11.7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் (4169 - 4170 )
திருச்சிற்றம்பலம்
4169 மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை
புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும்
செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே 11.7.1
4170 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு
நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல்
கணமே உடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப்
பிறவியினில் செய்த தவம் பெரியவாமே 11.7.2
திருச்சிற்றம்பலம்
பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.