MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
    என்ற பெரிய புராணம் /இரண்டாம் காண்டம்
    சருக்கம் 12 / மன்னிய சீர்ச் சருக்கம் (4171 - 4228 )

    12.1 பூசலார் நாயனார் புராணம் (4171- 4188)
    12.2 மங்கையர்க்கரசியார் புராணம் (4189- 4191 )
    12.3 நேச நாயனார் புராணம் (4192- 4196)
    12.4 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் (4197 -4214 )
    12.5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் (4215 - 4226 )
    12.6 சடைய நாயனார் புராணம் (4227)
    12.7 இசை ஞானியார் புராணம் (4228 )

    12.1 பூசலார் நாயனார் புராணம் (4171- 4188 )


    திருச்சிற்றம்பலம்

    4171 அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி
    ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை
    நன்று என மனத்தினாலே நல்ல ஆயம் தான் செய்த
    நின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்கல் உற்றார் 12.1.1
    4172 உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு
    நலமிகு சிறப்பின் மிக்க நான் மறை விளங்கும் மூதூர்
    குல முதல் சீலம் என்றும் குறைவுஇலா மறையோர் கொள்கை
    நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊராம் 12.1.2
    4173 அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தை
    தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சார
    வருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்
    பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார் 12.1.3
    4174 அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே
    கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்தும் கங்கை
    மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
    எடுப்பது மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார் 12.1.4
    4175 மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
    எனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்
    நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்
    தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார் 12.1.5
    4176 சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
    நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
    ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்
    காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார் 12.1.6
    4177 அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
    வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
    முடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு
    நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் 12.1.7
    4178 தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்து
    கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி
    வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
    தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரு நாளில் 12.1.8
    4179 காடவர் கோமான் கச்சிக் கல்தளி எடுத்து முற்ற
    மாடெலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்
    நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னாள்
    ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி 12.1.9
    4180 நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
    நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
    ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
    கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார் 12.1.10
    4181 தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்
    திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மை
    கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்
    தண் தலைச் சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் 12.1.11
    4182 அப்பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்
    எப்புடையது என்று அங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்
    செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார்
    மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் 12.1.12
    4183 பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
    மாசிலாப் புசலார் தாம் யார் என மறையோர் எல்லாம்
    ஆசில் வேதியன் இவ்வூரான் என்று அவர் அழைக்க ஓட்டான்
    ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான் 12.1.13
    4184 தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு
    எண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு
    அண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்
    கண்டடி பணிய வந்தேன் கண் நுதல் அருள் பெற்று என்றான் 12.1.14
    4185 மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி
    என்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்
    முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்
    இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தா வாறு எடுத்துச் சொன்னார் 12.1.15
    4186 அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே
    புரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றி
    விரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
    முரசெறி தானை யோடு மீண்டு தன் மூதூர்ப் புக்கான் 12.1.16
    4187 அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
    நன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்
    பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
    பொன் புனை மன்றுளாடும் பொன் கழல் நீழல் புக்கார் 12.1.17
    4188 நீண்ட செஞ் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி
    பூண்ட அன்பிடையறாத பூசலார் பொன்தாள் போற்றி
    ஆண்டகை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப்
    பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன் 12.1.18
    திருச்சிற்றம்பலம்

    12.2 மங்கையர்க்கரசியார் புராணம் (4189 - 4191 )


    திருச்சிற்றம்பலம்

    4189 மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம்
    வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி
    செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள்
    தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
    எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே
    இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள்
    பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார்
    கழல் எம்மால் போற்றலாமே 12.2.1
    4190 பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர்
    போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால்
    தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது
    யாம் என் அறிந்து தென்னர் கோமான்
    மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய்
    நெடும் காலம் மன்னிப் பின்னை
    ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல்
    அமர்ந்திருக்க அருளும் பெற்றார் 12.2.2
    4191 வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி
    வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள்
    திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர்
    விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி
    ஒரு நாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு
    உடைகீளும் கோவணமும் நெய்து நல்கும்
    பெருநாமச் சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார்
    நேசர் திறம் பேசல் உற்றாம் 12.2.3
    திருச்சிற்றம்பலம்

    12.3 நேச நாயனார் புராணம் (4192 - 4196)


    திருச்சிற்றம்பலம்

    4192 சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா
    நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
    பார் வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக்
    கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பதாகும் 12.3.1
    4193 அந்நகர் அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்
    மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்
    பல்நாக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம்
    சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார் 12.3.2
    4194 ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி
    ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி
    தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்
    பாங்குடை உடையும் கீளும் பழுதில் கோவணமும் நெய்வார் 12.3.3
    4195 உடையொடு நல்ல கீளும் ஒப்பில் கோவணமும் நெய்து
    விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால்
    இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி
    அடைவுறு நலத்தர் ஆகி அரனடி நீழல் சேர்ந்தார் 12.3.4
    4196 கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை
    செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
    பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட
    கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் 12.3.5
    திருச்சிற்றம்பலம்

    12.4 கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் (4197- 4214 )


    திருச்சிற்றம்பலம்

    4197 துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமைச் சோணாட்டில்
    அலையில் தரளம் அகில் ஒடுசந்து அணி நீர்ப் பொன்னி மணி கொழிக்கும்
    குலையில் பெருகும் சந்திரத் தீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை
    நிலையில் பெருகும் தருமிடைந்த நெடுந் தண் கானம் ஒன்று உளதால் 12.4.1
    4198 அப் பூங்கானில் வெண்ணாவல் அதன் கீழ் முன்னாள் அரிதேடும்
    மெய்ப் பூங்கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை
    கைப்பூம் புனலும் முகந்து ஆட்டிக் கமழ் பூங்கொத்தும் அணிந்து இறைஞ்சி
    மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகுமால் 12.4.2
    4199 ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்குப் பெயர் ஆக
    ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம் பொன் திருமுடிமேல்
    கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால்
    மேல் நல்திரு மேற்கட்டி என விரிந்து செறியப் புரிந்து உளதால் 12.4.3
    4200 நன்றும் இழைத்த சிலம்பி வலைப் பரப்பை நாதன் அடி வணங்க
    சென்ற யானை அநுசிதம் என்று அதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
    இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை
    அன்று கழித்த பிற்றைநாள் அடல் வெள் யானை அழித்ததால் 12.4.4
    4201 எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு விழாமையான் வருந்தி
    உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து
    வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
    கும்ப யானை கை நிலத்தில் மோதிக் குலைந்து வீழ்ந்தது ஆல் 12.4.5
    4202 தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும் உயிர் நீங்க
    மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத யானைக்கும் வரம் கொடுத்து
    முறையில் சிலபி தனைச் சோழர் குலத்து வந்து முன் உதித்து
    நிறையில் புவனம் காத்து அளிக்க அருள் செய்து அருள நிலத்தின் கண் 12.4.6
    4203 தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன்
    தன்னுடைய பெரும் தேவி கமலவதி உடன் சார்ந்து
    மன்னு புகழத் திருத்தில்லை மன்றாடும் மலர்ப் பாதம்
    சென்னியுறப் பணிந்து ஏத்தித் திருப்படிக் கீழ் வழிபடு நாள் 12.4.7
    4204 மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம் வேண்டச்
    செக்கர் நெடுஞ் சடைக் கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
    மிக்க திருப்பணி செய்த சிலம்பிகுல வேந்து மகிழ்
    அக் கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய 12.4.8
    4205 கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்ப நாள் நிரம்பி
    விழைவார் மகவு பெற அடுத்த வேலை அதனில் காலம் உணர்
    பழையார் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி
    உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என் ஒள்ளிழையார் 12.4.9
    4206 பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
    உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி
    அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அருமணியை
    இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் 12.4.10
    4207 தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன்
    ஆவி அனைய அரும் புதல்வன் தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம்
    மேவும் உரிமை முடி கவித்துத் தானும் விரும்பு பெரும் தவத்தின்
    தாவில் நெறியைச் சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் 12.4.11
    4208 கோதை வேலர் கோச்செம் கண் சோழர் தாம் இக் குவலயத்தில்
    ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார்
    பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள்
    காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் 12.4.12
    4209 ஆனைக் காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு
    மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்
    ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே கூட நலம் சிறக்க
    பால் நல் களத்துத் தம்பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் 12.4.13
    4210 மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
    முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
    அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
    சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார் 12.4.14
    4211 அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
    மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
    திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
    முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் 12.4.15
    4212 திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
    பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
    உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
    வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் 12.4.16
    4213 தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
    பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
    ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
    மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ் 12.4.17
    4214 கருநீல மிடற்றார் செய்ய கழலடி நீழல் சேர
    வருநீர்மை உடைய செங்கட் சோழர் தம் மலர்த்தாள் வாழ்த்தித்
    தருநீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும்
    திருநீல கண்டப் பாணர் திறம் இனிச் செப்பல் உற்றேன் 12.4.18
    திருச்சிற்றம்பலம்

    12.5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் (4215 - 4226 )


    திருச்சிற்றம்பலம்

    4215 எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர்
    திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழுஞ்சோணாட்டில்
    விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல்
    பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார் 12.5.1
    4216 ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
    பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக்
    காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
    ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் 12.5.2
    4217 மற்றவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில்
    கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
    அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத்
    தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் 12.5.3
    4218 அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன்
    தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே
    மன் பெரும் பாணனாரும் மா மறை பாட வல்லார்
    முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரைப் பாடுகின்றார் 12.5.4
    4219 திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை நின்ற வாறும்
    கரியினை உரித்த வாறும் காமனைக் காய்ந்தவாறும்
    அரி அயற்கு அரிய வாரும் அடியவர்க்கு எளிய வாறும்
    பரிவினால் பாடக் கேட்டுப் பரமனார் அருளினாலே 12.5.5
    4220 அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும்
    சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று
    சுந்தரப் பலகை முன்நீர் இடும் எனத் தொண்டர் இட்டார்
    செந்தமிழ் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார் 12.5.6
    4221 தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து
    உமையொரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி
    இமையவர் போற்ற ஏகி எண்ணில் தானங்கள் கும்பிட்டு
    அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் 12.5.7
    4222 கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும்
    தாயின் நல்ல பெருங் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும்
    ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண்
    வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார் 12.5.8
    4223 மூலத் தானத்து எழுந்து அருளி இருந்த முதல்வன் தனை வணங்கிச்
    சாலக் காலம் அங்கு இருந்து தம்பிரான் தன் திரு அருளால்
    சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின் நின்றும் போய்
    ஆலத்தார்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி 12.5.9
    4224 ஆழி சூழும் திருத் தோணி அமர்ந்த அம்மான் அருளாலே
    யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
    காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு
    வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர் 12.5.10
    4225 ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு
    ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும்
    மேன்மை பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேயபின்
    பானற் களத்தார் பெருமணித்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் 12.5.11
    4226 வரும் பான்மையினில் பெரும் பாணர் மலர்த்தாள் வணங்கி வயல் சாலிக்
    கரும்பார் கழனித் திருநாவலூரில் சைவக் கலை மறையோர்
    அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற
    சுரும்பார் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல் உறுகின்றோம் 12.5.12
    திருச்சிற்றம்பலம்

    12.6 சடைய நாயனார் புராணம் (4227)


    திருச்சிற்றம்பலம்

    4227 தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர்
    கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும்
    எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம்
    நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ 12.6.1
    திருச்சிற்றம்பலம்

    12.7 இசை ஞானியார் புராணம் (4228)


    திருச்சிற்றம்பலம்

    4228 ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்
    அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்
    இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன்
    மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால் 12.7.1
    திருச்சிற்றம்பலம்
    மன்னிய சீர்ச் சருக்கம் முற்றிற்று.