10. 1 கழற்சிங்க நாயனார் புராணம் (4096- 4107)
திருச்சிற்றம்பலம்
4096 படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மைக்
கொடி நெடுந் தானை மன்னர் கோக் கழற்சிங்கர் என்பார் 10.1.1
4097 கடவார் குரிச்லாராங் கழல் பெருஞ் சிங்கனார் தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் 10.1.2
4098 குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்திப்
பவம் அறுத்தாட் கொள் வார்தம் கோயில் உள் பணிய புக்கார் 10.1.3
4099 அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால்
முரசுடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரை செறிமலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார் தம் உள்
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி 10.1.4
4100 கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்
சாயல் மா மயிலே போல் வாள் தனித் தனி கண்டு வந்து
தூய மென் பள்ளித் தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் 10.1.5
4101 புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று
கதும் என ஓடிச்சென்று கருவி கைக் கொண்டு பற்றி
மதுமலர் திருவொப்பாள் தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார் 10.1.6
4102 வார்ந்து இழி குருதி சோர மலர்க் கருங்குழலும் சோரச்
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் எனத் துளங்கி மண்ணில்
சேர்ந்து அயர்ந்து உரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்த பேர் ஒளியைக் கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் 10.1.7
4103 வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம்பு ஒன்று பார்மிசை வீழ்ந்தது என்ன
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இவ்வண்டத்து உள்ளோர்
இந்த வெவ்வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை 10.1.8
4104 அந்நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர்
முன் உறு நிலைமை அங்குப் புகுந்தது மொழிந்தபோது
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்குத் தண்டம்
தன்னை அவ்வடைவே அன்றோ தடிந்திடத் தகுவது என்று 10.1.9
4105 கட்டிய உடைவாள் தன்னை உருவி அக்கமழ் வாசப்பூத்
தொட்டு முன் எடுத்த கையாம் முன்படத் துணிப்பது என்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெரும் தேவியான
மட்டவிழ் குழலாள் செம்கை வளை ஒடும் துணித்தார் அன்றே 10.1.10
4106 ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்குஒலி புலி மேல் பொங்க
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்தது அன்றே 10.1.11
4107 அரிய அத் திருத் தொண்டு ஆற்றும் அரசனார் அளவில் காலம்
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும்
திரு அருள் சிறப்பினாலே செய்ய சே அடியின் நீழல்
பெருகிய உரிமை ஆகும் பேரருள் எய்தினாரே 10.1.12
4108 வையகம் நிகழ்க் காதல் மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும்
மெய்யருள் உடைய தொண்டர் செய்வினை விளம்பல் உற்றாம் 10.1.13
திருச்சிற்றம்பலம்