MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.3 கபிலதேவ நாயனார் அருளிச் செய்த
    சிவபெருமான் திருவந்தாதி
    572. 572. (வெண்பா)
    ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
    தொன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்
    மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
    மதியான் இடப்பக்கம் மால். 1
    573 மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
    மாலை ஒருபால் முடியானை - மாலை
    ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
    கொளியானை ஏத்தி உளம். 2
    574 உளமால்கொண் டோடி ஒழியாது யாமும்
    உளமாகில் ஏத்தவா றுண்டே - உளம்மாசற்
    றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
    அங்கமல வண்ணன் அடி. 3
    575 அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
    அடியால் அருவாகச் செற்றான் - அடியார்தம்
    அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
    அந்தரத்தார் சூடும் அலர். 4
    576 அலராளுங் கொன்றை அணியலா ரூரற்
    கலராகி யானும் அணிவன் - அலராகி
    ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவான்யான் ஓங்கொலிநீர்
    ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர். 5
    577 ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
    ஊரும் விடையொன் றுடைதோலே - ஊரும்
    படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
    படநாகம் அட்டார் பரிசு. 6
    578 பரியானை ஊராது பைங்கணே றூரும்
    பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக்
    கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
    கட்டங்கம் ஏந்தியாக் கண்டு. 7
    579 கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
    கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள்
    பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
    பாடியாக் கொண்ட பதி. 8
    580 பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
    பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
    அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
    அம்மானார் கையார் அறம். 9
    581 அறமானம் நோக்கா தநங்கனையும் செற்றங்
    கறமாநஞ் சுண்ட அமுதன் - அறமான
    ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
    ஓதியான் தோற்றேன் ஒளி. 10
    582 ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற்
    கொளியான் உலகெல்லாம் ஏத்தற் - கொளியாய
    கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
    கள்ளேற்றான் கொன்றை கடிது. 11
    583 கடியரவர் அக்கர் கரிதாடு கோயில்
    கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர்
    ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
    ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம். 12
    584 யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
    யாமானங் கொண்டங் கலர்தந்தார் - யாமாவா
    ஆவூரா ஊரும் அழகா அனலாடி
    ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம். 13
    585 யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
    யானென்றங் கையறிவும் குன்றுவித்து - யானென்றங்
    கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
    ஆர்த்தானேல் உய்வ தரிது. 14
    586 அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான்
    அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்
    வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
    வேங்கடத்து நோயால் வியந்து. 15
    587 வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
    வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாய
    கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
    கண்ணுதலாம் நம்பாற் கடன். 16
    588 கடனாகம் ஊராத காரணமுங் கங்கை
    கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
    பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
    பாரிடந்தான் மேயாய் பணி. 17
    589 பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
    பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
    ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோ
    னாகத்தான் செய்யும் அரன். 18
    590 அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
    அரன்காயும் அந்தியும்மற் றந்தோ - அரங்காய
    வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
    வெள்ளில்போன் றுள்ளம் வெறிது. 19
    591 வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
    வெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம்
    அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆருர்க்கோன்
    அல்லனோ நெஞ்சே அயன். 20
    592 அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள தாடை
    அயமாவ தானேறூர் ஆரூர் - அயமாய
    என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
    என்னக்கன் றாழும் இவள். 21
    593 ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென்
    றாழும் இவளை அயராதே - ஆழும்
    சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
    சலமுடியா தின்றருளுன் தார். 22
    594 தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
    தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல்
    ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
    ஆனையும் வானோர்க் கரசு. 23
    595 அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
    அரசுமாம் அங்கொன்று மாலுக் - கரசுமான்
    ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கின்பன்
    ஊர்தி எரித்தான் உறா. 24
    596 உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்
    துறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
    காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்
    காவாலி தாநின் கலை. 25
    597 கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
    கலைசேர் நுதலீர்நாண் காமின் - கலையாய
    பான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
    பான்மதியன் போந்தான் பலிக்கு. 26
    598 பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கன் சூழப்
    பலிக்கு மனைப்புகுந்து பாவாய் - பலிக்குநீ
    ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
    ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து. 27
    599 ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி
    ஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
    தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
    தீங்குழலும் என்னையே தேர்ந்து. 28
    600 தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்
    தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே
    கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
    கூடற்கா வாலிதரக் கூர். 29
    601 கூரால மேயாக் குருகோடு நைவேற்குக்
    கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
    பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
    பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து. 30
    602 பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
    பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலனற்
    கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
    கொன்றாய் இதுவோ குணம். 31
    603 குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
    குணக்கோடி குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித்
    தேரிரவில் வாரான் சிவற் காளாஞ் சிந்தனையே
    தேரிரவில் வாழும் திறம். 32
    604 திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
    திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின்
    ஊரரவம் ஆர்த்தானோ டென்னை உடன்கூட்டின்
    ஊரரவஞ் சால உடைத்து. 33
    605 உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
    உடையாடை தோல்பொடிசந் தென்னை - உடையானை
    உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
    உன்மத் தகமுடிமேல் உய். 34
    606 உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
    உய்யா துடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம்
    இறையானே ஈசனே எம்மானே நின்னை
    இறையானும் காண்கிடாய் இன்று. 35
    607 இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
    இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம்
    காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான்
    காட்டான்அஞ் சேற்றான் கலந்து. 36
    608 கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் வின்மேரு என்னும்
    கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை - கலம்பிரியா
    மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
    மாக்கடனஞ் சேரும் வகை. 37
    609 கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
    கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறு
    மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
    மற்றிரண்ட தோளான் மனை. 38
    610 மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
    மனையா சறச்செற்ற வானோன் - மனையாய
    என்பாவாய் என்றேனுக் கியானல்லேன் நீதிருவே
    என்பாவாய் என்றான் இறை. 39
    611 இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
    இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய்
    மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
    மறைக்காட்டாய் என்னும்இம் மாது. 40
    612 மாதரங்கந் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
    மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்
    தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
    தேரானை யூரானைத் தேர். 41
    613 தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
    அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில்
    செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச்
    செல்லும்எழில் நெஞ்சே தௌி. 42
    614 தௌியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
    தௌியாதார் தீநெறிக்கட் செல்வர் - தௌியாய
    பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
    பூவாய வாசம் புனைந்து. 43
    615 புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
    புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து
    நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
    நட்டங்க மாட்டினேன் நக்கு. 44
    616 நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
    நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையாம்
    வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
    வண்டாழங் கொண்டான் மதி. 45
    617 மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
    மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே
    மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
    மாதெய்வம் கொண்ட வனப்பு. 46
    618 வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
    வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற்
    கடற்றிரையு மீருமிக் கங்குல்வா யான்கட்
    கடற்றிரையு மீருங் கனன்று. 47
    619 கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
    கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர்
    உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளா
    உடம்பட்ட நாட்டன் உரு. 48
    620 உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
    உருவியலுஞ் சூலம் உடையன் - உருவியலும்
    மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
    மாலேற்றாற் கீதோ வடிவு. 49
    621 வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
    வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல்
    முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார்
    முக்கூட மாட்டா முலை. 50
    622 முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
    முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் -முலைநலஞ்சேர்
    மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
    மாதேவா சோரல் வளை. 51
    623 வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
    வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழி
    வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
    வன்னஞ்சக் கண்டன் வரில். 52
    624 வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
    வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
    இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
    இடுமணல்மேல் ஈசன் எமக்கு. 53
    625 அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்
    தக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு -வக்காரம்
    பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
    பண்டரங்கன் எங்கள் பவன். 54
    626 பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
    பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் -பவனஞ்சேர்
    காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
    காலங்கை ஏந்தினான் காண். 55
    627 காணங்கை இன்மை கருதிக் கவலாதே
    காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே - காணங்கை
    பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
    பாவனையாய் நின்ற பதம். 56
    628 பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
    பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
    அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
    தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு. 57
    629 ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
    ஆக்கூர் அலர்தான் அழகிதா - ஆக்கூர்
    மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு
    மறையோம்பு மாதவர்க்காய் வந்து. 58
    630 வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே
    வந்தியா உள்ளத்து வைத்திராய் -வந்தியாய்
    நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
    நம்பரனை நாள்தோறும் நட்டு. 59
    631 நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
    நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
    டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
    ஈயானேல் உய்வ திலம். 60
    632 இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே
    இலமலரே ஆயினும் ஆக - இலமலரும்
    ஆம்பல்சேர் செவ்வாயார்க் காடாதே ஆடினேன்
    ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள். 61
    633 ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்
    ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய்
    நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
    நாடகங்கள் ஆடி நயந்து. 62
    634 நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
    நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்
    அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
    அம்பகலம் பாயும் அலர்ந்து. 63
    635 அலங்காரம் ஆடரவம் என்பதோல் ஆடை
    அலங்கார வண்ணற் கழகார் - அலங்காரம்
    மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
    மெய்காட்டும் வீடாம் விரைந்து. 64
    636 விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்
    விரையார் பொழிலுறந்தை மேயான் - விரையாநீ
    றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
    என்பணிந்தான் ஈசன் எனக்கு. 65
    637 எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்
    எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக்
    கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்
    கண்டத்தான் நெஞ்சேகாக் கை. 66
    638 காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதே
    காக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் - காக்கைவளை
    ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
    ஆடானை யான தமைவு. 67
    639 அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்
    கமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும்
    சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
    சாமத்தன் இந்நோய்செய் தான். 68
    640 தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
    தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத்
    தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
    அரையன் உடையான் அருள். 69
    641 அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
    அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால்
    ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
    ஓராழி நெஞ்சே உவ. 70
    642 உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி
    உவவா மனமகிழும் வேட்கை - உவவா
    றெழுமதிபோல் வான்முகத் தீசனார்க் கென்னே
    எழுமதிபோல் ஈசன் இடம். 71
    643 இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
    இடமால் வலமானஞ் சேர்த்தி -இடமாய
    மூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
    மூவா மதியான் முனி. 72
    644 முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்
    முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால்
    போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
    போற்றாநாள் இன்று புலர்ந்து. 73
    645 புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
    புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாய
    மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
    மண்டளியன் பின்போம் மனம். 74
    646 மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
    மனமாய உள்ளார வாரான் -மனமாயப்
    பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
    பொன்மாலை சேர்சடையான் போந்து. 75
    647 போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
    போந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார்
    இலங்கோல வாள்முகத் தீசனாற் கெல்லே
    இலங்கோலந் தோற்ப தினி. 76
    648 இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
    இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் - இனியானைத்
    தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
    தாளங்கை யால்தொழுவார் தாம். 77
    649 தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
    தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர்
    பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
    பாணியார் தீர்ந்தளிப்பர் பார். 78
    650 பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்
    பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
    கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
    கோகரணத் தானாய கோ. 79
    651 கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்
    கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் -கோப்பாடிப்
    பின்னைக்காய் நின்றார்க் கிடங்கொடுக்கும் பேரருளான்
    பின்னைக்காம் எம்பெருமான் பேர். 80
    652 பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
    பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்
    சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
    உண்டாம்நா ளல்ல உயிர். 81
    653 உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்
    துயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான்
    பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
    பகர்மனமே ஆசைக்கட் பட்டு. 82
    654 பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
    பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
    கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
    கோவணத்து நம்பனையே கூறு. 83
    655 கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக்
    கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
    செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
    செருக்கழியா முன்னமே செய். 84
    656 செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
    செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன்
    நாட்டுணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
    நாட்டுணாய் நின்றானை நாம். 85
    657 நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
    நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால்
    துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
    துய்க்கப் படுவதாஞ் சூது. 86
    658 சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
    சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
    கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
    கொழுந்தே இழந்தேன் குருகு. 87
    659 குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக்
    குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்
    போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
    போதாநின் பொன்முடிக்கட் போது. 88
    660 போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
    போதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்
    கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
    கானகஞ்சேர் வாற்கடிமை கல். 89
    661 கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
    கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்
    அமரர்க் கமரர் அரர்க்கடிமை பூண்டார்
    அமரர்க் கமரரா வார். 90
    662 ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
    ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆ
    பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
    பகல்நாடி ஏத்தார் பகர்ந்து. 91
    663 பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ டாட் டெல்லி
    பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம்
    தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடைய
    தாங்கால் தொழுதல் தலை. 92
    664 தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும்
    தலையாலங் காடர்தாம் என்னும் -தலையாய
    பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்லிடையீர்
    பாகீ ரதிவளரும் பண்பு. 93
    665 பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்
    பண்பாய பைங்கொன்றைத் தார்அருளான் - பண்பால்
    திருமாலு மங்கைச் சிவற் கடிமை செய்வான்
    திருமாலு மங்கைச் சிவன். 94
    666 சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
    சிவன்மேய செங்குன்றூர் என்னும் -சிவன்மாட்டங்
    காலிங் கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றை
    யாலிங் கனம்நினையு மாறு. 95
    667 ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
    காறார் சடையீர்க் கமையாதே - ஆறாத
    ஆனினித்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
    ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு. 96
    668 ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
    ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
    போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
    போரேற்றான் போந்தான் புறம். 97
    669 புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே
    புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன்
    மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்
    மேற்றளிக்கோன் என்றுரையான் மெய். 98
    670 மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
    மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் -வெய்ய
    துணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சே
    துணையிகலா கூறுவான் நூறு. 99
    671 நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
    நூறா நொடிஅதனின் மிக்கதே - நூறா
    உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளே
    றுடையானைப் பாடலால் ஒன்று. 100

    திருச்சிற்றம்பலம்