10.3 செருத்துணை நாயனார் புராணம் (4120 - 4126)
திருச்சிற்றம்பலம்
4120 உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வக் குலபதியாம்
தெள்ளும் திரைகள் மதகு தொறும் சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருக நாட்டுத் தஞ்சாவூர் 10.3.1
4121 சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் எனப்
பாரில் நிகழ்ந்த செருத் துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் 10.3.2
4122 ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித்தகர் கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவு நாள் 10.3.3
4123 உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி 10.3.4
4124 கடிது முற்றி மற்றவள் தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்து
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றி பரமர் செய்ய சடை
முடியில் ஏறும் திருப்பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கைத்
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர் 10.3.5
4125 அடுத்த திருத் தொண்டு உலகறியச் செய்த அடல் ஏறு அனையவர்தாம்
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமைத் தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழச் செய்து உய்ய செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் 10.3.6
4126 செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங்கண் எடுத்து மோந்த அதற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத் துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் 10.3.7
திருச்சிற்றம்பலம்