7.6 கூற்றுவ நாயனார் புராணம் (3930 - 3938)
திருச்சிற்றம்பலம்
3930 துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூலப் படையார் தம்
நன்னாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார்
பன்னாள் ஈசர் அடியார்தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி
முன்னாகிய நல் திருத் தொண்டின் முயன்றார் கனந்தை முதல்வனார் 7.6.1
3931 அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடிப் படுப்பார்
பொருளின் முடிவும் காண்பரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க
மருளும் களிறு பாய் புரவி மணித்தேர் படைஞர் முதல் மாற்றார்
வெருளும் கருவி நான்கு நிறை வீரச் செருக்கின் மேலார் 7.6.2
3932 வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச்
சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆனார் 7.6.3
3933 மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் செம்பியர் தம்
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோ ம் முடி என்று
நல்காராகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார் 7.6.4
3934 ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியைப்
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும் படி இருத்தி
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்தியபின்
வரும் ஐ உறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் 7.6.5
3935 அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் எனப் பரவும்
பற்று விடாது துயில் வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்க
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார் 7.6.6
3936 அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திரு நடம் செய்
தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித் தனியே
இம்பர் ஞாலம் களி கூர எய்தும் பெரும் பூசனை இயற்றி
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார் 7.6.7
3937 காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்து அளித்துக்
கோதங்ககல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கி
நாத மறை தந்து அளித்தாரை நடைநூல் பாவில் நவின்று ஏத்தும்
போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம் 7.6.8
3938 சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள்
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்குகூன் 7.6.9
திருச்சிற்றம்பலம்
சருக்கம் 7 / வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் முற்றிற்று.