11.5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் (4160 - 4162 )
திருச்சிற்றம்பலம்
4160 எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து
மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் 11.5.1
4161 தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்
பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ 11.5.2
4162 நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா
நாதனை எம் பெருமானை ஞானம் ஆன
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்
அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல்
அறிந்தவாறு புகலல் உற்றேன் 11.5.3
திருச்சிற்றம்பலம்