8.3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் (3983 .- 3991 )
திருச்சிற்றம்பலம்
3983 கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து
மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார்
தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி
நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர் 8.3.1
3984 இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த்
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல
மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி
அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார் 8.3.2
3985 சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி
யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து
மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார் 8.3.3
3986 ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும்
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன்
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் 8.3.4
3987 ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில்
மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்
மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் 8.3.5
3988 மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார்
உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு
கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப்
பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார் 8.3.6
3989 சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து
மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார் 8.3.7
3990 இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும்
செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப்
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் 8.3.8
3991 விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை
உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித்
தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும்
கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம் 8.3.9
திருச்சிற்றம்பலம்