11. 1 பத்தாராய்ப் பணிவார் புராணம் (4147-4154)
திருச்சிற்றம்பலம்
4147 ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் 11.1.1
4148 தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் 11.1.2
4149 அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார் 11.1.3
4150 யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால் 11.1.4
4151 சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார்
செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் 11.1.5
4152 ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை
மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக்
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார் 11.1.6
4153 நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார் 11.1.7
4154 சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால்
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார் 10.1.8
திருச்சிற்றம்பலம்