MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    10.2 இடங்கழி நாயனார் புராணம் (4109 - 4119)


    திருச்சிற்றம்பலம்

    4109 எழுந்திரை மா கடல் ஆடை இரு நிலமா மகள் மார்பில்
    அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம்
    செழுந்தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின்
    கொழுந் துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோனாநாடு 10.2.1
    4110 முருகுறு செங்கமல மதுமலர் துதைந்த மொய் அளிகள்
    பருகுறு தெண் திரை வாவிப் பயில் பெடையோடு இரை அருந்தி
    வருகுறு தண் துளி வாடை மறைய மாதவிச் சூழல்
    குருகுறங்கும் கோனாட்டுக் கொடி நகரம் கொடும்பாளூர் 10.2.2
    4111 அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து
    மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக்கொங்கின்
    பன்னு துலைப் பசும் பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த
    பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபில் குடி முதலோர் 10.2.3
    4112 இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார்
    அடங்கலர் முப்புரம் எரித்தார் அடித்தொண்டின் நெறி அன்றி
    முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும்
    தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் 10.2.4
    4113 சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப
    மை வளரும் திருமிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும்
    மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேல் மேல் விளங்க
    மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் 10.2.5
    4114 சங்கரன் தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார்
    அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன்
    எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய்தொழில் முட்டப்
    பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது 10.2.6
    4115 அரசர் அவர் பண்டாரத்து அந்நாட்டின் நெல் கூட்டின்
    நிரை செறிந்த புரிபலவா நிலைக் கொட்ட காரத்தில்
    புரை செறி நள்ளிருளின் கண் புக்கு முகந்து எடுப்பவரை
    முரசு எறி காவலர் கண்டு பிடித்து அரசன் முன் கொணர்ந்தார் 10.2.7
    4116 மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும்
    அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட
    இத் தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கிப்
    பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் 10.2.8
    4117 நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றிக்
    குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து
    இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும்
    பறையறைப் பண்ணுவித்தார் படைத்த நிதிப்பயன் கொள்வார் 10.2.9
    4118 எண்ணில் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள
    உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டித்
    தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப
    மண்ணில் அருள் புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் 10.2.10
    4119 மை தழையும் மணி மிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில்
    எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி
    மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியாச்
    செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் 10.2.11
    திருச்சிற்றம்பலம்


Goto Main book