4.2 சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த
திருவாரூர் மும்மணிக் கோவை
270. அகவல்
விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்டு
இலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக் (5)
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக் (10)
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை என்னுங் குவட்டிடை இழிதரப் (15)
பொங்குபுனல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆருர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே. (20) 1
271. மனமால் உறாதே மற்றென்செய் யும்வாய்ந்த
கனமால் விடையுடையோன் கண்டத் - தினமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்
கான்றனநீர் எந்திழையாள் கண். < 2
272. கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனஇருண்ட
விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயி லால்மட மான்அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே. 3
273. உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு (5)
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலும் கோபமோடு
அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமேல் அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக் (10)
கங்குலும் பகலும் காவில் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்று
உலவா நல்வரம் அருளிய உத்தமன் (15)
அந்தண் ஆருர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே. 4
274. வெண்பா
துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார் 5 6
275. கட்டளைக் கலித்துறை
காரும் முழக்கொடு மின்னொடு வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப் புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆருர் அனைய அணங்கினுக்கே. 6
276. அகவல்
அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதிற் புரிகுழல் (5)
வானர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காதல் ஆகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து (10)
அல்லியங் கோதை அழலுற் றாஅங்கு
எல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ணல் ஆருர்
வளமலி கமல வாள்முகத்து (15)
இளமயிற் சாயல் ஏந்திழை தானே. 7
277. வெண்பா
இழையார் வனமுலை ஈர்ந்தண் புனத்தில்
உழையாகப் போந்ததொன் றுண்டே - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆருர்க்கோன் அன்றுரித்த
கைம்மானேர் அன்ன களிறு. 8
278. கட்டளைக் கலித்துறை
களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையா
வௌிறு விரவ வருதிகண் டாய்விண்ணின் நின்றிழிந்த
பிளிறு குரற்கங்கை தாங்கிய பிஞ்சகன் பூங்கழல்மாட்
டொளிறு மணிக்கொடும் பூண்இமை யோர்செல்லும் ஓங்கிருளே. 9
279. அகவல்
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்ளறி கொடுமை உரைப்ப போன்றன (5)
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றிஃது (10)
அன்னதும் அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆருர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரற்
சுரும்பிவர் நறும்போது கொய்யப் (15)
பெருஞ்செறி வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே. 10
280 பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்கி
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போலொருவன் வந்து. 11
281. வந்தார் எதிர்சென்று நின்றேன் கிடந்தவண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில் லேன்தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா வனஞ்சூழ் குளிர்புனத்தே. 12
282. அகவல்
புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதல னாக
விடுசுடர் நடுவுநின் றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து (5)
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்வித் தாகி
முள்ளிலை ஈந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப் (10)
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன் (15)
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே. 13
283. கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தா ளாக- பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ஆரூர் சூழ்ந்த தடம். 14
284. தடப்பாற் புனற்சடைச் சங்கரன் தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச் சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியில் வெருவும் இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனவல்ல வால்தமி யேன்தையல் பட்டனவே. 15
285. பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரம்முரம் பதரும் அல்லது படுமழை
வரன்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேனிவர் கோதை செல்ல மானினம் (5)
அஞ்சில் ஓதி நோக்கிற் கழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமும் செலவுடன் படுக
மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற 1(0)
குன்ற வேய்களும் கூற்றடைத் தொழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆருர் அமர்ந்துறை அமுதன் (15)
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி ஆயின குரவே. 16
286. குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் தன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது. 17
287. கடிமலர்க் கொன்றையுந் திங்களுஞ் செங்கண் அரவும்அங்கே
முடிமல ராக்கிய முக்கண்நக் கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன் அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ கடந்ததெம் அம்மனையே. 18
288. அகவல்
மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும் (5)
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுன லூரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதிற் கரந்து (10)
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மி லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதி முர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆருர் ஆவணத் (15)
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அணைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே. 19
289. வெண்பா
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே
ஏலாஇங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய
தேந்தன் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய். 20
290 பொய்யால் தொழினும் அருளும் இறைகண்டம் போலிருண்ட
மையார் தடங்கண் மடந்தையர் கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்லல்நில் புல்லல் கலைஅளையல்
ஐயா இவைநன்கு கற்றாய் பெரிதும் அழகியதே. 21
291. அகவல்
அழகுடைக் கிங்கணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்து
ஒருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்து
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி (5)
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை (10)
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத் (15)
தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செம்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே. 22
292. வெண்பா
நீயிருந்திங் கென்போது நெஞ்சமே நீள்இருட்கண்
ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீஅரங்கத்
தைவாய் அரவசைத்தான் நன்பணைத் தோட் கன்பமைத்த
செய்வான்நல் ஊரன் திறம். 23
293. கட்டளைக் கலித்துறை
திறமலி சின்மொழிச் செந்துவர் வாயினர் எங்கையர்க்கே
மறமலி வேலோன் அருளுக வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத் துத்தமி யேஎழினும்
நறைமலி தாமரை தன்னதென் றேசொல்லும் நற்கயமே. 24
294. அகவல்
கயங்கெழு கருங்கடல் முதுகு தெருவுபட
இயங்குதிமில் கடவி எறியொளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க் (5)
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி
விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித் (10)
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்கும் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும் (15)
அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேரலர் சிறந்தது சிறுநல் லூரே. 25
295. ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்தப் பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள். 26
296 புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கி
நள்ளென்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத் தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண் தேர்வந் துலாத் தருமே. 27
297 உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்து
புலால்நீர் ஓழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல் (5)
வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்து (10)
இடாஅ ஆயமோ டுண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற் கருளுதி யோவென
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் எண்ணெய்ச் சிறுநுண் துள்ளி (15)
பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்கம் எல்லாந் தானா யினளே. 28
298 ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பாரோம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆருர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து. 29
299 தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை போலயர் வேற் கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே. 30
திருச்சிற்றம்பலம்