MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    ஸ்ரீ:

    ஸ்ரீமதே ராமானுஜாய நம:
    பூதத்தாழ்வார் அருளிச்செய்த
    இரண்டாம் திருவந்தாதி

    தனியன்
    திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது
    நேரிசை வெண்பா

    என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
    அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
    சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
    பூதத்தார் பொன்னங்கழல்.

    2182:
    அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
    இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
    ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1

    2183:
    ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
    தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்
    தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்
    பணியமரர் கோமான் பரிசு? 2

    2184:
    பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
    புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்
    தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
    நல்லமரர் கோமான் நகர். 3

    2185:
    நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
    திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
    பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
    அங்கம்வலம் கொண்டான் அடி. 4

    2186:
    அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
    அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற
    நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
    ஆரோத வல்லார் அறிந்து? 5

    2187:
    அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
    செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்
    பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
    காரோத வண்ணன் கழல். 6

    2188:
    கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
    அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
    போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
    ஓராழி நெஞ்சே. உகந்து. 7

    2189:
    உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
    அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து
    முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
    அலைபண்பா லானமையால் அன்று. 8

    2190:
    அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
    நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று
    வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
    பெருமுறையா லெய்துமோ பேர்த்து? 9

    2191:
    பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
    காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய
    நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
    காவடியேன் பட்ட கடை. 10

    2192:
    கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
    இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
    நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
    ஆரோத வல்லார் அவர்? 11

    2193:
    அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
    எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்
    செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
    தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12

    2194:
    தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்
    படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க
    ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்
    பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13

    2195:
    பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்
    கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்
    பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
    தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14

    2196:
    திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
    பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்
    கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
    தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15

    2197:
    தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
    மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை
    ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
    மாரியார் பெய்கிற்பார் மற்று? 16

    2198:
    மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,
    சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்
    பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்
    குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17

    2199:
    கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
    ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்
    தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
    வான்கடந்தான் செய்த வழக்கு. 18

    2200:
    வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
    வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று
    தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
    பார்விளங்கச் செய்தாய் பழி. 19

    2201:
    பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
    வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி
    நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
    காரணங்கள் தாமுடையார் தாம். 20

    2202:
    தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்
    பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன்
    திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே
    அருநரகம் சேர்வ தரிது. 21

    2203:
    அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
    பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
    வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
    தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து? 22

    2204:
    தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
    வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த
    விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
    அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23

    2205:
    அவன்கண்டாய் நன்னெஞ்சே. ஆரருளும் கேடும்,
    அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்கண்டாய்
    காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,
    சீற்றத்தீ யாவானும் சென்று. 24

    2206:
    சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,
    கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்
    வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
    வாயோங்கு தொல்புகழான் வந்து. 25

    2207:
    வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்
    ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப்
    படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
    படியமரர் வாழும் பதி. 26

    2208:
    பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
    மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்
    கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
    மால்தேடி யோடும் மனம். 27

    2209:
    மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
    நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
    தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
    மாவாய் பிளந்த மகன். 28

    2210:
    மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
    அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்
    தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
    நீறாக எய்தழித்தாய் நீ. 29

    2211:
    நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
    நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று
    காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
    பேரோத மேனிப் பிரான். 30

    2212:
    பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
    குராநல் செழும்போது கொண்டு, - வராகத்
    தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
    மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31

    2213:
    மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
    மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த
    தழலாழி சங்க மவைபாடி யாடும்,
    தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32

    2214:
    துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
    அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்
    வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
    வாய்திறங்கள் சொல்லும் வகை. 33

    2215:
    வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
    புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த
    அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
    என்பாக்கி யத்தால் இனி. 34

    2216:
    இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
    இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று
    காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,
    சேமநீ ராகும் சிறிது. 35

    2217:
    சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
    அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை
    மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
    எண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36

    2218:
    இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
    திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்
    பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
    ஏதங்க ளெல்லா மெமக்கு. 37

    2219:
    எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
    தமக்கென்றும் சார்வ மறிந்து, - நமக்கென்றும்
    மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
    ஓதுவதே நாவினா லோத்து. 38

    2220:
    ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்
    ஏத்தும் திறமறிமி னேழைகாள், ஓத்தனை
    வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
    சொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39

    2221:
    சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
    நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த
    ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
    போகத்தா லில்லை பொருள். 40

    2222:
    பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
    அருளா லறமருளு மன்றே, - அருளாலே
    மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
    நீமறவேல் நெஞ்சே. நினை. 41

    2223:
    நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
    நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்
    பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,
    துறந்தார் தொழுதாரத் தோள். 42

    2224:
    தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
    தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,
    ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்
    சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? 43

    2225:
    சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
    மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
    மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
    ஓதுவதே நாவினா லுள்ளு. 44

    2226:
    உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
    தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய
    வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
    பாதத்தான் பாதம் பயின்று. 45

    2227:
    பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
    பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
    தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
    மணிதிகழும் வண்தடக்கை மால். 46

    2228:
    மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
    காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்
    அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
    உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47

    2229:
    உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
    மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்
    வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
    மாயிருஞ் சோலை மலை. 48

    2230:
    மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
    குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த
    நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
    அஞ்சாதென் னெஞ்சே. அழை. 49

    2231:
    அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
    பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய
    ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,
    மாயவனே என்று மதித்து. 50

    2232:
    மதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம்,
    மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, - மதிக்கண்டாய்
    பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
    நீராழி வண்ணன் நிறம். 51

    2233:
    நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,
    அறம்பெரிய னார தறிவார்? - மறம்புரிந்த
    வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,
    நீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52

    2234:
    நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,
    அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது
    பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,
    வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53

    2235:
    வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
    நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்
    றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்
    திளங்கோயில் கைவிடேல் என்று. 54

    2236:
    என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
    நின்று நினைப்பொழியா நீர்மையால், - வென்றி
    அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
    கடலாழி நீயருளிக் காண். 55

    2237:
    காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,
    நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக்
    கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,
    திருமாலை நாங்கள் திரு. 56

    2238:
    திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
    கருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால்
    ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
    நாற்றிசையும் கேட்டீரே நாம்? 57

    2239:
    நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து
    ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, - வேம்பின்
    பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,
    அருள்நீர்மை தந்த அருள். 58

    2240:
    அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
    பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்து
    நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,
    ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59

    2241:
    ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
    ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்
    ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
    நீதியால் மண்காப்பார் நின்று. 60

    2242:
    நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்
    சென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று
    கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
    பிரமாணித் தார்பெற்ற பேறு. 61

    2243:
    பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
    மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்
    பெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின் போய்,
    எருத்திருந்த நல்லாயர் ஏறு. 62

    2244:
    ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
    ஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி
    உண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
    கண்டபொருள் சொல்லின் கதை. 63

    2245:
    கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே,
    இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்
    திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,
    பருமொழியால் காணப் பணி. 64

    2246:
    பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
    அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன்
    புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
    இருந்தேத்தி வாழும் இது. 65

    2247:
    இது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது,
    இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்
    நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
    காரணமும் வல்லையேல் காண். 66

    2248:
    கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
    கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
    உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
    மறுநோய் செறுவான் வலி. 67

    2249:
    வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
    வலிமிக்க வாள்வரைமத் தாக, வலிமிக்க
    வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
    கோணாகம் கொம்பொசித்த கோ. 68

    2250:
    கோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே
    மாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும்
    செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,
    தண்கமல மேய்ந்தார் தமர். 69

    2251:
    தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
    தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
    மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
    ஏவல்ல எந்தைக் கிடம். 70

    2252:
    இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்
    றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்
    தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,
    பூவா ரடிநிமிர்ந்த போது. 71

    2253:
    போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த
    போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது
    மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,
    அணிவேங் கடவன்பே ராய்ந்து. 72

    2254:
    ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
    வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த
    பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
    இறைக்காட் படத்துணிந்த யான். 73

    2255:
    யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
    யானே தவமுடையேன் எம்பெருமான், - யானே
    இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
    பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74

    2256:
    பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,
    இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
    தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,
    வான்கலந்த வண்ணன் வரை. 75

    2257:
    வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,
    விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு
    ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
    ஓதிப் பணிவ தூறும். 76

    2258:
    உறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம்,
    உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய்
    ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்_ றெப்பொழுதும்,
    சாற்றி யுரைத்தல் தவம். 77

    2259:
    தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி
    நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன்
    கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்
    பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78

    2260:
    பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்
    முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற
    தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த
    நீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79

    2261:
    நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,
    ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த
    அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்
    படிக்கோலம் கண்ட பகல்? 80

    2262:
    பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்
    மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்
    ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
    வான்திகழும் சோதி வடிவு. 81

    2263:
    வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
    படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி
    ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
    கோலத்தா லில்லை குறை. 82

    2264:
    குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
    மறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும்
    ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
    மாயன்கண் சென்ற வரம். 83

    2265:
    வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
    உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த
    சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,
    அங்கண்மா ஞாலத் தமுது. 84

    2266:
    அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
    அமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன
    சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
    நன்மாலை யேத்தி நவின்று. 85

    2267:
    நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
    பயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்
    மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
    எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? 86

    2268:
    இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்
    சென்றாங் களந்த திருவடியை, - அன்று
    கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,
    திருக்கோட்டி எந்தை திறம். 87

    2269:
    திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
    திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்
    செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
    கடிநகர வாசற் கதவு. 88

    2270:
    கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
    அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்
    பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
    மாணியாய்க் கொண்டிலையே மண். 89

    2271:
    மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
    விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித்
    திருமாலை செங்க ணெடியானை, எங்கள்
    பெருமானைக் கைதொழுத பின். 90

    2272:
    பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,
    முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்
    அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்
    அளந்தா னவஞ்சே வடி. 91

    2273:
    அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்
    படியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன்
    நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும்
    காமமே காட்டும் கடிது. 92

    2274:
    கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,
    கொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம்
    கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்
    சுண்டானை ஏத்துமினோ உற்று. 93

    2275:
    உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
    முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்
    பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
    இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. 94

    2276:
    என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
    வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்
    ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
    ஆழியான் அத்தியூ ரான். 95

    2277:
    அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
    துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ
    மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
    இறையாவான் எங்கள் பிரான். (2) 96

    2278:
    எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
    செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு
    படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
    குடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97

    2279:
    கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,
    உண்ட துலகேழு முள்ளொடுங்க, - கொண்டு
    குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்
    இடமாகக் கொண்ட இறை. 98

    2280:
    இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்
    முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல
    சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்
    மாவடிவில் மண்கொண்டான் மால். (2) 99

    2281:
    மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு
    மேலா. வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்
    விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்
    அளவன்றால் யானுடைய அன்பு. (2) 100

    பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்