MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    2.4 இளையான் குடி மாற நாயனார் புராணம்


    திருச்சிற்றம்பலம்

    440 அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
    தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்
    நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்
    இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார் 2.4.1
    441 ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
    நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்
    சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
    பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் 2.4.2
    442 ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்
    நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
    கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து
    ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின் 2.4.3
    443 கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே
    மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்
    உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா
    அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார் 2.4.4
    444 ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே
    நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்
    நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
    தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் 2.4.5
    445 செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
    அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே
    மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து
    ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் 2.4.6
    446 இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
    மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
    தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
    முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் 2.4.7
    447 மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்
    கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
    பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்
    நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் 2.4.8
    448 மாரிக் காலத்து இரவினில் வைகியோர்
    தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது
    பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
    வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன் 2.4.9
    449 ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
    ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்
    தார மாதரை நோக்கித் தபோதனர்
    தீரவே பசித்தார் செய்வது என் என்று 2.4.10
    450 . நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
    இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்
    தமக்கு நாம் இன் அடிசில் தகவுற
    அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என 2.4.11
    451 . மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
    ஏதிலாரும் இனித் தருவார் இல்லை
    போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை
    தீது செய்வினை யேற்கு என் செயல் 2.4.12
    452 .செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
    மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
    வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
    அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற 2.4.13
    453 . மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
    பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து
    உற்ற காதலினால் ஒருப் பட்டனர்
    சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார் 2.4.14
    454 .பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
    அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்
    கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு
    உருகு கின்றது போன்றது உலகு எலாம் 2.4.15
    455 .எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
    துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்
    வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று
    நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து 2.4.16
    456 .உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்
    கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
    புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்
    வள்ளலார் இளையான் குடி மாறனார் 2.4.17
    457 .காலினால் தடவிச் சென்று கைகளால்
    சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன
    கோலி வாரி இடா நிறையக் கொண்டு
    மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார் 2.4.18
    458 .வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
    சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
    வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
    அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார் 2.4.19
    459 . முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள
    வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
    வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்
    கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை 2.4.20
    460 .வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
    அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
    குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
    பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க 2.4.21
    461 மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
    புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை
    வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை
    நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று 2.4.22
    462 கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி
    இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன
    உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
    அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் 2.4.23
    463 அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்
    எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
    தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்துத் தோன்றச்
    செழுந் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் 2.4.24
    464 மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச்
    சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே
    ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றிச்
    சீலமார் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி 2.4.25
    465 அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
    என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே
    முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
    இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான் 2.4.26
    466 இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி
    முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார்
    அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
    மெய்ப் பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன் 2.4.27

    திருச்சிற்றம்பலம்


Goto Main book