12.10 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை (1409 - 1419)
1409 புலனோ டாடித் திரிமனத்தவர்
பொறிசெய் காமத் துரிசடக்கிய
புனித நேசத் தொடுத மக்கையர்
புணர்வி னாலுற் றுரைசெ யக்குடர்
சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்
சுடுவெ ணீறிட் டமணகற்றிய
துணிவி னான்முப் புரமெரித்தவர்
சுழலி லேபட் டிடுத வத்தினர்
உலகின் மாயப் பிறவி யைத்தரும்
உணர்வி லாஅப் பெரும யக்கினை
ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
உபரி யாகப் பொருள்ப ரப்பிய
அலகில் ஞானக் கடலி டைப்படும்
அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
அடிய ரேமுக் கருளி னைச்செயும்
அரைய தேவத் திருவ டிக்களே. 1
1410 திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தௌிதேனொத் தினியசொல் மடவாருர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மன முருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடத் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே. 2
1411 குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலையிடையே செலுந்தகை நன்மடவார்
அழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
அளைந்த யருமதுநீ அறிந்திலை கொல்மனமே
கழிந்த கழிகிடுநாள் இணங்கி தயநெகவே
கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே. 3
1412 இலைமா டென்றிடர் பரியார் இந்திர
னேஒத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்
நீள்சன் மக்கடல் இடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
அண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே. 4
1413 என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை
இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென
மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
வஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்
அந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே. 5
1414 பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
பெட்டியுரை செய்துசோறு சுட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
கற்றமதி யினனோசை இத்தரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
கற்றுணையில் வருமாதி ........
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே. 6
1415 பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர்
அவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே. 7
1416 தாமரைநகும் அகவிதழ் தகுவன
சாய்பெறுசிறு தளிரினை அனையன
சார்தருமடி யவரிடர் தடிவன
தாயினும் நல கருணையை உடையன
தூமதியினை ஒருபது கொடுசெய்த
சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன
தோமறுகுண நிலையின தலையின
ஓமரசினை மறைகளின் முடிவுகள்
ஓலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன
ஊறியகசி வொடுகவி செய்தபுகழ்
ஆமரசுயர் அகநெகு மவருள
னாரரசதி கையினர னருளுவ
னாமரசுகொ ளரசெனை வழிமுழு
தாளரசுதன் அடியிணை மலர்களே. 8
1417 அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாராப் பெறுதற் கரிதாகச் சொலும்அப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே. 9
1418 சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
திகழும் பைம்பொடித் தவண்டணி
கவசம் புக்குவைத் தரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றிய
கரணங் கட்டுதற் கடுத்துள
களகம் புக்கநற் கவந்தியன்
அவசம் புத்தியிற் கசிந்துகொ
டழுகண் டத்துவைத் தளித்தனன்
அனகன் குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்தடு
பரிசொன் றப்பணிக் குநன்றுமே. 10
1419 நன்று மாதர நாவினுக் கரைசடி
நளினம் வைத்துயின் அல்லால்
ஒன்று மாவது கண்டிலம் உபாயமற்
றுள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற்
பொறியிலைம் புலனோடே. 11
திருச்சிற்றம்பலம்
பதினோராந் திருமுறை முற்றிற்று