ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
2. திருக்கழுமல மும்மணிக்கோவை.
உ
கணபதிதுணை
திருச்சிற்றம்பலம்.
இணைக்குறளாசிரியப்பா.
திருவளர்பவளப் பெருவரைமணந்த
மரகதவல்லி போலொருகூற்றின்
இமயச்செல்வி பிரியாதுவிளங்கப்
பாய்திரைப்பரவை மீமிசைமுகிழ்த்த
அலைகதிர்ப்பரிதி யாயிரந்தொகுத்த
வரன்முரைதிரியாது மலர்மிசையிருந்தெனக்
கதிர்விடுநின்முகங் காண்டொறுங் காண்டொறும்
முதிராவிளமுலை முற்றாக்கொழுந்தின்
திருமுகத்தாமரைச் செவ்வியின்மலரநின்
றையல்வாணுதற் றெய்வச்சிறுபிறை
இளநிலாக்காண்டொறு மொளியொடும்புணர்ந்தநின்
செவ்வாய்க்குமுதஞ் செவ்விசெய்யநின்
செங்கைக்கமல மங்கைவனமுலை
யமிர்தகலச மமைவினேந்த
மலைமகடனாது நயனக்குவளைநின்
பொலிவினோடுமலர
மறையோர்கழுமல நெறிநின்றுபொலிய
நாகர்நாடு மீமிசைமிதந்து
மீமிசையுலகங் கீழ்முதற்றா அழ்ந்
தொன்றாவந்த குன்றாவெள்ளத்
துலகமூன்றுக்குங் களைகணாகி
முதலில்கால மினிதுவீற்றிருந்துழித்
தாதையொடுவந்த வேதியச்சிறுவன்
தளர்நடைப்பருவத்து வளர்பசிவருத்த
அன்னாயோவென் றழைப்பமுன்னின்று
ஞான போனகத்தரு ளட்டிக்குழைத்த
ஆனாத்திரளை யவன்வயினருள
அந்தணன்முனிந்து தந்தார்யாரென
அவனைக்காட்டுவ னப்பவானார்
தோஒடுடைய செவியனென்றும்
பீஇடுடைய பெம்மானென்றும்
கையிற் சுட்டிக்காட்ட
ஐயநீவெளிப்பட் டருளினையாங்கே. 1
வெண்பா.
அருளின் கடலடியே னன்பென்னு மாறு
பொருளின்றிரள்புகலி நாதன் - இருள்புகுதுங்
கண்டத்தானென்பாரைக் காதலித்துக்கைதொழுவார்க்
கண்டத்தார்தாமா ரதற்கு. 2
கட்டளைக்கலித்துறை.
ஆரணநான்கிற்கு மப்பாலவனறி யத்துணிந்த
நாரணனான்முக னுக்கரியானடு வாய்நிறைந்த
பூரணனெந்தை புகலிப்பிரான் பொழிலத்தனைக்குங்
காரணனந்தக் கரணங்கடந்த கருப்பொருளே. 3
இணைக்குறளாசிரியப்பா.
கருமுதற்றொடங்கிப் பெருநாளெல்லாம்
காமம்வெகுளி கழிபெரும்பொய்யெனும்
தூய்மையில்குப்பை தொலைவின்றிக்கிடந்ததை
அரிதினிகழ்ந்து போக்கிப்பொருதிறன்
மையிருணிறத்து மதமுடையடுசினத்
தைவகைக்கடாவும் யாப்பவிழ்த்தகற்றி
யன்புகொடுமெழுகி யருள்விளக்கேற்றித்
துன்பவிருளைத் துறந்துமுன்புற
மெய்யெனும்விதானம் விரித்துநொய்ய
கீழ்மையிற்றொடர்ந்து கிடந்தவென்சிந்தைப்
பாழறையுனக்குப் பள்ளியறையாக்கிச்
சிந்தைத்தாமரைச் செழுமலர்ப்பூந்தவி
செந்தைநீயிருக்க விட்டனனிந்த
நெடுநிலவளாகமு மடுகதிர்வானமும்
அடையப்பரந்த வாதிவெள்ளத்து
நுரையெனச்சிதறி யிருசுடர்மிதப்ப
வரைபறித்தியங்கு மாருதங் கடுப்ப
மாலும்பிரமனு முதலியவானவர்
காலமிதுவெனக் கலங்காநின்றுழி
மற்றவருய்யப் பற்றியபுணையாய்
மிகநனிமிதந்த புகலிநாயக
அருணனிசுரக்கும் பிரளயவிடங்கநின்
செல்வச்சிலம்பு மெல்லெனமிழற்ற
அமையாக்காட்சியிமயக்
கொழுந்தையுமுடனே கொண்டிங்
கெழுந்தருளத்தகு மெம்பெருமானே. 4
வெண்பா.
மானுமழுவுந் திருமிடற்றில் வாழுமிரு
[1]டானும்பிறையுமே தாங்கிநிற்கும்-வானவர்க்கு
வெள்ளத்தேதோன்றிக் கழுமலத்தேவீற்றிருந்தென்
னுள்ளத்தேநின்ற வொளி.
[1] டானும்பிறையுந்தரித்திருக்கும் என்றும் பாடம். 5
கட்டளைக்கலித்துறை.
ஒளிவந்தவாபொய்மனத்திருணீங்கவென்னுள்ளவெள்ளம்
தெளிவந்தவாவந்துதித்தித்தவாசிந்தியாததொரு
களிவந்தவாவன்புகைவந்தவாகடைசாரமையத்
தெளிவந்தவாநங்கழுமலவாணர்தம்மின்னருளே. 6
இணைக்குறளாசிரியப்பா.
அருள்பழுத்தளிந்த கருணைவான்கனி
ஆராவின்பத் தீராக்காதல்
அடியவர்க்கமிர்த வாரிநெடுநிலை
மாடக்கோபுரத் தாடகக்குடுமி
மழைவயிறுகிழிக்குங் கழுமலவாணநின்
வழுவாக்காட்சி முதிராவிளமுலைப்
பாவையுடனிருந்த பரமயோகி
யானொன்றுணர்த்துவ னெந்தைமேனாள்
அகிலலோகமு மனந்தயோனியும்
நிகிலமுந்தோன்ற நீநினைந்தநாடொடங்கி
எனைப்பலயோனியு நினைப்பரும்பேதத்
தியாரும்யாவையு மெனக்குத்தனித்தனித்
தாயாராகியுந் தந்தையராகியும்
வந்திலாதவ ரில்லையானவர்
தந்தையராகியுந் தாயாராகியும்
வந்திராதது மில்லைமுந்து
பிறவாநிலனு மில்லையவ்வயின்
இறவாநிலனு மில்லைபிறிதில்
எனைத்தினாவுயிர்களு மில்லையானவை
தமைத்தினாதொழிந்தது மில்லையனைத்தே
காலமுஞ்சென்ற தியானிதன்மேலினி
இளைக்குமா றிலனேநாயேன்
அந்தரச்சோதிநின் னஞ்செழுத்துநவிலும்
தந்திரம்பயின்றது மிலனேதந்திரம்
பயின்றவர்ப்பயின்றது மிலனேயாயினும்
இயன்றதோர்பொழுதி னிட்டதுமலராச்
சொன்னதுமந்திர மாகவென்னையும்
இடர்ப்பிறப்பிறப்பெனு மிரண்டின்
கடற்படாவகை காத்தனின்கடனே. 7
வெண்பா.
கடலானகாமத்தே காறாழ்வர்துன்பம்
அடலாமுபாயமறியாம் - உடலாம்
முழுமலத்தையோர்கியார் முக்கட்பெருமான்
கழுமலத்தைக் கைதொழாதார். 8
கட்டளைக்கலித்துறை.
தொழுவாளிவள்வளைதோற்பா ளிவளிடர்க்கேயலர்கொண்
டெழுவாளெழுகின்ற தென்செயவோவென்மனத்திருந்துங்
கழுவாமணியைக்கழுமல வாணனைக்கையினிற்கொண்
மழுவாளனைக்கண்டுவந்த தென்றாலொர் வசையில்லையே. 9
இணைக்குறளாசிரியப்பா.
வசையில்காட்சி யிசைநனிவிளங்க
முன்னாணிகழ்ந்த பன்னீருகத்து
வேறுவேறுபெயரி னூறின்றியன்ற
மையறுசிறப்பிற் றெய்வத்தன்மைப்
புகலிநாயக விகல்விடைப்பாக
அமைநாண்மென்றோ ளுமையாள்கொழுந
குன்றுகுனிவித்து வன்றோளவுணர்
மூவையிலெரித்த சேவகத்தேவ
இளநிலாமுகிழ்க்கும் வளர்சடைக்கடவுணின்
நெற்றியிற்சிறந்த வொற்றைநாட்டத்துக்
காமனைவிழித்த மாமுதுதலைவ
வானவரறியா வாதியானே
[1] கல்லாவுளத்திற் புல்லறிவுதொடர
மறந்துநோக்கும் வெறுந்தண்ணாட்டத்துக்
காண்டொறுங்காண்டொறு மெல்லாமியாண்டை
யாயினும்பிறவு மென்னதும்பிறரதும்
ஆவனபலவு மழிவனபலவும்
போவதும்வருவது நிகழ்வதுமாகித்
தெண்ணீர்ஞாலத்துத் திரண்டமணலினும்
எண்ணில்கோடி யெனப்பலவாகி
இல்லனவுளவா யுள்ளனகாணாப்
பன்னாளிருள்வயிற் பட்டேனன்னதும்
அன்னதாதலி னடுக்குமதென்னெனின்
கட்புலன்றெரியாது கொட்புறுமொருவற்குக்
குழிவழியாகி வழிகுழியாகி
ஒழிவின்றொன்றி னொன்றுதடுமாறி
வந்தாற்போல வந்ததெந்தைநின்
திருவளர்நாட்டங் கருணையிற்பெறலும்
யாவையுமெனக்குப் பொய்யெனத்தோன்றி
மேவருநீயே மெய்யெனத்தோன்றினை
ஓவியப்புலவன் சாயல்பெறவெழுதிய
சிற்பவிகற்ப மெல்லாமொன்றில்
தவிராதுதடவினர் தமக்குச்
சுவராய்த்தோன்றுந் துணிவுபோன்றனவே.
[1] சடமாகிய வுடம்பெனக்கொண்டு, கல்லா வுடம்பெனவும் பாடாமோதுவர். 10
வெண்பா.
எனவேயெழுந்தாளென் செய்கிற்பாளின்னம்
சினவேறுகாட்டு திரென்னு - மினவேகப்
பாம்புகலியாநிமிரும் பன்னாச்சடைமுடிநம்
பூம்புகலியானிதழிப் போது. 11
கட்டளைக்கலித்துறை
போதும்பெறாவிடிற்பச்சிலையுண்டுபுனலுண்டெங்கும்
ஏதும்பெறாவிடினெஞ்சுண்டின்றேயிணையாகச்செப்பும்
சூதும்பெறாமுலைப்பங்கர்தென்றோணிபுரேசர்வண்டின்
தாதும்பெறாதவடித்தாமரைசென்றுசார்வதற்கே. 12
திருச்சிற்றம்பலம்.
திருக்கழுமல மும்மணிக்கோவை முற்றிற்று.