2.2 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 2 (பாசுரங்கள் 13- 22)
13. எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே. 1
14. நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே. 2
15. புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே. 3
16. செத்த பிணத்தைத் தௌியா தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே. 4
17. முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி இடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே. 5
18. வாளைக் கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக்கணங்கள் குழலோ டியம்பக் குழகன் ஆடுமே. 10
19. நொந்திக்கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே. 10
20. வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள்
ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டின்
மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே. 10
21. கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஏமப் புகையும் எழுந்த பெருங்காட்டிற்
கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே. 10
22. குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே. 10
23. சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில் ஆர்த்த டிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே. 10
திருச்சிற்றம்பலம்