Kamba Ramayanam yuththa kandam Part 4
கம்பராமாயணம் யுத்த காண்டம்
23. சீதை களம் காண் படலம் 24. மருத்துமலைப் படலம் 25. களியாட்டுப் படலம் 26. மாயா சீதைப் படலம் 27. நிகும்பலை யாகப் படலம் 28. இந்திரசித்து வதைப் படலம் 29. இராவணன் சோகப் படலம் 30. படைக் காட்சிப் படலம் 31. மூலபல வதைப் படலம் யுத்த காண்டம்23. சீதை களம் காண் படலம்
செய்தியைப் பறை அறைந்து அறிவிக்க இராவனன் கட்டளையிடுதல்பொய்யார் தூதர் என்பதனால், பொங்கி எழுந்த உவகையன் ஆய்,
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி, விளைந்தபடி
கை ஆர் வரைமேல் முரசு இயற்றி, நகரம் எங்கும் களி கூர,
நெய் ஆர் ஆடல் கொள்க! என்று, நிகழ்த்துக என்றான்; - நெறி இல்லான். 1
மாய்ந்த அரக்கர் உடலைக் கடலில் எறிதல்
அந்த நெறியை அவர் செய்ய, அரக்கன் மருத்தன் தனைக் கூவி,
முந்த நீ போய், அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின், சிரமும் வரமும் சிந்துவென் என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான். 2
அரக்கியர் சீதையை விமானத்தில் ஏற்றி, களத்திற்குக் கொண்டு செல்லுதல்
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம்
தையல் காணக் காட்டுமின்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து
ஐயம் நீங்காள் என்று உரைக்க, அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க் களத்தின்மிசை உய்த்தார். 3
சீதையின் துயரும், அது கண்ட மற்றவர் வருத்தமும்
கண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி, ஒன்றும் காணாதாள்;
உண்டாள் விடத்தை என, உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;
தண் தாமரைப் பூ நெருப்புற்ற தன்மை உற்றாள்; தரியாதாள்;
பெண்தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ! 4
மங்கை அழலும் - வான் நாட்டு மயில்கள் அழுதார்; மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள்;
கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடங் கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார். 5
பொன் தாழ் குழையாள்தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;
குன்றா மறையும், தருமமும், மெய் குலைந்து குலைந்து, தளர்ந்து அழுத;
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத; பின் என் பிறர் செய்கை?
நின்றார் நின்றபடி அழுதார்; நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார். 6
உணர்வு இழந்துப் பின் தெளிந்த சீதை ஏங்கி வருந்துதல்
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து, நெடும் பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார்; உயிர் வந்து ஏங்கினாள்;
கனத்தின் நிறத்தான் தனைப் பெயர்த்தும் கண்டாள்; கயலைக் கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் என, கண்ணைச் சிதையக் கையால் மோதினாள். 7
அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்; அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள், மின்போல்; உயிர் கரப்பச் சோர்ந்தாள்; சுழன்றால்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள், - குயில் அன்னாள். 8
விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
கொழுந்தா! என்றாள்; அயோத்தியர்தம் கோவே! என்றாள்; எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ! என்றாள்; சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்: 9
சீதை அரற்றுதல்
உற மேவிய காதல் உனக்கு உடையார்,
புறம் ஏதும் இலாரொடு, பூணகிலாய்;
மறமே புரிவார் வசமாயினையோ-
அறமே!-கொடியாய்; இதுவோ, அருள்தான்? 10
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்,
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ?
மதியேன் மதியேன் உனை - வாய்மை இலா
விதியே! - கொடியாய், விளையாடுதியோ? 11
கொடியேன் இவை காண்கிலேன்; என் உயிர் கோள்
முடியாய், நமனே! முறையோ! முறையோ!
விடியா இருள்வாய் எனை வீசினையே?-
அடியேன் உயிரே! அருள் நாயகனே! 12
எண்ணா, மயலோடும் இருந்தது நின்
புண் ஆகிய மேனி பொருந்திடவோ? -
மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!
கண்ணே! அமுதே! கருணாகரனே! 13
மேவிக் கனல் முன், மிதிலைப் பதி, என்
பாவிக் கை பிடித்தது, பண்ணவ! நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ?-அலர் வாழ்
தேவிக்கு அமுதே! மறையின் தெளிவே! 14
உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடு;
ஐயா! இளையோர் அவர் வாழ்கிலரால்;
மெய்யே, வினை எண்ணி, விடுத்த கொடுங்
கைகேசி கருத்து இதுவோ? - களிறே! 15
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும்,
வகையாது, தொடர்ந்து, ஒரு மான் முதலா,
புகை ஆடிய காடு புகுந்து, உடனே
பகை ஆடியவா! பரிவு ஏதும் இலேன்! 16
இன்று ஈகிலையேல், இறவு இவ் இடை; மான்
அன்று, ஈ எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது, நின்னை நெடுஞ் செருவில்,
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ? 17
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி, நெடுஞ்
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்;
மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் ஆன, என் மேனி பொருந்துதலால். 18
மேதா! இளையோய்! விதியார் விளைவால்,
போதா நெறி எம்மொடு போதுறுநாள்,
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும்,
மாதா உரையின்வழி நின்றனையோ? 19
பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்
கோவும் துயில, துயிலாய்! கொடியார்
ஏவு, உன் தலை வந்த இருங் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ? 20
திரிசடை சீதையின் மயக்கத்தைத் தீர்த்தல்
மழு வாள் உறினும் பிளவா மனனோடு
அழுவேன்; இனி, இன் இடர் ஆறிட, யான்
விழுவேன், அவன் மேனியின் மீதில் எனா,
எழுவாளை விலக்கி இயம்பினளால்; 21
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்
பாடு உற நீக்கி, நின்ற, பாவையைத் தழுவிக் கொண்டு,
கூடினாள் என்ன நின்று, செவியிடை, குறுகிச் சொன்னாள் -
தேடிய தெய்வம் அன்ன திரிசடை, மறுக்கம் தீர்ப்பாள். 22
மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள நினைத்தியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம்; ஒன்றும் அஞ்சலை, அன்னம் அன்னாய்! 23
கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்
அண்டர் நாயகன் தன் வீரத் தன்மையும், அயர்த்தாய்போலும்?
புண்டரீகற்கும் உண்டோ , இறுதி, இப் புலையர்க்கு அல்லால்? 24
ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை - மண்ணில் வந்தாய்! 25
ஓய்ந்துளன், இராமன், என்னின், உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என் ஆம்?
வீய்ந்துறும், விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்; வெருவல், அன்னை!
ஆய்ந்தவை உள்ள போதே, அவர் உளர்; அறமும் உண்டால். 26
மாருதிக்கு இல்லை அன்றே, மங்கை நின் வரத்தினாலே
ஆர் உயிர் நீங்கல்! நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமே?
சீரியது அன்று, இது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை
பேரும், இப்பொழுதே; தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ ? 27
தேவரைக் கண்டேன்; பைம் பொன் செங் கரம் சிரத்தில் ஏந்தி,
மூவரைக் கண்டாலென்ன, இருவரை முறையின் நோக்கி,
ஆவலிப்பு எய்துகின்றார்; அயர்த்திலர்; அஞ்சல்; அன்னை!
கூவலில் புக்கு, வேலை கோட்படும் என்று கொள்ளேல். 28
மங்கலம் நீங்கினாரை, ஆர் உயிர் வாங்கினாரை,
நங்கை! இக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்;
இங்கு, இவை அளவை ஆக, இடர்க் கடல் கடத்தி என்றாள்;
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள். 29
திரிசடையின் சொற்களால் தெளிவு பெற்ற சீதையின் உரை
அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம் உய்ந்தேன்;
இன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால்
முன்னமே முடிந்தது அன்றே? என்றனள் - முளரி நீத்தாள். 30
நாண் எலாம் துறந்தேன்; இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும்
பூண் எலாம் துறந்தேன்; என் தன் பொரு சிலை மேகம்தன்னைக்
காணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்;
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது, எனக்கு எனவும் சொன்னாள். 31
அரக்கியர் சீதையை மீண்டும் அசோக வனத்திற்கு கொண்டு செல்லுதல்
தையலை, இராமன் மேனி தைத்த வேல் தடங் கணாளை,
கைகளின் பற்றிக் கொண்டார், விமானத்தைக் கடாவுகின்றார்,-
மெய் உயிர் உலகத்து ஆக, விதியையும் வலித்து, விண்மேல்
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர் போன்றார். 32
யுத்த காண்டம்
24. மருத்துமலைப் படலம்
உணவு கொண்டுவந்து, பாசறையில் சேர்த்த வீடணன்
போர்க்களத்திற்குச் செல்லுதல்
போயினள் தையல்; இப்பால், புரிக எனப் புலவர் கோமான்
ஏயின கருமம் நோக்கி, ஏகிய இலங்கை வேந்தன்,
மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்ட
ஆயின ஆக்கி, தான் வந்து, அமர்ப் பெருங் களத்தன் ஆனான். 1
போர்க்கள நிலை கண்டு வருந்திய வீடணன் இலக்குவனுடனே
சாய்ந்து கிடந்த இராமனை அணுகுதல்
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ் உலகினைப் படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான், உணர்வு தீர்ந்தான். 2
விளைந்தவாறு உணர்கிலாதான், ஏங்கினான்; வெதும்பினான்; மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான்; ஆவி உண்டு, இலை என்ன, ஓய்ந்தான்;
வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;
இளங் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான். 3
வீடணன் இராமன் மேனியில் வடு இன்மையை உணர்ந்து, துயரம் தணிதல்
என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள் எல்லாம்,
பின்பு என்ப அல்லவேனும், தம்முடைய நிலையின் பேரா;
முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும் தெரிந்தவாற்றால்,
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே. 4
ஆயினும், இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி
போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித்
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன், தெரிய நோக்கி,
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான். 5
அயன் படையால் விளைந்தது என்பது உணர்ந்த வீடணன்,
அதனைத் தீர்க்கும் உபாயத்தை ஆராய்தல்
அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின் நோக்கி,
சிந்தையின் உணர எண்ணி, தீர்வது ஓர் உபாயம் தேர்வான். 6
உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ?
தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவென் அன்றே,
வள்ளலோ, தம்பி மாள வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்
கள்வனோ வென்றான்? என்றான், மழை எனக் கலுழும் கண்ணான். 7
பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும் இன்னே
நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை;
வீசும் போர்க் களத்து வீய்ந்த வீரரும் மீள்வர்; வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ ? என்றனன், நெறியில் நின்றான். 8
இறவாதவர் யாரேனும் உளரோ? என, வீடணன் தேடுதல்
உணர்வதன்முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளர் எனின், துருவித் தேடிக்
கொணர்குவென், விரைவின் என்னா, கொள்ளி ஒன்று அம் கைக் கொண்டான்
புணரியின் உதிர வெள்ளத்து, ஒரு தனி விரைவின் போனான். 9
அனுமனைக் கண்ட வீடணன், அம்புகளை நீக்கி, நீர் தெளித்து, மயக்கம் தெளிவித்தல்
வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச் செங் கண்
தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட
ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான்,
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான். 10
கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி கால,
உண்டு உயிர் என்பது உன்னி, உடற் கணை ஒன்று ஒன்று ஆக,
விண்டு உதிர் புண்ணின் நின்று மெல்லென விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல முகத்தினைக் குளிரச் செய்தான். 11
உணர்வு பெற்ற அனுமன், இராமனைப் பற்றி உசாவி அறிதல்
உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி
வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப்
பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக,
அயர்த்திலன் இராம நாமம், வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார். 12
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர,
தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, தக்கோய்!
வழு இலன் அன்றே, வள்ளல்? என்றனன்; வலியன் என்றான்;
தொழுதனன், உலகம் மூன்றும் தலையின் மேல் கொள்ளும் தூயான். 13
இருவரும் சாம்பனைத் தேடிச் சென்று அடைதல்
அன்பு தன் தம்பிமேல் ஆத்து, அறிவினை மயக்க, ஐயன்,
துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வு இனித் தொடர்ந்த பின்னே
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென்! என்றலோடும்,
தன் பெருந் தகைமைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்? என்றான். 14
அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென்; ஆவி யாக்கை
பிறிந்திலன், உளன் என்று ஒன்றும் தெரிந்திலென், பெயர்ந்தேன் என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய, காலின் செம்மல்,
இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி என்றான். 15
அன்னவன் தன்னைக் கண்டால், ஆணையே, அரக்கர்க்கு எல்லாம்
மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்
என்னலும், உய்ந்தோம், ஐய! ஏகுதும் விரைவின் என்றான்;
மின் எரி ஒளியில் சென்றார்; சாம்பனை விரைவில் கண்டார். 16
அம்பினால் வருந்தி மயங்கிய நிலையிலும், சாம்பன் செவி
வாயிலாக இருவரின் வருகையை உணர்தல்
எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும்,
அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும்
தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன் எனினும், வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால் - வயிரத் தோளான். 17
அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன் தானோ?
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ?
வரக் கடவார்கள், எல்லாம்; மாற்றலர், மலைந்து போனார்;
புரக்க உள்ளாரே! என்னக் கருதினன், பொருமல் தீர்ந்தான். 18
அனுமனின் வருகையால் சாம்பன் பெரு மகிழ்வு கொள்ளுதல்
வந்து அவண் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச்
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மைத் தேற்றி,
அந்தம் இல் குணத்திர்! யாவிர், அணுகினிர்? என்றான்; ஐய!
உய்ந்தனம்; உய்ந்தோம்! என்ற வீடணன் உரையைக் கேட்டான். 19
மற்று அயல் நின்றான் யாவன்? என்ன, மாருதியும், வாழி!
கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென் என்று கூற,
இற்றனம், ஐய! எல்லோம் எழுந்தனம், எழுந்தோம்! என்னா,
உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், உற்றம் மிக்கான். 20
இராமனின் நிலையை அறிந்த சாம்பன், மருத்துமலை கொணர வழி
கூறி அனுமனை ஏவுதல்
விரிஞ்சன் வெம் படை என்றாலும், வேதத்தின் வேதம் அன்ன
அரிந்தமன் தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்? தெரித்தி என்றான்;
பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும! என்றான். 21
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ? ஆக்கை வேறே;
இன் உயிர் ஒன்றே; மூலத்து இருவரும் ஒருவரேயால்;
என், அது கிடக்க; தாழா இங்கு, இனி இமைப்பின் முன்னர்,
கொன் இயல் வயிரத் தோளாய்! மருந்து போய்க் கொணர்தி என்றான். 22
எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும்,
வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி. 23
பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின் யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால், இமயம் எனும் குலவரையை உறுதி; உற்றால்,
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை; அது பின் தவிரப் போனால்,
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை, பொற்-கூடம் சென்று உறுதி, மொய்ம்ப! 24
இம் மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம், யோசனையின் நிடதம் என்னும்
செம் மலை; அம் மலைக்கும் அளவு அத்தனையே; அது கடந்தால், சென்று காண்டி,
எம் மலைக்கும் அரசு ஆய வடமலையை; அம் மலையின் அகலம் எண்ணின்,
மொய்ம் மலைந்த திண் தோளாய்! முப்பத்து ஈர் - ஆயிரம் யோசனையின் முற்றும்; 25
மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்;
மாருதி! மற்ரு அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்,
கார் வரையைக் காணுதி; மற்று, அது காண, இத் துயர்க்குக் கரையும் காண்டி; 26
அங்குள்ள மருந்துகளின் அடையாளம் முதலியவற்றைச் சாம்பன் தெரிவித்தல்
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், மெய் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.27
இன்ன மருந்து ஒரு நான்கும், பயோததியைக் கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்
உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர், இவ் உலகம் மூன்றும்
தன் இரு தாள் உள் அடக்கிப் பொலி போழ்தின், யான் முரசம் சாற்றும் வேலை,
அன்னவை கண்டு, உயாவுதலும், தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்; 28
இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்; இரங்கா, யார்க்கும்;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமிப் படையும் அவற்றுடனே நிற்கும்;
பொய்ம் மருங்கின் நில்லா தாய்! புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி,
கைம் மருங்கு உண்டாம்; நின்னைக் காயாவாம்; அப்புறம் போய்க் கரக்கும் என்றான். 29
மருந்து கொணர அனுமன் பெரு வடிவு கொண்டு, விரைந்து எழுதல்
ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தாரும் பிறந்தாரே; எம் கோற்கு யாதும்
தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய் எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான் -
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின; ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் - வேதம் போல்வான். 30
கோளோடு தாரகைகள், கோத்து அமைந்த மணி ஆரக் கோவை போன்ற;
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா;
தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது-ஆகியது இலங்கை; தடக் கை வீச,
நீளோடு திசை போதா; விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா! 31
வால் விசைத்து, கைந் நிமிர்த்து, வாயினையும் சிறிது அகல வகுத்து, மானக்
கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் விரித்து, கழுத்தினையும் சுரிக்கிக் காட்டி,
தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான், அவ் இலங்கை, துளங்கிச் சூழ்ந்த
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம்போல், சுரித்து உலைய,-விசையத் தோளான். 32
அனுமனின் வேகத்தால் நிகழ்ந்தவை
கிழிந்தன, மா மழைக் குலங்கள்; கீண்டது, நீள் நெடு வேலை; கிழக்கும் மேற்கும்
பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன, வானவர் மானம், ஆகாயத் திடையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல், கீறின போய்த் திசைகள் எல்லாம். 33
பாய்ந்தனன், அங்கு அப்பொழுதே; பரு வரைகள் எனைப் பலவும் படர ஆர்த்துச்
சாய்ந்தன; பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில், தாதை சால
ஓய்ந்தனன் என்று உரைசெய்ய, விசும்பூடு படர்கின்றான், உரு வேகத்தால்,
காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து எரிந்த, பெருங் கானம் எல்லாம். 34
கடல் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்
உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச் செல, செல்வான் உருவை நோக்கி,
அடல் முன்னே தொடங்கிய நாள், ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீரிடைப் படுத்து, பறித்தனன் நம் துயர் என்றார், தேவர் எல்லாம். 35
அனுமனைக் கண்ட வானுலகத்தவரின் கூற்று
மேகத்தின் பதம் கடந்து, வெங் கதிரும் தண் கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கும் அப்பால், வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி,
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்படப் போய், பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்றாம் என்ன, எழுந்து சென்றான். 36
வான நாட்டு உறைகின்றார், வயக் கலுழன் வல் விசையால், மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார், சிலர்; சிலர்கள், விரிஞ்சன் தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார்; சிலர் சிலர்கள், ஈசன் அல்லால்,
போன நாட்டிடை போக வல்லனோ? இவன் முக் கண் புனிதன் என்றார். 37
வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடுகின்றான்; மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார்; தெரிய நோக்கிக்
காண்டும் என இமைப்பதன்முன், கட் புலமும் கடந்து அகலும்; இன்னும் காண்மின்;
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார், மேன்மேல் உள்ளார். 38
உரு என்றார், சிலர் சிலர்கள்; ஒளி என்றார், சிலர் சிலர்கள் ஒளிரும் மேனி
அரு என்றார், சிலர் சிலர்கள்; அண்டத்தும் புறத்தும் நின்று, உலகம் ஆக்கும்
கரு என்றார், சிலர் சிலர்கள்; மற்று என்றார், சிலர் சிலர்கள்; கடலைத் தாவிச்
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார்-உலகு அனைத்தும் தெரியும் செல்வர். 39
அனுமன் சென்ற வேகத்தில் தோன்றிய ஒலி
வாச நாள் மலரோன் தன் உலகு அளவும் நிமிர்ந்தன, மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம,
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார்; விதிர் எறிந்தது, அண்டகோளம். 40
தேவர் முதலியோரின் மகிழ்ச்சி
தொடுத்த நாள்மாலை வானோர், முனிவரே முதல தொல்லோர்,
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால், அவுணர் வேந்தன்
கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது-அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு எல்லாம். 41
தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகினுள்ளார், உவகையால் தொடர்ந்து மொய்த்தார்;
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த,
பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான். 42
இமயம் கடந்து, கயிலையைக் கண்டு கைகூப்பி, அனுமன் செல்லுதல்
இமய மால் வரையை உற்றான்; அங்கு உள இமைப்பிலோரும்,
கமையுடை முனிவர், மற்றும் அறன் நெறி கலந்தோர், எல்லாம்,
அமைக, நின் கருமம்! என்று வாழ்த்தினர்; அதனுக்கு அப்பால்,
உமையொருபாகன் வைகும் கயிலை கண்டு, உவகை உற்றான். 43
வட குண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி, தாமரைக் கைகள் கூப்பி,
படர்குவான் தன்னை, அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான்;
தடமுலை உமைக்குக் காட்டி, வாயுவின் தனயன் என்றான். 44
உமையின் வினாவும், ஈசனது உரையும்
என், இவன் எழுந்த தன்மை? என்று, உலகு ஈன்றாள் கேட்ப,
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நன்னுதல்! நாமும் வெம் போர் காணுதும், நாளை என்றான். 45
ஏமகூடத்தைத் தாண்டி, அனுமன் மேரு மலையின் மீது போதல்
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன், இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;-
நேமியின் விசையின் செல்வான் - நிடத்ததின் நெற்றி உற்றான். 46
எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும், கடியன் ஆனான்,
மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன் வைகும்
விண்ணுக்கும், அளவை ஆன மேருவின்மீது சென்றான். 47
மேரு மலையில் அனுமன் பிரமன் முதலிய தேவர்களைக் கண்டு, வணங்கிச் செல்லுதல்
யாவதும் நிலைமைத் தன்மை இன்னது என்று, இமையா நாட்டத்
தேவரும் தெரிந்திலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில்,
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான். 48
அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி, அதன் நடு நாப்பண் ஆய
பொன் மலர்ப் பீடம் தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும்
தன்மையும் கண்டு, கையால் வணங்கினான் - தருமம் போல்வான். 49
தரு வனம் ஒன்றில், வானோர் தலைத்தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளப மோலி, மா நிலக் கிழத்தியோடும்
திருவோடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம் செய்தான். 50
ஆயதன் வட கீழ்ப் பாகத்து, ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய் கதிர் பரப்பி, ஐந்து கதிர் முகக் கமலம் காட்டி,
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த
சேயிழை பாகத்து, எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான். 51
சந்திரன் அனைய கொற்றத் தனிக் குடை தலைமேல் ஆக,
சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற,
அந்தர வான நாடர் அடி தொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான். 52
பூ அலர் அமைந்த பொற்பின் கிரணங்கள் பொலிந்து பொங்க,
தேவர்தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்,
மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான். 53
அத் தடங் கிரியை நீங்கி, அத் தலை அடைந்த வள்ளல்,
உத்தரகுருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செத்திய இருள் இன்றாக, விளங்கிய செயலை நோக்கி,
வித்தகன், விடிந்தது! என்னா, முடிந்தது, என் வேகம்! என்றான். 54
ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி, அல்லின்
பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்;
ஏது யான் செய்வது? என்னா, இடர் உற்றான், இணை இலாதான். 55
கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான், - கதிரின் செல்வன்
மேல் திசை எழுவான் அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினான், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினார் என்ன, துன்பம் தவிர்ந்தனன் - தவத்து மிக்கான். 56
உத்தரகுரு நாட்டைக் கண்டு, அனுமன் அப்பால் போதல்
இருவரே தோன்றி, என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி,
ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி,
பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர் வைகும்,
திரு உறை கமலம் அன்ன, நாட்டையும் தெரியக் கண்டான். 57
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி,
சென்னி நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன் தெய்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பை, புலன் கொள, நோக்கிப் போனான். 58
நீல மலைக்கு அப்பால் மருத்துமலையை அனுமன் காணுதல்
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும்
பெரியவன், அயனார் செல்வம் பெற்றவன், பிறப்பும் பேர்ந்தான்,
அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும்
கரியவன் என்ன நின்ற, நீல மால் வரையைக் கண்டான். 59
அல் குன்ற அலங்கு சோதி அம் மலை அகலப் போனான்,
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான், புலவன் சொன்ன
நல் குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன் - நாகம் முற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன. 60
மருத்துமலையைக் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்று,
அனுமன் அம் மலையைப் பெயர்த்தல்
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, தடுத்து வந்து,
காய்ந்தன, நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக! என்ன,
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறியச் சொன்னான். 61
கேட்டு அவை, ஐய! வேண்டிற்று இயற்றி, பின் கெடாமல் எம்பால்
காட்டு என உரைத்து, வாழ்த்திக் கரந்தன; கமலக்கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது; மண்ணின்நின்றும்
தோட்டனன், அனுமன், மற்று அக் குன்றினை, வயிரத் தோளால். 62
இங்கு நின்று, இன்னன மருந்து என்று எண்ணினால்,
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான்,
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான்,
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான். 63
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து,
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை,
ஏ எனும் மாத்திரத்து, ஒரு கை ஏந்தினான்,
தாயினன் - உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான். 64
அனுமனை அனுப்பியபின், சாம்பனும் வீடணனும் இராமனைச் சென்று காணுதல்
அத் தலை, அன்னவன் அனையன் ஆயினான்;
இத் தலை, இருவரும் இசைய எய்தினார்,
கைத் தலத்தால் அடி வருடும் காலையில்,
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம் அரோ. 65
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும்
கண்டன, கெழீஇ வரும் கருணை தாம் எனக்
கொண்டன, கொடுப்பன வரங்கள், கோள் இலாப்
புண்டரீகத் தடம் தருமம் பூத்தென; 66
நோக்கினன் - கரடிகட்கு அரசும், நோன் புகழ்
ஆக்கிய நிருதனும், அழுத கண்ணினார்,
தூக்கிய தலையினர், தொழுத கையினர்,
ஏக்கமுற்று, அருகு இருந்து, இரங்குவார்களை. 67
இருவரது நலனையும் இராமன் வினாவுதல்
ஏவிய காரியம் இயற்றி எய்தினை?
நோவிலை? வீடணா! என்று நோக்கி, பின்,
தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன் தன்னையும்,
ஆவி வந்தனைகொல்? என்று அருளினான் அரோ. 68
ஐயன்மீர்! நம் குலத்து அழிவு இது ஆதலின்,
செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டுஎனின்,
பொய் இலீர்! புகலுதிர், புலமை உள்ளத்தீர்! 69
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய
பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன்! உலகொடு இவ் உறாக்
காதை, வன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன். 70
மாயை இம் மான் என, எம்பி, வாய்மையான்,
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்,
போயினென்; பெண் உரை மறாது போனதால்,
ஆயது, இப் பழியுடை மரணம் - அன்பினீர்! 71
கண்டனென், இராவணன் தன்னைக் கண்களால்;
மண்டு அமர் புரிந்தனென், வலியின்; ஆர் உயிர்
கொண்டிலென், உறவு எலாம் கொடுத்து, மாள, நான்,
பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால். 72
தேவர்தம் படைக்கலம் தொடுத்து, தீயவன்
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும்,
ஆவதை இசைந்திலென், -அழிவது என்வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால். 73
நின்றிலென் உடன், நெறி படைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;
பொன்றினர் நமர் எலாம்; இளவல் போயினான்;
வென்றிலென் அரக்கனை, விதியின் வெம்மையால். 74
ஈண்டு, இவண் இருந்து, அவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று; இனி, அமரின் வீடிய
ஆண் தகை அன்பரை அமரர் நாட்டிடைக்
காண்டலே நலம்; பிற கண்டது இல்லையால். 75
எம்பியைத் துணைவரை இழந்த யான், இனி,
வெம்பு போர் அரக்கரை முருக்கி, வேர் அறுத்து,
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து,
உம்பருக்கு உதவி, மேல் உறுவது என் அரோ? 76
இளையவன் இறந்தபின், எவ்வம் என் எனக்கு?
அளவு அறு சீர்த்தி என்? அறன் என்? ஆண்மை என்?
கிளை உறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்?
விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்? 77
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு,
அரக்கரை வென்று நின்று, ஆண்மை ஆள்வெனேல்,
மரக் கண் வன் கள்வனே, வஞ்சனேன்; இனி,
கரக்குவது அல்லது, ஓர் கடன் உண்டாகுமோ? 78
தாதையை இழந்தபின், சடாயு இற்றபின்,
காதலின் துணைவரும் மடிய, காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய, கோள் இலன்,
சீதையை உவந்துளான் என்பர், சீரியோர். 79
வென்றனென், அரக்கரை வேரும் வீய்ந்து அறக்
கொன்றனென், அயோத்தியைக் குறுகினேன், குணத்து
இன் துணை எம்பியை இன்றி, யான் உளேன்;
நன்று, அரசாளும் அவ் அரசும் நன்று அரோ. 80
படியின்மேல் காதலின், யாதும் பார்க்கிலென்,
முடிகுவென், உடன் என முடியக் கூறலும்,
அடி இணை வணங்கிய சாம்பன், ஆழியாய்!
நொடிகுவது உளது என நுவல்வதாயினான்: 81
உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது, அது;
என் எனில், இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்;
பின்னரே தெரிகுதி; - தெரிவு இல் பெற்றியோய்! 82
அம்புயத்து அயன் படை ஆதல் தேறினென்,
உம்பியை, உலப்பு அரும் உருவை ஊன்றிட,
வெம்பு போர்க் களத்திடை வீழ்த்த வென்றியான்;
எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்; 83
அன்னவன் படைக்கலம், அமரர் தானவர் -
தன்னையும், விடின் உயிர் குடிக்கும்; தற்பர!
உன்னை ஒன்று இழைத்திலது, ஒழிந்து நீங்கியது;
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ? 84
பெருந் திறல் அனுமன், ஈண்டு உணர்வு பெற்றுளான்,
அருந் துயர் அளவு இலாது அரற்றுவானை, யான்,
மருந்து இறைப் பொழுதினில் கொணர்குவாய்! என,
பொருந்தினன், வட திசைக் கடிது போயினான். 85
பனி வரை கடந்தனன், பருப்பதங்களின்
தனி அரசின்புறம் தவிரச் சார்ந்துளன்,
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனி வரு துன்பம் நீ துறத்தி, தொல்லையோய்! 86
யான் அலால், எந்தையாய் உலகை ஈன்றுளான் -
தான் அலால், சிவன் அலால், நேமி தாங்கிய
கோன் அலால், எனைவரும் உணரும் கோள் இலர்,-
வேனிலான் மேனியாய்!-மருந்தை மெய் உற. 87
ஆர்கலி கடைந்த நாள், அமுதின் வந்தன;
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன;
மேருவின் உத்தரகுருவின்மேல் உள;
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின; 88
தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில;
ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்:
மூன்று என ஒன்றிய உலகம், முன்னை நாள்,
ஈன்றவன் இறப்பினும், ஆவி ஈயுமால், 89
சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்
புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின
நல் உயிர் ஈகுவது ஒன்று; நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று;-தொல்லையோய்! 90
வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி,
தரு நெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன்;
அருமையது அன்று எனா, அடி வணங்கினான்;
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான். 91
சாம்பனது உரை கேட்டு இராமன் மகிழும்போது, வட திசையிலே ஒலி எழுதல்
பொன் மலைமீது போய், போக பூமியின்
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும், விசும்பிடை எழுந்தது, ஈட்டு ஒலி. 92
வட திசையில் உற்ற சண்டமாருதத்தால் நேர்ந்த குழப்பம்
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர, கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடை
தடை இலாது உடற்றுறு சண்டமாருதம்
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால். 93
மீன் குலம் குலைந்து உக, வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ, தன்னுழை
மான் குலம் வெருக் கொள, மயங்கி, மண்டி, வான்,
தேன் குலம் கலங்கிய நறவின், சென்றவால். 94
வேர்த்தன தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன, மலையொடு மரனும், முன்புபோல்
தூர்த்தன, வேலையை; காலின் தோன்றலும்,
ஆர்த்தனன், அனையவர் அரந்தை ஆற்றுவான். 95
அனுமன் மலை கொண்டு வந்த தோற்றம்
மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும், மண்-
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள,
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்-
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே. 96
எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள்,
செறி சுடர் மந்தரம் தருதி, சென்று என,
வெறிது உலகு! எனக் கொடு, விசும்பின் மீச்செலும்
உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான். 97
பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள்,
ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன்,
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான். 98
அனுமன் வந்து, நிலத்தில் அடி இடுதல்
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன், நிலத்து அடி; கடவுள் ஓங்கல்தான்
வான் தனில் நின்றது, வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான். 99
மருத்துமலையினின்று வந்த காற்றுப் பட்டவுடன், யாவரும் உயிர் பெற்று எழுதல்
காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் -
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்,
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார். 100
அரக்கர் தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டன
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;
குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ? 101
சுழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்து
அழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள்
சுழன்றில;-உலகு எலாம் தொழுவ-தொங்கலின்
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான். 102
யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல்
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,-
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான்
யோகம் நீங்கினன் என, -இளவல் ஓங்கினான். 103
இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல்
ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர்
நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில,
தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர். 104
அரம்பையர் வாழ்த்து ஒலி, அமுத ஏழ் இசை,
நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா
விரும்பின; முனிவரும் வேதம் பாடினார். 105
வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன; தேவர் ஆர்த்தனர். 106
அயன்படை இராமனை வலம் வந்து, தொழுது அகல்தல்
உந்தினை பின் கொலை, ஒழிவு இல் உண்மையும்
தந்தனை நீ; அது நினக்குச் சான்று எனா,
சுந்தரவில்லியைத் தொழுது, சூழ வந்து,
அந்தணன் படையும் நின்று, அகன்று போயதால். 107
இராமன் அனுமனை மார்புறத் தழுவுதலும், அனுமன் இராமன் திருவடிகளை வணங்குதலும்
ஆய காலையின், அமரர் ஆர்த்து எழ,
தாயின் அன்பனைத் தழுவினான்,-தனி
நாயகன், பெருந் துயரம் நாம் அற,
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான். 108
எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான், உருகி, உள் உறத்
தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத்
தொழுத மாருதிக்கு, இனைய சொல்லுவான்: 109
இராமன் அனுமனைப் புகழ்ந்து, வாழ்த்துதல்
முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது,
என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்;
நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்! 110
அழியுங்கால் தரும் உதவிக்கு, ஐயனே!
மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே?
பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமை
வழியும் காத்து, நம் மரபும் காத்தனை. 111
தாழ்வும் ஈங்கு இறைப்பொழுது தக்கதே,
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட, வான்
ஏழும் வீயும்; என் பகர்வது?-எல்லை நாள்
ஊழி காணும் நீ, உதவினாய் அரோ! 112
இன்று வீகலாது, எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்;
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது, நீ
என்றும் வாழ்தியால் இனிது, என் ஏவலால்! 113
மற்றையோர்களும் அனுமனை வாழ்த்துதல்
மற்றையோர்களும், அனும் வண்மையால்,
பெற்ற ஆயுளார், பிறந்த காதலார்,
சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;
உற்றவாறு எலாம் உணரக் கூறினான். 114
மருத்துமலையை உரிய இடத்தில் மீண்டும் வைத்திடுமாறு சாம்பன் உரைக்க, அனுமன் போதல்
உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார்,
பொய்த்த சிந்தையார், இறுதல் போக்குமால்;
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்! 115
என்று சாம்பன் ஆண்டு இயம்ப, ஈது அரோ
நன்று, சால! என்று, உவந்து, ஒர் நாழிகைச்
சென்று மீள்வென் என்று எழுந்து, தெய்வ மாக்
குன்று தாங்கி, அக் குரிசில் போயினான். 116
மிகைப் பாடல்கள்
மூன்று அரத் தாவொடும் புல்லின் முன்னம் வந்து,
ஊன்றின நிலத்து அடி, கடவுள் ஓங்கருள்;
வான் தனி நின்றது; வஞ்சர் ஊர் வர,
ஏன்றிலது; ஆதலால், அனுமன் எய்தினான். 97-1
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்,
வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினை
நியங்கொடு தாங்கி விண் நின்றதால்; அதில்
இயங்கிய ஊதை வெங் களத்தின் எய்தவே. 99-1
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்பச் சேர்ந்து உறீஇ,
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர்
வந்து இரைந்து, ஆர்த்து, எழும்வகை செய்தான் அரோ. 99-2
யுத்த காண்டம்
25. களியாட்டுப் படலம்
அயன்படையால் பகை ஒழிந்தது என்று உவந்த இராவணன் மகளிரின் களியாட்டம் காணுதல்
இன்னது இத் தலையது ஆக, இராவணன் எழுந்து பொங்கி,
தன்னையும் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம்
கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக்
கன்னி நன் மயில் அன்னாரை நெடுங் களியாட்டம் கண்டான். 1
அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர்,
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர் கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார், சித்தர் தம் கன்னிமார்கள்,
வரம்பு அறு கம்மையோர்கள், மயில்-குலம் மருள, வந்தார். 2
மேனகை, இலங்குவாட் கண் திலோத்தமை, அரம்பை, மெல்லென்
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி, முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார் - சில் அரிச் சதங்கை பம்ப,
ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட, ஆடி. 3
தோடு உண்ட சுருளும், தூங்கும் குழைகளும், சுருளின் தோய்ந்த
ஏடு உண்ட பசும் பொன் பூவும், திலதமும், இலவச் செவ் வாய்
மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச் செங்கண்,
காடு உண்டு பரந்தது என்ன, முனிந்தது - கறை வெண் திங்கள். 4
முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும், மூரி
ஒளிப் பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும், ஒண் பொன்
விளக்கையும் விளக்கும் மேனி மிளிர் கதிர்ப் பரப்பும், வீச,
வளைத்த பேர் இருளும், கண்டோ ர் அறிவு என, மருளும் மாதோ. 5
கள் உண்ட வேகம் பரத்தலினால், களியாட்டு அயரும் மடவாரிடத்துத் தோன்றிய நிலைமைகள்
நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம். 6
பல பட முறுவல் வந்து பரந்தன; பனித்த, மெய் வேர்;
இலவு இதழ் துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற;
கொலை பயில் நயன வேல்கள் கொழுங் கடை சிவந்த; கொற்றச்
சிலை நிகர் புருவம் நெற்றிக் குனித்தன; விளர்த்த செவ் வாய். 7
கூந்தல் அம் பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க, யாணர்ப்
பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட
மாந் தளிர் எய்த, நொய்தின் மயங்கினர்-மழலைச் சொல்லார். 8
கோத்த மேகலையினோடும் துகில் மணிக் குறங்கைக் கூட,
காத்தன, கூந்தற் கற்றை, அற்றம், அத் தன்மை கண்டு -
வேத்தவை, கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார்; மேலாம்
சீர்த்தவர் செய்யத் தக்க கருமமே செய்தார் என்ன. 9
பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட
நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும்
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் - அனங்க வேள்தன்
தூணியின் அடைத்த அம்பின் கொடுந் தொழில் துறந்த கண்ணார். 10
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்,
சங்கை இல் பெரும் பாண் உற்ற துறைதொறும் திறம்பத் தள்ளி,
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன,
வெங் குரல் மடுத்த பாடல் விளித்தனர், மயக்கம் வீங்க. 11
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன, -
தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை சான்றோர், -
மான் அமர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி, வாயால்
ஆனையை விளம்பி, தேரை அபிநயம் தெரிக்கலுற்றார். 12
அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல் நின்றாரைத்
தொழுகுவார்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர் வாய் இன் தேன்
ஒழுகுவர்; ஒல்கி ஒல்கி, ஒருவர்மேல் ஒருவர் புக்கு,
முழுகுவர், குருதி வாட் கண் முகிழ்த்து, இடை, மூரி போவர். 13
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார், உள்ளத்து உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர் என்றே; அது களியாட்டம் ஆக,
செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திரு மறை முனிவர்க்கேயும்,
மயிர்ப்புறம்தோறும் வந்து பொடித்தன, காம வாரி. 14
மாப் பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங் குவளை வாட் கண்
சேப்புற, அரத்தச் செவ் வாய்ச் செங் கிடை வெண்மை சேர,
காப்பு உறு படைக் கைக் கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி,
பூப் பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர் பழனம் போன்ற. 15
கயல், வரு காலன் வை வேல், காமவேள் கணை, என்றாலும்,
இயல் வருகிற்கிலாத நெடுங் கணார், இணை மென் கொங்கைத்
துயல்வரு கனக நாணும், காஞ்சியும், துகிலும், வாங்கி,
புயல் பொரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார். 16
இராவணனது செவியில் வானரர் ஆர்த்த ஓசை புகுதல்
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார்,
இத் தன்மை எய்த நோக்கி, அரசு வீற்றிருந்த எல்லை,
அத் தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை
மத்தன் மெய் மயங்க வந்து, செவிதொறும் மடுத்தது அன்றே. 17
ஆடலும், களியின் வந்த அமலையும், அமுதின் ஆன்ற
பாடலும், முழவின் தெய்வப் பாணியும், பவள வாயார்
ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலை வெவ் உரையும், எல்லாம்
வாடல் மென் மலரே ஒத்த - ஆர்ப்பு ஒலி வருதலோடும். 18
இராம இலக்குவரின் நாண் ஒலி தோன்றுதல்
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க,
துறு சுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க,
செறி கழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது அன்றே-
எறி கடல் கடைந்த மேல்நாள், எழுந்த பேர் ஓசை என்ன. 19
களியாட்ட மகளிர்பால் வெறுப்புத் தோன்ற, இராவணன் இருந்த நிலை
முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர், முழுக் கண் வேலால்
குத்துவார், கூட்டம் எல்லாம் வானரக் குழுவின் தோன்ற,
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும், அந் நாள், பகல் ஒத்தது இரவும், பண்பால். 20
ஒற்றர்களால் செய்தி உணர்ந்த இராவணன் மந்திர மண்டபத்திற்குச் செல்லுதல்
ஈது இடை ஆக, வந்தார், அலங்கல்மீது ஏறினார்போல்
ஊதினார், வேய்கள், வண்டின் உருவினார், உற்ற எல்லாம்;
தீது இலர், பகைஞர் என்ன, திட்கென்ற மனத்தன், தெய்வப்
போது உகு பந்தர் நின்று, மந்திர இருக்கை புக்கான். 21
மிகைப் பாடல்கள்
வடித்திடும் அமுதத் தேறல் மாந்தினர் எவரும்; உள்ளம்
பிடித்தது களிப்பின் பெற்றி; பிறந்தது காம வேகம்;
எடுத்தனர், மகர யாழின் இன் இசை இனிமையோடு;
நடித்தனர், நங்கைமார்கள் நாடகத் தொகையின் பேதம். 3-1
யுத்த காண்டம்
26. மாயா சீதைப் படலம்
இராவணன் நேர்ந்துள்ள நிலைமையை உரைத்தல்
மைந்தனும், மற்றுளோரும், மகோதரப் பெயரினானும்,
தந்திரத் தலைமையோரும், முதியரும், தழுவத் தக்க
மந்திரர் எவரும், வந்து, மருங்கு உறப் படர்ந்தார்; பட்ட
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான். 1
மாலியவான் அறிவுரை
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட, நணுகும் அன்றே,
வெங் கொடுந் தீமைதன்னால் வேலையில் இட்டிலேமேல்?
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை,
பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால். 2
இலங்கையின்நின்று, மேரு பிற்பட, இமைப்பில் பாய்ந்து,
வலம் கிளர் மருந்து, நின்ற மலையொடும், கொணர வல்லான்
அலங்கல் அம் தடந் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் -
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால். 3
நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப்
பாரினில் கிழிய வீசின், ஆர் உளர், பிழைக்கற்பாலார்?
போர் இனிப் பொருவது எங்கே? போயின அனுமன், பொன் மா
மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர்மேல் விடும் எனின், விலக்கல் ஆமோ? 4
முறை கெட வென்று, வேண்டின் நினைந்ததே முடிப்பன்; முன்னின்,
குறை இலை குணங்கட்கு; என்னோ, கோள் இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது? எண் இலார் எண்ணமே தான்;-
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா. 5
இறந்தனர் இறந்து தீர; இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகின், உள்ளேம், உய்ந்தனம், பிழைக்கும் பெற்றி
மறந்தனம்; எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து, அவ்
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும், ஐய! 6
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து, வாரி
வேலையை வென்று, கும்பகருணனை வீட்டினானை,
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின் வெல்வார்?-
சூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத் தோளாய்! 7
மறி கடல் குடித்து, வானம் மண்ணோடும் பறிக்க வல்ல
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும்,
சிறுவனும் நீயும் அல்லால், யார் உளர், ஒருவர் தீர்ந்தார்?
வெறிது, நம் வென்றி என்றான், மாலி, மேல் விளைவது ஓர்வான். 8
இராவணன் வீரம் பேசுதல்
கட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி,
பட்டனர் அரக்கர் என்னின், படைக்கலம் படைத்த எல்லாம்
கெட்டன எனினும், வாழ்க்கை கெடாது; நல் கிளி அனாளை
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது, வேட்கை வீய? 9
மைந்தன் என்? மற்றையோர் என்? அஞ்சினிர்; வாழ்க்கை வேட்டீர்!
உய்ந்து நீர் போவீர்; நாளை, ஊழி வெந் தீயின் ஓங்கி,
சிந்தினென் மனித்தரோடு, அக் குரங்கினைத் தீர்ப்பென் என்றான்.
வெந் திறல் அரக்கர் வேந்தன், மகன் இவை விளம்பலுற்றான்: 10
நிகும்பலை வேள்வி குறித்து இந்திரசித்து இராவணனுக்குக் கூறுதல்
உளது நான் உணர்த்தற்பாலது, உணர்ந்தனை கோடல் உண்டேல்;
தள மலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி
அளவு இலது அமைய விட்டது, இராமனை நீக்கி அன்றால்;
விளைவு இலது, ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா! 11
மானிடன் அல்லன்; தொல்லை வானவன் அல்லன்; மற்றும்,
மேல் நிமிர் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யின் சொன்ன,
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே,-
தேன் நகு தெரியல் மன்னா!-சேகு அறத் தெரிந்தது அன்றே. 12
அனையது வேறு நிற்க; அன்னது பகர்தல் ஆண்மை
வினையன அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க! வீர!
இனையல் நீ; மூண்டு யான் போய், நிகும்பலை விரைவின் எய்தி,
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால், முடியும், துன்பம். 13
இராவணன் நிகும்பலை வேள்வி பற்றி கேட்டல்
அன்னது நல்லதேயால்; அமைதி என்று அரக்கன் சொன்னான்;
நல் மகன், உம்பி கூற, நண்ணலார் ஆண்டு நண்ணி,
முன்னிய வேள்வி முற்றாவகை செரு முயல்வர் என்னா,
என், அவர் எய்தாவண்ணம் இயற்றலாம் உறுதி? என்றான். 14
இந்திரசித்து உரைத்த உபாயம்
சானகி உருவமாகச் சமைத்து, அவள் தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே, வாளினால் கொன்று மாற்றி,
யான் நெடுஞ் சேனையோடும் அயோத்திமேல் எழுந்தேன் என்னப்
போனபின், புரிவது ஒன்றும் தெரிகிலர், துன்பம் பூண்பார். 15
இத் தலைச் சீதை மாண்டாள்; பயன் இவண் இல்லை என்பார்,
அத் தலை, தம்பிமாரும், தாயரும், அடுத்துளோரும்,
உத்தம நகரும், மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற,
பொத்திய துன்பம் மூள, சேனையும் தாமும் போவார். 16
போகலர் என்ற போதும், அனுமனை ஆண்டுப் போக்கி,
ஆகியது அறிந்தால் அன்றி, அருந் துயர் ஆற்றல் ஆற்றார்;
ஏகிய கருமம் முற்றி, யான் அவண் விரைவின் எய்தி,
வேக வெம் படையின் கொன்று, தருகுவென் வென்றி என்றான். 17
இராவணனது இசைவுடன் இந்திரசித்து மாயா சீதையைச் சமைக்கச்
செல்லுதலும், இராமன் அனுமதி பெற்று, இலங்கையைச் சுடுதற்குச்
சுக்கிரீவன் வானரங்களுடன் ஏகுதலும்
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய, அம் சொல்
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான்;
இன்னது இத் தலையது ஆக, இராமனுக்கு, இரவி செம்மல்,
தொல் நகர் அதனை வல்லைக் கடி கெடச் சுடுதும் என்றான். 18
அத் தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய, எண்ணி,
தத்தினன், இலங்கை மூதூர்க் கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான்;
பத்துடை ஏழு சான்ற வானரப் பரவை பற்றிக்
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது, எவ் உலகும் காண. 19
இலங்கையின் மதில் வாயிலில் சென்று, வானரங்கள் எரி கொள்ளியை வீசுதல்
எண் இல கோடிப் பல் படை யாவும்,
மண்ணுறு காவல் திண் மதில் வாயில்,
வெண் நிற மேகம் மின் இனம் வீசி
நண்ணின போல்வ, தொல் நகர் நாண. 20
ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி,
மாசு அறு தானை மர்க்கட வெள்ளம்,
நாசம் இவ் ஊருக்கு உண்டு என, நாளின்
வீசின, வானின் மீன் விழும் என்ன. 21
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை,
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி,
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்
செஞ் சரம் என்னச் சென்றன மேன்மேல். 22
இலங்கையில் தீ பரவுதல்
கை அகல் இஞ்சிக் காவல் கலங்க,
செய்ய கொழுந் தீ சென்று நெருங்க,
ஐயன் நெடுங் கார் ஆழியை அம்பால்
எய்ய எரிந்தால் ஒத்தது, இலங்கை. 23
பரல் துறு தொல் பழுவத்து எரி பற்ற,
நிரல் துறு பல் பறவைக் குலம், நீளம்
உரற்றின, விண்ணின் ஒலித்து எழும் வண்ணம்
அரற்றி எழுந்தது, அடங்க இலங்கை, 24
இராமன் அம்பினால் கோபுரம் இற்று விழுதல்
மூஉலகத்தவரும், முதலோரும்
மேவின வில் தொழில் வீரன் இராமன்,
தீவம் எனச் சில வாளி செலுத்த,
கோபுரம் இற்று விழுந்தது, குன்றின். 25
மருத்துமலையை உரிய இடத்தில் சேர்த்து மீண்ட அனுமனின் ஆர்ப்பொலியால் இலங்கை நடுங்குதல்
இத் தலை, இன்ன நிகழ்ந்திடும் எல்லை,
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான்,
உய்த்த பெருங் கிரி மேருவின் உப் பால்
வைத்து, நெடுந் தகை மாருதி வந்தான். 26
அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான்;
உறை அரவம் செவி உற்றுளது, அவ் ஊர்;
சிறை அரவக் கலுழன் கொடு சீறும்
இறை அரவக் குலம் ஒத்தது, இலங்கை. 27
அனுமன் முன்னிலையில், இந்திரசித்து மாயாசீதையைப் பற்றிச் சென்று, இவளைக் கொன்றுவிடுவேன் எனல்
மேல் திசை வாயிலை மேவிய வெங் கண்
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் -
மாற்றல் இல் மாயை வகுக்கும் வலத்தான்,
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான். 28
சானகி ஆம்வகை கொண்டு சமைத்த
மான் அனையாளை வடிக் குழல் பற்றா,
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்,
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான்: 29
வந்து, இவள் காரணம் ஆக மலைந்தீர்;
எந்தை இகழ்ந்தனன்; யான் இவள் ஆவி
சிந்துவென் என்று செறுத்து, உரை செய்தான்;
அந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான். 30
அனுமன் துயர்கொண்டவனாய், இந்திரசித்திடம் சீதையைக் கொல்ல வேண்டாம் என வேண்டுதல்
கண்டவளே இவள் என்பது கண்டான்,
விண்டதுபோலும், நம் வாழ்வு என வெந்தான்;
கொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்,
உண்டு உயிரோ! என, நாவும் உலர்ந்தான். 31
யாதும் இனிச் செயல் இல் என எண்ணா,
நீதி உரைப்பது நேர் என, ஓரா,
கோது இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்!
மாதை ஒறுத்தல் வசைத் திறம் அன்றோ? 32
நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்;
நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்;
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ,
மால் முகம் உற்று, ஒரு மாதை வதைத்தல்? 33
மண் குலைகின்றது; வானும் நடுங்கிக்
கண் குலைகின்றது; காணுதி, கண்ணால்;
எண் குலைநெஞ்சில் இரங்கல் துறந்தாய்!
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ? 34
என்வயின் நல்கினை ஏகுதி என்றால்,
நின் வயம் ஆம், உலகு யாவையும்; நீ நின்
அன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா!
பன்மை தொடங்கல்; புகழ்க்கு அழிவு அன்றோ? 35
சீதையை வெட்டி, அயோத்தி சென்று, யாவற்றையும் எரிப்பேன் என இந்திரசித்து கூறுதல்
எந்தை உவந்த இலங்கிழைதன்னை,
தந்தனென் என்று, தரும் புகழ் உண்டோ?
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான்,
இந்திரசித்தவன் இன்ன இசைத்தான்: 36
போமின், அடா! வினை போயது போலாம்;
ஆம் எனில், இன்னும் அயோத்தியை அண்மி,
காமின்; அது இன்று கனல் கரி ஆக
வேம்; அது செய்து, இனி மீள்குவென் என்றான். 37
தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்,
உம்பர் விலக்கிடினும், இனி உய்யார்;
வெம்பு கடுங் கனல் வீசிடும் என் கை
அம்புகளோடும் அவிந்தனர் அம்மா! 38
இப்பொழுதே கடிது ஏகுவென், யான்; இப்
புட்பக மானம் அதில் புக நின்றேன்;
தப்புவரே அவர், சங்கை இலா என்
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால்? 39
மாயாசீதையை வெட்டி இந்திரசித்து, சேனைகளுடன் புட்பக விமானத்தில் வடக்கு நோக்கி எழுதல்
ஆளுடையாய்! அருளாய், அருளாய்! என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்,
வாளின் எறிந்தனன்; மா கடல் போலும்
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான். 40
தென் திசை நின்று வடாது திசைக்கண்
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான்;
ஒன்றும் உணர்ந்திலன், மாருதி, உக்கான்,
வென்றி நெடுங் கிரி போல விழுந்தான். 41
அனுமனுக்குப் போக்குக் காட்டி இந்திரசித்து நிகும்பலை புகுதல்
போய், அவன் மாறி நிகும்பலை புக்கான்;
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்;
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்;
ஏயன பன்னினன், இன்னன சொன்னான்: 42
அனுமன் துயருற்று அரற்றுதல்
அன்னமே! என்னும்; பெண்ணின் அருங் குலக் கலமே! என்னும்;
என் அமே! என்னும்; தெய்வம் இல்லையோ, யாதும்? என்னும்;
சின்னமே செய்யக் கண்டும், தீவினை நெஞ்சம் ஆவி
பின்னமே ஆயதுஇல்லை என்னும்-பேர் ஆற்றல் பேர்ந்தான். 43
எழுந்து, அவன்மேலே பாய எண்ணும்; பேர் இடரில் தள்ளி
விழுந்து, வெய்து உயிர்த்து, விம்மி, வீங்கும்; போய் மெலியும்; வெந் தீக்
கொழுந்து உக உயிர்க்கும்; யாக்கை குலைவுறும்; தலையே கொண்டுற்று
உழும் தரைதன்னை; பின்னும் இனையன உரைப்பதானான்: 44
முடிந்தது நம்தம் எண்ணம்; மூஉலகிற்கும் கங்குல்
விடிந்தது என்று இருந்தேன்; மீள வெந் துயர் இருளின் வெள்ளம்
படிந்தது; வினையச் செய்கை பயந்தது; பாவி! வாளால்
தடிந்தனன் திருவை! அந்தோ, தவிர்ந்தது தருமம் அம்மா! 45
பெருஞ் சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணின் கொல்ல,
இருஞ் சிறகு அற்ற புள் போல், யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்;
இருஞ் சிறை அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவி பட்ட
அருஞ் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும், அம்மா! 46
பாதக அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை,
பேதையை, குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை, பெண்ணை,
சீதையை, திருவை, தீண்டிச் சிறை வைத்த தீயோன் சேயே
காதவும், கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா! 47
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன் ஆகி,
சொல்விக்க வந்து போனேன், நோவுறு துயர் செய்தாரை
வெல்விக்க வந்து, நின்னை மீட்பிக்க அன்று; வெய்தின்
கொல்விக்க வந்தேன் உன்னை; கொடும் பழி கூட்டிக் கொண்டேன். 48
வஞ்சியை எங்கும் காணாது, உயிரினை மறந்தான் என்ன,
செஞ் சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற,
அம் சொலாள் இருந்தாள்; கண்டேன் என்ற யான், அரக்கன் கொல்லத்
துஞ்சினாள் என்றும் சொல்லத் தோன்றினேன்; தோற்றம் ஈதால்! 49
அருங் கடல் கடந்து, இவ் ஊரை அள் எரி மடுத்து, வெள்ளக்
கருங் கடல் கட்டி, மேருக் கடந்து ஒரு மருந்து காட்டி,
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என, களிப்புக் கொண்டேன்;
பெருங் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது, என் அடிமைப் பெற்றி! 50
விண்டு நின்று ஆக்கை சிந்தப் புல் உயிர் வீட்டிலாதேன்,
கொண்டு நின்றானைக் கொல்லக் கூசினேன்! எதிரே கொல்லக்
கண்டு நின்றேன்! மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு
உண்டு நின்று, உய்ய வல்லேன்; எளியனோ? ஒருவன் உள்ளேன்! 51
என்ன நின்று இரங்கி, கள்வன், அயோத்திமேல் எழுவென் என்று
சொன்னதும் உண்டு; போன சுவடு உண்டு; தொடர்ந்து செல்லின்,
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன்; வருவது ஓரேன்;
பின் இனி முடிப்பது யாது? என்று இரங்கினான், உணர்வு பெற்றான். 52
அனுமன் இராமன் எதிரே சென்று, துயரச் செய்தியை அறிவித்துப் பொருமுதல்
உற்றதை உணர்த்தி, பின்னை உலகுடை ஒருவனோடும்,
இற்று உறின், இற்று மாள்வென்; அன்று எனின், என்னை ஏவின்,
சொற்றது செய்வென்; வேறு ஓர் பிறிது இலை, துணிவது என்னா,
பொன் தடந் தோளான், வீரன் பொன் அடி மருங்கில், போனான். 53
சிங்கஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான்,
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்,
பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப,
வெங் கண் நீர் அருவி சோர, மால் வரை என்ன வீழ்ந்தான். 54
வீழ்ந்தவன் தன்னை, வீரன், விளைந்தது விளம்புக! என்னா,
தாழ்ந்து, இரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான்,
ஆழ்ந்து எழு துன்பத்தாளை, அரக்கன், இன்று, அயில் கொள் வாளால்
போழ்ந்தனன் என்னக் கூறி, புரண்டனன், பொருமுகின்றான். 55
இராமனும் வானரர் முதலியோரும் உற்ற துயரம்
துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்; இமைத்திலன்; துள்ளிக் கண்ணீர்
பொடித்திலன்; யாதும் ஒன்றும் புகன்றிலன்; பொருமி, உள்ளம்
வெடித்திலன்; விம்மிப் பாரின் வீழ்ந்திலன்; வியர்த்தான் அல்லன்;
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர், அமரரேயும். 56
சொற்றது கேட்டலோடும், துணுக்குற, உணர்வு சோர,
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா,
கற்பகம் அனைய வள்ளல் கருங் கழல் கமலக் கால்மேல்
வெற்புஇனம் என்ன வீழ்ந்தார், வானர வீரர் எல்லாம். 57
இராமன் உயிர்ப்பு இன்றித் தரையில் சாய, இலக்குவனும் துயர மிகுதியால் தரையில் விழுதல்
சித்திரத் தன்மை உற்ற சேவகன், உணர்வு தீர்ந்தான்,
மித்திரர் வதனம் நோக்கான், இளையவன் வினவப் பேசான்,
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க, உயிர் இலன் என்னச் சாய்ந்தான். 58
நாயகன் தன்மை கண்டும், தமக்கு உற்ற நாணம் பார்த்தும்,
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும்,
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும், மயர்ந்து சாம்பி,
தாயினை இழந்த கன்றின், தம்பியும் தலத்தன் ஆனான். 59
நடந்தது குறித்து ஐயம் கொண்ட வீடணன் மூர்ச்சை தெளிவிக்க, இராமன் உணர்வு பெறுதல்
தொல்லையது உணரத் தக்க வீடணன், துளக்கம் உற்றான்,
எல்லை இல் துன்பம் ஊன்ற, இடை ஒன்றும் தெரிக்கிலாதான்,
வெல்லவும் அரிது; நாசம் இவள்தனால் விளைந்தது என்னா,
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான். 60
சீத நீர் முகத்தின் அப்பி, சேவகன் மேனி தீண்டி,
போதம் வந்து எய்தற்பால யாவையும் புரிந்து, பொன் பூம்
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்,
வேதமும் காணா வள்ளல் விழித்தனன், கண்ணை மெல்ல. 61
இலக்குவனின் தேறுதல் மொழி
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து, உற்றது எண்ணி,
ஆற்றுவான் அல்லன் ஆகி, அயர்கின்றான் எனினும், ஐயன்,
மாற்றுவான் அல்லன்; மானம் உயிர் உக வருந்தும் என்னா,
தேற்றுவான் நினைந்து, தம்பி இவை இவை செப்பலுற்றான்; 62
முடியும் நாள் தானே வந்து முற்றினால், துன்ப முந்நீர்
படியுமாம், சிறியோர் தன்மை; நினக்கு இது பழியிற்றாமால்;
குடியும் மாசு உண்டது என்னின், அறத்தொடும் உலகைக் கொன்று,
கடியுமாறு அன்றி, சோர்ந்து கழிதியோ, கருத்து இலார்போல்? 63
தையலை, துணை இலாளை, தவத்தியை, தருமக் கற்பின்
தெய்வதம்தன்னை, மற்று உன் தேவியை, திருவை, தீண்டி,
வெய்யவன் கொன்றான் என்றால், வேதனை உழப்பது, இன்னம்
உய்யவோ? கருணையாலோ? தருமத்தோடு உறவும் உண்டோ ? 64
அரக்கர் என், அமரர்தாம் என், அந்தணர் தாம் என், அந்தக்
குருக்கள் என், முனிவர்தாம் என், வேதத்தின் கொள்கைதான் என்;
செருக்கினர் வலியர் ஆகி, நெறி நின்றார் சிதைவர் என்றால்,
இருக்குமது என்னாம், இம் மூன்று உலகையும் எரி மடாதே? 65
முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு,
எழுவதே! அமரர் இன்னம் இருப்பதே! அறம் உண்டு என்று
தொழுவதே! மேகம் மாரி சொரிவதே! சோர்ந்து நாம் வீழ்ந்து
அழுவதே! நன்று, நம் தம் வில் தொழில் ஆற்றல் அம்மா! 66
புக்கு, இவ் ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து, அரக்கன் போன
திக்கு எலாம் சுட்டு, வானோர் உலகு எலாம் தீய்த்து, தீர்க்கத்
தக்க நாம், கண்ணீர் ஆற்றி, தலை சுமந்து இரு கை நாற்றி,
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றும் அன்றே? 67
அங்கும், இவ் அறமே நோக்கி, அரசு இழந்து, அடவி எய்தி,
மங்கையை வஞ்சன் பற்ற, வரம்பு அழியாது வாழ்ந்தோம்;
இங்கும், இத் துன்பம் எய்தி இருத்துமேல், எளிமை நோக்கி,
பொங்கு வன் தலையில் பூட்டி, ஆட்செயப் புகல்வர் அன்றே? 68
மன்றல் அம் கோதையாளைத் தம் எதிர் கொணர்ந்து, வாளின்
கொன்றவர் தம்மைக் கொல்லும் கோள் இலர், நாணம் கூரப்
பொன்றினர் என்பர், ஆவி போக்கினால்; பொதுமை பார்க்கின்,
அன்று, இது கருமம்; என், நீ அயர்கின்றது, அறிவு இலார்போல்? 69
சுக்கிரீவன் இலங்கைமேல் குதித்து யாவரையும் அழிப்போம் என்று கூறி, நகரின்மேல் தாவ முற்படுதல்
அனையன இளவல் கூற, அருக்கன் சேய், அயர்கின்றான், ஓர்
கனவு கண்டனனே என்னக் கதுமென எழுந்து, காணும்
வினை இனி உண்டே? வல்லை, விளக்கின் வீழ் விட்டில் என்ன,
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும், நாம்; வம்மின் என்றான். 70
இலங்கையை இடந்து, வெங் கண் இராக்கதர் என்கின்றாரைப்
பொலங் குழை மகளிரோடும், பால் நுகர் புதல்வரோடும்,
குலங்களோடு அடங்கக் கொன்று, கொடுந் தொழில் குறித்து, நம்மேல்
விலங்குவார் என்னின், தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும். 71
அறம் கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின், ஐய!
புறம் கிடந்து உழைப்பது என்? இப்பொழுது இறை புவனம் மூன்றும்
கறங்கு எனத் திரிந்து, தேவர் குலங்களைக் கட்டும் என்னா,
மறம் கிளர் வயிரத் தோளான் இலங்கைமேல் வாவலுற்றான். 72
அனுமன், இந்திரசித்து அயோத்தி சென்றமையைத் தெரிவித்தல்
மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி,
எற்றுதும், அரக்கர்தம்மை இல்லொடும் எடுத்து என்று, ஏகல்
உற்றனர்; உறுதலோடும், உணர்த்துவது உளது என்று உன்னா,
சொற்றனன் அனுமன், வஞ்சன் அயோத்திமேல் போன சூழ்ச்சி. 73
தாயரையும் தம்பியரையும் குறித்த துயரால் இராமன் வருந்திப் புலம்புதல்
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சாரப்
போயினன் என்ற மாற்றம் செவித் துளை புகுதலோடும்,
மேயின வடுவின் நின்ற வேதனை களைய, வெந்த
தீயிடைத் தணிந்தது என்ன, சீதைபால் துயரம் தீர்ந்தான். 74
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று, அனந்தர் நீங்கி
எழுந்தனன் என்ன, துன்பக் கடலின் நின்று ஏறி, ஆறாக்
கொழுந்து உறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட,
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான், மறுக்கம் உற்றான். 75
தீரும் இச் சீதையோடும் என்கிலது அன்று, என் தீமை;
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது; வேறும் இன்னும்
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென்; அதனை, ஐய!
பேருறும் அவதி உண்டோ ? எம்பியர் பிழைக்கின்றாரோ? 76
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான்,
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான்; வினையேன் வந்த
மனை பொடி பட்டது, அங்கு; மாண்டது, தாரம் ஈண்டும்;
எனையன தொடரும் என்பது உணர்கிலேன்! இறப்பும் காணேன்! 77
தாதைக்கும், சடாயுவான தாதைக்கும், தமியள் ஆய
சீதைக்கும், கூற்றம் காட்டித் தீர்ந்திலது, ஒருவன் தீமை;
பேதைப் பெண் பிறந்து, பெற்ற தாயர்க்கும், பிழைப்பு இலாத
காதல் தம்பியர்க்கும், ஊர்க்கும், நாட்டிற்கும், காட்டிற்று அன்றே. 78
உற்றது ஒன்று உணரகில்லார்; உணர்ந்து வந்து, உருத்தாரேனும்,
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து, அவன் கொன்று வீழ்ந்தால்,
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன்; மருந்து நல்கக்
கொற்ற மாருதி அங்கு இல்லை; யார் உயிர் கொடுக்கற்பாலார்? 79
அயோத்திக்கு விரைய வழி உளதா என இராமன் வினாவுதல்
மாக வான் நகரம் செல்ல, வல்லையின், வயிரத் தோளாய்!
ஏகுவான் உபாயம் உண்டேல், இயம்புதி; நின்ற எல்லாம்
சாக; மற்று, இலங்கைப் போரும் தவிர்க; அச் சழக்கன் கண்கள்
காகம் உண்டதற்பின், மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான். 80
பரதனை இந்திரசித்தினால் வெல்ல இயலாது என இலக்குவன் கூறுதல்
அவ் இடத்து, இளவல், ஐய! பரதனை அமரின் ஆர்க்க,
எவ் விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று;
தெவ் இடத்து அமையின், மும்மை உலகமும் தீந்து அறாவோ?
வெவ் இடர்க் கடலின் வைகல்; கேள் என, விளம்பலுற்றான்: 81
தீக் கொண்ட வஞ்சன் வீச, திசைமுகன் பாசம் தீண்ட,
வீக் கொண்டு வீழ, யானோ பரதனும்? வெய்ய கூற்றைக்
கூய்க்கொண்டு, குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல்,
போய்க் கண்டு கோடி அன்றே? என்றனன், புழுங்குகின்றான். 82
அயோத்திக்குச் செல்லும் பொருட்டு, தன் தோள் மேல் ஏறுமாறு இராம இலக்குவரை அனுமன் வேண்டுதல்
அக் கணத்து அனுமன் நின்றான், ஐய! என் தோளின் ஆதல்,
கைத் துணைத் தலத்தே ஆதல், ஏறுதிர்; காற்றும் தாழ,
இக் கணத்து அயோத்தி மூதூர் எய்துவென்; இடம் உண்டு என்னின்,
திக்கு அனைத்தினிலும் செல்வென்; யானே போய்ப் பகையும் தீர்வென்; 83
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து, என் தோள்மேல்
தழுவுற வைத்து, இன்று ஏகு என்று உரைத்தியேல், சமைவென்; தக்கோய்!
பொழுது இறை தாழ்ப்பது என்னோ? புட்பகம் போதல் முன்னம்,
குழுவொடும் கொண்டு தோள்மேல், கணத்தினின், குதிப்பென், கூற்றின்; 84
கொல்ல வந்தானை நீதி கூறினென், விலக்கிக் கொள்வான்,
சொல்லவும் சொல்லி நின்றேன்; கொன்றபின், துன்பம் என்னை
வெல்லவும், தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென்; விரைந்து போனான்;
இல்லை என்று உளனேல், தீயோன் பிழைக்குமோ? இழுக்கம் உற்றேன்! 85
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக,
நினைப்பின் முன் அயோத்தி எய்தி, வரு நெறி பார்த்து நிற்பென்;
இனி, சில தாழ்ப்பது என்னே? ஏறுதிர், இரண்டு தோளும்,
புனத் துழாய் மாலை மார்பீர்! புட்பகம் போதல் முன்னம். 86
வீடணன் தொழுது, இது மாயமே; உண்மை தெரியலாம் எனல்
ஏறுதும் என்னா, வீரர் எழுதலும், இறைஞ்சி, ஈண்டுக்
கூறுவது உளது; துன்பம் கோளுறக் குலுங்கி, உள்ளம்
தேறுவது அரிது; செய்கை மயங்கினென்; திகைத்து நின்றேன்;
ஆறினென்; அதனை, ஐய! மாயம் என்று அயிர்க்கின்றேனால். 87
பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது,
முத் திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே?
அத் திறம் ஆனதேனும், அயோத்திமேல் போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம், சிறிது போழ்தின். 88
வீடணன் வண்டு உருக் கொண்டு சென்று, அசோக வனத்தில் சீதையைக் காணுதல்
இமை இடையாக யான் போய், ஏந்திழை இருக்கை எய்தி,
அமைவுற நோக்கி, உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர்ச்
சமைவது செய்வது என்று வீடணன் விளம்ப, தக்கது;
அமைக! என்று இராமன் சொன்னான்; அந்தரத்து அவனும் சென்றான். 89
வண்டினது உருவம் கொண்டான், மானவன் மனத்தின் போனான்;
தண்டலை இருக்கைதன்னைப் பொருக்கெனச் சார்ந்து, தானே
கண்டனன் என்ப மன்னோ, கண்களால்-கருத்தில், ஆவி
உண்டு, இலை என்ன நின்ற, ஓவியம் ஒக்கின்றாளை. 90
சீதையின் நிலைமையும், நிகும்பலை நோக்கி அரக்கர் சேனை
செல்வதையும் கண்டு, வீடணன் இந்திரசித்தின் சூழ்ச்சியை உணர்தல்
தீர்ப்பது துன்பம், யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை
பேர்ப்பன செஞ் சொலாள், அத் திரிசடை பேசப் பேர்ந்தாள்,
கார்ப் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக, உயிர் ஆற்றினாளை, 91
வஞ்சனை என்பது உன்னி, வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி, உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான்,
வெஞ் சிலை மைந்தன் போனான், நிகும்பலை வேள்வியான் என்று,
எஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து, எழுந்து, ஏகக் கண்டான். 92
வேள்விக்கு வேண்டற்பால தருப்பையும், விறகும், நெய்யும்,
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான்,
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று! எனத் துணிவு கொண்டான்,
தாழ்வித்த முடியன், வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான். 93
வீடணன் வந்து இராமனை வணங்கி, சீதையைக் கண்டதையும் இந்திரசித்தின் எண்ணத்தையும் கூறல்
இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனன், கண்களால்; நம்
அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு உண்டோ ? அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து, நிகும்பலை மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற முடிக்க மூண்டான். 94
என்றலும், உலகம் ஏழும், ஏழு மாத் தீவும், எல்லை
ஒன்றிய கடல்கள் ஏழும், ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை
அன்று என, ஆகும் என்ன, அமரரும் அயிர்க்க, ஆர்த்து,
குன்றுஇனம் இடியத் துள்ளி, ஆடின-குரக்கின் கூட்டம். 95
மிகைப் பாடல்கள்
அரக்கரில் சிறந்த வீரர், ஆயிர வெள்ளம் என்னும்
திரைக் கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர்; திண் தேர்; யானை,
சுருக்கம் இல் இவுளி, காலாள், எனும் தொகை அளப்பு இல் வெள்ளம்,
உரைக்கு அடங்காதது எல்லாம், உலந்தது, அங்கு இருவர் வில்லால். 5-1
என்று மாலியவான் கூற, பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின் தெரிந்தென்ன நக்கு, வெருவுற, உரப்பி, பேழ் வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து, நீ உரைத்த மாற்றம்
நன்று, நன்று! என்று சீறி, உரைத்தனன், நலத்தை ஓரான். 8-1
என்றனன் மாருதி; இந்திரசித்தும்,
ஒன்று உரை கேள்; எனது எந்தையும் ஊரும்
பொன்றுதல் தீரும்; இதின் புகழ் உண்டே?
நன்று உரை! என்று, பின் நக்கு, உரைசெய்தான். 35-1
எந்தை உவந்த இலங்கு இழையாளைத்
தந்திடில், இன்று தரும் புகழ் உண்டோ?
சிந்துவென்; எந்தை தியங்கிய காம
வெந் துயர் தீரும் விழுப்பமும் உண்டால்? 36-1
கண்டு, தன் கருத்தில் கொண்ட கவலையைக் கடந்து, அங்கு ஆவி
உண்டு எனத் தெளிந்து, தேறல் வீடணன், உற்றது எல்லாம்
கொண்டு தன் அகத்தில் உன்னி, குலவிய உவகை தூண்ட,
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான். 91-1
யுத்த காண்டம்
27. நிகும்பலை யாகப் படலம்
இராமன் வீடணனைத் தழுவி, அவனைப் புகழ்ந்து கூறுதல்
வீரனும் ஐயம் தீர்ந்தான்; வீடணன் தன்னை மெய்யோடு
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி, ஐய!
தீர்வது பொருளோ, துன்பம்? நீ உளை; தெய்வம் உண்டு;
மாருதி உளன்; நாம் செய்த தவம் உண்டு; வலியும் உண்டால். 1
இலக்குவனுடன் சென்று இந்திரசித்தின் யாகத்தைச் சிதைக்க இராமனிடம் வீடணன் அருள் வேண்டுதல்
என்றலும், இறைஞ்சி, யாகம் முடியுமேல், யாரும் வெல்லார்;
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்; இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும் சிதைப்பென் என்றான்;
நன்று அது; புரிதிர்! என்று, நாயகன் நவில்வதானான்: 2
இலக்குவனை இராமன் தழுவி, அம்பு விடுவது குறித்து உபதேசித்தல்
தம்பியைத் தழுவி, ஐயன், தாமரைத் தவிசின் மேலான்
வெம் படை தொடுக்கும் ஆயின், விலக்குமது அன்றி, வீர!
அம்பு நீ துரப்பாய் அல்லை; அனையது துரந்த காலை,
உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி என்றான். 3
முக்கணான் படையும், ஆழி முதலவன் படையும், முன் நின்று
ஒக்கவே விடுமே; விட்டால், அவற்றையும், அவற்றின் ஓயத்
தக்கவாறு இயற்றி, மற்று, உன் சிலை வலித் தருக்கினாலே,
புக்கவன் ஆவி கொண்டு, போதுதி - புகழின் மிக்கோய்! 4
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து, மாள,
கல்லுதி, தருமம் என்னும் கண் அகன் கருத்தைக் கண்டு;
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து,
கொல்லுதி, அமரர்தங்கள் கூற்றினை-கூற்றம் ஒப்பாய்! 5
பதைத்து அவன், வெம்மை ஓடி, பல் பெரும் பகழி மாரி
விதைப்பன விதையா நின்று விலக்கினை, மெலிவு மிக்கால்,
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தைக் கருதி ஓட்டி,
வதைத் தொழில் புரிதி-சாப நூல் நெறி மறப்பிலா தாய்! 6
தொடுப்பதன்முன்னம், வாளி தொடுத்து, அவை துறைகள் தோறும்
தடுப்பன தடுத்தி; எண்ணம் குறிப்பினால் உணர்ந்து, தக்க
கடுப்பினும், அளவு இலாத கதியினும், கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி, விடுதியால்-விரகின் மிக்காய்! 7
இலக்குவனுக்குத் திருமாலின் வில்லும், கவசமும், இராமன் கொடுத்தல்
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி, ஏற்ற
முன்பனை நோக்கி, ஐய! மூவகை உலகும் தான் ஆய்,
தன் பெருந் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும்
வன் பெருஞ் சிலை ஈது ஆகும்; வாங்குதி; வலமும் கொள்வாய்! 8
இச் சிலை இயற்கை மேல்நாள், தமிழ் முனி இயம்பிற்று எல்லாம்
அச்செனக் கேட்டாய் அன்றே? ஆயிரம் மௌலி அண்ணல்
மெய்ச் சிலை; விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டுப் பெற்ற
கைச் சிலை கோடி என்று கொடுத்தனன், கவசத்தோடும். 9
ஆணி, இவ் உலகுக்கு, ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த
தூணியும் கொடுத்து, மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி,
தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன்; தழுவலோடும்,
சேண் உயர் விசும்பில் தேவர், தீர்ந்தது எம் சிறுமை என்றார். 10
இராமன் விடை கொடுத்தருள, இலக்குவன் அவனை வணங்கி, நிகும்பலை நோக்கிச் செல்லுதல்
மங்கலம் தேவர் கூற, வானவ மகளிர் வாழ்த்தி,
பங்கம் இல் ஆசி கூறி, பலாண்டு இசை பரவ, - பாகத்
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்கச் சீறிப்
பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன் - போர்மேல் போவான். 11
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்,
வீர! நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை,
ஆரியன் கமல பாதம், அகத்தினும் புறத்தும் ஆக,
சீரிய சென்னி சேர்த்து, சென்றனன், தருமச் செல்வன். 12
பொலங் கொண்டல் அனைய மேனிப் புரவலன், பொருமி, கண்ணீர்
நிலம் கொண்டு படர நின்று, நெஞ்சு அழிவானை, தம்பி
வலம் கொண்டு, வயிர வல் வில் இடம் கொண்டு, வஞ்சன்மேலே,
சலம் கொண்டு, கடிது சென்றான், தலை கொண்டு தருவென் என்றே. 13
இலக்குவனைப் பிரிந்து நிற்கும் இராமனின் நிலை
தான் பிரிகின்றிலாத தம்பி வெங் கடுப்பின் செல்லா,
ஊன் பிரிகின்றிலாத உயிர் என, மறைதலோடும்,
வான் பெரு வேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். 14
நிகும்பலையை அடைந்த வானரர் அரக்கர் சேனையைக் காணுதல்
சேனாபதியே முதல் சேவகர் தாம்
ஆனார், நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்,
கான் ஆர் நெறியும் மலையும் கழியப்
போனார்கள், நிகும்பலை புக்கனரால். 15
உண்டாயது ஓர் ஆல், உலகுள் ஒருவன்
கொண்டான் உறைகின்றதுபோல் குலவி,
விண்தானும் விழுங்க விரிந்தனைக்
கண்டார்-அவ் அரக்கர் கருங் கடலை. 16
நேமிப் பெயர் யூகம் நிரைத்து, நெடுஞ்
சேமத்தது நின்றது, தீவினையோன்
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாமக் கடல் நின்றது ஓர் பான்மையதை. 17
கார் ஆயின-வெங் கரி, தேர், கலி மா,
தார் ஆயிர கோடி தழீஇயது தான்
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயதுபோல்,
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை, 18
பொன் - தேர், பரிமா, கரிமா, பொரு தார்
எற்றே? படை வீரரை எண்ணிலமால்!
உற்று ஏவிய யூகம் உலோகமுடைச்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை, 19
வண்ணக் கரு மேனியின்மேல் மழை வாழ்
விண்ணைத் தொடு செம் மயிர் வீசுதலால்,
அண்ணல் கரியான் அனலம்பு அட, வெம்
பண்ணைக் கடல் போல்வது ஓர் பான்மையதை. 20
அரக்கர் சேனையைக் கண்டு, வானரர் விண் கிழிய ஆர்த்தல்
வழங்கா சிலை நாண் ஒலி, வானில் வரும்
பழங் கார்முகம் ஒத்த; பணைக் குலமும்
தழங்கா, கடல் வாழ்வனபோல்; தகை சால்
முழங்கா முகில் ஒத்தன, மும் முரசே. 21
வலியான இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடுங் கடல் தான் எனலாய்
ஒலியாது உறு சேனையை உற்று, ஒரு நாள்
மெலியாதவர் ஆர்த்தனர், விண் கிழிய. 22
அரக்கர் சேனையுடன் வானரர் பொருதல்
ஆர்த்தார் எதிர், ஆர்த்த, அரக்கர் குலம்;
போர்த் தார் முரசங்கள் புடைத்த; புகத்
தூர்த்தார் இவர், கற் படை; சூல் முகிலின்
நீர்த் தாரையின், அம்பு அவர் நீட்டினரால். 23
மின்னும் படை வீசலின், வெம் பகைமேல்
பன்னும் கவி சேனை படிந்துளதால் -
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய். 24
வில்லும், மழுவும், எழுவும், மிடலோர்,
பல்லும், தலையும், உடலும், படியில்
செல்லும் பொறி சிந்தின, சென்றனவால்-
கல்லும் மரமும் கரமும் கதுவ. 25
வாலும் தலையும், வயிறும் உடலும்,
காலும் கரமும், தரை கண்டனவால்-
கோலும், மழுவும், எழுவும், கொழுவும்,
வேலும், கணையும், வளையும், விசிற. 26
வேள்வியைச் சிதைக்க வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்
வென்றிச் சிலை வீரனை, வீடணன், நீ
நின்று இக் கடை தாழுதல் நீதியதோ?
சென்று, இக் கடி வேள்வி சிதைத்திலையேல்,
என்று, இக் கடல் வெல்குதும் யாம்? எனலும், 27
இலக்குவன் அரக்கர் சேனையை அழித்தல்
தேவா சுரரும், திசை நான்முகனும்,
மூவா முதல் ஈசனும், மூஉலகின்
கோ ஆகிய கொற்றவனும், முதலோர்
மேவாதவர் இல்லை, விசும்பு உறைவோர். 28
பல்லார் படை நின்றது; பல் அணியால்,
பல் ஆர் படை நின்றது; பல் பிறை வெண்
பல்லார் படை நின்றது; பல்லியம் உம்-
பல் ஆர் படை நின்றது-பல் படையே. 29
அக் காலை, இலக்குவன், அப் படையுள்
புக்கான், அயில் அம்பு பொழிந்தனனால்;
உக்கார் அவ் அரக்கரும் ஊர் ஒழிய,
புக்கார், நமனார் உறை தென் புலமே. 30
தேறா மத மால் கரி, தேர், பரிமா,
நூறாயிர கோடியின் நூழில்பட,
சேறு ஆர் குருதிக் கடலில், திடராய்க்
கூறு ஆய் உக, ஆவி குறைத்தனனால். 31
படுகளக் காட்சிகள்
வாமக் கரி தான் அழி வார் குழி, வன்
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின்
தாமத் தலை உக்க, தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்த்த; உலப்பு இலவால். 32
சிலையின் கணையூடு திறந்தன, திண்
கொலை வெங் களி மால் கரி செம் புனல் கொண்டு,
உலைவு இன்று கிடந்தன, ஒத்துளவால்,
மலையும் சுனையும், வயிறும் உடலும். 33
வில் தொத்திய வெங் கணை, எண்கின் வியன்
பல் தொத்தியபோல் படியப் பலவும்,
முற்றச் சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த - முடித் தலை பூழியன. 34
படு மாரி நெடுங் கணை பாய்தலினால்,
விடும் ஆறு உதிரப் புனல் வீழ்வன வன்
தடுமாறு நெடுங் கொடி, தாழ் கடல்வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால். 35
மின் ஆர் கணை தாள் அற வீச, விழுந்து,
அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்,
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால்,
செந் நாகம் விழுங்கிய திங்களினை. 36
கொடு நீள் கரி, கையொடு தாள் குறைய,
படு நீள் குருதிப் படர்கின்றனவால்,
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்,
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால். 37
கரி உண்ட களத்திடை உற்றன, கார்
நரி உண்டி உகப்பன நண்ணினவால்;
இரியுண்டவர் இன் இயம் இட்டிடலால்,
மரியுண்ட உடற் பொறை மானினவால். 38
வாயில் கனல் வெங் கடு வாளி இனம்
பாய, பருமக் குலம் வேவனவால்,
வேய் உற்ற நெடுங் கிரி மீ வெயில் ஆம்
தீ உற்றன ஒத்த - சினக் கரியே. 39
அலை வேலை அரக்கரை, எண்கின் உகிர்,
தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால்,
மலைமேல் உயர் புற்றினை, வள் உகிரால்,
நிலை பேர, மறிப்ப நிகர்த்தனவால். 40
மா வாளிகள் மா மழைபோல் வரலால்,
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர்,
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம்
மா ஆளிகளோடு மறிந்தனரால். 41
அங்கம் கிழியத் துணி பட்டதனால்,
அங்கு அங்கு, இழிகுற்ற அமர்த் தலைவர்,
அம் கங்கு இழி செம்புனல் பம்ப, அலைந்து
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால். 42
வன் தானையை, வார் கணை மாரியினால்,
முன், தாதை ஓர் தேர்கொடு, மொய் பல தேர்ப்
பின்றா எதிர் தானவர் பேர் அணியைக்
கொன்றான் என, எய்து குறைத்தனனால். 43
இலக்குவன் போரினால் இந்திரசித்தின் யாகம் கெடுதல்
மலைகளும், மழைகளும், வான மீன்களும்,
அலைய வெங் கால் பொர, அழிந்த ஆம் என,
உலைய, வெங் கனல் பொதி ஓமம் உற்றவால்,
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ. 44
வாரணம் அனையவன் துணிப்ப, வான் படர்
தார் அணி முடிப் பெருந் தலைகள் தாக்கலால்,
ஆரண மந்திரம் அமைய ஓதிய
பூரண மணிக் குடம் உடைந்து போயதால். 45
தாறு கொள் மதகரி சுமந்து, தாமரை
சீறிய முகத் தலை உருட்டி, செந் நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழுங் கனல் அவியச் சென்றவால். 46
தெரி கணை விசும்பிடைத் துணிப்ப, செம் மயிர்
வரி கழல் அரக்கர்தம் தடக் கை வாளொடும்
உரும் என வீழ்தலும், அனலுக்கு ஓக்கிய
எருமைகள் மறிந்தன; மறியும் ஈர்ந்தவால். 47
அம் கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின்நின்று
அம் கடம் கிழிந்திலர், அழிந்த ஆடவர்,
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின்
அங்கு அடங்கினர், தொடர் பகழி அஞ்சினார். 48
கால் தலத்தொடு துணிந்து அழிய, காய் கதிர்க்
கோல் தலைத்தலை உற, மறுக்கம் கூடினார்,
வேல் தலத்து ஊன்றினர், துளங்கும் மெய்யினர்,
நாறு அலைக் குடலினர், பலரும் நண்ணினார். 49
பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர்ப் போக்கிலார்,
தொங்கு உடல் தோள்மிசை இருந்து சோர்வுற,-
அங்கு உடல் தம்பியைத் தழுவி அண்மினார்-
தம் குடர் முதுகிடைச் சொரியத் தள்ளுவார். 50
மூடிய நெய்யொடு நறவம் முற்றிய
சாடிகள், பொரியொடு தகர்ந்து தள்ளுற,
கோடிகள் பல படும் குழாம் குழாங்களாய்
ஆடின, அறு குறை அரக்கர் ஆக்கையே. 51
தன் சேனை நிலைகுலைதலை இந்திரசித்து காணுதல்
கால் என, கடு என, கலிங்கக் கம்மியர்
நூல் என, உடற் பொறை தொடர்ந்த நோய் என,
பால் உறு பிரை என, கலந்து, பல் முறை
வேல் உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான். 52
கண்டனன் - திசைதொறும் நோக்கி, கண் அகல்
மண் தலம், மறி கடல் அன்ன மாப் படை,
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும்
தண்டலை ஆம் எனக் கிடந்த தன்மையை. 53
மிடலின் வெங் கட கரிப் பிணத்தின் விண் தொடும்
திடலும், வெம் புரவியும், தேரும், சிந்திய
உடலும், வன் தலைகளும், உதிரத்து ஓங்கு அலைக்
கடலும், அல்லாது, இடை ஒன்றும் கண்டிலன். 54
நூறு நூறாயிர கோடி நோன் கழல்
மாறு இல் போர் அரக்கரை, ஒருவன் வாட் கணை
கூறு கூறு ஆக்கிய குவையும், சோரியின்
ஆறுமே, அன்றி, ஓர் ஆக்கை கண்டிலன். 55
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி, நா உலர்ந்து,
அஞ்சினர், சிலர் சிலர் அடைகின்றார்; சிலர்
வெஞ் சின வீரர்கள், மீண்டிலாதவர்,
துஞ்சினர், துணை இலர் எனத் துளங்கினார். 56
வேள்விக் கனல் முதலியன சிதைந்தமை கண்டு, இந்திரசித்து மனம் வெதும்புதல்
ஓம வெங் கனல் அவிந்து, உழைக் கலப்பையும்
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற,
வாம மந்திரத் தொழில் மறந்து, மற்று அவன்,
தூம வெங் கனல் எனப் பொலிந்து தோன்றினான். 57
அக் கணத்து, அடு களத்து, அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர, உயிர் உளோர் எலாம்
தொக்கனர், அரக்கனைச் சூழ்ந்து சுற்றுற,
புக்கது, கவிப் பெருஞ் சேனைப் போர்க் கடல். 58
ஆயிரம் மலருடை ஆழி மாப் படை
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்,
தூயவன் சிலை வலித் தொழிலும், துன்பமும்
மேயின வெகுளியும், கிளர வெம்பினான். 59
மெய் குலைந்து, இரு நில மடந்தை விம்முற,
செய் கொலைத் தொழிலையும், சென்ற தீயவர்
மொய் குலத்து இறுதியும், முனிவர் கண்டவர்
கை குலைக்கின்றதும், கண்ணின் நோக்கினான். 60
இந்திரசித்து நியமம் குலைந்து, வருந்திப் புலம்புதல்
மானமும் பாழ்பட, வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட, முடிவு இலா முரண்
சேனையும் பாழ்பட, சிறந்த மந்திரத்து
ஏனையும் பாழ்பட, இனைய செப்பினான்: 61
வெள்ளம் ஐ-ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர்-ஐந்தொடு ஓயுமால்;
எள்ள அரு வேள்வி நின்று, இனிது இயற்றுதல்
பிள்ளைமை; அனையது சிதைந்து பேர்ந்ததால். 62
தொடங்கிய வேள்வியின் தூம வெங் கனல்
அடங்கியது அவிந்துளது, அமையுமாம் அன்றே?
இடம் கொடு வெஞ் செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால். 63
அங்கு அது கிடக்க; நான் மனிதர்க்கு ஆற்றலென்
சிங்கினென் என்பது ஓர் எளிமை தேய்வுற,
இங்கு நின்று, இவை இவை நினைவது என்? இனி,
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ? 64
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் எனச்
சிந்தையின் நினைந்து, நான் வருந்தும் சிற்றியல்,
அந்தரத்து அமரரும், மனிதர்க்கு ஆற்றலன்;
இந்திரர்க்கே இவன் வலி! என்று ஏசவோ? 65
என்று அவன் பகர்கின்ற எல்லை, வல் விசை,
குன்றொடு மரங்களும், பிணத்தின் கூட்டமும்,
பொன்றின கரிகளும், கவிகள் போக்கின;
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின. 66
ஒதுங்கினர், ஒருவர் கீழ் ஒருவர் புக்குறப்
பதுங்கினர், நடுங்கினர்; பகழி பாய்தலின்,
பிதுங்கினர்; குடர் உடல் பிளவு பட்டனர்;
மதம் புலர் களிறு எனச் சீற்றம் மாறினர். 67
வீரன் வெங் கணையொடும் கவிகள் வீசிய
கார் வரை அரக்கர்தம் கடலின் வீழ்ந்தன,
போர் நெடுங் கால் பொர, பொழியும் மா மழைத்
தாரையும் மேகமும் படிந்த தன்மைய. 68
அனுமன் இந்திரசித்து சினம் கொள்ளும் வகையில் எள்ளி நகையாடுதல்
திரைக் கடற் பெரும் படை இரிந்து சிந்திட
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி,
அரக்கனுக்கு அணித்து என அணுகி, அன்னவன்
வரக் கதம் சிறப்பன மாற்றம் கூறுவான்: 69
தடந் திரைப் பரவை அன்ன சக்கர யூகம் புக்குக்
கிடந்தது கண்டது உண்டோ ? நாண் ஒலி கேட்டிலோமே?
தொடர்ந்து போய் அயோத்திதன்னைக் கிளையொடும் துணிய நூறி,
நடந்தது எப்பொழுது? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே! 70
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து, இயற்கை தாங்கும்
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை, பழியின் தீர்ந்த
வேந்தனை, கண்டு, நீ நின் வில் வலம் காட்டி, மீண்டு
போந்ததோ, உயிரும் கொண்டே ஆயினும், புதுமை அன்றே! 71
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி,
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த
நம்பியை, முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன
தம்பியை, கண்டு, நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ? 72
தீ ஒத்த வயிர வாளி உடல் உற, சிவந்த சோரி
காயத்தின் செவியினூடும், வாயினும், கண்களூடும்,
பாய, போய், இலங்கை புக்கு, வஞ்சனை பரப்பச் செய்யும்
மாயப் போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே! 73
பாசமோ, மலரின் மேலான் பெரும் படைக்கலமோ, பண்டை
ஈசனார் படையோ, மாயோன் நேமியோ, யாதோ, இன்னம்
வீச, நீர் விரும்புகின்றீர்? அதற்கு நாம் வெருவி, சாலக்
கூசினோம்; போதும், போதும்; கூற்றினார் குறுக வந்தார். 74
வரங்கள் நீர் உடையவாறும், மாயங்கள் வல்லவாறும்,
பரம் கொள் வானவரின் தெய்வப் படைக்கலம் படைத்தவாறும்,
உரங்களும், நின்றது அன்றே? உம்மை நாம், உயிரினோடும்
சிரங்களைத் துணித்தும் என்னக் கண்டது திறம்பினோமோ? 75
விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும், விரிஞ்சன் தானும்,
படம் துடிக்கின்ற நாகப் பாற்கடல் பள்ளியானும்,
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும், சாதல் திண்ணம்;
இடம் துடிக்கின்றது உண்டே? இருந்திரோ? இயம்புவீரே! 76
கொல்வென் என்று, உன்னைத்தானே குறித்து, ஒரு சூளும் கொண்ட
வில்லி வந்து அருகு சார்ந்து, உன் சேனையை முழுதும் வீட்டி,
வல்லை நீ பொருவாய் என்று, விளிக்கின்றான்; வரி வில் நாணின்
ஒல்லொலி, ஐய! செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ? 77
மூவகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல்,
தேவர்கள், முனிவர், மற்றும் திறத் திறத்து உலகம் சேர்ந்தார்,
யாவரும், காண நின்றார்; இனி, இறை தாழ்ப்பது என்னோ?
சாவது சரதம் அன்றோ? என்றனன், தருமம் காப்பான். 78
அனுமன் முதலியோரை இந்திரசித்து இகழ்ந்து கூறுதல்
அன்ன வாசகங்கள் கேளா, அனல் உயிர்த்து, அலங்கல் பொன் - தோள்
மின் நகு பகு வாயூடு வெயில் உக, நகை போய் வீங்க,
முன்னரே வந்து, இம் மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே?
என்னதோ, நீயிர் என்னை இகழ்ந்தது? என்று இனைய சொன்னான். 79
மூண்ட போர்தோறும் பட்டு முடிந்த நீர், முறையின் தீர்ந்து
மீண்ட போது, அதனை எல்லாம் மறத்திரோ? விளிதல் வேண்டி,
ஈண்ட ஒட்டு! என்னா நின்றாய்; இத்தனை பேரும் இன்னம்
மாண்ட போது, உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான? 80
இலக்குவன் ஆக, மற்றை இராமனே ஆக, ஈண்டு,
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக; குரங்கு வெள்ளம்
குலக் குலம் ஆக மாளும் கொற்றமும், மனிதர் கொள்ளும்
அலக்கணும், முனிவர்தாமும் அமரரும் காண்பர் அன்றே. 81
யானுடை வில்லும், என் பொன் - தோள்களும், இருக்க, இன்னும்,
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ, ஒளிப்பு இலாமல்?
கூனுடைக் குரங்கினோடு மனிதரைக் கொன்று, சென்று, அவ்
வானினும் தொடர்ந்து கொல்வென்; மருந்தினும் உய்யமாட்டீர். 82
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது; வென்றோம் என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர்! கிளத்தல் வேண்டா;
தாழ்க்கின்றது இல்லை; உம்மைத் தனித் தனித் தலைகள் பாறச்
சூழ்க்கின்ற வீரம் என் கைச் சரங்களாய்த் தோன்றும் அன்றே. 83
மற்று எலாம் நும்மைப் போல வாயினால் சொல்ல மாட்டேன்;
வெற்றிதான் இரண்டும் தந்தீர்; விரைவது வெல்லற்கு ஒல்லா;
உற்று நான் உருத்த காலத்து, ஒரு முறை எதிரே நிற்க-
கற்றிரோ? இன்னம் மாண்டு கிடத்திரோ? நடத்திரோதான்? 84
இந்திரசித்து பொருதற்கு தேர் ஏறி, சங்கு முழக்கி வருதல்
நின்மின்கள்; நின்மின்! என்னா, நெருப்பு எழ விழித்து, நீண்ட
மின்மின்கொள் கவசம் இட்டான்; வீக்கினான், தூணி; வீரப்
பொன் மின்கொள் கோதை கையில் பூட்டினான்; பொறுத்தான், போர் வில்;
எல் மின்கொள் வயிரத் திண் தேர் ஏறினான்; எறிந்தான், நாணி; 85
ஊதினான், சங்கம்; வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண்
மோதினார்; கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்றக்
காதினான் என்ன, வானோர் கலங்கினார்; கயிலையானும்,
போதினான் தானும், இன்று புகுந்தது, பெரும் போர் என்றார். 86
இழைத்த பேர் யாகம் தானே, யாம் செய்த தவத்தினாலே,
பிழைத்தது; பிழைத்ததேனும், வானரம் பிழைக்கல் ஆற்றா;
அழைத்தது, விதியேகொல்? என்று அஞ்சினார்; அம்பினோடும்
உழைத்தது காண்கின்றேம் என்று, உணங்கினார், உம்பர் உள்ளார். 87
குரங்குகள் நாண் ஒலி கேட்டு இரிதலும், அனுமன் மலை ஏந்தி எதிர்த்து நிற்றலும்
நாண்தொழில் ஓசை வீசிச் செவிதொறும் நடத்தலோடும்,
ஆண்தொழில் மறந்து, கையின் அடுக்கிய மரனும் கல்லும்
மீண்டன மறிந்து சோர விழுந்தன; விழுந்த, மெய்யே
மாண்டனம் என்றே உன்னி, இரிந்தன குரங்கின் மாலை. 88
படைப் பெருந் தலைவர் நின்றார்; அல்லவர், இறுதி பற்றும்
அடைப்ப அருங் காலக் காற்றால் ஆற்றலது ஆகிக் கீறிப்
புடைத்து இரிந்து ஓடும் வேலைப் புனல் என, இரியலுற்றார்;
கிடைத்த பேர் அனுமன், ஆண்டு, ஓர் நெடுங் கிரி கிழித்துக் கொண்டான். 89
இந்திரசித்து அனுமனுடன் பொருதல்
நில், அடா! நில்லு நில்லு! நீ, அடா! வாசி பேசிக்
கல் எடாநின்றது என்னே? போர்க்களத்து, அமரர் காண,
கொல்லலாம் என்றோ? நன்று; குரங்கு என்றால் கூடும் அன்றே?
நல்லை; போர், வா வா! என்றான் - நமனுக்கும் நமனாய் நின்றான். 90
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே,
கல் எடுத்து, எறிய வந்த அனுமனைக் கண்ணின் நோக்கி,
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்கொலோ வருவது? என்னா,
சொல் எடுத்து, அமரர் சொன்னார்; தாதையும் துணுக்கமுற்றான். 91
வீசினன் வயிரக் குன்றம், வெம் பொறிக் குலங்கள் விண்ணின்
ஆசையின் நிமிர்ந்து செல்ல; ஆயிரம் உரு ஒன்றாகப்
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி,
கூசின உலகம் எல்லாம்; குலைந்தது, அவ் அரக்கர் கூட்டம். 92
குண்டலம் நெடு வில் வீச, மேருவின் குவிந்த தோளான்,
அண்டமும் குலுங்க ஆர்த்து, மாருதி, அசனி அஞ்ச,
விண் தலத்து எறிந்த குன்றம் வெறுந் துகள் ஆகி வீழக்
கண்டனன்; எய்த தன்மை கண்டிலர், இமைப்பு இல் கண்ணார். 93
அம்பினால் அடிபட்டு, அனுமன் அயர்தல்
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில், தோளில்,
கால் தரு காலில், கையில், கழுத்தினில், நுதலில், கண்ணில்,
ஏறின என்ப மன்னோ-எரி முகக் கடவுள் வெம்மை
சீறிய பகழி மாரி, தீக் கடு விடத்தின் தோய்ந்த. 94
வெதிர் ஒத்த சிகரக் குன்றின் மருங்கு உற விளங்கலாலும்,
எதிர் ஒத்த இருளைச் சீறி எழுகின்ற இயற்கையாலும்,
கதிர் ஒத்த பகழிக் கற்றை கதிர் ஒளி காட்டலாலும்,
உதிரத்தின் செம்மையாலும், உதிக்கின்ற கதிரோன் ஒத்தான். 95
இந்திரசித்து, இலக்குவன் எங்குள்ளான்? எனல்
ஆயவன் அயர்தலோடும், அங்கதன் முதல்வர் ஆனோர்,
காய் சினம் திருகி, வந்து கலந்துளார் தம்மைக் காணா,
நீயிர்கள் நின்மின், நின்மின்; இரு முறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான்? என்றனன், பொருள் செயாதான். 96
வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும், வெகுண்டு, சீயம்
தும்பியைத் தொடர்வது அல்லால், குரங்கினைச் சுளிவது உண்டோ?
அம்பினை மாட்டி, என்னே சிறிது போர் ஆற்ற வல்லான்
தம்பியைக் காட்டித் தாரீர்; சாதிரோ, சலத்தின்? என்றான். 97
அனுமனைக் கண்டிலீரோ? அவனிலும் வலியரோ? என்
தனு உளதன்றோ? தோளின் அவ் வலி தவிர்ந்தது உண்டோ?
இனும், முனை நீர் அலீரோ, எவ் வலி ஈட்டி வந்தீர்?
மனிதரைக் காட்டி, நும் தம் மலைதொறும் வழிக்கொளீரே. 98
என்று உரைத்து, இளவல் தன்மேல் எழுகின்ற இயற்கை நோக்கி,
குன்றமும் மரமும் வீசிக் குறுகினார்; குழாங்கள் தோறும்
சென்றன பகழி மாரி, மேருவை உருவித் தீர்வ,
ஒன்று அல கோடி கோடி நுழைந்தன; வலியும் ஓய்ந்தார். 99
வீடனன் உற்றது சொல்ல, இலக்குவன் அனுமனின் தோள்மேல் ஏறி, போருக்கு முந்துதல்
படுகின்றது அன்றோ, மற்று உன் பெரும் படை? பகழி மாரி
விடுகின்றது அன்றோ, வென்றி அரக்கனாம் காள மேகம்?
இடுகின்ற வேள்வி மாண்டது; இனி, அவன் பிழைப்புறாமே
முடுகு என்றான் அரக்கன் தம்பி; நம்பியும் சென்று மூண்டான். 100
வந்தான் நெடுந் தகை மாருதி, மயங்கா முகம் மலர்ந்தான்,
எந்தாய்! கடிது ஏறாய், எனது இரு தோள்மிசை என்றான்;
அந்தாக என்று உவந்து, ஐயனும் அமைவு ஆயினன்; இமையோர்
சிந்தாகுலம் துறந்தார்; அவன் நெடுஞ் சாரிகை திரிந்தான். 101
இந்திரசித்து - இலக்குவன் பெரும் போர்
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன்,
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்மிசை உயர்ந்தான்;
நேர் ஆயினர் இருவோர்களும்; நெடு மாருதி, நிமிரும்
பேர் ஆயிரம் உடையான் என, திசை எங்கணும் பெயர்ந்தான். 102
தீ ஒப்பன, உரும் ஒப்பன, உயிர் வேட்டன, திரியும்
பேய் ஒப்பன, பசி ஒப்பன, பிணி ஒப்பன, பிழையா
மாயக் கொடு வினை ஒப்பன, மனம் ஒப்பன, கழுகின்
தாய் ஒப்பன, சில வாளிகள் துரந்தான் - துயில் துறந்தான். 103
அவ் அம்பினை அவ் அம்பினின் அறுத்தான், இகல் அரக்கன்;
எவ் அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் -
எவ் அம்பரம், எவ் எண் திசை, எவ் வேலைகள், பிறவும்,
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான. 104
ஆயோன், நெடுங் குருவிக் குலம் என்னும் சில அம்பால்
போய் ஓடிடத் துரந்தான்; அவை, பொறியோ என, மறிய,
தூயோனும், அத்துணை வாளிகள் தொடுத்தான், அவை தடுத்தான்;
தீயோனும், அக் கணத்து, ஆயிரம் நெடுஞ் சாரிகை திரிந்தான். 105
கல்லும், நெடு மலையும், பல மரமும், கடை காணும்
புல்லும், சிறு கொடியும், இடை தெரியாவகை, புரியச்
செல்லும் நெறிதொறும், சென்றன - தெறு கால் புரை மறவோன்
சில்லின் முதிர் தேரும், சின வய மாருதி தாளும். 106
இரு வீரரும், இவன் இன்னவன், இவன் இன்னவன் என்னச்
செரு வீரரும் அறியாவகை திரிந்தார், கணை சொரிந்தார்;
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என, வானவர் உவந்தார்;
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதாலெனப் பொருதார். 107
விண் செல்கில, செல்கின்றன, விசிகம் என, இமையோர்
கண் செல்கில; மனம் செல்கில; கணிதம் உறும் எனின், ஓர்
எண் செல்கில; நெடுங் காலவன் இடை செல்கிலன்; உடல்மேல்
புண் செல்வன அல்லால், ஒரு பொருள் செல்வன தெரியா. 108
எரிந்து ஏறின, திசை யாவையும்; இடி ஆம் எனப் பொடியாய்
நெரிந்து ஏறின, நெடு நாண் ஒலி; படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின, சுடு வெங் கணை; தொடுந் தாரகை முழுதும்
கரிந்து ஏறின, உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ. 109
வெடிக்கின்றன திசை யாவையும், விழுகின்றன இடி வந்து
இடிக்கின்றன சிலை நாண் ஒலி; இரு வாய்களும் எதிராக்
கடிக்கின்றன, கனல் வெங் கணை; கலி வான் உற விசைமேல்
பொடிக்கின்றன, பொறி வெங் கனல்; இவை கண்டனர், புலவோர். 110
கடல் வற்றின; மலை உக்கன; பருதிக் கனல் கதுவுற்று
உடல் பற்றின; மரம், உற்றன கனல் பட்டன; உதிரம்
சுடர் வற்றின; சுறு மிக்கது; துணிபட்டு உதிர் கணையின்,
திடர் பட்டது, பரவைக் குழி; திரிவுற்றது புவனம். 111
எரிகின்றன அயில் வெங் கணை-இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல்போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றன, கொலையால். 112
புரிந்து ஓடின; பொரிந்து ஓடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின;-கருங் கோள் அரிக்கு இளையான் விடு சரமே. 113
நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடை மேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன;-செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம். 114
எரிகின்றன அயில் வெங் கணை-இரு சேனையும் இரியத்
திரிகின்றன, புடை நின்றில, திசை சென்றன; சிதறிக்
கரி பொன்றின; பரி மங்கின; கவி சிந்தின; கடல்போல்
சொரிகின்றன, பொரு செம்புனல்; தொலைகின்றன, கொலையால். 112
புரிந்து ஓடின; பொரிந்து ஓடின; புகைந்து ஓடின; புகை போய்
எரிந்து ஓடின; கரிந்து ஓடின; இடம் ஓடின; வலமே
திரிந்து ஓடின; பிரிந்து ஓடின; செறிந்து ஓடின; திசைமேல்
சரிந்து ஓடின;-கருங் கோள் அரிக்கு இளையான் விடு சரமே. 113
நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும்
கார் ஒத்தன; உரும் ஒத்தன; கடல் ஒத்தன; கதிரோன்
தேர் ஒத்தன; விடை மேலவன் சிரிப்பு ஒத்தன; உலகின்
வேர் ஒத்தன;-செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம். 114
ஏமத் தடங் கவசத்து இகல் அகலத்தன; இருவோர்
வாமப் பெருந் தோள் மேலன; வதனத்தன; வயிரத்
தாமத்தன; மார்பத்தன; சரணத்தன,-தம் தம்
காமக் குல மட மங்கையர் கடைக்கண் எனக் கணைகள். 115
எந் நாளினின், எத் தேவர்கள், எத் தானவர், எவரே,
அன்னார் செரு விளைத்தார்? என, இமையோர் எடுத்து அழைத்தார்;
பொன் ஆர் சிலை இரு கால்களும், ஒருகால் பொறை உயிரா,
முன் நாளினில் இரண்டாம் பிறை முளைத்தாலென வளைத்தார். 116
வேகின்றன உலகு, இங்கு இவர் விடுகின்றன விசிகம்;
போகின்றன சுடர் வெந்தன; இமையோர்களும் புலர்ந்தார்;
ஆகின்றது ஒர் அழிகாலம் இது ஆம், அன்று என அயிர்த்தார்;
நோகின்றன திசை யானைகள், செவி நாண் ஒலி நுழைய. 117
மீன் உக்கது, நெடு வானகம்; வெயில் உக்கது, சுடரும்;
மான் உக்கது, முழு வெண் மதி; மழை உக்கது, வானம்;
தான் உக்கது, குல மால் வரை; தலை உக்கது, தகை சால்
ஊன் உக்கன, உயிர் உக்கன, உலகத்தினுள் எவையும். 118
அக் காலையின், அயில் வெங் கணை ஐ-ஐந்து புக்கு அழுந்த,
திக்கு ஆசு அற வென்றான் மகன், இளங்கோ உடல் செறிந்தான்;
கைக் கார்முகம் வளையச் சில கனல் வெங் கணை, கவசம்
புக்கு, ஆகமும் கழன்று ஓடிட, இளங் கோளரி பொழிந்தான். 119
தெரிந்தான் சில சுடர் வெங் கணை, தேவேந்திரன் சின மா
இரிந்து ஓடிடத் துரந்து ஓடின, இமையோரையும் முன் நாள்
அரிந்து ஓடின, எரிந்து ஓடின, அவை கோத்து, அடல் அரக்கன்
சொரிந்தான், உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற. 120
குருதிப் புனல் சொரிய, குணம் குணிப்பு இல்லவன், குணபால்
பருதிப்படி பொலிவுற்றதை இளங் கோளரி பார்த்தான்;
ஒரு திக்கிலும் பெயராவகை, அவன் தேரினை உதிர்த்தான்;
பொருது இக் கணம் வென்றான் என, சர மாரிகள் பொழிந்தான். 121
அத் தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார்;
முத் தேவரும் உவந்தார்; அவன் உரும் ஏறு என முனிந்தார்;
தத்தா, ஒரு தடந் தேரினைத் தொடர்ந்தான், சரம் தலைமேல்
பத்து ஏவினன், அவை பாய்தலின், இளங் கோளரி பதைத்தான். 122
பதைத்தான், உடல் நிலைத்தான், சில பகு வாய் அயில் பகழி
விதைத்தான், அவன் விலக்காதமுன், விடைமேல் வரு விமலன்,
மதத்தால் எதிர் வரு காலனை, ஒரு கால் உற மருமத்து
உதைத்தாலென, தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான். 123
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக் கணை கழிய,
அவசத் தொழில் அடைந்தான்; அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார்;
திவசத்து எழு கதிரோன் எனத் தெரிகின்றது ஓர் கணையால்
துவசத்தையும் துணித்தே, அவன் மணித் தோளையும் துளைத்தான். 124
உள் ஆடிய உதிரப் புனல் கொழுந் தீ என ஒழுக,
தள்ளாடிய வட மேருவின் சலித்தான்; உடல் தரித்தான்,
தொள்ளாயிரம் கடும் போர்க் கணை துரந்தான்; அவை துறைபோய்
விள்ளா நெடுங் கவசத்திடை நுழையாது உக, வெகுண்டான். 125
மறித்து ஆயிரம் வடி வெங் கணை, மருமத்தினை மதியாக்
குறித்து, ஆயிரம் பரித் தேரவன் விடுத்தான்; அவை குறி பார்த்து
இறுத்தான், நெடுஞ் சரத்தால், ஒரு தனி நாயகற்கு இளையோன்;
செறித்தான் உடல் சில பொற் கணை, சிலை நாண் அறத் தெறித்தான். 126
வில் இங்கு இது, நெடு மால், சிவன், எனும் மேலவர் தனுவே-
கொல்? என்று கொண்டு அயிர்த்தான்; நெடுங் கவசத்தையும் குலையாச்
செல்லுங் கொடுங் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்;
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான், அகம் மெலிந்தான். 127
இந்திரசித்து மெலிவுற்றமை அறிந்த வீடணன் இலக்குவனுக்கு அதனைத் தெரிவித்தல்
அத் தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும், அணுகா,
முத்தன் முகம் நோக்கா, ஒரு மொழி கேள் என மொழிவான்,
எத் தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய்;
பித்தன் மனம் தளர்ந்தான்; இனிப் பிழையான் எனப் பகர்ந்தான். 128
இந்திரசித்து விடுத்த பல் வேறு படைகளை ஏற்ற கணைகளால் இலக்குவன் மாற்றுதல்
கூற்றின்படி கொதிக்கின்ற அக் கொலை வாள் எயிற்று அரக்கன்
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த,
சீற்றம் தலைத்தலை சென்று உற, இது தீர் எனத் தெரியா,
காற்றின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு காத்தான். 129
அனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு தடுத்தான்;
புனலின் படை தொடுத்தான்; அவன் அதுவே கொடு பொறுத்தான்;
கன வெங் கதிரவன் வெம் படை துரந்தான், மனம் கரியான்;
சின வெந் திறல் இளங் கோளரி அதுவே கொடு தீர்த்தான். 130
இந்திரசித்து விடுத்த அயன் படையை இலக்குவன் அழித்தல்
இது காத்திகொல்? என்னா, எடுத்து, இசிகப் படை எய்தான்;
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா, தொடுத்து அமைந்தான்;
செதுகாப் படை தொடுப்பேன் என நினைந்தான், திசைமுகத்தோன்
முது மாப் படை துரந்தான், இனி முடிந்தாய் என மொழிந்தான். 131
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும், மலரோன் -
தானும், முனிவரரும், பிற தவத்தோர்களும், அறத்தோர்
கோனும், பிற பிற தேவர்கள் குழுவும், மனம் குலைந்தார்;
ஊனம் இனி இலது ஆகுக, இளங்கோக்கு! என உரைத்தார். 132
ஊழிக்கடை இறும் அத்தலை, உலகு யாவையும் உண்ணும்
ஆழிப் பெருங் கனல்தன்னொடு சுடர் என்னவும் ஆகாப்
பாழிச் சிகை பரப்பித் தனை படர்கின்றது பார்த்தான்,-
ஆழித் தனி முதல் நாயகற்கு இளையான் - அது மதித்தான். 133
மாட்டான் இவன், மலரோன் படை முதற் போது தன்வலத்தால்,
மீட்டான் அலன்; தடுத்தான் அலன்; முடிந்தான் என, விட்டான்;
காட்டாது இனிக் கரந்தால், அது கருமம் அலது என்னா,
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் எனச் சமைந்தான். 134
நன்று ஆகுக, உலகுக்கு! என, முதலோன் மொழி நவின்றான்;
பின்றாதவன் உயிர்மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான்;
ஒன்றாக இம் முதலோன் படைதனை மாய்க்க என்று உரைத்தான்,
நின்றான், அது துரந்தான்; அவன் நலம் வானவர் நினைந்தார். 135
தான் விட்டது மலரோன் படைஎனின், மற்று இடைதருமே?
வான் விட்டதும், மண் விட்டதும், மறவோன் உடல் அறுமே?
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் எனத் தெரிந்தான்;
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என, வானவர் உவந்தார். 136
உரும் ஏறு வந்து எதிர்த்தால், அதன் எதிரே, நெருப்பு உய்த்தால்,
வரும் ஆங்கது தவிர்ந்தாலென, மலரோன் படை மாய,
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அரு மா கனல் என நின்றது, விசும்பு எங்கணும் ஆகி. 137
படை அங்கு அது படராவகை, பகலோன் குல மருமான்,
இடை ஒன்று அது தடுக்கும்படி செந் தீ உக எய்தான்,
தொடை ஒன்றினை; கணை மீமிசைத் துறுவாய், இனி என்றான்;
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்ததுபோல் தீர்ந்தது, வேகம். 138
தேவர்களின் மகிழ்ச்சியும், சிவபெருமான் தேவர்களுக்கு உண்மையை விளக்கியதும்
விண்ணோர் அது கண்டார், வய வீரர்க்கு இனி மேன்மேல்
ஒண்ணாதன உளவோ? என மனம் தேறினர், உவந்தார்;
கண் ஆர் நுதல் பெருமான், இவர்க்கு அரிதோ? எனக் கடை பார்த்து,
எண்ணாது இவை பகர்ந்தீர்; பொருள் கேளீர்! என இசைந்தான்; 139
நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தோர்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர்; 140
அறத்தாறு அழிவு உளது ஆம் என, அறிவும் தொடர்ந்து அணுகாப்
புறத்தார், புகுந்து அகத்தார் எனப் புகுந்து, அன்னது புரப்பார்,
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான், இவண் வந்தார்;
திறத்தால் அது தெரிந்து, யாவரும் தெரியாவகை திரிவார்; 141
உயிர்தோறும் உற்றுளன், தோத்திரத்து ஒருவன் என உரைக்கும்
அயிரா நிலை உடையான் இவன்; அவன், இவ் உலகு அனைத்தும்
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து, ஏறிய தலைவன்;
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர்; இது பரமால். 142
நெடும் பாற்கடல் கிடந்தாரும், பண்டு, இவர் நீர் குறை நேர,
விடும் பாக்கியம் உடையார்களைக் குலத்தோடு அற வீட்டி,
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என, இது எலாம்,
அடும்பு ஆக்கியத் தொடைச் செஞ்சடை முதலோன் பணித்து அமைந்தான். 143
உண்மை உணர்த்திய சிவபெருமானைத் தேவர்கள் புகழ்ந்து தொழுதல்
அறிந்தே இருந்து, அறியேம், அவன் நெடு மாயையின் அயர்ப்போம்;
பிறிந்தோம் இனி முழுது ஐயமும்; பெருமான் உரை பிடித்தோம்;
எறிந்தோம் பகை முழுதும்; இனித் தீர்ந்தோம் இடர், கடந்தோம்;
செறிந்தோர் வினைப் பகைவா! எனத் தொழுதார், நெடுந் தேவர். 144
மாயோன் படையை இந்திரசித்து ஏவுதலும், இலக்குவன் தன்னை அரியாகத் தியானிக்க, அது விலகிப் போதலும்
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன்,
நீயே இது தடுப்பாய் எனின், நினக்கு ஆர் எதிர் நிற்பார்?
போயே விசும்பு அடைவாய்; இது பிழையாது எனப் புகலா,
தூயோன்மிசை, உலகு யாவையும் தடுமாறிட, துரந்தான். 145
சேமித்தனர் இமையோர் தமை, சிரத்து ஏந்திய கரத்தால்;
ஆம் இத் தொழில், பிறர் யாவரும் அடைந்தார்; பழுது அடையாக்
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான்;
நேமித் தனி அரி, தான் என நினைந்தான், எதிர் நடந்தான். 146
தீக்கின்றது இவ் உலகு ஏழையும் எனச் செல்வதும் தெரிந்தான்;
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான்;
மீச் சென்றிலது, அயல் சென்று, அது விலங்கா, வலம்கொடு மேல்
போய்த்து; அங்கு அது கனல் மாண்டது, புகை வீய்ந்தது, பொதுவே. 147
ஏத்து ஆடினர், இமையோர்களும்; கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடினர்; அர மங்கையர் குனித்து ஆடினர்; தவத்தோர்,
காத்தாய் உலகு அனைத்தும் எனக் களித்து ஆடினர்; கமலம்
பூத்தானும், அம் மழுவாளியும், முழு வாய்கொடு புகழ்ந்தார். 148
சிவன் படையை இந்திரசித்து விடுத்தல்
அவன் அன்னது கண்டான்; இவன் ஆரோ? என அயிர்த்தான்;
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா,
எவன் என்னினும் நன்று ஆகுக! இனி எண்ணலன் என்னா,
சிவன் நன் படை தொடுத்து, ஆர் உயிர் முடிப்பேன் எனத் தெரிந்தான்; 149
பார்ப்பான் தரும் உலகு யாவையும், ஒரு கால், ஒரு பகலே,
தீர்ப்பான் படை தொடுப்பேன் எனத் தெரிந்தான்; அது தெரியா,
மீப் பாவிய இமையோர் குலம் வெருவுற்றது; இப்பொழுதே
மாய்ப்பான் என, உலகு யாவையும் மறுகுற்றன, மயங்கா. 150
தானே சிவன் தரப் பெற்றது, தவம் நாள் பல உழந்தே;
தானே, பிறர் அறியாதது தந்தேன் எனச் சமைந்தான்;
ஆனால், இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா,
ஏல் நாளும் இது ஆனால், எதிர் தடை இல்லதை எடுத்தான். 151
மனத்தால், மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்;
நினைத்தான்; இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான்;
சினத்தால் நெடுஞ் சிலை நாண் தடந் தோள்மேல் உறச் செலுத்தா,
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான். 152
சிவன் படையால் நேர்ந்த விளைவுகள்
சூலங்கள், மழுவும், சுடு சுணையும், கனல் சுடரும்,
ஆலங்களும், அரவங்களும், அசனிக் குலம் எவையும்,
காலன் தனது உருவங்களும், கரும் பூதமும், பெரும் பேய்ச்
சாலங்களும், நிமிர்கின்றன, உலகு எங்கணும் தான் ஆய். 153
ஊழிக் கனல் ஒரு பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும்;
சூழிக் கொடுங் கடுங் காற்று அதன் உடனே வர, தூர்க்கும் -
ஏழிற்கும் அப் புறத்தாய் உள பெரும் போர்க் கடல் இழிந்தாங்கு
ஆழித்தலைக் கிடந்தாலென நெடுந் தூங்கு இருள் அடைய. 154
இரிந்தார் குல நெடுந் தேவர்கள்; இருடிக் குலத்து எவரும்
பரிந்தார், இது பழுது ஆகிலது; இறுவான் எனும் பயத்தால்;
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது; பகரும் துணை நெடிதே?
திரிந்தார், இரு சுடரோடு உலகு ஒரு மூன்று உடன் திரிய. 155
வீடணன், இதனை விலக்க இயலுமோ? என, இலக்குவன் சிரித்தல்
பார்த்தான் நெடுந் தகை வீடணன், உயிர் காலுற, பயத்தால்
வேர்த்தான், இது விலக்கும் தரம் உளதோ, முதல் வீரா!
தீர்த்தா! என அழைத்தான்; அதற்கு இளங் கோளரி சிரித்தான்;
போர்த்தார் அடர் கவி வீரரும், அவன் தாள் நிழல் புகுந்தார். 156
இலக்குவனும் சிவன் படையை விட, அது இந்திரசித்து விடுத்த படையை விழுங்குதல்
அவயம்! உனக்கு அவயம்! எனும் அனைவோரையும், அஞ்சல்!
அவயம் உமக்கு அளித்தோம் என, தன் கைத் தலத்து அமைத்தான்;
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன், இனி ஒழியேன்;
சிவன், ஐம் முகம், உடையான், படை தொடுப்பேன் எனத் தெளிந்தான். 157
அப் பொன் படை மனத்தால் நினைந்து, அர்ச்சித்து, அதை அழிப்பாய்;
இப் பொன் படைதனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா,
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான்; இடை தொடரா,
எப் பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது, ஒர் இமைப்பின். 158
விண் ஆர்த்தது; மண் ஆர்த்தது; மேலோர் மணி முரசின்
கண் ஆர்த்தது; கடல் ஆர்த்தது; மழை ஆர்த்தது; கலையோர்
எண் ஆர்த்தது; மறை ஆர்த்தது; விசயம் என இயம்பும்
பெண் ஆர்த்தனள்; அறம் ஆர்த்தது; புறம் ஆர்த்தது, பெரிதால். 159
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை,
மறுகாவகை வலித்தான், அது வாங்கும்படி வல்லான்;
தெறு காலனின் கொடியோனும், மற்று அது கண்டு, அகம் திகைத்தான்;
அறு கால் வயக் கவி வீரரும் அரி என்பதை அறிந்தார். 160
தெய்வப் படை பழுது உற்றது எனக் கூசுதல் சிதைவால்;
எய் வித்தகம் உளது; அன்னது பிழையாது என இசையா,
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன்; அவையும்
மொய் வித்தகன் தடந் தோளினும் நுதற் சூட்டினும் மூழ்க, 161
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர், மிகு திறலோர்,
கை ஓய்வு இலர், மலை மாரியின் நிருதக் கடல் கடப்பார்,
உய்யார் என, வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான்;
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறு தாதையைச் செறுத்தான். 162
வீடணனை இந்திரசித்து சினத்தால் இகழ்ந்து பேசுதல்
முரண் தடந் தண்டும் ஏந்தி, மனிதரை முறையைக் குன்றிப்
பிரட்டரின் புகழ்ந்து, பேதை அடியரின் தொழுது, பின் சென்று,
இரட்டுறும் முரசம் என்ன, இசைத்ததே இசைக்கின்றாயைப்
புரட்டுவென் தலையை, இன்று; பழியொடும் ஒழிவென் போலாம். 163
விழி பட, முதல்வர் எல்லாம் வெதும்பினர், ஒதுங்கி வீழ்ந்து
வழி பட, உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும்,
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர், யாண்டும் வெஃகாப்
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கற்பாலார்? 164
நீர் உளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீரர், இராவணனோடு; மீளார்;
ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உளை, உறைய; நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார், அரசு வீற்றிருக்க? ஐயா! 165
முந்தை நாள், உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தையாரைச் செருவிடைச் சாயத் தள்ளி,
கந்தனார் தந்தையாரைக் கயிலையோடு ஒரு கைக் கொண்ட
எந்தையார் அரசு செய்வது, இப் பெரும் பலம் கொண்டேயோ? 166
பனி மலர்த் தவிசின் மேலோன் பார்ப்பனக் குலத்துக்கு எல்லாம்
தனி முதல் தலைவன் ஆனாய்; உன்னை வந்து அமரர் தாழ்வார்;
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்;
இனி உனக்கு என்னோ, மானம்? எங்களோடு அடங்கிற்று அன்றே. 167
சொல்வித்தும், பழித்தும், நுங்கை மூக்கினைத் துணிந்தோராலே,
எல் வித்தும் படைக் கை உங்கள் தமையனை எங்களோடும்
கொல்வித்தும், தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும், வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ? 168
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன், இராமன் அம்பால்,
புழுதியே பாயல் ஆகப் புரண்ட நாள், புரண்டு மேல் வீழ்ந்து,
அழுதியோ? நீயும் கூட ஆர்த்தியோ? அவனை வாழ்த்தித்
தொழுதியோ? யாதோ, செய்யத் துணிந்தனை?-விசயத் தோளாய்! 169
ஊனுடை உடம்பின் நீங்கி, மருந்தினால் உயிர் வந்து எய்தும்
மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே? நீயும் அன்னான் -
தானுடைச் செல்வம் துய்க்கத் தகுதியே? சரத்தினோடும்
வானிடைப் புகுதி அன்றே, யான் பழி மறுக்கில்! என்றான். 170
வீடணன் மறுமொழி
அவ் உரை அமையக் கேட்ட வீடணன், அலங்கல் மோலி
செவ்விதின் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி,
வெவ்விது பாவம்; சாலத் தருமமே விழுமிது; ஐய!
இவ் உரை கேட்டி! என்னா, இனையன் விளம்பலுற்றான்; 171
அறம் துணை ஆவது அல்லால், அரு நரகு அமைய நல்கும்
மறம் துணை ஆக, மாயாப் பழியொடும் வாழ மாட்டேன்;
துறந்திலேன் மெய்ம்மை, பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்;
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன், பிழைத்த போதே. 172
உண்டிலென் நறவம்; பொய்ம்மை உரைத்திலென்; வலியால் ஒன்றும்
கொண்டிலென்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம்
கண்டிலர் என்பால்; உண்டே? நீயிரும் காண்டிர் அன்றே?
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே? 173
மூவகை உலகும் ஏத்தும் முதலவன், எவர்க்கும் மூத்த
தேவர்தம் தேவன், தேவி கற்பினில் சிறந்துளாளை
நோவன செய்தல் தீது என்று உரைப்ப, நுன் தாதை சீறி,
போ! என உரைக்க, போந்தேன்; நரகதில் பொருந்துவேனோ? 174
வெம்மையின், தருமம் நோக்கா, வேட்டதே வேட்டு, வீயும்
உம்மையே புகழும் பூண; துறக்கமும் உமக்கே ஆக;
செம்மையில் பொருந்தி, மேலோர் ஒழுக்கினோடு அறத்தைத் தேறும்
எம்மையே பழியும் பூண; நரகமும் எமக்கே ஆக. 175
அறத்தினைப் பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து, ஞானத்
திறத்தினும் உறும் என்று எண்ணி, தேவர்க்கும் தேவைச் சேர்ந்தேன்;
புறத்தினில் புகழே ஆக; பழியோடும் புணர்க; போகச்
சிறப்பு இனிப் பெறுக; தீர்க என்றனன், சீற்றம் இல்லான். 176
வீடணன் மேல் இந்திரசித்து விடுத்த கணை, வேல், முதலியவற்றை இலக்குவன் தடுத்தல்
பெறும் சிறப்பு எல்லாம் என் கைப் பிறை முகப் பகழி பெற்றால்,
இறும் சிறப்பு அல்லால், அப் பால் எங்கு இனிப் போவது? என்னா,
தெறுஞ் சிறைக் கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து, செம் பொன்
உறும் சுடர்க் கழுத்தை நோக்கி, நூக்கினான், உருமின் வெய்யோன். 177
அக் கணை அசனி என்ன, அனல் என்ன, ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன, முடுகிய முடிவை நோக்கி,
இக் கணத்து இற்றான், இற்றான் என்கின்ற இமையோர் காண,
கைக் கணை ஒன்றால், வள்ளல், அக் கணை கண்டம் கண்டான். 178
கோல் ஒன்று துணிதலோடும், கூற்றுக்கும் கூற்றம் அன்னான்,
வேல் ஒன்று வாங்கி விட்டான்; வெயில் ஒன்று விழுவது என்ன,
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்,
நூல் ஒன்று வரி விலானும், அதனையும் நுறுக்கி வீழ்த்தான். 179
வீடணன் வெகுண்டு, இந்திரசித்தினது தேரின் பாகனையும் குதிரைகளையும் அழித்தல்
வேல்கொடு நம்மேல் எய்தான் என்று, ஒரு வெகுளி பொங்க,
கால்கொடு காலின் கூடிக் கை தொடர் கனகத் தண்டால்,
கோல் கொளும் ஒருவனோடும், கொடித் தடந் தேரில் பூண்ட
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான், படியின் மேலே. 180
இந்திரசித்து ஆயிர கோடி அம்பு விடுத்து, ஆரவாரித்தல்
அழிந்த தேர்மீது நின்றான், ஆயிர கோடி அம்பு
பொழிந்தது, அவன் தோளின்மேலும், இலக்குவன் புயத்தின் மேலும்
ஒழிந்தவர் உரத்தின்மேலும், உதிர நீர் வாரி ஆக
அழிந்து இழிந்து ஓட, நோக்கி, அண்டமும் இரிய ஆர்த்தான். 181
இந்திரசித்து அழிவு இல்லாத் தேர் பெற எண்ணி, இராவணனிடத்திற்குப் போதல்
ஆர்த்தவன், அனைய போழ்தின், அழிவு இலாத் தேர் கொண்டு அன்றிப்
போர்த் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி,
பார்த்தவர் இமையாமுன்னம், விசும்பிடைப் படர்ந்தான் என்னும்
வார்த்தையை நிறுத்திப் போனான், இராவணன் மருங்கு சென்றான். 182
மிகைப் பாடல்கள்
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு
ஏறாதன இல்லை - இலக்குவன் (வில்)
தூறா நெடு வாளி துரந்திடவே. 42-1
சிர நிரை அறுத்து, அவர் உடலைச் சிந்தி, மற்று
உர நிரை அறுத்து, அவர் ஒளிரும் வெம் படைக்
கர நிரை அறுத்து, வல் அரக்கர் கால் எனும்
தர நிரை அறுப்பது, அங்கு இலக்குவன் சரம். 51-1
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம்
ஓய்வு இலது உரைத்தனன்; ஓம ஆகுதித்
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல்
தீயவன், என்! எனத் திகைத்து நோக்கினான். 52-1
ஆங்கு அது கிடக்க, நான் மனிதர்க்கு ஆற்றலேன்,
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற,
ஈங்கு நின்று யாவரும் இயம்ப, என் குலத்து
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும்; ஒல்குமால். 64-1
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகிதன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த
மானமேல் சேனையோடும் வடதிசை நோக்கி மீது
போனதோ? - கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்! 69-1
சூர் எலாம் திரண்ட பொன்-தோள் தாபதர்க்கு இளைய தோன்றல்
நீர் எலாம் மறந்தீர் போலும்; யான் செரு ஏற்று நின்று,
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம்
போர் எலாம் மடிந்து நூறி, இறத்தலும் இருகால் பெற்றீர். 84-1
விடு வாளிகள் கடிது ஓடுவ; வீற்று ஆகுவ; வீயா
நெடு நாணிடை சிதையாதவர், நேர் ஏவிய விசிகம்,
தொடு கார் விசை நுழையா, எதிர் மீளாது, இடை சோரா,
எடு பாணமும் அழியா, முதுகு இடு தூணியை அறுத்தான். 126-1
அரு ஆகியும், உரு ஆகியும், அழியா முழுமுதல் ஆம்
கரு ஆகியும், எமை ஆளுறு கருணாகர வடிவாம்
பொருள் ஆகியும், இருள் ஆகியும், ஒளி ஆகியும், பொலியும்
திருமார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார்? 142-1
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது; இப்பாலில்
காதும் கொலை அரக்கன் அது கண்டான்; தகை மலர்மேல்
போதன் தரு படை போக்கினன் போலாம் எனப் புகைந்தான்;
ஏது இங்கு இவன் வலி நன்று; மற்று இது காண்பென் என்று இசைப்பான். 144-1
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம்
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே
அமைவுற்றது; பகிரண்டமும் அழிகாலம் இது எனவே
குமைவுற்றிட, வடவைப் பொறி கொழிக்கின்றது, எவ் உலகும். 145-1
யுத்த காண்டம்
28. இந்திரசித்து வதைப் படலம்
இராவணன் இந்திரசித்திடம், நிகழ்ந்தது உரைக்கக் கூறல்
விண்ணிடைக் கரந்தான் என்பார், வஞ்சனை விளைக்கும் என்பார்,
கண்ணிடைக் கலக்க நோக்கி, ஐயுறவு உழக்கும் காலை,
புண்ணிடை யாக்கைச் செந்நீர் இழிதர, புக்கு நின்ற
எண்ணிடை மகனை நோக்கி, இராவணன் இனைய சொன்னான்: 1
தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில், நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி என்றான். 2
சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி,
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த் தொழில் தொடங்கி, ஆர்க்கும்
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்துவிட்டான். 3
நிலம் செய்து, விசும்பும் செய்து, நெடிய மால் படை, நின்றானை
வலம் செய்து போயிற்றுஎன்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டாய்;
சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே. 4
முட்டிய செருவில், முன்னம் முதலவன் படையை என்மேல்
விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்;
கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்;
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான். 5
ஆதலால், அஞ்சினேன் என்று அருளலை; ஆசைதான் அச்
சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்;
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான் - உலகு எலாம் கலக்கி வென்றான். 6
இராவணன் இந்திரசித்தைக் கடிந்துரைத்தல்
இயம்பலும், இலங்கை வேந்தன், எயிற்று இள நிலவு தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு, போர்க்கு இனி ஒழி, நீ; போத
மயங்கினை, மனமும்; அஞ்சி வருந்தினை; வருந்தல் ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிதரைத் தனு ஒன்றாலே. 7
முன்னையோர், இறந்தோர் எல்லாம், இப் பகை முடிப்பர் என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்று அவர்ப் பெயர்வர் என்றும்,
உன்னை, நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும், அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும் பகை தேடிக் கொண்டேன். 8
பேதைமை உரைத்தாய்; பிள்ளாய்! உலகு எலாம் பெயர, பேராக்
காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண,
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்,
சீதையை விடுவது உண்டோ , இருபது திரள் தோள் உண்டால்? 9
வென்றிலென் என்ற போதும், வேதம் உள்ளளவும், யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்து அன்றோ?
இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ ? 10
விட்டனென், சீதைதன்னை என்றலும், விண்ணோர் நண்ணி,
கட்டுவது அல்லால், என்னை யான் எனக் கருதுவாரோ?
பட்டனென் என்ற போதும், எளிமையின் படுகிலேன் யான்,
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன். 11
சொல்லி என், பலவும்? நீ நின் இருக்கையைத் தொடர்ந்து, தோளில்
புல்லிய பகழி வாங்கி, போர்த் தொழில் சிரமம் போக்கி,
எல்லியும் கழித்தி என்னா, எழுந்தனன்; எழுந்து, பேழ் வாய்
வல்லியம் முனிந்தாலன்னான், வருக, தேர் தருக! என்றான். 12
இராவணனை தடுத்து, இந்திரசித்து தேர் ஏறிப் போர்க்குச் செல்லுதல்
எழுந்தவன் தன்னை நோக்கி, இணை அடி இறைஞ்சி, எந்தாய்!
ஒழிந்தருள், சீற்றம்; சொன்ன உறுதியைப் பொறுத்தி; யான் போய்க்
கழிந்தனென் என்ற பின்னர், நல்லவா காண்டி என்னா
மொழிந்து, தன் தெய்வத் தேர்மேல் ஏறினன், முடியலுற்றான். 13
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும், தன்பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன, தேர்மேல் ஆக்கி,
கொடைத் தொழில் வேட்டோ ர்க்கு எல்லாம் கொடுத்தனன், கொடியோன் தன்னைக்
கடைக்கணால் நோக்கி நோக்கி, இரு கண் நீர் கலுழப் போனான். 14
இந்திரசித்து தம்மைத் தொடர்ந்த இலங்கையின் நிருதரை விலக்கி, மன்னனைக் காக்குமாறு கூறிச் செல்லுதல்
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர், விரைவின் எய்தி,
விலங்கல் அம் தோளாய்! நின்னைப் பிரிகலம்; விளிதும் என்று,
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை, மன்னனைக் காமின்; யாதும்
கலங்கலிர்; இன்றே சென்று, மனிதரைக் கடப்பென் என்றான். 15
வணங்குவார், வாழ்த்துவார், தன் வடிவினை நோக்கித் தம் வாய்
உணங்குவார், உயிர்ப்பார், உள்ளம் உருகுவார், வெருவலுற்றக்
கணங் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர், கடைக்கண் என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து, அரிதின் போனான். 16
இந்திரசித்தின் தேர் ஓசையை இலக்குவன் கேட்டல்
ஏயினன் இன்னன் ஆக, இலக்குவன், எடுத்த வில்லான்,
சேய் இரு விசும்பை நோக்கி, வீடண! தீயோன் அப் பால்
போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் ஒன்றும் என்பான்,
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான். 17
குன்று இடை நெரிதர, வடவரையின் குவடு உருள்குவது என முடுகுதொறும்,
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது, புனை மணியின்
மின் திரள் சுடரது, கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது எனச்
சென்றது, திசை திசை உலகு இரிய, - திரி புவனமும் உறு தனி இரதம். 18
கடல் மறுகிட, உலகு உலைய, நெடுங் கரி இரிதர, எதிர் கவி குலமும்
குடர் மறுகிட, மலை குலைய, நிலம் குழியொடு கிழிபட, வழி படரும்
இடம் மறுகிய பொடி முடுகிடவும், இருள் உளது என எழும் இகல் அரவின்
படம் மறுகிட, எதிர் விரவியது - அவ் இருள் பகல் உற வரு பகை இரதம். 19
இந்திரசித்தும் இலக்குவனும் பொருதல்
ஆர்த்தது நிருதர்தம் அனிகம்; உடன், அமரரும் வெருவினர்; கவி குலமும்
வேர்த்தது, வெருவலொடு அலம்வரலால்; விடு கணை சிதறினன், அடு தொழிலோன்;
தீர்த்தனும், அவன் எதிர் முடுகி, நெடுந் திசை செவிடு எறிதர, விசை கெழு திண்
போர்த் தொழில் புரிதலும், உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால். 20
இந்திரசித்தை உடனே கொல்லுமாறு வீடணன் இலக்குவனுக்கு உரைத்தல்
வீடணன் அமலனை, விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல்,
சூடலை, துறு மலர் வாகை எனத் தொழுதனன்; அ(வ்) அளவில் அழகனும் அக்
கோடு அணை வரி சிலை உலகு உலைய, குல வரை பிதிர்பட, நிலவரையில்
சேடனும் வெருவுற, உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால். 21
இருவரும் பொருதல்
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட, இவன் விட, அத்
தீயினும் எரிவன உயிர் பருக, சிதறின கவிகளொடு இன நிருதர்,
போயின போயின திசை நிறையப் புரள்பவர் முடிவு இலர்; பொரு திறலோர்
ஏயினர், ஒருவரை ஒருவர் குறித்து, எரி கணை, இரு மழை பொழிவனபோல். 22
அற்றன, அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை; அடல் அரியின்
கொற்றவன் விடு கணை முடுகி, அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு
உற்றன; ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில; தெறுகில அனுமன் உடல்;
புற்றிடை அரவு என நுழைய, நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால். 23
ஆயிடை, இளையவன், விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட,
தூயினன், அயில் முக விசிகம்; நெடுந் துளைபட, விழி கனல் சொரிய, முனிந்து,
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து
ஓய்வுறுவன; அது தெரிவுறலால், உரறினர் இமையவர், உவகையினால். 24
வில்லினின் வலி தரல் அரிது எனலால், வெயிலினும் அனல் உமிழ் அயில், விரைவில்
செல் என, மிடல் கொடு கடவினன்; மற்று அது திசைமுகன் மகன் உதவியதால்;
எல்லினும் வெளி பட வருவது கண்டு, இளையவன் எழு வகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால், நடு இரு துணிபட உரறினனால். 25
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து, ஆயிரம் உடல் புக, அழிபடு செஞ்
சோணிதம் நிலம் உற, உலறிடவும், தொடு கணை விடுவன மிடல் கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும், பகலவன் மருமகன், அடு கணையின்
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட, முறை முறை சிதறினனால். 26
இந்திரசித்தின் தேர்ப்பாகனை இலக்குவன் வீழ்த்தல்
தேர் உளது எனின், இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற, உணர் உறுவான்,
போர் உறு புரவிகள் படுகிலவால்; புனை பிணி துணிகில, பொரு கணையால்;
சீரிது, பெரிது, இதன் நிலைமை எனத் தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால்,
சாரதி மலை புரை தலையை நெடுந் தரையிடை இடுதலும், முறை திரிய, 27
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின், தவத்தை, நண்ணி,
ஐவினை நலிய, நைவான் அறிவிற்கும் உவமை ஆகி,
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலாப்
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது - அப் பொலம் பொன் திண் தேர். 28
தேரைத் தானே செலுத்தி, தன் மேல் தைத்த அம்புகளைப் பறித்து, இந்திரசித்து வீசுதல்
துள்ளு பாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி,
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக,
வள்ளல்மேல், அனுமன் தன்மேல், மற்றையோர் மல் திண் தோள்மேல்,
உள்ளுறப் பகழி தூவி, ஆர்த்தனன், எவரும் உட்க. 29
இந்திரசித்தின் வீரம் கண்டு, தேவரும் இலக்குவனும் வியத்தலும்
வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன்;
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே?
சூரர் என்று உரைக்கற்பாலார், துஞ்சும் போது உணர்வின் சோராத்
தீரர் என்று அமரர் பேசி, சிந்தினார், தெய்வப் பொற் பூ. 30
எய்த வன் பகழி எல்லாம் பறித்து, இவன் என்மேல் எய்யும்;
கை தடுமாறாது; உள்ளம் உயிர் இனம் கலங்கா; யாக்கை
மொய்கணை கோடி கோடி மொய்க்கவும், இளைப்பு ஒன்று இல்லான்;
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல் என்றான். 31
இந்திரசித்து பகலில் அன்றி இரவில் இறவான் என வீடணன் இலக்குவனுக்கு மொழிதல்
தேரினைக் கடாவி, வானில் செல்லினும் செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்
காரினைக் கடந்து, வஞ்சம் கருதினும் கருதும்; காண்டி,
வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின், வெய்யோன். 32
இப்பொழுதே வெல்வேன் என இலக்குவன் உரைத்தபோது, சூரியனும் உதித்தது
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப, இன்னே
பொன்றுவது அல்லால், அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ?
சென்றுழிச் செல்லும் அன்றே தெறு கணை; வலியின் தீர்ந்தான்;
வென்றி இப்போதே கோடும்; காண் என விளம்பும் எல்லை. 33
செம் புனல் சோரிச் செக்கர் திசை உறச் செறிகையாலும்,
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும்,
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும், அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கின்றான் ஒத்து, உதித்தனன், அருக்கன் உப்பால். 34
விடிந்தது பொழுதும்; வெய்யோன் விளங்கினன், உலகம் மீதாய்;
இடுஞ் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய,
கொடுஞ் சின மாயச் செய்கை வலியொடும் குறைந்து குன்ற,
முடிந்தனன், அரக்கன் என்னா, முழங்கினர், உம்பர் முற்றும். 35
சிவன் ஈந்த தேரும் சிலையும் இருக்கும்வரை இவன் அழியான் என வீடணன் குறிப்பித்தல்
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும், சிலை கரத்து இருந்த போதும்,
போர் அழியான், இவ் வெய்யோன்; புகழ் அழியாத பொன் - தோள்
வீர! இது ஆணை என்றான் - வீடணன், விளைவது ஓர்வான். 36
இலக்குவன் இந்திரசித்தின் தேரைச் சிதைக்க, அவன் விண்ணில் மறைந்து ஆரவாரித்தல்
பச்சை வெம் புரவி வீயா; பல்லியச் சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து, வில்லின்
விச்சையின் கணவன் ஆனான், வின்மையால், வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான், ஆணி நீக்கி. 37
மணி நெடுந் தேரின் கட்டு விட்டு, அது மறிதலோடும்,
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல் ஆய அன்றே-
திணி நெடு மரம் ஒன்று, ஆழி வாள் மழுத் தாக்க, சிந்திப்
பணை நெடு முதலும் நீங்க, பாங்கு உறை பறவை போல, 38
அழிந்த தேர்த் தட்டின்நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளிப்
பொழிந்தனன்; இளைய வீரன் கணைகளால் துணித்துப் போக்க,
மொழிந்து இறாவகையில் விண்ணை முட்டினான், உலகம் மூன்றும்
கிழிந்தன என்ன ஆர்த்தான்; கண்டிலர், ஓசை கேட்டார். 39
வர பலத்தால் இந்திரசித்து கல் மழை பொழிய, திசைகள் எங்கும் இலக்குவன் வாளி ஏவுதல்
மல்லின் மா மாரி அன்ன தோளினான், மழையின் வாய்ந்த
கல்லின் மா மாரி, பெற்ற வரத்தினால், சொரியும்காலை,
செல்லும் வான் திசைகள் ஓரார், சிரத்தினோடு உடல்கள் சிந்தப்
புல்லினார் நிலத்தை, நின்ற வானர வீரர், போகார். 40
காண்கிலன், கல்லின் மாரி அல்லது, காளை வீரன்,
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால், திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என, முழுதும் வௌவ,
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான், இடைவிடாமல். 41
இந்திரசித்தின் வில் பிடித்த கையை இலக்குவன் துணித்து வீழ்த்துதல்
மறைந்தன திசைகள் எங்கும்; மாறு போய் மலையும் ஆற்றல்
குறைந்தனன்; இருண்ட மேகக் குழாத்திடைக் குருதிக் கொண்மூ
உறைந்துளது என்ன நின்றான் உருவினை, உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான்; காணா, இனையது ஓர் நினைவது ஆனான்: 42
சிலை அறாது எனினும், மற்று அத் திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது என்னா, வரி சிலை ஒன்று வாங்கி,
கலை அறாத் திங்கள் அன்ன வாளியால், கையைக் கொய்தான்,-
விலை அறா மணிப் பூணோடும், வில்லொடும், நிலத்து வீழ. 43
பாக வான் பிறைபோல் வெவ் வாய்ச் சுடு கணை படுதலோடும்,
வேக வான் கொடுங் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில்,-
மாக வான் தடக் கை மண்மேல் விழுந்தது மணிப் பூண் மின்ன-
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன. 44
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையைப் பற்றிக்
கடித்தது போல, கோல விரல்களால் இறுகக் கட்டிப்
பிடித்த வெஞ் சிலையினோடும், பேர் எழில் வீரன் பொன் - தோள்
துடித்தது, - மரமும், கல்லும் துகள் பட, குரங்கும் துஞ்ச. 45
அந்தரம் அதனில் நின்ற வானவர், அருக்கன் வீழா,
சந்திரன் வீழா, மேரு மால் வரை தகர்ந்து வீழா,
இந்திரசித்தின் பொன் - தோள் இற்று இடைவிழுந்தது என்றால்,
எந்திரம் அனைய வாழ்க்கை இனிச் சிலர் உகந்து என்? என்றார். 46
கை அற்றமை கண்டு அரக்கர் கலங்க, வானரர் அரக்கர்களை மாய்த்தல்
மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால், அப்
பொய் அறச் சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன், பூத்த
மை அறக் கரிது என்று எண்ணும் மனத்தினான், வயிரம் அன்ன,
கை அற, தலை அற்றார்போல் கலங்கினார், நிருதர் கண்டார். 47
அன்னது நிகழும் வேலை, ஆர்த்து எழுந்து, அரியின் வெள்ளம்
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம்,
கொல் நகக் கரத்தால், பல்லால்; மரங்களால், மானக் குன்றால்,
பொன் நெடு நாட்டை எல்லாம் புதுக் குடி ஏற்றிற்று அன்றே. 48
இந்திரசித்து வீரம் பேசி, உக்கிரமாகப் பொருதல்
காலம் கொண்டு எழுந்த மேகக் கருமையான், செம்மை காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான், பகையின் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான். 49
காற்று என, உரும் ஏறு என்ன, கனல் என, கடை நாள் உற்ற
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன, கொல்வான்
தோற்றினான்; அதனைக் காணா, இனி, தலை துணிக்கும் காலம்
ஏற்றது என்று, அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனைச் செய்தான். 50
இலக்குவன் பிறை முக அம்பு எய்து, இந்திரசித்தின் தலையை அறுத்தல்
மறைகளே தேறத் தக்க, வேதியர் வணங்கற்பால,
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்திஎன்னின்,
பிறை எயிற்று இவனைக் கோறி என்று, ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் - உலகு எலாம் நிறுத்தி நின்றான். 51
நேமியும், குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான்
நாம வேல்தானும், மற்றை நான்முகன் படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன் சிரத்தைத் தள்ளி,
பூ மழை வானோர் சிந்த, பொலிந்தது - அப் பகழிப் புத்தேள். 52
இந்திரசித்து இறந்து மண்மேல் விழ, அரக்கர் சேனை இரிந்து ஓடுதல்
அற்றவன் தலைமீது ஓங்கி, அண்டம் உற்று அணுகாமுன்னம்,
பற்றிய குலத்தோடும், உடல் நிறை பகழியோடும்,
எற்றிய காலக் காற்றால், மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்தென்ன, வீழ்ந்தது, சோரன் யாக்கை. 53
விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும், மின்னு வீசும்
குண்டலத் துணைகளோடும், கொந்தளக் குஞ்சிச் செங் கேழ்ச்
சண்ட வெங் கதிரின் கற்றைத் தழையொடும், இரவிதான் அம்
மண்டலம் வீழ்ந்தது என்ன, வீழ்ந்தது, தலையும் மண்மேல். 54
உயிர் இறப் புக்க காலை, உள் நின்ற உணர்வினோடும்,
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமாபோல்,
அயில் எயிற்று அரக்கர் உள்ளார், ஆற்றலர் ஆகி, ஆன்ற
எயிலுடை இலங்கை நோக்கி, இரிந்தனர், படையும் விட்டார். 55
தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்
வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும்,
செல்லாது, அவ் இலங்கை வேந்தற்கு அரசு எனக் களித்த தேவர்
எல்லாரும், தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது,
கொல்லாத விரதத்தார் தம் கடவுளர் கூட்டம் ஒத்தார். 56
வானவர் அருளால் வானரர் உயிர் பெற்று எழுதல்
வரம் தரு முதல்வன், மற்றை மான் மறிக் கரத்து வள்ளல்,
புரந்தரன், முதல்வர் ஆய நான்மறைப் புலவர், பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார்; அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர்; அவரை யாக்கை கண்டன, குரங்கும், கண்ணால். 57
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது - சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலை அதனில் மற்று அப் பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன, இமையோர் ஏத்த. 58
இந்திரசித்தின் தலையை ஏந்தி, அங்கதன் முன் செல்ல,
அனுமனின் தோள்மேல் இலக்குவன் செல்லுதல்
ஆக்கையின்நின்று வீழ்ந்த அரக்கன் செந் தலையை அம் கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும்
பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன் மேல் இளவல் போனான். 59
இந்திரனின் உவகை மொழி
வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற விழியன், மீதுற்று
ஓங்கிய முடியன், திங்கள் ஒளி பெறு முகத்தன், உள்ளால்
வாங்கிய துயரன், மீப் போய் வளர்கின்ற புகழன், வந்துற்று
ஓங்கிய உவகையாளன், இந்திரன், உரைப்பதானான்: 60
எல்லி வான் மதியின் உற்ற கறை என, என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன்,
வில்லியர் ஒருவர் நல்க, துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்;
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை? இனி, சிறுமை யாதோ? 61
தென் தலை ஆழி தொட்டோ ன் சேய் அருள் சிறுவன் செம்மல்,
வென்று அலைத்து என்னை ஆர்த்துப் போர்த் தொழில் கடந்த வெய்யோன்,
தன் தலை எடுப்பக் கண்டு, தானவர் தலைகள் சாய,
என் தலை எடுக்கலானேன்; இனிக் குடை எடுப்பென் என்றான். 62
இலக்குவன் மீண்டு வருதல் கண்டு, இராமன் உவகைக் கண்ணீர் சொரிதல்
வரதன், போய் மறுகாநின்ற மனத்தினன், மாயத்தோனைச்
சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிசு பார்த்தான். 63
வன் புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத்
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை,
அன்புகொல்? அழு கணீர்கொல்? ஆனந்த வாரியேகொல்?
என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யார், அது ஓர்வார்? 64
இராமன் திருவடிகளில் இந்திரசித்தின் தலையை வைக்க, அவன் களிப்புக் கொள்ளுதல்
விழுந்து அழி கண்ணின் நீரும், உவகையும், களிப்பும், வீங்க,
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் -
கொழுந்து எழும் செக்கர்க் கற்றை வெயில் விட, எயிற்றின் கூட்டம்
அழுந்துற, மடித்த பேழ் வாய்த் தலை அடியுறை ஒன்று ஆக. 65
தலையினை நோக்கும்; தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள்
மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்;
சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த
கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்புக் கொண்டான். 66
இராமன் திருவடிகளில் இலக்குவன் வணங்குதலும், இராமன் தம்பியைத் தழுவிப் போற்றுதலும்
காள மேகத்தைச் செக்கர் கலந்தென, கரிய குன்றில்
நாள் வெயில் பரந்தது என்ன, நம்பிதன் தம்பி மார்பில்
தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச் சுவடு தன் உருவில் தோன்ற,
தாளின்மேல் வணங்கினானைத் தழுவினன், தனித்து ஒன்று இல்லான். 67
தூக்கிய தூணி வாங்கி, தோளொடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவச பாசம் ஒழித்து, அது விரைவின் நீக்கி,
தாக்கிய பகழிக் கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன் - தழுவிப் பல்கால், பொன் தடந் தோளின் ஒற்றி. 68
வீடணனை இராமன் புகழ்ந்து பேசி, இனிது இருத்தல்
ஆடவர் திலக! நின்னால் அன்று; இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி, ஈது என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால். 69
மிகைப் பாடல்கள்
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான்,
நன்று நம் ஆணை என்னா, நகைசெய்யா, அவனைப் பார்த்து,
கொன்று நான் இருவர்தம்மைக் குரக்கு இனத்தோடும் மாய்த்து,
வென்று நான் வருவன,-எந்தாய்!-கேள் என, விளம்பலுற்றான். 10-1
வாசக் குழலாள் மயில் சீதையை நீ
ஆசைப்படுகின்றது நன்று அல காண்;
நாசத்தை உறும், உயிர் போய்; நானே
நேசப்படுகின்றனன் என்றனனே. 10-2
சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ;
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல,
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு, நின்
அறியாமையினால் அழிவானதுவே. 10-3
வண்டு ஆர் குழலார் மலர்மாதினை நீ
கண்டே மனம் வைப்பது கற்பிலகாண்;
விண்டே எதிர் வாலிதன் மார்பு உருவக்
கண்டோ ன் அவனே, கணை ஒன்றதனால். 10-4
ஆரே, பிறர் தாரம் உறுப்பு அதனில்
நேரே நினைகின்றவர்? நீ நினைவாய்;
பாரே இழிவு ஆனது; தான் நிலையின்
பேரே ஒழிவு ஆனது என்று சொன்னான். 10-5
வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும்,
இட்ட நாள் எல்லைதன்னை யாவரே விலக்க வல்லார்?
பட்டு, நான் விழுந்தால் அன்றி, பாவையை விடுவது உண்டோ ? 11-1
பழுது இலா வடிவினாளை, பால் அன்ன மொழியினாளை
தழுவினால் அன்றி, ஆசை தவிருமோ? தவம் இலாதாய்!
முழுதும் வானவரை வென்றேன்; மூவர் என் முன் நில்லார்கள்;
அழிவுதான் எனக்கும் உண்டோ ? ஆண் அலாய்; பேடி! என்றான். 11-2
சிறு தொழிற்கு உரியர் ஆகி, தீவினைக்கு உறவாய் நின்ற
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ளச் சேனை
மறி திரைக் கடலின் போத, வான் முரசு இயம்ப, வல்லே,
தெறு சினத்து அரக்கன், வானோர் திகைத்து உளம் குலைய, சென்றான். 16-1
அச்சு எனலாக முன்பின் தோன்றலும், அறாத மெய்யன்
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி,
பச்செனும் மரத்தவாறு பெருக்கவும், பதையாநின்றான்,
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்வு இலன்; நெஞ்சம் அஞ்சான். 30-1
வான் தலை எடுக்க, வேலை மண் தலை எடுக்க, வானோர்
கோன் தலை எடுக்க, வேதக் குலம் தலை எடுக்க, குன்றாத்
தேன் தலையெடுக்கும் தாராய்! தேவரை வென்றான் தீய
ஊன் தலை எடுத்தாய், நீ என்று உரைத்தனர், உவகை மிக்கார். 62-1
கம்ப மதத்துக் களி யானைக் காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன்;
வம்பு செறிந்த மலர்க் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில்,
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால். 67-1
யுத்த காண்டம்
29. இராவணன் சோகப் படலம்
தூதர் இராவணனுக்கு இந்திரசித்து இறந்த செய்தியைத் தெரிவித்தல்
ஓத ரோதன வேலை கடந்துளார்,
பூதரோதரம் புக்கென, போர்த்து இழி
சீதரோதக் குருதித் திரை ஒரீஇ,
தூதர் ஓடினர், தாதையின் சொல்லுவார். 1
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என,
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ,
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார்,
சென்று, இலங்கு அயில் தாதையைச் சேர்ந்துளார். 2
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்,-
இல்லை ஆயினன், உன் மகன் இன்று எனச்
சொல்லினார் - பயம் சுற்றத் துளங்குவார். 3
மாடு இருந்தவர், வானவர், மாதரார்,
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்,
வீடும், இன்று, இவ் உலகு என விம்முவார்,
ஓடி, எங்கணும் சிந்தி ஒளித்தனர். 4
செய்தி கொணர்ந்த தூதரை வாளால் வீசி, இராவணன் சோர்ந்து விழுதல்
சுடர்க் கொழும் புகை தீ விழி தூண்டிட,
தடற்று வாள் உருவி, தரு தூதரை
மிடற்று வீசல் உறா, விழுந்தான் அரோ-
கடல் பெருந் திரைபோல் கரம் சோரவே. 5
இராவணன் கண்ணீர் உகுத்தல்
வாய்ப் பிறந்தும், உயிர்ப்பின் வளர்ந்தும், வான்
காய்ப்பு உறும்தொறும் கண்ணிடைக் காந்தியும்,
போய்ப் பிறந்து, இவ் உலகைப் பொதியும் வெந்
தீப் பிறந்துளது, இன்று எனச் செய்ததால். 6
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து,
இடம் பிறங்கி, வலம்பெயர்ந்து ஈடு உற,
உடம்பு இறங்கிக் கிடந்து உழைத்து, ஓங்கு தீ
விடம் பிறந்த கடல் என வெம்பினான். 7
திருகு வெஞ் சினத் தீ நிகர் சீற்றமும்,
பெருகு காதலும், துன்பும், பிறழ்ந்திட,
இருபது என்னும் எரி புரை கண்களும்,
உருகு செம்பு என, ஓடியது ஊற்று நீர். 8
கடித்த பற்குலம், கற் குலம் கண் அற
இடித்த காலத்து உரும் என எங்கணும்,
அடித்த கைத்தலத்து அம் மலை, ஆழி நீர்,
வெடித்த வாய்தொறும் பொங்கின, மீச் செல. 9
இராவணனின் புலம்பல்
மைந்தவோ! எனும்; மா மகனே! எனும்;
எந்தையோ! எனும்; என் உயிரே! எனும்;
உந்தினேன் உனை; நான் உளெனே! எனும்;-
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான். 10
புரந்தரன் பகை போயிற்று அன்றோ! எனும்;
அரந்தை வானவர் ஆர்த்தனரோ! எனும்;
கரந்தை சூடியும், பாற்கடல் கள்வனும்,
நிரந்தரம் பகை நீங்கினரோ! எனும். 11
நீறு பூசியும் நேமியும் நீங்கினார்,
மாறு குன்றொடு வேலை மறைந்துளார்,
ஊறு நீங்கினராய், உவணத்தினோடு
ஏறும் ஏறி, உலாவுவர் என்னுமால். 12
வான மானமும், வானவர் ஈட்டமும்,
போன போன திசை இடம் புக்கன,
தானம் ஆனவை சார்கில; சார்குவது,
ஊன மானிடர் வென்றிகொண்டோ ? எனும். 13
கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு
கட்ட மானிடன் கொல்ல, என் காதலன்
பட்டு ஒழிந்தனனே! எனும்; பல் முறை
விட்டு அழைக்கும்; உழைக்கும்; வெதும்புமால். 14
எழும்; இருக்கும்; நடக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய்
விழும்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால்,
உழும் நிலத்தை; உருளும்; புரளுமால். 15
ஐயனே! எனும், ஓர் தலை; யான் இனம்
செய்வெனே அரசு! என்னும், அங்கு ஓர் தலை;
கையனேன், உனைக் காட்டிக் கொடுத்த நான்,
உய்வெனே! என்று உரைக்கும், அங்கு ஓர் தலை. 16
எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவிக் கொள்கலையோ! எனும், ஓர் தலை;
உழுவைப் போந்தை உழை உயிர் உண்பதே!
செழு வில் சேவகனே! எனும், ஓர் தலை. 17
நீலம் காட்டிய கண்டனும், நேமியும்,
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம்
தோலும் காட்டி, துரந்தனை; மீண்டும் நின்
ஓலம் காட்டிலையோ! எனும், ஓர் தலை. 18
துஞ்சும் போது துணை பிரிந்தேன் எனும்;
வஞ்சமோ! எனும்; வாரலையோ! எனும்;
நெஞ்சு நோவ, நெடுந் தனியே கிடந்து,
அஞ்சினேன்! என்று அரற்றும்;-அங்கு ஓர் தலை. 19
காகம் ஆடு களத்திடைக் காண்பெனோ,
பாகசாதனன் மௌலியொடும் பறித்து
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின்
வாகை நாள் மலர்? என்னும் - மற்று ஓர் தலை. 20
சேல் இயல் கண் இயக்கர் தம் தேவிமார்,
மேல் இனித் தவிர்கிற்பர்கொல், வீர! நின்
கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம்
தாலியைத் தொடல் என்னும் - மற்று ஓர் தலை. 21
கூற்றம் உன் எதிர் வந்து, உயிர் கொள்வது ஓர்
ஊற்றம் தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து
எற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய்! என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை. 22
இராவணன் தன் மகனது உடலைத் தேடி களம் புகுதல்
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து,
உன்னும் மாத்திரத்து ஓடினன், ஊழி நாள்
பொன்னின் வான் அன்ன போர்க் களம் புக்கனன்,
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான். 23
களத்தில் புக்க இராவணனைக் கண்ட தேவர் முதலியோர் செயல்
தேவரே முதலாகிய சேவகர்
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார்,
மூவகைப் பேர் உலகின் முறைமையும்
ஏவது ஆகும்? என்று எண்ணி இரங்குவார். 24
அழுதவால் சில; அன்பின போன்று, அடி
தொழுதவால் சில; தூங்கினவால் சில;
உழுத யானைப் பிணம் புக்கு ஒளித்தவால் -
கழுதும் புள்ளும், அரக்கனைக் காண்டலும். 25
ஒரு நாள் முழுவதும் தேடி, முதலில் இந்திரசித்தின்
சிலையோடு கிடந்த கையை இராவணன் காணுதல்
கோடி கோடிக் குதிரையின் கூட்டமும்,
ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும்,
ஓடை யானையும், தேரும், உருட்டினான்,
நாடினான், தன் மகன் உடல், நாள் எலாம். 26
மெய் கிடந்த விழி வழி நீர் உக,
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான்,
மொய் கிடந்த சிலையொடு மூரி மாக்
கை கிடந்தது கண்டனன், கண்களால். 27
இந்திரசித்தின் கையைத் தலைமேல் சேர்த்த இராவணனின் நிலை
பொங்கு தோள் வளையும் கணைப் புட்டிலோடு
அங்கதங்களும் அம்பும் இலங்கிட,
வெங் கண் நாகம் எனப் பொலி மெய்க் கையைச்
செங் கையால் எடுத்தான், சிரம் சேர்த்தினான். 28
கல் திண் மார்பில் தழுவும்; கழுத்தினில்
சுற்றும்; சென்னியில் சூட்டும்; சுழல் கணோடு
ஒற்றும்; மோந்து உள் உருகும்; உழைக்குமால்;
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான். 29
இந்திரசித்தின் உடலைக் கண்டு, அதன் மேல் விழுந்து,
இராவணன் புலம்பித் துயருறுதல்
கை கண்டான், பின் கருங் கடல் கண்டென,
மெய் கண்டான், அதன்மேல் விழுந்தான் அரோ-
பெய் கண் தாரை அருவிப் பெருந் திரை,
மொய் கண்டார் திரை வேலையை மூடவே. 30
அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன்
அப்பு மாரி அழுது இழி யாக்கையின்
அப்பும்; மார்பில் அணைக்கும்; அரற்றுமால்;
அப் புமான் உற்றது யாவர் உற்றார் அரோ! 31
பறிக்கும், மார்பின் பகழியை; பல் முறை
முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்குமால்;
எறிக்கும் வெங் கதிரோடு உலகு ஏழையும்
கறிக்கும், வாயில் இட்டு, இன்று எனக் காந்துமால். 32
இராவணனது சினம் கண்டு, தேவர் முதலியோர் அஞ்சுதல்
தேவரோடு முனிவரும், சீரியோர்
ஏவரோடும், இடம் இன்றி நின்றவன்-
மூவரோடும், உலகு ஒரு மூன்றொடும்
போவதேகொல், முனிவு எனும் மொம்மலான். 33
இந்திரசித்தின் தலையைக் காணாது இராவணன் அரற்றுதல்
கண்டிலன் தலை; காந்தி, அ(ம்) மானிடன்
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன்,
புண் திறத்தன நெஞ்சன், பொருமலன்,
விண் திறந்திட, விம்மி, அரற்றினான்: 34
நிலையின் மாதிரத்து நின்ற யானையும், நெற்றிக் கண்ணன்
மலையுமே, எளியவோ, நான் பறித்தற்கு? மறு இல் மைந்தன்,
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க,
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்! 35
எரி உண அளகை மூதூர், இந்திரன் இருக்கை எல்லாம்
பொரி உண, உலகம் மூன்றும் பொது அறப் புரந்தேன் போலாம்!
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை
நரி உணக் கண்டேன்; ஊணின், நாய் உணும் உணவு நன்றால்! 36
பூண்டு, ஒரு பகைமேல் புக்கு, என் புத்திரனோடும் போனார்
மீண்டிலர் விளித்து வீழ்ந்தார்; விரதியர் இருவரோடும்
ஆண்டு உள குரங்கும், ஒன்றும் அமர்க் களத்து, ஆரும் இன்னும்
மாண்டிலர்; இனி மற்று உண்டோ , இராவணன் வீர வாழ்க்கை? 37
கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் கன்னிமார்கள்,
சிந்து ஒக்கும் சொல்லினார், உன் தேவியர், திருவின் நல்லார்,
வந்து உற்று, எம் கணவன் தன்னைக் காட்டு என்று, மருங்கின் வீழ்ந்தால்,
அந்து ஒக்க அரற்றவோ, நான் கூற்றையும் ஆடல் கொண்டேன்! 38
சினத்தொடும் கொற்றம் முற்ற, இந்திரன் செல்வம் மேவ,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்? 39
இந்திரசித்தின் உடலோடு இராவணன் இலங்கை புக,
மகளிர் முதலிய பலரும் அழுது புலம்புதல்
என்பன பலவும் பன்னி, எடுத்து அழைத்து, இரங்கி ஏங்கி,
அன்பினால் மகனைத் தாங்கி, அரக்கியர் அரற்றி வீழ,
பொன் புனை நகரம் புக்கான்; கண்டவர் புலம்பும் பூசல்,
ஒன்பது திக்கும், மற்றை ஒரு திக்கும், உற்றது அன்றே. 40
கண்களைச் சூல்கின்றாரும், கழுத்தினைத் தடிகின்றாரும்,
புண் கொளத் திறந்து, மார்பின் ஈருளைப் போக்குவாரும்,
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும், -
எண்களில் பெரிய ஆற்றார் - இருந் துயர் பொறுக்கல் ஆற்றார். 41
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுடச் சென்னி
போதலைப் புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுதக் கண்டார்,
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ளக்
காதல் நீர் ஓடி, ஆடல் கருங் கடல் மடுத்தது அன்றே. 42
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய
தேவியர் குழாங்கள் சுற்றி, சிரத்தின் மேல் தளிர்க் கை சேர்த்தி,
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப, ஒல்லைக்
கோ இயல் கோயில் புக்கான், குருதி நீர்க் குமிழிக் கண்ணான். 43
மண்டோ தரி வந்து, மைந்தன்மேல் வீழ்ந்து, புலம்புதல்
கருங் குழல் கற்றைப் பாரம் கால் தொட, கமலப் பூவால்
குரும்பையைப் புடைக்கின்றாள்போல் கைகளால் முலைமேல் கொட்டி,
அருங் கலச் சும்மை தாங்க, அகல் அல்குல் அன்றி, சற்றே
மருங்குலும் உண்டு உண்டு என்ன, - மயன் மகள் - மறுகி வந்தாள். 44
தலையின்மேல் சுமந்த கையள், தழலின்மேல் மிதிக்கின்றாள்போல்
நிலையின்மேல் மிதிக்கும் தாளன், ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள்,
கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங் கணை உயிரைக் கொள்ள,
மலையின் மேல் மயில் வீழ்ந்தென்ன, மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள். 45
உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; உயிர் இலள்கொல்லோ! என்னப்
பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; அல்லது யாதும்
வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல மெல்ல,
அயர்த்தனள் அரிதின் தேறி, வாய் திறந்து, அரற்றலுற்றாள்; 46
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன்,
சிலையினால் அரியை வெல்லக் காண்பது ஓர் தவம் முன் செய்தேன்;
தலை இலா ஆக்கை காண எத் தவம் செய்தேன்! அந்தோ!
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ, நினைவு இலாதேன்? 47
ஐயனே! அழகனே! என் அரும் பெறல் அமிழ்தே! ஆழிக்
கையனே, மழுவனே, என்று இவர் வலி கடந்த கால
மொய்யனே!-முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன்,
உய்வெனோ?-உலகம் மூன்றுக்கு ஒருவனே! செரு வலோனே! 48
தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் தவழ்கின்ற பருவம் தன்னில்,
கோள் அரி இரண்டு பற்றிக் கொணர்ந்தனை; கொணர்ந்து, கோபம்
மூளுறப் பொருத்தி, மாட முன்றிலில் முறையினோடு
மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ, விதியிலாதேன்! 49
அம்புலி! அம்ம வா! என்று அழைத்தலும், அவிர் வெண் திங்கள்
நம்ப! உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண,
வம்புறும் மறுவைப் பற்றி, முயல் என வாங்கும் வண்ணம்,
எம் பெருங் களிறே! காண, ஏசற்றேன்; எழுந்திராயோ! 50
இயக்கியர், அரக்கிமார்கள், விஞ்சையர் ஏழைமாதர்,
முயல் கறை பயிலாத் திங்கள் முகத்தியர், முழுதும் நின்னை
மயக்கிய முயக்கம் தன்னால், மலர் அணை அமளிமீதே
அயர்த்தனை உறங்குவாயோ? அமர் பொருது அலசினாயோ? 51
முக்கணான் முதலினோரை, உலகு ஒரு மூன்றினோடும்,
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம்,
மக்களில் ஒருவன் கொல்ல, மாள்பவன்? வான மேரு
உக்கிட, அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா! 52
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ் சின மனிதர் கொல்ல, விளிந்ததே; மீண்டது இல்லை;
அஞ்சினேன் அஞ்சினேன்; அச் சீதை என்று அமுதால் செய்த
நஞ்சினால், இலங்கை வேந்தன் நாளை இத் தகையன் அன்றோ? 53
இராவணன் சீதையை வாளால் வெட்டச் செல்லுதல்
என்று அழைத்து இரங்கி ஏங்க, இத் துயர் நமர்கட்கு எல்லாம்
பொன் தழைத்தனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன,
வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால்
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன், அரக்கர் கோமான். 54
மகோதரன் இராவணனைத் தடுத்தல்
ஓடுகின்றானை நோக்கி, உயர் பெரும் பழியை உச்சிச்
சூடுகின்றான் என்று அஞ்சி, மகோதரன், துணிந்த நெஞ்சன்,
மாடு சென்று, அடியின் வீழ்ந்து, வணங்கி, நின் புகழ்க்கு மன்னா!
கேடு வந்து அடுத்தது என்னா, இனையன கிளத்தலுற்றான்: 55
நீர் உளதனையும், சூழ்ந்த நெருப்பு உளதனையும், நீண்ட
பார் உளதனையும், வானப் பரப்பு உளதனையும், காலின்
பேர் உளதனையும், பேராப் பெரும் பழி பிடித்தி போலாம் -
போர் உளதனையும் வென்று, புகழ் உளதனையும் உள்ளாய்! 56
தெள்ள அருங் காலகேயர் சிரத்தொடும், திசைக்கண் யானை
வெள்ளிய மருப்புச் சிந்த வீசிய விசயத்து ஒள் வாள்,
வள்ளி அம் மருங்குல், செவ் வாய், மாதர்மேல் வைத்த போது,
கொள்ளுமே ஆவி தானே, நாணத்தால் குறைவது அல்லால்? 57
மங்கையை, குலத்துளாளை, தவத்தியை, முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றால், குலத்துக்கே தக்கான் என்று,
கங்கை அம் சென்னியானும், கண்ணனும், கமலத்தோனும்,
செங் கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால், சிறியன் என்னா. 58
நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று; நீதி அன்று;
தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல், அதுவும் அன்று;
புலத்தியன் மரபின் வந்து, புண்ணிய மரபு பூண்டாய்!
வலத்து இயல்பு அன்று; மாயாப் பழி கொள மறுகுவாயோ? 59
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை, இராமன் தன்னை
வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ?
பொன்றினள் சீதை; இன்றே, புரவல! புதல்வன் தன்னைக்
கொன்றவர் தம்மைக் கொல்லக் கூசினை கொள்க! என்றான். 60
இராவணன் சீதையை வெட்டுதல் தவிர்ந்து, இந்திரசித்தின்
உடலைத் தைலத் தோணியில் இடுமாறு பணித்தல்
என்னலும், எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு, மீண்டு,
மன்னவன், மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட
சின்னமும், அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றிச் சேர்கேன்;
தொல் நெறித் தயிலத்தோணி வளர்த்துமின் என்னச் சொன்னான். 61
மிகைப் பாடல்கள்
தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போலத் தாமும்
பழங்கண் உற்று, உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி,
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர்; மைந்தன் ஆவி
இழந்தனன் என்னக் கேட்டு, ஆங்கு, இடி உறும் அரவை ஒத்தாள். 43-1
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய
ஐம்பது கோடி தெய்வத் தாதியர் அழுது சூழ்ந்தார்;
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் குருளை மாய,
கம்பம் உற்று, அரியின் பேடு கலங்கியது என்னச் சோர்ந்தாள். 43-2
பத்து எனும் திசையும் வென்று, கயிலையில் பரனை எய்தி,
அத் தலை அமர் செய்து, ஆற்றான்; அவன் இடத்து உமை அன்பால் தன்
கைத்தலக் கிளி நிற்கு ஈய, கவர்ந்து எனக்கு அளித்து நின்ற
வித்தகக் களிறே! இன்னும் வேண்டினேன்; எழுந்திராயே! 50-1
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள், மன்னர் தோள் சேர்
நஞ்சு அன விழியால் அன்றி, நகை மணிப் புதல்வர், நல்லோர்,
செஞ் சிலை மலரால் கோலித் திரிந்தவா என்னில், செல்லும்,
வெஞ் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன்! 52-1
யுத்த காண்டம்
30. படைக் காட்சிப் படலம்
பல இடங்களிலும் இருந்த அரக்கர் சேனை இலங்கை அடைதல்
அத் தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, அனைத்துத் திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்,
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை; பணி என்? என்றார். 1
ஏம்பலுற்று எழுந்த மன்னன், எவ் வழி எய்திற்று? என்றான்;
கூம்பலுற்று உயர்ந்த கையர், ஒரு வழி கூறலாமோ?
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னாத்
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார். 2
மண் உற நடந்த தானை வளர்ந்த மாத் தூளி மண்ட,
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக, மேல் மேல்,
கண்ணுற அருமை காணாக் கற்பத்தின் முடிவில் கார்போல்,
எண்ணுற அரிய சேனை எய்தியது, இலங்கை நோக்கி. 3
வாள்தனின் வயங்க மின்னா; மழை அதின் இருளமாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை, இடிப்பு எதிர் முழங்கமாட்டா;
மீட்டு இனி உவமை இல்லை, வேலை மீச் சென்ற என்னின் -
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல. 4
உலகினுக்கு உலகு போய்ப் போய், ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற,
தொலைவு அருந் தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற;
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின, நிமிர்ந்து; நின்றான்,
அலரியும், முந்து செல்லும் ஆறு நீத்து, அஞ்சி, அப்பால். 5
மேற்பட விசும்பை முட்டி, மேருவின் விளங்கி, விண்ட
நாற் பெரு வாயிலூடும், இலங்கை ஊர், நடக்கும் தானை, -
கார்க் கருங் கடலை, மற்றோர் இடத்திடை, காலந்தானே
சேர்ப்பது போன்றது, யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன. 6
நெருக்குடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம்
இருக்கும் அத்தனையே என்னா, மதிலினுக்கு உம்பர் எய்தி,
அரக்கனது இலங்கை உற்ற - அண்டங்கள் அனைத்தின் உள்ள
கருக் கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன. 7
இராவணன் கோபுரத்தை அடைந்து சேனைகளை நோக்குதல்
அதுபொழுது, அரக்கர்கோனும், அணிகொள் கோபுரத்தின் எய்தி,
பொதுவுற நோக்கலுற்றான், ஒரு நெறி போகப் போக,
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான், வேலை ஏழும்
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான். 8
மாதிரம் ஒன்றின் நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி,
ஓத நீர் செல்வது அன்ன தானையை, உணர்வு கூட்டி,
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்போல்,
தூதுவர் அணிகள்தோறும் வரன்முறை காட்டிச் சொல்வார்: 9
சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்த
யாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம்
மோகத்தின் பட முடித்தவர், மாயையின் முதல்வர்,
மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர் என விரித்தார். 10
குசையின் தீவினின் உறைபவர், கூற்றுக்கும் விதிக்கும்
வசையும் வன்மையும் வளர்ப்பவர், வான நாட்டு உறைவார்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது, இங்கு, இவரால்;
விசையம்தாம் என நிற்பவர், இவர் - நெடு விறலோய்! 11
இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப்
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் பொருதார்;
நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார்;
உலவைக் காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார். 12
அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேருக்
குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர்
சென்று, இத் தன்மையைத் தவிரும் என்று இரந்திடத் தீர்ந்தோர். 13
பவளக் குன்றினின் உறைபவர்; வெள்ளி பண்பு அழிந்து, ஓர்
குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக் கன்னியைக் கூட,
அவளின் தோன்றினர், ஐ-இரு கோடியர்; நொய்தின்
திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர், சில நாள். 14
கந்தமாதனம் என்பது, இக் கருங் கடற்கு அப் பால்
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி; அதில் வாழ்வோர்,
அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர்;
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் - இறைவ! 15
மலயம் என்பது பொதிய மாமலை; அதில் மறவோர்
நிலயம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும்;
குலையும் இவ் உலகு எனக் கொண்டு, நான்முகன் கூறி,
உலைவிலீர்! இதில் உறையும் என்று இரந்திட, உறைந்தார். 16
முக்கரக் கையர்; மூ இலை வேலினர்; முசுண்டி
சக்கரத்தினர்; சாபத்தர்; இந்திரன் தலைவர்;
நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்;
புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் - புகழோய்! 17
மறலியை, பண்டு, தம் பெருந் தாய் சொல, வலியால்,
புற நிலைப் பெருஞ் சக்கர மால் வரைப் பொருப்பின்,
விறல் கெடச் சிறையிட்டு, அயன் இரந்திட, விட்டோர்;
இறலி அப் பெருந் தீவிடை உறைபவர் - இவர்கள். 18
வேதாளக் கரத்து இவர், பண்டு புவியிடம் விரிவு
போதாது உம்தமக்கு; எழு வகையாய் நின்ற புவனம்,
பாதாளத்து உறைவீர் என, நான்முகன் பணிப்ப,
நாதா! புக்கு இருந்து, உனக்கு அன்பினால், இவண் நடந்தார். 19
நிருதி தன் குலப் புதல்வர்; நின் குலத்துக்கு நேர்வர்;
பருதி தேவர்கட்கு எனத் தக்க பண்பினர்; பானக்
குருதி பெற்றிலரேல், கடல் ஏழையும் குடிப்பார்;
இருள் நிறத்தவர்; ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார். 20
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தினின், ஆதியின் பயந்த பைங் கழலோர்;
பூரணத் தடந் திசைதொறும் இந்திரன் புலரா
வாரணத்தினை நிறுத்தியே, சூடினர் வாகை. 21
மறக் கண் வெஞ் சின மலை என இந் நின்ற வயவர்,
இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற இகலோர்;
அறக் கண் துஞ்சிலன், ஆயிரம் பணந் தலை அனந்தன்,
உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க. 22
காளியைப் பண்டு கண்ணுதல் காட்டியகாலை,
மூள முற்றிய சினக் கொடுந் தீயிடை முளைத்தோர்,
கூளிகட்கு நல் உடன்பிறந்தோர்; -பெருங் குழுவாய்
வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும் வருவார். 23
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்;
தீவம் தோன்றிய முழைத் துணை எனத் தெறு கண்ணர்;
கோவம் தோன்றிடின், தாயையும் உயிர் உணும் கொடியோர்;-
சாலம் தோன்றிட, வட திசைமேல் வந்து சார்வார். 24
சீற்றம் ஆகிய ஐம்முகன், உலகு எலாம் தீப்பான்,
ஏற்ற மா நுதல் விழியிடைத் தோன்றினர், இவரால்;
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை, கொடுமைக்கு
ஏற்றம் ஆக, பண்டு உதித்துளோர் என்பவர், இவரால். 25
காலன் மார்பிடைச் சிவன் கழல் பட, பண்டு கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர்,
சூலம் ஏந்தி முன் நின்றவர்; இந் நின்ற தொகையார்,
ஆலகாலத்தின், அமிழ்தின், முன் பிறந்த போர் அரக்கர். 26
வடவைத் தீயினில், வாசுகி கான்ற மாக் கடுவை
இட, அத் தீயிடை எழுந்தவர், இவர்; கண மழையைத்
தடவ, தீ என நிமிர்ந்த குஞ்சியர், உவர், தனித் தேர்
கடவ, தீந்த வெம் புரத்திடைத் தோன்றிய கழலோர். 27
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் - ஐய! -
நினையவும், குறித்து உரைக்கவும், அரிது; இவர் நிறைந்த
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின்,
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா. 28
ஒருவரே சென்று, அவ் உறு திறல் குரங்கையும், உரவோர்
இருவர் என்றவர் தம்மையும், ஒரு கையோடு எற்றி,
வருவர்; மற்று இனிப் பகர்வது என்? - வானவர்க்கு அரிய
நிருப! என்றனர், தூதுவர், இராவணன் நிகழ்த்தும்: 29
சேனையின் அளவை இராவணன் வினாவ, தூதுவர் விடை பகர்ந்து, அகல்தல்
எத் திறத்து இதற்கு எண் எனத் தொகை வகுத்து, இயன்ற
அத் திறத்தினை அறைதிர் என்று உரைசெய, அவர்கள்,
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார்,
பித்தர்; இப் படைக்கு எண் சிறிது என்றனர், பெயர்ந்தார். 30
படைத்தலைவரை அழைத்து வருமாறு இராவணன் பணித்தல்
படைப் பெருங் குலத் தலைவரைக் கொணருதிர், என்பால் -
கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி,
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய், அமைவுற்று,
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான். 31
தூதர் கூறிட, திசைதொறும் திசைதொறும் தொடர்ந்தார்,
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்;
போது தூவினர், வணங்கினர், இராவணன் பொலன் தாள்
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட. 32
வணங்கிய வீரரின் நலனை இராவணன் உசாவுதல்
அனையர் யாவரும் அருகு சென்று, அடி முறை வணங்கி,
வினையம் மேவினர், இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை;
நினையும் நல் வரவு ஆக, நும் வரவு! என நிரம்பி,
மனையும் மக்களும் வலியரே? என்றனன், மறவோன். 33
பெரிய திண் புயன் நீ உளை; தவ வரம் பெரிதால்;
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ?
இரியல் தேவரைக் கண்டனம்; பகை பிறிது இல்லை;
அரியது என் எமக்கு? என்றனர், அவன் கருத்து அறிவார். 34
சேனைத் தலைவரின் வினாவும், இராவணன் தன் நிலைமையை விளக்குதலும்
மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்;
யாது காரணம்? அருள் என, அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான். 35
சேனைத் தலைவர்கள் பகையை எள்ளி நகையாடுதல்
கும்பகன்னனோடு இந்திரசித்தையும், குலத்தின்
வெம்பு வெஞ் சினத்து அரக்கர்தம் குழுவையும், வென்றார்
அம்பினால், சிறு மனிதரே! நன்று, நம் ஆற்றல்!
நம்ப! சேனையும் வானரமே! என நக்கார். 36
உலகைச் சேடன் தன் உச்சி நின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரொடும் வாங்க அன்று, அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக் குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை? 37
என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு,
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி,
வன்னி என்பவன், புட்கரத் தீவுக்கு மன்னன்,
அன்ன மானுடர் ஆர்? வலி யாவது? என்று அறைந்தான். 38
மாலியவான் பகைவரின் வலிமையை எடுத்து உரைத்தல்
மற்று அ(வ்)வாசகம் கேட்டலும், மாலியவான் வந்து,
உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும், உடன் ஆம்
கொற்ற வானரத் தலைவர்தம் தகைமையும், கூறக்
கிற்றும், கேட்டிரால் என்றனன், கிளத்துவான் துணிந்தான்: 39
பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்;
கரிய மால் வரை நிகர் கர தூடணர், கதிர் வேல்
திரிசிரா, அவர் திரைக் கடல் அன பெருஞ் சேனை,
ஒரு விலால், ஒரு நாழிகைப் பொழுதினின், உலந்தார். 40
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே, கடல் அனைத்தும்
ஊழிக் கால் எனக் கடப்பவன் வாலி என்போனை?
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை, இந் நாள்,
பாழி மார்பு அகம் பிய்த்து, உயிர் குடித்தது, ஓர் பகழி. 41
இங்கு வந்து நீர் வினாயது என்? எறி திரைப் பரவை
அங்கு வெந்திலதோ? சிறிது அறிந்ததும் இலிரோ?
கங்கைசூடிதன் கடுஞ் சிலை ஒடித்த அக் காலம்,
உங்கள் வான் செவி புகுந்திலதோ, முழங்கு ஓதை? 42
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு, இலங்கையின் அளவில்,
தீயின் வெய்ய போர் அரக்கர் தம் சேனை; அச் சேனை
போயது, அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம்,
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால். 43
கொற்ற வெஞ் சிலைக் கும்பகன்னனும், நுங்கள் கோமான்
பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும்,
மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்;
இற்றை நாள் வரை, யானும் மற்று இவனுமே இருந்தோம். 44
மூலத் தானை என்று உண்டு; அது மும்மை நூறு அமைந்த
கூலச் சேனையின் வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த
காலச் செய்கை நீர் வந்துளீர்; இனி, தக்க கழலோர்
சீலச் செய்கையும், கவிப் பெருஞ் சேனையும், தெரிக்கில், 45
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி,
திருகு வெஞ் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது உரைத்து, ஏகியது, - அரக்கியர் புலம்ப,
கருது சேனையும் கொன்று, மாக் கடலையும் கடந்து. 46
கண்டிலீர்கொலாம், கடலினை மலை கொண்டு கட்டி,
மண்டு போர் செய, வானரர் இயற்றிய மார்க்கம்?
உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது, மேருவுக்கு அப்புறம் குதித்து. 47
இது இயற்கை; ஓர் சீதை என்று இருந் தவத்து இயைந்தாள்,
பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால்,
விதி விளைத்தது; அவ் வில்லியர் வெல்க! நீர் வெல்க!
முதுமொழிப் பதம் சொல்லினென் என்று, உரை முடித்தான். 48
இத்தனை நாள் போர் செய்யாத காரணத்தை வன்னி வினாவ,
இராவணன் இழிவு நோக்கிக் குரங்குடன் பொருதிலேன் எனல்
வன்னி, மன்னனை நோக்கி, நீ இவர் எலாம் மடிய,
என்ன காரணம், இகல் செயாதிருந்தது? என்று, இசைத்தான்;
புன்மை நோக்கினென்; நாணினால் பொருதிலேன் என்றான்;
அன்னதேல், இனி அமையும் எம் கடமை அஃது என்றான். 49
பொருதலே தக்கது என வன்னி மொழிதல்
மூது உணர்ந்த இம் முது மகன் கூறிய முயற்சி
சீதை என்பவள் தனை விட்டு, அம் மனிதரைச் சேர்தல்;
ஆதியின் தலை செயத்தக்கது; இனிச் செயல் அழிவால்,
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும்? 50
விட்டம் ஆயினும் மாதினை, வெஞ் சமம் விரும்பிப்
பட்ட வீரரைப் பெறுகிலெம்; பெறுவது பழியால்;
முட்டி, மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்,
கட்டம், அத் தொழில்; செருத் தொழில் இனிச் செயும் கடமை 51
பகைவரை வெல்ல, அரக்கர் விடை பெற்று எழுதல்
என்று, எழுந்தனர் இராக்கதர், இருக்க நீ; யாமே
சென்று, மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி,
வென்று மீளுதும்; வெள்குதுமேல், மிடல் இல்லாப்
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர், போனார். 52
மிகைப் பாடல்கள்
தொல்லை சேர் அண்ட கோடித் தொகையில் மற்று அரக்கர் சேனை
இல்லையால் எவரும்; இன்னே எய்திய இலங்கை என்னும்
மல்லல் மா நகரும் போதா; வான் முதல் திசைகள் பத்தின்
எல்லை உற்றளவும் நின்று, அங்கு எழுந்தது, சேனை வெள்ளம். 2-1
மேய சக்கரப் பொருப்பிடை மேவிய திறலோர்,
ஆயிரத் தொகை பெருந் தலை உடையவர், அடங்கா
மாயை கற்றவர், வரத்தினர், வலியினர், மறப் போர்த்
தீயர், இத் திசை வரும் படை அரக்கர் - திண் திறலோய்! 22-1
சீறு கோள் அரி முகத்தினர்; திறற் புலி முகத்து ஐஞ்-
ஞூறு வான் தலை உடையவர்; நூற்றிதழ்க் கமலத்து
ஏறுவான் தரும் வரத்தினர்; ஏழ் பிலத்து உறைவோர்;
ஈறு இலாத பல் அரக்கர்; மற்று எவரினும் வலியோர். 25-1
சாலும் மா பெருந் தலைவர்கள் தயங்கு எரி நுதற் கண்
சூல பாணிதன் வரத்தினர், தொகுத்த பல் கோடி
மேலையாம் அண்டத்து உறைபவர், இவர் பண்டு விறலால்
கோல வேலுடைக் குமரனைக் கொடுஞ் சமர் துரந்தோர். 27-1
ஆதி அம் படைத் தலைவர்கள், வெள்ளம் நூறு; அடு போர்
மோது வீரர், மற்று ஆயிர வெள்ளம்; மொய் மனத்தோர்,
காது வெங் கொலைக் கரி, பரி, கடுந் திறல் காலாள்,
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி என்று உரைப்பார். 30-1
அன்னது அன்றியும், ஆழி நீர்க்கு அப் புறத்து உலகில்,
துன்னுறும் சத கோடி வெள்ளத் தொகை அரக்கர் -
தன்னை ஓர் கணத்து எரித்தது, சலபதி வேண்ட,
மன் இராகவன் வாளி ஒன்று; அவை அறிந்திலிரோ? 43-1
யுத்த காண்டம்
31. மூலபல வதைப் படலம்
சேனைத் தலைவர்களுக்கு இராவணன் இட்ட கட்டளை
வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு வழி சென்று,
ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; நீயிர் போய், ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக் கோறீர் என்று அறைந்தான் -
தானவப் பெருங் கரிகளை வாள் கொண்டு தடிந்தான். 1
என உரைத்தலும், எழுந்து, தம் இரத மேல் ஏறி,
கனை திரைக் கடல் சேனையைக் கலந்தது காணா,
வினையம் மற்று இலை; மூல மாத் தானையை விரைவோடு
இனையர் முன் செல, ஏவுக! என்று இராவணன் இசைத்தான். 2
இராவணனும் தேர்மீது ஏறி, இராமன் சேனையைத் தாக்குதல்
ஏவி அப் பெருந் தானையை, தானும் வேட்டு எழுந்தான்,
தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லிஅம் தேர் மேல்,
காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க,
பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒரு புறம் போனான். 3
மூலபலச் சேனையின் இயல்பு
எழுக, சேனை! என்று, யானை மேல் மணி முரசு எற்றி,
வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், வல்லைக்
குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும்
தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் அத் தானை. 4
அடங்கும் வேலைகள், அண்டத்தின் அகத்து; அகல் மலையும்
அடங்கும், மன் உயிர் அனைத்தும்; அவ் வரைப்பிடை அவைபோல்,
அடங்குமே, மற்று அப் பெரும் படை அரக்கர்தம் யாக்கை,
அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால்? 5
மூலபலப் படை வீரரின் தன்மை
அறத்தைத் தின்று, அருங் கருணையைப் பருகி, வேறு அமைந்த
மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை மணம் புணர் மணாளர்,
நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர், நெருப்புக்கு நெருப்பாய்,
புறத்தும் பொங்கிய பங்கியர், காலனும் புகழ்வார்; 6
நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி,
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி,
தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி,
மூண்ட வான் மழை உரித்து உடுத்து, உலாவரும் மூர்க்கர்; 7
மால் வரைக் குலம் பரல் என, மழைக் குலம் சிலம்பா,
கால் வரைப் பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைங் கழலார்;
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர்;
நால் வரைக் கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார்; 8
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின், உடனே
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்;
தண்ணின் நீர் முறை தப்பிடின், தடக் கையால் தடவி,
விண்ணின் மேகத்தை வாரி, வாய்ப் பிழிந்திடும் விடாயர்; 9
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ
எறிந்து, வேல் நிலை காண்பவர்; இந்துவால் யாக்கை
சொறிந்து, தீர்வு உறு தினவினர்; மலைகளைச் சுற்றி
அறைந்து, கற்ற மாத் தண்டினர்; அசனியின் ஆர்ப்பர்; 10
சூலம் வாங்கிடின், சுடர் மழு எறிந்திடின், சுடர் வாள்
கோல வெஞ் சிலை பிடித்திடின், கொற்ற வேல் கொள்ளின்,
சால வான் தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின்,
காலன், மால், சிவன், குமரன், என்று, இவரையும் கடப்பார்; 11
ஒருவரே வல்லர், ஓர் உலகத்தினை வெல்ல;
இருவர் வேண்டுவர், ஏழ் உலகத்தையும் இறுக்க;
திரிவரேல், உடன் திரிதரும், நெடு நிலம்; செவ்வே
வருவரேல், உடன், கடல்களும் தொடர்ந்து, பின் வருமால். 12
நால் வகைச் சேனைகளின் அளவும் அணியும்
மேகம் எத்தனை, அத்தனை மால் கரி; விரிந்த
நாகம் எத்தனை, அத்தனை நளிர் மணித் தேர்கள்;
போகம் எத்தனை, அத்தனை புரவியின் ஈட்டம்;
ஆகம் எத்தனை, அத்தனை அவன் படை அவதி. 13
இன்ன தன்மைய யானை, தேர், இவுளி, என்று இவற்றின்
பன்னு பல்லணம், பருமம், மற்று உறுப்பொடு பலவும்,
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த
சின்னம் உள்ளன இல்லன, மெய்ம் முற்றும் தெரிந்தால். 14
இப் பெரும் படை எழுந்து இரைந்து ஏக, மேல் எழுந்த
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீத் தூர்ப்ப,
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது; கரி மதம் தழுவ,
உப்பு நீங்கியது, ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி. 15
மலையும், வேலையும், மற்று உள பொருள்களும், வானோர்
நிலையும், அப் புறத்து உலகங்கள் யாவையும், நிரம்ப
உலைவுறாவகை உண்டு, பண்டு உமிழ்ந்த பேர் ஒருமைத்
தலைவன் வாய் ஒத்த - இலங்கையின் வாயில்கள் தருவ. 16
கடம் பொறா மதக் களிறு, தேர், பரி, இடை கடவ,
படம் பொறாமையின் நனந் தலை அனந்தனும் பதைத்தான்;
விடம் பொறாது இரி அமரர்போல குரங்குஇனம் மிதிக்கும்
இடம் பொறாமை உற்று, இரிந்து போய், வட வரை இறுத்த. 17
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த
எழு வேலையும், இடு வலை; அரக்கரே இன மா;
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே, மள்ளர்;
தோழம் மா மதில் இலங்கை; மால் வேட்டம் மேல் தொடர்ந்தார். 18
ஆர்த்த ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ?
கார்த் திண் மால் கரி முழக்கமோ? வாசியின் கலிப்போ?
போர்த்த பல் இயத்து அரவமோ? - நெருக்கினால் புழுங்கி
வேர்த்த அண்டத்தை வெடித்திடப் பொலிந்தது, மேன்மேல். 19
வழங்கு பல் படை மீனது; மத கரி மகரம் முழங்குகின்றது;
முரி திரைப் பரியது; முரசம்
தழங்கு பேர் ஒலி கலிப்பது; தறுகண் மா நிருதப்
புழுங்கு வெஞ் சினச் சுறவது - நிறைபடைப் புணரி. 20
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்தம் தானை
பசும் புல் தண் தலம் மிதித்தலின், கரி படு மதத்தின்
அசும்பின் சேறு பட்டு, அளறு பட்டு, அமிழுமால், அடங்க;
விசும்பின் சேறலின் கிடந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 21
தேவர்கள் சிவபெருமானிடத்து முறையிடுதல்
படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர் வான்
முடியைப் பார்த்தனர்; பார்த்தனர், நெடுந் திசை முழுதும்;
வெடியைப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்; மிடைந்த
கொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் குலைந்தார். 22
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா,
அலகு இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? அன்றேல்,
விலகு நீர்த் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால்
அலகு இல் பல் உருப் படைத்தனவோ? என அயிர்த்தார். 23
நடுங்கி, நஞ்சு அடை கண்டனை, வானவர், நம்ப!
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம்; உயிரைப்
பிடுங்கி உண்குவர்; யார், இவர் பெருமை பண்டு அறிந்தார்?
முடிந்தது, எம் வலி என்றனர், ஓடுவான் முயல்வார். 24
ஒருவரைக் கொல்ல, ஆயிரம் இராமர் வந்து, ஒருங்கே
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால், என் ஆம்?
நிருதரைக் கொல்வது, இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ?
பொருவது, இப் படை கண்டு, தம் உயிர் பொறுத்து அன்றோ? 25
தேவர்களின் அச்சத்தை சிவபெருமான் போக்குதல்
என்று இறைஞ்சலும், மணி மிடற்று இறைவனும், இனி, நீர்
ஒன்றும் அஞ்சலிர்; வஞ்சனை அரக்கரை ஒருங்கே
கொன்று நீக்கும், அக் கொற்றவன்; இக் குலம் எல்லாம்
பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம் எனப் புகன்றான். 26
மூலபலப் படையைக் கண்டு, வானரங்கள் அஞ்சி ஓடுதல்
புற்றின் நின்று வல் அரவு இனம் புறப்பட, பொருமி,
இற்றது, எம் வலி என விரைந்து இரிதரும் எலிபோல்,
மற்றை வானரப் பெருங் கடல் பயம் கொண்டு மறுகி,
கொற்ற வீரரைப் பார்த்திலது; இரிந்தது, குலைவால். 27
அணையின்மேல் சென்ற, சில சில; ஆழியை நீந்தப்
புணைகள் தேடின, சில; சில நீந்தின போன;
துணைகளோடு புக்கு, அழுந்தின சில; சில தோன்றாப்
பணைகள் ஏறின; மலை முழைப் புக்கன, பலவால். 28
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர்; அடைய
உடைத்துப் போதுமால், அவர் தொடராமல் என்று, உரைத்த;
புடைத்துச் செல்குவர், விசும்பினும் என்றன; போதோன்
படைத்த திக்கு எலாம் பரந்தனர் என்றன, பயத்தால். 29
அரியின் வேந்தனும், அனுமனும், அங்கதன் அவனும்,
பிரியகிற்றிலர் இறைவனை, நின்றனர் பின்றார்;
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும்; எறி நீர்
விரியும் வேலையும் கடந்தனர்; நோக்கினன், வீரன். 30
மூலபலச் சேனைப் பற்றி வீடணன் இராமனுக்கு எடுத்துரைத்தல்
இக் கொடும் படை எங்கு உளது? இயம்புதி என்றான்;
மெய்க் கொடுந் திறல் வீடணன் விளம்புவான்: வீர!
திக்கு அனைத்தினும், ஏழு மாத் தீவினும், தீயோர்
புக்கு அழைத்திடப் புகுந்துளது, இராக்கதப் புணரி. 31
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்நின்று ஏறி,
ஊழி முற்றிய கடல் எனப் புகுந்ததும் உளதால்;
வாழி மற்று அவன் மூல மாத் தானை முன் வருவ;
ஆழி வேறு இனி அப் புறத்து இல்லை, வாள் அரக்கர். 32
ஈண்டு, இவ் அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க;
மாண்டு வீழும் இன்று, என்கின்றது என் மதி; வலி ஊழ்
தூண்டுகின்றது என்று, அடி மலர் தொழுது, அவன் சொன்னான். 33
வானர வீரரை அழைத்து வருமாறு அங்கதனை இராமன் ஏவுதல்
கேட்ட அண்ணலும், முறுவலும் சீற்றமும் கிளர,
காட்டுகின்றனென்; காணுதி ஒரு கணத்து என்னா,
ஓட்டின் மேற்கொண்ட தானையைப் பயம் துடைத்து, உரவோய்!
மீட்டிகொல்? என, அங்கதன் ஓடினன் விரைந்தான். 34
அங்கதனுக்கு படைத்தலைவர்கள் தாம் ஓடியதற்கு உற்ற காரணத்தை உரைத்தல்
சென்று சேனையை உற்றனன், சிறை சிறை கெடுவீர்!
நின்று கேட்டபின், நீங்குமின் எனச் சொல்லி நேர்வான்;
ஒன்றும் கேட்கிலம் என்றது அக் குரக்கு இனம்; உரையால்
வென்றி வெந் திறல் படைப் பெருந் தலைவர்கள் மீண்டார். 35
மீண்டு, வேலையின் வட கரை, ஆண்டு ஒரு வெற்பின்
ஈண்டினார்களை, என் குறித்து இரிவுற்றது? என்றான்;
ஆண்ட நாயக! கண்டிலை போலும், நீ அவரை?
மாண்டு செய்வது என்? என்று உரை கூறினர், மறுப்பார். 36
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள்,
செருவின் உற்றவை, கொற்றவ! மறத்தியோ? தெரியின்,
பொரு இல் மற்றவர் இற்றிலர், யாரொடும் பொருவார்;
இருவர் வில் பிடித்து, யாவரைத் தடுத்து நின்று எய்வார்? 37
புரம் கடந்த அப் புனிதனே முதலிய புலவோர்
வரங்கள் தந்து, உலகு அளிப்பவர் யாவரும், மாட்டார்,
கரந்து அடங்கினர்; இனி, மற்று அவ் அரக்கரைக் கடப்பார்
குரங்கு கொண்டு வந்து, அமர் செயும் மானுடர் கொல்லாம்? 38
ஊழி ஆயிர கோடி நின்று, உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன் அவனும்,
சூழ ஓடினார்; ஒருவனைக் கொன்று, தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல், வென்றியின் நன்றே! 39
என் அப்பா! மற்று, இவ் எழுபது வெள்ளமும், ஒருவன்
தின்னப் போதுமோ? தேவரின் வலியமோ, சிறியேம்?
முன் இப் பார் எலாம் படைத்தவன், நாள் எலாம் முறை நின்று,
உன்னிப் பார்த்து நின்று, உறையிடப் போதுமோ, யூகம்? 40
நாயகன் தலை பத்து உள; கையும் நால்-ஐந்து என்று
ஓயும் உள்ளத்தேம்; ஒருவன் மற்று இவண் வந்து, இங்கு உற்றார்
ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக் கையர்; ஐயா!
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால்! 41
கும்பகன்னன் என்று உளன், மற்று இங்கு ஒருவன், கைக் கொண்ட
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி;
உம்பர் அன்றியே, உணர்வு உடையார் பிறர் உளரோ?
நம்பி! நீயும் உன் தனிமையை அறிந்திலை; நடந்தாய். 42
அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தம் உயிர் தாங்கவும் சாலா;
கனியும் காய்களும் உணவு உள; முழை உள, கரக்க;
மனிதர் ஆளின் என், இராக்கதன் ஆளின் என், வையம்? 43
தாம் உளார் அலரே, புகழ் திருவொடும் தரிப்பார்?
யாம் உளோம் எனின், எம் கிளை உள்ளது; எம் பெரும!
போமின் நீர் என்று விடை தரத் தக்கனை, புரப்போய்!
சாமின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர், தளர்ந்தார். 44
அங்கதன் சாம்பனை நோக்கி, ஓடுவது தகாது என உரைத்தல்
சாம்பனை வதனம் நோக்கி, வாலிசேய், அறிவு சான்றோய்!
பாம்புஅணை அமலனே மற்று இராமன் என்று, எமக்குப் பண்டே
ஏம்பல் வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ, நீ?
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய்! 45
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி, இத் தெருள் இலோரை
ஆற்றுவாய் அல்லை; நீயும் அஞ்சினை போலும்! ஆவி
போற்றுவாய் என்ற போது, புகழ் என் ஆம்? புலமை என் ஆம்?
கூற்றின்வாய் உற்றால், வீரம் குறைவரே இறைமை கொண்டார்? 46
அஞ்சினாம்; பழியும் பூண்டாம்; அம் புவி யாண்டும், ஆவி
துஞ்சுமாறு அன்றி, வாழ ஒண்ணுமோ, நாள்மேல் தோன்றின்?
நஞ்சு வாய் இட்டாலன்ன அமுது அன்றோ? நம்மை, அம்மா,
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே! 47
தானவரோடும், மற்றைச் சக்கரத் தலைவனோடும்,
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி -
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ?
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும்? - மேலோய்! 48
எத்தனை அரக்கரேனும், தருமம் ஆண்டு இல்லை அன்றே;
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ?
பித்தரைப் போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை
ஒத்திலது என்னச் சொன்னான், அவன் இவை உரைப்பதானான்: 49
சாம்பவான் மறுமொழி
நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து, பின்னர்,
தூண் ஒத்த திரள் தோள் வீர! தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான், நிற்கத்தான், அக் கறை மிடற்றவற்கும் ஆமே?
கோணற் பூ உண்ணும் வாழ்க்கைக் குரங்கின்மேல் குற்றம் உண்டோ? 50
தேவரும் அவுணர்தாமும் செருப் பண்டு செய்த காலம்,
ஏவரே என்னால் காணப்பட்டிலர்? இருக்கை ஆன்ற
மூவகை உலகின் உள்ளார்; இவர் துணை ஆற்றல் முற்றும்
பாவகர் உளரோ? கூற்றை அஞ்சினால், பழியும் உண்டோ? 51
மாலியைக் கண்டேன்; பின்னை, மாலியவானைக் கண்டேன்;
கால நேமியையும் கண்டேன்; இரணியன் தனையும் கண்டேன்;
ஆல மா விடமும் கண்டேன்; மதுவினை அனுசனோடும்
வேலையைக் கலக்கக் கண்டேன்; இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ ? 52
வலி இதன் மேலே, பெற்ற வரத்தினர்; மாயம் வல்லோர்;
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர்; உள்ளம் நோக்கின்,
கலியினும் கொடியர்; கற்ற படைக்கலக் கரத்தர்; என்றால்,
மெலிகுவது அன்றி உண்டோ , விண்ணவர் வெருவல் கண்டால்? 53
ஆகினும், ஐயம் வேண்டா; அழகிது அன்று; அமரின் அஞ்சிச்
சாகினும், பெயர்ந்த தன்மை பழி தரும்; நரகில் தள்ளும்;
ஏகுதும், மீள; இன்னும் இயம்புவது உளதால்; ஐய!
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும்? 54
சாம்பனுக்கு அங்கதன் தேறுதல் மொழிகள் உரைத்தல்
எடுத்தலும், சாய்தல்தானும், எதிர்த்தலும், எதிர்ந்தோர் தம்மைப்
படுத்தலும், வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற, மேல் நாள்;
அடுத்ததே அஃது; நிற்க; அன்றியும் ஒன்று கூறக்
கடுத்தது; கேட்டும் ஈண்டு, இங்கு இருந்துவீர், ஏது நோக்கின். 55
ஒன்றும் நீர் அஞ்சல், ஐய! யாம் எலாம் ஒருங்கே சென்று,
நின்றும், ஒன்று இயற்றல் ஆற்றேம்; நேமியான் தானே நேர்ந்து,
கொன்று போர் கடக்கும் ஆயின்; கொள்ளுதும் வென்றி; அன்றேல்,
பொன்றுதும், அவனோடு என்றான்; போதலே அழகிற்று என்றான். 56
சேனைத் தலைவர் மீண்டு வருதல்
ஈண்டிய தானை நீங்க, நிற்பது என்? யாமே சென்று,
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம்; போதும் என்னா,
மீண்டனர் தலைவர் எல்லாம், அங்கதனோடும்; வீரன்
மூண்ட வெம் படையை நோக்கி, தம்பிக்கு மொழிவதானான்: 57
அத்த! நீ உணர்தி அன்றே, அரக்கர்தான், அவுணரேதான்,
எத்தனை உளர் என்றாலும், யான் சிலை எடுத்தபோது,
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு எனத் தொலையும் தன்மை?
ஒத்தது; ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால். 58
மாருதியுடனும் சுக்கிரீவனுடன் சென்று, வானரத்
தானையைக் காக்குமாறு இலக்குவனுக்கு இராமன் உரைத்தல்
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால், கவியின் சேனை
போக்கு அறப் போகித் தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்;
தாக்கி, இப் படையை முற்றும் தலை துமிப்பளவும், தாங்கி,
நீக்குதி, நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம். 59
இப் புறத்து இனைய சேனை ஏவி, ஆண்டு இருந்த தீயோன்,
அப் புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன், அயலே வந்து,
தப்பு அறக் கொன்று நீக்கில், அவனை யார் தடுக்க வல்லார், -
வெப்புறுகின்றது உள்ளம், - வீர! நீ அன்றி, வில்லோர்? 60
மாருதியோடு நீயும், வானரக் கோனும், வல்லே,
பேருதிர் சேனை காக்க; என்னுடைத் தனிமை பேணிச்
சோருதிர் என்னின், வெம் போர் தோற்றும், நாம் என்னச் சொன்னான்,
வீரன்; மற்று அதனைக் கேட்ட இளையவன் விளம்பலுற்றான்: 61
இலக்குவன் இசைந்து செல்ல, அனுமன் இராமனுக்கு
அடிமை செய்ய விரும்பி வேண்டுதல்
அன்னதே கருமம்; ஐய! அன்றியும், அருகே நின்றால்,
என் உனக்கு உதவி செய்வது - இது படை என்ற போது,
சென்னியில் சுமந்த கையர், தேவரே போல, யாமும்
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி? 62
என்று அவன் ஏகலுற்ற காலையின், அனுமன், எந்தாய்!
புன் தொழில் குரங்கு எனாது, என் தோளின்மேல் ஏறிப் புக்கால்,
நன்று எனக் கருதாநின்றேன்; அல்லது, நாயினேன் உன்
பின் தனி நின்றபோதும், அடிமையில் பிழைப்பு இல் என்றான். 63
இலக்குவனுக்கு ஏற்ற துணை நீயே என இராமன் உரைக்க
அனுமன் இசைந்து இலக்குவனை தொடர்தல்
ஐய! நிற்கு இயலாது உண்டோ ? இராவணன் அயலே வந்துற்று,
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால்,
மொய் அமர்க் களத்தின் உன்னைத் துணை பெறான் என்னின், முன்ப!
செய்யும் மா வெற்றி உண்டோ ? சேனையும் சிதையும் அன்றே? 64
ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான் தன்
போரைக் கொண்டு இருந்த முன் நாள், இளையவன் தன்னைப் போக்கிற்று
ஆரைக் கொண்டு? உன்னால் அன்றே, வென்றது அங்கு அவனை? இன்னம்
வீரர்க்கும் வீர! நின்னைப் பிரிகலன், வெல்லும் என்பேன். 65
சேனையைக் காத்து, என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த
யானையைக் காத்து, மற்றை இறைவனைக் காத்து, எண் தீர்ந்த
வானை இத் தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான்;
ஏனை மற்று உரைக்கிலாதான், இளவல்பின் எழுந்து சென்றான். 66
இலக்குவனுக்குத் துணையாக வீடணனையும் இராமன் அனுப்புதல்
வீடண! நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி, வெம்மை
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி, கொற்றம்
நீடுறு தானைதன்னைத் தாங்கினை, நில்லாய் என்னின்,
கேடு உளது ஆகும் என்றான்; அவன் அது கேட்பதானான். 67
சுக்கிரீவன் முதலியோரும் இலக்குவனுடன் சென்று, வானரத் தானையைக் காத்தல்
சூரியன் சேயும், செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன்,
ஆரியன் பின்பு போனான்; அனைவரும், அதுவே நல்ல
காரியம் என்னக் கொண்டார்; கடற்படை காத்து நின்றார்;
வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம்; 68
இராமன் வில் ஏந்தி, முன்னணியில் வந்து பொருதல்
வில்லினைத் தொழுது, வாங்கி, ஏற்றினான்; வில் நாண் மேருக்
கல் எனச் சிறந்ததேயும், கருணை அம் கடலே அன்ன
எல் ஒளி மார்பில் வீரக் கவசம் இட்டு, இழையா வேதச்
சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி, 69
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனைத்
தூசி வந்து அண்ணல்தன்னைப் போக்கு அறவளைந்து சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலும், விண்ணோர் ஆக்கை
கூசின, பொடியால்; எங்கும் குமிழ்த்தன, வியோம கூடம். 70
தேவர், முனிவர், முதலாயினார் இராமனை ஏத்தி, ஆசி மொழிதல்
கண்ணனே! எளியேம் இட்ட கவசமே! கடலே அன்ன
வண்ணனே! அறத்தின் வாழ்வே! மறையவர் வலியே! மாறாது
ஒண்ணுமே, நீ அலாது, ஓர் ஒருவர்க்கு இப் படைமேல் ஊன்ற?
எண்ணமே முடித்தி! என்னா, ஏத்தினர், இமையோர் எல்லாம். 71
முனிவரே முதல்வர் ஆய அறத் துறை முற்றினோர்கள்,
தனிமையும், அரக்கர் தானைப் பெருமையும், தரிக்கலாதார்,
பனி வரு கண்ணர், விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர், பாவத்து,
அனைவரும் தோற்க! அண்ணல் வெல்க! என்று ஆசி சொன்னார். 72
இராமன் தனியே நின்று பொரும் ஆற்றல் கண்டு, அரக்கர் வியத்தல்
இரிந்து சேனை சிந்தி, யாரும் இன்றி ஏக, நின்று, நம்
விரிந்த சேனை கண்டு, யாதும் அஞ்சல் இன்றி, வெஞ் சரம்
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையான்
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று! மாலி பொய்க்குமோ? 73
புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள்,
விரைந்து புள்ளின் மீது விண்ணுளோர்களோடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான். 74
தேரும், மாவும், யானையோடு சீயம், யாளி, ஆதியா
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால்;
வாரும், வாரும் என்று அழைக்கும் மானிடற்கு, இம் மண்ணிடைப்
பேருமாறும் நம்மிடைப் பிழைக்குமாறும் எங்ஙனே? 75
இராமன் நாண் எரிதலும், அரக்கரிடையே துன்னிமித்தம் தோன்றுதலும்
என்று சென்று, இரைந்து எழுந்து, ஓர் சீய ஏறு அடர்த்ததைக்
குன்று வந்து சூழ் வளைந்த போல், தொடர்ந்து கூடலும்,
நன்று இது! என்று, ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன்
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலைவாய். 76
கதம் புலர்ந்த, சிந்தை வந்த, காவல் யானை; மாலொடு
மதம் புலர்ந்த; நின்ற வீரர் வாய் புலர்ந்த; மா எலாம்
பதம் புலர்ந்த; வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின், வென்ற வென்றி சொல்ல வேணுமோ? 77
வெறித்து இரிந்த வாசியோடு, சீய மாவும் மீளியும்,
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம்
முறித்து எழுந்து அழுந்த, யானை வீசும் மூசு பாகரைப்
பிறித்து இரிந்து சிந்த, வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால், 78
இந் நிமித்தம் இப் படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர்
துன்னிமித்தம் என்று கொண்டு, வானுளோர்கள் துள்ளினார்;
அந் நிமித்தம் உற்றபோது, அரக்கர் கண் அரங்க, மேல்
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேத நாதன் வீசினான். 79
ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனை மேலும், ஆடல் மா
மீளி மேலும், வீரர் மேலும், வீரர் தேரின் மேலும், வெவ்
வாளி மேலும், வில்லின் மேலும், மண்ணின் மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான். 80
மலை விழுந்தவா விழுந்த, மான யானை; மள்ளர் செத்
தலை விழுந்தவா விழுந்த, தாய வாசி; தாள் அறும்
சிலை விழுந்தவா விழுந்த, திண் பதாகை; திங்களின்
கலை விழுந்தவா விழுந்த, வெள் எயிற்ற காடு எலாம். 81
வாடை நாலு பாலும் வீச, மாசு மேக மாலை வெங்
கோடை மாரி போல வாளி கூட, ஓடை யானையும்,
ஆடல் மாவும், வீரர் தேரும், ஆளும், மாள்வது ஆனவால்;
பாடு பேருமாறு கண்டு, கண் செல் பண்பும் இல்லையால். 82
விழித்த கண்கள், கைகள், மெய்கள், வாள்கள், விண்ணினுள்
தெழித்த வாய்கள், செல்லலுற்ற தாள்கள், தோள்கள், செல்லினைப்
பழித்த வாளி சிந்த, நின்று பட்ட அன்றி, விட்ட கோல்
கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே. 83
தொடுத்த வாளியோடு வில் துணிந்து விழும், முன்; துணிந்து
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும்; மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும்; எங்ஙனே, கலந்து நேர்
தடுத்து வீரர்தாமும் ஒன்று செய்யுமா, சலத்தினால்? 84
குரம் துணிந்து, கண் சிதைந்து, பல்லணம் குலைந்து, பேர்
உரம் துணிந்து, வீழ்வது அன்றி, ஆவி ஓட ஒண்ணுமோ -
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால்,
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே? 85
ஊர உன்னின், முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால்,
பேர ஒல்வது அன்று; பேரின், ஆயிரம் பெருஞ் சரம்
தூர, ஒன்று நூறு கூறுபட்டு உகும்; துயக்கு அலால்,
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே? 86
எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும், வல்ல யாவரும்,
கிட்டின், உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற, கேள்வியால்;
முட்டும் வெங் கண் மான யானை, அம்பு உராய, முன்னமே
பட்டு வந்தபோல் விழுந்த; என்ன தன்மை பண்ணுமே? 87
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று
ஏவின், உண்டை நூறு கோடி கொல்லும் என்ன, எண்ணுவான்
பூவின் அண்டர் கோனும், எண் மயங்கும்; அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே? 88
கொடிக் குலங்கள், தேரின் மேல, யானை மேல, கோடை நாள்
இடிக் குலங்கள் வீழ் வெந்த காடுபோல் எரிந்தவால் -
முடிக் குலங்கள் கோடி கோடி சிந்த, வேகம் முற்றுறா
வடிக் குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால்! 89
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து,
உற்ற வேகம் உந்த ஓடி, ஓத வேலை ஊடுற,
துற்ற வெம்மை கைம்மிக, சுறுக்கொளச் சுவைத்தால்,
வற்ற நீர் வறந்து, மீன் மறிந்து, மண் செறிந்தவால். 90
போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி, பொங்கினார்
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால்,
நீர் எரிந்த வண்ணமே, நெருப்பு எரிந்த, நீள் நெடுந்
தேர் எரிந்த, வீரர்தம் சிரம் பொடிந்து சிந்தவே. 91
பிடித்த வாள்கள் வேல்களோடு, தோள்கள் பேர் அரா எனத்
துடித்த; யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்தம்
மடித்த வாய்ச் செழுந் தலைக் குலம் புரண்ட, வானின் மின்
இடித்த வாயின் இற்ற மா மலைக் குலங்கள் என்னவே. 92
கோர ஆளி, சீயம், மீளி, கூளியோடு ஞாளியும்,
போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் -
நார ஆளி, ஞால ஆளி, ஞான ஆளி, நாந்தகப்
பார ஆளி, வீர ஆளி, வேக வாளி பாயவே. 93
ஆழி பெற்ற தேர் அழுந்தும்; ஆள் அழுந்தும்; ஆளொடும்
சூழி பெற்ற மா அழுந்தும்; வாசியும் சுரிக்குமால்-
பூழி பெற்ற வெங் களம் குளம் பட, பொழிந்த பேர்
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள் அரோ. 94
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள் தம்மை அண்மி, மேல்
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்;
சுற்றும் வீழ் தலைக் குலங்கள் சொல்லு கல்லு மாரிபோல்
எற்றும் என்று, பார் உளோரும் ஏங்குவார், இரங்குவார். 95
மழைத்த மேகம் வீழ்வ என்ன, வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வ என்ன, மண்ணின் மீது துன்னுமால் -
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஒளியால்,
விழித்து எழுந்து, வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம். 96
அரக்கர் செய்த போர்
தெய்வ நெடும் படைக் கலங்கள் விடுவர் சிலர்; சுடு கணைகள் சிலையில் கோலி,
எய்வர் சிலர்; எறிவர் சிலர்; எற்றுவர் சுற்றுவர், மலைகள் பலவும் ஏந்தி;
பெய்வர் சிலர்; பிடித்தும் எனக் கடுத்து உறுவர்; படைக் கலங்கள் பெறாது, வாயால்,
வைவர் சிலர்; தெழிப்பர் சிலர்; வருவர் சிலர்; திரிவர் சிலர் - வயவர் மன்னோ. 97
ஆர்ப்பர் பலர்; அடர்ப்பர் பலர்; அடுத்து அடுத்தே, படைக் கலங்கள் அள்ளி அள்ளித்
தூர்ப்பர் பலர்; மூவிலைவேல் துரப்பர் பலர்; கரப்பர், பலர்; சுடு தீத் தோன்றப்
பார்ப்பர் பலர்; நெடு வரையைப் பறிப்பர் பலர்-பகலோனைப் பற்றிச் சுற்றும்
கார்ப் பருவ மேகம் என, வேக நெடும் படை அரக்கர் கணிப்பு இலாதார். 98
இராமனின் வெற்றி விளக்கம்
எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும், பிடித்தனவும், படைகள் எல்லாம்
முறிந்தன, வெங் கணைகள் பட; முற்றின, சுற்றின தேரும், மூரி மாவும்;
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடுந் தலைகள் உருண்டன; பேர் இருளின் நீங்கி,
பிறிந்தனன் வெய்யவன் என்னப் பெயர்ந்தனன்-மீது உயர்ந்த தடம் பெரிய தோளான். 99
சொல் அறுக்கும் வலி அரக்கர், தொடு கவசம் துகள் படுக்கும்; துணிக்கும் யாக்கை;
வில் அறுக்கும்; சரம் அறுக்கும்; தலை அறுக்கும்; மிடல் அறுக்கும்; மேல் மேல் வீசும்
கல் அறுக்கும்; மரம் அறுக்கும்; கை அறுக்கும்; செய்யில் மள்ளர் கமலத்தோடு
நெல் அறுக்கும் திரு நாடன் நெடுஞ் சரம் என்றால், எவர்க்கும் நிற்கலாமோ? 100
கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும்,கழுத்து இழந்தும்,பருமக் கட்டின்
மேல் இழந்தும்,மருப்பு இழந்தும், விழுந்தன என்குநர் அல்லால், வேலை அன்ன
மால் இழந்து, மழை அனைய மதம் இழந்து, கதம் இழந்து, மலைபோல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை-நெடுஞ் சுரர்கள் எல்லாம். 101
வேல் செல்வன, சத கோடிகள்; விண்மேல் நிமிர் விசிகக்
கோல் செல்வன, சத கோடிகள்; கொலை செய்வன, மலைபோல்
தோல் செல்வன, சத கோடிகள்; துரகம் தொடர் இரதக்
கால் செல்வன, சத கோடிகள்; ஒருவன், அவை கடிவான்! 102
ஒரு வில்லியை, ஒரு காலையின், உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள், முடிவு இல்லவர், சர மா மழை பெய்வார்;
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய,
திருவில்லிகள் தலை போய் நெடு மலைபோல் உடல் சிதைவார். 103
நூறாயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர்,
மாறு ஆயினர், ஒரு கோல் பட, மலைபோல் உடல் மறிவார்;
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம் புனல் அவை புக்கு,
ஏறாது, எறி கடல் பாய்வன, சின மால் கரி இனமால். 104
மழு அற்று உகும்; மலை அற்று உகும்; வளை அற்று உகும்; வயிரத்து
எழு அற்று உகும்; எயிறு அற்று உகும்; இலை அற்று உகும், எறி வேல்;
பழு அற்று உகும், மத வெங் கரி; பரி அற்று உகும்; இரதக்
குழு அற்று உகும்;-ஒரு வெங் கணை தொடை பெற்றது ஓர் குறியால். 105
ஒரு காலையின், உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண
வரு காலனும், அவன் தூதரும், நமன் தானும், அவ் வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார்;
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர், அயர்த்தார். 106
அடுக்குற்றன மத யானையும், அழி தேர்களும், பரியும்
தொடுக்குற்றன விசும்பூடு உறச் சுமந்து ஓங்கின எனினும்,
மிடுக்குற்றன கவந்தக் குலம் எழுந்து ஆடலின், எல்லாம்-
நடுக்குற்றன, பிணக் குன்றுகள், உயிர்க்குற்றன என்ன. 107
பட்டார் உடல் படு செம்புனல் திருமேனியில் படலால்,
கட்டு ஆர் சிலைக் கரு ஞாயிறு புரைவான், கடையுகநாள்,
சுட்டு, ஆசு அறுத்து உலகு உண்ணும் அச் சுடரோன் எனப் பொலிந்தான்;
ஒட்டார் உடல் குருதிக் குளித்து எழுந்தானையும் ஒத்தான். 108
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட, சிரம் போய்
மாய, தமர் மடிகின்றனர் எனவும், மறம் குறையா,
காயத்திடை உயிர் உண்டிட, உடன் மொய்த்து எழு களியால்
ஈ ஒத்தன நிருதக் குலம்; நறவு ஒத்தனன் இறைவன். 109
மொய்த்தாரை ஒர் இமைப்பின்தலை, முடுகத் தொடு சிலையால்
தைத்தான்; அவர், கழல்-திண் பசுங் காய் ஒத்தனர், சரத்தால்;
கைத்தார் கடுங் களிறும், கனத் தேரும், களத்து அழுந்தக்
குத்தான், அழி குழம்பு ஆம்வகை, வழுவாச் சரக் குழுவால். 110
பிரிந்தார் பலர்; இரிந்தார் பலர்; பிழைத்தார் பலர்; உழைத்தார்;
புரிந்தார் பலர்; நெரிந்தார் பலர்; புரண்டார் பலர்; உருண்டார்;
எரிந்தார் பலர்; கரிந்தார் பலர்; எழுந்தார் பலர்; விழுந்தார்,
சொரிந்தார் குடல்; துமிந்தார் த்லை; கிடந்தார், எதிர் தொடர்ந்தார். 111
மணி குண்டலம், வலயம், குழை, மகரம், சுடர் மகுடம்,
அணி கண்டிகை, கவசம், கழல், திலகம், முதல் அகல,
துணியுண்டவர் உடல், சிந்தின; சுடர்கின்றன தொடரும்
திணி கொண்டலினிடை மின் குலம் மிளிர்கின்றன சிவண 112
முன்னே உளன்; பின்னே உளன்; முகத்தே உளன்; அகத்தின் -
தன்னே உளன்; மருங்கே உளன்; தலைமேல் உளன்; மலைமேல்
கொன்னே உளன்; நிலத்தே உளன்; விசும்பே உளன்; கொடியோர்,
என்னே ஒரு கடுப்பு! என்றிட, இருஞ் சாரிகை திரிந்தான். 113
என் நேரினர்; என் நேரினர் என்று யாவரும் எண்ண,
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான்,
ஒன்னார் பெரும் படைப் போர்க் கடல் உடைக்கின்றனன்எனினும்,
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான். 114
பள்ளம் படு கடல் ஏழினும், படி ஏழினும், பகையின்
வெள்ளம் பல உள என்னினும், வினையம் பல தெரியா,
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான், உருப் பிறந்தார்
உள் அன்றியும், புறத்தேயும் உற்று, உளனாம் என உற்றான். 115
நானாவிதப் பெருஞ் சாரிகை திரிகின்றது நவிலார்,
போனான், இடை புகுந்தான், எனப் புலன் கொள்கிலர், மறந்தார்,
தானாவதும் உணர்ந்தான், உணர்ந்து, உலகு எங்கணும் தானே
ஆனான்; வினை துறந்தான் என, இமையோர்களும் அயிர்த்தார். 116
சண்டக் கடு நெடுங் காற்றிடை துணிந்து எற்றிட, தரைமேல்
கண்டப் படு மலைபோல், நெடு மரம்போல், கடுந் தொழிலோர்
துண்டப் பட, கடுஞ் சாரிகை திரிந்தான், சரம் சொரிந்தான் -
அண்டத்தினை அளந்தான் எனக் கிளர்ந்தான், நிமிர்ந்து அகன்றான். 117
களி யானையும், நெடுந் தேர்களும், கடும் பாய் பரிக் கணனும்,
தெளி யாளியும், முரட் சீயமும், சின வீரர்தம் திறமும்,
வெளி வானகம் இலதாம்வகை விழுந்து ஓங்கிய பிணப் பேர்
நளிர் மா மலை பல தாவினன், நடந்தான் - கடல் கிடந்தான். 118
அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்,
அம்பரங்களொடும் களி யானையும்,
அம்பு அரங்க, அழுந்தின, சோரியின்,
அம்பரம் கம் அருங் கலம் ஆழ்ந்தென. 119
கேட கங்கண அம் கையொடும் கிளர்
கேடகங்கள் துணிந்து கிடந்தன;
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே. 120
அங்கதம் களத்து அற்று அழி தாரொடும்
அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால்-
புங்கவன் கணைப் புட்டில் பொருந்திய
புங்க வன் கணைப் புற்று அரவம் பொர. 121
தம் மனத்தில் சலத்தர் மலைத் தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ,
தெம் முனைச் செரு மங்கை தன் செங் கையால்
அம்மனைக் குலம் ஆடுவ போன்றவே. 122
கயிறு சேர் கழல் கார் நிறக் கண்டகர்
எயிறு வாளி படத் துணிந்து, யானையின்
வயிறுதோறும் மறைவன, வானிடைப்
புயல்தொறும் புகு வெண் பிறை போன்றவே. 123
வென்றி வீரர் எயிறும், விடா மதக்
குன்றின் வெள்ளை மருப்பும், குவிந்தன-
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால். 124
ஓவிலார் உடல் உந்து உதிரப் புனல்
பாவி வேலை உலகு பரத்தலால்,
தீவுதோறும் இனிது உறை செய்கையர்,
ஈவு இலாத நெடு மலை ஏறினார். 125
விண் நிறைந்தன, மெய் உயிர்; வேலையும்,
புண் நிறைந்த புனலின் நிறைந்தன;
மண் நிறைந்தன, பேர் உடல்; வானவர்
கண் நிறைந்தன, வில் தொழில் கல்வியே. 126
செறுத்த வீரர் பெரும் படை சிந்தின,
பொறுத்த சோரி புகக் கடல் புக்கன,
இறுத்த நீரின் செறிந்தன, எங்கணும்
அறுத்து, மீனம் உலந்த அனந்தமே. 127
வன்னி ஏனைய தலைவர்களை நோக்கி வெகுண்டு கூறுதல்
ஒல்வதே! இவ் ஒருவன், இவ் ஊகத்தைக்
கொல்வதே, நின்று! குன்று அன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின், வெண் பலை
மெல்வதே! என வன்னி விளம்பினான். 128
கோல் விழுந்து அழுந்தாமுனம், கூடி யாம்
மேல் விழுந்திடினும், இவன் வீயுமால்;
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்!
மால் விழுந்துளிர் போலும், மயங்கி, நீர்! 129
ஆயிரம் பெரு வெள்ளம் அரைபடத்
தேய நிற்பது; பின், இனி என் செய?
பாயும், உற்று, உடனே எனப் பன்னினான்,
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான். 130
அரக்கர் படை உருத்து எழ, இராமனும் சரமழை சிந்துதல்
உற்று, உருத்து எழு வெள்ளம் உடன்று எழா,
சுற்றும் முற்றும் வளைந்தன, தூவின-
ஒற்றை மால் வரைமேல் உயர் தாரைகள்
பற்றி மேகம் பொழிந்தென, பல் படை. 131
குறித்து எறிந்தன, எய்தன, கூற்றுறத்
தறித்த தேரும் களிறும் தரைப் பட,
மறித்த வாசி துணித்து, அவர் மாப் படை
தெறித்துச் சிந்த, சர மழை சிந்தினான். 132
வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்,
பேய் விளிப்ப நடிப்பன, பெட்புறும்
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால். 133
நெய் கொள் சோரி நிறைந்த நெடுங் கடல்
செய்ய ஆடையள், அன்ன செஞ் சாந்தினள்,
வைய மங்கை பொலிந்தனள், மங்கலச்
செய்ய கோலம் புனைந்தன செய்கையாள். 134
உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,
அப்புத்தான், என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,
தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால். 135
ஒன்றுமே தொடை; கோல் ஒரு கோடிகள்
சென்று பாய்வன; திங்கள் இளம் பிறை
அன்று போல் எனல் ஆகியது அச் சிலை;
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர்? 136
அரக்கர் சேனை கடும்போர் புரிந்து, இராம பாணத்தால் மடிதல்
எடுத்தவர், இரைத்தவர், எறிந்தவர், செறிந்தவர், மறங்கொடு எதிரே
தடுத்தவர், சலித்தவர், சரிந்தவர், பிரிந்தவர், தனிக் களிறுபோல்
கடுத்தவர், கலித்தவர், கறுத்தவர், செறுத்தவர், கலந்து, சரம் மேல்
தொடுத்தவர், துணிந்தவர், தொடர்ந்தனர், கிடந்தனர் - துரந்த கணையால். 137
தொடுப்பது சுடர்ப் பகழி ஆயிரம் நிரைத்தவை துரந்த துறை போய்ப்
படுப்பது, வயப் பகைஞர் ஆயிரரை அன்று, பதினாயிரவரை;
கடுப்பு அது; கருத்தும் அது; கட்புலன் மனம் கருதல் கல்வி இல; வேல்
எடுப்பது படப் பொருவது அன்றி, இவர் செய்வது ஒரு நன்றி உளதோ? 138
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடைக் குழை தொகுத்து,
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும்; அவை உண்ணும் உயிரை;
ஆசைகளை உற்று உருவும்; அப் புறமும் ஓடும்; அதன் இப் புறம் உளார்,
ஈசன் எதிர் உற்று, உகுவது அல்லது, இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ? 139
ஊன் நகு வடிக் கணைகள் ஊழி அனல் ஒத்தன; உலர்ந்த உலவைக்
கானகம் நிகர்த்தனர் அரக்கர்; மலை ஒத்தன, களித்த மத மா;
மானவன் வயப் பகழி வீசு வலை ஒத்தன; வலைக்குள் உளவாம்
மீன குலம் ஒத்தன, கடற் படை, இனத்தொடும் விளிந்துறுதலால். 140
ஊழி இறுதிக் கடுகு மாருதமும் ஒத்தனன், இராமன்; உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர், அரக்கர், பொருவார்;
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி, இறுதிக்கணின் எழும்
ஆழியையும் ஒத்தனன்; அம் மன்னுயிரும் ஒத்தனர், அலைக்கும் நிருதர். 141
மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய், எவையும் முற்றும் முயலும்
காலம் எனல் ஆயினன் இராமன்; அவ் அரக்கர், கடைநாளில் விளியும்
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர்; குரை கடல் எழும்
ஆலம் எனலாயினன் இராமன்; அவர் மீனம் எனல் ஆயினர்களால். 142
வஞ்ச வினை செய்து, நெடு மன்றில் வளம் உண்டு, கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர், அரக்கர்; அறம் ஒக்கும் நெடியோன்;
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன்; அடுத்து அதனை நக்கிநரையும்,
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும், ஒத்தனர், அரக்கர், படுவார். 143
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின், அவ் வேலையும் இலங்கை நகரும்,
பள்ளமொடு மேடு தெரியாதவகை சோர் குருதி பம்பி எழலும்,
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால்,
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார். 144
நீங்கினர், நெருங்கினர் முருங்கினர்; உலைந்து உலகில் நீளும் மலைபோல்
வீங்கின, பெரும் பிணம் விசும்பு உற; அசும்பு படு சோரி விரிவுற்று,
ஓங்கின, நெடும் பரவை, ஒத்து உயர எத் திசையும் உற்று, எதிர் உற;
தாங்கினர், படைத் தலைவர், நூறு சத கோடியர், தடுத்தல் அரியார். 145
தேரும், மதமாவும், வரை ஆளியொடு வாசி, மிகு சீயம், முதலா
ஊரும் அவை யாவையும் நடாயினர், கடாயினர்கள், உந்தினர்களால்;
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின்
தூரும்வகை தூவினர்; துரந்தனர்கள், எய்தனர், தொடர்ந்தனர்களால். 146
வம்மின், அட, வம்மின்! எதிர் வந்து, நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும்
தம்மின்! என இன்னன மொழிந்து, எதிர் பொழிந்தன, தடுப்ப அரியவாம்,
வெம் மின் என, வெம் பகழி, வேலை என ஏயினன்; அவ் வெய்ய வினையோர்,
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர், தனித் தனிஅரோ. 147
இமையோர் சிவனிடம் முறையிடுதல்
அக் கணையை அக் கணம் அறுத்தனர் செறுத்து, இகல் அரக்கர் அடைய,
புக்கு அணையலுற்றனர், மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார்,
திக்கு அணை வகுத்தனர் எனச் செல நெருக்கினர், செருக்கின் மிகையால்;
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால்: 148
இராமனே வெல்வன் எனச் சிவபெருமான் அருளுதல்
படைத் தலைவர் உற்று ஒருவர் மும் மடி இராவணன் எனும் படிமையோர்;
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை; வளைத்தனர் கிளைத்து, உலகு எலாம்
அடைத்தனர்; தெழித்தனர், அழித்தனர்; தனித்து உளன் இராமன்; அவரோ,
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர்; இனிச் செயல் பணித்தி-சுடரோய்! 149
எய்த கணை எய்துவதன் முன்பு, இடை அறுந்து, இவர்கள் ஏழ் உலகமும்
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர், முனிந்தனர்களால்;
வைது கொலின் அல்லது மறப் படை, கொடிப் படை, கடக்கும் வலிதான்
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர், திகைத்து விழுவார். 150
அஞ்சல்! இனி, ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும், அத்தனைவரும்,
பஞ்சி எரி உற்றதென, வெந்து அழிவர்; இந்த உரை பண்டும் உளதால்;
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும், நல் அறம் நடக்கும் அதனை
வஞ்சம் உறு பொய்க் கருமம் வெல்லினும், இராமனை இவ் வஞ்சர் கடவார். 151
அரக்கர் உளர் ஆர் சிலர், அவ் வீடணன் அலாது, உலகின் ஆவி உடையார்?
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது; இனி நீர்
கரக்க, முழை தேடி உழற்கின்றிலிர்கள்; இன்று ஒரு கடும் பகலிலே
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும், இவரை. 152
என்று பரமன் பகர, நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்,
நின்று நிலை ஆறினர்கள், வானவரும்; மானவனும் நேமி எனல் ஆம்
துன்று நெடு வாளி மழை, மாரியினும் மேலன துரந்து, விரைவின்
கொன்று, குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன் அரோ. 153
மகர மறி கடலின் வளையும் வய நிருதர்
சிகரம் அனைய உடல் சிதறி, இறுவர் உயிர்-
பகர அரிய பதம் விரவ, அமரர் பழ
நகரம் இடம் அருக, அனையர் நலிவு பட. 154
உகளும், இவுளி தலை துமிய - உறு தலைகள்
அகழி அற, வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ, உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ. 155
மலையும், மறி கடலும், வனமும், மரு நிலனும்,
உலைவு இல் அமரர் உறை உலகும், உயிர்களொடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி
அலையும் அரியது ஒரு திசையும் இலது, அணுக. 156
அரக்கரின் அழிவும், அமரர்களின் மலர் மழையும்
இனைய செரு நிகழும் அளவின், எதிர் பொருத
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய,
அனைய படை நெளிய, அமரர் சொரி மலர்கள்
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய, 157
சிதறி ஓடிய அரக்கர் படையைத் தடுத்து, தலைவர்கள் வேகத்துடன் பொருதல்
இரியல் உறு படையை, நிருதர், இடை விலகி,
எரிகள் சொரியும் நெடு விழியர், இழுதையர்கள்!
திரிக, திரிக! என உரறு தெழி குரலர்,
கரிகள், அரிகள், பரி, கடிதின் எதிர் கடவ. 158
உலகு செவிடு பட, மழைகள் உதிர, உயர்
அலகு இல் மலை குலைய, அமரர் தலை அதிர,
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய,
விலகியது, திமிலம் விளையும்வகை விளைய. 159
அழகிது, அழகிது! என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசு பட,
விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி
மழைகள் முறை சொரிய, அமரர் மலர் சொரிய, 160
தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ,
சினவு பொரு பரிகள் செறிவ அணுக, உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர, எழு
கனக வரை பொருவ, கதிர் கொள் மணி இரதம். 161
பாறு, படு சிறகு கழுகு, பகழி பட,
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி,
வேறு படர் படர, இரவி சுடர் வலையம்
மாறு பட, உலக நிரைகள் அளறு பட. 162
அருகு கடல் திரிய, அலகு இல் மலை குலைய,
உருகு சுடர்கள் இடை திரிய, - உரனுடைய
இரு கை ஒரு களிறு திரிய, விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் முறை திரிய. 163
சிவனும், அயனும், எழு திகிரி அமரர் பதி
அவனும், அமரர் குலம் எவரும், முனிவரொடு
கவனம் உறு கரணம் இடுவர் - கழுது இனமும்,
நமனும், வரி சிலையும், அறனும், நடன் நவில. 164
தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை
ஏவர் அறிவுறுவர் இறுதி? முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர், அற முதல்வ!
பூவை நிறவ! என வேதம் முறை புகழ. 165
எய்யும் ஒரு பகழி, ஏழு கடலும், இடு
வெய்ய களிறு பரியாளொடு இரதம் விழ,
ஒய்ய ஒரு கதியின் ஓட உணர் அமரர்
கைகள் என, அவுணர் கால்கள் கதி குலைவ. 166
அண்ணல் விடு பகழி, யானை, இரதம், அயல்
பண்ணு புரவி, படை வீரர், தொகு பகுதி
புண்ணினொடு குறிகள் புள்ளி என, விரைவின்
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ. 167
அரக்கர் தப்பிச் செல்லாவண்ணம் இராமன் சர மதில் அமைத்தல்
சுருக்கம் உற்றது படை; சுருக்கத்தால் இனிக்
கரக்கும், உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால்,
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்வகை
சரக் கொடு நெடு மதில் சமைத்திட்டான் அரோ. 168
மாலியை, மாலியவானை, மால் வரை
போல் உயர் கயிடனை, மதுவை, போன்று உளார்,
சாலிகை யாக்கையர், தணப்பு இல் வெஞ் சர
வேலியைக் கடந்திலர், உலகை வென்றுளார். 169
மாண்டவர் மாண்டு அற, மற்றுளோர் எலாம்
மீண்டனர், ஒரு திசை - ஏழு வேலையும்
மூண்டு அற முருக்கிய ஊழிக் காலத்தில்
தூண்டுறு சுடர் சுட, சுருங்கித் தொக்கபோல். 170
புரம் சுடு கடவுளும், புள்ளின் பாகனும்,
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்,
உரம் சுடுகிற்கிலர்; ஒருவன் நாமுடை
வரம் சுடும்; வலி சுடும்; வாழும் நாள் சுடும். 171
ஆயிர வெள்ளம் உண்டு; ஒருவர், ஆழி சூழ்
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்;
மேயின பெரும் படை இதனை, ஓர் விலால்
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன். 172
இடை, படும், படாதன இமைப்பிலோர் படை;
புடைபட, வலம்கொடு விலங்கிப் போகுமால்;
படை படும் கோடி ஓர் பகழியால் பழிக்
கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால். 173
பண்டு உலகு உய்த்தவனோடும், பண் அமை
குண்டையின் பாகனும், பிறரும் கூடினார்;
அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழைக்
கண்டிலம்; இவன் நெடு மாயக் கள்வனால். 174
கொன்றனன், இனி ஒரு கோடி கோடி மேற்று;
அன்று எனின், பதுமம் மேற்று; ஆகில் வெள்ளம் ஆய்
நின்றது; நின்று இனி நினைவது என் பெற?
ஒன்று என உணர்க என, வன்னி ஓதினான்: 175
ஒரு முகமாக இராமனை எதிர்க்குமாறு வன்னி அரக்கர்க்கு கூறுதல்
விழித்துமோ, இராவணன் முகத்து மீண்டு, யாம் -
பழித்துமோ, நம்மை, - நாம் படுவது அஞ்சினால்?
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம, யாம்
கழித்தும் இவ் ஆக்கையை, புகழைக் கண்ணுற. 176
இடுக்கு, இனிப் பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்,
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம்;
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி, யாம் இனிக்
கொடுத்தும் நம் உயிர் என, ஒருமை கூறினான். 177
அரக்கர் இராமனை வளைத்து அடர்த்தல்
இளக்க அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம்
அளக்கரின் பாய்ந்தென, பதங்கம் ஆர் அழல்
விளக்கினில் வீழ்ந்தென, விதிகொடு உந்தலால்,
வளைத்து இரைத்து அடர்த்தனர், மலையின் மேனியார். 178
மழு, எழுத் தண்டு, கோல், வலயம், நாஞ்சில், வாள்,
எழு, அயில், குந்தம், வேல், ஈட்டி, தோமரம்,
கழு, இகல் கப்பணம், முதல கைப் படை,
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார். 179
காந்தருப்பம் என்னும் படையை இராமன் விடுதல்
காந்தருப்பம் எனும் கடவுள் மாப் படை,
வேந்தருக்கு அரசனும், வில்லின் ஊக்கினான்;
பாந்தளுக்கு அரசு என, பறவைக்கு ஏறு என,
போந்து உருத்தது, நெருப்பு அனைய போர்க் கணை. 180
மூன்று கண் அமைந்தன, ஐம் முகத்தன,
ஆன்ற மெய் தழலன, புனலும் ஆடுவ,
வான் தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின, புரம் சுடும் ஒருவன் தோற்றத்த. 181
மூலச்சேனை கணத்தில் அழிதல்
ஐ-இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற,
எய் எனும் மாத்திரத்து, அவிந்தது என்பரால்-
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே. 182
மேலும் பல திசைகளிலிருந்து அரக்கர் படைகள் வருதல்
மாப் பெருந் தீவுகள் ஏழும், மாதிரம்,
பாப்பு அரும் பாதலத்துள்ளும், பல் வகைக்
காப்பு அரு மலைகளும் பிறவும் காப்பவர்,
யாப்புறு காதலர் இராவணற்கு அவர். 183
மாத் தட மேருவை வளைந்த வான் சுடர்
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார்,
பூத் தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நாத் தழும்பு ஏறிய வரத்தர், நண்ணினார். 184
நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்,
வெம் முனை, இராவணன் தனையும் வெல்லுமால்;
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ?
செம்மையில் தனித் தனிச் செய்துமோ செரு? 185
வன்னி சொல்ல, யாவரும் உடன்பட்டு, இராமனை வளைந்து, பொருதல்
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து, இந் நெடியோனை
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல்,
வெல்லோம் வெல்லோம்! என்றனன், வன்னி; மிடலோரும்,
தொல்லோன் சொல்லே நன்று என, அஃதே துணிவுற்றார். 186
அன்னார்தாமும், ஆர்கலி ஏழும் என, ஆர்த்தார்;
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே, விளி சங்கம்
கொன்னே ஊதி, தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார்;
என் ஆம், வையம்? என்படும் வானம்? திசை ஏதாம்? 187
ஆர்த்தார் அன்னார்; அன்ன கணத்தே, அவர் ஆற்றல்
தீர்த்தானும் தன் வெஞ் சிலை நாணைத் தெறிப்புற்றான்;
போர்த்தான் பொன் - தோள்; முற்றும் அளந்தான் புகழ்ச் சங்கம்
ஆர்த்தால் ஒத்தது, அவ் ஒலி, எல்லா உலகுக்கும். 188
பல் ஆயிர கோடியர்; பல் படை நூல்
வல்லார்; அவர் மெய்ம்மை வழங்க வலார்;
எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர்; அரக்கரின் மேதகையார். 189
வென்றார், உலகங்களை, விண்ணவரோடு
ஒன்றா உயர் தானவர் ஓதம் எலாம்;
கொன்றான் நிமிர் கூற்று என, எவ் உயிரும்
தின்றார்; - எதிர் சென்று, செறிந்தனரால். 190
வளைத்தார் மத யானையை, வன் தொழுவில்
தளைத்தார் என, வந்து, தனித் தனியே
உளைத்தார் உரும் ஏறு என; ஒன்று அல போர்
விளைத்தார்; இமையோர்கள் வெதும்பினரால். 191
விட்டீய வழங்கிய வெம் படையின்
சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும்,
கண் தீயும், ஒருங்கு கலந்து எழலால்,
உள் தீ உற வெந்தன, ஏழ் உலகும். 192
தேர் ஆர்ப்பு ஒலி, வீரர் தெழிப்பு ஒலியும்,
தார் ஆர்ப்பு ஒலியும், கழல் தக்கு ஒலியும்,
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும்,
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும். 193
இராமனும் அம்பு மழை பொழிய, அரக்கர் சேனை அழிந்துபடுதல்
எல்லாரும் இராவணனே அனையார்;
வெல்லா உலகு இல்லவர்; மெய் வலியார்;
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா,
நல்லானும் உருத்து, எதிர் நண்ணினனால். 194
ஊழிக் கனல் போல்பவர் உந்தின போர்
ஆழிப் படை அம்பொடும் அற்று அகல,
பாழிக் கடை நாள் விடு பல் மழைபோல்,
வாழிச் சுடர் வாளி வழங்கினனால். 195
சூரோடு தொடர்ந்த சுடர்க் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும்,
தேரோடு மடிந்தனர், செங் கதிரோன்
ஊரோடு மறிந்தனன் ஒத்து, உரவோர். 196
கொல்லோடு சுடர்க் கணை கூற்றின் நிணப்
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்,
செல்லோடு எழு மா முகில் சிந்தினபோல்,
வில்லோடும் விழுந்த, மிடல் கரமே. 197
செம்போடு உதிரத் திரை ஆழியின்வாய்-
வெம்பு ஓடு அரவக் குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த - குறைந்து,
அம்போடும் விழுந்த அடல் கரமே. 198
முன் ஓடு உதிரத் திரை, மூதுலகைப்
பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய்,
மின்னோடும் விழுந்தன மேகம் என,
பொன் ஓடை நெடுன் கரி புக்கனவால். 199
மற வெற்றி அரக்கர் வலக் கையொடும்,
நறவக் குருதிக் கடல் வீழ் நகை வாள்
சுறவு ஒத்தன; மீது துடித்து எழலால்,
இறவு ஒத்தன, வாவும் இனப் பரியே. 200
தாமச் சுடர் வாளி தடிந்து அகல,
பாமக் குருதிப் படிகின்ற படைச்
சேமப் படு கேடகம், மால் கடல் சேர்
ஆமைக் குலம் எத்தனை அத்தனையால்! 201
காம்போடு பதாகைகள் கார் உதிரப்
பாம்போடு கடல் படிவுற்றனவால் -
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல,
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன போல். 202
மண்டப் படு சோரியின் வாரியின் வீழ்
கண்டத் தொகை கவ்விய காலொடு தோள்,
முண்டக் கிளர் தண்டு அன முள் தொகு வன்
துண்டச் சுறவு ஒத்த, துடித்தனவால். 203
தெளிவுற்ற பளிங்கு உறு சில்லிகொள் தேர்
விளிவுற்றுக, வேறுற வீழ்வனதாம்,
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ்
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால். 204
நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலை கோடலின், மன் குறி கோளுறுமேல்,
சிலை கோடியதோறும் சிரத் திரள் வன்
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால். 205
திண் மார்பின்மிசைச் செறி சாலிகையின் -
கண், வாளி கடைச் சிறை காண நுழைந்து,
எண் வாய் உற மொய்த்தன, இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டுஇனம் ஒத்தனவால். 206
பாறு ஆடு களத்து, ஒருவன், பகலின்
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே,
நூறு ஆயின யோசனை, நூழில்கள் சால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால். 207
நின்றாருடன் நின்று, நிமிர்ந்து அயலே
சென்றார் எதிர் சென்று, திரிந்திடலால்,
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர்
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார். 208
இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன் என்று,
அங்கே உணர்கின்ற அலந்தலைவாய்,
வெங் கோப நெடும் படை வெஞ் சரம் விட்டு
எங்கேனும் வழங்குவர், எய்குவரால். 209
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார்,
இரவு அன்று இது; ஓர் பகல் என்பர்களால்;
கரவு அன்று இது; இராமர் கணக்கு இலரால்;
பரவை மணலின் பலர் என்பர்களால். 210
ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன்;
ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே;
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்,
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ? 211
தேர்மேல் உளர்; மாவொடு செந் தறுகண்
கார்மேல் உளர்; மா கடல் மேல் உளர்; இப்
பார்மேல் உளர்; உம்பர் பரந்து உளரால் -
போர்மேலும் இராமர் புகுந்து அடர்வார். 212
என்னும்படி, எங்கணும் எங்கணுமாய்த்
துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்;
பின்னும், அருகும், உடலும், பிரியான் -
மன்னன் மகன்! வீரர் மயங்கினரால். 213
இராமனது வில்-திறம்
படு மத கரி, பரி, சிந்தின; பனி வரை இரதம் அவிந்தன;
விடு படை திசைகள் பிளந்தன; விரி கடல் அளறது எழுந்தன;
அடு புலி அவுணர்தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின;-
கடு மணி நெடியவன் வெஞ் சிலை, கணகண, கணகண எனும்தொறும். 214
ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின் மணி கணில் என்னும்;
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே. 215
ஊன் ஏறு படைக் கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்தோறும்,
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்,
வான் ஏறினார்கள் தேரும், மலைகின்ற வயவர் தேரும்,
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் - தனி ஏறு அன்னான். 216
காய் இருஞ் சிலை ஒன்றேனும், கணைப் புட்டில் ஒன்றதேனும்,
தூய் எழு பகழி மாரி மழைத் துளித் தொகையின் மேல;
ஆயிரம் கைகள் செய்த செய்தன, அமலன் செங் கை;
ஆயிரம் கையும் கூடி, இரண்டு கை ஆனது அன்றே! 217
பொய்; ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால்;
மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே?
ஐ-இருநூறும் அல்ல; அனந்தம் ஆம் முகங்கள் அம்மா! 218
சிவன் முதலிய தேவர்களும் முனிவர்களும் இராமனது வில்லாண்மை
கண்டு வியப்புறுதல்
கண்ணுதல் - பரமன் தானும், நான்முகக் கடவுள் தானும்,
எண்ணுதும், தொடர எய்த கோல் என, எண்ணலுற்றார்,
பண்ணையால் பகுக்க மாட்டார், தனித் தனிப் பார்க்கலுற்றார்,
ஒண்ணுமோ, கணிக்க? என்பார், உவகையின் உயர்ந்த தோளார். 219
வெள்ளம் ஈர்-ஐந்து நூறே; விடு கணை அவற்றின் மெய்யே
உள்ளவாறு உளவாம் என்று, ஓர் உரை கணக்கு உரைத்துமேனும்,
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால்; கொற்ற
வள்ளலே வழங்கினானோ? என்றனர், மற்றை வானோர். 220
குடைக்கு எலாம், கொடிகட்கு எல்லாம், கொண்டன குவிந்த கொற்றப்
படைக்கு எலாம், பகழிக்கு எல்லாம், யானை தேர் பரிமா வெள்ளக்
கடைக்கு எலாம், துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே? என்றனர் முனிவர், அப்பால். 221
பத்துக் கோடி வீரர் பட, எஞ்சியோர் தெய்வப் படைகளை வீசிப் பொருதல்
கண்டத்தின் கீழும் மேலும், கபாலத்தும், கடக்கல் உற்ற,
சண்டப் போர் அரக்கர் தம்மைத் தொடர்ந்து, கொன்று அமைந்த தன்மை-
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களைப் பிரமன் தந்த
அண்டத்தை நிறையப் பெய்து குலுக்கியது அனையது ஆன. 222
கோடி ஐ-இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி,
ஓடி ஓர் பக்கம் ஆக, உயிர் இழந்து, உலத்தலோடும்,
வீடி நின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் வீசி,
மூடுதும் இவனை என்று, யாவரும் மூண்டு மொய்த்தார். 223
தெய்வப் படைகளை தெய்வப் படைகளாலே இராமன் தடுத்தல்
விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக,
கொண்டு ஒருங்கு உடனே விட்டார்; குலுங்கியது அமரர் கூட்டம்;
அண்டமும் கீழ் மேலாக ஆகியது; அதனை அண்ணல்
கண்டு, ஒரு முறுவல் காட்டி, அவற்றினை அவற்றால் காத்தான். 224
தான் அவை தொடுத்த போது, தடுப்ப அரிது; உலகம்தானே
பூ நனி வடவைத் தீயின் புக்கெனப் பொரிந்து போம் என்று,
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப அருங் கோடி அம்பால்
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான். 225
பூமி தேவியின் பெரு மகிழ்ச்சி
ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார்;
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறைப் பாரம் நீங்கி,
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே, வீங்கு ஒலி வேலை நின்றும்
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி! 226
தேவர்கள் துயர் தீர்ந்து, இராமனை வாழ்த்துதல்
நினைந்தன முடித்தேம் என்னா, வானவர் துயரம் நீத்தார்;
புனைந்தனென் வாகை என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்தமாதோ;
அனந்தனும் தலைகள் ஏந்தி, அயாவுயிர்த்து, அல்லல் தீர்ந்தான். 227
தாய், படைத் துடைய செல்வம் ஈக! என, தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி,
தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார், வணக்கம் செய்தார். 228
இராமனின் தோற்றம்
தீ மொய்த்த அனைய செங் கண் அரக்கரை முழுதும் சிந்தி,
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற, நின்றான் -
பேய் மொய்த்து, நரிகள் ஈண்டி, பெரும் பிணம் பிறங்கித் தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான். 229
அண்டம் மாக் களமும், வீந்த அரக்கரே உயிரும் ஆக,
கொண்டது ஓர் உருவம் தன்னால், இறுதிநாள் வந்து கூட,
மண்டு நாள், மறித்தும் காட்ட, மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான். 230
இலக்குவன் இராவணனோடு பொரும் இடத்திற்கு, இராமன் செல்லுதல்
ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ளச்
சேகு அறு மலரும் சாந்தும் செருத் தொழில் வருத்தம் தீர்க்க,
மா கொலை செய்த வள்ளல், வாள் அமர்க் களத்தைக் கைவிட்டு
ஏகினன், இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல். 231
இவ் வழி இயன்ற எல்லாம் இயம்பினாம்; இரிந்து போன
தெவ் அழி ஆற்றல் வெற்றிச் சேனையின் செயலும், சென்ற
வெவ் வழி அரக்கர் கோமான் செய்கையும், இளைய வீரன்
எவ்வம் இல் ஆற்றல் போரும், முற்றும் நாம் இயம்பலுற்றாம். 232
மிகைப் பாடல்கள்
போனபின், பல புவனம் என்று உரைக்கின்ற பொறை சேர்
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூலத்
தானை தன்னையும், எழுக எனச் சாற்றினர் - தறுகண்
கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர். 3-1
மூன்றின் நூற்றினோடு ஆயிரம் மூள்வன வெள்ளம்
ஆன்ற தேர், பரி, கரியவை, ஆளையும், அடங்கி,
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன
ஏன்று சென்றது, அவ் இராமன்மேல், இராக்கதப் பரவை. 23-1
தான் அல்லாது ஒரு பொருள் இலை எனத் தகும் முதல்வன்-
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ?
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும்
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் எனத் தகுமோ? 26-1
நின்று காண்குதிர், இறைப் பொழுது; இங்கு நீர் வெருவல்;
இன்று இராகவன் பகழி மற்று இராக்கதப் புணரி
கொன்று வற்றிடக் குறைத்து உயிர் குடிக்கும் என்று அமரர்க்கு
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு, அவர் உளம் தெளிந்தார். 26-2
வானின் மேவிய அமரருக்கு இத் துணை மறுக்கம்
ஆன போது, இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள்
ஈனம் எய்தியது இயம்பல் என்? எழுபது வெள்ளத்
தானை ஆகிய கவிப் படை சலித்தது, பெரிதால். 26-3
வாய் உலர்ந்தன சில சில; வயிறு எரி தவழ்வுற்று
ஓய்தல் உந்தின சில சில; ஓடின நடுங்கிச்
சாய்தல் உந்தின சில சில; தாழ் கடற்கு இடையே
பாய்தல் உந்தின சில சில-படர் கவிப் படைகள். 29-1
அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தங்களைத் தாங்குவர் தாங்கார்,
கனியும் காய்களும் உணவு உள; மலை உள காக்க;
மனிதர் ஆளில் என், இராக்கதர் ஆளில் என், வையம்! 44-1
என்று, சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப,
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே,
நன்று நும் உரை; நாயகர்ப் பிழைத்து, நம் உயிர் கொண்டு,
ஒன்று வாழ்தலும் உரிமையதே? என உரைப்பான். 44-2
ஆளி மா முகவர், சீறும் அடு புலி முகவர், மிக்க
யாளி மா முகவர், யானை முகவர், மற்று எரியும் வெங் கண்
கூளி மா முகவர், ஆதி அளப்பு இல கோடி உள்ளார்;
ஊழி சென்றாலும் உட்கார்; ஒருவர் ஓர் அண்டம் உண்பார். 52-1
என்று எடுத்து, எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும்,
வன் திறல் குலிசம் ஓச்சி, வரைச் சிறகு அரிந்து, வெள்ளிக்
குன்றிடை நீலக் கொண்மூ அமர்ந்தென, மதத் திண் குன்றில்
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான்: 54-1
இசைந்தனன் அமருக்கு; எல்லா உலகமும் இமைப்பின் வாரிப்
பிசைந்து, சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம்
இசைந்தது போலும்! என்று, ஆங்கு, அயன் சிவன் இருவர் தத்தம்
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட, வயங்கி நின்றான். 69-1
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர்,
கொற்ற வில்லி வெல்க! வஞ்ச மாயர் வீசு! குவலயத்து
உற்ற தீமை தீர்க, இன்றொடு! என்று கூறினார்; நிலம்
துற்ற வெம் படைக் கை நீசர் இன்ன இன்ன சொல்லினார்: 72-1
அரைக் கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய்த்
தரைப் பட, பல் அண்ட கோடி தகர, அண்ணல்தன் கை வில்
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து, இராம ராம! என்று
உரைக்கும் நாமமே எழுந்தது, உம்பரோடும் இம்பரே. 76-1
சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; செஞ் சுடர்ப் படைக்
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; கல்லை வெல்லு மா
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; ஊழி காலம் வாழ்
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்;-மண்ணின்மீது அரோ. 76-2
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே,
மண்டி மூடி வாழ் அரக்கர்தாமும், வாகை வீரன்மேல்,
கொண்டல் ஏழும், ஊழிவாய், ஓர் குன்றில் மாரி பொழிவபோல்,
சண்ட வேகம் ஏறி, வாளி மழை சொரிந்து தாக்கினார். 83-1
தேரின்மீது அனந்த கோடி நிருதர், சீறு செம் முகக்
காரின்மீது அனந்த கோடி வஞ்சர், காவின் வாவு மாத்
தாரின்மீது அனந்த கோடி தறுகண் நீசர், தாழ்வு இலாப்
பாரின்மீது அனந்த கோடி பதகர், வந்து பற்றினார். 83-2
துடி, தவண்டை, சங்கு, பேரி, துந்துமிக் குலங்கள், கைத்
தடி, துவண்ட ஞாண், இரங்கு தக்கையோடு பம்பை, மற்று
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லியக் குழாம்
படி நடுங்கவே, பகைக் களத்தின் ஓசை விஞ்சவே. 83-3
இரைந்து அடர்ந்து அரக்கர் வெள்ளம், எண் இல் கோடி, இடைவிடாது
உருத்தல் கண்டு, இராகவன் புன்முறுவல் கொண்டு, ஒவ்வொருவருக்கு
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ,
சரத்தின் மாரி பெய்து, அரக்கர் தலை தரைக்கண் வீழ்த்தினான். 83-4
நுனித்திடத்திற்கு அருங் கடுப்பின் நொடிவரைக்குள் எங்குமாய்க்
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால்,
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா,
வினைத் திறத்து அரக்கர் விம்மிதத்தர் ஆய், விளம்புவார். 83-5
விண்ணின்மீது அனந்த கோடி வீரன் என்பர்; அல்ல இம்
மண்ணின்மீது அனந்த கோடி மனிதன் என்பர்; அல்ல வெங்
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர்; அல்ல உம்
எண்ணமீது அனந்த கோடி உண்டு, இராமன் என்பரால். 83-6
இத் திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப, நின்று
எத் திறத்தினும் விடாது, இராமன் எங்கும் எங்குமாய்,
அத் திறத்து அரக்கரோடும், ஆனை, தேர், பரிக் குலம்,
தத்துறச் சரத்தின் மாரியால் தடிந்து, வீழ்த்தினான். 83-7
இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து போகவும்,
படைவிடாது அரக்கர் ஆளிபோல் வளைந்து பற்றவும்,
கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும் வீதல்போல்,
தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர்மீது தூவினான். 83-8
இன்னவாறு இராமன் எய்து, சேனை வெள்ளம் யாவையும்,
சின்னபின்னமாக, நீறு செய்தல் கண்டு, திருகியே,
மின்னு வாள் அரக்கர் வெள்ளம், எண்ணில் கோடி, வெய்தினின்
துன்னி, மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார். 96-1
வானின்மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார்;
ஆனைமீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார்;
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார்,
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார். 96-2
அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெங் கணை கதுவி,
தொடர் போர் வய நிருதக் கடல் சுவறும்படி பருக,
படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும்
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார், புடை வளைந்தார். 101-1
கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை நெகிழ,
மேல் பொத்திய நிருதக் குலம் வேரோடு உடன் விளிய,
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய,
கால் பொத்திய கை ஒத்தன, காகுத்தன் வெங் கணையால். 102-1
அது போது அகல் வானில் மறைந்து, அரு மாயை செய் அரக்கர்,
எது போதினும் அழிவு அற்றவர், இருள் வான் உற மூடி,
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார்;
சது மா மறை அமலன் அவை தடிந்தான், தழற் படையால். 108-1
அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் பொறி சிதறி,
திமிலம்கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும்
பிமரம் கெட, அவர்தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய,
சமரம் புகும் அளவு இல்லவர்தமை வென்றது, ஓர் நொடியின். 108-2
காலாள் எனும் நிருதப் படை வெள்ளம் கடைகணித்தற்கு
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்;
பாலாழியின்மிசையே துயில் பரமன் சிலை பொழியும்
கோலால் அவர் குறைவுற்றனர்; குறையாதவர் கொதித்தார். 112-1
கொதித்தார் எழு கடல்போல் வளைவுற்றார்; கொடு முசலம்
குதித்து ஓடிய சிலை வாளிகள், கூர் வேல், கதை, குலிசம்,
விதைத்தார், பொரும் அமலன்மிசை வெய்தே; பல உயிரும்
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே, சரம் விதைத்தான். 112-2
கொள்ளை வெஞ் சமர் கோலும் இராக்கத
வெள்ளமும் குறைவுற்றது; மேடொடு
பள்ளம் இன்றிப் படும் குருதிக் கடல்
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால். 127-1
தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே,
மாய வஞ்சகர் மடிய, பிண மலை
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால்;
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே, 127-2
கடல் எரிக்க் கனற் படை கார்முகத்து -
இடை தொடுத்து, அதை ஏவி, இரும் பிணத்
திடல் அனைத்தையும் தீர்க்க எனச் செப்பினான்:
பொடி-படுத்தி இமைப்பில் புகுந்ததால். 127-3
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு
உண்டு எனற்கு அரிது என்? உளது இச் செயல்,
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால். 127-4
இற்றது ஆக இராக்கத வீரர்கள்
உற்று, ஓர் ஆயிர வெள்ளம் உடன்று, எதிர்
சுற்றினார், படை மாரி சொரிந்துளார்;
வெற்றி வீரனும் கை வில் வணக்கினான். 127-5
தலை அறுந்தவரும், தடத் திண் புய
மலை அறுந்தவரும், வயக் கையொடு
சிலை அறுந்தவரும், திமிரத்தின் மெய்ந்
நிலை அறுந்தவரும், அன்றி, நின்றது ஆர்? 127-6
தேர் அளப்பு இல பட்ட; சிறு கண் மாக்
கார் அளப்பு இல பட்ட; கடும் பரித்
தார் அளப்பு இல பட்ட; தடம் புயப்
பேர் அளப்பு இலர் பட்டனர், பீடு இலார். 127-7
வானகத்தோடு, மா நிலம், எண் திசை
ஆன திக்கு ஒரு பத்தும், அடுத்துறத்
தான் நெருக்கிய வஞ்சகர்தம் தலை,
போன திக்கு அறியாது, புரட்டினான். 127-8
சுடரும் வேல், கணை, தோமரம், சக்கரம்,
அடரும் மூஇலைச் சூலம், மற்று ஆதியாம்
படையின் மாரி பதகர் சொரிந்து, இடை
தொடர, வீரன் துணித்தனன் வாளியால். 127-9
ஏனமோடு, எண்கு, சீயம், எழு மத
யானை, ஆளி, புலி, என்று இவை முகம்
ஆன தீய அரக்கர் மடிந்திட,
வானவன் கணை மாரி வழங்கினான். 127-10
வடி சுடர்க் கணை மாற்ற, அங்கு ஆயிர
முடியுடைத் தலையோர் தலையும் முடிந்து
இடுவது இத் தலத்தே, இடி ஏற்றில் வான்
வட வரைச் சிகரங்கள் மறிவபோல். 127-11
இரதம், யானை, இவுளியொடு எண் இலா
நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட,
சரதம் அன்னை சொல் தாங்கி, தவத்து உறும்
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான். 127-12
கடு வைத்து ஆர் களன் கைப் படு கார்முகம்
ஒடியத் தாக்கும் ஒருவன் சிலையின்வாய்,
வடவைத் தீச் சொரி வாளியின் மா மழை
பட, மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால். 127-13
பால் ஒத்து ஆழியில் பாம்பு-அணைமேல் துயில்
சீலத்தான், இமையோர் செய் தவத்தினின்
ஞாலத்து ஆய இறைவன், இராவணன்
மூலத் தானை முடிய முருக்கினான். 127-14
ஈது அவர் சொல, கயிலை ஈசனும் நகைத்து, இமையவர்க்கும் ஒளி வான்
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணராப்
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது, பெருமான்
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றி விடுமோ? 149-1
பாறு தொடர் பகழி மாரி நிரைகள் பட,
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர,
வேறு படர அடர் விரவு சுடர் வளையம்
மாறுபட, உலகின் மலைகள் அளறுபட. 154-1
திரிய அலகு இல் மலை, திரிய இரு சுடர்கள்,
திரிய ஒருவன், எதிர் சின விலோடும் அடர
வரி கை ஒரு களிறு திரிய, விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் இடை திரிய. 163-1
கரிய திலத மலை திரிய, வளி சுடர்கள்
இரிய, ஒரு விலுடை இரு கை ஒரு களிறு
திரிய, விடு குயவர் திரிகை என உலகு
தெரிய, எழு கடலும் முழுதும் முறை திரிய. 164-1
ஆய வல் அரக்கர், மற்று அளவு இல்லாதவர்,
தீ எழும் விழியினர், சினம் கொள் சிந்தையர்,
காயம் வெம் படையினர், கடலின் பொங்கியே
மேயினர், தம்தமில் இவை விளம்புவார். 170-1
அன்றியும், ஒருவன், இங்கு அமரில், நம் படை
என்று உள கரி, பரி, இரதம், ஈறு இல் போர்
வென்றிடும் பதாதியர், அனந்த வெள்ளமும்
கொன்றனன், கொதித்து, ஒரு கடிகை ஏழினே. 171-1
இவ் உரை வன்னி அங்கு இயம்ப, ஈதுபோல்
செவ் உரை வேறு இலை என்று, தீயவர்
அவ் உரைக்கு அனைவரும் அமைந்து, அங்கு அண்ணலோடு
எவ் உரையும் விடுத்து, அமரின் ஏற்றுவார். 177-1
இன்னவர் ஐ-இரு கோடி என்று உள
மன்னவர் சதகமும் உடையவர்; மற்று அவர்
துன்னினர், மனத்து அனல் சுறுக் கொண்டு ஏறிட
உன்னினர், ஒருவருக்கு ஒருவர் ஓதுவார். 184-1
அடல் ஐ-இரு கோடி அரக்கர் எனும்
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார்;
கடை கண்டிலர், காய் கரி, தேர், பரி மாப்
படை கண்டிலர்; கண்டிலர், பட்ட திறம். 206-1
அங்கு அங்கு அவர்தம்மொடும் ஐயன் உயிர்க்கு
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு,
எங்கு எங்கும் இராமன் இராமன் எனா,
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால். 212-1
ஏயும் ஐ-இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை
ஆயிர வெள்ளம்தானும் அத் துணை வெள்ளம் ஆகி,
தூயவன் அவர்தம் சேனை தொலைத்தபின், இறைவர் ஆவி
போய் அறப் பகழி மாரி பொழிந்தனன், பொன்றி வீழ்ந்தான். 213-1
இட்டதோர் பேயரின் ஈர்-ஐயாயிரம்
பட்டபோது, ஆடும் ஓர் வடு குறைத்தலை
சுட்ட நூறாயிரம் கவந்தம் ஆடிடத்
தொட்டனன், சிலை அணி மணி துணிக்கென. 220-1
மாத்திரைப் போதினில், மணி தொனித்திட,
போர்த் தொழில் அரக்கர்மேல் பொருத பூசலில்,
ஏத்திடை இடைவிடாது, ஏழு நாழிகை
கீர்த்தியன் சிலை மணி கிணிகிணென்றதே. 220-2
மொய்த்தனர், நூறு வெள்ள முரண் படைத்தலைவர் கூட்டம்,
பத்து நூறு ஆய வெள்ளப் படையொடு மாயை பற்றி,
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி,
பத்து எனும் திசையும் மூடி, சொரிந்தனர் படையின் மாரி. 222-1
யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனைத்
தூசி வந்து, அண்ணல்தன்னைப் போக்கு அற வளைத்துச் சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலின், விண்ணோர் யாக்கை
கூசினர், பொடியர் என்றும் குமிழ்ந்தனர், ஓமக் கூடம். 222-2
முன்னவன் அதனை நோக்கி, முறுவலித்து, அவர்கள் ஏவும்
பல் நெடும் பருவ மாரிப் படை எலாம் பொடிபட்டு ஓட,
தன் நெடுஞ் சிலையின் மாரிதனக்கு எழு முகிலும் அஞ்சத்
துன்னுவித்து, அரக்கர் வெள்ளச் சேனையைத் தொலைத்தல் செய்தான். 222-3
கால வெங் கனலின் மாயக் கடும் படை சிலையில் பூட்டி,
மேலவன் விடுதலோடும், வெம் படை அரக்கர் வெள்ளம்
நாலும் மூ-இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி,
தாலமேல் படுத்து மீண்டது, அலன் சரம் தலைவர்த் தள்ளி. 222-4
முடிந்தது மூலத்தானை; மூவுலகு இருண்ட தீமை
விடிந்தது; மேலை வானோர் வெந் துயர் அவரினோடும்
பொடிந்தது; புனிதன் வாளி போக்கு உறப் பொய்யர் ஆவி
படிந்தது, ககனம் எங்கும்; பலித்தது, தருமம் அன்றே. 222-5
ஈது ஒரு விளையாட்டு; அன்பின், இத்துணை தாழ்த்தான், ஐயன்;
ஏது அவன் துணியின் இப்பால்? நீசர் ஓர் பொருளோ? இன்னும்
போதுமோ? புவன கோடி போதினும், கணத்தில் பொன்றிப்
போதும் என்று, அயனோடு ஈசன் அமரர்க்குப் புகன்று நின்றான். 222-6
சேனை அம் தலைவர், சேனை முழுவதும் அழிந்து சிந்த,
தான் எரி கனலின் பொங்கி, தரிப்பு இலர், கடலின் சூழ்ந்தே
வானகம் மறைய, தம் தம் படைக் கல மாரி பெய்தார்;
ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன், அமலன் அம்பால். 222-7
பகிரண்டப் பரப்பில் நின்ற பல பல கோடி வெள்ளத்
தொகை மண்டும் அரக்கர் யாரும் துஞ்சினர், கருவும் துஞ்ச;
செகம் உண்ட ஒருவன் செங் கைச் சிலையுறு மணியின் ஓசை
புக, அண்டம் முழுதும் பாலின் பிரை எனப் பொலிந்தது அன்றே. 225-1
நணியனாய்த் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர்
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த காலக்
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை; அக் கடிகைவாய் வில்
மணி ஒலி எழுப்ப, வானோர் வழுத்திட, வள்ளல் நின்றான். 225-2