12.3 நேச நாயனார் புராணம் (4192 - 4196)
திருச்சிற்றம்பலம்
4192 சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பதாகும் 12.3.1
4193 அந்நகர் அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்
பல்நாக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம்
சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார் 12.3.2
4194 ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்
பாங்குடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார் 12.3.3
4195 உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்தர் ஆகி அரனடி நீழல் சேர்ந்தார் 12.3.4
4196 கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் 12.3.5
திருச்சிற்றம்பலம்