கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிடமகாபாஷ்யகர்த்தராகிய
சிவஞானயோகிகள் அருளிச் செய்த பிரபந்தத்திரட்டு
இராமநாதபுர சமஸ்தானம்
ம-ள-ள-ஸ்ரீ பொன்னுச்சாமித்தேவரர்களுடைய புத்திரர்
ம-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத்தேவரவர்கள் விரும்பியவண்ணம்
மதுராபுரிவாசியாகிய இ.இராமசுவாமிப்பிள்ளை என்று
விளங்குகின்ற ஞானசம்பந்தப்பிள்ளையால்
அகப்பட்டபிரதிகள்கொண்டு பரிசோதித்து
சென்னை: இந்து தியாலஜிகல் யந்திரசாலையிலும்
சித்தாந்த வித்தியாநுபாலனயந்திரசாலையிலும்
பதிப்பிக்கப்பட்டது
----
கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்.
சிறப்புப்பாயிரம். (செய்யுள் 1-2)
ஆசிரியர் கருத்து. (செய்யுள் 3)
விநாயகக்கடவுள் வணக்கம். (செய்யுள்-4)
காப்புப்பருவம். (5-10)
செங்கீரைப்பருவம் (11-15 )
சப்பாணிப்பருவம்.(16-20)
முத்தப்பருவம்.(21-25)
வருகைப்பருவம் (29-33)
அம்புலிப்பருவம். (34-38)
சிற்றிற்பருவம். (39-43)
சிறுபறைப்பருவம்.(43-47)
சிறுதேர்ப்பருவம் (48-53)
---
உ
கணபதி துணை.
5. கலசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்.
சிறப்புப்பாயிரம். (செய்யுள் 1-2)
இலகுசக னீரெட்டு நூற்றுநாற்
பத்தேழினிற்கரங் கும்ப மிருபத்
தேழிரே வதிவெள்ளி பூர்வபக்
கத்துதிகையேர்க்கவுல வஞ்சுப் பிரம்
கலவியுறு சுபதினங் கன்னிலக்
கினமதிற்கலசைப் பதிக்குள் வாழ்செங்
கழுநீர் விநாயகர்த மீதுபிள்ளைத்
தமிழ்க்கவிபாடி வானோருண
அலைமலிக டற்கடைந் தமிழ்தூட்டு
மாலென்னவவனியிற் புலவர் செவியால்
ஆர்ந்திடத் துறைசைவாழ் சிவஞான
தேசிகனரங்கேற்றி னானா தலால்
நலசுகுண மணிகுவளை யணிபுயன்
வீரப்பனல்குமக ராச யோகன்
நங்கள்கே சவபூப னநுசர்சேய்
சுற்றமுநன்மைதரு வாழ்வு றுகவே.
இன்றிழக்கு மூக்கன்றே யீர்ந்துமா னங்கொடுத்தான்
என்றுசய வீரனையே யேத்துவாள்-மன்றவே
நற்கலைமான் றூயசிவ ஞானமுனி யோதுதமிழ்ச்
சொற்சுவையை நோக்குந் தொறும். (2)
இவ்விரண்டு செய்யுட்களும் நூலாசிரியர் காலத்தன.
ஆசிரியர் கருத்து. (செய்யுள் 3)
அகளவடி வானபர மானந்த னேனு
மெய்யடியவர்க டம்மை யாள
அருளுரு வெடுத்தலா லதனிளமை
நோக்கிமுனந்நலார் கூறு மொழியாத்
தகவுபெறு சிறுதேரை யீற்றிற்றழீ
இநலந்தாங்குகாப் பாதி பத்தும்
தண்டாத வாஞ்சையிற் கலசையுற்
பலயானை தன்னையா னின்றேத் தினேன்
இகலுமொரு வேடம் பரித்துவரு மொருவனுழை
யெல்லோரு மொல்லைக் குழீஇ
இயல்பாக வவ்வுருவ முடையவரி னும்பெருமை
யெண்ணிப் பெருஞ்சொல் வமும்
மிகவுதவு நீர்மையை மதித்தியல்ப தாத்துதி
விளம்புமத் தாதிய ரினும்
வினையினேன் றன்னிடத் தோவாத
பேரருள் விளைத்திடு மெனக்கு றித்தே. (3)
விநாயகக்கடவுள் வணக்கம். (செய்யுள்-4)
மணிபூத்த மருமத்து நெடுமான் முதற்புலவர்
வான்பதம் வேட்ட வர்க்கு
வழங்குவோ னுந்தனது பதமிரந் தோர்க்குதவு
வள்ளலுந் தானே யெனும்
தணிபூத்த தன்றந்தை போற்பிற குறித்ததூஉந்
தற்குறித் தேன்ற தொழிலும்
தானேக டைக்கூட்ட வல்லசெங் கழுநீர்த்
தடங்களிறை யஞ்ச லிப்பாம்
அணிபூத்த தொய்யிற் கரும்புசிலை யாகவிழி
யம்பினைப் பூட்டி மடவார்
அம்புயக் கிழவனைச் சீதரனை வென்றவர்க
ளறிவினைத் திறைகோ டலும்
பணிபூத்த மலர்மகளி ராங்கதனை மீட்டிடும்
படிவந்தி ருந்து செவ்வி
பார்க்குந் திருக்கலைசை மன்னிவாழ் தன்னையே
பாடுமென் கவித ழையவே. (4)
காப்புப்பருவம். (5-10)
திருமால்
கார்கொண்ட கருநிறக் காளத்தை வெண்டிரைக்
கைகளி னெடுத்து நீட்டும்
கடும்பிழையை நோக்காது திருவினொடு
சுவையமது கதிர்மணி தனக்கு தவிடும்
பேர்கொண்ட நன்றியே பாராட்டி வெண்கேழ்ப்
பெருங்கடற் பள்ளி கொண்டு
பிறங்குநீர்ப் புவிமிசைப் புருடோத் தமப்பெரும்
பெயர்நிறுவு மண்ணல் காக்க
ஏர்கொண்ட தன்னைத் தளைப்பவரு மூருநரு
மிலரென்ப துலகு தேறற்
கெடுத்தவெம் பாசமோ டங்குசந் தன்கரத்
தேந்திமத தாரை சிதறிப்
பார்கொண்ட வெண்டிசைத் தறுகட் களிற்றுடல்
பனிப்பச் செவிக்கா லெழீஇப்
பகிரண்ட முற்றும் புகுந்துலாய்க் கலைசையிற்
பதியுமோர் களிறு தனையே. (5)
சிதம்பரேசர்.
வேறு.
மறமலிந்துல கேழினு முயிர்களஞ்ச வுலாவுபு
வதைசெயும்புர நீறுசெய் புன்சிரிப் பாற்கடி
மலர்துவன்றிய வார்குழ லுமையிளம்பிடி பூதர
மகளுளஞ்சுக வாழ்வில மிழ்ந்திடத் தேக்கியும்
மதுகரங்குண மாய்வளை சிலைகொணர்ந்தம ராடிய
மதனைவென்றருள் சீர்நய னந்தனிற் பாற்குரு
மதியொடுங்கதிர் வானவ னொளியிறந்தமை யாலயர்
மகிதலங்களி கூர்தர வின்பினைக் கூட்டியும்
வெறிகமழ்ந்தறு காலுண மதுவுமிழ்ந்தலர் தாமரை
மிசைவதிந்தவ னோர்முடி விண்டகைப் பூத்தனில்
விரிகருங்கட லூடெழு கொடியவெங்கடு வானனி
வெருவுமும்பர்மு னேயப யந்தனைக் காட்டியும்
விறல்பிறங்குக டாமிசை யெதிருமந்தக னார்தமை
மெலிவுகொண்டுயிர் வீடவு தைந்தபொற் றாட்டுணை
வினையினென்றலை மேலருள் செயவிரங்கியு மேர்மரு
வியசிதம்பர ரூபனை யன்புறப் போற்றுதும்
அறவொழுங்குத னாதிட முழுவதுஞ்செறி நீள்கரை
யகல் விசும்பென நீடுத ரங்கமிக் கார்த்தெறி
அவிர்செழுங்கதிர் மாமணி பரவியெங்கணு மேவுவ
ததனிலொன்றிய மீனவி னந்தனக் கேற்றிட
அயல்வழிந்திடு மாறுத னகநிரம்பிய வாலொளி
யணவுதண்புனல் வாவிகு ளிர்ந்திருட் கூட்டம
தழியமென்கதிர் வீசிய வெளியவம்புலி போலுற
வருகுவந்துத ணீரைமு கந்தெடுத் தாற்றல்செய்
துறையுமங்கைய ராடவ ரதுவழங்கிடு மாரமு
துணுமரம்பையர் வானவர் தங்களிற் றோற்றவிண்
உலகெனும்புகழ் மீறிய கலைசையம்பதி யேதன
துறையுளென்றுநி லாவிவ ணங்கிநிற் போர்க்கருள்
உதவுமெம்பெரு மானையெவ் வுயிர்களுங்கொடு மாமல
மொருவியன்புரு வாகிய டங்கவைத் தாட்கொளும்
உகளபங்கய பாதனை யுலகமெங்கணு மாயெனை
யுடையசெங்கழு நீர்மத தந்தியைக் காக்கவே. (6)
சிவகாமியம்மை.
வேறு.
கரும்பு குழையச் சுரும்பொலிப்பக் கடிப்போதுகுத்த
மதனையெம்மான்
கண்டு மிகையா மெனக்கருதிக் கனலிக்
கூட்டு மாற்றலும்பின்
கந்தமலி பங்கயத் திருமுக மசைத்தொறூஉங்
கார்க்குஞ்சி மீது கவினக்
கால்யாத்த வெண்மலர்த் தொங்கல்பின் னான்றுலாய்க்
கண்ணத் தளாவி வாசம்
தந்தமத நீரிற் படிந்துகரு நிறமாய்த்
தணந்துழிப் பற்று மந்நீர்
தனையுதறி முன்னைத் தனாதுநிற மெய்தித்
தரங்கந் துரங்க நிரையிற்
கொந்தலரு கும்புன்னை மீமிசைத் தாவிக்
குதிக்குமணி யாழி யகடு
குழியக் குறைத்துக் கறுத்துமழை தூஉய்வெண்மை
கொண்டுவளர் கொண்ட லேய்ப்பச்
சிந்துரமு கத்தசெங் கழுநீ ரினங்களிறு
செங்கீரை யாடி யருளே
திருந்துமடி யார்க்கருள் புரிந்தகலை சைப்பிரான்
செங்கீரை யாடி யருளே. (7)
வேறு.
கொங்கவர் நின்னடி சென்னியில் வைத்துக் கூப்பிய கையொடுநின்
குளிருளமகிழ்தருதொழில்புரிதாதியர் கொள்கையினிரைநிரையாய்த்
தங்கிய பங்கய மங்கையர் முதலிய தபனிய வுலகுறையுந்
தையலர் மருமத் தொய்யில் பரித்த தனக்கரி யுலவைகளுள்
திங்களி னொளிர்தன துலவை நிகர்ப்பன தேர்தர வெதிர்நோக்கித்
திரிவது போலிரு புறமு மலர்ந்தவிர் திருமுக மினிதசைய
அங்குச மேந்திய செங்கழு நீர்க்களி றாடுக செங்கீரை
அணிகிளர் கலைசை நகர்க்கு ளிருந்தவ னாடுக செங்கீரை. (8)
சுரும்புமு ரன்றலர் கொன்றை செறித்த துலங்கொளி வார்சடிலத்
தோன்றலை யெய்திய ணைத்திடு காலைத் தோளொடு மருமமெலாம்
இரும்புணு றும்படி யுழுதரு தகைமை யிரண்டற் குஞ்சமமாய்
இயைவது நோக்கி மகிழ்ந்திவை தம்மு ளிணங்கச் செய்வதென
விரும்பிம யத்து மடப்பிடி கோட்டொடு வில்லுமிழ் தன்னுலவை
மேவிட வைத்துக் கொங்கைத் தீம்பய மென்மெல வுண்டுமணம்
அரும்பிய செவ்வாய்ச் செங்கழு நீர்க்களி றாடுக செங்கீரை
அணிகிளர் கலைசை நகர்க்கு ளிருந்தவ னாடுக செங்கீரை (9)
வேறு
பொங்கொளி வீசுபொ லங்குழை காது புகுந்தேர் கொண்டாடப்
பொன்றிகழ் தோளணி தொங்கலி னோடுபு லம்பா நின்றாடத்
துங்கநி லாவுத டங்கையி னீர்சுல வுங்கார் வென்றாடத்
துன்றிய தேமலி குஞ்சிய னோடுதொ குந்தார் விண்டாடப்
பங்கய னாதியர் வந்துத வாதப தந்தா வென்றாடப்
பண்பறு நேரலர் நெஞ்சழல் வாயுறு பஞ்சாய் நைந்தாடச்
செங்கழு நீர்மத தந்திவி நாயக செங்கோ செங்கீரை
தென்கலை சாபுரி தங்கிய நாயக செங்கோ செங்கீரை. (10)
செங்கீரைப்பருவமுடிந்தது.
----- X
தாலப்பருவம்.
புதிய வாசந் தனைப்பரப்பிப் புறத்தே யெங்குந் திரிந்தயரும்
பொறிவண் டினங்க டமையழைத்தம் புயத்தே னூட்டிப் பகலோம்பி
முதிய நிசிவந் திடும்போது முகைவிண் டலர்ந்த நறுங்குமுத
மூரிச் செழுந்தேன் முகந்தூட்டி முழுதுங் காத்துக் கடல்வரைப்பின்
வதியு மிரவோர் தமைக்கீர்த்தி மகளாந் தூதின் வரக்கூவி [யோர்
மகிழ்ந்தெப்போது மெவ்வாறும் வழங்கிக் காக்கும் பெருங்கொடை
கதிய தடஞ்சூழ் திருக்கலைசைக் களிறே தாலோ தாலேலோ
கருணை முதிர்ந்த செங்கழுநீர்க் கன்றே தாலோ தாலேலோ. (1)
தொடுக்குந் தெரியற் கருங்கூந்தற் றோகை யனையார் துடுமெனநீர்த்
துறையுட் பாய்ந்து விளையாடத் துண்ணென் றெழுந்து மேற்சென்று
தடுக்கும் பசுங்கோட் டலர்கனிகாய் சாடித் தனது வயிறுருவத்
தாக்கு நெடுவா ளையுமதனைத் தன்னுட் பிணிக்குந் தேனடையும்
அடுக்கும் பரிதி நுழைந்துதின மலைக்கும் பகைமை மீக்கொண்டங்
கடர்த்துப் பறித்த வவன்றிருத்தே ரச்சு மதுகோத் திடுமுருளும்
கடுக்கும் பொழில்சூழ் திருக்கலைசைக் களிறே தாலோ தாலேலோ
கருணை முதிர்ந்த செங்கழுநீர்க் கன்றே தாலோ தாலேலோ (2)
வேறு
வேய்மரு டோளியர் குஞ்சி திருத்தி மிலைச்சிய செம்மணியின்
விற்பயில் கொண்டைவெய் யோனெனவாங்கி யுடைத்திருகூறு செய்தே
தேய்மதி கொண்டபி ரான்சடை மேலெழில்செய்கெனவோர்பிளவைச்
சேர்த்துப் பின்னொரு பிளவுமை யாண்முடி செருகிச் சமமாகத்
தூய்மதி யென்றிறை மார்பணி கொம்பைத் தொடையி லறுத்துடனத்
தோகை முடிக்கணி சைத்து மகிழ்ச்சி துளும்பித் தந்தையொடும்
தாய்மகிழ் கூர நடித்தருள் செல்வா தாலோ தாலேலோ
தகைபெறு செங்கழு நீர்மத வேழந் தாலோ தாலேலோ. (3)
வெண்டலை யேந்திய வேணிமுடிப்பான் மெய்யினும் வெம்பனிசூழ்
வெற்பன் மடக்கொடி மெய்யினு மேறி மிதித்தா டுந்தோறும்
வண்டலை யக்கடி வீசுக வுட்புறம் வாக்கும தப்புனலும்
வார்தரு தடவுக் கைத்துளை யுமிழு மதப்புன லுஞ்சிரமேற்
கொண்டலை நிகரக் கொட்டுவ திருமுது குரவர் தமக்குமணம்
குலவிய யமுனையு மந்தா கினியுங் கொடுவந் தாட்டல்பொரும்
தண்டலை சூழ்கலை சைச்சிறு களபந் தாலோ தாலேலோ
தகைபெறு செங்கழு நீர்மத வேழந் தாலோ தாலேலோ. (4)
வேறு.
மலைம டந்தையருள் பாலா தாலோ தாலேலோ
மதமி குந்திழிக போலா தாலோ தாலேலோ
அலகி லன்பர்பணி காலா தாலோ தாலேலோ
அருள்சு ரந்திடும்வி சாலா தாலோ தாலேலோ
இலகு கின்றபணி மார்பா தாலோ தாலேலோ
இனிய மந்திரசொ ரூபா தாலோ தாலேலோ
பொலிபெருங் கருணை யாளா தாலோ தாலேலோ
புகழ்பெ றுங்கலைசை வாணா தாலோ தாலேலோ. (5)
தாலப்பருவமுடிந்தது.
-------
சப்பாணிப்பருவம்.
பக்குவமு திர்ந்துசிவ புண்ணியநி ரம்பிமல பாகம்பி றந்து சத்தி
பதிந்துவினை யொப்புப் பழுத்தவர்கள் பந்தநோய் பாற்றுமொரு செங்கை மலரும்
அக்கருணை யடியவர்க ளுயிருடன் பொருள்காய மாமெவ் வகைப்பந் தமும்
அங்கீக ரிக்குமோர் கைமலரு மாறுபா டாதரித் திடுசெய் கையான்
மிக்குறும் பகைமைமேன் மேலெய்தி யாங்கது விலக்கத் தமக்கு யர்ந்தோர்
மேதினிக் கின்மையாற் போராட் டியற்கையின் மெலியாம லொன்றை யொன்று
தக்கவகை தாக்குதல் கடுப்பக் கவின்செயவொர் சப்பாணி கொட்டி யருளே
தங்குகலை சைப்பதிச் செங்குவளை நாயகன் சப்பாணி கொட்டி யருளே. (1) (1)
வயங்குமுழு மதியத் திருஞ்சுவைப் புத்தமுது வாய்மடுத் துண்ண வெண்ணி
வருகின்ற தகுவர்குல மொப்பக் கலித்தலை மடிக்குந் திரைப்பு னற்பூம்
கயங்கிளர்செ ழுங்கமல வாண்முகத் தூற்றெழூஉங் கலுழிக் கடாம டுப்பக்
கருதிவரு மெல்லிசைத் தும்பியும் வண்டுங் கறங்குமி ஞிறுஞ்சு ரும்பும்
பயங்கதுவ மொய்த்தவை விரைந்தோட வோச்சுறூஉம் பண்புபொர வேற்போர்க் குவான்
பரிசிலைய ளித்தளித் துச்சிவந் தாங்கொளி பரப்பிமணி யாழி பூண்டு
தயங்குமிரு கைகளா லெழிப்பூப்ப மதகளிறு சப்பாணி கொட்டி யருளே
தங்குகலை சைப்பதிச் செங்குவளை நாயகன் சப்பாணி கொட்டி யருளே. (2) (2)
வேறு.
மும்மல மாமத முற்றுப் போத முழுத்தறி யறவீசி
முகிழ்த்தல ரன்பின் சங்கிலி யுதறி முதிர்ந்தவ ருட்கூடத்
திம்மென நீங்கி வெளிக்கொடு புவன மெனுங்கடு வனமோடி
எப்பா கர்க்கு மடங்கல வாகி யியங்கு முயிர்க்கரிகள்
தம்மைவி டாது தொடர்ந்து பிணிப்பத் தகுமங் குசபாசம்
தாங்குதல் கண்டுந் தம்போ லெண்ணிச் சார்பவை தமைநகையாக்
கொம்மைம லர்க்கைகள் கொட்டுவ தேய்ப்பக் கொட்டுக சப்பாணி
குலைகெழு தடநிறை கலைசைந கர்க்கிறை கொட்டுக சப்பாணி. (3)
மட்டுமிழ் கொன்றை மிலைச்சுபொ லஞ்சடை வள்ளலு நள்ளிருள்கூர்
வண்டுளர் குழலுமை யாளுங் கைதொடும் வள்ளத் தறுசுவையும்
தொட்டுவ ளாவி யளைந்தவர் மிசைமுடி தொட்டடிமட்டுமுறத்
தூவிவி டுத்தணி வீதிபு குந்து தொடர்ந்து சிறார்குழுமி
இட்டுநி றைத்திடு புழுதிக் குவைகளை யெற்றி யுழக்கியநீ
இயைந்திடு மப்புழு தித்துகள் போம்படி யெண்ணிக் கைகளினைக்
கொட்டுவ தெனவெழில் கொட்டிடவோர்முறைகொட்டுக சப்பாணி
குலைகெழு தடநிறை கலைசைந கர்க்கிறை கொட்டுக சப்பாணி. (4)
வேறு.
விரிதிரை பொங்கியு லாவும ளக்கர்ம ணிப்பாயன்
மிசைவிட முந்தும ராவணை யிற்றுயில் புத்தேளும்
மருமல ரம்புய மேவுமி ருக்கைம றைக்கோவும்
மதமழை சிந்துவெ ளானையெ ருத்தனு மற்றோரும்
அருடரு கென்றுப ராவிநி னைத்தது செப்பாமுன்
அவரவர் சிந்தையி னார்வன முற்றும ளித்தோகை
கருதிடு செங்கழு நீரிறை கொட்டுக சப்பாணி
கலைசைபு ரந்தருள் காரண கொட்டுக சப்பாணி. (5)
சப்பாணிப்பருவமுடிந்தது.
------
முத்தப்பருவம்.
அதிருந் தரங்க முரசறைய வளிபண் பாடத் துள்ளுவரால்
அனைத்தும் வெடிபோய்த் தாவிமறிந் தாடிக் குதிக்கச் சங்கினங்கள்
பிதிருந் தரளம் பரிசிலெனப் பேணிச் சொரியும் புனற்றடஞ்சூழ்
பெருநீர்க் கலைசைச் செங்கழுநீர்ப் பிள்ளா யல்குன் மணிப்பாம்பும்
கதிரும் பசும்பொற் றனக்கோடுங் காயத் துடையே நீயணியும்
கலனாம் பணிக்குங் கோட்டினுக்குங் கடுத்து வெருவே மணுகலந்து
முதிருஞ் சிவப்பூர் செழுங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
முழுது முணர்ந்த பரபோக முதல்வா முத்தந் தருகவே. (1)
கொத்துநிரைத்தமலர்ச்சோலைக் குயில்கூஉங் கலைசைச் செங்கழுநீர்க்
குழகா வம்மை யுனையீன்ற கோமான் றனக்குப் பணிநிலைக்க
வைத்து நிரைத்த பலவண்ட வருப்பும் வெள்ளிற் சனியெனநீ
மதித்துக் கவளங் கொளக்கரத்தால் வளையே லெந்தாய் தளவமலர்
ஒத்து நிரைத்த நகையாடி யுன்னோ டுரிமை பாராட்டும்
ஓசை மடவா ரெனயாமு முலவா வின்பக் கடன்மூழ்க
முத்து நிரைத்த கனிவாயான் முத்தந் தருக முத்தமே
முழுது முணர்ந்த பரபோக முதல்வா முத்தந் தருகவே. (2)
வேறு.
துளிதூங்கு தேந்தொடை மிலைச்சிய கருங்கூந்தல்
சுவன்மிசைப் புரள நின்று
தொடித்தோள் பெயர்த்தர மடந்தையர்க ளிருபுறந்
தூமணிக் கவரி வீசத்
தெளிதூங்கு நவமணி குயிற்றியணி வாலுளைச்
சிங்கஞ் சுமந்த தவிசில்
செங்கோ னடாத்துமிறை வைப்புமுத லெங்கணுஞ்
செல்லப் பரந்து விரியும்
அளிதூங்கு மெமதுளப் பங்கயங் குவியவது
வல்காமை நிற்கு மளவும்
அவிரொளி பெறாதவெம் முகமதியு மாலிப்ப
வமிழ்தம் பொழிந்தா லெனக்
களிதூங்கு நகைநிலவு சிறிதே யரும்புநின்
கனிவாயின் முத்த மருளே
கலைசைநகர் வந்தசெங் கழுநீர் மதக்களிறு
கனிவாயின் முத்த மருளே. (3)
திரைபூத் தொடுங்குவ தெனப்படி யளிக்குலஞ்
சிறைபுடை பெயர்த்தொ டுக்கித்
தீஞ்சுவை மடுத்துண்டு களிதரப் பூங்கவு
டிறந்தூற் றிருந்து வட்டும்
விரைபூத்த கடமுங் கொலைத்தொழில் பழுத்தொழுகும்
வெய்யகூர்ங் கோடு மெங்கள்
மென்மலர் முகத்திற் பெறுங்கறையு மூறும்
விளைத்திடின் விளைக்க வெங்கண்
மரைபூத்த கண்ணிமைக் குள்ளெழுது மையும்
வயங்கு மூக்கணியு மையன்
வதனத் திருங்கறையு மூறுஞ் செயாவன்பு
வாய்ப்பப் பவக்க டற்கோர்
கரைபூத்த செம்மொழிப் பழமறை முளைத்தநின்
கனிவாயின் முத்த மருளே
கலைசைநகர் வந்தசெங் கழுநீர் மதக்களிறு
கனிவாயின் முத்த மருளே. (4)
வேறு.
மறைநெறி யொழுகுநர் தங்களை யாள மதித்தம றைப்பொருளே
வளிவெளி சலநில மங்கி யெலாமுரு வத்துநி றுத்தவனே
நிறைவளை மகளிர் நலம்படர் வோர்த நினைப்பிலொ ளித்தவனே
நிருமல வறிவினர் சிந்தை நிலாவிய நிர்க்குண வற்புதமே
அறைகடலுலகொடு பங்கயன் மாலை யளித்துவ ளர்த்தவனே
அவரவர் பெறவுறு பந்தமும் வீடு மமைத்தவ றக்கடலே
முறைவளர் கலைசைகொள் செங்கழு நீரிறை முத்தம ளித்தருளே
முனிவர்க ளமரர்கள் வ்ந்தடி தாழ்பவ முத்தம ளித்தருளே. (5)
முத்தப்பருவமுடிந்தது.
------
வருகைப்பருவம்
சுத்தவொளி யாகியறி வாகிமல மாயைத்
தொடக்கிற் படாத நிறைவாய்த்
தொல்லுலக மெங்கணுங் கரைபுரண்டலைமோது
சுகாதீத வாரியி லெமை
வைத்தருள வெம்போ லெடுத்தநின் றிருமேனி
மழமையைக் கண்டி னமென
மதித்தளவ ளாவிவிளை யாடக் குறித்தோடி
வருமிள மகார்கள் குழுமி
மொய்த்தவழி நீதவழ்ந் தெதிர்வரவு காண்டலு
முழுக்களிறி தென்ன வெருவி
மொய்யொளிக் கண்களைக் கையாற் புதைத்தலறி
முன்விரைந் தோட முளரிக்
கைத்தலத் தங்குசம் பாசந் தரித்தசெங்
கழுநீர்ப் பிரான்வ ருகவே
கண்கதுவு மெழில்கொண்டு விண்கதுவு மாளிகைக்
கலைசைநா யகன்வ ருகவே. (1)
அலங்கொளி ததும்பிக் கொழுந்துவிடு நித்தில
மலைத்துக் கொழிக்கு மலையால்
ஆற்றல்புரி தன்கரை கரைத்துத் தமக்குறுதி
யாக்குநர்த மூக்க மாய்க்கும்
விலங்கனைய புல்லியர் பொரூஉம்புனற் பூந்தடம்
விலங்கா மலங்கு மீன்போல்
விழையுநின் முன்புறங் காண்டோறு மூற்றிய
விலாழிக் கடாங்கொள் களபக்
குலங்களெதிர் கொண்டோகை கூர்ந்திடப் பின்புறக்
கோமளங் காணுந் தொறும்
குழமைச் சிறாருங் குழீஇத்தொடர்ந் துன்போற்
குலாவிவர வெம்மு ளத்துக்
கலங்குமரு ளீர்ந்திட் டிலங்குமருள் காட்டுசெங்
கழுநீர்ப் பிரான்வ ருகவே
கண்கதுவு மெழில்கொண்டு விண்கதுவு மாளிகைக்
கலைசைநா யகன்வ ருகவே. (2)
மண்டலத் துண்டுடுத் திளநகை மட்ந்தையர்
வடந்தழுவு கொங்கை தோயும்
மருளன்றி யருளிலாப் பூரியரு மாரியரும்
வாக்குமன மெட்டா தநீ
கொண்டநற் றிருமேனி யுண்மையைத் தத்தந்
குறிப்பினுக் கேற்ப மொழியும்
கொள்கைபோற் சேயிடையி னின்வரவு கண்டுசிலர்
கூடும்பொ துக்காட் சியால்
வெண்டாள நீள்கோட்டு வாவென்று ளங்கொள்ள
வேறுசில ருற்று நோக்கி
வேழமன் றீங்கிது தவழ்ந்துவிளை யாடுநம்
விநாயகன் கோல மென்னக்
கண்டனர் மொழிந்துளத் தள்ளூற வெங்கள்செங்
கழுநீர்ப் பிரான்வ ருகவே
கண்கதுவு மெழில்கொண்டு விண்கதுவு மாளிகைக்
கலைசைநா யகன்வ ருகவே. (3)
வேறு.
இருகை யூன்றித் தவழ்ந்துமழ வேற்றின் வருந்தோ றாங்காங்கே
எறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்
பெருகுங் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்
பெயர்ந்து மடங்கி ய்சைந்தாடும் பீடுந் தத்தம் பொறிதமக்கு
மருவும் புலனை யவற்றிடமா மண்ணை யகழ்ந்தும் வெளிப்ப்ரப்பை
வளைத்துங் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட வசைந்தசைந்து
முருகுவிரியுந் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே
மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே. (4)
உருகு ம்டியா ரள்ளூற வுள்ளே யூறுந் தேன்வருக
உண்ணத் தெவிட்டாச் சிவானந்த வொளியே வருக புலன்வழிபோய்த்
திருகு முளத்தார் நினைவினுக்குச் சேயாய் வருக வெமையாண்ட
செல்வா வருக வுமையீன்ற சிறுவா வருக விணைவிழியால்
பருகு மமுதே வருகவுயிர்ப் பைங்கூழ் தழைக்கக் கருணைமழை
பரப்பு முகிலே வருகநறும் பாகே வருக வரைகிழித்த
முருக வேட்கு முன்னுதித்த முதல்வா வருக வருகவே
மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே. (5)
வருகைப் பருவமுடிந்தது.
---------
அம்புலிப்பருவம்.
தண்டரள மேந்தித் தயங்குநீள் கோட்டைத்
தழீஇச்சித் திரம்பெற் றவான்
தனியுவாத் தரவந்து மல்குநா கத்தார்க
டண்டாது சூழ்ந்து மகிழ்வு
கொண்டிட விலங்குதொட் டிக்கலையி னளியமிழ்து
கொட்டியெமை யாளு முக்கண்
குழகன் படைத்தபெரு வையஞ் சுமந்தாற்று
கொள்கையி னுருக்கொண் டெதிர்
கண்டவ்ர் வியப்புறும் படியருண மணியுருக்
கவினாரு மொளிவீ சிடும்
காட்சியா னின்னையிவ னொத்துளா னீயுமிக்
கடவுளை நிகர்த்து ளாய்காண்
அண்டரும் பழமறையு மோலமிட நின்றவனொ
டம்புலீ யாட வாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
டம்புலீ யாட வாவே. (1)
ஒளிவந்த நீயுடற் கூறுபடு வெம்பாந்த
ளொன்றனுக் கஞ்சி யஞ்சி
உழிதந்து திரிவையிவ னண்டபகி ரண்டமு
மொருங்கஞ்ச வெய்து யிர்க்கும்
துளிவந்த காரிபடு துளைவெள் ளெயிற்றுவாய்த்
துத்திப் படக்கோ ளராத்
தொகையெலா மெய்யினுங் கையினுங் கலனெனச்
சூழ்ந்துகொண் டான்வெண் மைகூர்ந்
திளிவந்துதேயுங் களங்கவுரு வுடையைநீ
யிவன் செம்மை வாய்ந்து தேயா
தென்றுமக ளங்கவுரு வுடையனா கலினிவனை
யெவ்வாறு மொப்பா யலை
அளிவந்து நின்னையு மழைத்தனன் காண்விரைந்
தம்புலீ யாடவாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
டம்புலீ யாட வாவே. (2)
கரும்பினை நெருக்கிநெரி செய்ததன் றேறலைக்
காற்றுநெட் டாலை யேய்க்கும்
கயமுகன் கையகப் பட்டுநல நீங்குசுரர்
களைகணாய்த் தோன்றி யவனைத்
துரும்புபட வென்றழித் தவ்வமர ரோடுநின்
றுயருந் தவிர்த்த ளித்த
சூழ்கருணை நீயறிவை யன்றியும் யாருந்
தொடங்குதொழி லினிது முற்ற
இரும்புவியி லூறுதீர்த் தருள்பவனு மிவனலா
லில்லையிவ னிசையை யின்னும்
இயம்பிடி னுலப்புறா தீங்குநீ வரினுன்பி
னெய்திடும் பாம்பு மணியும்
அரும்பணிக ளொடுவைத்து மீண்டுதொட ராதுசெயு
மம்புலீ யாட வாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
டம்புலீ யாட வாவே. (4)
தெருளாத தக்கனார் வேள்வியை யழித்தும்பர்
சென்னியை யுருட்டி நினையும்
தேய்த்தசய வீரனு மிவன்றம்பி யென்பதுந்
திருமார்ப வைம திப்ப
உருளாழி கைக்கொண்டு மற்றவ னிரந்தாங்
குஞற்றும்விக டக்கூத் தினுக்
குள்ளம் பெருங்கருணை பூத்தபின் னாங்கதனை
யுதவினா னிவனென் பதும்
வெருளாது சீறிய வரக்கனைப் பந்தாடி
விட்டதுங் கேட்டி லாய்போல்
வேண்டிநா மேவலி னழைத்திடவு மதியாது
விண்ணாறு சேறி கண்டாய்
அருளா திவன்கடியில் வேறுபுக லேதுனக்
கம்புலீ யாட வாவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
டம்புலீ யாட வாவே. (4)
வையகம் போற்றுமெம் மானிவனை நீயவ
மதித்துவெஞ் சாப மெய்தி
வசையிடைப் பட்டனைமு னின்றுமவ மதிசெய்து
வாராம லொழியி னங்கண்
எய்தியொரு தண்டமும் புரியவேண் டாதிவ
ணிருந்தாங் கிருந்து நீள்கை
எடுத்துவிண் ணுறநிமிர்த் தொருதுருவ னார்பிணித்
திடுஞ்சூத் திரத்தி னின்றும்
ஒய்யென வறுத்துனைப் பற்றிப் படுப்பனிவ
னுடல்பூண்ட பாப்பி னத்துள்
ஒன்றறியி னண்ணாந்து தாவியுனை யுண்டுபின்
னுமிழாது விடினும் விடுமால்
ஐயமிலை யாகலான் மற்றிவன் வெருளுமுன
மம்புலீ யாட வரவே
அருட்குண நிரம்புசெங் கழுநீர் மதக்களிறொ
டம்புலீ யாட வரவே. (5)
அம்புலிப்பருவமுடிந்தது.
---------------
சிற்றிற்பருவம்.
கூன்பாய் வடிவச் சிலைநுதலுங் குவவுத் தனமும் வாய்த்தமலைக்
குமாரி யுளமும் விழியுமகிழ் கூரக் குறும்பு விளையாடி
வான்பாய் கருணை பூத்திங்கும் வந்தா யெந்தாய் சிறுவீடு
வகுக்குந் தொடக்கத் துனைப்போற்ற மறந்தேஞ் சிறியே மதனானீ
தான்பாய் வெகுளி மீக்கொண்டுன் றன்மை காட்டலடாதுனக்கித்
தாழ்வுதீரச் சிறுசோறு தருவே முன்னர் வாவிதொறும்
தேன்பாய் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (1)
விருந்து விளிப்போ மெனக்கருதும் வேலையடிகே ளிவணீயே
விரும்பி வந்தா யெனமகிழ்ச்சி மீக்கூர் தலினாற் செவ்வாயின்
முருந்து தோன்ற முறுவலித்தே மல்லா லொருநின் கரிமுகம்போன்
முகமும் பூதப் பெருவயிறு முடங்குங் குறட்டா ணகுநடையும்
இருந்த வாறு நோக்கிநகைத் திட்டே மல்லே மிடந்தோறும்
இருக்கு முழக்குந் தேவாரத் திசையுந் துவன்றி யோங்கவளம்
திருந்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித்தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (2)
தவளம் பழுத்த கூனலிளஞ் சசிநே ருனது கோட்டினொடு
தடந்தாழ் புழைக்கைக் கெதிராகத் தனத்தோ டுரோமா வலிதாங்கும்
பவளம் பழுத்த சேயிதழார் பயிலு மனைக ளன்றியொன்றும்
பற்றாச் சிறியேஞ் சிறுவீடுன் பதத்துக் கிலக்கோ பசுபோதக்
கவளந் தெவிட்டு மதகளிறே கண்ணின் மணியே நான்மறையும்
கதறித் திரிந்துங் கண்டறியாக் கதியே துறைக டொறுந்தரளம்
திவளுங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (3)
நென்னற் பொழுது விருந்தாக நின்னை விளிப்பேங் கடக்கலுழி
நீத்தஞ் சிற்றி லழிக்குமெனு நினைவால் விடுத்தே நான்மறையும்
உன்னற் கரிய பரம்பொருளே யுண்மை யிதுவா மவமதியால்
உன்னை யழையா திருந்தேமென் றுள்ளங் கறுவிச் சிறியேமை
இன்னற் படுப்பக் குறும்புபல வியற்றா நின்றாய் நின்பெருமைக்
கேலா தடிகேள் பெருங்கருணைக் கெல்லா யெளியேந் தவப்பேறே
தென்னற் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (4)
பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
களிக்க வருவா யென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே. (5)
சிற்றிற்பருவமுடிந்தது.
-----
சிறுபறைப்பருவம்.
குறுகுறுந டந்தெய்தி யெம்பிரான் றிருமேனி
குழையமே லேறி வேணிக்
கொத்தினைக் கோட்டினிற் கோத்தலைத் துதறிவான்
குளிர்புனல் புழைக்கை யெற்றிப்
பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
புலிச்சரும முதல ணியெலாம்
பொள்ளென வெடுத்தெடுத் தங்கைய னலிற்பெய்து
போக்கியிள மதியை வன்றி
எறுழுலவை யொன்றப் பொருத்தித் திருக்கைமா
னிடைவைத்து முற்று மதிசெய்
திருவிசும் புய்த்துவான் றருத்தரும் பேரணிகொ
டெங்கணு மலங்க ரித்துச்
சிறுமையிலை யினியென வசைக்குங் கரங்கொண்டு
சிறுபறை முழக்கி யருளே
தென்கோ விருந்தநக ருற்பலவி நாயகன்
சிறுபறை முழக்கி யருளே. (1)
இருக்கோல மிட்டின்னு மறியாத நின்றா
ளிறைஞ்சாது தபுமாந் தருக்
கிறுதியிற் கட்நடை நெருப்புகச் சீறிவரு
மியமன் றருக்கோ தையும்
உருக்கோல மேவச் சிரக்கவச மாகமை
யுண்டவிழி வாளி புருவம்
ஒருதனுவெ னக்கொண்ட சேனைக ணிரைத்தம
ருழக்குமதன் வெற்றி முரசும்
கருக்கோடி கோடியுற் றுழல்புறச் சமயக்
கருத்தினர் குரைக்கு மொலியும்
காதுறா வண்ணமமிழ் தஞ்சொரிவ தேய்ப்பக்
கறங்கவடி யார்க ளுள்ளத்
திருக்கோயின் மேவிவிளை யாடுமிள மதகளிறு
சிறுபறை முழக்கி யருளே
தென்கோ விருந்தநக ருற்பலவி நாயகன்
சிறுபறை முழக்கி யருளே. (2)
வேறு.
சழக்குப் படுசில பேய்கண் மடிந்தவர் சரிகுடர் வலைதாங்கித்
தடவுந் தோற்பல கைத்தொகை யாவுந் தளைதரு தெப்பமெனப்
பழக்கித் திரையெறி குருதிச் செக்கர்ப் பாவைப் பூம்புனலுள்
படர்ந்து நெடுந்தசை மூளைவ ழும்புகள் பற்றிவி ருந்தயர
உழக்கிக் கடல்படு படைகள னைத்து முடைந்துபி திர்ந்தலற
ஒன்னலர் சென்னி யுருட்டிக் கயமுக னுரமிரு பிளவுசெய்து
முழக்குற் றிடுவிறன் மாமுர சாள முழக்குக சிறுபறையே
முற்படு கலைசையி லுற்பல வேழ முழக்குக சிறுபறையே. (3)
குடங்கைகு வித்திமை யோர்தொழ நின்று குனிக்குந் தாதையிடம்
குறுகியு ரத்தொளிர் பன்றிக் கோடுங் குளிர்சடை யிளமதியும்
உடங்குப றித்துக் குணிலிற் கைக்கொண் டுயர்துடி கொட்டியவன்
உரித்தணி யும்பற் கோடுபி டுங்கிமு னந்தியி யத்தையெழீஇ
வடங்கிளர் கொங்கைத் துர்க்கைமி தித்திவர் மயிடத் துலவைபறீஇ
மாலவ னின்னிய மோதியெ வர்க்கு மகிழ்ச்சி தரக்களியான்
முடங்கலு றாதெதி ராட்டயர் களிறு முழக்குக சிறுபறையே
முற்படு கலைசையி லுற்பல வேழ முழக்குக சிறுபறையே. (4)
வேறு.
மலைவற முப்பொரு ளியல்புதெ ளித்தரு ளொருமுதலே
மலையென முற்படு வினைகள றச்செயு மெமதுயிரே
அலையும னத்தையு நிலையினி றுத்திடு மருளுருவே
அமிழ்தினி னித்துட லிடனுமு கிழ்த்தொளிர் சிவவிளைவே
உலைவறு கறபக மெனவருள் கொட்டிய மழகளிறே
உலகம னைத்துநி னுடலில டக்கிய நிறைபொருளே
கலைசையி னுற்பல விறைவமு ழக்குக சிறுபறையே
கடலொலி பிற்பட வினிதுமு ழக்குக சிறுபறையே. (5)
சிறுபறைப்பருவமுடிந்தது.
-----------------
சிறுதேர்ப்பருவம்.
செக்கர்க் குரூஉமணிச் சுடிகைப் பொறிபடச்
சேடன்சு மந்தாற் றிடும்
திண்புடவி முழுதுங் கிளைத்தறுத் தப்புறஞ்
சென்றுதன் பகைவாழ் விடம்
ஒக்கப் பெருந்துகள் படுத்திமோட் டாமையோ
டுடையநிண முண்டு பல்லின்
ஒண்குடரி னுதிகவ்வி யீர்த்துரீஇச் சிவபிரா
னுகளபதமன்று தேடப்
புக்குற்ற கேழல்பல் லூழிக ளிடந்தெய்த்த
புலமெலா மொருக ணத்தில்
போந்துகீ ழண்டச் சுவர்த்தலை துளைத்துப்
புறங்கோத்த நீர்சு வற்றித்
திக்கெட்டு முட்டியுல வாகுப் பரிப்பாக
சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
சிறுதே ருருட்டி யருளே. (1)
நிறந்துளை கொடும்படை திறந்தபுண் வழிதோறு
நெருப்பெனக் குருதி பாய
நெடுங்கிரி யெனப்புரண் டார்த்துக் கடாக்கரியி
னிரையெலா மெங்கு மின்னுப்
புறந்தர விடித்தெழுங் கார்முகிற் கூட்டம்
பொரக்கிடந் தலற மள்ளர்
பொன்முடி கரங்கால்வழும்புகுடர் சோரிப்
புனன்மேன் மிதப்ப முற்றும்
பறந்தலைப் புக்குநரி கொடிகழுகு வெம்பேய்
பருந்தொடு விருந்து செய்யப்
பகைத்தகுவர் சேனைக் கடற்கிடைத் தோணியிற்
பாயுங் கொடிஞ்சி கிடுகால்
சிறந்ததிண் டேர்பல வருட்டும் பகட்டண்ணல்
சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
சிறுதே ருருட்டி யருளே. (2)
விண்ணத் தியங்கும் பசும்புரவி யேழ்பூண்ட
வில்லுமிழ் கொடிஞ்சி யந்தேர்
வீற்றிருந் தூருஞ் சுடர்ப்பரிதி வானவன்
வியந்துனைக் காணுந் தொறும்
பண்ணப் பணைத்தநந் தேரினும் விசைத்தேகு
பாழிமான் றேரு மிருளைப்
பருகிக்க திர்க்கற்றை காலுநம் மொளியின்மேம்
பட்டபே ரொளியும் வாய்ப்பத்
தண்ணற்க ருங்கட லுடுக்கைத் தலத்துச்
சரிக்குமொரு பரிதிப் பிரான்
தானாகு மென்றுள்ள மருளநின் றிருமேனி
தண்பவள வொளிவீ சிடத்
திண்ணப் பொலஞ்சகட் டவிர்மணிக் கூவிரச்
சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
சிறுதே ருருட்டி யருளே. (3)
அலைக்குமயில் வேல்விழிக் கன்னிமைப் பருவத்
தணங்கினர் முலைக்கு நிகராம்
அம்பொற் பொருப்பினைக் கோட்டினாற் கன்னிமை
யழிந்தபரு வத்து மடவார்
முலைக்குநி கராகச் செய்யும்பிரம சாரியே
மூதண்ட மூன்று மந்த
மூரிப் பொலஞ்சிகரி பேர்த்தெடுத் தங்கையான்
முனியென்ன வாங்கி முற்றும்
தொலைக்குமடன் முப்புரிசை வென்றநாட் சிவபிரான்
றுண்ணென் றுகைத்த திண்டேர்த்
தொன்னிலை யழித்தக் கிரிக்குவான் பூதரச்
சொற்பெயரை நிலைபெ றுத்தும்
சிலைக்குநிக ரொற்றையங் கோட்டுத் தனிக்களிறு
சிறுதே ருருட்டியருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
சிறுதே ருருட்டி யருளே. (4)
பெருங்கருணை சூற்கொண் டிருந்தசிவ காமிப்
பிராட்டியார் சிதம்ப ரேசப்
பெருமா னெனப்படுங் கீர்த்தியிரு முதுகுரவர்
பேணியுனை யேக காலத்
தொருங்குமார் பத்துற வெடுத்தணைத் தொண்முத்த
முண்டுச்சி மோந்து கொள்ள
உன்னுதோ றிருவர்களு மொற்றித்த வடிவுகொண்
டுறைபயன் பெற்று மகிழ
வருங்கரட மாமதச் சிந்துரக் களபமே
மதிமுடிச் சடில மோலி
மாசுணப் பேரனியி னைங்கைக்கு றுத்தாண்
மதிவகிர்ந் தனைய வொற்றைச்
சிருங்கனே சச்சிதா னந்தபர போகமே
சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
சிறுதே ருருட்டி யருளே. (5)
வண்டின் முழக்கமுகை விண்டலர் பசுந்துழாய்
மாலையம் படலை மார்பின்
மாயோன் கிடக்கையை யுடுக்கையென் றாண்டமட
மங்கைக்கு மகுட மான
தொண்டைமண் டலம்வாழ மகுடம்ப தித்தபொற்
சுடர்மணி நிகர்த்த தொல்சீர்த்
தொட்டிக்க லைப்பதி தழைக்கவப் பதிமருவு
தூயசிவ பத்தர் வாழக்
கண்டிகையும் வெண்ணீறு மஞ்செழுத் தும்பொலிவு
காட்டவை திகமார்க் கமும்
கரிசற்ற சைவமும் வளர்ந்தோங்க வாங்குங்
கடற்புவி மகிழ்ச்சி தூங்கத்
திண்டிமந் தாக்குங் குறட்கணஞ் சூழநீ
சிறுதே ருருட்டி யருளே
சிற்பரன் றென்கலைசை யுற்பலவி நாயகன்
சிறுதே ருருட்டி யருளே. (6)
சிறுதேர்ப்பருவமுடிந்தது.
பருவம் பத்துக்குச் செய்யுள் (53)
கலைசைப்பிள்ளைத்தமிழ் முடிந்தது.
மெய்கண்டதேவர் திருவடிவாழ்க.
சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.