12.4 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் (4197- 4214 )
திருச்சிற்றம்பலம்
4197 துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகில் ஒடுசந்து அணி நீர்ப் பொன்னி மணி கொழிக்கும்
குலையில் பெருகும் சந்திரத் தீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை
நிலையில் பெருகும் தருமிடைந்த நெடுந் தண் கானம் ஒன்று உளதால் 12.4.1
4198 அப் பூங்கானில் வெண்ணாவல் அதன் கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப் பூங்கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டிக் கமழ் பூங்கொத்தும் அணிந்து இறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகுமால் 12.4.2
4199 ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்குப் பெயர் ஆக
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம் பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால்
மேல் நல்திரு மேற்கட்டி என விரிந்து செறியப் புரிந்து உளதால் 12.4.3
4200 நன்றும் இழைத்த சிலம்பி வலைப் பரப்பை நாதன் அடி வணங்க
சென்ற யானை அநுசிதம் என்று அதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை
அன்று கழித்த பிற்றைநாள் அடல் வெள் யானை அழித்ததால் 12.4.4
4201 எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு விழாமையான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதிக் குலைந்து வீழ்ந்தது ஆல் 12.4.5
4202 தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும் உயிர் நீங்க
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத யானைக்கும் வரம் கொடுத்து
முறையில் சிலபி தனைச் சோழர் குலத்து வந்து முன் உதித்து
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள் செய்து அருள நிலத்தின் கண் 12.4.6
4203 தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெரும் தேவி கமலவதி உடன் சார்ந்து
மன்னு புகழத் திருத்தில்லை மன்றாடும் மலர்ப் பாதம்
சென்னியுறப் பணிந்து ஏத்தித் திருப்படிக் கீழ் வழிபடு நாள் 12.4.7
4204 மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம் வேண்டச்
செக்கர் நெடுஞ் சடைக் கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
மிக்க திருப்பணி செய்த சிலம்பிகுல வேந்து மகிழ்
அக் கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய 12.4.8
4205 கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்ப நாள் நிரம்பி
விழைவார் மகவு பெற அடுத்த வேலை அதனில் காலம் உணர்
பழையார் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என் ஒள்ளிழையார் 12.4.9
4206 பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அருமணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் 12.4.10
4207 தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும் புதல்வன் தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம்
மேவும் உரிமை முடி கவித்துத் தானும் விரும்பு பெரும் தவத்தின்
தாவில் நெறியைச் சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் 12.4.11
4208 கோதை வேலர் கோச்செம் கண் சோழர் தாம் இக் குவலயத்தில்
ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார்
பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள்
காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் 12.4.12
4209 ஆனைக் காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே கூட நலம் சிறக்க
பால் நல் களத்துத் தம்பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் 12.4.13
4210 மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார் 12.4.14
4211 அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் 12.4.15
4212 திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் 12.4.16
4213 தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ் 12.4.17
4214 கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல் சேர
வருநீர்மை உடைய செங்கட் சோழர் தம் மலர்த்தாள் வாழ்த்தித்
தருநீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும்
திருநீல கண்டப் பாணர் திறம் இனிச் செப்பல் உற்றேன் 12.4.18
திருச்சிற்றம்பலம்