MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    அமலனாதிபிரான் தனியன்கள்
    பெரிய நம்பிகள் அருளியது

    ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
    மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
    அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
    யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.

    திருமலை நம்பிகள் அருளியது

    காட்டவே கண்ட பாத
    கமலம்நல் லாடை யுந்தி,
    தேட்டரு முதர பந்தம்
    திருமார்பு கண்டம் செவ்வாய்,
    வாட்டமில் கண்கள் மேனி
    முனியேறித் தனிபு குந்து,
    பாட்டினால் கண்டு வாழும்
    பாணர்தாள் பரவி னோமே.

    திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்

    927:
    அமல னாதிபிரா னடியார்க்
    கென்னை யாட்படுத்த
    விமலன், விண்ணவர் கோன்விரை
    யார்பொழில் வேங்கடவன்,
    நிமலன் நின்மலன் நீதி வானவன்,
    நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
    கமல பாதம்வந் தென்கண்ணி
    னுள்ளன வொக்கின்றதே. (2) (1)

    928:
    உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற,
    நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,
    கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில்
    அரங்கத் தம்மான், அரைச்
    சிவந்த ஆடையின் மேல்சென்ற
    தாமென் சிந்தனையே. (2)

    929:
    மந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள்,
    சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்,
    அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல்
    அயனைப் படைத்த தோரெழில்
    உந்தி மேலதன் றோஅடி
    யேனுள்ளத் தின்னுயிரே. (2) (3)

    930:
    சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக்
    கிறைவன் தலைபத்து
    உதிர வோட்டி,ஓர் வெங்கணை
    யுய்த்தவ னோத வண்ணன்
    மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத்
    தம்மான்,திருவயிற்
    றுதரபந் தனமென்
    னுள்ளத்துள்நின் றுலாகின்றதே. (4)

    931:
    பாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன்
    வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
    யென்னுள் புகுந்தான்,
    கோர மாதவம் செய்தனன்கொ லறியே
    னரங்கத் தம்மான்,திரு
    வார மார்பதன் றோஅடி
    யேனை யாட்கோண்டதே. (5)

    932:
    துண்ட வெண்பிறை யான்துயர்
    தீர்த்தவன், அஞ்சிறைய
    வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன்
    அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம்
    எழுமால்வரை, முற்றும்
    உண்ட கண்டங்கண் டீரடி
    யேனை யுய்யக்கொண்டதே. (6)

    933:
    கையி னார்சுரி சங்கன லாழியர், நீள்வரைபோல்
    மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
    ஐயனார், அணியரங்கனா ரரவி
    னணைமிசை மேய மாயனார்,
    செய்யவா யையோ. என்னைச்
    சிந்தை கவர்ந்ததுவே. (7)

    934:
    பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட, அமரர்க்கு
    அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து,
    கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து
    செவ்வரி யோடி, நீண்டவப்
    பெரிய வாய கண்க
    ளென்னைப் பேதைமை செய்தனவே. (8)

    935:
    ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய்,
    ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான்,
    கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்
    முடிவில்ல தோரெழில்
    நீல மேனி யையோ.
    நிறை கொண்டதென் நெஞ்சினையே. (2) (9)

    936:
    கொண்டல் வண்ணனைக்
    கோவல னாய்வெண்ணெய்
    உண்ட வாயன்என்னுள்ளம் கவர்ந்தானை,
    அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
    கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே. (2) (10)

    திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்