11.4 திருவாரூர் பிறந்தார் புராணம் (4158 - 4159 )
திருச்சிற்றம்பலம்
4158 அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ 11.4.1
4159 திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார்
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே 11.4.2
திருச்சிற்றம்பலம்