5

  331. அடுத்தனர் ஆனை, தேர், புரவி, ஆழியை;
    தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து, வள்ளல்மேல்
    விடுத்தனர் படைக் கலம்; வெகுண்டு வீரனும்
    தடுத்தனன், ஒரு தனித் தனுவின் வன்மையால். 103-6

  332. பெருங் கடை யுக மழை பிறழ, தன் ஒரு
    கரம் படு சிலையினின் கான்ற மாரியின்,
    சரம் படச் சரம் பட, தாக்கு இராக்கதக்
    கருங் கடல் வறந்தது கழறல் ஆகுமோ? 103-7

  333. இலக்குவக் கடவுள் தன் ஏவின் மாரியால்,
    விலக்க அருங் கரி, பரி இரதம், வீரர் என்று
    உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
    நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே. 119-1

  334. காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
    பாய்ந்திட, பருஞ் சிலை விசையின் பற்றினான்;
    மாய்ந்தது குரங்கு; அது கண்டு, மா மறை
    வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே. 121-1

  335. கார்முக விசை உறும் கணையின் மாரியால்
    பார வெஞ் சிலை அறுத்து, அவன் தன் பாய் பரித்
    தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி, மற்று
    ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான். 121-2

  336. தாருகன் எனும் படைத் தலைவன் தன் வயப்
    போர் அழிந்தவன் உயிர் பொன்றினான் என,
    கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே,
    வீரனை வளைத்தனர், வெகுளி மிக்குளார். 122-1

  337. மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே
    விழ உற்றன, வெறி வெங் கணை நிமிரப் பொறி சிதற,
    முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய,
    உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள். 140-1

  338. துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார்; அவை தோன்றக்
    கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே,
    உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன், உளத்தே
    கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடுஞ் சூலம் கைக் கொண்டான். 169-1

  339. ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறி,
    தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய, தன் கை
    வாங்கினன் சிலை; நாண் ஓசை படைத்தபின், வாளி மாரி
    பாங்குறு கவியின் சேனைக் கடல்மிசைப் பரப்பி ஆர்த்தான். 186-1

  340. ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும்
    தூர்த்து, அடல் கவியின் சேனை துகள் படத் துணிந்து சிந்தப்
    பேர்த்தனன் சிலை நாண் ஓதை; பிறை முகப் பகழி பின்னும்
    கோத்தனன், அனந்த கோடி கோடியின்-கொதித்து வெய்யோன். 186-2

  341. உருத்து, அதிகாயன், மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி மாரி
    நிரைத்தலின், இடைவிடாது நெடுங் கவிச் சேனை வெள்ளம்
    தரைத் தலம் அதனில் பட்டுத் தலை உடல் சிதற, சோரி
    இரைத்து எழு கடலின் பொங்க, இமையவர் அலக்கணுற்றார். 186-3

  342. கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம்
    தரைப் பட, சரத்தின் மாரித் தசமுகன் சிறுவன்-சீறா,
    கரை அறு கவியின் சேனைத் தலைவர்கள், கனலின் பொங்கி,
    வரையொடு மரமும் கல்லும் வாங்கினர், விரைவின் வந்தார். 186-4

  343. வானரத் தலைவர் பொங்கி வருதலும், அரக்கன் மைந்தன்,
    போன திக்கு அறிவுறாமல், பொழிந்திடும் பகழிதன்னால்
    ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன்; குருதி பொங்க,
    தான் அறிவு அழிந்து, யாரும் தனித் தனி தலத்தின் வீழ்ந்தார். 186-5

  344. திசை முகம் கிழிய, தேவர் சிரம் பொதிர் எறிய, திண் தோள்
    தசமுகன் சிறுவன், பின்னும், தடஞ் சிலை குழைய வாங்கி,
    விசை கொள் நாண் எறிந்து, மேன்மேல் வெங் கவித் தானை வெள்ளம்
    பசை அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன், பகழி மாரி. 186-6

  345. வீரருக்கு ஒருவரான விறல், அதிகாயன் வெம் போர்
    ஆர் இனித் தடுக்க வல்லார்? எனப் பதைத்து, அமரர் எல்லாம்,
    சோர்வுறத் துளங்கி, நில்லாது ஓடினர்; சுடரும் வை வேல்
    போர் வலி அரக்கன் சேனை புகுந்தது, கடலின் பொங்கி. 186-7

  346. அங்கதன் தோளில் நின்ற அண்ணல், ஆங்கு அதனைக் கண்டே,
    செங் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து, தீரா,
    வெங் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி,
    துங்க வேல் நிருதர் சேனை துணி படச் சொரிந்தான், வாளி. 186-8

  347. உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து, ஏழு
    கரு முகில் பொழிவதென்னக் கணை மழை சொரிந்து, காலாள்
    இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி,
    பொரு திறல் அரக்கனோடும் புகுந்து, அமர் கடிதின் ஏன்றான். 186-9

  348. புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம்
    திரிதர, அரக்கன் சீறி, திண் சிலை குழைய வாங்கி,
    எரி முகப் பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி
    சொரிதர, அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார். 195-1

  349. வில்லினுக்கு ஒருவன் ஆகி, உலகு ஒரு மூன்றும் வென்ற
    வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான்,
    கல் இடும் மாரி என்னக் கணை மழை பொழியக் கண்ட
    வில்லியும், விடாது, வெய்ய கணை மழை விலக்கி நின்றான். 203-1

  350. விறல் அதிகாயன் வீழ, வெந் திறல் அரக்கன் மைந்தர்
    குறுகினர், மும்மையான ஆயிர கோடி உள்ளார்;
    எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து,
    செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர், தெழிக்கும் சொல்லார். 207-1

  351. வருதலும் அரக்கன், மற்று(அவ்) வானரச் சேனை பின்னும்
    பொரு சினம் திருகி முற்றா, பொங்கு அழல் என்னப் பொங்கி,
    மரமொடு மலைகள் ஏந்தி, மாதிரம் மறைய, வல்லே
    உரும் எனச் சொரிய வீசி உடற்றினர், ஒழிவு இலாதார். 209-1

  352. மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும்,
    கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே
    முற்றும்படி மோதினர்; மோத முடிந்தே
    அற்று, அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார். 250-1

  353. அளப்பு இல் மைந்தர் எல்லாம், ஆனை, தேர், பரி, ஆள் என்னும்
    வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய, தாமும்
    களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா,
    துளக்கம் இல் அரக்கன், மேருத் துளங்கியது என்ன, சோர்ந்தான். 261-1

  354. யுத்த காண்டம்

    19. நாகபாசப் படலம்


    அரக்கியர் அழுவது கண்ட இந்திரசித்தன் எழுதல்

  355. குழுமி, கொலை வாட் கண் அரக்கியர், கூந்தல் தாழ,
    தழுவித் தலைப் பெய்து, தம் கைகொடு மார்பின் எற்றி,
    அழும் இத் தொழில் யாதுகொல்? என்று, ஓர் அயிர்ப்பும் உற்றான்,
    எழிலித் தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான். 1

  356. எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு-
    பட்டான் கொல்? அது அன்று எனின், பட்டு அழிந்தான்கொல்? பண்டு
    சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு வேலையோடும்
    கட்டான் கொல்? இதற்கு ஒரு காரணம் என்கொல்? என்றான். 2

  357. இந்திரசித்து-இராவணன் உரையாடல்

  358. கேட்டான், இடை உற்றது என்? என்று, கிளத்தல் யாரும்
    மாட்டாது நடுங்கினர், மாற்றம் மறந்து நின்றார்.
    ஓட்டா நெடுந் தேர் கடிது ஓட்டி, இமைப்பின் உற்றான்
    காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான். 3

  359. கண்டான், இறை ஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி,
    உண்டாயது என், இவ்வுழி? என்றலும், உம்பிமாரைக்
    கொண்டான் உயிர் காலனும்; கும்ப நிகும்பரோடும்
    விண் தான் அடைந்தான், அதிகாயனும்-வீர! என்றான். 4

  360. சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்,
    பல்லால் அதரத்தை அதுக்கி, விண் மீது பார்த்தான்;
    எல்லாரும் இறந்தனரோ! என ஏங்கி நைந்தான்;-
    வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன். 5

  361. ஆர் கொன்றவர்? என்றலுமே, அதிகாயன் என்னும்
    பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார்
    ஊர் கொன்றவனால், பிறரால் என, உற்ற எல்லாம்
    தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான். 6

  362. கொன்றார் அவரோ? கொலை சூழ்க! என நீ கொடுத்தாய்;
    வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும், மன்னா!
    என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது என்னா,
    நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான். 7

  363. அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
    விக்கல் பொரு வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்;
    புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி இல்லாய்!
    மக்கள்-துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ! 8

  364. இந்திரசித்து வஞ்சினம்

  365. என், இன்று நினைந்தும், இயம்பியும், எண்ணியும்தான்?
    கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை,
    அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்,
    மன் நின்ற நகர்க்கு இனி வாரலென்; வாழ்வும் வேண்டேன். 9

  366. வெங் கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப்
    பங்கம் உற நூறி, இலக்குவனை படேனேல்,
    அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
    செங் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை! 10

  367. மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன் தன்
    ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,
    ஏற்றான் இகல் இந்திரன் ஈர்-இரு கால், எனக்கே
    தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க என்றான். 11

  368. பாம்பின் தரு வெம் படை, பாசுபதத்தினோடும்,
    தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி,
    ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்,
    சோம்பித் துறப்பென்; இனிச் சோறும் உவந்து வாழேன். 12

  369. மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
    விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி,
    பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து, பாரின்
    இருந்தேன் எனின், நான் அவ் இராவணி அல்லென் என்றான். 13

  370. ஏகா, இது செய்து, எனது இன்னலை நீக்கிடு; எந்தைக்கு
    ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலர் மேல்
    மா கால் வரி வெஞ் சிலையோடும் வளைத்த போது
    சேகு ஆகும் என்று எண்ணி, இவ் இன்னலின் சிந்தை செய்தேன். 14

  371. இந்திரசித்து களம் புகுதல்

  372. என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
    ஒன்றானும் அறா, உருவா, உடற்காவலோடும்,
    பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
    வன் தாள் வயிரச் சிலை வாங்கினன் -வானை வென்றான். 15

  373. வயிரந் நெடு மால் வரை கொண்டு, மலர்க்கண் வந்தான்,
    செயிர் ஒன்றும் உறா வகை, இந்திரற்கு என்று செய்த
    உயர் வெஞ் சிலை; அச் சிலை பண்டு அவன் தன்னை ஓட்டி,
    துயரின் தலை வைத்து, இவன் கொண்டது; தோற்றம் ஈதால். 16

  374. தோளில் கணைப் புட்டிலும், இந்திரன் தோற்ற நாளே
    ஆளித் திறல் அன்னவன் கொண்டன; ஆழி ஏழும்
    மாள, புனல் வற்றினும் வாளி அறாத; வன்கண்
    கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ. 17

  375. பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்
    எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு
    வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை
    அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான். 18

  376. நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
    ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப;
    மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது; வானுளோரும்
    தேறாதது-மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர். 19

  377. பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்,
    மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல்நாள்,
    பின் சென்றது அல்லது ஒரு பெருஞ் சிறப்பு உற்ற போதும்,
    முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும். 20

  378. ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன் தன்
    சாயாப் பெருஞ் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள்
    போய் ஆர்த்தவன் வந்தனன், வந்தனன் என்று பூசல்
    பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங் கொடி பெற்றது அம்மா! 21

  379. செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி-
    யது;-கைத் திசை யானையை ஓட்டியது என்னலாமே?-
    மதுகைத் தடந்தோள் வலி காட்டிய வான வேந்தன்
    முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா! 22

  380. அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
    ஒத்து ஏய்வன சேமமதாய் வர, உள்ளம் வெம் போர்ப்
    பித்து ஏறினன் என்ன, நடந்தனன் -பின்பு அலால், மற்று
    எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான். 23

  381. அன்னானொடு போயின தானை அளந்து கூற
    என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகன் என்னும்
    நல் நான்மறையான், அது நாற்பது வெள்ளம் என்னச்
    சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்க வல்லார். 24

  382. தூமக் கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா
    மாபக்கனும், அந் நெடுந் தேர் மணி ஆழி காக்க,
    தாமக் குடை மீது உயர, பெருஞ் சங்கம் விம்ம,
    நாமக் கடற் பல் இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப. 25

  383. தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல,
    போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத,
    தார் ஆர் புரவிக் கடல் பின் செல, தானை வீரப்
    பேர் ஆழி முகம் செல, சென்றனன்-பேர்ச்சி இல்லான். 26

  384. போருக்கு வருபவனைப் பற்றி இலக்குவன் வீடணனிடம் வினவலும் வீடணனின் பதிலும்

  385. நின்றனன் இலக்குவன், களத்தை நீங்கலன்-
    பொன்றினன், இராவணன் புதல்வன்; போர்க்கு இனி,
    அன்று அவன், அல்லனேல் அமரர் வேந்தனை
    வென்றவன், வரும் என விரும்பும் சிந்தையான். 27

  386. யார், இவன் வருபவன்? இயம்புவாய்! என,
    வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
    ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
    போர் கடந்தவன்; இன்று வலிது போர் என்றான். 28

  387. எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று-எம்பிரான்!-
    கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட,
    நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
    திண்ணிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால். 29

  388. மாருதி, சாம்பவன், வானரேந்திரன்,
    தாரை சேய், நீலன் என்று இனைய தன்மையார்,
    வீரர், வந்து உடன் உற,-விமல!-நீ நெடும்
    போர் செய்த குருதியால்-புகழின் பூணினாய்! 30

  389. பல் பதினாயிரம் தேவர் பக்கமா,
    எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
    ஒல்லையின் உடைந்தனன், உயிர் கொண்டு உய்ந்துளான்-
    மல்லல் அம் தோளினாய்!-அமுதின் வன்மையால். 31

  390. இனி அவை மறையுமோ, இந்திரன் புயப்
    பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
    அனுமனைப் பிணித்துளன் ஆனபோது, இவன்
    தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ? 32

  391. என்று, அவன் இறைஞ்சினன்; இளைய வள்ளலும்,
    நன்று என மொழிதலும், நணுகினான் அரோ-
    வன் திறல் மாருதி, இலங்கைக் கோ மகன்
    சென்றனன் இளவல்மேல் என்னும் சிந்தையான். 33

  392. கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
    தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா,
    மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
    காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ. 34

  393. அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
    துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்;
    செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்,
    சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையே. 35

  394. இரு படைகளும் பொருதல்

  395. இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
    பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
    வருவன போல்வன-மனத்தினால் சினம்
    திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே. 36

  396. கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து,
    எண்ணினால் பெறு பயன் எய்தும், இன்று எனா,
    நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்-
    விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே. 37

  397. ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி,
    அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி,
    நத்து ஒலி, முரசு ஒலி, நடுக்கலால், தலை-
    பொத்தினர் செவிகளை-புரந்தராதியர். 38

  398. எற்றுமின், பற்றுமின், எறிமின், எய்ம்மின் என்று,
    உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்,
    முற்றுறு கடை யுகத்து இடியின் மும் மடி
    பெற்றன, பிறந்தன, சிலையின் பேர் ஒலி. 39

  399. கல் பட, மரம் பட, கால வேல் பட,
    வில் படு கணை பட, வீழும் வீரர்தம்
    எல் படும் உடல் பட, இரண்டு சேனையும்
    பிற்பட, நெடு நிலம் பிளந்து பேருமால். 40

  400. எழுத் தொடர் மரங்களால் எற்ற முற்றிய
    விழுத் தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன,
    அழுத்திய பெருஞ் சினத்து அரக்கர் ஆக்கைகள்
    கழுத்து உள, தலை இல, களத்தின் ஆடுவ. 41

  401. வெட்டிய தலையன, நரம்பு வீச மேல்
    முட்டிய குருதிய, குரங்கின் மொய் உடல்-
    சுட்டு உயர் நெடு வனம் தொலைந்தபின், நெடுங்
    கட்டைகள் எரிவன போன்று காட்டுவ. 42

  402. அரக்கர் அழிவு

  403. பிடித்தன நிருதரை, பெரிய தோள்களை
    ஒடித்தன, கால் விசைத்து உதைத்த, உந்தின,
    கடித்தன கழுத்து அற, கைகளால் எடுத்து
    அடித்தன, அரைத்தன, ஆர்த்த-வானரம். 43

  404. வாள்களின் கவிக் குல வீரர் வார் கழல்
    தாள்களைத் துணித்தனர், தலையைத் தள்ளினர்,
    தோள்களைத் துணித்தனர், உடலைத் துண்ட வன்
    போழ்களின் புரட்டினர், நிருதர் பொங்கினார். 44

  405. மரங்களின், அரக்கரை மலைகள் போன்று உயர்
    சிரங்களைச் சிதறின; உடலைச் சிந்தின;
    கரங்களை, கழல்களை, ஒடியக் காதின-
    குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே. 45

  406. சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன,
    அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன,
    உடர்த்தலை வைர வேல் உருவ, உற்றவர்
    மிடற்றினைக் கடித்து, உடன் விளிந்து போவன. 46

  407. அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்
    தொடர்ந்தன, மழை பொழி தும்பிக் கும்பங்கள்
    இடந்தன, மூளைகள் இனிதின் உண்டன,
    கடந்தன, பசித் தழல்-கரடி, காதுவ. 47

  408. கொலை மதக் கரியன, குதிரை மேலன,
    வல மணித் தேரன, ஆளின் மேலன,
    சிலைகளின் குடுமிய, சிரத்தின் மேலன,-
    மலைகளின் பெரியன குரங்கு-வாவுவ. 48

  409. தண்டு கொண்டு அரக்கர் தாக்க, சாய்ந்து உகு நிலைய, சந்தின்
    துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலைத் தூவி,
    கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு இனப் பிணத்தின் குப்பை
    மண்டு வெங் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ. 49

  410. பனி வென்ற பதாகை என்றும், பல் உளைப் பரிமா என்றும்,
    தனு என்றும், வாளி என்றும், தண்டு என்றும், தனி வேல் என்றும்,
    சின வென்றி மதமா என்றும், தேர் என்றும், தெரிந்தது இல்லை-
    அனுமன் கை வயிரக் குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை. 50

  411. பொங்கு தேர், புரவி, யானை, பொரு கழல் நிருதர் என்னும்
    சங்கையும் இல்லா வண்ணம், தன் உளே தழுவி, கூற்றம்,
    எங்கு உள, உயிர்? என்று எண்ணி, இணைக் கையால் கிளைத்தது என்ப-
    அங்கதன் மரம் கொண்டு எற்ற, அளறுபட்டு அழிந்த தானை. 51

  412. தாக்கிய திசைகள்தோறும் தலைத்தலை மயங்கி, தம்மில்
    நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,
    ஆக்கிய செருவை நோக்கி, அமரரோடு அசுரர் போரைத்
    தூக்கினர், முனிவர், என்னை? இதற்கு அது தோற்கும் என்றார். 52

  413. எடுத்தது நிருதர் தானை; இரிந்தது குரங்கின் ஈட்டம்;
    தடுத்தனர், முகங்கள் தாங்கி, தனித் தனி தலைவர் தள்ளி;
    படுத்தனர் அரக்கர், வேலை பட்டதும்; படவும், பாரார்,
    கடுத்தனர்; கடுத்த பின்னும், காத்தனர் கவியின் வீரர். 53

  414. சூலமும் மழுவும் தாங்கித் தோள் இரு நான்கும் தோன்ற
    மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன,
    நீலன் நின்றுழியே நின்றான்; நிரந்தரம், கணங்களோடும்
    காலன் என்று ஒருவன், யாண்டும் பிரிந்திலன், பாசக் கையான். 54

  415. காற்று அலன்; புனலோ அல்லன்; கனல் அல்லன்; இரண்டு கையால்,
    ஆற்றலன், ஆற்றுகின்ற அருஞ் சமம் இதுவே ஆகில்,
    ஏற்றம் என் பலவும் சொல்லி? என் பதம் இழந்தேன் என்னா,
    கூற்றமும் குலுங்கி அஞ்ச, வெங் கதக் குமுதன் கொன்றான். 55

  416. மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
    செறி பணை மரமே நின்ற, மரங்களில்; தெரியச் செப்பும்
    குறியுடை மலைகள் தம்மில் குல வரைக் குலமே-கொள்ளா,
    எறிதலோடு அறைதல் வேட்ட, இடவன் அன்று இடந்திலாத. 56

  417. வாம் பரி, மத மா, மான் தேர், வாள் எயிற்று அரக்கர் மானப்,
    பாம்பினும் வெய்யோர் சாலப் படுகுவர்; பயம் இன்று, இன்றே;
    தூம்பு உறழ் குருதி மண்ட, தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
    சாம்பவன் கொல்ல, சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார். 57

  418. பொரும் குலப் புரவி ஆன திரைகளும், கலம் பொன் தேரும்,
    இருங் களி யானை ஆன மகரமும், இரியல் போக,
    நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த
    கருங் கடல் கலக்கும் மத்தின், பனசனும் கலக்கிப் புக்கான். 58

  419. மயிந்தனும் துமிந்தன் தானும், மழைக் குலம் கிழித்து, வானத்து
    உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார்;
    கயம் குடைந்து ஆடும் வீரக் களிறு ஒத்தான், கவயன்; காலின்
    பெயர்ந்திலன், உற்றது அல்லால், கேசரி பெரும் போர் பெற்றான். 59

  420. பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பிணத்தின் குப்பை
    வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று,
    இரிந்தன கவியும் கூடி எடுத்தன; எடுத்தலோடும்,
    சரிந்தது நிருதர் தானை; தாக்கினன் அரக்கன், தானே. 60

  421. இந்திரசித்தின் பெரும் போர்

  422. பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர, அடல் வலித்
    தூண் எறிந்தனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட,
    சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை, செவிடு எறிந்து உடைய,-மிடல் வலோன்
    நாண் எறிந்து, முறை முறை தொடர்ந்து, கடல் உலகம் யாவையும் நடுக்கினான். 61

  423. சிங்கஏறு, கடல்போல் முழங்கி, நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா,
    அங்கதாதியர் அனுங்க, வானவர்கள் அஞ்ச, வெஞ் சின அனந்தன் மாச்
    சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
    வெங் கண் நாகம் என, வேகமாய், உருமு வெள்க, வெங் கணைகள் சிந்தினான். 62

  424. சுற்றும் வந்து, கவி வீரர் வீசிய சுடர்த் தடங் கல் வரை, தொல் மரம்
    இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன; எழுந்து சேணிடை இழிந்தபோல்,
    வெற்றி வெங் கணை படப் பட, தலைகள் விண்ணினூடு திசைமீது போய்,
    அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால். 63

  425. சிலைத் தடம் பொழி வயக் கடும் பகழி செல்ல, ஒல்கினர், சினத்தினால்
    உலைத்து எறிந்திட எடுத்த குன்றுதொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்,
    நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல, எதிர் சென்று சென்று, உற நெருக்கலால்,
    மலைத் தடங்களொடு உரத் தலம் கழல, ஊடு சென்ற, பல வாளியே. 64

  426. முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன, தடிந்து போய்,
    கழுத்த, கைய, நிமிர் கால, வால, பல கண்டமானபடி கண்டு, நேர்
    எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய, எற்ற, அற்றன எழுந்து மேல்,
    விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி, உடன் வீழுமால். 65

  427. அற்ற பைந் தலை அரிந்து சென்றன அயில் கடுங் கணை, வெயில்கள் போல்,
    புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால்;
    வெற்ற வெள்ளிடை விரைந்து போவது, ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால்,
    உற்ற செங் குருதி வெள்ளம், உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால். 66

  428. விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய, மீளுமேல் முதுக, மேனிய
    கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய கால, வீசின் நிமிர் கைய, வாய்த்
    தெழிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின் உன்னுமேல்-சிகரம் யாவையும்
    பழிக்கும் மேனிய குரங்கின்மேல், அவன் விடும் கொடும் பகழி பாயவே. 67

  429. மொய் எடுத்த கணை மாரியால், இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்;
    எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது யாதும் ஒன்று செவி உற்றிலார்;
    மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால்,
    கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு,-தேவர்கள்-கலங்கினார். 68

  430. சுக்கிரீவன் எதிர்த்தல்

  431. கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அக்
    கண்டன், மாறு ஒருவர் இன்மை கண்டு, கணை மாறினான், விடுதல் இன்மையாய்;
    கண்ட காலையில், விலங்கினான் இரவி காதல், காதுவது ஓர் காதலால்,
    கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான். 69

  432. உடைந்து, தன் படை உலைந்து சிந்தி, உயிர் ஒல்க, வெல் செரு உடற்றலால்,
    கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்,
    இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான்
    மிடைந்து நின்ற படை வேலை கால் தளர, வீசினான்; நிருதர் கூசினார். 70

  433. சுற்றும் நின்ற படை சிந்தி ஓட, ஒரு மரா மரம் கொடு துகைத்துளான்
    வெற்றி கண்டு, வலி நன்று, நன்று! என வியந்து, வெங் கணை தெரிந்து, அவன்
    நெற்றியின் தலை இரண்டு, மார்பிடை ஓர் அஞ்சு, நஞ்சு என நிறுத்தினான்;
    பற்றி வந்த மரம் வேறு வேறு உற நொறுக்கி, நுண் பொடி பரப்பினான். 71

  434. அனுமன் குன்று எறிதல்

  435. அக் கணத்து, அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான்;
    புக்கு, அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமுபோல் உறா,
    இக் கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து, மிசை ஏவினான்;
    உக்கது அக் கிரி, சொரிந்த வாளிகளின், ஊழ் இலாத சிறு பூழியாய். 72

  436. இந்திரசித்து - அனுமன் வீர உரை

  437. நில் அடா! சிறிது நில், அடா! உனை நினைந்து வந்தனென், முனைக்கு நான்;
    வில் எடாமை நினது ஆண்மை பேசி, உயிரோடு நின்று விளையாடினாய்;
    கல் அடா, நெடு மரங்களோ, வரு கருத்தினேன் வலி கடக்கவோ?
    சொல் அடா! என இயம்பினான், இகல் அரக்கன், ஐயன், இவை சொல்லினான். 73

  438. வில் எடுக்க உரியார்கள், வெய்ய சில வீரர், இங்கும் உளர்; மெல்லியோய்!
    கல் எடுக்க உரியானும் நின்றனன்; அது இன்று நாளையிடை காணலாம்;
    எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார்;
    புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறு சில போர் எடுத்து, எதிர் புகுந்துளோம். 74

  439. என்னொடே பொருதியோ? அது என்று எனின், இலக்குவப் பெயரின் எம்பிரான்-
    தன்னொடே பொருதியோ? சொல்; நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம்
    மன்னொடே பொருதியோ? உரைத்தது மறுக்கிலோம் என, வழங்கினான்-
    பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொருப் படா உயர் புயத்தினான். 75

  440. எங்கு நின்றனன் இலக்குவப் பெயர் அவ் ஏழை, எம்பி அதிகாயனாம்
    சிங்கம் வந்தவனை வென்று, தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்?
    அங்கு அவன் தனை மலைந்து கொன்று, முனிவு ஆற வந்தனென்; அது அன்றியும்,
    உங்கள் தன்மையின் அடங்குமோ, உலகு ஒடுக்கும் வெங் கணை தொடுக்கினே? 76

  441. யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக, யானும், இகல் வில்லும், ஓர்
    தேரின் நின்று, உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென்; இது திண்ணமால்;
    வாரும்; உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வரச் சொலும்;
    போரும், இன்று ஒரு பகற்கணே பொருது, வெல்வென்; வென்று அலது போகலேன். 77

  442. இந்திரசித்து - அனுமன் போர்

  443. என்று, வெம்பகழி, ஏழு நூறும், இருநூறும், வெஞ் சிலைகொடு ஏவினான்;
    குன்று நின்றனைய வீர மாருதிதன் மேனிமேல் அவை குழுக்களாய்ச்
    சென்று சென்று உருவலோடும், வாள் எயிறு தின்று சீறி, ஒரு சேம வன்
    குறு நின்றது பறித்து எடுத்து, அவனை எய்தி, நொய்தின் இது கூறினான்: 78

  444. தும்பி என்று உலகின் உள்ள யாவை, அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள்,
    வெம்பு வெஞ் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ?
    நம்பி தம்பி, எனது எம்பிரான், வரு துணைத் தரிக்கிலை நலித்தியேல்,
    அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது; கா அடா! சிலை வல் ஆண்மையால். 79

  445. செருப் பயிற்றிய தடக் கை ஆளி செல விட்ட குன்று, திசை யானையின்
    மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன் தன் மார்பின், நெடு வச்சிரப்
    பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக் கடிது ஒடிந்து இடிந்து, திசை போயதால்;
    நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற, நீறு பட்டது நிகர்த்ததால். 80

  446. விலங்கல்மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில்,
    சலம் கைமேல் நிமிர, வெஞ் சினம் திருகி, வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்,
    வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதிதன் வாசம் நாறு
    அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ, ஆயிரம் சரம் அழுத்தினான். 81

  447. ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ, ஆடகக்
    குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்கநின்றனைய கொள்கையான்,
    மன்றல் நாறு தட மேனிமேல் உதிர வாரி சோர வரும் மாருதி,
    நின்று தேறும் அளவின்கண், வெங் கண் அடல் நீலன் வந்து, இடை நெருக்கினான். 82

  448. நீலன் போர்

  449. நீலன், நின்றது ஒரு நீல மால் வரை நெடுந் தடக் கையின் இடந்து, நேர்
    மேல் எழுந்து, எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும்,
    சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த, இடை சொல்லுறும்
    காலம் ஒன்றும் அறியாமல், அம்பு கொடு கல்லினான், நெடிய வில்லினான். 83

  450. ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட, வானவர்கள் உள்ளமும்
    மோகம் எங்கும் உள ஆக, மேருவினும் மும் மடங்கு வலி திண்மை சால்
    ஆகம் எங்கும் வெளி ஆக, வெங் குருதி ஆறு பாய, அனல் அஞ்சு வாய்,
    நாக வெங் கண் நகு, வாளி பாய்தொறும் நடுங்கினான், மலை பிடுங்கினான். 84

  451. அங்கதன் போர்

  452. மேரு, மேரு என, அல்ல, அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம்,
    மார்பின்மேலும் உயர் தோளின்மேலும் உற, வாலி காதலன் வழங்கினான்;
    சேருமே அவை, தனுக் கை நிற்க? எதிர் செல்லுமே? கடிது செல்லினும்,
    பேருமே? கொடிய வாளியால் முறி பெறுக்கலாவகை நுறுக்கினான். 85

  453. நெற்றிமேலும், உயர் தோளின்மேலும், நெடு மார்பின்மேலும், நிமிர் தாளினும்,
    புற்றினூடு நுழை நாகம் அன்ன, புகை வேக வாளிகள் புகப் புக,
    தெற்றி வாள் எயிறு தின்று, கைத்துணை பிசைந்து, கண்கள் எரி தீ உக,
    வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற, மயங்கினான், நிலம் முயங்கினான். 86

  454. இலக்குவன் உரை

  455. மற்றை வீரர்கள் தம் மார்பின் மேலும், உயர் தோளின்மேலும், மழை மாரிபோல்,
    கொற்ற வெங் கணை உலக்க, எய்தவை குளிப்ப நின்று, உடல் குலுங்கினார்;
    இற்று அவிந்தன, பெரும் பதாதி; உயிர் உள்ள எங்கணும் இரிந்த; அப்
    பெற்றி கண்டு, இளைய வள்ளல், ஒள் எரி பிறந்த கண்ணன், இவை பேசினான்: 87

  456. பிழைத்தது, கொள்கை போத; பெரும் படைத் தலைவர் யாரும்
    உழைத்தனர், குருதி வெள்ளத்து; உலந்ததும் உலப்பிற்று அன்றே,
    அழைத்து இவன் தன்னை, யானே ஆர் உயிர் கொளப்படாதே?
    இழைத்தது பழுதே அன்றோ?-வீடண! என்னச் சொன்னான். 88

  457. வீடணன் இசைவு

  458. ஐய! ஈது அன்னதேயால்; ஆயிர கோடித் தேவர்
    எய்தினர்; எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்,
    செய்திலர் இவனை ஒன்றும்; நீ இது தீர்ப்பின் அல்லால்,
    உய்திறன் உண்டோ , வேறுஇவ் உலகினுக்கு உயிரோடு? என்றான். 89

  459. என்பது சொல்லக் கேட்ட, இந்திரவில்லினோடும்
    பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை,
    முன்பனை, முன்பு நோக்கி, இவன்கொலாம், பரதன் முன்னோன்-
    தன் பெருந் தம்பி? என்றான்; ஆம் எனச் சாரன் சொன்னான். 90

  460. அரக்கர் இலக்குவனை எதிர்த்தல்

  461. தீயவன் இளவல் தன்மேல் செல்வதன் முன்னம், செல்க! என்று
    ஏயினர் ஒருவர் இன்றி, இராக்கதத் தலைவர், எங்கள்
    நாயகன் மகனைக் கொன்றாய்! நண்ணினை, நாங்கள் காண;
    போய் இனி உய்வது எங்கே? என்று, எரி விழித்துப் புக்கார். 91

  462. அரக்கர் படை அழிவு

  463. கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர், கொடித் திண் தேரும்,
    ஆடல் மாக் களிறும், மாவும், கடாவினர் ஆர்த்து மண்டி,
    மூடினார்; மூடினாரை முறை முறை துணித்து, வாகை
    சூடினான், இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி. 92

  464. அதிர்ந்தன, உலகம் ஏழும்; அனற் பொறி, அசனி என்னப்
    பிதிர்ந்தன; மலையும் பாரும் பிளந்தன; பிணத்தின் குன்றத்து
    உதிர்ந்தன, தலைகள்; மண்டி ஓடின, உதிர நீத்தம்;
    விதிர்ந்தன, அமரர் கைகள்; விளைந்தது, கொடிய வெம் போர். 93

  465. விட்டனன், விசிகம் வேகம் விடாதன, வீரன்; மார்பில்
    பட்டன; உலகம் எங்கும் பரந்தன; பதாகைக் காட்டைச்
    சுட்டன; துரக ராசி துணித்தன; பனைக் கைம்மாவை
    அட்டன; கூற்றம் என்ன அடர்ந்தன, அனந்தம் அம்மா! 94

  466. உலக்கின்றார்; உலக்கின்றாரை எண்ணுவான் உற்றவிண்ணோர்,
    கலக்குறு கண்ணர் ஆகி, கடையுறக் காணல் ஆற்றார்,
    விலக்க அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி,
    இலக்குவன்சிலை கொடேகொல், எழு மழை பயின்றது! என்றார். 95

  467. ஓளி ஒண் கணைகள் தோறும் உந்திய வேழம், ஒற்றை
    வாளியின் தலைய, பாரில் மறிவன, மலையின் சூழ்ந்த;
    ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து, ஆர்த்த ஆழித்
    தூளியின் தொகைய, வள்ளல் சுடு கணைத் தொகையும் அம்மா! 96

  468. பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு, உழலும் பெற்றிச்
    சிறையன என்ன நோக்கி, தேவரும் திகைப்ப, தேற்றி,
    துறைதொறும் தொடர்ந்து, வானம் வெளி அறத் துவன்றி, வீழும்
    பறவையின் பெரிது பட்டார் பிணத்தின் மேல் படிவ மாதோ. 97

  469. திறம் தரு கவியின் சேனை, செறி கழல் நிருதன் சீற,
    இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்,
    பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட,
    மறைந்தன; குருதி ஓடி, மறி கடல் மடுத்திலாத. 98

  470. கை அற்றார்; காலன் அற்றார்; கழுத்து அற்றார்; கவசம் அற்றார்;
    மெய் அற்றார்; குடர்கள் சோர, விசை அற்றார்; விளிவும் அற்றார்;
    மையல் தார்க் கரியும், தேரும், வாசியும், மற்றும் அற்றார்;
    உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார், உயிர் உள்ளார் ஆகி உள்ளார். 99

  471. இலக்குவன்-இந்திரசித்து போர்

  472. வற்றிய கடலுள் நின்ற மலை என, மருங்கின் யாரும்
    சுற்றினர் இன்றி, தோன்றும் தசமுகன் தோன்றல், துள்ளித்
    தெற்றின புருவத்தோன், தன் மனம் எனச் செல்லும் தேரான்,
    உற்றனன், இளைய கோவை; அனுமனும் உடன் வந்து உற்றான். 100

  473. தோளின்மேல் ஆதி, ஐய! என்று அடி தொழுது நின்றான்;
    ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினன்; அமரர் ஆர்த்தார்;
    காளியே அனைய காலன் கொலையன, கனலின் வெய்ய,
    வாளிமேல் வாளி தூர்த்தார், மழையின்மேல் மழை வந்தன்னார். 101

  474. இடித்தன, சிலையின் நாண்கள்; இரிந்தன, திசைகள் இற்று;
    வெடித்தன, மலைகள் விண்டு; பிளந்தது, விசும்பு மேன்மேல்;
    பொடித்த, இவ் உலகம் எங்கும்; பொழிந்தன, பொறிகள் பொங்கி;
    கடித்தன, கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி. 102

  475. அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க, மற்று அறுக்கிலாத,
    வெம் பொறி கதுவ, விண்ணில் வெந்தன, கரிந்து வீழ்ந்த;
    உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார்; உலகம் யாவும்
    கம்பமுற்று உலைந்த; வேலைக் கலம் எனக் கலங்கிற்று, அண்டம். 103

  476. அரி இனம் பூண்ட தேரும், அனுமனும், அனந்த சாரி
    புரிதலின், இலங்கை ஊரும் திரிந்தது; புலவரேயும்,
    எரி கணைப் படலம் மூட, இலர், உளர் என்னும் தன்மை
    தெரிகிலர்; செவிடு செல்லக் கிழிந்தன, திசைகள் எல்லாம். 104

  477. என் செய்தார்! என் செய்தார்! என்று இயம்புவார்; இனைய தன்மை
    முன் செய்தார் யாவர்? என்பார்; முன் எது? பின் எது? என்பார்;
    கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார்;-
    பொன் செய்தார் மவுலிவிண்ணோர்-உணர்ந்திலர், புகுந்தது ஒன்றும். 105

  478. நாண் பொரு வரி வில் செங் கை, நாம நூல் நவின்ற கல்வி
    மாண்பு ஒரு வகையிற்று அன்று; வலிக்கு இலை அவதி; வானம்
    சேண் பெரிது என்று, சென்ற தேவரும், இருவர் செய்கை
    காண்பு அரிது என்று, காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ! 106

  479. ஆயிர கோடி பல்லம், அயில் எயிற்று அரக்கன், எய்தான்;
    ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான், ஐயன்;
    ஆயிர கோடி நாகக் கணை தொடுத்து, அரக்கன் எய்தான்;
    ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான், அண்ணல். 107

  480. கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான்;
    கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான், கொண்டல்;
    மீட்டு, ஒரு கோடி கோடி வெஞ் சினத்து அரக்கன் விட்டான்;
    மீட்டு, ஒரு கோடி கோடி கொண்டு, அவை தடுத்தான், வீரன். 108

  481. கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து, அரக்கன் எய்தான்;
    கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து, இளவல் காத்தான்,
    திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்;
    திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான். 109

  482. கோரையின் தலைய கோடி கொடுங் கணை அரக்கன் கோத்தான்;
    கோரையின் தலைய கோடி தொடுத்து, அவை இளவல் கொய்தான்;
    பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல், பல் கால்;
    பாரையின் தலைய கோடி, அரக்கனும், பதைக்க எய்தான். 110

  483. தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
    தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
    தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
    தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி. 111

  484. வச்சிரப் பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்;
    வச்சிரப் பகழி கோடி துரந்து, அவை அனகன் மாய்த்தான்;
    முச் சிரப் பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான்;
    முச் சிரப் பகழி கோடி தொடுத்து, அவை தடுத்தான் முன்பன். 112

  485. அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
    அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, அவை அறுத்தான், ஐயன்
    குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான்;
    குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து, அவை அரக்கன் கொய்தான். 113

  486. எய்யவும், எய்த வாளி விலக்கவும், உலகம் எங்கும்
    மொய் கணைக் கானம் ஆகி முடிந்தது; முழங்கு வேலை
    பெய் கணைப் பொதிகளாலே வளர்ந்தது; பிறந்த கோபம்
    கைம்மிகக் கனன்றது அல்லால், தளர்ந்திலர், காளை வீரர். 114

  487. வீழியின் கனிபோல் மேனி கிழிபட, அனுமன் வீரச்
    சூழ் எழு அனைய தோள்மேல் ஆயிரம் பகழி தூவி,
    ஊழியின் நிமிர்ந்த செந் தீ உருமினை உமிழ்வது என்ன,
    ஏழ்-இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான். 115

  488. முற்கொண்டான், அரக்கன் என்னா, முளரி வாள் முகங்கள், தேவர்,
    பின் கொண்டார்; இளைய கோவைப் பியல் கொண்டான் பெருந் தோள் நின்றும்
    கல்கொண்டு ஆர்கிரியின் நாலும் அருவிபோல், குருதி கண்டார்,
    வில்கொண்டான், இவனே! என்னா, வெருக் கொண்டார் முனிவர் எல்லாம். 116

  489. சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன், சிலைக் கை வாளி
    நூறு நூறு ஏவி, வெய்தின், நுடங்கு உளை மடங்கல் மாவும்
    வேறு வேறு இயற்றி, வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி,
    ஆறு நூறு அம்பு செம் பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான். 117

  490. காளமேகத்தைச் சார்ந்த கதிரவன் என்னக் காந்தி,
    தோளின்மேல் மார்பின்மேலும், சுடர் விடு கவசம் சூழ,
    நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன,
    வாளிவாய்தோறும் வந்து பொடித்தன, குருதி வாரி. 118

  491. பொன் உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மாப் புரண்ட போதும்,
    மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்,
    தன் நிறத்து உருவ, வாளி தடுப்பு இல சார்ந்த போதும்,
    இன்னது என்று அறியான், அன்னான், இனையது ஓர் மாற்றம் சொன்னான். 119

  492. அந் நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்; அன்றேல்
    பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
    மன்னர், நம் பதியின் வந்து, வரி சிலை பிடித்த கல்வி
    இந் நரன் தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்? என்றான். 120

  493. இந்திரசித்தன் தேர் அழிதல்

  494. வாயிடை நெருப்புக் கால, உடல் நெடுங் குருதி வார
    தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான்,-உயிர் தீர்ந்தாலும்,
    ஓய்விடம் இல்லான்-வல்லை, ஓர் இமை ஒடுங்காமுன்னம்,
    ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான். 121

  495. ஆசை எங்கணும் அம்பு உக, வெம்பு போர்
    ஓசை விம்ம, உருத்திரரும் உடல்
    கூச, ஆயிர கோடி கொலைக் கணை
    வீசி, விண்ணை வெளி இலது ஆக்கினான். 122

  496. அத் திறத்தினில், அனகனும், ஆயிரம்
    பத்தி பத்தியின் எய்குவ பல் கணை
    சித்திரத்தினில் சிந்தி, இராவணன்
    புத்திரற்கும், ஓர் ஆயிரம் போக்கினான். 123

  497. ஆயிரம் கணை பாய்தலும், ஆற்ற அருங்
    காய் எரித்தலை நெய் எனக் காந்தினான்;
    தீயவன் பெருஞ் சேவகன் சென்னிமேல்
    தூய வெங் கணை நூறு உடன் தூண்டினான். 124

  498. நெற்றிமேல் ஒரு நூறு நெடுங் கணை
    உற்ற போதினும், யாதும் ஒன்று உற்றிலன்,
    மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
    முற்ற, வெங் கணை நூறு முடுக்கினான். 125

  499. நூறு வெங் கணை மார்பின் நுழைதலின்,
    ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர,
    தேறல் ஆம் துணையும், சிலை ஊன்றியே
    ஆறி நின்றனன்-ஆற்றலில் தோற்றிலான். 126

  500. புதையும் நல் மணி, பொன் உருள், அச்சொடும்
    சிதைய, ஆயிரம் பாய் பரி சிந்திட-
    வதையின் மற்றொரு கூற்று என மாருதி-
    உதையினால் அவன் தேரை உருட்டினான். 127

  501. பேய் ஓர் ஆயிரம் பூண்டது, பெய்ம் மணி
    ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான்;
    தூயவன் சுடர்த் தோள் இணைமேல் சுடர்த்
    தீய வெங் கணை ஐம்பது சிந்தினான். 128

  502. ஏறி ஏறி இழிந்தது அல்லால், இகல்
    வேறு செய்திலன், வெய்யவன்; வீரனும்,
    ஆறு கோடி பகழியின் ஐ-இரு
    நூறு தேர் ஒரு நாழிகை நூறினான். 129

  503. ஆசி கூறினர்; ஆர்த்தனர்; ஆய் மலர்
    வீசி வீசி, வணங்கினர்;-விண்னவர்-
    ஊசல் நீங்கினர்; உத்தரிகத்தொடு
    தூசு வீசினர்;-நல் நெறி துன்னினார். 130

  504. அக் கணத்தின், ஓர் ஆயிரம் ஆயிரம்
    மிக்க வெங் கண் அரக்கர், அவ் வீரனோடு
    ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார்,
    புக்கு முந்தினர், போரிடைப் பொன்றுவான். 131

  505. தேரர், தேரின் இவுளியர், செம் முகக்
    காரர்,-காரின் இடிப்பினர், கண்டையின்
    தாரர், தாரணியும் விசும்பும் தவழ்
    பேரர், பேரி முழக்கு அன்ன பேச்சினார். 132

  506. பார்த்த பார்த்த திசைதொறும், பல் மழை
    போர்த்த வானம் என இடி போர்த்து எழ,
    ஆர்த்த ஓதையும், அம்பொடு வெம் படை
    தூர்த்த ஓதையும், விண்ணினைத் தூர்த்தவால். 133

  507. ஆளி ஆர்த்தன; வாள் அரி ஆர்த்தன;
    கூளி ஆர்த்தன; குஞ்சரம் ஆர்த்தன;
    வாளி ஆர்த்தன; தேர், இவர் மண்தலம்
    தூளி ஆர்த்திலதால், பிணம் துன்னலால். 134

  508. வந்து அணைந்தது ஓர், வாள் அரி வாவு தேர்,
    இந்திரன் தனை வென்றவன் ஏறினான்;
    சிந்தினன் சர மாரி, திசை திசை;
    அந்திவண்ணனும் அம்பின் அகற்றினான். 135

  509. சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர்
    எற்றுகின்றன, எய்த, எறிந்தன,
    அற்று உதிர்ந்தன; ஆயிரம் வன் தலை,
    ஒற்றை வெங் கணையொடும் உருண்டவால். 136

  510. குடர் கிடந்தன, பாம்பு என; கோள் மதத்
    திடர் கிடந்தன; சிந்தின, தேர்த் திரள்
    படர் கிடந்தன, பல் படைக் கையினர்-
    கடர் கிடந்தன போன்ற களத்தினே. 137

  511. குண்டலங்களும், ஆரமும், கோவையும்,
    கண்டநாணும், கழலும், கவசமும்,
    சண்ட மாருதம் வீச, தலத்து உகும்
    விண் தலத்தினின் மீன் என, வீழ்ந்தவால். 138

  512. அரக்கன் மைந்தனை, ஆரியன் அம்பினால்,
    கரக்க நூறி, எதிர் பொரு கண்டகர்
    சிரக் கொடுங் குவைக் குன்று திரட்டினான்-
    இரக்கம் எய்தி, வெங் காலனும் எஞ்சவே. 139

  513. சுற்றும் வால்கொடு; தூவும்; துவைக்கும்; விட்டு
    எற்றும்; வானின் எடுத்து எறியும்; எதிர்
    உற்று மோதும்; உதைக்கும்; உறுக்குமால்-
    கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே. 140

  514. பார்க்கும் அஞ்ச; உறுக்கும்; பகட்டினால்
    தூர்க்கும், வேலையை; தோள் புடை கொட்டி நின்று
    ஆர்க்கும்; ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
    ஈர்க்கும்-ஐயன் அன்று ஏறிய யானையே. 141

  515. மாவும் யானையும் வாளுடைத் தானையும்,
    பூவும் நீரும் புனை தளிரும் என,
    தூவும்; அள்ளிப் பிசையும்; துகைக்குமால்-
    சேவகன் தெரிந்து ஏறிய சீயமே. 142

  516. உரகம் பூண்ட உருளை பொருந்தின
    இரதம் ஆயிரம், ஏ எனும் மாத்திரை,
    சரதம் ஆகத் தரைப் படச் சாடுமால்-
    வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே. 143

  517. அவ் இடத்தினில், ஆய் மருந்தால், அழல்
    வெவ் விடத்தினை உண்டவர் மீண்டென,
    எவ் இடத்தினும் வீழ்ந்த இனத்தலைத்
    தெவ் அடங்கும் அவ் வலியவர் தேறினார். 144

  518. தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்;
    ஊறினார் வந்து, இளவலை ஒன்றினார்;
    மாறு மாறு, மலையும் மரங்களும்
    நூறும் ஆயிரமும் கொடு நூறினார். 145

  519. விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம்
    புகட, உற்ற பொறுத்தன, போவன,
    துகள் தவத் தொழில் செய் துறைக் கம்மியர்
    சகடம் ஒத்தன, தார் அணி தேர் எலாம். 146

  520. வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்,
    காலின் வந்த அரக்கனை; கா; இது
    போலும் உன் உயிர் உண்பது, புக்கு எனா,
    மேல் நிமிர்ந்து, நெருப்பு உக வீசினான். 147

  521. ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
    சீர் அழித்தவன் ஆம் என, தேவர்கள்
    ஊர் அழித்த உயர் வலித் தோளவன்
    தேர் அழித்து, ஓர் இமைப்பிடைச் சென்றதால். 148

  522. அந்த வேலையின், ஆர்த்து எழுந்து ஆடினார்,
    சிந்தை சால உவந்தனர், தேவர்கள்-
    தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
    எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால். 149

  523. அழிந்த தேரின்நின்று, அந்தரத்து, அக் கணத்து,
    எழுந்து, மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்,-
    கழிந்து போகலை, நில்! என, கைக் கணை
    பொழிந்து சென்றனன்-தீ எனப் பொங்கினான். 150

  524. இந்திரன் மகன் மைந்தனை, இன் உயிர்
    தந்து போக! எனச் சாற்றலுற்றான் தனை,
    வந்து, மற்றைய வானர வீரரும்,
    முந்து போர்க்கு முறை முறை முற்றினார். 151

  525. மரமும், குன்றும், மடிந்த அரக்கர்தம்
    சிரமும், தேரும், புரவியும், திண் கரிக்
    கரமும், ஆளியும் வாரிக் கடியவன்
    சரமும் தாழ்தர, வீசினர், தாங்கினார். 152

  526. அனைய காலையில், ஆயிரம் ஆயிரம்
    வினைய வெங் கண் அரக்கரை, விண்ணவர்
    நினையும் மாத்திரத்து, ஆர் உயிர் நீக்கினான் -
    மனையும், வாழ்வும், உறக்கமும் மாற்றினான். 153

  527. ஆனையும், தடந் தேரும், தன் ஆர் உயிர்த்
    தானையும், பரியும், படும் தன்மையை
    மான வெங் கண் அரக்கன் மனக் கொளா,
    போன வென்றியன், தீ எனப் பொங்கினான். 154

  528. சீர்த் தடம் பெருஞ் சில்லி அம் தேரினைக்
    காத்து நின்ற இருவரைக் கண்டனன்-
    ஆர்த்த தம் பெருஞ் சேனை கொண்டு, அண்டமேல்
    ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால். 155

  529. நேர் செலாது, இடை நின்றனர்-நீள் நெடுங்
    கார் செலா; இருள் கீறிய கண் அகல்
    தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்
    பேர் செலாது;-பினத்தின் பிறக்கமே. 156

  530. அன்று தன் அயல் நின்ற அரக்கரை
    ஒன்று வாள் முகம் நோக்கி, ஒரு விலான்
    நன்று நம் படை நாற்பது வெள்ளமும்
    கொன்று நின்றபடி! எனக் கூறினான். 157

  531. ஆய வீரரும், ஐய! அமர்த்தலை,
    நீயும், நாற்பது வெள்ள நெடும் படை
    மாய, வெங் கணை மாரி வழங்கினை;
    ஓய்வு இல் வெஞ் செரு ஒக்கும் என்று ஓதினார். 158

  532. வந்து நேர்ந்தனர்; மாருதிமேல் வரும்
    அந்திவண்ணனும், ஆயிரம் ஆயிரம்
    சிந்தினான், கணை; தேவரை வென்றவன்
    நுந்த நுந்த, முறை முறை நூறினான். 159

  533. ஆறும், ஏழும், அறுபதும் ஐம்பதும்,
    நூறும், ஆயிரமும், கணை நூக்கி, வந்து
    ஊறினாரை உணர்வு தொலைத்து, உயிர்
    தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான். 160

  534. கதிரின் மைந்தன் முதலினர், காவலார்,
    உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்,
    எதிரில் நின்ற இராவணி ஈடுற,
    வெதிரின் காட்டு எரிபோல், சரம் வீசினான். 161

  535. உளைவு தோன்ற, இராவணி ஒல்கினான்;
    கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்,
    அளவு இல் சேனை அவிதர, ஆரியற்கு
    இளைய வீரன் சுடு சரம் ஏவினான். 162

  536. தெரி கணை மாரி பெய்ய, தேர்களும், சிலைக் கைம்மாவும்,
    பரிகளும், தாமும், அன்று பட்டன கிடக்கக் கண்டார்,
    இருவரும் நின்றார்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
    ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார். 163

  537. ஓடினர் அரக்கர், தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர்,
    தேடின, தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி,
    பாடு உறு புண்கள் தோறும் பசும் புனல் பாயப் பாய,
    வீடினர் சிலவர்; சில்லோர், பெற்றிலர்; விளிந்து வீழ்ந்தார். 164

  538. வெங் கணை திறந்த மெய்யர், விளிந்திலர், விரைந்து சென்றார்,
    செங் குழல் கற்றை சோரத் தெரிவையர் ஆற்ற, தெய்வப்
    பொங்கு பூம் பள்ளி புக்கார், அவர் உடல் பொருந்தப் புல்லி,
    அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார். 165

  539. பொறிக் கொடும் பகழி மார்பர், போயினர், இடங்கள் புக்கார்,
    மறிக் கொளும் சிறுவர் தம்மை, மற்று உள சுற்றம் தம்மைக்
    குறிக்கொளும் என்று கூறி, அவர் முகம் குழைய நோக்கி,
    நெறிக் கொளும் கூற்றை நோக்கி, ஆர் உயிர் நெடிது நீத்தார். 166

  540. தாமரைக் கண்ணன் தம்பி தன்மை ஈதுஆகின், மெய்யே
    வேம், அரைக் கணத்தின் இவ் ஊர்; இராவணி விளிதல் முன்னம்,
    மா மரக் கானில், குன்றில், மறைந்திரும்; மறைய வல்லே
    போம் எனத் தமரைச் சொல்லி, சிலர் உடல் துறந்து போனார். 167

  541. வரை உண்ட மதுகை மேனி மருமத்து, வள்ளல் வாளி
    இரை உண்டு துயில், சென்றார், வாங்கிடின், இறப்பம் என்பார்,
    பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற, பிறர் முன் சொல்லா
    உரையுண்ட நல்லோர் என்ன, உயிர்த்து உயிர்த்து, உழைப்பதானார். 168

  542. தேரிடைச் செல்லார், மானப் புரவியில் செல்லார், செங் கண்
    காரிடைச் செல்லார், காலின் கால் எனச் செல்லார், காவல்
    ஊரிடைச் செல்லார், நாணால் உயிரின்மேல் உடைய அன்பால்
    போரிடைச் செல்லார், நின்று நடுங்கினர், புறத்தும் போகார். 169

  543. இந்திரசித்தின் கவசத்தை இலக்குவன் பிளத்தல்

  544. நொய்தினின் சென்று கூடி, இராவணி உளைவை நோக்கி,
    வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி,-
    பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன்-பிணங்கு கூற்றின்
    கையினின் பெரிய அம்பால், கவசத்தைக் கழித்து வீழ்த்தான். 170

  545. கவசத்தைக் கழித்து வீழ்ப்ப, காப்புறு கடன் இன்று ஆகி,
    அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்
    துவசத்தின் புரவித் திண் தேர் கடிதுறத் தூண்டி, யாம் இத்,
    திவசத்தின் முடித்தும், வெம் போர் எனச் சினம் திருகிச் சென்றார். 171

  546. மாருதிமேலும், ஐயன் மார்பினும் தோளின்மேலும்,
    தேரினும் இருவர் சென்றார், செந் தழல் பகழி சிந்தி,
    ஆரியன், வாகை வில்லும், அச்சுடைத் தேரும், அத் தேர்
    ஊர்குவார் உயிரும், கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான். 172

  547. இருவரும் இழந்த வில்லார், எழு முனை வயிரத் தண்டார்,
    உரும் எனக் கடிதின் ஓடி, அனுமனை இமைப்பின் உற்றார்,
    பொரு கனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர்; புடைத்தலோடும்,
    பரு வலிக் கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக் கொண்டான். 173

  548. புகை நிறக்கண்ணனும் மாபக்கனும் ஓடி ஒளிதல்

  549. தண்டு அவன் கையது ஆன தன்மையைத் தறுகணாளர்,
    கண்டனர்; கண்டு, செய்யலாவது ஒன்றானும் காணார்;
    கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும் என்று, அச்சம் கொண்டார்,
    உண்ட செஞ்சோறும் நோக்கார், உயிருக்கே உதவி செய்தார். 174

  550. இந்திரசித்து வானரப்படையை அழித்தல்

  551. காற்று வந்து அசைத்தலாலும், காலம் அல்லாமையாலும்
    கூற்று வந்து உயிரைக் கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும்,
    தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும், நோவும் தீர்ந்தார்,
    ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர்-வீரர் எல்லாம். 175

  552. அங்கதன், குமுதன், நீலன், சாம்பவன், அருக்கன் மைந்தன்
    பங்கம் இல் மயிந்தன், தம்பி, சதவலி, பனசன் முன்னாச்
    சிங்க ஏறு அனைய வீரர் யாவரும், சிகரம் ஏந்தி,
    மங்கலம் வானோர் சொல்ல, மழை என ஆர்த்து, வந்தார். 176

  553. அத்தனையோரும், குன்றம் அளப்பு இல, அசனி ஏற்றோடு
    ஒத்தன, நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
    இத்தனை போலும் செய்யும் இகல் எனா, முறுவல் எய்தி,
    சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான். 177

  554. கதிரவன் மறைதல்

  555. மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி, வந்து
    நெருங்கினார்; நெருங்கக் கண்டும்; ஒரு தனி நெஞ்சும், வில்லும்,
    சரங்களும், துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
    இரங்கினன் என்ன, மேல்பால் குன்று புக்கு, இரவி நின்றான். 178

  556. வாழிய வேதம் நான்கும், மனு முதல் வந்த நூலும்,
    வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் அஃதே,
    ஆழி அம் கமலக் கையான் ஆதி அம் பரமன் என்னா
    ஏழையர் உள்ளம் என்ன இருண்டன-திசைகள் எல்லாம். 179

  557. இலக்குவன் இந்திரசித்தைக் கொல்ல முயல்தல்

  558. நாகமே அனைய நம்ப! நாழிகை ஒன்று நான்கு
    பாகமே காலம் ஆகப் படுத்தியேல், பட்டான்; அன்றேல்,
    வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது, விசும்பின் வஞ்சன்
    ஏகுமேல், வெல்வன் என்பது, இராவணற்கு இளவல் சொன்னான். 180

  559. அத்தனை வீரர் மேலும், ஆண் தகை அனுமன் மேலும்,
    எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
    வித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி, வீரன்
    சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்ந்தான். 181

  560. அழித்த தேர் அழுந்தாமுன்னம், அம்பொடு கிடந்து வெம்பி,
    உழைத்து உயிர் விடுவது அல்லால், உறு செரு வென்றேம் என்று
    பிழைத்து இவர் போவர் அல்லர்; பாசத்தால் பிணிப்பன் என்னா,
    விழித்து இமையாத முன்னம், வில்லொடும் விசும்பில் சென்றான். 182

  561. பொன் குலாம் மேனி மைந்தன் தன்னொடும் புகழ்தற்கு ஒத்த,
    வன் கலாம் இயற்றி நின்றான், மற்றொரு மனத்தன் ஆகி,
    மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
    என்கொலாம்! என்ன அஞ்சி, வானவர் இரியல்போனார். 183

  562. தாங்கு வில் கரத்தன், தூணி தழுவிய புறத்தன், தன்னுள்
    ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன், உயிர்ப்பன், தீயன்,
    தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன், மாயச் செல்வன்,
    வீங்கு இருட் பிழம்பின், உம்பர் மேகத்தின் மீதின் ஆனான். 184

  563. தணிவு அறப் பண்டு செய்த தவத்தினும், தருமத்தாலும்
    பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,-
    மணி நிறத்து அரக்கன்-செய்த மாய மந்திரத்தினானும்,
    அணு எனச் சிறியது, ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான். 185

  564. வாங்கினான்-மலரின் மேலான், வானக மணி நீர்க் கங்கை
    தாங்கினான், உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்
    வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத
    ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி. 186

  565. ஆயின காலத்து, ஆர்த்தார், அமர்த்தொழில் அஞ்சி, அப்பால்
    போயினன் என்பது உன்னி, வானர வீரர் போல்வார்;
    நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து, நக்கான்;
    மாயையைத் தெரிய உன்னார், போர்த் தொழில் மாற்றி நின்றார். 187

  566. அது கணத்து, அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து, வெய்ய
    கது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி,
    முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி,
    விதுவிதுப்பு ஆற்றலுற்றான், விளைகின்றது உணர்ந்திலாதான். 188

  567. இலக்குவன் முதலியோரை நாகபாசம் பிணித்தல்

  568. விட்டனன் அரக்கன் வெய்ய படையினை; விடுத்தலோடும்,
    எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரியஓடி,
    கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு இளைய காளை
    வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி. 189

  569. இறுகுறப் பிணித்தலோடும், யாவையும் எதிர்ந்த போதும்
    மறுகுறக் கடவான் அல்லன்; மாயம் என்று உணர்வான் அல்லன்;
    உறு குறைத் துன்பம் இல்லான்; ஒடுங்கினன்; செய்வது ஓரான்,
    அறு குறைக் களத்தை நோக்கி, அந்தரம் அதனை நோக்கும். 190

  570. மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
    சுற்றின; வயிரத் தூணின், மலையினின், பெரிய தோள்கள்,
    இற்றன, இற்ற என்ன, இறுக்கின; இளகா உள்ளம்
    தெற்றென உடைய வீரர் இருந்தனர், செய்வது ஓரார். 191

  571. காலுடைச் சிறுவன், மாயக் கள்வனைக் கணத்தின் காலை
    மேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென் என்று உறுக்கும்வேலை,
    ஏல்புடைப் பாசம், மேல் நாள், இராவணன் புயத்தை வாலி
    வால் பிணித்தென்ன, சுற்றிப் பிணித்தது, வயிரத் தோளை. 192

  572. நாக பாசத்தால் கட்டுண்டவர் நிலை

  573. மலை என எழுவர்; வீழ்வர்; மண்ணிடைப் புரள்வர்; வானில்
    தலைகளை எடுத்து நோக்கி, தழல் எழ விழிப்பர்; தாவி
    அலைகிளர் வாலால் பாரின் அடிப்பர்; வாய் மடிப்பர்; ஆண்மைச்
    சிலையவற்கு இளைய கோவை நோக்குவர்; உள்ளம் தீவர்; 193

  574. வீடணன் முகத்தை நோக்கி, வினை உண்டே, இதனுக்கு? என்பர்;
    மூடின கங்குல் மாலை இருளினை முனிவர்; மொய்ம்பின்
    ஈடுறத் தக்க போலாம் நம் எதிர் என்னா, ஏந்தல்
    ஆடகத் தோளை நோக்கி, நகை செய்வர்; விழுவர்; அஞ்சார். 194

  575. ஆர், இது தீர்க்க வல்லார்? அஞ்சனை பயந்த வள்ளல்,
    மாருதி, பிழைத்தான் கொல்லோ? என்றனர், மறுகி, நோக்கி,
    வீரனைக் கண்டு, பட்டது இதுகொலாம்! என்று விம்மி,
    வார் கழல் தம்பி தன்மை காணுமோ, வள்ளல்? என்பார். 195

  576. என், சென்ற தன்மை சொல்லி? எறுழ் வலி அரக்கன் எய்தான்
    மின் சென்றது அன்ன; வானத்து உரும் இனம் வீழ்வ என்ன,
    பொன் சென்ற வடிம்பின் வாளி, புகையொடு பொறியும் சிந்தி,
    முன் சென்ற முதுகில் பாய, பின் சென்ற மார்பம் உற்ற. 196

  577. மலைத்தலைக் கால மாரி, மறித்து எறி வாடை மோத,
    தலைத் தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும்;
    கொலைத்தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்
    நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார்; நிமிர்ந்தது, குருதி நீத்தம். 197

  578. ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
    போயின போதும், ஒன்றும் துடித்திலன், பொடித்து, மானத்
    தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம், தெய்வ
    நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட, நடுங்குகின்றான். 198

  579. வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர், உருமின் வெய்ய
    நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய, சோரி
    ஆறு போல் ஒழுக, அண்ணல் அங்கதன் அனந்த வாளி
    ஏறிய மெய்யனேனும், இருந்தனன், இடைந்திலாதான். 199

  580. கதிரவன் காதல் மைந்தன், கழல் இளம் பசுங் காய் அன்ன,
    எதிர் எதிர் பகழி தைத்த, யாக்கையன்; எரியும் கண்ணன்;
    வெதிர் நெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன்; மெய்யன்;
    உதிர வெங் கடலுள், தாதை உதிக்கின்றான் தனையும் ஒத்தான். 200

  581. வெப்பு ஆரும் பாசம் வீக்கி, வெங் கணை துளைக்கும் மெய்யன்-
    ஒப்பு ஆரும் இல்லான் தம்பி-உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்,
    இப் பாசம் மாய்க்கும் மாயம், யான் வல்லென் என்பது ஓர்ந்தும்,
    அப் பாசம் வீச ஆற்றாது, அழிந்த நல் அறிவு போன்றான். 201

  582. அம்பு எலாம் கதிர்கள் ஆக, அழிந்து அழிந்து இழியும் ஆகச்
    செம் புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய, சீறிப்
    பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும்,
    உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான். 202

  583. இந்திரசித்து இராவணன் அரண்மனை அடைதல்

  584. மயங்கினான் வள்ளல் தம்பி; மற்றையோர் முற்றும் மண்ணை
    முயங்கினார்; மேனி எல்லாம் மூடினான், அரக்கன் மூரித்
    தயங்கு பேர் ஆற்றலானும், தன் உடல் தைத்த வாளிக்கு
    உயங்கினான், உளைந்தான், வாயால் உதிர நீர் உமிழாநின்றான். 203

  585. சொற்றது முடித்தேன்; நாளை, என் உடற் சோர்வை நீக்கி,
    மற்றது முடிப்பென் என்னா, எண்ணினான், மனிசன் வாழ்க்கை
    இற்றது; குரங்கின் தானை இறந்தது என்று, இரண்டு பாலும்
    கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப, இராவணன் கோயில் புக்கான். 204

  586. ஈர்க்கு அடைப் பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற
    நீர்க் கடை மேகம் தன்னை நீங்கியும், செருவின் நீங்கான்,
    வார்க் கடை மதுகைக் கொங்கை, மணிக் குறு முறுவல், மாதர்
    போர்க் கடைக் கருங் கண் வாளி புயத்தொடு பொழியப் புக்கான். 205

  587. ஐ-இரு கோடி செம் பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி,
    மை அறு வான நாட்டு மாதரும், மற்றை நாட்டுப்
    பை அரவு அல்குலாரும், பலாண்டு இசை பரவ, தங்கள்
    தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ, சார்ந்தான். 206

  588. தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
    சிந்தையின் உணரக் கூறி, தீருதி, இடர் நீ; எந்தாய்!
    நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, மேல் நுவல்வென் என்னா,
    புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் கோயில் புக்கான். 207

  589. இலக்குவன் முதலானோர் நிலை கண்டு வீடணன் புலம்பல்

  590. இத் தலை, இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான்,
    மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன், மயங்குகின்றான்,
    அத் தலைக் கொடியன் என்னை அட்டிலன்; அளியத்தேன் நான்;
    செத்திலென்; வலியென் நின்றேன் என்று போய், வையம் சேர்ந்தான். 208

  591. பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியைக் கண்டு
    நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்; யான் ஒரு தமியென் நின்றேன்;
    தேசத்தார், என்னை என் என் சிந்திப்பார்! என்று, தீயும்
    வாசத் தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான். 209

  592. கொல்வித்தான், உடனே நின்று அங்கு என்பரோ? கொண்டு போனான்
    வெல்வித்தான், மகனை என்று பகர்வரோ? விளைவிற்கு எல்லாம்
    நல் வித்தாய் நடந்தான், முன்னே என்பரோ? நயந்தோர் தம் தம்
    கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரைக் கண்போல். 210

  593. போர் அவன் புரிந்த போதே, பொரு அரு வயிரத் தண்டால்,
    தேரொடும் புரண்டு வீழச் சிந்தி, என் சிந்தை செப்பும்
    வீரம் முன் தெரிந்தேன் அல்லேன்; விளிந்திலேன்; மெலிந்தேன்; இஞ்ஞான்று
    ஆர் உறவு ஆகத் தக்கேன்? அளியத்தேன், அழுந்துகின்றேன்! 211

  594. ஒத்து அலைத்து, ஒக்க வீடி, உய்வினும் உய்வித்து, உள்ளம்
    கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன்; கழிந்தும் இல்லேன்;
    அத் தலைக்கு அல்லேன்; யான், ஈண்டு, அபயம்! என்று அடைந்து நின்ற
    இத் தலைக்கு அல்லேன்; அல்லேன்! இரு தலைச் சூலம் போல்வேன்! 212

  595. நிகழ்ந்தவை அறிந்து இராமன் வருந்துதல்

  596. அனையன பலவும் பன்னி, ஆகுலித்து அரற்றுவானை
    வினை உள பலவும் செய்யத்தக்கன;-வீர!-நீயும்
    நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ? நீத்தி! என்னா,
    இனையன சொல்லித் தேற்றி, அனலன் மற்று இனைய செய்தான்; 213

  597. நீ இவண் இருத்தி; யான் போய் நெடியவற்கு உரைபென் என்னா,
    போயினன், அனலன்; போய், அப் புண்ணியவன் பொலன் கொள் பாதம்
    மேயினன் வணங்கி, உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்;
    ஆயிரம் பெயரினானும், அருந் துயர்க் கடலுள் ஆழ்ந்தான். 214

  598. உரைத்திலன் ஒன்றும்; தன்னை உணர்ந்திலன்; உயிரும் ஓடக்
    கரைத்திலன் கண்ணின் நீரை; கண்டிலன் யாதும் கண்ணால்;
    அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால்; பொங்கிப் பொங்கி
    இரைத்திலன்; உளன் என்று எண்ண இருந்தனன், விம்மி ஏங்கி 215

  599. விம்மினன், வெதும்பி வெய்துற்று ஏங்கினன், இருந்த வீரன்,
    இம் முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி,
    பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின் போனான்,
    தெவ் முறை துறந்து, வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான். 216

  600. இராமன் போர்க்களம் காணல்

  601. இழிந்து எழும் காளமேகம், எறி கடல், அனைய மற்றும்
    ஒழிந்தன, நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்கப்
    பிழிந்து அது காலம் ஆகக் காளிமைப் பிழம்பு போதப்
    பொழிந்தது போன்றது அன்றே-பொங்கு இருட் கங்குற் போர்வை. 217

  602. ஆர் இருள் அன்னது ஆக, ஆயிர நாமத்து அண்ணல்,
    சீரிய அனலித் தெய்வப் படைக்கலம் தெரிந்து வாங்கி,
    பாரிய விடுத்தலோடு, பகை இருள் இரிந்து பாற,
    சூரியன் உச்சி உற்றாலொத்தது, அவ் உலகின் சூழல். 218

  603. படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி, பல்வேறு
    இடை உறு குருதி வெள்ளத்து, எறி கடல் எழு நீர் பொங்கி,
    உடை, உறு தலைக் கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும்
    கடை உறு காலத்து, ஆழி உலகு அன்ன, களத்தைக் கண்டான். 219

  604. இலக்குவனைக் கண்ட இராமனின் துயரம்

  605. பிணப் பெருங் குன்றினூடும், குருதி நீர்ப் பெருக்கினூடும்,
    நிணப் பெருஞ் சேற்றினூடும், படைக்கல நெருக்கினூடும்,
    மணப் பெருங் களத்தில், மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்,
    கணத்தினும் பாதிப் போதில், தம்பியைச் சென்று கண்டான். 220

  606. அய் அவன் ஆக்கைதன் மேல் விழுந்து மார்பு அழுந்தப் புல்லி,
    உய்யலன் என்ன, ஆவி உயிர்த்து உயிர்த்து, உருகுகின்றான்;
    பெய் இரு தாரைக் கண்ணீர்ப் பெருந் துளி பிறங்க, வானின்
    வெய்யவன் தன்னைச் சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான். 221

  607. உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும்; போய் உணர்வு சோரும்;
    இழைக்குவது அறிதல் தேற்றான்; இலக்குவா! இலக்குவா! என்று
    அழைக்கும்; தன் கையை வாயின், மூக்கின் வைத்து, அயர்க்கும்; ஐயா!
    பிழைத்தியோ! என்னும்-மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான். 222

  608. தாமரைக் கையால் தாளைத் தைவரும்; குறங்கைத் தட்டும்;
    தூ மலர்க் கண்ணை நோக்கும்; மார்பிடைத் துடிப்பு உண்டு என்னா,
    ஏமுறும்; விசும்பை நோக்கும்; எடுக்கும்; தன் மார்பின் எற்றும்;
    பூமியில் வளர்த்தும்; கள்வன் போய் அகன்றானோ? என்னும். 223

  609. வில்லினை நோக்கும்; பாச வீக்கினை நோக்கும்; வீயா
    அல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; பாரைக்
    கல்லுவென், வேரோடு என்னும்; பவள வாய் கறிக்கும்; கற்றோர்
    சொல்லினை நோக்கும்; தன் போல் புகழினை நோக்கும்-தோளான். 224

  610. வீரரை எல்லாம் நோக்கும்; விதியினைப் பார்க்கும்; வீரப்
    பார வெஞ் சிலையை நோக்கும்; பகழியை நோக்கும்; பாரில்
    யார் இது பட்டார்; என்போல் எளி வந்த வண்ணம்? என்னும்;
    நேரிது, பெரிது என்று ஓதும்-அளவையின் நிமிர நின்றான். 225

  611. இராமன் வீடணனை நோதல்

  612. எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு
    அடுத்தது என்று, என்னை வல்லை அழைத்திலை, அரவின் பாசம்
    தொடுத்த கை தலையினோடும் துணித்து, உயிர் குடிக்க; என்னைக்
    கெடுத்தனை; வீடணா! நீ என்றனன்-கேடு இலாதான். 226

  613. வீடணன் நிகழ்ந்தது கூறல்

  614. அவ் உரை அருளக் கேட்டான், அழுகின்ற அரக்கன் தம்பி,
    இவ் வழி, அவன் வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்தபோதும்,
    வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன்.
    தெய்வ வன் பாசம் செய்த செயல், இந்த மாயச் செய்கை. 227

  615. அற்று அதிகாயன் ஆக்கை, தலை இலது ஆக்கி, ஆண்ட
    வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன், இலங்கை மேல்நாள்
    பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி; பிற்போது
    உற்றனன், மைந்தன், தானை நாற்பது வெள்ளத்தோடும், 228

  616. ஈண்டு, நம் சேனை வெள்ளம் இருபதிற்று-இரட்டி மாள,
    தூண்டினன், பகழி மாரி; தலைவர்கள் தொலைந்து சோர,
    மூண்டு எழு போரில், பாரில் முறை முறை முடித்தான்; பின்னர்
    ஆண்தகையோடும் ஏற்றான், ஆயிரம் மடங்கல்-தேரான். 229

  617. அனுமன்மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய,
    தனு வலம் காட்டி, பின்னை, நாற்பது வெள்ளத் தானை
    பனி எனப்படுவித்து, அன்னான் பலத்தையும் தொலைத்து, பட்டான்
    இனி என, வயிர வாளி, எண் இல, நிறத்தின் எய்தான். 230

  618. ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்,
    தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;
    போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம் என்று,
    பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென்; பரிதி பட்டான். 231

  619. மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம்; வஞ்சன், வானில்
    போய், அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து, பொய்யின்
    ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான், அம்பின் வெம்பும்
    காயத்தான் என்னச் சொல்லி, வணங்கினான், கலுழும் கண்ணான். 232

  620. வீடணன் யாரும் இறந்திலர் எனல்

  621. பின்னரும் எழுந்து, பேர்த்தும் வணங்கி, எம் பெரும! யாரும்
    இன் உயிர் துறந்தார் இல்லை; இறுக்கிய பாசம் இற்றால்
    புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்
    இன்னலுற்று அயரல்; வெல்லாது, அறத்தினைப் பாவம் என்றான். 233

  622. நாகபாச வரலாறு

  623. யார், இது கொடுத்த தேவன்? என்னை ஈது? இதனைத் தீர்க்கும்
    காரணம் யாது? நின்னால் உணர்ந்தது கழறிக் காண் என்று,
    ஆரியன் வினவ, அண்ணல் வீடணன், அமல! சாலச்
    சீரிது என்று, அதனை, உள்ள பரிசு எலாம், தெரியச் சொன்னான்: 234

  624. ஆழி அம் செல்வ! பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல்
    வேள்வியில் படைத்தது; ஈசன் வேண்டினன் பெற்று, வெற்றித்
    தாழ்வு உறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது; ஆணை!
    ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது; ஊற்றம் ஈதால்; 235

  625. அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
    பின் உற வயிரத் திண்தோள் பிணித்தது;-பெயர்த்து ஒன்று எண்ணி
    என், இனி?-அனுமன் தோளை இறுக்கியது; இதனால் ஆண்டும்
    பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவர் எல்லாம். 236

  626. தான் விடின் விடும், இது ஒன்றே; சதுமுகன் முதல்வர் ஆய
    வான் விடின், விடாது; மற்று, இம் மண்ணினை எண்ணி என்னே!
    ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி இல்லை;
    தேன் விடு துளவத் தாராய்! இது இதன் செய்கை என்றான். 237

  627. இராமன் சினமும் எண்ணமும்

  628. ஈந்துள தேவர்மேலே எழுகெனோ? உலகம் யாவும்
    தீந்து உக நூறி, யானும் தீர்கெனோ? இலங்கை சிந்தப்
    பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ? இயன்ற பண்போடு
    ஏய்ந்தது பகர்தி என்றான், இமையவர் இடுக்கண் தீர்ப்பான். 238

  629. வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து
    இரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை என்னின்
    உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பின் சுட்ட
    புரங்களின் தீய்த்து, காண்பென் பொடி, ஒரு கடிகைப் போழ்தின். 239

  630. எம்பியே இறக்கும் என்னில், எனக்கு இனி, இலங்கை வேந்தன்
    தம்பியே! புகழ்தான் என்னை? பழி என்னை? அறம்தான் என்னை?
    நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே,
    உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும், உதவி பார்த்தால்? 240

  631. என்று கொண்டு இயம்பி, ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய,
    வென்று, இவண் உலகை மாய்த்தல்விதி அன்றால் என்று விம்மி,
    நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்,-
    தன் துணைத் தம்பிதன்மேல், துணைவர்மேல், தாழ்ந்த அன்பான். 241

  632. மீட்டும் வந்து, இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்
    பூட்டுறு பாசம் தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி,
    வீட்டியது என்னின், பின்னை வீவென் என்று எண்ணும்-வேதத்
    தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானை அன்னான். 242

  633. கருடன் வருகை

  634. இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, இது போய்
    எத் தன்மை எய்தி முடியும்கொல்? என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,
    அத் தன்மை கண்டு, புடை நின்ற அண்ணல்-கலுழன் தன் அன்பின் மிகையால்,
    சித்தம் நடுங்கி இது தீர, மெள்ள, இருளூடு வந்து தெரிவான்,- 243

  635. அசையாத சிந்தை அரவால் அனுங்க, அழியாத உள்ளம் அழிவான்,-
    இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்,-
    விசையால் அனுங்க வட மேரு, வையம் ஒளியால் விளங்க, இமையாத்
    திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க, நிறை கால் வழங்கு சிறையான்,- 244

  636. காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ,
    கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு, கிளர்வான்,-
    சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம் இருள் சிந்த, வந்த சிறையான்,
    வேதங்கள் பாட; உலகங்கள் யாவும் வினை சிந்த; நாகம் மெலிய: 245

  637. அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி, அகல் ஆசை எங்கும் அழியா
    வில்லைச் செலுத்தி, நிலவைத் திரட்டி, விரிகின்ற சோதி மிளிர;
    எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி, இடை நின்ற மேரு எனும் அத்
    தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர; 246

  638. நன் பால் விளங்கு மணி கோடியோடு, நளிர்போது, செம் பொன், முதலாத்
    தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ;
    மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
    தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து, வருகின்ற செய்கை தெரிய; 247

  639. பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
    மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க; வெயில் கால்
    பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க; வன மாலை மார்பு புரள;
    தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல் திரு மேனி கண்டு, தொழுவான். 248

  640. முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன், முகில்மேல் நிமிர்ந்த ஒளியான்,
    அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்,
    கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்,
    படிமேல் எழுந்து வருவான், விரைந்து, பல கால் நினைந்து, பணிவான்,- 249

  641. கருடன் துதி

  642. வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும், மலர்மேல் அயன் தன் முதலோர்-
    தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்!
    சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ?
    எந்தாய்? வருந்தல்; உடையாய்! வருந்தல் என, இன்ன பன்னி மொழிவான்: 250

  643. தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்
    மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா!
    மேவாத இன்பம் அவை மேவி, மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய்!
    ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 251

  644. எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு இடை ஆகி; எங்கும் உளையாய்,
    வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை; அவரால் வரங்கள் பெறுவாய்;
    தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து, துயரால்
    அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 252

  645. உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
    முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
    என் ஒக்கும், இன்ன செயலோ இது? என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;
    அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 253

  646. வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி வழுவாமல் நிற்றி;-மறையோய்!
    பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று; பெறுவான் அருத்தி பிழையாய்;
    ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி; உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,
    ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 254

  647. தான் அந்தம் இல்லை; பல என்னும், ஒன்று; தனி என்னும், ஒன்று; தவிரா
    ஞானம் தொடர்ந்த சுடர் என்னும், ஒன்று; நயனம் தொடர்ந்த ஒளியால்,
    வானம் தொடர்ந்த பதம் என்னும், ஒன்று; மறைநாலும் அந்தம் அறியாது,
    ஆனந்தம் என்னும்; அயல் என்னும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 255

  648. மீளாத வேதம், முடிவின்கண், நின்னை மெய்யாக மெய்யின் நினையும்;
    கேளாத என்று, பிற என்று, சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான்,
    மாளாத நீதி இகழாமை நின்கண் அபிமானம் இல்லை, வறியோர்;
    ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 256

  649. சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
    வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
    கொல் என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
    அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 257

  650. மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி; மயல், ஆரும் யானும் அறியேம்;
    துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒரு தன்மை சொல்ல அரியாய்;
    பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி, பிறவாமல் நல்கு பெரியோய்!
    அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 258

  651. வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி; அவை எய்தி, என்றும் விளையா,
    நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி, மனமா;
    முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழு மூடர் என்னும் முதலோர்
    அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 259

  652. எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன பொருள் கண்டு இரங்குபவரும்,
    செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது, உன்னது இடையே;
    பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி; பிறியாது நிற்றி; பெரியோய்!
    அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 260

  653. பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த பொருள்தோறும் நிற்றி; பிரியாய்;
    தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறு அவை தேறும் என்று தெளியாய்;
    கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர் உரு ஆதி; கோடல் உரிபோல்,
    ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 261

  654. நாக பாசம் நீங்குதல்

  655. என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த எரி சோதி கீற, இருள் போய்,
    பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு, நின்ற புகழோன்
    நின்று உன்னி உன்னி, இவன் யாவன்? என்று நினைகின்ற எல்லை, நிமிரச்
    சென்று, உன்னும் முன்னர், உடன் ஆயினான், இவ் உலகு ஏழும் மூடு சிறையான். 262

  656. வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை?-மழை என்று
    ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்,
    தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல் அறிவாளர், என்று இம் முதலோர்
    பாசம் கலந்த பசிபோல், அகன்ற-பதகன் துரந்த உரகம். 263

  657. பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச, வந்து படர் கால்
    செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
    எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்
    வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன, மேனி வடுவும். 264

  658. அனைவரும் உயிர் பெற்று எழுதல்

  659. தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால்,
    உரும் ஒத்த வெங் கண், வினை தீய, வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை; உலகின்
    கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம், மலர்மேல் அவ் வள்ளல் கடை நாள்
    நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து நிலை நின்ற, தெய்வ நெறியால். 265

  660. இராமன் மகிழ்தல்

  661. இளையான் எழுந்து தொழுவானை, அன்பின், இணை ஆர மார்பின் அணையா,
    விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா,
    கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி கெழுவா, எழுந்து தழுவா,
    முளையாத திங்கள் உகிரான் முன் வந்து, முறை நின்ற வீரன் மொழிவான்: 266

  662. இராமன் கருடனிடம் பேசுதல்

  663. ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து, இங்கு
    எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
    கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
    செய் திறம் இலையால் என்றான்-தேவர்க்கும் தெரிக்க ஒணாதான். 267

  664. பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ, புந்தித்
    தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச் செல்வ!
    மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்
    அருளினை என்னின், எய்த அரியன உளவோ?-ஐய! 268

  665. கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன் ஒன்று எம்பால்
    கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது நின் கொள்கை;
    உண்டு, இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!
    பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி! என்றான். 269

  666. கருடன் விடை பெறல்

  667. பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், பழைய நின்னோடு
    உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம்
    மற வினை முடித்த பின்னர், வருவென் என்று உணர்த்தி, மாயப்
    பிறவியின் பகைஞ! நல்கு, விடை எனப் பெயர்ந்து போனான். 270

  668. இராமன் புகழ்ச்சியும் அனுமன் பேரொலியும்

  669. ஆரியன் அவனை நோக்கி, ஆர் உயிர் உதவி, யாதும்
    காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
    பேர் இயலாளர், செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்;
    மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்? என்றான். 271

  670. இறந்தனன், இளவல் என்னா, இறைவியும் இடுக்கண் எய்தும்;
    மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, மீளப்
    பிறந்தனர் என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே;
    அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான். 272

  671. அழகிது என்று அண்ணல் கூற, ஆர்த்தனர்-கடல்கள் அஞ்சிக்
    குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்
    எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
    மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ. 273

  672. இராவணன் ஆர்ப்பொலி கேட்டல்

  673. பழிப்பு அறு மேனியாள் பால் சிந்தனை படர, கண்கள்
    விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்
    குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
    கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான். 274

  674. தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி
    ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
    சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
    பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? 275

  675. சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், சீற்றச் சேனை
    பொங்கியது என்ன, மன்னன் பொருக்கென எழுந்து, போரில்
    மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது! என்னா,
    அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க நக்கான். 276

  676. இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போர் வில்;
    வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
    அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன் ஆர்ப்பு;
    பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி. 277

  677. அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
    வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,
    பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;
    சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க. 278

  678. இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல்

  679. என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,
    ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
    பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,
    தன் பெருங் கோயில் நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான். 279

  680. தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார், தாங்கி
    வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்
    தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி
    வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார். 280

  681. பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்
    கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
    மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
    வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க. 281

  682. மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,
    உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு இடையூறு என்னா,
    பிழையுடை விதியார் செய்த பெருங் குழல், கருங் கண், செவ் வாய்,
    இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால், இடங்கள்தோறும். 282

  683. தேனிடை, கரும்பில், பாலில், அமுதினில், கிளவி தேடி,
    மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,
    மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி,
    வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார். 283

  684. தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்,
    இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும்,
    மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர்
    அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார். 284

  685. இந்திரசித்தை இராவணன் காணல்

  686. அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்
    பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி பொங்கத்
    தரிக்கிலன், மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன,
    கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான். 285

  687. எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இரு கையும் அரிதின் ஏற்றித்
    தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன், தோன்றல்!
    அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது? என்று எடுத்துக் கேட்டான்;
    புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்: 286

  688. இந்திரசித்தின் மறுமொழி

  689. உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப்
    பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
    அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
    செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்? 287

  690. இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும்
    சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த போரில்,
    நொந்திலென்; இனையது ஒன்றும் நுவன்றிலென்; மனிதன் நோன்மை,
    மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ. 288

  691. இளையவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின்,
    தளை அவிழ் அலங்கல் மார்ப! நம் வயின் தங்கிற்று அன்றால்;
    விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல் விளையும் என்ன
    உளை; அது அன்று என்னச் சொன்னான், உற்றுளது உணர்ந்திலாதான். 289

  692. வென்றது, பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்;
    கொன்றது, குரக்கு வீரர்தம்மொடு அக் கொற்றத் தோனை;
    நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க, மேன்மேல்
    என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச் சொன்னான்: 290

  693. இராவணன் உரை

  694. வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
    பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த,
    கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த
    போர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்! என்றான். 291

  695. இந்திரசித்தின் வினா

  696. ஐய! வெம் பாசம் தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
    பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு பேர்ந்தார்;
    உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ? ஒழிக்க ஒன்றோ?
    செய்யும் என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா. 292

  697. களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல்

  698. ஈது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன
    தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,
    யாது அவண் நிகழ்ந்தது? என்ன இராவணன் இயம்ப, ஈறு இன்று,
    ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்: 293

  699. பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை,
    தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,
    ஏசத்தான் இரங்கி, ஏங்கி, உலகு எலாம் எரிப்பென் என்றான்;-
    வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்; 294

  700. அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம்
    சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்;
    முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி, மொய்த்தார்;
    இன்னது நிகழ்ந்தது என்றார், அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான்: 295

  701. இராவணன் கூற்று

  702. ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
    காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின், காண்மின்!
    வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த வாழ்க்கை!
    மூத்தது, கொள்கை போலாம்? என்னுடை முயற்சி எல்லாம்? 296

  703. உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
    கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம் கொண்டான்;
    மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும்,
    கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக் கண்ணால்? 297

  704. கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
    புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின் பொங்கி,
    உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்ற
    சரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி? 298

  705. இராவணன் இந்திரசித்தைப் போரிடக் கூறல்

  706. ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக! எஞ்சி
    மீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
    ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்;
    காண்டலும், நாணும் என்றான்; மைந்தனும் கருத்தைச் சொன்னான்: 299

  707. இந்திரசித்தின் மறுமொழி

  708. இன்று ஒரு பொழுது தாழ்த்து, என் இகல் பெருஞ் சிரமம் நீங்கி,
    சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வ
    வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென் என்றான்;
    நன்று என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில் புக்கான். 300

  709. மிகைப் பாடல்கள்

  710. எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
    எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
    உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன் ஆர்த்தான்;
    உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான். 106-1

  711. நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை அரக்கன் கோத்தான்;
    நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை நிமலன் மாய்த்தான்;
    முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்;
    முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான், மொய்ம்பன். 106-2

  712. சிந்து வாளி செறிதலும், சேவகன்
    ஐந்து நூறு கடுங் கணையால்; அவன்
    உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன்
    வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான். 128-1

  713. அழித்தனன் தடந் தேர் என்று அழன்று, தீ
    விழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத்
    தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள்
    கொழித்தனள்; இமையோர் மெய் குலுங்கினார். 148-1

  714. அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
    புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
    சிங்க ஏறு அனையான் திரள் தோள்வரை
    மங்க, வேறொர் மராமரம் வீசினான். 148-2

  715. மல் திண் தோளின் அடித்த மராமரம்
    இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
    பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலி
    முற்று நாளில் முயற்சி முரஞ்சவே. 148-3

  716. கண்ட வாலிதன் காதலனும், கனல்
    விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
    மண்டு தேர்மிசையில், குதியா வலி
    கொண்டு, வான் இடி ஏறு எனக் குத்தினான். 148-4

  717. குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
    பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
    தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
    வித்துராமுனம் வீழ்த்தினன், தேர் அரோ. 148-5

  718. மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
    ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
    ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
    ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான். 148-6

  719. கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
    காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
    தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
    மால் உழந்தவர் போல மயங்கினான். 148-7

  720. பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர் கால்
    செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
    எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே விளைக்கும் உரவோன்,
    வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி வடுவும். 264-1

  721. பறவை நாயகன் தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
    கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,
    இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
    மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ. 270-1

  722. இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர,
    பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக,
    கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ,
    அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன் ஆர்த்தவன். 273-1

  723. யுத்த காண்டம்

    20. படைத் தலைவர் வதைப் படலம்


    படைத்தலைவர் போரிட இராவணனிடம் இசைவு வேண்டல்

  724. ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும், முரசம் ஆர்ப்ப,
    போர்த் தொழில் வேட்கை பூண்டு, பொங்கினர், புகுந்து மொய்த்தார்;
    தார்த் தட மார்பன் தன்னை, தா, விடை என்னச் சார்ந்தார்;
    பார்த்தனன், அரக்கர் கோனும்; போம் எனப் பகரும்காலை. 1

  725. மாபெரும்பக்கனும் புகைக்கண்ணனும் விடை பெற்றபோது,
    தூதுவர் அவர்களது செய்கையை இராவணனுக்கு எடுத்துரைத்தல்

  726. மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து, இங்கு
    ஏவுதி எம்மை என்றான்; அவர் முகம் இனிதின் நோக்கி,
    போவது புரிதிர் என்னப் புகறலும், பொறாத தூதர்,
    தேவ! மற்று இவர்கள் செய்கை கேள்! எனத் தெரியச் சொன்னார்: 2

  727. ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித்
    தானைகள் வீய, நின்ற தலைமகன் தனிமை ஓரார்,
    மானவன் வாளி, வாளி! என்கின்ற மழலை வாயார்,
    போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்! என்றார். 3

  728. தூதுவர் உரை கேட்ட இராவணன் இருவரையும் பற்றுமாறு கூற, கிங்கரர் அவர்களைப் பிடித்தல்

  729. அற்று அவர் கூறலும், ஆர் அழலிற்றாய்
    முற்றிய கோபம் முருங்க முனிந்தான், -
    இற்றிதுவோ இவர் சேவகம்? என்னா,
    பற்றுமின்! என்றனன் - வெம்மை பயின்றான். 4

  730. என்றலும், எய்தினர், கிங்கரர் என்பார்,
    பின்றலினோரை வலிந்து பிடித்தார்,
    நின்றனர்; ஆயிடை, நீல நிறத்தான்,
    கொன்றிடுவீர் அலிர்; கொண்மின், இது என்றான். 5

  731. அவ் இருவரையும் மூக்கறுக்க இராவணன் கட்டளையிட, மாலி அதனைத் தடுத்துக் கூறுதல்

  732. ஏற்றம் இனிச் செயல் வேறு இலை; ஈர்மின்,
    நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்
    கோல் தரு திண் பணை கொட்டினிர், கொண்டு, ஊர்
    சாற்றுமின், அஞ்சினர் என்று உரைதந்தே. 6

  733. அக் கணனே, அயில் வாளினர் நேரா,
    மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்,
    புக்கனர்; அப் பொழுதில், புகழ் தக்கோய்!
    தக்கிலது என்றனன், மாலி, தடுத்தான். 7

  734. அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர்,
    வெஞ் சமம் வேறலும், வென்றியது இன்றாய்த்
    துஞ்சலும், என்று இவை தொல்லைய அன்றே?
    தஞ்சு என ஆர் உளர், ஆண்மை தகைந்தார்? 8

  735. அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
    வந்தது நம்வயின் எத்தனை, மன்னா!
    தந்திரம், வானவர் தானவர்; என்றும்
    இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே! 9

  736. வருணன் நடுங்கினன், வந்து வணங்கிக்
    கருணை பெறும் துணையும், உயிர் கால்வான்;
    இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்!
    பருணிதர் தண்டம் இது அன்று, பகர்ந்தால். 10

  737. பத்து-ஒரு நாலு பகுத்த பரப்பின்
    அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;
    ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர், உய்ந்தார்;
    வித்தக! யார் இனி வீரம் விளைப்பார்? 11

  738. பாசமும் இற்றது; பாதியின் மேலும்
    நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்;
    பூசல் முகத்து ஒரு கான் முளை போதா,
    நீசரை ஈருதியோ, நெடு நாசி? 12

  739. வாழி இலக்குவன் என்ன, மறுக்குற்று
    ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்;
    ஏழு கடல் துணையோ? இனி, நாசி
    ஊழி அறுத்திடினும், உலவாதால். 13

  740. தூது நடந்தவனைத் தொழுது, அந் நாள்,
    ஓது நெடுஞ் செரு அஞ்சி உடைந்தார்,
    தீது இலர் நின்றவர், சேனையின் உள்ளார்
    பாதியின் மேலுளர், நாசி படைத்தார்! 14

  741. விட்டிலை சீதையை ஆம் எனின், வீரர்
    ஒட்டிய போரினில் ஆர் உளர், ஓடார்?
    வெட்டுதி நாசியை, வெந் தொழில் வல்லோர்
    பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான். 15

  742. இராவணன் சினம் தணிய, மாபெரும்பக்கனும் புகைக்கண்ணனும் பேசுதல்

  743. ஆறினன் என்பது அறிந்தனர், அன்னார்
    தேறினர், நின்றனர் சிந்தை தெளிந்தார்,
    சீறிய நெஞ்சினர், செங் கணர், ஒன்றோ
    கூறினர்? தம் நிலை செய்கை குறித்தார்: 16

  744. உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ?
    மின் நகு வானிடை ஏகி, விரைந்தான்,
    அன்னதின் மாயை இயற்றி அகன்றான்;
    இந் நகர் எய்தினன், உய்ந்தனன் - எந்தாய்! 17

  745. இப் பகல், அன்று எனின் நாளையின், அல்லால்,
    முப் பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம்,
    வெப்பு அகலா எரி வெந் தழல் வெந்த
    செப்பு அகல் வெண்ணெயின் - நோன்மை தெரிந்தோய்! 18

  746. விட்டனை எம்மை, விடுத்து, இனி, வெம் போர்
    பட்டனர் ஒன்று, படுத்தனர் ஒன்றோ,
    கெட்டனர் என்பது கேளலை என்னா,
    ஒட்டினார், ஆவி முடிக்க உவந்தார். 19

  747. இராவணன் அவ்விருவருடன் பெருஞ் சேனையை அனுப்புதல்

  748. அன்னவர் தம்மொடும் ஐ-இரு வெள்ளம்
    மின்னு படைக் கை அரக்கரை விட்டான்;
    சொன்ன தொகைக்கு அமை யானை, சுடர்த் தேர்,
    துன்னு வயப் பரியோடு தொகுத்தான். 20

  749. துணையாக உடன் சென்ற பெரு வீரர்கள்

  750. நெய் அழல் வேள்வி நெடும் பகை, நேர் விண்
    தைவரு சூரியசத்துரு என்பான்,
    பெய் கழல் மாலி, பிசாசன் எனும்பேர்
    வெய்யவன், வச்சிரம் வென்ற எயிற்றான், 21

  751. சேனைகள் திரண்டு சென்ற காட்சி

  752. என்றவரோடும் எழுந்து, உலகு ஏழும்
    வென்றவன் ஏவலின், முன்னம் விரைந்தார்;
    சென்றன, மால் கரி, தேர், பரி; செல்வக்
    குன்றுஇனம் என்ன நடந்தனர், கோட்பால். 22

  753. விண்ணை விழுங்கிய தூளியின் விண்ணோர்
    கண்ணை விழுங்குதலின், கரை காணார்;
    எண்ணை விழுங்கிய சேனையை, யாரும்,
    பண்ணை விழுங்க உணர்ந்திலர், பண்பால். 23

  754. கால் கிளர் தேரொடும், கால் வரையோடும்,
    மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச, -
    மால் கடலானது, மாப் படை - வாள்கள்
    பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால். 24

  755. பேரி கலித்தன, பேர் உலகைச் சூழ்
    ஏரி கலித்தன ஆம் என; யானை
    கார் இகலிக் கடலோடு கலித்த;
    மாரி கலித்தென, வாசி கலித்த. 25

  756. சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
    நின்று பிணங்கிய, கல்வியின் நில்லா,
    ஒன்றினை ஒன்று தொடர்ந்தன, ஓடைக்
    குன்று நடந்தனபோல் - கொலை யானை. 26

  757. மாக நெடுங் கரம் வானின் வழங்கா,
    மேக நெடும் புனல் வாரின வீசி,
    போக விலங்கின உண்டன போலாம்-
    காக நெடுங் களி யானை களிப்பால். 27

  758. எரிந்து எழு பல் படையின் ஒளி, யாணர்
    அருங் கல மின் ஒளி, தேர் பரி யானை
    பொருந்திய பண் ஒளி, தார் ஒளி, பொங்க,
    இரிந்தது பேர் இருள், எண் திசைதோறும். 28

  759. வீடணன் வருபவர் பற்றி இராமனுக்கு உரைத்தல்

  760. எய்திய சேனையை, ஈசன் எதிர்ந்தான்,
    வெய்து இவண் வந்தவன், மாயையின் வெற்றி
    செய்தவனேகொல்? தெரித்தி இது என்றான்;
    ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான்: 29

  761. முழைக் குலச் சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன,
    புழைப் பிறை எயிற்றுப் பேழ் வாய், இடிக் குலம் பொடிப்ப, ஆர்த்து,
    தழல் பொழி வாளிப் புட்டில் கட்டி, வில் தாங்கி, சார்வான்,
    மழைக் குரல் தேரின் மேலான், மாபெரும்பக்கன் மன்னோ. 30

  762. சிகை நிறக் கனல் பொழி தெறு கண் செக்கரான்,
    பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்,
    நகை நிறப் பெருங் கடைவாயை நக்குவான்,
    புகைநிறக் கண்ணவன், பொலம் பொன் தேரினான். 31

  763. பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான்,
    முச் சிரத்து அயிலினான், மூரித் தேரினான்,
    இச் சிரம் உம்மதே? என வந்து எய்துவான்,
    வச்சிரத்து எயிற்றவன், மலையின் மேனியான். 32

  764. காலையும் மனத்தையும், பிறகு காண்பது ஓர்
    வால் உளைப் புரவியன், மடித்த வாயினான்,
    வேலையின் ஆர்ப்பினன், விண்ணை மீக்கொளும்
    சூலம் ஒன்று உடையவன், பிசாசன், தோன்றுவான். 33

  765. சூரியன் பகைஞன், அச் சுடர் பொன் தேரினன்,
    நீரினும், முழக்கினன், நெருப்பின் வெம்மையான்;
    ஆரிய! வேள்வியின் பகைஞன் ஆம் அரோ,
    சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான். 34

  766. சாலி வண் கதிர் நிகர் புரவித் தானையான்,
    மூல வெங் கொடுமையின் தவத்தின் முற்றினான்,
    சூலியும் வெருக்கொளத் தேரில் தோன்றுவான்,
    மாலி என்று, அடி முறை வணங்கிக் கூறினான். 35

  767. வானரரும் அரக்கரும் கைகலந்து பொருதல்

  768. ஆர்த்து எதிர் நடந்தது, அவ் அரியின் ஆர்கலி
    தீர்த்தனை வாழ்த்தி; ஒத்து இரண்டு சேனையும்
    போர்த் தொழில் புரிந்தன; புலவர் போக்கு இலார்,
    வேர்த்து உயிர் பதைத்தனர், நடுங்கி விம்மியே. 36

  769. கல் எறிந்தன, கடை உருமின்; கார் என
    வில் எறிந்தன, கணை; விசும்பின் மேகத்துச்
    செல் எறிந்தன எனச் சிதறி வீழ்ந்தன,
    பல்; எறிந்தன தலை, மலையின் பண்பு என. 37

  770. கடம் படு கரி பட, கலின மாப் பட,
    இடம் படு சில்லியின் ஈர்த்த தேர் பட,
    உடம்பு அடும் அரக்கரை, அனந்தன் உச்சியில்
    படம் படும் என, படும் கவியின் கல் பல. 38

  771. கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்,
    நிலை நெடுங் காலொடும், நிமிர்ந்த வாலொடும்,
    மலையொடும், மரத்தொடும், கவியின் வல் நெடுந்
    தலையொடும், போம் - விசைத்து எறிந்த சக்கரம். 39

  772. ஆண் தகைக் கவிக் குல வீரர் ஆக்கையைக்
    கீண்டன; புவியினைக் கிழித்த - மாதிரம்
    தாண்டுவ, குலப் பரி, மனத்தின் தாவுவ,
    தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம். 40

  773. சில்லி அம் தேர்க் கொடி சிதைய, சாரதி
    பல்லொடு நெடுந் தலை மடிய, பாதகர்
    வில்லொடு கழுத்து இற, பகட்டை வீட்டுமால் -
    கல்லெனக் கவிக்குலம் வீசும் கல் அரோ. 41

  774. கரகம் உந்திய மலை முழையில், கட் செவி
    உரகம் முந்தின என ஒளிக்கும், ஒள் இலை
    அரகம் முந்தின, நெடுங் கவியின் ஆக்கையில் -
    துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே. 42

  775. வால் பிடித்து அடிக்கும் வானரத்தை, மால் கரி;
    கால் பிடித்து அடிக்கும், அக் கரியினைக் கவி;
    தோல் பிடித்து அரக்கரை எறியும், சூர் முசு;
    வேல் பிடித்து எறிவர், அம் முசுவை வெங் கணார். 43

  776. முற்படு கவிக் குலம் முடுக வீசிய
    கல் பட, களம் படும், அரக்கர் கார்க் கடல்;
    பல் படு தலை படப் படுவ, பாதகர்
    வில் படு கணை பட, குரங்கின் வேலையே. 44

  777. கிச்சு உறு கிரி பட, கிளர் பொன் தேர் நிரை
    அச்சு இற, செல்கில, ஆடல் வாம் பரி -
    எச்சு உறு துயரிடை எய்த, ஈத்து உணா
    முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என. 45

  778. மீயவர் யாவரும் விளிய, வெங் கரி
    சேயிருங் குருதியில் திரிவ, சோர்வு இல, -
    நாயகர் ஆளொடும் அவிய, நவ்வி தம்
    பாயொடும் வேலையில் திரியும் பண்பு என. 46

  779. படையொடு மேலவர் மடிய, பல் பரி,
    இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன,
    கடல் நெடுங் குருதிய, - கனலி காலுறு
    வடவையை நிகர்த்தன - உதிர வாயன. 47

  780. எயிற்றொடு நெடுந் தலை, இட்ட கல்லொடும்
    வயிற்றிடைப் புக, பல பகலும் வைகிய
    பயிற்றியர் ஆயினும், தெரிக்கும் பண்பு இலார்,
    அயிர்ப்பர், தம் கணவரை அணுகி அந் நலார். 48

  781. தூமக் கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார்;
    தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனைத் தடுத்தான்;
    சேமத் திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார்;
    வாமப் போர் வயப் பிசாசனும் பனசனும் மலைந்தார். 49

  782. சூரியன்பெரும்பகைஞனும் சூரியன் மகனும்
    நேர் எதிர்ந்தனர்; நெருப்புடை வேள்வியின் பகையும்
    ஆரியன் தனித் தம்பியும் எதிர் எதிர் அடர்ந்தார்;
    வீர வச்சிரத்துஎயிற்றனும் இடபனும் மிடைந்தார். 50

  783. வெங் கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக் குல வீரச்
    சிங்கம் அன்ன போர் வீரரில், தலைவராய்த் தெரிந்தார்,
    அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார்;
    பொங்கு வெஞ் செருத் தேவரும் நடுக்குறப் பொருதார். 51

  784. அரக்கர் சேனையின் அழிவும், இரத்த வெள்ளம் பரத்தலும்

  785. இன்ன காலையின், ஈர்-ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
    மின்னும் வெள் எயிற்று அரக்கர் தம் சேனையில், வீரன்
    அன்ன வெஞ் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான்;
    சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான். 52

  786. உப்புடைக் கடல் மடுத்தன உதிர நீர் ஓதம்
    அப்பொடு ஒத்தன கடுத்தில; ஆர்கலி முழுதும்
    செப்பு உருக்கு எனத் தெரிந்தது; மீன் குலம் செருக்கித்
    துப்பொடு ஒத்தன, முத்துஇனம் குன்றியின் தோன்ற. 53

  787. தத்து நீர்க் கடல் முழுவதும் குருதியாய்த் தயங்க,
    சித்திரக் குலப் பல் நிற மணிகளும் சேந்த;
    ஒத்து வேற்று உருத் தெரியல, உயர் மதத்து ஓங்கல்
    மத்தகத்து உகு தரளமும், வளை சொரி முத்தும். 54

  788. சூரியன் உதித்தல்

  789. அதிரும் வெஞ் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்,
    கதிரவன், செழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
    எதிரும் வல் இருட் கரி இறுத்து, எழு முறை மூழ்கி,
    உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என, உதித்தான். 55

  790. அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன்
    துரக்க, வெஞ் சுடர்க் கதிரவன் புறத்து இருள் தொலைக்க,
    புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல,
    நிரக்கும் நல் ஒளி பரந்தன, உலகு எலாம் நிமிர. 56

  791. படுகளக் காட்சி

  792. நிலை கொள் பேர் இருள் நீங்கலும், நிலத்திடை நின்ற
    மலையும் வேலையும் வரம்பு இல வயின் தொறும் பரந்து,
    தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன - சோரி
    அலை கொள் வேலையும், அரும் பிணக் குன்றமும் அணவி. 57

  793. நிலம் தவாத செந்நீரிடை, நிணக் கொழுஞ் சேற்றில்,
    புலர்ந்த காலையில், பொறி வரி அம்பு எனும் தும்பி
    கலந்த தாமரைப் பெரு வனம், கதிரவன் கரத்தால்,
    மலர்ந்தது ஆம் எனப் பொலிந்தன, உலந்தவர் வதனம். 58

  794. தேரும் யானையும் புரவியும் விரவின, - தேவர்
    ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
    பேரும் மான வெங் காலத்துக் கால் பொர, பிணங்கிப்
    பாரின் வீழ்ந்தன போன்றன - கிடந்தன பரந்து. 59

  795. போர்க்களம் போந்த அரக்கியரின் நிலை

  796. எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர், எரி வீழ்
    அல்லி சுற்றிய கோதையர், களம் புகுந்து அடைந்தார்,
    புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்,
    வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர். 60

  797. வணங்கு நுண் இடை, வன முலை, செக்கர் வார் கூந்தல்,
    அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து அடைந்தார்,
    குணங்கள் தந்த தம் கணவர்தம் பசுந் தலை கொடாது
    பிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர், பிடித்தே. 61

  798. சுடரும் வெள் வளைத் தோளி, தன் கொழுநனைத் தொடர்வாள்,
    உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒரு வழி உய்ப்பாள்,
    குடரும், ஈரலும், கண்ணும், ஓர் குறு நரி கொள்ள,
    தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆர் உயிர் துறந்தாள். 62

  799. பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந் தோள்
    நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா
    இரியல்போவன தொடர்ந்து, அயல் இனப் படை கிடைந்த
    அரிய, நொந்திலர், அலத்தகச் சீறடி அயர்ந்தார். 63

  800. நலம் கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
    விலங்கல் அன்ன வான் பெரும் பிணக் குப்பையின் மேலோர்,
    அலங்கல் ஓதியர், - அருந் துணை பிரிந்து நின்று அயரும்,
    பொலம் கொள், மா மயில் வரையின்மேல் திரிவன போன்றார். 64

  801. சிலவர் - தம் பெருங் கணவர்தம் செருத் தொழில் சினத்தால்,
    பலரும், வாய் மடித்து, உயிர் துறந்தார்களைப் பார்த்தார்,
    அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது, அயலாள்
    கலவியின் குறி காண்டும் என்று ஆம் எனக் கனன்றார். 65

  802. நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி,
    அவசம் எய்திட, மடந்தையர் உருத் தெரிந்து அறியார்,
    துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங் குறி, தோள்மேல்
    கவசம் நீக்கினர், கண்டு கண்டு, ஆர் உயிர் கழிந்தார். 66

  803. மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
    போர் யாக்கைகள் நாடி, அப் பொரு களம் புகுந்தார்,
    பேர் யாக்கையின் பிணப் பெருங் குன்றிடைப் பிறந்த
    சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார். 67

  804. அனுமனுக்கும் புகைக்கண்ணனுக்கும் நிகழ்ந்த போர்

  805. வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும்,
    புகைவெங்கணனும் பொருவார்; பொரவே,
    மிகை சென்றிலர், பின்றிலர், வென்றிலரால்;
    சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார். 68

  806. ஐ-அஞ்சு அழல் வாளி, அழற்கொடியோன்,
    மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்,
    வை அம் சிலை ஆறு வழங்கினனால்,
    மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான். 69

  807. பாழிப் புயம் அம்பு உருவப் படலும்,
    வீழிக் கனிபோல் புனல் வீச, வெகுண்டு,
    ஆழிப் பெருந் தேரை அழித்தனனால் -
    ஊழிப் பெயர் கார் நிகர் ஒண் திறலான். 70

  808. சில்லிப் பொரு தேர் சிதைய, சிலையோடு
    எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்,
    வில் இற்றது, இலக்குவன் வெங் கணையால்;
    புல்லித் தரை இட்டனன், நேர் பொருவான். 71

  809. புகைக்கண்ணன் உயிர் இழத்தல்

  810. மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு,
    உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து,
    அலையத் திருகிப் பகு வாய் அனல் கால்
    தலை கைக்கொடு எறிந்து, தணிந்தனனால். 72

  811. மாபக்கன் - அங்கதன் போர்

  812. மாபக்கனும் அங்கதனும் மலைவார்,
    தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்,
    கோபத்தினர், கொல்ல நினைந்து அடர்வார்,
    தூபத்தின் உயிர்ப்பர், தொடர்ந்தனரால். 73

  813. ஐம்பத்தொரு வெங் கணை அங்கதன் மா
    மொய்ம்பில் புக உய்த்தனன், மொய் தொழிலான் -
    வெம்பி, களியோடு விளித்து எழு திண்
    கம்பக் கரி, உண்டை கடாய் எனவே. 74

  814. ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
    கார் ஓடும் நிறக் கத நாகம் அனான்,
    தேரோடும் எடுத்து, உயர் திண் கையினால்,
    பாரோடும் அடுத்து எறி பண்பிடையே, 75

  815. வில்லைச் செல வீசி, விழுந்து அழியும்,
    எல்லின் பொலி தேரிடை நின்று இழியா,
    சொல்லின் பிழையாதது ஓர் சூலம், அவன்
    மல்லின் பொலி மார்பின் வழங்கினனால். 76

  816. சூலம் எனின், அன்று; இது தொல்லை வரும்
    காலம் என உன்னு கருத்தினனாய்,
    ஞாலம் உடையான், அது நாம் அற, ஓர்
    ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால். 77

  817. மாபக்கனை அங்கதன் பிளந்து அழித்தல்

  818. உளம்தான் நினையாதமுன், உய்த்து, உகவாக்
    கிளர்ந்தானை, இரண்டு கிழித் துணையாய்ப்
    பிளந்தான் - உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
    அளந்தான், வலி நன்று என, - அங்கதனே. 78

  819. மாலி-நீலன் போர்

  820. மா மாலியும் நீலனும், வானவர்தம்
    கோமானொடு தானவர் கோன் இகலே
    ஆமாறு, மலைந்தனர்; அன்று, இமையோர்
    பூ மாரி பொழிந்து, புகழ்ந்தனரால். 79

  821. கல் ஒன்று கடாவிய காலை, அவன்
    வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும்,
    அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்,
    நில்! என்று இடை சென்று, நெருக்கினனால். 80

  822. இடையே வந்து குமுதன் எறிந்த குன்றால் மாலியின் தேர் பொடியாதல்

  823. அற்று, அத் தொழில் எய்தலும், அக் கணனே,
    மற்றப் புறம் நின்றவன், வந்து அணுகா,
    கொற்றக் குமுதன், ஒரு குன்று கொளா,
    எற்ற, பொரு தேர் பொடி எய்தியதால். 81

  824. மாலியின் தோளை இலக்குவன் துணித்தல்

  825. தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
    வாளால் மடிவித்து, வலித்து அடர்வான்
    தோள் ஆசு அற, வாளி துரந்தனனால் -
    மீளா வினை நூறும் விடைக்கு இளையான். 82

  826. கையற்ற மாலியுடன் பொருதல் தகாது என இலக்குவன் அப்பால் போதல்

  827. மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
    தன் போர் தவிராதவனை, சலியா,
    என் போலியர் போர் எனின், நன்று; இது ஓர்
    புன் போர் என, நின்று அயல் போயினனால். 83

  828. இராமனிடம் சென்ற இலக்குவனை வானர வீரர்கள் புகழ்தல்

  829. நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்,
    பேர் வீரனை, வாசி பிடித்தவனை,
    யார், வீரதை இன்ன செய்தார்கள்? எனா,
    போர் வீரர் உவந்து, புகழ்ந்தனரால். 84

  830. வேள்விப்பகைஞனை இலக்குவன் அழித்தல்

  831. வேள்விப் பகையோடு வெகுண்டு அடரும்
    தோள் வித்தகன், அங்கு ஓர் சுடர்க் கணையால்,
    வாழ்வு இத்தனை என்று, அவன் மார்பு அகலம்
    போழ்வித்தனன்; ஆர் உயிர் போயினனால். 85

  832. மல்லல் தட மார்பன் வடிக் கணையால்
    எல்லுற்று உயர் வேள்வி இரும்பகைஞன்
    வில் அற்றது, தேரொடு மேல் நிமிரும்
    கல் அற்ற, கழுத்தொடு கால்களொடும். 86

  833. சூரியன் பகைஞனைச் சுக்கிரீவன் கொல்லுதல்

  834. தன் தாதையை முன்பு தடுத்து, ஒரு நாள்,
    வென்றானை, விலங்கலின் மேனியனை,
    பின்றாத வலத்து உயர் பெற்றியனை,
    கொன்றான் - கவியின் குலம் ஆளுடையான். 87

  835. இடபன் - வச்சிரத்துஎயிற்றன் போர்

  836. இடபன்,-தனி வெஞ் சமம் உற்று எதிரும்
    விட வெங் கண் எயிற்றவன், விண் அதிரக்
    கடவும் கதழ் தேர், கடவ ஆளினொடும்
    பட, - அங்கு ஒரு குன்று படர்த்தினனால். 88

  837. திண் தேர் அழிய, சிலை விட்டு, ஒரு தன்
    தண்டோ டும் இழிந்து, தலத்தினன் ஆய்,
    உண்டோ உயிர்? என்ன உருத்து, உருமோடு
    எண் தோளனும் உட்கிட, எற்றினனால். 89

  838. இடபன் அடியுண்டு அயர, அனுமன் துணையாக வந்து பொருதல்

  839. அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா,
    இடையுண்ட மலைக் குவடு இற்றது போல்
    முடியும் எனும் எல்லையில் முந்தினனால் -
    நெடியன், குறியன் எனும் நீர்மையினான். 90

  840. கிடைத்தான் இகல் மாருதியை, கிளர் வான்
    அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
    படைத்தானை, நெடும் புகழ்ப் பைங் கழலான்
    புடைத்தான், அகல் மார்பு பொடிச் சிதற. 91

  841. வச்சிரத்துஎயிற்றனை அனுமன் கொல்லுதல்

  842. எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
    பற்றி, கிளர் தண்டு பறித்து எறியா,
    வெற்றிக் கிளர் கைக்கொடு, மெய் வலி போய்
    முற்ற, தனிக் குத்த, முடிந்தனனால். 92

  843. பிசாசன் செய்த பெரும் போர்

  844. காத்து ஓர் மரம் வீசுறு கைக் கதழ்வன்
    போத்து ஓர் புலிபோல் பனசன் புரள,
    கோத்து ஓட நெடுங் குருதிப் புனல், திண்
    மாத் தோமரம் மார்பின் வழங்கினனால். 93

  845. கார் மேலினனோ? கடல் மேலினனோ?
    பார் மேலினனோ? பகல் மேலினனோ?
    யார் மேலினனோ? இன என்று அறியாம் -
    போர் மேலினன், வாசி எனும் பொறியான். 94

  846. நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்? என்று
    ஆறாயிர வானவரும், அறிவின்
    தேறா வகை நின்று, திரிந்துளதால் -
    பாறு ஆடு களத்து, ஒரு பாய் பரியே. 95

  847. கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
    விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
    உள் நிற்கும் எனின், புறன் நிற்கும்; உலாய்,
    மண்ணில் திரியாத வயப் பரியே. 96

  848. மாப் புண்டரவாசியின் வட்டணைமேல்
    ஆப்புண்டவன் ஒத்தவன், ஆர் அயிலால்
    பூப் புண் தர, -ஆவி புறத்து அகல,
    கோப்புண்டன, வானர வெங் குழுவே. 97

  849. நூறும் இரு நூறும், நொடிப்பு அளவின்,
    ஏறும்; நுதி வேலின், இறைப்பொழுதில்,
    சீறும் கவி சேனை சிதைக்கும்? எனா,
    ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால். 98

  850. இலக்குவன் காற்றின் படையால் பிசாசனைக் கொல்லுதல்

  851. தோற்றும் உரு ஒன்று எனவே துணியா,
    கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை,
    ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன், வெங்
    காற்றின் படை கொண்டு கடந்தனனால். 99

  852. குலையப் பொரு சூலன் நெடுங் கொலையும்
    உலைவுற்றில, உய்த்தலும் ஓய்வு இலன், ஒண்
    தலை அற்று உகவும், தரை உற்றிலனால் -
    இலையப் பரி மேல் கொள் இருக்கையினான். 100

  853. மிகைப் பாடல்கள்

  854. அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்,
    களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
    இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
    விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின் மிக்கீர்! 1-1

  855. இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
    தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
    மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம் போர்ப்
    பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர் என்றான். 1-2

  856. மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
    துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
    உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
    அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார். 16-1

  857. மத்த மதக் கரியோடு மணித் தேர்,
    தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
    அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
    வித்தக மானிடன் வாளியின், வீந்த. 16-2

  858. இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
    வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
    எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
    துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார். 20-1

  859. தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
    கார் நிரை சென்றது; கால் வய வாசித்
    தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
    பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே? 22-1

  860. ஐய! கேள்: சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும் புவனம் காக்கும்
    வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவரின் விழுமம் பெற்றோர்,
    கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர்,
    மொய் படைத் தலைவர் என்று, ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான். 29-1

  861. இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர்
    உன்ன அருந் தொகை தெரிந்து உரைக்கின், ஊழி நாள்
    பின்னரும் செல்லும் என்று ஒழியப் பேசினான்;
    அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார். 35-1

  862. கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி
    அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்கக்
    கடிகை உற்றதில் களைந்தது கண்டு, விண்ணவர்கள்,
    விடியலுற்றது நம் பெருந் துயர் என வியந்தார். 58-1

  863. வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து
    உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
    கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு இலர் குறைந்தார்;
    மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார். 67-1

  864. தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
    போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
    ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
    ஏர் மார்பிடை போக எறித்தனனால். 81-1

  865. அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்,
    வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
    இப் போர் தருக! என்ற இலக்குவன்மேல்
    துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால். 85-1

  866. சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
    பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
    பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
    எரி வெங் கணை மாரி இறைத்தனனால். 85-2

  867. முடிவுற்றனன், மாருதி மோதுதலால்,
    கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன்;
    விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
    னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால். 92-1

  868. பொர நின்ற பணைப் புய வன் பனசன்
    நிருதன் களமீது நெருக்கி, அதில்
    பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
    தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால். 92-2

  869. பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
    தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங்
    கனல் என்ன வெகுண்டு, கவிப் படையின்
    இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால். 93-1

  870. விசை கண்டு உயர் வானவர் விண் இரிய,
    குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண்
    திசை எங்கணும் நின்று திரிந்துளதால் -
    பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே. 96-1

  871. மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
    உற்று அங்கு எதிரேறி உடன்று, அமர்வாய்
    வில் தங்கும் இலக்குவன் வெங் கணையால்,
    முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால். 100-1

  872. யுத்த காண்டம்

  873. 21. மகரக்கண்ணன் வதைப் படலம்


    சீதைக்கு நல் நிமித்தம் தோன்றுதலும், இராவணன் தூதுவர் நகருக்கு ஏகுதலும்

  874. இன்று ஊதியம் உண்டு என இன்னகைபால்
    சென்று ஊதின தும்பிகள்; தென் திசையான்
    வன் தூதரும் ஏகினர், வஞ்சனையான் -
    தன் தூதரும் ஏகினர், தம் நகர்வாய். 1

  875. தூதர் தெரிவித்த செய்தி கேட்டு இராவணன் துயருறுதல்

  876. ஏகி, தனி மன்னன் இருந்துழி புக்கு,
    ஓகைப் பொருள் இன்று என, உள் அழியா,
    வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்
    சோகத்தொடு, இறைஞ்சினர், சொல்லினரால். 2

  877. சொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன்,
    இன்னாத மனத்தின் இலங்கையர்கோன்,
    வெந் நாகம் உயிர்த்தென, விம்மினனால்;
    அன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்: 3

  878. கரன் மகன் மகரக்கண்ணன் தன்னை போருக்கு அனுப்ப இராவணனை வேண்டுதல்

  879. முந்தே, என தாதையை மொய் அமர்வாய்,
    அந்தோ! உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்
    உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
    எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ? 4

  880. யானே செல எண்ணுவென், ஏவுதியேல்;
    தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
    வானே, நிலனே, முதல் மற்றும் எலாம்,
    கோனே! எனை வெல்வது ஓர் கொள்கையதோ? 5

  881. அருந் துயர்க் கடலுள் ஆழும் அம்மனை, அழுத கண்ணள்,
    பெருந் திருக் கழித்திலாதாள், கணவனைக் கொன்று பேர்ந்தோன்
    கருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன் என்றாள்;
    பருந்தினுக்கு இனிய வேலாய்! இன் அருள் பணித்தி என்றான். 6

  882. மகரக்கண்ணன் தேர் ஏறிப் போர்க்களம் செல்லுதல்

  883. அவ் உரை மகரக்கண்ணன் அறைதலும், அரக்கன், ஐய!
    செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீர்த்தி! என்றான்.
    வெவ் வழியவனும், பெற்ற விடையினன், தேர் மேற்கொண்டான்,
    வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான். 7

  884. தன்னுடைச் சேனை கோடி ஐந்து உடன் தழுவ, தானை
    மன்னுடைச் சேனை வெள்ளம் நால்-ஐந்து மழையின் பொங்கிப்
    பின்னுடைத்தாக, பேரி கடல் பட, பெயர்ந்த தூளி
    பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் பகைய, போனான். 8

  885. இராவணன் ஏவ சோணிதக்கண்ணன் முதலியோர் உடன் செல்லுதல்

  886. சோணிதக் கண்ணனோடு, சிங்கனும், துரகத் திண் தேர்த்
    தாள்முதல் காவல் பூண்டு செல்க என, தக்கது என்னா,
    ஆள் முதல் தானையோடும், அனைவரும் தொடரப் போனான்,
    நாள் முதல் திங்கள்தன்னைத் தழுவிய அனைய நண்பான். 9

  887. பல் பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர்
    எல்லவன், சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய,
    தொல் வன யானை அம் கை விலாழி நீர்த் துவலை தூற்ற,
    செல்வன; கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம் தீர்ந்த. 10

  888. முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை,
    தழங்கின; வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள,
    வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்புகாறும்;
    புழுங்கின உயிர்கள் யாவும், கால் புகப் புரை இன்றாக. 11

  889. அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல்

  890. வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர்
    செய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர், தலைவர், செற்றி;
    கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும்
    எய்தன எறிந்த; யானை ஈர்த்தன, கோத்த சோரி. 12

  891. வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,
    மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,
    கானகம் இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும் - கவ்வி,
    போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறப் புடைப்பொடு ஆர்ப்ப. 13

  892. மைந் நிற அரக்க்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி,
    மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்
    கைந் நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி,
    மொய்ந் நிறத்து எறிவர்; எற்றி முருக்குவர், அரக்கர் முன்பர். 14

  893. மகரக்கண்ணன் இராமனிடம் வஞ்சினம் பேசுதல்

  894. வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண், மழை ஏறு என்ன,
    திண் திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித் தேரை,
    தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்
    கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப் படையைக் கொன்றான். 15

  895. இந்திரன் பகைஞனே கொல்? என்பது ஓர் அச்சம் எய்தித்
    தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி
    எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி,
    சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்: 16

  896. என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும்
    முன் உடைத்தாய தீய முழுப் பகை மூவர்க்கு அன்றி,
    நின்னுடைத்து ஆயது ஆமே; இன்று அது நிமிர்வது என்றான் -
    பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் 17

  897. மகரக்கண்ணன் வார்த்தையைத் தக்கது என இராமனும் கூறுதல்

  898. தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான், -
    நீ கரன் புதல்வன்கொல்லோ? நெடும் பகை நிமிர வந்தாய்;
    ஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய!
    ஏயது சொன்னாய் என்றான், -இசையினுக்கு இசைந்த தோளான். 18

  899. மகரக்கண்ணன் - இராமன் போர்

  900. உரும் இடித்தென்ன வில் நாண் ஒலி படுத்து, உன்னோடு ஏய்ந்த
    செரு முடித்து, என்கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா,
    கரு முடித்து அமைந்த மேகம், கால் பிடித்து எழுந்த காலம்,
    பெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல், பகழி பெய்தான். 19

  901. சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
    அரிந்தனன் அகற்றி, மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து,
    தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ,
    நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே. 20

  902. ஏவுண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற
    பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்
    தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,
    தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான். 21

  903. அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்; ஆழி
    மன்னனும், முறுவல் செய்து, வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி,
    பொன் நெடுந் தடந் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி,
    வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான். 22

  904. வில் முதலியன இழந்த மகரக்கண்ணன் வானில் சென்று,
    தவவலியால் இடியும் காற்றும் உண்டாக்குதல்

  905. மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும்
    சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பிடைத் தோன்றாநின்றான்,
    கார் உரும் ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்
    பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான். 23

  906. உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின்,
    இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விரிந்தது, எங்கும்
    கரு முறை நிறைந்த மேகம்; கான்றன, கல்லின மாரி;
    பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன. 24

  907. காற்று முதலியன எழுந்தது குறித்து இராமன் வினவ, வீடணன்
    அவை தெய்வ வரத்தினால் வந்தது எனல்

  908. போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,
    தீஇனம் அமையச் செல்லும் மாய மா மாரி சிந்த,
    ஆயிர கோடி மேலும் அவிந்தன, கவிகள்; ஐயன்,
    மாயமோ? வரமோ? என்றான்; வீடணன் வணங்கிச் சொல்வான்: 25

  909. நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர், கருணை நோக்கி,
    காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும்,
    மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான்;
    நூற்று இதழ்க் கமலக் கண்ணன், அகற்றுவென், நொடியில் என்றான். 26

  910. இராமன் வாயு, வருணன், படைகளை ஏவ, மழையும் காற்றும் மறைதல்

  911. காவலன் படையும், தெய்வக் கடலவன் படையும், கால் கொள்
    கோல வன் சிலையில் கோத்த கொடுங் கணையோடும் கூட்டி,
    மேலவன் துரத்தலோடும், விசும்பின் நின்று இரிந்து, வெய்தின்
    மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன, மழையும் காற்றும். 27

  912. மகரக்கண்ணன் மாயத்தால் வானில் மறைந்து போரிடல்

  913. அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
    ஒத்த தன் உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
    பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனனப் பார்த்த
    வித்தகன், ஒருவன் செய்யும் வினையம்! என்று இனைய சொன்னான்: 28

  914. மகரக்கண்ணன் மடிதலும் மாயை அகல்தலும்

  915. மாயத்தால் வகுத்தான், யாண்டும் வரம்பு இலா உருவம்; தான் எத்
    தேயத்தான் என்னாவண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்;
    காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்;
    தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்? எனச் சிந்தை நொந்தான். 29

  916. அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருள் இல் யாக்கை
    உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான்,
    செம்புனல் சுவடு நோக்கி, இது நெறி என்று, தேவர்
    தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான். 30

  917. அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை,
    புயல் படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்,
    வெயில் படைத்து இருளை ஓட்டும் காலத்தின் விடிதலோடும்,
    துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது - சூழ்ந்த மாயை. 31

  918. குருதிக்கண்ணனோடு நளன் பொருது, அவன் தலையை வீழ்த்துதல்

  919. குருதியின்கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப்
    பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ் சுடர் மேகப் பண்பன்,
    எரி கணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் -
    விரி கடல் தட்டான், கொல்லன், வெஞ் சினத் தச்சன், வெய்யோன். 32

  920. அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி,
    ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன, உய்த்தான்;
    நின்றவன்,-நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி,
    சென்றனன்-கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான். 33

  921. கரத்தினில் திரியாநின்ற மரத்தினைக் கண்டமாகச்
    சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி,
    உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான், தன்னை ஒப்பான்
    சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார். 34

  922. எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திரவில் இட்டென்ன,
    பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி
    சொரிய, வன் கண்ணின் மூக்கின் செவிகளின், மூளை தூங்க,
    நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மா நிலத்தில் இட்டான். 35

  923. சிங்கனைப் பனசன் கொல்லுதல்

  924. அங்கு அவன் உலத்தலோடும், அழற் கொழுந்து ஒழுகும் கண்ணான்,
    சிங்கன், வெங் கணையன், வில்லன், தார் அணி தேரின் மேலான்,
    எங்கு, அடா! போதி? என்னா, எய்தினன்; எதிர் இலாத,
    பங்கம் இல் மேரு ஆற்றல், பனசன் வந்து, இடையில் பாய்ந்தான். 36

  925. பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடு
    ஆய்ந்தன, அசனி போல, ஐ-இரண்டு அழுந்த எய்தான்;
    காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;
    ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான். 37

  926. தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங் கண்
    மேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச,
    பாரிடை வீழ்தலோடும், அவன் சிரம் பறித்து, மாயாச்
    சோரியும் உயிரும் சோர, துகைத்தனன், வயிரத் தோளான். 38

  927. அரக்கர் சேனையில் அனைவரும் இறக்க, இராவணனது தூதர் இலங்கை செல்லுதல்

  928. தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை
    மராமரம், மலை, என்ற இன்ன வழங்கவும், வளைந்த தானை,
    பராவ அருங் கோடி ஐந்தும் வெள்ளம் நால் - ஐந்தும் பட்ட;
    இராவணன் தூதர் போனார், படைக்கலம் எடுத்திலாதார். 39

  929. மிகைப் பாடல்கள்

  930. இந்திரியத்தத இகழ்ந்தவன், அந்தோ!
    மந்திர வெற்றி வழங்க வழங்கும்
    இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்?
    வந்தது என், வில் தொழிலைக் கொலை மான? 5-1

  931. அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
    தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,
    வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,
    உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 19-1

  932. இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;
    தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;
    எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;
    அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்? என அமலன் சொன்னான். 29-1

  933. மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்
    கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்
    பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்
    அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில் மாய்த்தான். 31-1

  934. மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
    தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை எல்லாம்
    கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில் மாய்த்தார்;
    நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம். 38-1

  935. யுத்த காண்டம்

  936. 22. பிரமாத்திரப் படலம்


    தூதரால் செய்தி அறிந்த இராவணன் இந்திரசித்தை அழைத்தல்

  937. கரன் மகன் பட்டவாறும், குருதியின்கண்ணன் காலின்
    சிரன் தெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
    பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
    வரன்முறை தவிர்ந்தான், வல்லைத் தருதிர், என் மகனை! என்றான். 1

  938. இந்திரசித்து விரைந்து வருதல்

  939. கூயினன், நுந்தை என்றார்; குன்று எனக் குவிந்த தோளான்,
    போயின நிருதர் யாரும் போந்திலர் போலும்! என்றான்;
    ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்? என்னா,
    மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின் வந்தான். 2

  940. தந்தையைத் தேற்றி, இந்திரசித்து போர்க்களம் செல்லுதல்

  941. வணங்கி, நீ, ஐய! நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன
    உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
    பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
    கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர் என்றான். 3

  942. வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
    பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை முழங்கப் போனான்;
    அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக்
    குலங்களும், தேரும், மாவும், குழாம் கொளக் குழீஇய அன்றே. 4

  943. கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி, கொட்டி
    பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி,
    கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
    அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. 5

  944. யானைமேல் பறை, கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி,
    மான மாப் புரவிப் பொன் - தார், மாக் கொடி கொண்ட பண்ணை,
    சேனையோர் சுழலும் தாரும், சேண் தரப் புலம்ப, மற்றை
    வானகத்தோடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே. 6

  945. சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
    பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின் பொம்மல்,
    சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண் கைம்
    மங்குலின் அதிர்வு, - வான மழையொடு மலைந்த அன்றே. 7

  946. வில் ஒலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின் ஓங்கும்
    ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
    செல் ஒலி, திரள் தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில் செல்லும்
    கல்லொலியோடும் கூடக் கடல் ஒலி கரந்தது அன்றே. 8

  947. நாற் கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின் -
    மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்மேல் தொடர்ந்து வீச,
    மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
    பாற்கடல் அனைய, வாட் கண் பனிக் கடல் படைத்தது அன்றே. 9

  948. ஆயிர கோடித் திண் தேர், அமரர்கோன் நகரம் என்ன
    மேயின சுற்ற, தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான்,
    தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற, நடுவண் தோன்றும்
    நாயகப் பரிதி போன்றான் - தேவரை நடுக்கம் கண்டான். 10

  949. இந்திரசித்து சங்கநாதம் செய்து, நாண் ஒலி எழுப்பி, ஆரவாரித்தல்

  950. சென்று வெங் களத்தை எய்தி, சிறையொடு துண்டம், செங் கண்,
    ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலின், ஒப்ப,
    பின்றல் இல் வெள்ளத் தானை முறை படப் பரப்பி, பேழ்வாய்
    அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து, அமைந்து நின்றான். 11

  951. புரந்தரன் செருவில் தந்து போயது, புணரி ஏழும்
    உரம் தவிர்த்து, ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை
    கரந்தது வயிற்று, கால வலம்புரி கையில் வாங்கி,
    சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, ஊதினான், திசைகள் சிந்த. 12

  952. சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, யானை
    சிங்கத்தின் நாதம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி,
    எங்கு உற்ற? என்னாவண்ணம் இரிந்தது; ஈது அன்றி ஏழை-
    பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி, ஆர்த்தான். 13

  953. இராமனது சேனையின் நிலைமை

  954. கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா
    மீண்டன, கால்கள்; கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
    பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க,
    மாண்டனம் அன்றோ? என்ற - வானரம் எவையும் மாதோ. 14

  955. செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவந்தானும்,
    அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
    வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதலாம் வீரர்
    இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம். 15

  956. அரக்கர் சேனை கிளர்ந்து களம் புகுதல்

  957. படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருஞ் சேனை, வெள்ளம்
    உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை
    கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
    அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர் ஆனார். 16

  958. அனுமன் தோளிலும் அங்கதன் தோளிலும் முறையே இராமனும் இலக்குவனும் ஏறி, போர்க்களம் வருதல்

  959. மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
    வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
    ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
    வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல். 17

  960. விடையின்மேல், கலுழன் தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
    கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் - கண்ணுற்று
    அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார்,
    தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல் தோன்றும் வீரர். 18

  961. நீலன் முதலாக நின்ற படைத் தலைவர்களைப் பின் நிரையில் நிற்குமாறு இராமன் கூறுதல்

  962. நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார்,
    தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமைந்த காலை,
    ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
    மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான்: 19

  963. கடவுளர் படையை நும்மேல் வெய்யவன் துரந்தகாலை,
    தடை உள அல்ல; தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு
    இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
    படை உளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர் என்றான். 20

  964. இராம இலக்குவரின் போர்த் திறன்

  965. அருள்முறை அவரும் நின்றார்; ஆண் தகை வீரர், ஆழி
    உருள் முறை தேரின், மாவின், ஓடை மால் வரையின், ஊழி
    இருள் முறை நிருதர் தம்மேல், ஏவினர் - இமைப்பிலோரும்,
    மருள் முறை எய்திற்று என்பர் - சிலை வழங்கு அசனி மாரி. 21

  966. தேரின்மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும்
    வீரருள் வீரன் கண்டான் - விழுந்தன விழுந்த என்னும்
    பாரின் மேல் நோக்கின் அன்றேல், பட்டனர் பட்டார் என்னும்
    போரின் மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல். 22

  967. யானை பட்டனவோ! என்றான்; இரதம் இற்றனவோ! என்றான்;
    மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ! என்றான்;
    ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க! என்றான் -
    வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம் உற்றான். 23

  968. செய்கின்றார் இருவர், வெம் போர்; சிதைக்கின்ற சேனை நோக்கின்,
    ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக! என்று,
    வைகின்றார்; அல்லர் ஆக, வரிசிலை வலத்தால் மாள
    எய்கின்றார் அல்லர்; ஈது எவ் இந்திரசாலம்? என்றான். 24

  969. போர் நிகழ்ச்சியை இந்திரசித்து வியந்து நோக்குதல்

  970. அம்பின் மா மழையை நோக்கும்; உதிரத்தின் ஆற்றை நோக்கும்;
    உம்பரின் அளவும் சென்ற பிணக் குன்றின் உயர்வை நோக்கும்,
    கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும்; கொன்ற
    தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும்; 25

  971. மலைகளை நோக்கும்; மற்று அவ் வான் உறக் குவிந்த வன் கண்
    தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி,
    உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்
    சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின் ஏற்கும்; 26

  972. ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
    ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும், அப்பால்
    போயின பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்;
    பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப் பரப்பைப் பார்க்கும்; 27

  973. அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
    எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு, படைகள் யாவும்,
    பொறி வனம் வெந்த போலச் சாம்பராய்ப் போயது அல்லால்,
    செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்; 28

  974. வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி,
    குயில் தலத்து உக்க என்னக் குழைகின்ற குழையை நோக்கும்;
    எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய்த் தலை இலா ஆக்கை ஈட்டம்
    பயிறலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும்; 29

  975. அங்கதர் அனந்த கோடி உளர் எனும்; அனுமன் என்பாற்கு
    இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும்;
    எங்கும் இம் மனிதர் என்பார் இருவரே கொல்! என்று உன்னும்;
    சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான். 30

  976. ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்; ஆங்கு அவர்கள் அள்ளித்
    தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள் நோக்கும்;
    பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை நோக்கும்;
    ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும். 31

  977. ஆயிர கோடித் தேரும் அரக்கரும் ஒழிய, வல்ல
    மா இருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும், வல்லை
    போயின குரக்குத் தானை புகுந்திலது அன்றே, பொன் தேர்த்
    தீயவன் தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா. 32

  978. அனுமன் தோள் கொட்டி ஆர்த்தலும், அரக்கர்கள் அஞ்சி நடுங்குதலும்

  979. தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,
    அளப்ப அருந் தேரின் உள்ள ஆயிர கோடி ஆக,
    துளக்கம் இல் ஆற்றல் வீரர் பொருத போர்த் தொழிலை நோக்கி,
    அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை மதலை ஆர்த்தான். 33

  980. ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
    தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி,
    பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர்; பைம் பொன் இஞ்சி
    ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார். 34

  981. இந்திரசித்து தான் ஒருவனாய் நின்று, இராம இலக்குவர் இருவரையும் எதிர்தல்

  982. அஞ்சினிர், போமின்; இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியற்பாலிர்
    வெஞ் சமம் விளைப்பது என்னோ? நீரும் இவ் வீரரோடு
    துஞ்சினிர் போலும் அன்றோ? என்று அவர்ச் சுளித்து நோக்கி,-
    மஞ்சினும் கரிய மெய்யான் - இருவர்மேல் ஒருவன் வந்தான். 35

  983. அக் கணத்து, ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும்
    புக்கன - நேமிப் பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன,
    திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய, பாரின்
    உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க. 36

  984. இந்திரசித்தின் தலையை வீழ்த்துவதாக இலக்குவன் சபதம் செய்தல்

  985. மாற்றம் ஒன்று, இளையவன் வளை வில் செங் கரத்து
    ஏற்றினன் வணங்கி நின்று, இயம்புவான்: இகல்-
    ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப, ஆர் அமர்
    தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால்; 37

  986. காக்கவும் கற்றிலன், காதல் நண்பரை;
    போக்கவும் கற்றிலன், ஒருவன்; போய்ப் பிணி
    ஆக்கவும் கற்றிலன்; அமரில் ஆர் உயிர்
    நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால்; 38

  987. இந்திரன் பகை எனும் இவனை, என் சரம்
    அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்,
    வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு
    மைந்தரில் கடை எனப் படுவன், வாழியாய்! 39

  988. நின்னுடை முன்னர், யான், நெறி இல் நீர்மையான் -
    தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால், -
    பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!-
    என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் அரோ. 40

  989. கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என்
    சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின்,
    முடிய ஒன்று உணர்ந்துவென்; உனக்கு நான் முயல்
    அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்! 41

  990. இளவலை இராமன் பாராட்டுதல்

  991. வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள்,
    அல்லல் நீங்கினம் என, அமரர் ஆர்த்தனர்;
    எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன;
    நல் அறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன். 42

  992. முறுவல் வாள் முகத்தினன், முளரிக்கண்ணனும்,
    அறிவென்; நீ, அடுவல் என்று அமைதி ஆம் எனின்,
    இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
    வெறுவியர்; வேறு இனி விளைவது யாது? என்றான். 43

  993. இராமனைத் தொழுது, இலக்குவன் போருக்கு எழுதல்

  994. சொல் அது கேட்டு, அடி தொழுது, சுற்றிய
    பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
    கொல்வென்; இங்கு அன்னது காண்டிகொல் எனா,
    ஒல்லையில் எழுந்தனன் - உவகை உள்ளத்தான். 44

  995. அங்கதன் ஆர்ப்பும், இராமனின் சங்கநாதமும்

  996. அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
    மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
    சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன்
    சங்கம் ஒன்று ஒலித்தனன், கடலும் தள்ளுற. 45

  997. அரக்கர் சேனையை இலக்குவன் அழித்தல்

  998. எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம்,
    முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை,
    கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம்,
    விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார். 46

  999. மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென,
    வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன;
    கான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின;-
    வேனிலான் அனையவன் பகழி வெம்மையால். 47

  1000. ஆயிரம் தேர், ஒரு தொடையின், அச்சு இறும்;
    பாய் பரிக் குலம் படும்; பாகர் பொன்றுவர்;
    நாயகர் நெடுந் தலை துமியும், நாம் அற;
    தீ எழும், புகை எழும், உலகும் தீயுமால். 48

  1001. அடி அறும் தேர்; முரண் ஆழி அச்சு இறும்;
    கடி நெடுஞ் சிலை அறும்; கவச மார்பு இறும்;
    கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர் தம்
    முடி அறும்; முரசு அறும்; முழுதும் சிந்துமால். 49

  1002. இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
    மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்
    என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் -
    சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால். 50

  1003. தந்தையர் தேரிடைத் தனயர் வன் தலை
    வந்தன; தாதையர் வயிர வான் சிரம்
    சிந்தின, காதலர்க்கு இயைந்த தேரிடை-
    அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன. 51

  1004. செம் பெருங் குருதியின் திகழ்ந்த, செங் கண் மீன்
    கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என-
    தும்பை அம் தொடையலர் தடக் கை, தூணி வாங்கு
    அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன. 52

  1005. தடிவன கொடுஞ் சரம் தள்ள, தள்ளுற
    மடிவன கொடிகளும், குடையும், மற்றவும்,
    வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில்
    படிவன, ஒத்தன, பறவைப் பந்தரே. 53

  1006. சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
    குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
    இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
    வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி. 54

  1007. சில்லி ஊடு அறச் சிதறின சில; சில, கோத்த
    வல்லி ஊடு அற, மறிந்தன; புரவிகள் மடியப்
    புல்லி மண்ணிடைப் புரண்டன சில; சில, போர் ஆள்
    வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய. 55

  1008. அலங்கு பல் மணிக் கதிரன, குருதியின் அழுந்தி,
    விலங்கு செஞ் சுடர் விடுவன, வெளி இன்றி மிடைந்த,-
    குலம் கொள் வெய்யவர் அமர்க் களத் தீயிடைக் குளித்த
    இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன-இரதம். 56

  1009. இராமன் அம்பு சொரிதலால் படைகள் யாவும் மடிய, இந்திரசித்து தனித்து நிற்றல்

  1010. ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி
    சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி;
    வான மானங்கள் மறிந்தெனத் தேர் எலாம் மடிய,
    தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன். 57

  1011. எவ்வாறு பொர நினைக்கின்றீர்? என, இராம இலக்குவரை இந்திரசித்து வினாவுதல்

  1012. பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை
    வல் விலங்கல்போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய,
    வில் இலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான்,
    சொல் விலங்கலன், சொல்லினன் - இராவணன் தோன்றல். 58

  1013. இருவிர் என்னொடு பொருதிரோ? அன்று எனின், ஏற்ற
    ஒருவிர் வந்து, உயிர் தருதிரோ? உம் படையோடும்
    பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்;
    தருவென், இன்று உமக்கு ஏற்றுளது யான் எனச் சலித்தான். 59

  1014. இலக்குவன் மறுமொழி பகர்தல்

  1015. வாளின், திண் சிலைத் தொழிலினின், மல்லினின், மற்றை
    ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில்
    கோளுற்று, உன்னொடு குறித்து, அமர் செய்து, உயிர் கொள்வான்
    சூளுற்றேன்; இது சரதம் என்று இலக்குவன் சொன்னான். 60

  1016. இந்திரசித்தின் மறுமொழி

  1017. முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து, உனக்குப்
    பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை
    முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல்,
    என், பிறந்ததனால் பயன் இராவணற்கு? என்றான். 61

  1018. இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன,
    இலக்கு வன் கணைக்கு ஆக்குவென்; இது புகுந்து இடையே
    விலக்குவென் என விடையவன் விலக்கினும், வீரம்
    கலக்குவென்; இது காணும், உன் தமையனும் கண்ணால். 62

  1019. அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்,
    இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க,
    மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள,
    வெறுவிது ஆக்குவென், உலகை இக் கணத்தின் ஓர் வில்லால். 63

  1020. கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அம்பிடைக் குறைத்த
    தம்பி, அல்லன் நான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்;
    எம்பிமாருக்கும், என் சிறு தாதைக்கும், இருவீர்
    செம் புணீர்கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான். 64

  1021. வீடணனே உங்கள் எல்லோருக்கும் இறுதிக் கடன் செய்வான் என, இலக்குவன் மொழிதல்

  1022. அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த,
    புரக்கும் நன் கடன் செய உளன், வீடணன் போந்தான்;
    சுரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்,
    இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும் என்றனன், இளையோன். 65

  1023. இந்திரசித்தும் இலக்குவனும் கடும் போர் புரிதல்

  1024. ஆன காலையின், அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று
    வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,
    பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,
    சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான். 66

  1025. அங்கதன் தன்மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,
    வெங் கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்
    சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உவப்பு இல செலுத்தி,
    எங்கும் வெங் கணை ஆக்கினன் - இராவணன் சிறுவன். 67

  1026. இளைய மைந்தன்மேல், இராமன்மேல், இராவணி இகலி,
    விளையும் வன் திறம் வானர வீரர்மேல், மெய் உற்று
    உளையும் வெஞ் சரம் சொரிந்தனன்; நாழிகை ஒன்று,
    வளையும் மண்டலப் பிறை என நின்றது, அவ் வரி வில். 68

  1027. பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
    உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
    கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
    அச்சம் உற்றனர், கண் புதைத்து அடங்கினர், அமரர். 69

  1028. மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
    தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி,
    ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறம் இலான் அறைந்த
    பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினின் புக்கான். 70

  1029. பிறகின் நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்;
    அறன் இது அன்று என, அரக்கன்மேல் சரம் தொடுத்து அருளான்;
    இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்;
    விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம். 71

  1030. மாடு எரிந்து எழுந்து, இருவர் தம் கணைகளும் வழங்க,
    காடு எரிந்தன; கன வரை எரிந்தன; கனக
    வீடு எரிந்தன; வேலைகள் எரிந்தன; மேகம்
    ஊடு எரிந்தன; ஊழியின் எரிந்தன, உலகம். 72

  1031. படம் கொள் பாம்பு-அணை துறந்தவற்கு இளையவன், பகழி,
    விடம் கொள் வெள்ளத்தின்மேல் அவன் விடுவன விலக்கி,
    இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும்
    மடங்கல் ஐ-இருநூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான். 73

  1032. தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த
    ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்;
    பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர் எனப் பதைத்தார்;
    சூர் அழிந்திடத் துரந்தனன், சுடு சரம் சொரிந்தான். 74

  1033. அற்ற தேர்மிசை நின்று, போர் அங்கதன் அலங்கல்
    கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து
    முற்ற, எண் இலா முரண் கணை தூர்த்தனன்; முரண் போர்,
    ஒன்றைச் சங்கு எடுத்து ஊதினான், உலகு எலாம் உலைய. 75

  1034. சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
    கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல,
    வெங் கடுங் கணை ஐ-இரண்டு உரும் என வீசி,
    சிங்கஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான். 76

  1035. இலக்குவனது வெற்றி கண்டு, வானரர் ஆர்த்தல்

  1036. கண்ட கார் முகில் வண்ணனும், கமலக் கண் கலுழ,
    துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற,
    அண்டம் உண்ட தன் வாயினால், ஆர்மின் என்று அருள,
    விண்டது அண்டது என்று, உலைந்திட ஆர்த்தனர், வீரர். 77

  1037. இலக்குவன், அயன் படை விட முயல இராமன் அதைத் தடுத்தல்

  1038. கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்;
    அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி,
    பண்ணவற்கு, இவன் பிழைக்குமேல், படுக்கும் நம் படையை;
    எண்ணம் மற்று இலை; அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான். 78

  1039. ஆன்றவன் அது பகர்தலும், அறநிலை வழா தாய்!
    ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், இவ் உலகம்
    மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகலது என்றான்,
    சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் தம்பி. 79

  1040. தெய்வப் படையை விட எண்ணிய இந்திரசித்து, மறைந்து இலங்கைக்கு செல்லுதல்

  1041. மறைந்துபோய் நின்ற வஞ்சனும், அவருடைய மனத்தை
    அறிந்து, தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான்,
    பிறிந்து போவதே கருமம், இப்பொழுது எனப் பெயர்ந்தான்;
    செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், சிரித்தார். 80

  1042. அஞ்சி ஓடியதாக எண்ணி, வானரர் மகிழ்ந்து ஆரவாரித்தல்

  1043. செஞ் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்மேல் செல்வான்,
    மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற,
    அஞ்சினான் மறைந்தான், அகன்றான் என, ஆர்த்தார்-
    வெஞ் சினம் தரு களிப்பினர், வானர வீரர். 81

  1044. உடைந்த வானரச் சேனையும், ஓத நீர் உவரி
    அடைந்தது ஆம் என வந்து, இரைந்து, ஆர்த்து, எழுந்து ஆடி,
    தொடர்ந்து சென்றது; கொற்றம் அன்று இளவற்குத் தோற்றான்
    கடைந்த வேலைபோல் கலங்குறும் இலங்கையில் கரந்தான். 82

  1045. இந்திரசித்தின் உட்கருத்தை உணராத இராம இலக்குவர் போர்க்கோலம் களைந்து நிற்றல்

  1046. எல் கொள் நான்முகன் படைக்கலம், இவர் என்மேல் விடா முன்,
    முற்கொள்வேன் எனும் முயற்சியன், மறை முறை மொழிந்த
    சொல் கொள் வேள்வி போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை
    மல் கொள் தோளவர் உணர்ந்திலர்; அவன் தொழில் மறந்தார். 83

  1047. அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி,
    தனுவும், வெங் கணைப் புட்டிலும், கவசமும், தடக் கைக்கு
    இனிய கோதையும், துறந்தனர், இருவரும்; இமையோர்
    பனி மலர் பொழிந்து ஆர்த்தனர்; வாழ்த்தினர் பல்கால். 84

  1048. சூரியன் மறைதல்

  1049. ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க,
    ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி;
    தீர்த்தன்மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்தப்
    பார்க்கிலேன்; முந்திப் படுவதே நன்று எனப் பட்டான். 85

  1050. இராமன் ஆணைப்படி சேனைகளுக்கு உணவு கொணர வீடணன் செல்லுதல்

  1051. இரவும் நன் பகலும் பெரு நெடுஞ் செரு இயற்றி,
    உரவு நம் படை மெலிந்துளது; அருந்துதற்கு உணவு
    வரவு தாழ்த்தது; வீடண! வல்லையின் ஏகி,
    தரவு வேண்டினென் என்றனன், தாமரைக்கண்ணன். 86

  1052. இன்னதே கடிது இயற்றுவென் எனத் தொழுது எழுத்து,
    பொன்னின் மௌலியன் வீடணன், தமரொடும், போனான்;
    கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையைக் கடந்தான்;
    அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான். 87

  1053. சேனைகளைக் காக்குமாறு இலக்குவனுக்கு இராமன் கட்டளையிட்டு,
    தெய்வப் படைகளுக்குப் பூசனை இயற்றச் செல்லுதல்

  1054. தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
    மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;
    ஐய! நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்,
    கை கொள் சேனையைக் கா எனப் போர்க்களம் கடந்தான். 88

  1055. நிகழ்ந்தவற்றை இந்திரசித்து இராவணனுக்குக் கூறி, தன் திட்டத்தைக் கூறல்

  1056. தந்தையைக் கண்டு, புகுந்துள தன்மையும், தன்மேல்
    முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும்,
    சிந்தையுள் புகச் செப்பினன்; அனையவன் திகைத்தான்,
    எந்தை! என், இனிச் செயத் தக்கது? இசை என, இசைத்தான். 89

  1057. தன்னைக் கொல்லுகை துணிவரேல், தனக்கு அது தகுமேல்,
    முன்னர்க் கொல்லுகை முயல்க! என்று அறிஞரே மொழிந்தார்;
    அந் நற் போர் அவர் அறிவுறாவகை மறைந்து, அயன் தன்
    வெல் நற் போர்ப் படை விடுதலே நலம்; இது விதியால். 90

  1058. தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல், அப் படை தொடுத்தே,
    தடுப்பர்; காண்பரேல், கொல்லவும் வல்லர், அத் தவத்தோர்;
    இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை; நல் வேள்வியை இயற்றி,
    முடிப்பேன், இன்று அவர் வாழ்வை, ஓர் கணத்து என மொழிந்தான். 91

  1059. என்னை அன்னவர் அறிந்திலாவகை செயல் இயற்ற,
    துன்னு போர்ப் படை முடிவு இலாது அவர்வயின் தூண்டின்,
    பின்னை, நின்றது புரிவென் என்று அன்னவன் பேச,
    மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம் மொழி வழங்கும்: 92

  1060. இராவணன், மகோதரனுக்கு இட்ட கட்டளை

  1061. வெள்ளம் நூறுடை வெஞ் சினச் சேனையை, வீர!
    அள் இலைப் படை அகம்பனே முதலிய அரக்கர்
    எள் இல் எண் இலர்தம்மொடு விரைந்தனை ஏகி,
    கொள்ளை வெஞ் செரு இயற்றுதி, மனிதரை குறுகி. 93

  1062. மாயை என்றன, வல்லவை யாவையும், வழங்கி,
    தீ இருட் பெரும் பிழம்பினை ஒழிவு அறத் திருத்தி,
    நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்;
    போய் உருத்து, அவர் உயிர் குடித்து உதவு எனப் புகன்றான். 94

  1063. மகோதரன் பெருஞ் சேனையோடு போர்க்குச் சென்ற காட்சி

  1064. என்ற காலையின் , என்று கொல் ஏவுவது? என்று,
    நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்;
    சென்று தேர்மிசை ஏறினன்; இராக்கதர் செறிந்தார்,
    குன்று சுற்றிய மத கரிக் குலம் அன்ன குறியார். 95

  1065. கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த
    ஆடல் ஆனைகள், அணிதொறும் அணிதொறும் அமைந்த;
    ஓடு தேர்க் குலம், உலப்பு இல, ஓடி வந்து உற்ற;
    கேடு இல் வாம் பரி, கணக்கையும், கடந்தன, கிளர்ந்த. 96

  1066. படைக்கலங்களும், பரு மணிப் பூண்களும், பரு வாய்
    இடைக் கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும், எறிப்ப,
    புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள,
    விடைக் குலங்கள் போல், இராக்கதப் பதாதியும் மிடைந்த. 97

  1067. கொடிக் குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள,
    இடிக் குழீஇ எழு மழைப் பெருங் குலங்களை இரித்த;
    அடிக் குழீஇயிடும் இடம்தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த
    பொடிக் குழீஇ, அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த. 98

  1068. ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி
    வான யாறுகள், வாசி வாய் நுறையொடு மயங்கி,
    கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன, கடுகிப்
    போன, போக்க அரும் பெருமைய, புணரியுள் புக்க. 99

  1069. தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ-சலத்தின்
    மடித்த வாயினர், வாள் எயிற்று அரக்கர், தம் வலத்தின்
    பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து,
    பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ. 100

  1070. சொன்ன நூறுடை வெள்ளம், அன்று இராவணன் துரந்த
    அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி,
    முன்னம் வேலையை முழுவதும் குடித்தது, முறை ஈது
    என்ன, மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது, அவ் இலங்கை. 101

  1071. சங்கு பேரியும், காளமும், தாளமும், தலைவர்
    சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
    பொங்கும் ஓதையும், புரவியின் அமலையும், பொலந் தேர்
    வெங் கண் ஓலமும், மால் என, விழுங்கிய உலகை. 102

  1072. அரக்கர்க்கும் வானரர்க்கும் நிகழ்ந்த பெரும் போர்

  1073. புக்கதால் பெரும் போர்ப் படை, பறந்தலைப் புறத்தில்;
    தொக்கதால், நெடு வானரத் தானையும் துவன்றி,
    ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தெழித்தன, உருமின்
    மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி. 103

  1074. குன்று கோடியும் கோடிமேல் கோடியும் குறித்த
    வென்றி வானர வீரர்கள், முகம்தொறும் வீச,
    ஒன்றின், நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்;
    பொன்றி வீழ்ந்தன, பொரு கரி, பாய் பரி, பொலந் தேர். 104

  1075. மழுவும், சூலமும், வலயமும், நாஞ்சிலும், வாளும்,
    எழுவும், ஈட்டியும், தோட்டியும், எழு முனைத் தண்டும்,
    தழுவும், வேலொடு கணையமும், பகழியும், தாக்க,
    குழவினோடு பட்டு உருண்டன, வானரக் குலங்கள். 105

  1076. முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும்,
    சக்கரங்களும், பிண்டிபாலத்தொடு தண்டும்,
    கப்பணங்களும், வளையமும், கவண் உமிழ் கல்லும்,
    வெற்புஇனங்களை நுறுக்கின; கவிகளை வீழ்த்த. 106

  1077. கதிர் அயில் படைக் குலம் வரன்முறை முறை கடாவ,
    அதிர் பிணப் பெருங் குன்றுகள் படப் பட, அழிந்த
    உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட,
    எதிர் நடக்கில, குரக்குஇனம்; அரக்கரும் இயங்கார். 107

  1078. மடிந்த வானரரும் அரக்கரும் தேவர்கள் ஆதல்

  1079. யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர், எவரும்
    தேவர் ஆதலின், அவரொடும் விசும்பிடைத் திரிந்தார்;
    மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி,
    ஆவி ஒன்றிடத் தழுவினர், பிரிவு நோய் அகன்றார். 108

  1080. சுரக்கும் மாயமும், வஞ்சமும், களவுமே, கடனா,
    இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா,
    அரக்கரைப் பெருந் தேவர்கள் ஆக்கின அமலன்
    சரத்தின், வேறு இனிப் பவித்திரம் உளது எனத் தகுமோ? 109

  1081. இலக்குவன் பெரும் போர் விளைவித்தல்

  1082. அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான்.
    இந்து வெள் எயிற்று அரக்கரும், யானையும், தேரும்,
    வந்த வந்தன, வானகம் இடம் பெறாவண்ணம்
    சிந்தினான் சரம், இலக்குவன், முகம்தொறும் திரிந்தான். 110

  1083. கும்பகருணன் களத்தில் இட்ட தண்டைக் கொண்டு அனுமன் பொருதல்

  1084. கும்பகன்னன் ஆண்டு இட்டது, வயிர வான் குன்றின்
    வெம்பு வெஞ் சுடர் விரிப்பது, தேவரை மேல்நாள்
    தும்பையின் தலைத் துரந்தது, சுடர் மணித் தண்டு ஒன்று,
    இம்பர் ஞாலத்தை நெளிப்பது, மாருதி எடுத்தான். 111

  1085. காற்று அன்று, இது கனல் அன்று என இமையோரிடை காணா
    ஏற்றம்கொடு, விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால்,
    சீற்றம் தனி உருவாய், இடை தேறாதது ஓர் மாறு ஆம்
    கூற்றம் கொடு முனை வந்தெனக் கொன்றான், இகல் வென்றான். 112

  1086. வெங் கண் மதமலைமேல், விரை பரிமேல், விடு தேர்மேல்,
    சங்கம் தரு படை வீரர்கள் உடல்மேல், அவர் தலைமேல்,
    எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும்
    செங் கண்ணவன் இவனே எனத் திரிந்தான் - கலை தெரிந்தான். 113

  1087. கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான், கனல் விழித்தான்;
    களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான், இரு கரத்தால்;
    வளர்ந்தான் நிலை உணர்ந்தார், உலகு ஒரு மூன்றையும் வலத்தால்
    அளந்தான் முனம் இவனே? என இமையோர்களும் அயிர்த்தார். 114

  1088. மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி மேல்
    முத்தின் பொலி முழு மேனியன், முகில் விண் தொடு மெய்யால்,
    ஒத்தக் கடையுகம் உற்றுழி, உறு கால் பொர, உடு மீன்
    தொத்தப் பொலி கனகக் கிரி வெயில் சுற்றியது ஒத்தான். 115

  1089. இடித்தான் நிலம் விசும்போடு என, இட்டான் அடி, எழுந்தான்;
    பொடித்தான், கடற் பெருஞ் சேனையை; பொலந் தண்டு தன் வலத்தால்
    பிடித்தான்; மத கரி, தேர், பரி, பிழம்பு ஆனவை குழம்பா
    அடித்தான்; உயிர் குடித்தான்; எடுத்து ஆர்த்தான்; பகை தீர்த்தான். 116

  1090. நூறாயிரம் மத மால் கரி, ஒரு நாழிகை நுவல்போது,
    ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான்,
    ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி,
    தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான். 117

  1091. தேர் ஏறினர், பரி ஏறினர், விடை ஏறினர், சின வெங்
    கார் ஏறினர், மழை ஏறினர், கலை எறினர், பல வெம்
    போர் ஏறினர், புகழ் ஏறினர், புகுந்தார் புடை வளைந்தார்;
    நேர் ஏறினர், விசும்பு ஏறிட, நெரித்தான், கதை திரித்தான். 118

  1092. சுக்கீரிவன் முதலிய வானரத்தலைவர், ஒருவரை ஒருவர் காணாராய்,
    அரக்கரின் படைக் கடலில் அமைதல்

  1093. அரி குல மன்னன், நீலன், அங்கதன், குமுதன், சாம்பன்,
    பரு வலிப் பனசன், என்று இப் படைத் தலை வீரர் யாரும்,
    பொரு சினம் திருகி, வென்றிப் போர்க் கள மருங்கில் புக்கார்;
    ஒருவரை ஒருவர் காணார்; உயர் படைக் கடலின் உள்ளார். 119

  1094. அனுமன்-அகம்பன் போர்

  1095. தொகும் படை அரக்கர் வெள்ளம் துறைதொறும் அள்ளித் தூவி,
    நகம் படை ஆகக் கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன,
    மிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி, வீர வாழ்க்கை
    அகம்பனைக் கண்டான், தண்டால் அரக்கரை அரைக்கும் கையான். 120

  1096. மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன், மனத்தின் செல்லும்
    தலைத் தடந் தேரன், வில்லன், தாருகன் என்னும் தன்மைக்
    கொலைத் தொழில் அவுணன்; பின்னை, இராக்கத வேடம் கொண்டான்,
    சிலைத் தொழில் குமரன் கொல்ல, தொல்லை நாள் செருவில் தீர்ந்தான். 121

  1097. பாகசாதனனும், மற்றைப் பகை அடும் திகிரி பற்றும்
    ஏக சாதனனும், மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும்
    போக; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக் கற்றாரே,
    ஆக; கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான். 122

  1098. யான் தடேன் என்னின், மற்று இவ் எழு திரை வளாகம் என் ஆம்?
    வான் தடாது; அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா,
    ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து, உருத்துச் சென்றான்;
    மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும், விரைவின் வந்தான். 123

  1099. தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கித் தெற்ற,
    காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன,
    வாரொடு தொடர்ந்த பைம் பொற் கழலினன் வருதலோடும்,
    சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான், வயிரத் தோளான். 124

  1100. எற்றின, எறிந்த, வல்லை ஏயின, எய்த, பெய்த,
    முற்றின படைகள் யாவும், முறை முறை முறிந்து சிந்த,
    சுற்றின வயிரத் தண்டால் துகைத்தனன், அமரர் துள்ள;
    கற்றிலன் இன்று கற்றான், கதையினால் வதையின் கல்வி. 125

  1101. அகம்பனும் காணக் காண, ஐ-இரு கோடிக் கைம்மா,
    முகம் பயில் கலினப் பாய்மா, முனை எயிற்று அரக்கர், மூரி
    நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன்; நூழில் தீர்த்தான்;-
    உகம் பெயர் ஊழிக் காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான். 126

  1102. இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி, வாள் இலங்கை வேந்தை
    வென்றியன் ஆக்கி, மற்றை மனிதரை வெறியர் ஆக்கி,
    நின்று உயர் நெடிய துன்பம் அமரர்பால் நிறுப்பென் என்னாச்
    சென்றனன் அகம்பன்; நன்று, வருக! என அனுமன் சேர்ந்தான். 127

  1103. படுகளப் பரப்பை நோக்கி, பாழி வாய் மடித்து, நூழில்
    சுடு கனற் பொறிகள் வெங் கண் தோன்றிட, கொடித் தேர் தூண்டி,
    விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி,
    முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான், முகிலின் ஆர்ப்பான். 128

  1104. சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும்
    தெரிந்தன -அசனி போலத் தெறு பொறி பிதிர்வ திக்கின்,
    வரிந்தன எருவை மானச் சிறைகளால், அமரர் மார்பை
    அரிந்தன, வடிம்பு பொன் கொண்டு அணிந்தன, வாங்கு கண்ண. 129

  1105. மார்பினும் தோளின்மேலும், வாளி வாய் மடுத்த வாயில்,
    சோர் பெருங் குருதி சோரத் துளங்குவான், தேறாமுன்னம்,
    தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த,
    சாரதி, புரள, வீரத் தண்டினால் கண்டம் செய்தான். 130

  1106. அகம்பன் தண்டு கொண்டு அனுமனுடன் பொருதல்

  1107. வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா, நிருதன் - வெய்ய
    மல்லினால் இயன்ற தோளான், வளியினால், வானத் தச்சன்
    கொல்லினால் இயன்றது, ஆங்கு, ஓர் கொடு முனைத் தண்டு கொண்டான்,-
    அல்லினால் வகுத்தது அன்ன மேனியான், முகிலின் ஆர்ப்பான். 131

  1108. தாக்கினார்; இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி;
    ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினார்; கிட்டினார்; கீழ்த்
    தூக்கினார்; சுழற்றினார், மேல்; சுற்றினார், எற்ற எற்ற;
    நீக்கினார்; நெருக்கினார்; மேல் நெருக்கினார்; நீங்கினார், மேல். 132

  1109. தட்டினார்; தழுவினார்; மேல் தாவினார்; தரையினோடும்
    கிட்டினார்; கிடைத்தார்; வீசிப் புடைத்தனர் கீழும் மேலும்
    கட்டினார்; காத்தார்; ஒன்றும் காண்கிலார், இறவு; கண்ணுற்று,
    ஒட்டினார்; மாறி வட்டம் ஓடினார்; சாரி போனார். 133

  1110. மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்,
    பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத,
    வெய்யவன், தன் கைத் தண்டால் விலக்கினான்; விலக்கலோடும்,
    கையொடும் இற்று, மற்று அக் கதை களம் கண்டது அன்றே. 134

  1111. கையொடு தண்டு நீங்க, கடல் எனக் கலக்கம் உற்ற
    மெய்யொடு நின்ற வெய்யோன், மிடலுடை இடக் கை ஓச்சி,
    ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன்; அடித்த ஓசை,
    ஒய்யென வயிரக் குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த. 135

  1112. அடித்தவன் தன்னை நோக்கி, அசனி ஏறு அனைய தண்டு
    பிடித்து நின்றேயும் எற்றான், வெறுங்கையான்; பிழையிற்று என்னா,
    மடித்து வாய், இடத்துக் கையால் மார்பிடைக் குத்த, வாயால்
    குடித்து நின்று உமிழ்வான் என்னக் கக்கினன், குருதி வெள்ளம். 136

  1113. அகம்பனை அனுமன் வீழ்த்துதல்

  1114. மீட்டும் அக் கையால் வீசி, செவித் தலத்து எற்ற, வீழ்ந்தான்;
    கூட்டினான் உயிரை; விண்ணோர் குழாத்திடை; அரக்கர் கூட்டக்
    காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன,
    ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன, திசைகள் எங்கும். 137

  1115. இலக்குவன் முதலியோரைப் பற்றிய செய்தி தெரியாமையால்,
    அனுமன் துயருடன் தேடிச் செல்லுதல்

  1116. ஆர்க்கின்ற குரலும் கேளான்; இலக்குவன் அசனி ஏற்றைப்
    பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான்; வீரன்
    யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன்; இசைப்பார் இல்லை;
    போர்க் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான். 138

  1117. அங்கதன் முதலியோர் நீண்ட தூரம் இடையிட்டு நின்று பொருதல்

  1118. வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்
    யோசனை ஏழு சென்றான் அங்கதன்; அதனுக்கு அப்பால்,
    ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன்; அப்பால்,
    ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான். 139

  1119. மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்;
    கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
    முற்றினன் - இரண்டு மூன்று காவதம் ஒழிய, பின்னும்
    சுற்றிய சேனை நீர்மேல் பாசிபோல் மிடைந்து சுற்ற. 140

  1120. இளையவன் நின்ற சூழல் எய்துவென், விரைவின் என்னா,
    உளைவு வந்து உள்ளம் தூண்ட, ஊழி வெங் காலின் செல்வான்,
    களைவு அருந் துன்பம் நீங்கக் கண்டனன் என்ப மன்னோ-
    விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய. 141

  1121. அனுமன் தூரத்தே இலக்குவன் போர் செய்யும் குறிகளைக் காணுதல்

  1122. ஆனையின் கோடும், பீலித் தழைகளும், ஆரத்தோடு
    மான மா மணியும், பொன்னும், முத்தமும், கொழித்து வாரி,
    மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர, வீசும்
    பேன வெண் குடைய ஆய, குருதிப் பேர் ஆறு கண்டான். 142

  1123. ஆசைகள் தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர் தம்மேல்
    வீசின பகழி, அற்ற தலையொடும் விசும்பை முட்டி,
    ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற, ஊழி நாளில்
    காசு அறு கல்லின் மாரி பொழிவபோல், விழுவ கண்டான். 143

  1124. அருளுடைக் குரிசில் வாளி, அந்தரம் எங்கும் தாம் ஆய்,
    தெருள் உறத் தொடர்ந்து வீசிச் செல்வன, தேவர் காண
    இருளிடைச் சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ணச்
    சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று எனச் சுடர்வ, கண்டான். 144

  1125. நெய் உறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என, பொருப்பின் ஓங்கும்
    மெய் உறக் குருதித் தாரை விசும்பு உற, விளங்கி நின்றது-
    ஐயனை, கங்குல் மாலை, அரசு என அறிந்து, காலம்,
    கை விளக்கு எடுத்தது என்ன-கவந்தத்தின் காடு கண்டான். 145

  1126. ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்,
    நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி,
    தாள் எலாம் குலைய ஓடித் திரிவன, தாங்கல் ஆற்றும்
    கோள் இலா மன்னன் நாட்டுக் குடி எனக் குலைவ கண்டான். 146

  1127. மிடல் கொளும் பகழி, வானின் மாரியின் மும்மை வீசி,
    மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட, உலைந்து மாண்டார்
    உடல்களும், உதிர நீரும், ஒளிர் படைக்கலமும், உற்ற
    கடல்களும், நெடிய கானும், கார் தவழ் மலையும், கண்டான். 147

  1128. சுழித்து எறி ஊழிக் காலத்து உரும் எனத் தொடர்ந்து தோன்ற,
    தழிக் கொண்ட குருதி வேலை தாவுவான்; தனிப் பேர் அண்டம்
    கிழித்தது, கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான்;
    அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான். 148

  1129. அனுமனைத் தழுவி, இலக்குவன் சேனையின் நிலைமையை உசாவுதல்

  1130. ஆர்த்த பேர் அமலை கேளா, அணுகினன் அனுமன்; எல்லா
    வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று, அகம் மகிழ்ந்து, வள்ளல்
    பார்த்தனன்; பாராமுன்னம் பணிந்தனன், விசயப் பாவை
    தூர்த்தனை; இளைய வீரன் தழுவினன், இனைய சொன்னான்: 149

  1131. அரி குல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
    பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே?
    விரி இருள் பரவைச் சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
    தெரிகிலென்; உரைத்தி என்றான், சென்னிமேல் கையன் சொல்வான். 150

  1132. அனுமனின் மறுமொழி

  1133. போயினார் போயவாறும், போயினது அன்றிப் போரில்
    ஆயினார் ஆயது ஒன்றும், அறிந்திலென், ஐய! யாரும்
    மேயினார் மேய போதே தெரியுறும், விளைந்தது என்றான் -
    தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னை. 151

  1134. மந்திரம் உளதால், ஐய! உணர்த்துவென்; மறைநூல் ஆய்ந்த
    சிந்தையின் உணர்ந்து, செய்யற்பாற்று எனின், செய்தி; தெவ்வர்
    தந்திரம் அதனைத் தெய்வப் படையினால் சமைப்பின் அல்லால்,
    எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை என்றான். 152

  1135. அனுமன் உரைத்தவண்ணம் இலக்குவன் சிவன் படையை வீசுதல்

  1136. அன்னது புரிவென் என்னா, ஆயிர நாமத்து அண்ணல்-
    தன்னையே தொழுது வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து வாங்கி,
    பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்தப் பற்றி,
    மின் எயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் - வில்லின் செல்வன். 153

  1137. முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில்
    புக்கது, ஓர் ஊழித் தீயின், புறத்து ஒன்றும் போகாவண்ணம்
    அக் கணத்து எரிந்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித்
    திக்கு எலாம் இருளும் தீர்ந்த; தேவரும் இடுக்கண் தீர்ந்தார். 154

  1138. தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
    மா பெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப் போனான்;
    ஏவரும் இரிந்தார் எல்லாம், இன மழை என்ன ஆர்த்து,
    கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார். 155

  1139. யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு, உவகை ஏற,
    தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
    காவல் போர்க் குரக்குச் சேனை கடல் எனக் கிளர்ந்து சுற்ற,
    பூ வர்க்கம் இமையோர் தூவ, பொலிந்தனன்; தூதர் போனார். 156

  1140. தூதர் சென்று, இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் செய்தி கூறுதல்

  1141. இலங்கையர் கோனை எய்தி, எய்தியது உரைத்தார், நீவிர்
    விலங்கினிர் போலும்; வெள்ளம் நூற்றை ஓர் வில்லின், வேழக்
    குலங்களினோடும் கொல்லக் கூடுமோ? என்ன, கொன்றை
    அலங்கலான் படையின் என்றார். அன்னதேல், ஆகும் என்றான். 157

  1142. வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை மாயத்
    தந்திரம் தெரிவான் போனான், உண்பன தாழ்க்க; தாழா
    எந்தை! ஈது இயன்றது என்றார், மகோதரன் யாண்டை? என்ன,
    அந்தரத்திடையன் என்றார். இராவணி, அழகிற்று! என்றான். 158

  1143. இந்திரசித்து பிரமாத்திரம் விடும் பொருட்டு வேள்வி செய்தல்

  1144. காலம் ஈது எனக் கருதிய இராவணன் காதல்,
    ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
    மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
    கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார். 159

  1145. அம்பினால் பெருஞ் சமிதைகள் அமைத்தனன்; அனலில்
    தும்பை மா மலர் தூவினன்; காரி எள் சொரிந்தான்;
    கொம்பு பல்லொடு, கரிய வெள்ளாட்டு இருங் குருதி,
    வெம்பு வெந் தசை, முறையின் இட்டு, எண்ணெயால் வேட்டான். 160

  1146. பிரமாத்திரத்துடன் வானில் சென்று, இந்திரசித்து மாயையினால் மறைந்திருத்தல்

  1147. வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கி,
    நலம் சுரந்தன பெருங் குறி முறைமையின் நல்க,
    குலம் சுரந்து எழு கொடுமையன், வரன்முறை கொண்டே,
    நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான். 161

  1148. விசும்பு போயினன், மாயைபின் பெருமையான்; மேலைப்
    பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
    அசும்பு விண்ணிடை அடங்கினன், முனிவரும் அறியாத்
    தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார. 162

  1149. மாயையினால் மகோதரன் இந்திர வடிவுடன் வந்து பொருதலும், வானரர் திகைத்தலும்

  1150. அனையன் நின்றனன்; அவ் வழி, மகோதரன் அறிந்து, ஓர்
    வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
    துனை வலத்து அயிராவதக் களிற்றின்மேல் தோன்றி,
    முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான். 163

  1151. அரக்கர், மானிடர், குரங்கு, எனும் இவை எலாம் அல்லா
    உருக்களாய் உள, யாவையும், உலகத்தின் உலவாத்
    தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் எனச் சமைத்தான்;
    வெருக்கொளப் பெருங் கவிப் படை குலைந்தது, விலங்கி. 164

  1152. கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின்மேல் கொண்டான்
    ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
    சேடர், சிந்தனை முனிவர்கள்; அமர் பொரச் சீறி,
    ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்? என உலைந்தார். 165

  1153. முனிவரும் வானவரும் வந்து பொரும் காரணம் பற்றி
    அனுமனை இலக்குவன் வினாவுதல்

  1154. அனுமன் வாள் முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
    தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தம்பி,
    முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
    துனி இது என்கொலோ? சொல்லுதி, விரைந்து எனச் சொன்னான். 166

  1155. இந்திரசித்து பிரமாத்திரத்தை இலக்குவன் மேல் விடுதலும்
    அதனால் நேர்ந்த விளைவுகளும்

  1156. இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
    முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்,
    பொன்னின் மால் வரைக் குரீஇ இனம் மொய்ப்பது போல,
    பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் கணை பாய்ந்த. 167

  1157. கோடி கோடி நூறாயிரம் கொடுங் கணைக் குழாங்கள்
    மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
    ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
    ஆடல் மாக் கரி சேவகம் அமைந்தென, அயர்ந்தான். 168

  1158. அனுமன், இந்திரன் வந்தவன் என்கொல், ஈது அமைந்தான்?
    இனி என்? எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான்;
    தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் கணை தைக்க,
    நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடு நிலம் சேர்ந்தான். 169

  1159. அருக்கன் மா மகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
    முருக்கின் கானகம் ஆம் என, குருதி நீர் மூட,
    தருக்கி, வெஞ் சரம் தலைத்தலை மயங்கின தைக்க,
    உருக்கு செம்பு அன கண்ணினன், நெடு நிலம் உற்றான். 170

  1160. அங்கதன், பதினாயிரம் அயில் கணை அழுந்த,
    சிங்க ஏறு இடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்;
    சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்,
    துங்க மார்பையும் தோளையும் வடிக் கணை துளைக்க. 171

  1161. நீலன், ஆயிரம் வடிக் கணை நிறம் புக்கு நெருங்க,
    காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்;
    ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்;
    கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான். 172

  1162. வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான்;
    வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார்;
    கால வெந் தொழில் கயவனும் வானகம் கண்டான்;
    மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான். 173

  1163. கனகன் ஆயிரம் கணை பட, விண்ணிடைக் கலந்தான்;
    அனகன் ஆயின சங்கனும் அக் கணத்து அயர்ந்தான்;
    முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்;
    புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப் புரண்டான். 174

  1164. விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன்,
    கெந்தமாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர,
    உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப,
    தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண் உறச் சாய்ந்தார். 175

  1165. மற்றை வீரர்கள் யாவரும் வடிக் கணை மழையால்
    முற்றும் வீந்தனர்; முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர்
    எற்று வான் திரைக் கடலொடும் பொருது சென்று ஏற,
    ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட. 176

  1166. தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும் படை தள்ளி;
    ஒளிக்க, மற்றொரு புகழிடம் உணர்கிலர்; உருமின்
    வளைத்து வீக்கிய வாளியால், மண்ணொடும் திண்ணம்
    முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த. 177

  1167. குவளைக் கண்ணினை வான் அர மடந்தையர் கோட்டித்
    துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதி நீர் சுற்றித்
    திவள, கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய,
    பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப் பரவை. 178

  1168. விண் சென்ற வானரர்க்குத் தேவர்கள் விருந்து செய்து பாராட்டுதல்

  1169. விண்ணில் சென்றது, கவிக் குலப் பெரும் படை வெள்ளம்;
    கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
    உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
    மண்ணில் செல்லுதிர், இக் கணத்தே எனும் மனத்தார். 179

  1170. பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்;
    நீர் படக் கடவீர் அலீர்;-வரி சிலை நெடியோன்
    பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார்,
    வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு. 180

  1171. நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர்;
    உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
    செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
    எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார். 181

  1172. இந்திரசித்து தந்தையின் இருப்பிடம் சென்று செய்தி சொல்லுதல்

  1173. வெங் கண் வானரக் குழுவொடும், இளையவன் விளிந்தான்;
    இங்கு வந்திலன், இராமன் இப்போது என இகழ்ந்தான்;
    சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்;
    பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான். 182

  1174. இராமன் இறந்திலனோ? என்ற இராவணன் வினாவுக்கு
    இந்திரசித்தின் மறுமொழி

  1175. இறந்திலன்கொலாம் இராமன்? என்று இராவணன் இசைத்தான்;
    துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து,
    சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க,
    மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்? என்றான், மதலை. 183

  1176. இந்திரசித்தும் மகோதரனும் தத்தம் இருப்பிடம் செல்லுதல்

  1177. அன்னதே என, அரக்கனும், ஆதரித்து அமைந்தான்;
    சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத் தொடர்ந்தான்;
    மன்னன் ஆணையின் போயினன், மகோதரன் வந்தான்;
    என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான். 184

  1178. இராமன் தெய்வப் படைகளுக்குப் பூசனை இயற்றி, போர்க்களம்
    நோக்கிப் புறப்படுதல்

  1179. செய்ய தாமரை நாள்மலர்க் கைத் தலம் சேப்ப,
    துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
    மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன்,
    மொய்கொள் போர்க் களத்து எய்துவாம் இனி என முயன்றான். 185

  1180. கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
    அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்;
    வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்;
    தள்ளி, தாமரைச் சேவடி நுடங்கிடத் தளர்ந்தான். 186

  1181. போர்க்களம் புகுந்த இராமன் சுக்கிரீவன் முதலிய படைத்
    தலைவர்களைத் தனித் தனிக் காணுதல்

  1182. நோக்கினான் பெருந் திசைதொறும்; முறை முறை நோக்கி,
    ஊக்கினான்; தடந் தாமரைத் திரு முகத்து உதிரம்
    போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்;
    காக்கும் வானரத் துணைவரைத் தனித் தனிக் கண்டான். 187

  1183. சுக்கிரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக் கண்
    உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;
    தக்கதோ, இது நினக்கு! என, தனி மனம் தளர்ந்தான்;
    பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான். 188

  1184. சுக்கிரீவன், அனுமன், முதலியோரின் நிலைமை கண்டு,
    இராமன் நொந்து புலம்புதல்

  1185. கடல் கடந்து புக்கு, அரக்கரைக் கருமுதல் கலக்கி,
    இடர் கடந்து நான் இருப்ப, நீ நல்கியது இதுவோ?
    உடல் கடந்தனவோ, உனை அரக்கன் வில் உதைத்த
    அடல் கடந்த போர் வாளி? என்று, ஆகுலித்து அழுதான். 189

  1186. முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,
    பின்னைச் சானகி உதவியும், பிழைத்தன, பிறிது என்?
    புன்மைச் செய் தொழில் என் வினைக் கொடுமையால் புகழோர்
    என்னைப் போல்பவர் ஆர் உளர், ஒருவர்? என்று இசைத்தான். 190

  1187. புன் தொழில் புலை அரசினை வெஃகினேன் பூண்டேன்;
    கொன்று ஒருக்கினென், எந்தையை; சடாயுவைக் குறைத்தேன்;
    இன்று ஒருக்கினென், இத்தனை வீரரை; இருந்தேன்!
    வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ? 191

  1188. தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை
    அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்;
    கமை பிடித்து நின்று, உங்களை இத்துணை கண்டேன்;
    சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் எனச் சொன்னான். 192

  1189. விடைக் குலங்களின் இடை ஒரு விடை கிடந்தென்ன,
    கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்;
    படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன், பழி பார்த்து,
    அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான். 193

  1190. இலக்குவனைக் கண்டு இராமன் அடைந்த துயரம்

  1191. உடலிடைத் தொடர் பகழியின் ஒளிர் கதிர்க் கற்றைச்
    சுடருடைய பெருங் குருதியில், பாம்பு எனச் சுமந்த
    மிடலுடைப் பண மீமிசை, தான் பண்டை வெள்ளக்
    கடலிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான். 194

  1192. பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான்;
    குரு மணித் திரு மேனியும், மனம் எனக் குலைந்தான்;
    தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர, சாய்ந்தான்;
    உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான். 195

  1193. உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்த்திலன் ஒன்றும்;
    வியர்த்திலன், உடல்; விழித்திலன், கண் இணை; விண்ணோர்,
    அயர்த்தனன் கொல்? என்று அஞ்சினர்; அங்கையும் தாளும்
    பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன் - கருணையால் பிறந்தான். 196

  1194. தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக் கை
    வாங்குவார் இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை;
    பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர்; பட்ட
    தீங்குதான் இது; தமியனை யார் துயர் தீர்ப்பார்? 197

  1195. கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணாச்
    சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
    உவந்த சாதகத்து ஈட்டமும், ஓரியின் ஒழுங்கும்,
    நிவந்த; அல்லது, பிறர் இல்லை, களத்திடை நின்றார். 198

  1196. வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழை நீர்
    சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்;
    ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும்
    ஞான நாயகன் உருவமே ஆதலின், நடுங்கி. 199

  1197. முகைய நாள்மலர்க் கிழவற்கும், முக்கணான் தனக்கும்,
    நகையும் நீங்கிய; திருமுகம், கருணையின் நலிந்த;
    தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என்? தொடர்ந்த
    பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது, பரிவால். 200

  1198. அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகக்
    கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
    விண்ணை உற்றனன்; மீள்கிலன் என்று, அகம் வெதும்பி,
    புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்: 201

  1199. இராமன் இலக்குவனைக் குறித்துப் புலம்புதல்

  1200. எந்தை இறந்தான் என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
    தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்;
    உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
    வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்! 202

  1201. தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
    சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
    போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
    நீயோ; யானோ, நின்றனென்; நெஞ்சம் வலியேனால். 203

  1202. ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
    ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்;
    ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
    கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே? 204

  1203. பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
    அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
    வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தாய்! மெலிவு எய்தி,
    துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ? 205

  1204. அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல்
    பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
    செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
    உயிரோ, நானோ, யாவர், உனக்கு இங்கு உறவு? அம்மா! 206

  1205. வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, ஓர் விடம் அம்மா
    வாழ்விக்கும்! என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
    சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
    தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்? 207

  1206. மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
    புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
    பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்;
    எண்மேல் வைத்த என் புகழ் நன்றால்! எளியேனோ! 208

  1207. மாண்டாய் நீயோ; யான் ஒரு போதும் உயிர் வாழேன்;
    ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ, பரதன் தான்!
    பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பப் பொறையாற்றார்;
    வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி, மெலிவுற்றால்? 209

  1208. அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால்,
    துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணை வந்து
    பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு அற்றாய்!
    இறந்தாய்; உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? 210

  1209. சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்டால்,
    ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்,
    மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்,
    தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா? 211

  1210. வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும்,
    காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
    மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
    வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா! 212

  1211. இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய
    பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனேல்,
    வருந்தேன்; நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன்;
    பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன்! 213

  1212. மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
    ஏது ஆனாரோ? என்று தளர்ந்தே இறுவாரை,
    தாதாய்! காணச் சால நினைந்தேன்; தளர்கின்றேன்;
    போதாய், ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்! 214

  1213. பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
    நாசம் உஞற்றிய போதும், நடந்தேன், உடன் அல்லேன்;
    நேசமும் அற்றோர் செய்வன செய்தேன்; தனி நின்றேன்;
    தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைச் சிரியாரோ? 215

  1214. கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
    முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
    படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்;
    ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்? 216

  1215. புலம்பிய இராமன் அறிவு சோர்ந்து துயில்தல்

  1216. என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
    சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
    பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி,
    ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான். 217

  1217. தேவர்கள் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்

  1218. கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
    கொண்டார், துன்பம்; என் முடிவு? என்னாக் குலைகின்றார்;
    அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
    உண்டோ , உன்பால் துன்பு? என அன்போடு உரை செய்தார். 218

  1219. உன்னை உள்ளபடி அறியோம்; உலகை உள்ள திறம் உள்ளோம்;
    பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம், பிறழாமல்;
    நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்,
    என்னை, அடியோம் செயற்பால? - இன்ப-துன்பம் இல்லோனே! 219

  1220. அரக்கர் குலத்தை வேரறுத்து, எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று
    இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை எய்தி,
    புரக்கும் மன்னர் குடிப் பிறந்து போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
    கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ? 220

  1221. ஈன்றாய்! இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி, அரசர் இல் பிறந்தாய்!
    மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம்;
    ஏன்றும் மறந்தோம், அவன் அல்லன்; மனிதன் என்றே; இம் மாயம்
    போன்றது இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ? 221

  1222. அண்டம் பலவும், அனைத்து உயிரும், அகத்தும் புறத்தும் உள ஆக்கி,
    உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும் புறத்தும் உளை ஆகிக்
    கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக் கூடு இயற்றி,
    பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய்-பரமேட்டி! 222

  1223. துன்ப விளையாட்டு இதுவேயும், நின்னைத் துன்பம் தொடர்பு இன்மை,
    இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதோருக்கு இடர் உறுமால்;
    அன்பின் விளைவும், அருள் விளைவும், அறிவின் விளைவும், அவை எல்லாம்,-
    முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடிந்தால் அன்றி, முடியாவே. 223

  1224. வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
    வெருவாதிருந்தோம்; நீ இடையே துன்பம் விளைக்க, மெலிகின்றோம்;
    கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இடரைக் காவாயேல்,
    திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ? 224

  1225. அம்பரீடற்கு அருளியதும், அயனார் மகனுக்கு அளித்ததுவும்,
    எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம்;
    வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றோம்;
    தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ? 225

  1226. இராவணனிடத்திற்குத் தூதர் சென்று, உன் பகை முடிந்தது என அறிவித்தல்

  1227. என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும் இடர் உழந்தார்;
    அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,
    துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
    புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம் புக்கார். 226

  1228. என் வந்தது, நீர்? என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப, எறி செருவில்,
    நின் மைந்தன் தன் நெடுஞ் சரத்தால், துணைவர் எல்லாம் நிலம்சேர,
    பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி, பெருந் துயரால்,
    முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார். 227

  1229. மிகைப் பாடல்கள்

  1230. பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
    கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
    வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
    அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே. 7-1

  1231. இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
    குமைத் தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து இன்று எம்மால்
    அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ ? மேரு என்று அமைந்த வில்லான்,
    உமைக்கு ஒரு பாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 21-1

  1232. தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்; தன் கைச்
    சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்; செய்த
    கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்;
    அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும். 25-1

  1233. ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
    பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
    சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
    தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான். 77-1

  1234. இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
    துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
    பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருகெனப் புகுந்து,
    தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான். 88-1

  1235. மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
    மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
    தூண்டின, கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த வாசி;-
    ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால். 137-1

  1236. அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல் ஆற்றல்
    பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல் கோடி,
    இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும் இன்றிப்
    பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும் நின்றான். 140-1

  1237. மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி
    ஆன வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
    மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல,
    கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான். 143-1

  1238. தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின் என்னச் சொன்னான்;
    ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
    ஆடவர் திலகன், யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
    வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின், விரைவின் என்றான். 157-1

  1239. தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும்,
    பின் தனி மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா
    எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன்; இது காணேன்;
    வந்தனென், எம்பி! வந்தனென், எந்தாய்! இனி வாழேன்! 202-1