திருவாய் மொழி பத்தாம் பத்து
3783
தாள தாமரைத் தடமணி வயல் திரு மோகூர்
நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்
காள மேகத்தை யன் றிமற் றொன் றிலம் கதியே. (2) 10.1.1
3784
இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்
அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்
நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. 10.1.2
3785
அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்
நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. 10.1.3
3786
இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி
சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்
இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர். வம்மினே. 10.1.4
3787
தொண்டீர். வம்மின்நம் சுடரொளி யொருதனி முதல்வன்
அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்
எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே. 10.1.5
3888
கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கடகும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்
ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே. 10.1.6
3789
மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா
சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா
முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்
சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ. 10.1.7
3790
துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே. 10.1.8
3791
மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்
அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்
துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே. 10.1.9
3792
நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்
தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்
காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்
நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள். 10.1.10.
3793
ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு
கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்
வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே. (2) 10.1.11
3794
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. (2) 10.2.1
3795
இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. 10.2.2
3796
ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. 10.2.3
3797
பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. 10.2.4
3798
புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். 10.2.5
3799
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. 10.2.6
3800
துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. 10.2.7
3801
கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம். 10.2.8
3802
நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. 10.2.9
3803
மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. 10.2.10.
3804
அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (2) 10.2.11
3805
வேய்மரு தோளிணை மெலியு மாலோ.
மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவு மாலோ.
கணமயில் அவைகலந்தாலு மாலோ
ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு
ஒருபக லாயிர மூழி யாலோ
தாமரைக் கண்கள்கொண் டீர்தி யாலோ.
தகவிலை தகவிலையே நீ கண்ணா. (2) 10.3.1
3806
தகவிலை தகவிலை யேநீ கண்ணா.
தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா
சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே
அகவுயிர் அகமதந்தோறும் உள்புக்
காவியின் பரமல்ல வேட்கை யந்தோ
மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால்
வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. 10.3.2
3807
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு
வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்
யாவரும் துணையில்லை யானி ருந்துன்
அஞ்சன மேனியை யாட்டம் காணேன்
போவதன் றொருபகல் நீய கன்றால்
பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா
சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப்
பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே. 10.3.3
3808
தொழுத்தையோம் தனிமையும் துணைபி ரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந் தா நின்
தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித்
துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம்
பாவியேன் மனமகந் தோறு முள்புக்
கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினை தொறும் ஆவி வேமால். 10.3.4
3809
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்
பெருமத மாலையும் வந்தின் றாலோ
மணிமிகு மார்வினில் முல்லைப் போதென்
வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து
அணிமிகு தாமரைக் கையை யந்தோ.
அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய். 10.3.5
3810
அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்
ஆழியங் கண்ணா. உன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை மாரும்
பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்
வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா
மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே
வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே. 10.3.6
3811
வேமெம துயிரழல் மெழுகில் உக்கு
வெள்வளை மேகலை கழன்று வீழ
தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்
தூணைமுலை பயந்து என தோள்கள் வாட
மாமணி வண்ணா உன்செங்கமல
வண்ணமென் மலரடி நோவ நீபோய்
ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 10.3.7
3812
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று
ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்க லந்து
கலவியும் நலியுமென் கைகழி யேல்
வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ
உகக்குநல் லவரொடும் உழித ராயே. 10.3.8
3813
உகக்குநல் லவரொடும் உழிதந் துன்றன்
திருவுள்ளம் இடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம்
எம்பெரு மான். பசு மேய்க்கப் போகேல்
மிதப்பல அசுரர்கள் வேண்டும் உருவங்
கொண்டுநின் றுழிதருவர் கஞ்ச னேவ
அகப்படில் அவரொடும் நின்னொ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ. 10.3.9
3814
அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ.
அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்
தவத்தவர் மறுக நின்றுழி தருவர்
தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்
உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று
ஊடுற வென்னுடை யாவிவேமால்
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே. 10.3.10.
3815
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு
அத்திருவடி திருவடி மேல் பொ ருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்
மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை
அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்
அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான்
உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே. (2) 10.3.11
3816
சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே. (2) 10.4.1
3817
பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்
இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே. 10.4.2
3818
ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம்,
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன் கேள்வன்,
தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே. 10.4.3
3819
தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே. 10.4.4
3820
நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே. 10.4.5
3821
நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத் திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே. 10.4.6
3822
பணிநெஞ்சே. நாளும் பரம பரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே. 10.4.7
3823
ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியா னூழி படைத்தான் நிரைமேய்த்தான்
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்
வாழியென் நெஞ்சே. மறவாது வாழ்கண்டாய். 10.4.8
3824
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையா யினவெல்லாம்
தொண்டேசெய் தென்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே. 10.4.9
3825
வகையால் மனமொன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்
திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே. 10.4.10.
3826
பற்றென்று பற்றிப் பரம பரமபரனை
மற்றிண்டோ ள் மாலை வழுதி வளநாடன்
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே. (2) 10.4.11
பத்து வகை பத்தியும் பிரபத்தியும்
3827
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே. (2) 10.5.1
3828
நாரணன் எம்மான்
பாரணங்காளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே. 10.5.2
3829
தானே உலகெலாம்
தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து
தானே யாள்வானே. 10.5.3
3830
ஆள்வான் ஆழிநீர்
கோள்வாய அரவணையான்
தாள்வாய் மலரிட்டு
நாள்வாய் நாடீரே. 10.5.4
3831
நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம்
வீடே பெறலாமே. 10.5.5
3832
மேயான் வேங்கடம்
காயா மலர்வண்ணன்
பேயார் முலையுண்ட
வாயான் மாதவனே. (2) 10.5.6
3833
மாதவன் என்றென்று
ஓத வல்லீரேல்
தீதொன்று மடையா
ஏதம் சாராவே. 10.5.7
3834
சாரா ஏதங்கள்
நீரார் முகில்வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே. 10.5.8
3835
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே. 10.5.9
3836
வினைவல் இருளென்னும்
முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலரிட்டு
நினைமின் நெடியானே. 10.5.10.
3837
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து
அடியார்க்கு அருள் பேறே. (2) 10.5.11
3838
அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே. வாட்டாற்றான் அடிவணங்கே. (2) 10.6.1
3839
வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே. கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. 10.6.2
3840
நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே. 10.6.3
3841
என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே. நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. 10.6.4
3842
வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறுகின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. 10.6.5
3843
தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித்தான் குரைகழல்தள் குறுகினமே. 10.6.6
3844
குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. 10.6.7
3845
மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? 10.6.8
3846
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. 10.6.9
3847
பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. 10.6.10.
3848
காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (2) 10.6.11
3849
செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட்
செய்மின் திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சு முயிரும் அவைடுண்டு
தானே யாகி நிறைந்தானே. (2) 10.7.1
3850
தானே யாகி நிறைந்தெல்லா
உலகும் உயிரும் தானேயாய்
தானே யானென் பானாகித்
தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே. 10.7.2
3851
என்னை முற்றும் உயிருண்டென்
மாய ஆக்கை யிதனுள்புக்கு
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
திசைகை கூப்பிச் தேர்ந்தயான்
இன்னம் போவே னேகொலோ.
எங்கொல் அம்மான் திருவருளே? 10.7.3
3852
என்கொல் அம்மான் திருவருள்கள்?
உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் னுடலம் கைவிடான்
ஞாலத் தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய்
நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான்
நண்ணா அசுரர் நலியவே. 10.7.4
3853
நண்ணா அசுரர் நலிவெய்த
நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணா தனகள் எண்ணும்நன்
முனிவ ரின்பம் தலைசிறப்ப
பண்ணார் பாடல் இன்கவிகள்
யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம்மான்
திருமாலிருஞ்சோலையானே. 10.7.5
3854
திருமாலிருஞ்சோலையானே
ஆகிச் செழுமூ வுலகும் தன்
ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து
ஊழி யூழி தலையளிக்கும்
திருமாலென்னை யாளுமால்
சிவனும் பிரமனும்காணாது
அருமா லெய்தி யடிபரவ
அருளை யீந்த அம்மானே. 10.7.6
3855
அருளை ஈயென் அம்மானே.
என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும்
தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும்
ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை
திருமாலிருஞ்சோலைமலையே. 10.7.7
3856
திருமாலிருஞ்சோலைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால்வைகுந்தமே தண்
திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என்
ஊழி முதல்வன் ஒருவனே. (2) 10.7.8
3857
ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே. 10.7.9
3858
மங்க வொட்டுன் மாமாயை
திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ
யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி
மானாங்கார மனங்களே. 10.7.10.
3859
மானாங்கார மனம்கெட
ஐவர் வன்கை யர்மங்க
தானாங்கார மாய்ப்புக்குத்
தானே தானே யானானை
தேனாங் காரப் பொழில்குருகூர்ச்
சடகோபன்சொல்லாயிரத்துள்
மானாங்காரத்திவைபத்தும்
திருமாலிருங்சோலைமலைக்கே. (2) 10.7.11
3860
திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன
திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே. (2) 10.8.1
3861
பேரே யுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேனென் றென்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையே ழுலகுண்டும்
ஆராவ யிற்றானை யடங்கப் பிடித்தேனே. 10.8.2
3862
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்
மடித்தேன் மனைவாழ்க்கை யுள்நிற்பதோர் மாயையை
கொடிக்கோ புரமாடங்கள் சூழ்திருப் பேரான்
அடிச்சேர்வதெனெனக்கெளி தாயின வாறே. 10.8.3
3863
எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான்
தெளிதா கியசேண் விசும்புதரு வானே. 10.8.4
3864
வானே தருவா னெனக்காயென் னோடொட்டி
ஊனேய் குரம்பை யிதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே பொழில்தென் திருப்பேர் நகரானே. 10.8.5
3865
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து
இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்றமுத முண்டு களித்தேனே. 10.8.6
3866
உண்டு களித்தேற் கும்பரென் குறை மேலைத்
தொண்டு களித்தந்தி தொழும்சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில்சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள்நின் றகலானே. 10.8.7
3867
கண்ணுள்நின் றகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில்நுண் பொருளே ழிசையின் சுவைதானே
வண்ணநன் மணிமாடங்கள் சூழ்திருப் பேரான்
திண்ணமென் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றெ. 10.8.8
3868
இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென் னுள்வைத் தான்
அன்றென்னைப் புறம்பொகப் புணர்த்ததென் செய்வான்?
குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான்
ஒன்றெனக் கருள்செய்ய வுணர்த்தலுற் றேனே. 10.8.9
3869
உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்
பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்
கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே. (2) 10.8.10.
3870
நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழா யிரத்துள் இவைபத்தும்
வல்லார் தொண்டராள் வதுசூழ்பொன் விசும்பே. (2) 10.8.11
3871
சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின
ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்
வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே. (2) 10.9.1
3872
நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில்
நீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே. 10.9.2
3873
தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே
எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே. 10.9.3
3874
எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்
அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த
மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே. 10.9.4
3875
மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே. 10.9.5
3876
வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. 10.9.6
3877
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி
குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே. 10.9.7
3878
குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே. 10.9.8
3879
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே. 10.9.9
3880
விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்
மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே. 10.9.10.
3881
வந்தவர் எதிர்கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல்
சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே. 10.9.11
3882
முனியே. நான்முக னே.முக்கண்
ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு
மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை
மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும்
மாயம் செய்யேல் என்னையே. (2) 10.10.1
3883
மாயம்செய் யேலென்னை உன்திரு
மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை
நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக்
கூவிச்கொள் ளாய்வந்தந்தோ. 10.10.2
3884
கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என்
பொல்லாக்கரு மாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால்
அறிகின்றி லேன்யான்
மேவித் தொழும்பிரமன் சிவன்
இந்திர னாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே.
உம்பர் அந்ததுவே. 10.10.3
3885
உம்ப ரந்தண் பாழேயோ.
அதனுள்மிசை நீயேயோ
அம்பர நற்சோதி. அதனுள்
பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த
முனிவன் அவன்நீ
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப்
போரவிட் டிட்டாயே. 10.10.4
3886
போரவிட் டிட்டென்னை நீபுறம்
போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ.
எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது
போலவென் ஆருயிரை
ஆரப் பருக,எனக்கு
ஆராவமுதானாயே. 10.10.5
3887
எனக்கா ராவமு தாயென
தாவியை இன்னுயிரை
மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா
யினியுண் டொழியாய்
புனக்கா யாநிறத்த புண்டரீ
கக்கட்f செங்கனிவாய்
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக்
கன்பா.என் அன்பேயோ. 10.10.6
3888
கோல மலர்ப்பாவைக் கன்பா
கியவென் அன்பேயோ
நீல வரையிரண்டு பிறைகவ்வி
நிமிர்ந்த தொப்ப
கோல வராகமொன் றாய்நிலங்
கோட்டிடைக் கொண்டேந்தாய்
நீலக் கடல்கடைந் தாயுன்னைப்
பெற்றினிப் போக்குவனோ? (2) 10.10.7
3889
பெற்றினிப் போக்குவனோ உன்னை
என் தனிப் பேருயிரை
உற்ற இருவினையாய் உயிராய்ப்
பயனாய் அவையாய்
முற்றவிம் மூவுலகும் பெருந்
தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்தொளித் தாய்.என்
முதல்தனி னித்தேயோ. 10.10.8
3890
முதல்தனி வித்தேயோ. முழுமூ
வுலகாதிக் கெல்லாம்
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள்
வந்து கூடுவன்நான்
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற்
றுறுவாழ் பாழாய்
முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த
முடிவி லீயோ. 10.10.9
3891
சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில்
பெரும்பா ழேயோ
சூழ்ந்தத னில்பெரிய பரநன்
மலர்ச்சோ தீயோ
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான
வின்ப மேயோ
சூழ்ந்தத னில்பெரிய என்னவா
அறச்சூழ்ந் தாயே. (2) 10.10.10.
3892
அவாவறச் சூழரியை அயனை
அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்
சடகோபன் சொன்ன
அவாவிலந் தாதிகளால் இவையா
யிரமும் முடிந்த
அவாவிலந் தாதியிப் பத்தறிந்
தார்பிறந் தாருயர்ந்தே. (2) 10.10.11
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
திருவாய்மொழி நிறைவுற்றது.